Friday, December 21, 2007

பேரரசு எனும் மகாகவி

"பல்லு மொளச்சா புட்டி பாலு புள்ளக்கி அந்த வகையில் நான் யோககாரண்டி" என்ற கவித்தெறிப்பில் பிறந்த மகாவரியின் ஆச்சர்யத்திலிருந்தே தமிழ் சமூகம் இன்னும் விடுபடாத நிலையில் அடுத்தடுத்து பாடல்களை புனைந்து வந்த குத்துப்பாடல் பிதாமகன் பேரரசு, பாடல்கள் எழுதுவதோடு தம் கடமை முடிந்து விட்டது என நிணைக்கும் பிற கவிஞர்கள் போல் அல்லாது தன் தேனினும் இனிய குரலில் பாடியும் கலையின் உன்னத வடிவத்தை அடைந்திருக்கிறார். பழனி திரைப்படத்தின் 'லோக்கு லோக்கு லோக்கலு நான் லோக்கலு' எனத் தொடங்கும் பாடலின் ஆரம்ப வரிகள் ஏதோ பகிரங்க வாக்குமூலம் கொடுப்பது போல இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வரிகளில் பல நெம்புகோல் வரிகளை நீங்கள் எதிர்கொள்வது நிச்சயம். "கொத்து கொத்து பரோட்டா... கொத்திகிட்டு வரட்டா
முட்டை முட்டை பரோட்டா மொக்க மொக்க தரட்டா" என சுசித்ரா தன் வத்தல் குரலில் கேட்கும்போது பத்து நாளா நிக்காம போறவன் கூட எட்டு பரோட்டா கேட்டு வாங்கி சாப்பிடுவான். பாடல் முடியும் போது 'பக்கா லோக்கலுடி'ன்னு பஞ்ச்சோடு முடிக்கிறார் பேரரசு. தொடர்ந்து பேரரசுவின் பாடல்களை விழிவிரிய ஆய்ந்து வரும் ஒரு ஆய்வு மாணவன் என்ற வகையில் என்னால் இப்போதைக்கு சொல்ல முடிந்தது ' பேரரசு வீட்டு கட்டுத்தறியும் குத்துப்பாட்டு எழுதும்'. இங்கே கிடைக்கிறது கேளுங்கள் பயங்கொள்ளுங்கள்!

Thursday, December 20, 2007

பிரதியங்காரக மாசானமுத்து எழுதிய காதல் கடிதம்

தாட்சாயிணி,

உன்னுடைய கோபங்கள் விசித்திரமானவை. நியாயங்களும், நியாமற்றவைகளும் சரிவிகிதத்தில் கலந்து நிற்கும் அதுமாதிரியான கோபங்கள் அடிக்கடி வாய்ப்பதில்லை. உன்னை அழைக்கிறேனென சொல்லிவிட்டு அழைக்காமல் போய்விட்ட கோபத்தில் இனிமேல் கூப்பிடாதே என்கிறாய். என்னுடைய அன்றாடங்கள் முகம் தெரியாத மனிதர்களால் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதென்பதையும் நான் பல்வேறு கதவுகளை அறியாமல் திறந்துவிட்டு அல்லாடுபவன் என்பதும் நீ அறியாததல்ல. சாவகாசங்கள் ஏறியூட்டப்பட்டுவிட்ட என்னைப் போன்ற ஒருவன் அழைக்காமல் இருந்து வருத்தத்திற்குரியதா அல்லது வாதத்திற்குரியதா?!

உன் அழைப்பிற்காக ஏங்கி நிற்கும் அளவிற்கா நிதர்சன வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொருவிதமான அவதிகள். உன் அவதிகளின்போது அன்பொழுக ஒதுங்கி நிற்கிறேன் நான். ஒருவன் ஒரிரு நாளாக ஓவராக படம் காட்டினான் என்றால் ஏதோ பட்சி சிக்கி இருப்பதால் பதுங்குகிறானென நீ விட்டு பிடித்தால், பழைய குருடி கதவை திறடி என தானே வந்து விடுவேன் என்பது ஏன் புரியவில்லை உனக்கு.

எப்போதும் ஓரே பெண்ணை காதலிக்க முடியாது என்பது சீனபழமொழி. எப்போதும் ஓரே பெண்ணை காதலிக்கவே முடியாது எனும் போது கடலை மட்டும் எப்படி சாத்தியமாகும். வயது ஏற ஏற முகத்திலும், பர்ஸிலும் ஏற்படும் பொலிவால் தற்போது ஒரிரு சிவந்த பெண்களும் ஸ்க்ராப்பித் தொலைக்கிறார்கள். ஆற்றுத்தண்ணீர் என்று அள்ளிக்குடிக்கத் துடிக்கையில் அண்டா தண்ணீர் நீ ஏன் தழும்புகிறாய்?

காலையில் பக்கத்து அலுவலக பெண் வாசலில் மறித்து மணிக்கணக்காய் வறுக்கிறாள். சற்று நேரத்திற்கெல்லாம் தஞ்சாவூர்காரியிடமிருந்து போன் வருகிறது. கணிணியை திறந்தால் பதிவுல தோழி ஒருத்தி சாட்டிங்கில் ஓரமாய் வந்து உருமி அடிக்கிறாள். அட போம்மா என ஆர்க்குட் வந்தால் அகமதாபாத்திலிருந்து அஞ்சலை காட்டுத்தனமாய் ஸ்க்ராப் போட்டிருக்கிறாள். மெயிலைத் திறந்தால் 'ஹாய் டியூட் ப்ரான்ஸிலிருந்து மெனோ' என மெனக்கெட்டு அனுப்பிய மெயில். எத்தனை வழிகளடா எத்தனை பிகர்களடா.

வான்கூவர், பாரீஸ், கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம், சென்னை, திருப்பூர், நொய்டா, அகமதாபாத், தஞ்சாவூர், ரெட்டியார்பட்டி, கும்பகோணம், சாத்தான்குளம் என வெளிநாடு தொடங்கி குக்கிராமங்கள் வரை அடியேனுக்கு ரசிகர் வட்டம் பெரிதென்பதால் நான் படும் அவஸ்தைகளை உனக்குத் தெரியப்படுத்திக்கொள்ளவே இந்த மடல் என்பதை மறுபடியும் உனக்கு நிணைவுறுத்திக்கொள்கிறேன். ஒரு பொன்மாலைப்பொழுதில் எனக்கு இதுவரை அறுபது புரொபசல் வந்திருக்கு தெரியுமா என நீ பீற்றிக்கொண்டதற்கு பதிலுக்குபதிலாகத்தான் இப்படி எழுதுகிறான் பரதேசி என நீ நிணைத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால்தான் உனக்கு இதை நிணைவுறுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஊதுகுழலுக்கு ஒரு பக்க ஓட்டை ஊதும் நாயணத்துக்கோ உடலெல்லாம் ஓட்டை.

பெருமைக்காக சிறுபத்திரிக்கைகள் வாங்கி படிக்காதே, படிக்காதேயென பலபேர் சொல்லியும் கேட்காததால் வந்த விளைவை பார்த்தாயா? செக் புக் தீர்ந்துவிட்டது என கடிதம் எழுத வேண்டி வந்தாலும் நான்கு பேப்பர்கள் எழுதியாக வேண்டிய துர்பாக்கியசாலி ஆகிவிட்டேன் நான். செக் புக்கிற்கே நான்கு பக்கமென்றால் செக்கசிவந்த கன்னி உனக்கு பத்து பக்கமாவது எழுதினால்தான் நான் ஒரு இலக்கியவாதியாக காலம் தள்ள முடியும் என் செல்வமே.
நான் அனுப்பும் மொக்கை மெஸெஜூகளையே வாசிக்க சோம்பல் படும் நீ இந்த கடிதத்தை வாசிக்கவே மாட்டாய் என்பது உலக ஜீவராசிகள் அத்தனைக்கும் தெரிந்த உண்மை என்றாலும் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதில் யாதொரு சமரசமும் செய்ய துணியாதவன் இந்த செல்வேந்திரன் என்பதை நிரூபிக்கவே இந்த கடிதம். முன்பொருமுறை உன்னை காதலிக்கிறேன் என எழுபது பக்கத்திற்கு நான் எழுதிய கடிதத்தின் இரண்டு பாராக்களை மட்டும் படித்துவிட்டு என்ன இது இரண்டு பொட்டலம் அடிச்ச மாதிரி இருக்கு என நீ பதில் சொல்லியபோது என் மனம் என்ன பாடு பட்டது என்பதை நான் மட்டுமே அறிவேன் அன்பே.

உன்னை நான் கூப்பிடாத ஆத்திரத்தில் எனது எண்களை ஆட்டோ ரிஜக்டில் போட்டு விட்டாய். எப்போது கூப்பிட்டாலும் செவிட்டில் அறை வாங்கியது போல் ''டொய்ங்.." என்ற சத்தம் மட்டுமே கேட்கிறது. ஆனாலும் ஆனாலும் உன் ஒற்றை ஹலோவைக் கேட்க ஓராயிரம் முறை நான் முயற்சிப்பேன் என நீ முட்டாள்தனமாய் முடிவெடுத்து விட்டதைக் கண்டு நான் அதிர்ச்சியடைகிறேன். மூன்று தடவைக்கு மேல் எவனும் எவளுக்கும் போன் செய்ய மாட்டான் என்பது உலகப்பொதுவிதியாய் இருக்கையில் நான்காவது கால் நாலு நாளுக்கு முன் பார்த்த நான்சிக்கு போடுவதுதானே முறை. அந்த வகையில் நான்சியோடு நாலு நாளாக வறுத்ததின் பலனாக இன்றிரவு அவள் வீட்டில் வறுவல் சாப்பிட இருக்கிறேன். வறுப்பின் விளைபொருளாய் வறுவலே கிடைத்தலென்பது கடலை வரலாற்றில் ஒரு விசித்திரம்.

இந்தக்கடிதம்கூட எவனாவது நெம்புகோலன் கண்ணில் பட்டுவிட்டால் கூட்டம் போட்டு கூப்பாடு போடும் அபாயம் இருந்தும் கூட, உயிரையே பணயம் வைக்கும் இந்த விபரீத கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் என்றால் என் காதலில் நீளம் உனக்கு புரிந்திருக்கும். என் காதலின் ஆழம் புரிய வேண்டும் என நிணைத்தால் பால்பாண்டி நாடார் வயல் கிணத்துக்குள் உட்கார்ந்து ஒருமுறைக்கு இருமுறை படித்துபார் ஏதாவது புரிந்ததென்றால் கடிதத்தில் கப்பல் செய்து கிணற்று நீரில் மிதக்க விடு.

புரியவேயில்லையென்றால் உனக்குத் தெரிந்த தீவிர இலக்கிய பத்திரிக்கை ஏதாவது ஒன்றிற்கு உன் அப்பன் பெயர் போட்டு அனுப்பி விடு. வரும் பணம் உனக்கு; பெரும் பெயர் உன் அப்பனுக்கு;

உன்னால் வரும் பெயரும் புகழும் என் குடும்பத்திற்கு தேவையில்லை என நீ நிணைத்தால் இதை எதிர் வீட்டு குஜராத்தி பெண்ணிடம் கொடுத்துவிடு. அப்போதாவது அவளுக்கு புரியட்டும் காதலுக்கு மொழி முக்கியமில்லை (முழிதானே முக்கியம்) என்பது.

