Monday, March 24, 2008

தன்னிலை விளக்கம்

அனுசுயா. நான் அறிந்த ஓரே பெண் பதிவர். பதிவுலகிலும், நிஜ உலகிலும் எனக்கிருக்கும் 'காசனோவா' இமேஜ் குறித்து கவலைகளோ, பயங்களோ இன்றி பழகிய இனிய தோழி. என்னுடைய கவிதைகள் வெளியாகிறது என்பதற்காக தொடர்ந்து விகடன் வாங்கி (பக்கத்து வீட்டில்...) வாராவாரம் விமர்சனம் என்ற பெயரில் ரம்பம் போட்டவர். மொக்கை பதிவுகளை மட்டுமே எழுதுபவர் என்றபோதும் அவரிடத்தில் இருந்த தேர்ந்த ரசனை இருந்தது (உதாரணம்: ஆர்யாஸில் காபி / ஆனந்தபவனில் ரசமலாய் / பாட்டி மெஸ்ஸில் ரவா ரோஸ்ட் என்பன...) அவருக்கு திருமணம் என்றபோது இயல்பாகவே அவரது வருங்கால கணவன் மீது பரிதாபம் ஏற்பட்டது. டான்சானியாவிலிருந்து வந்து ஒரு பெண்ணுரிமைப் போராளியிடமிருந்து சிக்கி, மொக்கை கவுஜைகளை வாசித்தாக வேண்டிய ஊழ்வினையில் மாட்டிக்கொண்டவராகி விட்டார்.
அனுவின் டான்சானியா தனிமையை போக்கும் வகையில் திருமணப்பரிசளிக்க முடிவு செய்து விஜயாவில் 'கருவாச்சி காவியத்தை' வாங்கினேன். அனுவை மறைமுகமாக கிண்டல் செய்வதாக அவள் எடுத்துக்கொள்ளும் அபாயம் தலைப்பில் அதிகம் இருப்பதாக பட்டது. இதை பரிசளித்து பகை வளர்க்க வேண்டாமென எனது கருவாச்சியும் சொன்னதால் அப்பரிசை அளிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.
அழைப்பிதழை கீதா கேண்டீனில் சகோதரர் சகிதமாக வந்து கொடுக்கையில் பதிவுலகமே படை திரண்டு வர இருப்பதாக தெரிவித்தார்கள். தயவு செய்து எழுதாதீர்கள் என சில பதிவர்களிடம் மன்றாடி கேட்டு மனு கொடுக்க ஏற்கனவே ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கி வைத்திருப்பதால் அவர்களை பார்த்துவிடும் ஆவல் அன்றே ஏற்பட்டது. எனவே திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அழைப்பிதழில் இருந்த மண்டப முகவரிக்கு கிளம்பினேன். இன்னும் கொஞ்ச தூரம் வந்தால் திருச்சியே வந்துவிடும் என்ற நிலையில் ரேணுகா திருமண மண்டபத்தைக் கண்டறிய முடியவில்லை. எதிர்வந்த ஆட்டோக்காரரிடம் கேட்டேன். இருபத்தைந்து வளைவுகளையும் மூன்று மெயின்ரோடுகளையும் கடந்தாக வேண்டும் என்றார். ஒரு மலையேற்ற முனைப்புடன் வண்டியைக் கிளப்பி மண்டபத்தை அடைந்தபோது ரயில் எஞ்சீன் டிரைவர் போல ஆகியிருந்தேன். மண்டபத்தில் தெரிந்த முகம் என்று யாரும் இல்லை. ஜி3, பாப்பா சங்கம் என பல பெயர்களில் எழுதி வரும் யாராவது தெரிந்தால் பெண்ணுரிமைப்பேரியக்க உறுப்பினராக கட்டணம் எவ்வளவு என விசாரிக்கலாம் என தேடினேன். நிறைய்ய அழகிய பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் அழகாக இருந்ததால் இவர்களுள் எவரும் பதிவராக இருக்க மாட்டார்கள் என ஏகமனதாக முடிவெடுத்துவிட்டு பந்தி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தேன். இட்லி வடை எதிர்பார்த்த எனக்கு சூடான சாதம் ஏமாற்றமளித்தது என்ற போதும் ஊடுகட்டி அடித்தேன். மூன்றாவது முறை சாம்பார் கேட்டபோது பரிமாறுபவர் முறைத்தார். அவர் முடியலத்துவம் படிக்க கடவது.
வெகுநேரம் காத்திருந்தும் மணமகன், மணமகள் இருவரும் மேடைக்கு வருகிற அறிகுறியே இல்லாததால், பொங்கி எழுந்த மனோகரனாய் மணமகள் அறை புகுந்தேன். அங்கே வெட்கம் கிலோ என்ன விலை என ஆக்ரோசமாய் கேட்டுக்கொண்டிருந்தாள் அனு. கிலோ கணக்கில் நகை அணிந்திருந்த அனுவிடம் நான் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட கேள்வி 'மூன்று முறை சாம்பார் கேட்டால் தப்பா?!'
அனுவிடம் விடைபெற்றுவிட்டு திரும்புகையில் நேரம் ஒன்பதை கடந்து விட்டது. முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று ஏதேச்சதிகாரமாக ஒரு யூ அடிக்க... அடியேனின் கரங்கள் இரண்டு பிரேக்குகளையும் சேர்த்து பிடிக்க ஆட்டோ மீது இடிக்க வேண்டிய அவசியம் ஏதுமின்றி நடுரோட்டில் கவிழ்ந்தேன். வண்டியின் ஒரு பக்கம் முழுவது சோரியாஸிஸ் வந்த சொரிநாய் போலாகி விட்டது. எனக்கு வலது காலில் அடி. சிங்காநல்லூரில் இருக்கும் நண்பனை தொலைபேசியில் அழைத்து வண்டியை ஒப்படைத்துவிட்டு, ஆட்டோ பிடித்து விடுதி திரும்பினேன்.
மேற்படி காயம் காரணமாக மறுநாள் நிகழ்ந்த அனுவின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. ஆனால் மொய் கொடுக்க வக்கு இல்லாத பயல் என அனு நினைத்துக்கொள்ளும் அபாயம் அதிகம் இருப்பதால் குறைந்தது பத்து புத்தகங்களையாவது பரிசளிக்கலாம் என நினைத்திருக்கிறேன்.