இப்படிக்கு,

கழட்டி விடப்பட்ட கலகக்காதலன்

பிரதியங்காரக மாசானமுத்து

Saturday, December 15, 2007

பாராட்டு விழாவில் செல்வேந்திரன்

"ஐயா கவிஞரே, எங்க இருக்கீங்கன்னு?" அனுசுயாவிடமிருந்து மெஸெஜ் வந்த போது கிணத்துகடவு தக்காளி மார்க்கட் பக்கத்துல இருக்கிற டீக்கடையில பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். அவ்வளவு டீடெயிலா பதில் சொல்ல வேண்டாமேன்னு "மார்க்கட் வொர்க்"னு ரிப்ளை பண்ணேன். கால் மீ அர்ஜண்ட்னு அடுத்த மெஸெஜ் வந்தது. பஜ்ஜி திங்கவுடாம என்னடா இது எழவுன்னு கூப்பிட்டா " கவிஞரே ஆனந்த விகடனில் ஒங்க கவிதை தொடர் படித்து மகிழ்ந்த பதிவர்கள் சின்னதா பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம். தலைமை விருந்தினரா சென்னையிலருந்து தேவ் ஆனந்த் வந்திருக்கார்... பீப்பிள்ஸ் பார்க் அன்னபூர்ணாவில் சாயங்கலாம் ஆறு மணிக்கு... லேட் பண்ணிடாதீங்க"ன்னு அனுசுயா சொன்னதைக் கேட்டு காலுக்கு கீழே பூமி நழுவ தொடங்கியது. நம்மள கவிஞர்னு கூப்பிட்டதே ஈர வெளக்குமாற தலையில வச்சாப்பல இருக்கே... பாராட்டு விழான்னா?! புறப்படு செல்வேந்திரா... புறப்படு.... கால் டாக்ஸி, போக்கு லாரி, பைக் எதையாவது பிடித்து கெளம்புடா என் செல்வமேன்னு அடிச்சி புடிச்சி 5.55க்கு அன்னபூர்ணா வாசலுக்கு வந்தா அரைமணி நேரமா ஒரு பயலையும் காணோம். ஆஹா வழக்கம்போல நம்மளை பீன்ஸ் ஆக்கிட்டாங்களேன்னு கிளம்ப நெணைச்சப்ப அண்ணன் சிவகுமாருடன் வந்து சேர்ந்தார் அனுசுயா. சாரிங்க கிளம்ப லேட்டாயிடுச்சின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ம்ஹூம்.

தேவ் ஆனந்தும், தேவர் பிரானும் வர இன்னும் அரைமணி நேரம் ஆகும் என தகவல் வந்தது. அவர்கள் வருவதற்குள் பாராட்டு விழாவில் ஏற்புரை வழங்க 'கவிதை என்பது கற்பூரம் போன்றது' என ஏதாவது ஜல்லியடிக்க குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். இனி நல்லதாக நாலு ஜிப்பாக்கள் வாங்கி வைத்துக்கொண்டால் இலக்கிய கூட்டங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என நிணைத்துக்கொண்டிருந்த நேரத்தில் தேவர்பிரான், அருண்பிரசாத், தேவ் ஆனந்த் என ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். ஒரு பெரிய வட்ட டேபிளில் அமர்ந்து கொஞ்ச நேரம் பதிவுகள், தமிழ்மணம், தேன்கூடு, யூனிகோடு என வழக்கமான தலைப்புகளில் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தனர். சரி எல்லாம் முடித்துவிட்டு நமது கவிதையை சிலாகிப்பார்கள். புகழும்போது முகத்தை எப்படி வைத்துக்கொள்வது என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ரவா ரோஸ்ட் வேண்டும் என்றார் அனுசுயா. ரவா தோசை ஒரு ரவுண்டு முடிந்தபின் சாம்பார் வடை ஒரு ரவுண்டு ஓடியது. நான் ஒரு தடவை தொண்டையை செருமி எனது இருப்பையும், நாம் கூடிய நோக்கத்தையும் நிணைவுறுத்த முயன்றேன். 'என்ன செல்வேந்திரன் தொண்டைல ஏதாவது பிரச்சனையா? இங்கே மிளகு பால் வாங்கி குடிங்க சரியாயிடும் என்றார் சிவகுமார். மணி எட்டாகிவிட்டது. தேவ் ஆனந்த தாம் எழுத வந்த காலத்திலிருந்து தமிழ் பதிவுலகில் ஏற்பட்ட சர்ச்சைகள், மாற்றங்கள், தில்லாலங்கடி குழி பறிப்புகள், சாக்கிரதையா இருக்க வேண்டிய சமாச்சாரங்கள் குறித்த நெடிய பயனுள்ள குறிப்புகளை வழங்கி கொண்டிந்தவர் திடீரென குமுதமும் விகடனும் என ஓப்பிட்டை ஆரம்பித்தார். ஆஹா கிளம்பற நேரத்துல சப்ஜெக்டுக்கு வந்துட்டாங்கய்யான்னு நிமிர்ந்து உட்கார்ந்தா அப்படியே கலைஞர் டிவிக்கு கைமாறியது பேச்சு. அட போங்கப்பான்னு வெறுத்த நேரத்துல உங்க 'ரஜினியும் அப்பாவும்' விகடன்ல படிச்சேன். நல்லா இருந்ததுன்னு சொன்னது கொஞ்சம் ஆறுதலா இருந்தது. இதற்கிடையில் டேபிளை எப்படா காலி பண்ணுவீங்கன்னு பேரர் பதினைஞ்சு தடவை சுத்தி வந்ததுல அவரே ஒரு வலைப்பூ எழுதற அளவுக்கு விஷய ஞானம் அடைஞ்சுட்டாருங்கற உண்மைய தெரிஞ்ச நான் கிளம்பலாமான்னு முதல் தடவையா என் பவளவாய் திறந்தேன். அப்பகூட ஒரு வரி நம்ம கவுஜையை பாராட்டாம, கிளம்பலாம்னு கோரஸா சொல்லிட்டு ஆளுக்கொரு திசையா அப்பீட் ஆனாங்க. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா போன் போட்டு விசாரிச்சதுல ஒரு உண்மை தெரிஞ்சது அவங்க யாருமே 'முடியலத்துவம்' படிக்கலங்றது. சும்மா சந்திச்சு பேசலாம்னு முடிவெடுத்துட்டு நம்மள மாக்கானா ஆக்கின அனுசுயாவை பசித்த புலி தின்னட்டும்.

Thursday, December 6, 2007

கவிமடத்தலைவனை வாழ்த்தலாம் வாங்க

கவுஜயே மடத்தனமானது என்ற போதிலும் சங்கர மடத்திற்கு இணையாக கவிமடத்தை வளர்த்தெடுத்த நம் அன்புத்தலைவன் ஆசீப்மீரான் என்கிற சாத்தான்குளத்தான் என்கிற அண்ணாச்சியின் 'சாத்தான்குளத்து வேதம்' வலைப்பூ நடப்பு இதழ் (12-12-07) ஆனந்த விகடன் வரவேற்பறையில் இடம்பெற்றுள்ளது. இது கவிமட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய நாள். பெண்ணாதிக்கம் பெருத்துவிட்ட வலைப்பூ உலகில் ஓங்கி ஒலிக்கும் தனித்த ஆணீய குரலுக்கு சொந்தக்காரர் நம் அன்பு அண்ணாச்சி என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே. அவரது போராட்டங்கள் நிறைந்த இந்த ஆணீய வாழ்வை கவுரவிக்கும் விதமாக 'ஆணீய சிந்தனையாளர்' அல்லது 'ஆணீய தளபதி' அல்லது ஆணீய ஆசான் போன்ற பட்டங்களைக் கொடுத்து அவரைக் கவுரவிக்கலாம் என கவிமடத்தின் தலைமைக் கொத்தனான நான் நிணைக்கிறேன். மேற்படி கருத்தோடு உடன்பாடுள்ள கவிமடக்கவுஜர்கள் உடனடியாக தங்களது ஆலோசனைகளை சொன்னால் ஸ்டாலினுக்கு போட்டியாக நெல்லையிலே மாநாடு கூட்டி பட்டமளித்து நாம் பெருமையடையலாம். என்ன சொல்றீங்க....?

Saturday, December 1, 2007

எப்பவும் மேலே...

கடைக்கு வந்த ஒரிரு நாட்களிலே சூடான பக்கோடா போல விற்றுத் தீர்ந்துவிட்ட விகடன் தீபாவளிமலர், தற்போது 'விகடன் தீபாவளி மின்மலர்' என்ற ஹைடெக் வடிவம் கொண்டு வெளிவந்திருக்கிறது. உலகெங்கிலுமிருக்கிற தமிழ் நெஞ்சங்கள் அச்சுப்புத்தகத்தைபடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த அரிய முயற்சி இந்திய பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய புரட்சி. ஒவ்வொரு பக்கமாய் புத்தகம் போல புரளும் மின் மலருடன் அசத்தலான வீடியோ மற்றும் ஆடியோ இணைக்கப்பட்டிருப்பது சுகமான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. மேலதிக விபரங்களுக்கு சொடுக்குங்கள்.

Saturday, November 3, 2007

ஆசிப்மீரானுக்கு ஓர் பகிரங்க கடிதம்

அன்புள்ள அண்ணாச்சி அவர்களுக்கு,

கவிமடத்தின் தலைமைக் கொத்தன்களில் ஒருவனான அடியேனின் கவிதைகள் விகடன் தீபாவளி சிறப்பிதழில் வெளியாகி தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகள் உருவாக்கியிருக்கும் தருணத்தில், கவிமடத்தின் சார்பில் எனக்கொரு பாராட்டு விழா நடத்தினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

இதுபோன்ற கோட்டிக்காரத்தனங்களை உங்கள் அன்பு இளவல்கள் செய்தபோது, 'சபாஷ்.... என் இனமடா நீ!' எனத் தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய நீங்கள் என்னைப் பாராட்டி ஒரு வார்த்தை கூட உதிர்க்காதது ஏன் என்பது என்னையொற்றி முடியலத்துவக்கவிதைகளை எழுத முற்படும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் கேள்வியாக இருக்கிறது.

வாரிசு அரசியல் தலைவிரித்தாடும் கவிமடத்தின் இரண்டாம் கட்டத்தலைவனான நான், உங்கள் தலைமைப்பீடத்தை அபகரித்துவிடுவேன் என உறக்கம் கொள்ளாமல், உணவு எடுக்காமல் நடுக்கம் எடுத்து திரிகிறீர்கள் என்பதை தமிழ்க்கவியுலகம் அறியாததல்ல.

இந்தக் கவிமடத்தையே புரட்டிபோடும் நெம்புகோல் கவிதைகளை செய்துவிட்டு மடத்தின் பாரம்பரியத்தைக் கெடுப்பவனல்ல நான் என்பதை அறிந்தும் தாங்கள் மவுனம் காப்பது.... எனக்கு மட்டுமல்ல கவிதை என்ற பெயரில் ஜல்லியடித்து வரும் லட்சோபலட்சம் தமிழர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

Wednesday, October 31, 2007

கோவையில் ஒரு வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் ஆனந்த விகடன் கிளை அலுவலகத்தின் அலுவலக நிர்வாக பணிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கணிணியில் எம்.எஸ் ஆபிஸில் பணியாற்றிய அனுபவமும் முறையான தட்டச்சு பயிற்சியும் (ஆங்கிலம்) உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். வயது தடையில்லை.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செல்வேந்திரன்,
ஆனந்த விகடன்,
76, அன்சாரி வீதி,
ராம்நகர்,
கோயம்புத்தூர் - 641 009
தொலைபேசி எண்கள்: 0422 - 2230909


Monday, October 29, 2007

ராமசுப்ரமண்யன் எம்.ஏ. தமிழ்

ற்றது தமிழ் திரைப்பட இயக்குனர் ராம் என்கிற ராமசுப்ரமண்யத்திற்கு கோவை நாய்வால் திரைப்பட இயக்கத்தின் சார்பாக ஞாயிறன்று நிகழ்ந்த பாராட்டுவிழாவிற்கு சென்றிருந்தேன். இயக்குனர் பாலுமகேந்திரா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவ்விழாவில் கலந்து கொள்ள இயக்குனர் ராம் கொட்டும் மழையிலிருந்து சென்னையிலிருந்து பைக்கிலே வந்துவிட்டாராம்.

மேக்கிங் ஆஃப் கற்றது தமிழ்

இயக்குனர் ராம் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் எம்.ஏ தமிழிலக்கியம் படித்துவிட்டு இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியர். கல்லூரி நாட்களில் கவிதைகள், கதைகள் எழுதுவதில் சிறந்து விளங்கிய இவரது ஒரு சிறுகதைக்கு லில்லி தேசிய விருது கிடைத்திருக்கிறது. கற்றது தமிழ் திரைப்படத்தின் கேமராமேனாக பாலுமகேந்திரா பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என அவரை நா.முத்துக்குமார் மூலம் அணுகி கதை சொல்லியபோது அவரிடம் பாலுமகேந்திரா இரண்டு விஷயங்கள் சொல்லியிருக்கிறார். ஒன்று நீ என்னிடம் சொல்லியபடியே இப்படத்தை எடுப்பாயா? மற்றொன்று இத்தனை அருமையான கதைக்கு நான் கேமராமேனாக செயல்பட்டால், நானே இப்படத்தை உங்களுக்கு எடுத்து கொடுத்துவிட்டதாகச் சொல்வார்களே? எனக் கேட்டிருக்கிறார். பாலுமகேந்திராவினால் ஈர்க்கப்பட்ட ராம் திரைப்படம் எடுக்கும் யோசனையை ஒத்திவைத்துவிட்டு அவரிடமே உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார். சில வருடங்கள் கழித்து அதே கதையைத் திரைப்படம் எடுக்க முயலுகையில் நல்ல சினிமாவை எடுப்பதற்குள் தமிழ் சினிமா இயக்குனர்கள் படும் அத்தனைப்பாடுகளையும் அனுபவித்திருக்கிறார். இப்படத்தின் கதையை கேட்டு இசையமைக்க சம்மதித்த யுவன் சங்கர் ராஜா தாம் வழக்கமாக வாங்கும் தொகையில் பாதியை மட்டுமே சம்பளமாகப் பெற்றிருக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். சுமார் எழரை மணி நேரம் படமாக்கப்பட்ட இப்படத்தின் பல்வேறு காட்சிகளும், பாடல்களும் நீளம் கருதி கத்தரிக்கப்பட்டுவிட்டது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். படத்தை முதன்முதலில் பாலுமகேந்திராவிடம் போட்டுக் காண்பித்தபோது அவர் சொன்ன வார்த்தை 'இப்படம் ஆசியாவின் ஐந்து சிறந்த படங்களுள் ஒன்றாக இடம் பிடிக்கும்' என்றாராம். இனி விழாவில் பேசியவர்களிடமிருந்த வந்த சுவாரஸ்யங்கள்....

நா. முத்துக்குமார்:

"நாளைய தமிழ் சினிமாவை ஆளப்போவது பாலுமகேந்திராவின் பரம்பரைகள்தான். ஏற்கனவே பாலா இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் திரைப்படங்களைத் தந்து கொண்டிருக்கிறார். இதோ ராம் கற்றது தமிழ் கொடுத்திருக்கிறார். பாலாவிடமிருந்து அமீர். அமீரிடமிருந்து வெற்றித்திருமகன், சுரேஷ்குமார் என வாழையடி வாழையாக இயக்குனர்கள் வந்துகொண்டே இருக்கிறோம். நானும் விரைவில் இயக்க இருக்கிறேன். இப்படத்தின் மூன்று பாடல்களையும் நான் வெவ்வேறு சூழலில் இருந்தபோது அவசர அவசரமாக எழுதிக்கொடுத்தேன். கர்ப்பமுற்ற மனைவியோடு ஸ்கேன் செண்டர் வந்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த வேளையில் 'இன்னும் ஒரிரவு' பாடலை எழுதினேன். என் மனைவியின் சீமந்தம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் 'பறவையே எங்கு இருக்கிறாய்' பாடலை எழுதினேன். தமிழ் படித்தவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது என்பதில் உண்மையில்லை. என்னுடைய தந்தை ஒரு தமிழாசிரியர். எங்கள் வீட்டில் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் இருந்தன. அதனாலேயே தமிழ் மேல் எனக்கு ஆர்வம் ஏற்பட்டு கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இளங்கலை இயற்பியலில் 80% மதிப்பெண்கள் பெற்றும் தமிழ் படிக்கும் ஆர்வத்தில் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை வகுப்பில் சேர்ந்த முதல் நாளில் எனக்கு நேர்ந்த சொந்த அனுபவமே பிரபாகரனிடம் கல்லூரி விரிவுரையாளர் பேசும் காட்சியானது. குரூப்1 மற்றும் ஆட்சிப்பணி தேர்வுகளில் தமிழ் கற்றவர்கள் சோபிக்க முடியாமல் போவதற்கான முக்கிய காரணம் அவர்களது முதன்மைத் தாளில் கேட்கப்படும் 200 கேள்விகளும் ஆங்கிலத்தில் இருப்பதுதான். அந்தக் கேள்விகளை முழுவதுமாகப் புரிந்துகொண்டு எதிர்கொள்ளும் அளவிற்கு ஆங்கில அறிவு இல்லாததுதான். அந்த முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் எளிதாக மற்ற பேப்பர்களைத் தமிழிலேயே எழுதி ஜெயித்துவிடலாம். உண்மையில் தமிழிலக்கியத்தை ஆழ்ந்து, உணர்ந்து படித்தவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. கற்றது தமிழ் ஒரு அரசியல் படம். அது ஒரு மனு. அதன் நுட்பமான அரசியலைப் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் பலருக்கு இப்படம் போய் சேரவில்லை. ஒரு இயக்கமாக்கி இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்."

பாலுமகேந்திரா:

"இன்றைய ஒளிப்பதிவாளர்கள் காட்சியில் தங்களது இருப்பை ஜனங்களுக்கு, தயாரிப்பாளர்களுக்குத் தெரியப்படுத்துகிற போலியான எண்ணத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு உன்னதமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பாலுமகேந்திரா எனும் காமேராமேனுக்குப் பின்னே பாலுமகேந்திரா என்ற இயக்குனர் இருக்கிறார் என்பதே காரணம்.

யதார்த்த சினிமாவில் ஒளிப்பதிவு என்பது அந்தக் காட்சியில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கே தெரியாமல் அந்தக் காட்சி பதியப்பட்டது என்ற மனநிலையைப் பார்வையாளனுக்கு ஏற்படுத்தும் அளவிற்கு இருக்க வேண்டும். அறிமுக ஒளிப்பதிவாளர் கதிர் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

நான் மூடுபனி படத்திலிருந்து அது ஒரு கனாக்காலம் வரை சுமார் இருபத்தைந்து வருடங்கள் இளையராஜாவோடு பணியாற்றி வருகிறேன். நான் முதன்முதலில் ராஜாவோடு பணியாற்றும்போது அவரிடம் சொல்லியது ஒன்றே ஒன்றுதான். அது 'பின்னணி இசையமைக்கும்போது எனது அர்த்தமுள்ள மெளனங்களை கலைத்துவிடாதே' என்பதுதான். மெளனங்கள் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை. என் மெளனத்தையே உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் என் வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வாய்? ராஜாவும் பின்னனி இசையில் என் மவுனங்களை சிதைக்காமல் இருப்பார். அப்படி ராஜா வீட்டுக்குப் போகும்போது யுவன் வெளக்கெண்ணெய் முகத்துடன் உம்மென்று இருப்பான். என்னைப் பார்த்தால் ஒரு வணக்கம்கூட அவனுக்கு சொல்ல தோண்றாது. நான் ராஜாவிடம் கேட்பேன் ஏன் இந்த பையன் இப்படி இருக்கிறான் என்று. அந்த வெளக்கெண்ணையிடமிருந்து உன்னத இசை வெளிப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சுப்பு என்னிடம் போட்டுக் காண்பித்தபோது எனக்கு ஏற்பட்ட ஓரே பயம் இத்தனை உன்னதமான ஒரு க்ளைமாக்ஸை பின்னணி இசை என்ற பெயரில் கோரமாக்கிவிடக்கூடாதே என்பதுதான். உடனே சுப்புவின் மூலம் யுவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'யுவன் வாழ்க்கையில் அரிதான சந்தர்ப்பங்கள் எப்போதாவதுதான் ஏற்படும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்' என்றேன். தம்பி யுவன் அதை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டான்.

படத்தின் துவக்கம் முதம் முடிவு வரை ஓரே ஷாட்டில் (சிங்கிள் ஷாட்) எடுக்கப்பட்டது என்ற உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவதே நல்ல படத்தொகுப்பு. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் உழைப்பு என்னைப் பிரமிக்க வைக்கிறது.

என்னுடைய உதவி இயக்குனராக இருந்த நா.முத்துக்குமார் சினிமாவிற்குப் பாட்டெழுதப்போகிறேன் எனக்கிளம்பியபோது நான் மிகுந்த ஆத்திரமுற்றேன். என் வாழ்நாளில் அதுவரை உபயோகித்திராத கெட்ட வார்த்தையொன்றை உபயோகித்து திட்டி அனுப்பி வைத்தேன். இவனும் அந்த சாக்கடையில் கலந்துவிடக்கூடாதே என்ற கவலைதான் காரணம். ஆனால் எனது மகன் முத்துக்குமார் நல்ல அற்புதமான, கவித்துவமான பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறான். நல்ல பாடல்களை கேட்கும்போது இவன் எழுதியதா என்றுகூடத் தெரியாமல் ரசிக்கிறேன். ஆனால் நல்ல பாடல்களை கேட்கும்போது அதை இவன் தான் எழுதியிருக்க வேண்டும் என்று நிணைத்துக்கொள்ளும்படி எழுதி வருகிறான் முத்துக்குமார்"

இயக்குனர் ராம்:

"உலகத்திலேயே சர்வாதிகாரம் மிக்க வாகனம் பஸ்தான். டிரைவர் நிறுத்தும்போதுதான் சாப்பிட முடியும், சிறுநீர் கழிக்க முடியும் என்ற நிலைமை. அதிலும் துருபிடித்த ஜன்னல் கம்பிகள் சட்டைகளை இழுத்து பதம் பார்க்கத் துடிக்கும் அந்த சர்வாதிகார பயணத்தை நான் வெறுக்கிறேன் என்பதால் எப்போதும், எங்கும் எனது பைக்கில் போவதையே நான் விரும்புகிறேன். அப்படி செல்கையில் பல்வேறு மனிதர்களை, ஊர்களை, நிலத்தின் தன்மைகளை நான் உள்வாங்கி கொள்ள முடிகிறது. எனது படத்தில் இடம்பெற்ற பல்வேறு லோக்கேஷன்களை நான் பைக்கில் பயணிக்கும்போதுதான் கண்டறிந்தேன். தவிரவும் எனக்கு விருப்பப்படும்போது நிறுத்திக்கொள்ளவும், ஒய்வெடுக்கவும் முடியும்.
காத்திருப்பின் உச்சம் சினிமா. கதையை யோசிக்க, திரைக்கதை தயாரிக்க, அதன் கதையை சொல்லி தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்க, கதைக்குப் பொறுத்தமான பாத்திரங்களின் தேதிகளைப் பெற, இசையமைக்க, பாடல்களை எழுத, தொழில்நுட்பக் கலைஞர்களை சேர்க்க எனப் பலகாலம் காத்திருக்க வேண்டும். இப்படத்திற்காக நான் பலகாலம் காத்திருந்தேன்.
என்னால் என்னுடைய படத்தை மீண்டும் ஒரு முறை கூட பார்க்க இயலவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும்போது அடடா இதை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாமே என்றுதான் ஒவ்வொரு முறையும் நிணைக்கத் தோன்றுகிறது. ஒரு இயக்குனரின் சாபக்கேடும் இதுதான்.
என் படம் குறித்து பல்வேறு பட்ட விமர்சனங்கள் வந்துகொண்டுதானிருக்கின்றன. எனது படம் சிலரை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. ஒரு படைப்பு ஒருவரை ஆத்திரப்பட வைத்திருக்கிறது என்றால் கலை வெற்றி பெற்றுவிட்டது என்று பொருள். நான் எதிர்பார்க்கும் ஓரே விமர்சனம் என்னுடைய ஆசான் இயக்குனர் பாலுமகேந்திராவின் விமர்சனத்தை மட்டும்தான் அவரே 'ஆசியாவின் ஐந்து சிறந்த படங்களுள் ஒன்று' என சொல்லியபின் வேறு விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலையில்லை.
திரைப்படம் உள்வரிகளால் நிரப்பட்டது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் சப்டெக்ஸ்ட்களால் நிரம்பியிருக்கிறது. அந்த நுட்பமான உள்வரிகளை பார்வையாளன் உணர்ந்து கொண்டு ரசிக்கும்போது அதை சொல்லி பாராட்டும்போதுதான் நான் உண்மையில் மகிழ்வேன். எனவே அந்த சப்டெக்ஸ்டுகளைப் புரிந்து கொள்ள படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள்".

Friday, October 19, 2007

கும்கீகளோடு கொஞ்ச நேரம்

விஜயதசமியும் அதுவுமாய் ஏதாவது ஒன்றை புதியதாய் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சங்கல்பத்தில் பொட்டீயை நோண்டியதில் யூட்யுப்பில் வீடியோவை இணைப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டேன். ஒன்று தெரிந்து விட்டால் சும்மா விடுவோமா என்ன? உடனே முன்பே எடுத்து வைத்த வீடியோக்களை போட்டுக் காண்பித்து பெருமை அடித்தால்தானே ஆச்சு... அதான் இந்த வீடியோ பதிவு. இந்த வீடியோவில் இருக்கும் குட்டியானைதான் டாப்ஸ்லிப்பின் அழகு குட்டி செல்லம். மூன்றே வயதான இந்த குட்டி யானையின் பெயர் குல்லூ. கும்கீ யானைகளுக்கான பயிற்சிமுகாம் ஊழியர்கள், வனக்காவலர்கள், ரேஞ்சர்கள், முகாமைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் கவரும் லிட்டில் சூப்பர் ஸ்டார் இந்த குல்லூ. குல்லூவோடு சேர்ந்து நான் எடுத்துக்கிட்ட வீடியோவைத்தான் போட்டிருக்கேன்.

Wednesday, September 19, 2007

பெண் எப்போது அழகாகிறாள்?

ட்ரிங்....ட்ரிங்....

ஹலோ ராஜி சொல்லுமா...

எங்க இருக்கே?

ஆபிஸ்லதான்...

என்ன செஞ்சுகிட்டு இருக்கே?

சிஸ்டத்துல ஓர்க் பண்ணிகிட்டு இருக்கேன்...

ஆர்க்குட்ல மேஞ்சிகிட்டு இருக்கியா?

சே..சே... ரிப்போர்ட் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன்...

என்ன ரிப்போர்ட்?

ரெண்டு நாள் அபிசியல் டூர் போன ரிப்போர்ட்...

எப்ப முடிப்ப?

இன்னும் ஓன் ஹவர் ஆகும்

நேத்திக்கு என்ன சொன்னன்னு நிணைவிருக்கா?

இருக்குது... அஞ்சு மணிக்குள்ள கட்டாயம் வந்துடுவேன்

இப்பவே மணி நாலரை எப்படி வருவே?

அதான் வந்துர்றேங்கிறல்ல...

கிழிச்சே.... இப்படித்தான் போனவாரமும் சொன்னே என்ன நடந்திச்சின்னு தெரியுமுல்ல?

ஐயோ மா இன்னிக்கு கட்டாயம் இப்படி நடக்காது.... நீ இப்படி பேசிகிட்டே இருந்தா நான் ரிப்போர்ட்டை முடிக்க முடியாது....

இப்ப என்ன நான் போனை வைக்கனும்கிறீயா?

ஐயோ நான் அப்படி சொல்லல

வேற எப்படி சொன்ன?

நான் பேசினா ஒனக்கு கசக்குதுல்ல?

வேற எவகிட்ட இருந்து போன் வந்தாலும் மணிக்கணக்குல பேசுவ?

நான் கூப்பிட்டா மட்டும் ஒனக்கு ரிப்போர்ட்டு, டூர்னு ஆயிரத்தெட்டு வேலை வந்துடும் அப்படித்தான?

தலைப்பிற்கான விடை: "வாயை மூடிக்கொண்டிருக்கும்போது"

எத்தனையெத்தனைக் கேள்விகள்? கேள்விக்குறிகளின்றி ஏன் இவர்கள் வாசகங்கள் முடிவடைதில்லை? மூர்ச்சையடைய வைக்கும் இந்த கேள்விகளை ஆண்கள் விரும்புவதேயில்லையென இவர்களுக்கு எப்போதும் புரியும்?

மூலம், ஆதி மூலமானது

'விஸ்லவா சிம்போர்ஸ்கா'ங்கிற பேரை எங்கேயோ எப்பவோ கேள்விபட்டிருந்தேன். அவரு ஏதாவது ஒரு நாட்டின் வெளிநாட்டு தூதுவராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ இருந்துருப்பாருன்னுதான் நெனச்சேன். 'கேதரீன் பழனியம்மாளுக்கு' போட்டியாக நாமும் ஒரு பெயரை வெச்சுகிட்டு கவுஜ எழுதனும்னு வெளாட்டு வாக்குல அந்த பேர எடுத்துகிட்டு நைஸா ஒரு கவுஜய எழுதி மார்க்கட்டுல உட்டா, உண்மையிலேயே ஒரு கவிஞர் நார்வே நாட்டுல இருந்துருக்காரு அந்த பேருல.... ஆகவே மகாஜனங்களே 'சட்டிக்கதையை' மன்னிச்சி மறந்தது போலவே இந்த சல்லித்தனத்தையும் மன்னிச்சிடனும்னு மன்றாடி கேட்டுக்கறேன்.

Tuesday, September 18, 2007

பொறுக்கியான பொழுதில்

பொறுக்கியான பொழுதில்

எதிர்வீட்டில்
பள்ளிக்கூடத்தில்
கல்லூரியில்
பணியிடத்தில்
இணையப் பெருவெளியில்
இடம் எதுவாயிருந்தாலும்
நீங்களே புன்னகைக்கிறீர்கள்
நலம் விசாரிக்கிறீர்கள்
எண்களைக் கேட்டு வாங்கி கொள்கிறீர்கள்
குறுஞ்செய்திகளால் குளிப்பாட்டுகிறீர்கள்
காலநேரமின்றி ஓயாது வாயாடுகிறீர்கள்
உங்கள் விருப்ப இடங்களுக்கு
நாய்க்குட்டிபோல் இழுத்து செல்கிறீர்கள்
தொட்டு பேசுகிறீர்கள்
சண்டையிடுகிறீர்கள்
சபிக்கிறீர்கள்
பின் எனை விட்டு பிரிகிறீர்கள்
இந்த உலகம்
என்னை 'பொறுக்கி' என்கிறது.....

Tuesday, September 4, 2007

முடியலத்துவக் கவிதைகள்

பழங்காலத்தில் பல்சர் இருந்தது

அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்ககூடாது
என்னை உன்னிலிருந்து
அந்நியப்படுத்தியது எது?
இந்தக்கதவும் அறிவிப்பும் தானே

திப்பு கிழித்தெறிந்த வேங்கையின்
பேரப்புலி ஒன்று
இன்னும் வெறிகொண்டு திரிகிறது
வஞ்சம் தீர்க்க
அது பசித்தால்
பிஸ்கட் திங்கும் புலியாம்

பெருமழைக்கு பயந்த பெருச்சாளி
சமணகுகைக்குள் நுழைந்தது
மூலிகை வர்ணம் குழைத்து
வரையப்பட்ட நிர்வாண படங்களை பார்த்து
பெரும்பயம் கொண்டது பெருச்சாளி
ரப்பை பருத்த காவலர்
என் வண்டியை நிறுத்தி
தோசை ஏதேனும் இருக்கிறதாவென
சோதனை போடுகிறார்
அவரது சோதனையில்
என் கவிதைகள் சிக்காதிருக்கட்டும்
----------------------------------------
ஆதாம் கையில் கிடைத்த பால்பாயிண்ட் பேனா

பற்பல பிறவிகள் வாங்க
பிக்பஜார் செல்ல
நான்ஓடத்தில் ஏறினேன்
ரவுண்டானாக்களை கடக்க
திராணியில்லாத அந்த ஓடத்தின்
வெளிச்சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தது
பின் தொடர்ந்த ஆடுகள்
போஸ்டர்களைத் தின்றன
பிதாவே இவர்களை மன்னித்து
நன்றாக சமையுங்கள்

சிற்சில தவறுகள் செய்யுங்கள்
உபன்யாசகர் கெஞ்சிக் கேட்டுகொண்டார்
எவன் கேட்கிறான்
அவனவன் கையில் செல்போன்
அத்தனைபேரும் வேதவித்து

இன்னும் மிஞ்சியிருப்பது
இரண்டு ரொமாலி ரொட்டிகள்தான்
தொட்டுக்கொள்ள பஞ்சகவ்யமும்
தாகத்திற்கு இரண்டு நைல் ஷாம்பூ பாட்டில்களும்

உங்கள் குழந்தைகளுக்காக
கவலைகளை வாங்கி வைக்காதீர்கள்
மாறாக கவலைப்பட கற்றுக்கொடுங்கள்
பெருந்துன்பத்தின் வேர்களிலிருந்து
மூலிகை பெட்ரோல் கிடைக்கும்

அன்புத்தோழி ப்ரிவ்யூ ஷோவில்
காஸ்ட்ரோ குவிக்குவி விற்ற சுண்டலை
வாங்க எவனுக்கும்வக்கு இல்லை
ஜார்ஜ் புஸ்ஸூம் வந்திருந்தான்

சினிபிளெக்ஸ் தியேட்டர்களுக்குள்
அடைக்கப்பட்டிருக்கும் வெள்ளைப் பன்றிகள்
விடுதலையானதும்
நாம்பால்குக்கரை
அடுப்பிலிருந்து இறக்குவோம்

மனம் ஒரு குரங்கு
அதன் உடலெங்கும் சிரங்கு...
---------------------------------
பாதாள லோகத்தில் பானுப்ரியா

கசிந்து கொண்டிருந்த இசை
கயிற்றுக்கட்டில் மேல்
கட்டெறும்பாய் நகர்கையில்
குலுங்கி குலுங்கி அனைந்து போனது
தெருவிளக்குவெளிச்சம் இருந்த
வெளியெங்கும் இப்போது இசையை நிரப்பலாம்
அல்லது தோசையை திருப்பலாம்

அமெரிக்கா சென்ற அய்யோடியின் பிள்ளைகள்
அம்பரம்பாளையம் திரும்பி வந்த ஓரிரவில்
அய்யோடியின் கல்யாண வேட்டியில் ரத்தக்கறை
வயசுக்கு வந்திருப்பான்
அல்லது வத்தபொடி சிந்தியிருக்கும்

கடலைவாய்க்காரியை கலாய்க்கபின்
முன் நவீனத்துவம் போதவில்லை
எனதிருத்தக்க தேவர் டிரங்காலில் தெரிவிக்க
ஓட்டக்கூத்தர் நடு நவீனத்துவம் தேடி
பத்மாவுடன் பாங்காங் புறப்பட்டார்
நடுவழியில் பஞ்சரானது பஸ்

டிஞ்சர் வேண்டும்;
டிஞ்சர் வேண்டும் கதறியபடி ஓடி
எதிர்வந்த ஜம்போமாமி
மேல் மோதி விழுந்தான் மொக்கராசு
விழுவதற்கு முன் ஏன் டிஞ்சர்...?!
-------------------------------------

ஸ்பேனர்களின் தலையாட்டல்

நள்ளிரவுவரை நீளும்
நட்டடித்த கதைகளால்
புரண்டு படுக்கும் ரூம் மேட்டின்
போர்வை ஈரமானதற்குநானா காரணம்?