5 comments:

ILA(a)இளா said...

என்னால கலந்துக்க முடியலேங்கிற வருத்தத்துல இருக்க இப்படி எல்லாம் சாம்பார்ல ஊடு கட்டி அடிப்பீங்க?

//அனுவின் டான்சானியா தனிமையை போக்கும் வகையில் திருமணப்பரிசளிக்க முடிவு செய்து விஜயாவில் 'கருவாச்சி காவியத்தை' வாங்கினேன். //
ஒரு காவியத்துக்கே காவியமா?

//வெட்கம் கிலோ என்ன விலை என ஆக்ரோசமாய் கேட்டுக்கொண்டிருந்தாள் அனு.//
அச்சம், மடம், நாணம் பயிர் பச்சைன்னா கூடத்தான் என்னான்னு தெரியாது. அதை எல்லாமா நாங்க சொல்லிட்டு இருக்கோம்?

//கவிழ்ந்தேன்//
இங்கன் நிக்குதுப்பா சாம்பார் மேட்டரு. சும்மா சொன்னேங்க. உடல் நலம் தேறி வந்தப்புறம் பதிவு போடுங்க. சீக்கிரமே நலம் பெற வேண்டும்!

குசும்பன் said...

//வலது காலில் அடி. சிங்காநல்லூரில் இருக்கும் நண்பனை தொலைபேசியில் அழைத்து வண்டியை ஒப்படைத்துவிட்டு, ஆட்டோ பிடித்து விடுதி திரும்பினேன்.//

கல்யாணத்துக்கு போக முடியாததுக்கு இது சாக்கா? அன்று இரவே ஒரு ”கிளியோடு” பப்பில் பிரபுதேவா மாதிரி டான்ஸ் ஆடியதாக நம்பதகுந்த வட்டாரங்கள் சொல்லியது.

(அனு அவர் சொல்வதை நம்ப வேண்டாம்) ஏதோ என்னால முடிஞ்சது:)))

குசும்பன் said...

வாழ்த்துக்கள் அனு

நிலா said...

//அவர்கள் அழகாக இருந்ததால் இவர்களுள் எவரும் பதிவராக இருக்க மாட்டார்கள் என ஏகமனதாக முடிவெடுத்துவிட்டு //

இப்படி நீங்க எழுதபோறது தெரிஞ்சு ப.பா சங்கம் செஞ்ச சதிதான் அந்த ஆக்சிடெண்ட்டாம்,

பாத்து உசாரா இருங்க மாமா

ramesh vaidya said...

சந்தோசத்துக்கும் சந்தோஷத்துக்கும் அர்த்த மாறுபாடு இல்லை.
ஆனால், சந்தோசத்திற்குரியது வுக்கும் சந்தோசத்திற்குறியது என்பதற்கும் வித்தியாசம் உண்டு. பின்னதற்கு சந்தோசத்தின் ஜனனேந்திரியம் என்பது பொருள்.