வகுப்பறையில் வயசுக்குவந்தவர்களின்
ஞாபகத்தில் எப்போதும் இருப்பது
எப்போதோ குடித்த பனங்கள்ளாகவும் இருக்கலாம்
அல்லது பரதேசிகளுக்குப் போட்ட பிச்சையாகவும் இருக்கலாம்

எச்சக்கலை கவிதைகள் தேடி
சில பன்னாட்டு நிறுவனங்கள்
என் கோமணத்தை அவிழ்த்துபார்த்தபோது
எட்டி நின்று வேடிக்கை பார்த்தவன்
சவுரவ் கங்குலி இல்லை

எப்போதும் இப்படித்தானா
எதிர்வீட்டு மாமி கேட்டபோது
மாமா இல்லாதபோது மட்டும்தான்
என பதில் சொல்லுமுன்பே
பறந்து போனதுபுளியமர காக்கை
எனவேதான் தோழர்களே
வீராப்பு பார்த்தவுடன்மோர் குடிக்கவும்...
-------------------------------------------------
முடியலத்துவம்

முந்தாநாள் அடித்தகஞ்சாவால்
மிஞ்சிய கிறுகிறுப்பின்
எஞ்சிய வார்த்தைகளைப்பிடித்துக்கொண்டு
சரயு நதிக்கரையோரம் நீந்திக்கொண்டிருந்தேன்
என் சக்களத்தி செத்துவிட்டாள்
கலோக்கியல் நடையில்
கருமாதிசெய்ய வேண்டும் என
சதிசாவித்திரி கலங்கியபடி
வந்தபோது பீறிட்டெழுந்தது
ஓரு கப்ஸா கவிதை
பின்நவீனத்துவத்தின் உள்ளிடற்ற
கரிபீயன் கல்லறை தீவில்
கபோதி ஒருவன்
காம்போதி பாடுகிறான்
ஞானமெனும் பெருங்கழுதை
கடன் வாங்கி திரிவதை
எதிர்வந்த யானை ஏளனம் செய்தபோது
சத்தியமாய் அவள் செத்துவிட்டாள்!
---------------------------------------

Wednesday, August 22, 2007

கோவையில் வேளுக்குடி கிருஷ்ணன்

s கோவை - ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதீய வித்யா பவனில் ஆகஸ்டு 20ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை எழு தினங்களுக்கு 'மகாபாரதத்தில் முத்துக்கள்' என்ற தலைப்பில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் வழங்கும் உபன்யாசம் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும் இந்த கதாகாலட்சேபத்தில் கலந்துகொண்டு கிருஷ்ணானுபவத்தில் திளைக்க ஆன்மீக அன்பர்களே வருகை தாருங்கள்!

Saturday, August 18, 2007

நல்லா கேக்குறாய்ங்கய்யா டீடெய்ல்ஸூ.....!

கல்யாண வீடு. விருந்தில் பரிமாறப்பட்ட அத்தனை பதார்த்தங்களையும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டான் நம்ம அய்யாக்கண்ணு. கண்டபடி தின்று விட்ட அய்யாக்கண்ணுவால் இருந்த இடத்தை விட்டுக்கூட எழுந்திருக்க முடியவில்லை. பேசவே சிரமாய் இருந்தது. மூச்சு வாங்கியது. அவனது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட ஒருவர் 'ஏலே அய்யாக்கண்ணு... இப்படியாடே கண்டபடி திங்கறது... சரி வாய்க்குள்ள ரெண்டு வெரல விட்டு வாந்தியெடுலே சரியாய் போயிடும்' என்றார். அதற்கு அய்யாக்கண்ணு "யோவ் சுத்த வெவரங்கெட்டவரா இருக்கீறே.... ரெண்டு வெரல வைக்கிறதுக்கு இடம் இருந்தா... ரெண்டு பழம் சாப்பிட மாட்டேனாவேய்...!"

அய்யோடிகளின் கதை

பள்ளிக்கூடம் க்ளைமாக்ஸில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்? - ஊரிலிருக்கும் ஜெபராஜ் செல்போனில் அழைத்து கேட்டபோது நேரம் நள்ளிரவைத் தாண்டி இருந்தது. நவரஸாவில் வருவானே ஒரு சந்தேகங்கள் பீடித்த சோடாபுட்டி சிறுவன் அவனும் ஜெபராஜூம் ஒன்றுதான். தனது ஐயங்களை இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கேட்க தயங்காதவன். சதா சந்தேகங்களுடன் அலையும் கேள்வியின் நாயகன்! சரி விஷயத்துக்கு வருகிறேன். தங்கரின் மூன்று ஹீரோக்களில் ஒருவன் நல்ல படிப்பாளி. வறுமை இறுக்கியபோதும், காதலில் தோற்றபோதும் களைத்து விடாமல், சளைக்காமல் படித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. மற்றொருவர் எட்டு படங்கள் இயக்கி விட்ட சினிமா இயக்குனர், மூன்றாமவர் மாப்பிள்ளை பெஞ்சு வகையரா. படிப்பு ஏறாமல் விவசாயக்கூலி ஆனவர். இறுதி காட்சியில் அய்யோடியின் நிணைவோட்டத்தில் வகுப்பாசிரியர் "நீங்கள்ளெல்லாம் படிக்க வந்து ஏண்டா எங்க உயிரை வாங்கறீங்க... எங்கயாவது கூலி வேலைக்கு போக வேண்டியதுதானே?" என ஆத்திரத்தோடு இரையும் காட்சி வந்து போகும். பின் அந்த பள்ளியின் மீது மெல்ல இருள் கவிய, படம் முடிந்து போகும்.

அய்யோடி பள்ளியின் மீதும், பாடங்கள் மீதும் தீராத பயம் உடையவன். உண்மையில் பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கே விரும்பாத அய்யோடி, அதனாலேயே கல்வியை இழந்து விவசாய கூலி ஆகிப்போனவன் என்பது அவனது சுய சரித்திரம். ஆனால் பள்ளியின் சரித்திரத்தில் அந்த கலெக்டரைவிடவும் மிக முக்கியமானவன் இந்த அய்யோடி. பாழடைந்த பள்ளியை மீட்க தொலைந்த தோழர்களை தன் அன்பால் இழுத்து வந்த அய்யோடிதான் அந்த பள்ளியின் மிக முக்கிய மாணவன். பள்ளிகளால் புறக்கணிக்கப்பட்ட, ஆனால் பள்ளிக்கூட நிணைவுகளை என்றும் மறக்காத, மாறாத அன்பு கொள்ளும் எங்கள் ஜெபராஜைப் போன்ற அய்யோடிகள் நிணைவுக்கு வந்து அன்றிரவு தூக்கம் தொலைத்ததை ஜெபராஜிடமே எப்படி சொல்லி விளக்குவது?

Tuesday, August 14, 2007

என்னுடைய வாழ்த்து செய்தி!

"நாட்டிலோ, வீட்டிலோ நமக்கு வழங்கப்பட்டிருக்கிற சுதந்திரங்கள் தனித்த வரம்புகளை உடையது. அதன் எல்லைகளை மீறுவோர் சுதந்திரத்தை இழக்க நேரிடும். உணர்ச்சிவசமிக்க தேசபக்தியை விட ஆபத்தானது எதுவும் இல்லை. அதனால் தேசத்திற்கும் பலனில்லை. உண்மையில் தேசத்தை யாரும் வளர்க்க முடியாது. அது தானே வளரும் தன்மை உடையது. அதன் வளர்ச்சிக்கு இடையூறு செய்யாமல் வேண்டுமானால் நம்மால் இருக்க இயலும். தனிமனிதனாய் அவரவர் கடமையை சரிவர செய்தால் தானும், தேசமும் உயர்வதை தத்தம் கண்களாலேயே உணரமுடியும். தன் கடமைகளை சரிவர செய்பவர்களை உரிமைகளும், சலுகைகளும் தேடிவரும் என்பதை உங்கள் வாழ்க்கையில் இருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். விவசாயத்தை கெடுக்கும் பார்த்தீனியத்தைவிடவும் கொடியது அலட்சியம். நம் கண்முன்னே நிற்கும் பெரிய சவால் தேசம் முழுவதும் பரவிக்கிடக்கும் அலட்சியம் எனும் பொதுஎதிரியை விரட்டி அடிப்பதுதான். விரட்டி அடிக்க முயற்சிப்போம். வந்தேமாதரம். சுதந்திரதின வாழ்த்துக்கள்!"

Tuesday, July 31, 2007

வென்றார் லக்கிலூக்!


நாட்டுமக்களுக்கோர் நற்செய்தி! நமது சமஸ்தானம் நடத்திய போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து பல்வேறு பொழிப்புரைகள் வந்திருந்தன. நுன்மான்நுழைபுலமிக்க நமது அரசவைப் பண்டிதர்களும், ரிட்டையர்டு தமிழ் குஞ்சுகளும், மதியூக மந்திரிகளும் ஆய்வு செய்ததில், திரு.லக்கிலூக் அவர்களின்
"மேட்டரு இன்னான்னு சுகுரா சொல்லிடு - இல்லாங்காட்டிஅப்பாலிக்கா வேலைக்காவாது" என்ற பதில் சுருக்கமாகவும், எளிதாகவும், உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். எனவே அவரது பின்னூட்டமே பரிசில் பெற தகுதியுடையதாக அறிவிக்கப்படுகிறது. அவரை சமஸ்தானம் வாழ்த்துகிறது.

Tuesday, July 24, 2007

பதிவுலக சிங்கங்களே போட்டிக்குத் தயாராகுங்கள்...!

பதிவராகி இன்னும் ஒரு போட்டிகூட நடத்தி, பரிசு வழங்கவில்லை என்றால் அது சமஸ்தானத்துக்கே அவமானம் என என் மதியுக மந்திரி மன்றாடியதால், என்னருமை பதிவர்களே உங்களது திறமைக்கு ஒரு சவால். கீழ்காணும் இந்த எளிய திருக்குறளுக்கான விளக்கத்தை மண் மணக்க அவரவர் வட்டார மொழி வழக்கியலில் பின்னுட்டமாக இடுங்கள். சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் என எந்த தமிழை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆனால் மறக்காமல் தங்களது ஊரையும், மாவட்டத்தையும் பின்னுட்டத்தில் தெரியப்படுத்திவிடுங்கள். தேர்வாகும் பின்னுட்டத்திற்கு பரிசு வீடு தேடி வரும். களத்துல குதிங்கப்பு....

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

பின்குறிப்பு:
எக்காரணம் கொண்டும் கையூட்டு பெற மாட்டாது.

Monday, July 23, 2007

தல' தப்புமா...?!

ஆழ்வார் மாதிரி படங்கள் தந்த அனுபவத்தில் அஜீத் படங்கள் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனாலும் லோகிததாஸின் கதை, ரிலையன்ஸின் தயாரிப்பு, கணபதியின் நச்சரிப்பு என போதுமான காரணங்கள் இருந்ததால் கிரீடம் பார்த்தேன். தன் மகனை இன்ஸ்பெக்டர் ஆக்கி பார்க்கும் கனவில் நடுத்தர தந்தை ராஜ்கிரண். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கும் மகனாக அஜீத். எதிர்பாராத விதமாக உள்ளூர் பிரமுகரின் மகனை ராஜ்கிரண் அடித்துவிட கோடியக்கரைக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். உள்ளூர் தாதா வரதனின் பிடியில் இருக்கிறது கோடியக்கரை. வரதனால் தன் தந்தை தாக்கப்படுவதை கண்டு பொங்கி எழும் அஜீத் அவரை மரண அடி அடிக்கிறார். ஒரு தாதாவிடம் மோதியதால் ஒரு நடுத்தர குடும்பத்தின் கனவு சிதைந்ததையும், அவர்கள் படும் அவஸ்தையையும் சொல்கிறேன் பேர்வழி என்று ரசிகர்களையும் அவஸ்தைகளுக்குள்ளாக்கி சொல்லும் படம் கிரீடம்.

தவமாய் தவமிருந்தில் ஆரம்பித்த பொறுப்பான அப்பா, பாசக்கார அம்மா பயணம் ராஜ்கிரண், சரண்யா ஜோடிக்கு இன்னும் முடிந்த பாடில்லை. முன்பாதியில் த்ரிஷாவுடன் காதல் மலரும் த்ராபை காட்சிகளில் ரசிகர்கள் பத்துநாட்களுக்கு முன் வந்த பழைய எஸ்.எம்.எஸ்களை படித்துக்கொண்டிருக்கிறார்கள். வில்லன் அஜய்குமார் தமிழ் சினிமாவில் காலாவதியாகிப் போயிருந்த பி.எஸ்.வீரப்பா ஸ்டைல் வில்லன் சிரிப்பை மீட்டெடுத்திருக்கிறார். அவர் ஆ...வூ என்று கத்தும்போது பயம் வருவதற்கு பதிலாக பரிதாபம் வருகிறது. அந்த அங்கிளுக்கு என்ன பிரச்சனை? என அருகில் இருந்த குட்டிப்பையன் என்னிடம் கேட்டான்.

விவேக்கிடம் மெல்ல வடிவேலின் சாயல் அடிக்கிறதோ?! “அவரது வைரம் பாய்ஞ்ச கட்டை”க்குத் திரையரங்கமே அதிர்கிறது. கோடியக்கரை வீட்டில் தண்ணீர் தொட்டிக்குள் த்ரிஷாவும், அஜீத்தும் தங்கள் திருமணம் குறித்து பேசுவதும் அதை மொத்த குடும்பமும் குழாய் வழியாக ஒட்டுக்கேட்பதும் குபீர் சிரிப்பை வரவழைக்கும் சிறந்த சீன்.
திருவின் காமரா வழக்கம் போல அசத்தியிருக்கிறது. பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார் முதன்முறையாக இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். எளிய, இயல்பான வசனங்கள். ஒரிரு பாடல்களிலும், சில காட்சிகளின் பிண்ணனி இசையிலும் அடடே போட வைக்கிறார் இசையமைப்பாளர். படம் முழுக்க கண்டபடி மிஸ்ஸாவது கண்டினியூட்டிதான். த்ரிஷாவை வீட்டு வாசலில் மடக்கி பைக்கில் ஏற்றும் சீனில் மழுங்க சேவ் செய்திருக்கும் அஜீத் அவரை கல்லூரி வாசலில் விடுவதற்குள் பத்துநாள் தாடியோடு இருக்கிறார்.
அஜீத் தன் உடைகளில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தின் இனம் புரியாத சோகம் ஒன்றை எப்போதும் கண்களில் தாங்கியபடி வலைய வரும் அஜீத் க்ளைமாக்ஸில் உண்மையிலேயே க்ரீடம் சூடியுள்ளார். வரதனைக் கொன்று விட்டு கதறி அழும் சீனில் அசத்தி இருக்கிறார். அஜீத்திடம் ஏராளமான நடிப்பாற்றல் இருக்கிறது ஆனால் தரமான இயக்குனர்கள் அணுக முடியாத இமேஜ் வட்டம் அவரது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. இந்த படம் மட்டும் ஓடாவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இளம் இயக்குனர்களுக்கு படம் செய்வதில்லை என அவர் அறிவித்திருப்பதாகக் கேள்வி. பிழைத்துக்கொள்வார்.

சமீப காலமாகத்தான் தமிழ் சினிமா தோல்வியுற்ற மனிதர்களின் கதைகளையும் படமாக்க ஆரம்பித்திருக்கிறது. வெயில் போன்ற படங்களைத் தொடர்ந்து கதாநாயகன் தோல்வியடைந்து, கதை வெற்றியடையும் படம் இது. கொஞ்சம் சகித்துக்கொண்டு ஒரு முறை பார்க்கலாம்.

Monday, July 16, 2007

வசதியாக மறந்துவிட்டோம்..!

ஈரோட்டில் ஒரு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய கொஞ்சம் ஆட்கள் தேவைப்பட்டது. நண்பரிடம் கேட்டிருந்தேன். அதிகம் உடலுழைப்பு தேவைப்பட்ட அந்த வேலைக்கு மூன்று சிறுவர்களை அனுப்பி வைத்தார் அவர். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும் அவர்கள் மூவருமே வார இறுதிகளில் ஏதாவது பகுதி நேர வேலைகளை செய்பவர்களாம். அவர்களுள் ஒருவன் முன்னனி நாளிதழில் ஒன்றில் பார்சல்கள் கட்டும் பணி செய்து வருகிறானாம். தினமும் இரவு எட்டு மணிக்கு பார்சல்களை கட்ட ஆரம்பித்து, வேனில் ஏற்றி ஊர், ஊராக கட்டுகளை இறக்கி விட்டுத் திரும்பும் கடும் உழைப்பு தேவைப்படும் வேலை. வீட்டுக்கு காலை 6:30 மணிக்குதான் திரும்பமுடியும். இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி விட்டு பள்ளிக்கு சென்று வருகிறான் அந்த மாணவன்.

" வெறும் இரண்டு மணி நேரம் மட்டும்தான் உறங்குகிறாயா?" அதிர்ச்சி மேலிட அவனிடம் கேட்டேன். 'அதுவும் சில நாட்கள்தான் வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன்கள் வேலைக்கு கிளம்ப தயாராகும் களேபரத்தில் தன்னால் உறங்கவே முடியாது. பள்ளிக்கூடத்தில் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் சாப்பிட போவார்கள். நான் வகுப்பறையிலேயே உறங்கி விடுவேன்' என்றான். ' அது சரி கிடைக்கும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலாவது உறங்கி ஓய்வெடுக்கலாமே?' என்றேன். 'ஒரு நாள் உறங்கிட்டாலும் காலேஜூக்கு பீஸூ சேர்க்க முடியாது சார். என் குடும்பத்தில நான் ஒருத்தனாவது படிக்கட்டும்னு எங்க அம்மா, அப்பா, அண்ணன்மாரெல்லாம் உழைக்கும்போது தூங்க மனசில்ல சார்' என பதில் வந்தது. எனக்கு கண்ணீர் வந்து விட்டது. அவனை ஒரு ஓரமா படுத்து உறங்க சொன்னேன். முடியவே முடியாது என மறுத்துவிட்டு பேனர்களை கட்ட போய்விட்டான். இறைவா! இவன் ஒரு நாள் நிச்சயம் இந்த உலகை வெல்ல வேண்டும். நான் பிரார்த்திக்க தொடங்கினேன்.

சாமான்யர்கள் அணுக முடியாத அளவிற்கு கல்வி வியாபாரமாகி விட்டது என்ற கூக்குரல்கள் எல்லா மட்டங்களிலும் ஓங்கி ஓலித்துக்கொண்டிருக்கும் காலமிது. அறிக்கைப் போர்கள் நடக்கின்றன. போராட்டம் நடத்துகிறார்கள். கவர்ஸ்டோரி ஆகிறார்கள். ஆனால், கவனிப்பார் இல்லை. தென்மாவட்டங்களில், சனி, ஞாயிறுகளில் கட்டிட வேலை பார்த்துக்கொண்டு, அரசு மாணவர் விடுதியில் தங்கி தங்களது கல்வியைத் தொடரும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த அச்சிறுவர்கள் தங்களது இரண்டு நாள் உழைப்பைக் கொண்டு வாரத்தின் ஏழு நாட்களையும் ஓட்டி வருகிறார்கள். பிச்சை புகாமல் உழைத்து கற்கும் இவர்களுக்கு உதவ துப்பு இல்லாத இந்த அரசாங்கம்தான் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம்! குழந்தைகள் வருமானம் நாட்டின் அவமானம் என தொடர் முழக்கமிட்டு வருகிறது.

இன்றோடு கும்பகோணம் தீ விபத்து நடந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. நம்மைப் போன்ற சாமான்யர்கள் அன்றாட கவலைகளில் ஆழ்ந்து விட்டோம். அரசாங்கம், ஊடகங்கள் உட்பட நாம் எல்லாருமே மறந்துவிட்ட அந்த கொடிய துயரத்தின் தீர்க்கப்படாத கேள்விகளுக்கு இன்னும் விடைதான் கிடைத்தபாடில்லை. இன்றும் சிக்னலில் நிற்காமல் சீறிப்பாயும் ஸ்கூல் வேன்களையும், பத்திருபது குழந்தைகளைத் திணித்துக்கொண்டு செல்லும் ஆட்டோக்களையும் பார்க்கும்போது மனம் பதறாமலில்லை. நாளை என் குழந்தைக்கும் கல்வி கல்லில் நார் உரிக்கும் கடினமானதாகத்தான் இருக்குமா?

சோமனூரில் ஒரு தொழில் வாய்ப்பு..!

கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள சோமனூர் பகுதியில் விகடன் குழும இதழ்களின் முகவராக பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வம் உடையவர்கள் தங்களைப் பற்றிய சிறு குறிப்புடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு 0422 -2230909 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். முகவரி: ஆனந்த விகடன், 76, அன்சாரி வீதி, ராம் நகர், கோயம்புத்தூர் - 641 009.

Sunday, July 15, 2007

ஞானகுருவும் கண்ணுக்குத் தெரியாத கண்களும்

ஜீனியர் விகடன் நடப்பு இதழிலிருந்து இரண்டு அசத்தலான தொடர்கள் ஆரம்பமாகியுள்ளது. ஒன்று எஸ்.கே. முருகனின் 'ஞானகுரு' மற்றொன்று பாரதிதமிழனின் 'கண்ணுக்குத் தெரியாத கண்கள்'. எஸ்.கே.முருகன் பல ஆண்டுகளாக தினகரன், வசந்தம், விகடன் போன்ற ஊடகங்களில் பணியாற்றி வரும் மூத்த பத்திரிக்கையாளர். இவர் வாராவாரம் விகடனில் எழுதி வந்த 'மந்திரச்சொல்' தொடருக்கு வாசகர் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. பின்னாட்களில் மந்திரச்சொல் பிரசுர வெளியீடாகவும் வெளியாகி விற்பனை சாதனை படைத்து வருகிறது. "ஆத்மா, பரமாத்மா, பாவம், புண்ணியம், மறு ஜென்மம் போன்ற சித்தாந்தங்களைக் காட்டி பயமுறுத்தியே அப்பாவிகளைச் சுரண்டும் தப்பான மனிதர்களை தோலூரித்துக்காட்டுவதே தொடரின் நோக்கம்" என்ற முன்னுரையோடு அதிரடியாக ஆரம்பித்திருக்கிறார் எஸ்.கே.

பாரதிதமிழன் ஜூனியர்விகடன் உதவி ஆசிரியர்களுள் ஒருவர். "பெரிய இடத்துக் கள்ளக்காதலோ, பல கோடி ரூபாய் பிஸினஸ் துரோகங்களோ, நம்பிக்கைக்குரிய அதிகாரியே நடத்திவிடும் வங்கிக்கையாடலோ... பாதிக்கப்பட்டவர்கள் அந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட இக்கட்டான நிலைமைகளில் அவர்கள் நாடுவது தனியார் டிடெக்டிவ் ஏஜென்சிகளையே. டிடெக்டிவ் ஏஜென்சிகள் கண்ணுக்குத் தெரியாத கண்களாக இருந்து நமக்குத் தெரியாமலே நமக்கு மத்தியில் ஏகப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் வேலைகளை செய்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் சில முன்னனி ஏஜென்சிகள் ஜூவி வாசகர்களுக்காக தங்கள் அனுபவங்களை பேச வருகின்றன" என்ற முன்னுரையோடு ஆரம்பித்திருக்கும் இத்தொடரின் முதல் பாகமே பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கல்வியாளர் ஒருவர் பாதை மாறிய பயணத்தோடு ஆரம்பித்திருக்கிறது. இரு தொடர்களுமே சலிக்காத நடையில் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

Friday, July 13, 2007

ப்ளீஸ் மார்க் போடுங்களேன்...!

நட்சத்திர பதிவராக தேர்வான போதே, ஒரு நாளைக்கு ஒரு பதிவு மட்டுமே எழுதுவது, அலுவலக நேரத்தை வீணடிக்காமல் பதிவிடுவது, அலுவலக கணிணியை இதற்காக உபயோகிக்காமல் இருப்பது, அனைத்து பின்னூட்டங்களுக்கும் பதிலூட்டம் (எனது புதிய கண்டுபிடிப்பு!) போடுவது என சில சங்கல்பங்கள் எடுத்திருந்தேன். முதல் மூன்றையும் கடைசிவரை கடைபிடித்த என்னால் பதிலூட்டமிடுவது மட்டும் இயலாமல் போய்விட்டது. காரணம் கிருமிகள் அல்ல பணிச்சுமை.

என்னை நட்சத்திர பதிவராக தேர்வு செய்த தமிழ்மணத்திற்கும், என் பதிவுகளை அள்ளி அணைத்தவர்களுக்கும், கிள்ளிக்கொடுத்தவர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த பதிவு.

ஆசிப்மீரான், நாமக்கல் சிபி, பாஸ்டன் பாலா, வெங்கட்ராமன், சேதுக்கரசி, ஜெசிலா, வவ்வால், தென்றல், நிலவு நண்பன், இளவஞ்சி, சீமாச்சு, முகவை மைந்தன், தெக்கிகாட்டான், வதிலைமுரளி, நந்தா, வல்லிசிம்ஹன், சதங்கா, வாய்ஸ் ஆன் விங்க்ஸ், எல்.எல்.தாஸீ, இளா, விக்னேஷ், சந்திரவதனா, சுதர்ஸன் கோபால், பிரேம் குமார், காட்டாறு, பெருசு, வெயிலான், லொடுக்கு, முத்துகுமரன், ஜீவி, பாட்டையன், தங்ஸ், துளசி கோபால், சத்யராஜ்குமார், வடூவூர்குமார், வெட்டிப்பயல், சர்வேசன், பிரேம்குமார், தூயா, ராதாராகவன், அனுப்சுந்தரம், எல். கஸ்தூரி, தேவ், டெல்ஃபின், கோபிநாத், அய்யனார், குசும்பன், முத்துலெட்சுமி, சத்தியா, ச. திருமலை, திருச்சி விஜய், பாஸ்கர், வெற்றி, ஃப்ரெண்ட்லி ஃபையர், செல்வநாயகி, சிநேகிதன், முத்துக்குமரன், மோகன் தாஸ், ஸ்ரீதர் வெங்கட், அப்பாவி இந்தியன், தருமி, கோவி.கண்ணன், மங்கை, உலகம் சுற்றும் வாலிபி, பாரி அரசு, அறிவியல் பார்வை, பீ-மார்கன், ரஜினி வெறியன், முகு, வெயிலான் ஆகிய பதிவர்களுக்கும்...

தனிமடலில் வந்த பொன்ஸ் பூர்ணா, ஆர். செல்வேந்திரன், காசி, கோவை செந்தில்குமார், வடக்குவாசல் பெண்ணேஸ்வரன், குடியாத்தம் ராஜா, கந்தசாமி நாகராஜன் ஆகியவர்களுக்கும்...

உற்சாகமூட்டிய அலுவலக சுப்பீரியர்கள் வெங்கட் சார், முருகேஷ் பாபு சார், சரண், தென்பாண்டியன், அவர்களுக்கும்...

பெயர் வெளியிட இயலாத அருமை தோழியர்களுக்கும் (சத்தியமா தோழிகள்தாங்க...!)

அந்தோணி சாமி, அலெக்ஸ், விசாலாட்சி இன்னும் பல பெயர்களில் வந்து பதிவிட இயலாத பல பின்னுட்டங்களையிட்ட அணானி அன்பர்களுக்கும் எனது நன்றியை சொல்லிக்கொள்ளாவிட்டால், உய்வில்லை.

மற்றபடி இந்த நட்சத்திர வாரத்தை எந்த அளவுக்கு நான் பயன்படுத்திக்கொண்டேன், எனது எழுத்துகளுக்கு பதிவுத்தகுதி இருக்கிறதா என்பதை அவரவர் பாணியில் மதிப்பெண் போடுங்களேன்... ப்ளீஸ்...!

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்.

பகிர்ந்து கொள்கிறேன்

நம்முடைய செயல்களே நம்மை “கார்னர்” செய்துவிடும் பொழுதுகளில் ஒளிந்து கொள்ள இடமின்றி, அடுத்து என்ன செய்வது? யார் நண்பர்? யார் பகைவர்? யாருக்கு எதுவரை தெரிந்திருக்கிறது? என்ற குழப்பங்கள் மேலிட நம் எல்லோருமே அலைந்து திரிந்திருப்போம். உலகமே சூன்யமாய் தோன்றும் அம்மாதிரிக்காலங்கள் எல்லார் வாழ்விலும் வந்திருக்கலாம். வராதவர்களுக்கு வந்தே தீரும். எனக்கு அம்மாதிரி சமயங்களில் நண்பனாய் இருந்து உதவியது புத்தகங்கள்தான். எழுத்தோ, பேச்சோ என்றைக்கும் படைப்பை முன் நிறுத்தாமல் படைப்பாளியின் பின்புலத்தை நோண்டும் செயல்களை நான் செய்ததே இல்லை. அவன் ஆதியில் அணிந்த பாதி கோவணத்தை தேடுவதற்கு பதில் என்னைதான் அதில் தேடிக்கொள்வேன். உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதும், பேசும் எவனும் எனக்கு மிகப் பிரியமானவர்களே. அப்படி எனக்கு ப்ரியமானவர்களில் சிலர் ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் பேசியதோ, எழுதியதோ எனக்கு உதவி இருக்கிறது. அதில் ஒரு சில...

“எவன் ஒருவன் தன் கடமைகளைச் சரிவர செய்கிறானோ, அவனது உரிமைகள் தானாகவே வந்தடையும்” - மகாத்மா காந்தி

“உண்மைக்கு எதிரி பொய்யல்ல, நன்மைக்கு எதிரி தீமையல்ல, முன்னேற்றத்துக்கு எதிரி பிற்போக்கல்ல... எல்லாவற்றுக்கும் ஒரு பொது எதிரி உண்டு. அலட்சிய போக்கு; அதுதான் நம் மிகப்பெரிய எதிரி” - புரொஃபசர் வீஸல்ஸ் (சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்)

“பலர் விழுவதும் சிலர் எழுவதும் ஓரே இடத்தில்தான். அது உழைப்பு. எச்சில் தட்டை கழுவியபோது காட்டிய ஒழுங்குதான் எடிட்டிங் டேபிளிலும் கை கொடுக்கிறது” - டைரக்டர் சேரன்.

“தயங்கித் தயங்கி நிற்பவனை வாழ்க்கை ஒருபோதும் திரும்பி பார்ப்பதில்லை. புறப்பட்டு போ... உனக்கு எல்லாம் புலப்படும்” - பரமஹம்ச நித்யானந்தர்

“காரைக்குடி மணிக்கு எதனால் பெயர் மிருதங்கத்தால் பெயர். மிருதங்கத்து காரைக்குடி மணி ஏதாவது செய்தாக வேண்டும். எனவே மிருதங்கத்தோடு பழக வேண்டும். சிலருக்கு 2 மணி நேரம், சிலருக்கு 12 மணி நேரம். ஆனால் பழகியே ஆக வேண்டும்” - காரைக்குடி மணி

“உழைச்சுகிட்டே இருப்போம். என்னிக்கு கூலி கிடைக்கும்னு தெரியாது. ஆனா கிடைக்கும். பரவை முனியம்மாவுக்கு 60 வயசுலதான் கிடைச்சுது. தன்னை நம்பினவன் ஜெயிப்பான்” - டைரக்டர் தரணி.

“அட்டகாசமான சிரிப்பு ஞானசூன்யத்தின் வெளிப்பாடு” - கோல்ட்ஸ்மித்

“தெரிந்த தொழிலை வைத்து ஓரளவு பிழைக்கலாம். ஆனால் தெரியாத தொழிலை வைத்து பிழைக்கவே முடியாது” - புதுமைப் பித்தன்.

“பிரச்சனைகளுக்கு அரசு ஒரு தீர்வல்ல. அரசே ஒரு பிரச்சனைதான்” - ரொனால்டு ரீகன்

“மெளனம் மூலம்தான் அதிகம் சொல்ல முடிகிறது. மிக மெதுவாகப் பேசிய காந்தியின் குரலே அதிகம் பேருக்கு கேட்டது” - ரவீந்தரநாத் தாகூர்

“சகோதர ஒற்றுமையே சாதனைகளின் முதல்படி” வி.ஜி.பி

“யாருக்காகவும் எதற்காகவும் உன் கனவுகளை விட்டுக் கொடுக்காதே” – நடிகர் பிரகாஷ்ராஜ்

“சினிமாவில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம். அதற்கு நானே நல்ல உதாரணம். ஆனால், நிஜ வாழ்வில் ஹீரோ ஆவது கடினம், மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்கள் எடுப்பதோ, ஆபத்திலிருக்கும் உயிரைக் காப்பாற்றுவதோ கடினமான காரியம். அதைச் செய்பவன் தான் ஹீரோ. நிஜ வாழ்வில் ஹீரோ ஆக முயற்சி செய்யுங்கள்” - நடிகர் தனுஷ் (சன் டி.விக்காக ஊர்வசி கண்ட நேர்காணல் ஒன்றில்)

“உங்களுக்கு பிடித்த வேலையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின் ஒரு நாள் கூட நீங்கள் வேலை செய்ய வேண்டி இருக்காது” - ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்

“வெட்கப்படுபவனுக்கு விருத்தி வராது” – அனந்த பத்மநாபச்சார்யார்

“ சொற்களுக்கு வாசனை இல்லாமல் இருக்கலாம். எடை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு கத்தியை விடவும் கூரான உடல் இருக்கிறது. அது அம்பைவிட ஆழமாகத் துளைக்க கூடியது. நாவினால் சுட்ட வடு இல்லாத மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?” - எஸ். ராமகிருஷ்ணன்.

இன்றைக்கு இவ்வளவுதான்.....

Thursday, July 12, 2007

பக்கத்து இலைக்கு பாயாசம்

மாவட்ட நூலகரை, சந்தித்து ஒரு ஆர்டர் வாங்க வேண்டிய வேலை. தேவையான கோப்புகளை எடுத்துக்கொண்டு அவரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன். வெறிச்சோடி போயிருந்த அலுவலகம்தான் என்றாலும் அது அரசு அலுவலகம் ஆச்சே...! லேசில் சுவாமி தரிசனம் கிடைக்குமா என்ன?

ஹெட் கிளார்க் என்னும் துவாரபாலகரை கவனிக்காவிட்டால் சுவாமி தரிசனம் ஆகாது என்பது தெரிந்தும் ஒரு நப்பாசையில் எனது பிரஸ் அடையாள அட்டையை காண்பித்தேன். உலகத்திலேயே படு அலட்சியமான ஒரு பார்வை பார்த்துவிட்டு காத்திருக்க சொன்னார். அரசு அலுவலகங்களில் காலதாமதம் தவிர்க்க முடியாதது என்பதால் கையோடு கொண்டு போயிருந்த 'எட்டுத் திக்கும் மதயானை'யை படிக்க ஆரம்பித்தேன். மாவட்ட நூலகர் அவரது அறைக்குள்ளே தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது கண்ணாடி வழியே தெரிந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்தது அவரது தொலைபேசி உரையாடல். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய தலைவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறாரோ என்னவோ..?!

பொறுமை திவாலாகி பலமணி நேரம் கழித்தபின் உள்ளே வரச்சொன்னவர் எனது சுய அறிமுகம் குறித்த எந்த கவலையும் இல்லாமல் மேஜையில் இருந்த தமிழன் எக்ஸ்பிரஸை புரட்டிக்கொண்டிருந்தார். நான் பேசி முடித்ததும் இன்று முடிக்க வேண்டிய பணிகள் (?!) அதிகமாக இருப்பதால் நாளை வந்து பாருங்களேன் என்றார். 'மிக்க நன்றி' என அலுவலகம் கற்றுத் தந்த புன்னகையை உதிர்த்துவிட்டு நகர்ந்தேன். வெளியே ஒரு பெண் ஊழியர் ஹெட்கிளார்க்கிடம் கணபதி சில்க்ஸில் எடுத்த காட்டன் புடவையை காட்டி அபிப்ராயம் கேட்டுக்கொண்டிருந்தார். மற்றொரு மேஜையாளரிடம் ஒரு இன்ஸீரன்ஸ் ஏஜெண்ட் பாலிசிக்காக மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். இன்னொரு மேஜை செல்போனை நோண்டிக்கொண்டிருந்தது. கடைசி மேஜையோ "ஸ்டென்சில் இல்லைங்க... அதான் லேட்டுங்க..." என யாரிடமோ போனில் கதறிக்கொண்டிருந்தது. வாழ்க.... வளமுடன்..!

மறுநாள் காலை, கொஞ்சம் நன்றாக உடுத்திக்கொண்டு, கோப்புகளோடு ' ஊருக்கு நல்லது சொல்வேன்' எடுத்துக்கொண்டு கிளம்பினேன். தெருமுக்கில் இருக்கும் பாய் கடையில் மூன்று வெள்ளைக்கவர்கள் வாங்கினேன். "யாருக்கு ஓய் கல்யாணம்?" என்றார் பாய். "கல்யாணம் இல்லை பாய்... ஆனாலும் மொய் எழுத வேண்டி வரும்" என்றேன். அலுவலகத்தில் எனக்கு முன்பாகவே சிலர் காத்திருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்ததில் அவர்கள் நூலகர் புதிதாக கட்டி வரும் வீட்டில் கட்டிட, மர, மின்சார வேலைகளை காண்டிராக்ட் எடுத்தவர்கள், அது தொடர்பாக அவரை சந்திக்க வந்திருக்கின்றனர் என்பது தெரிந்தது. மரக்கதவு, ஜன்னல்கள் குறித்த விசாரணைகளில் படுதீவிரமாக இருந்தார் ஹெட்கிளார்க்.

முதல் ஆளாக உள்ளே வரச்சொன்னார்கள். வணக்கம் சொல்லி அமர்ந்தேன். பெயர், படிப்பு, சம்பளம், எந்த ஊர் என பரஸ்பரம் இருவருக்கும் பிரயோசனமில்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர் திடீரென குரலைத் தாழ்த்தி "தம்பி சிறு வயசு.. அதனால உங்களுக்குத் தெரியல... கவர்மெண்டு கிளார்க்னாலே நூறு, இருநூறு எதிர்பார்க்குறவய்ங்கப்பா... நீ ஹெட்ட கவனிச்சா உடனே நடக்கிற வேலைக்கி, ரெண்டு நாளா அலையிற... சரி நான் ஆர்டர் கொடுத்துடறேன் பாவம் அந்த ஹெட்ட கொஞ்சம் கவனிச்சுருப்பா..." என்றார். அடடே என்ன அற்புதமான மனிதர்..! தனக்கு எதுவும் கேட்டு டிமாண்ட் பண்ணாமல் அடுத்தவனுக்கு ஏதாவது கிடைக்கட்டும்னு நிணைக்கிறாரே பெருந்தன்மையான மனுஷன்னு ஆர்டரை வாங்கிட்டு வெளியே வந்தேன். துவாரபாலகரை (அதாங்க ஹெட் கிளார்க்) நெருங்கி விபரம் சொல்லி கவனித்தேன். என்னைக் கொஞ்சம் குனியச் சொன்ன ஹெட்கிளார்க் என் காதோரம் சொன்னார் "தம்பி டி.எல்.ஓவை தனியா, பெருசா கவனிச்சுடுங்க... அடுத்த வருஷமும் வரணும்ல..."

அடங்கொக்காமக்கா...! இதுக்கு எங்க ஊர்ல "பக்கத்து இலைக்கு பாயாசம்னு" பேருடான்னு... விதியை நொந்தபடி விஜிலென்சுக்கு போனை போட்டேன். ஏதோ நம்மால முடிஞ்ச கவனிப்பு...!

Wednesday, July 11, 2007

ரஜினியும் அப்பாவும்

“ரஜினி! - இந்தப் பெயர் எனக்கு அறிமுகமாகும்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனது தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு. வேல்சாமி நாயக்கர் அப்பாவின் பால்ய நண்பர். சாத்தூர்காரர். இருவருக்கும் அப்படியொரு நெருக்கம். எனது அப்பாவின் மிகக்குறுகலான நட்பு வட்டத்தின் அடுத்த மனிதர் வேல்சாமி நாயக்கர்தான். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொள்ளாமல் எந்த முக்கிய முடிவும் எடுத்ததே இல்லை. இத்தனைக்கும் அவரும் இவரும் நட்பு பாராட்ட பெரிதாக எவ்வித முகாந்திரமும் இல்லை. அவர் அப்பாவை விட ஐந்து வயது சிறியவர். வேறு ஊரைச் சேர்ந்தவர். தெலுங்கர். அவரும் இவரும் சிறிய வயதில் ஒரே தீப்பெட்டிக் கம்பெனியில் போர்மேன் வேலை செய்தவர்கள். பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே தொழில் தொடங்கி, அவர் பல கம்பெனிகள் வைத்து சாத்தூரின் மிகப்பெரிய தொழிலதிபரும் புரவலரும் ஆனார். என் அப்பா உள்ளூரிலே பிழைக்க வேண்டும் என்று கம்பெனி ஆரம்பித்து, காதல் திருமணம் செய்து ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். என்னதான் வேல்சாமி கோடீஸ்வரர் என்றாலும் நட்பில் ஒரு பிசிராந்தையார். எத்தனை பெரிய வேலை என்றாலும் அப்பாவிற்கோ எங்களுக்கோ ஒன்று என்றால் உடனே வந்து உதவும் கரம் அவருடையதாகத்தான் இருந்திருக்கிறது நேற்று வரை.

வேல்சாமியின் தொழில் வட்டாரத்தில் அவருக்கு நெருங்கிய சக தொழிலதிபர்கள் ரஜினிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே வேல்சாமியின் வெள்ளை உள்ளமும், வேடிக்கைப் பேச்சும் ரஜினியை அவர்பால் ஈர்த்திருக்கிறது. அடிக்கடி இருவரும் சந்தித்துப் பேசுகையில் வேல்சாமியின் வார்த்தைகளில் அடிக்கடி வந்து விழுந்திருக்கிறது அப்பாவின் பெயர். அவர் அப்பா குறித்து சொல்லும் வார்த்தைகளில் சுவாரஸ்யமான ரஜினி அப்பாவை சந்தித்தே ஆக வேண்டும் என ஒரு நாள் அடம்பிடித்திருக்கிறார்.

திட்டமிட்டபடி ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் ரஜினி ஒரு வெடி வியாபாரி போல மாறு வேடமிட்டு அவரது உதவியாளருடன் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். கதவை திறந்த எனது தந்தையிடம் “வேல்சாமி நாயக்கர் அனுப்பி வைத்தார். ஒரு திருவிழாவிற்கு வெடி செய்ய கொஞ்சம் வெடிபொருட்கள் வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் குழப்பமான எனது தந்தை "வேல்சாமி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. சட்டத்திற்கு புறம்பான எதையும் அவன் பேச மாட்டான். நானும் செய்வதில்லை. சரி.. வந்தது வந்து விட்டீர்கள். வேல்சாமியின் பேரைச் சொல்லியதற்காக இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு காலை முதல் பஸ்ஸில் உங்கள் ஊரைப் பார்த்து கிளம்புங்கள்" எனச் சொல்லி அவர்களுக்கு நள்ளிரவில் உணவு தயார் (உப்புமா) செய்து கொடுத்து, படுக்கை வசதியும் செய்து கொடுத்துள்ளார் எனது தந்தை. தம் வாழ்நாளில் 'மிஸ்ஸியம்மா' தவிர்த்து வேறு சினிமா பார்த்தறியாத அவருக்கு ரஜினியை எப்படி தெரியும்?

பொழுது விடியும்போது அவர்களைக் காபியோடு எழுப்பிய எனது தந்தை ஒரு சைக்கிள் ரிக்‌ஷா அமர்த்தி பேருந்து நிலையம் வரை கொண்டு வழி அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் வேல்சாமி நாயக்கரைச் சந்தித்த ரஜினி எனது தந்தையின் விருந்தோம்பல் பண்பையும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் சட்டத்தை மீறாத பண்பையும், எளிய வாழ்க்கை முறையையும் சிலாகித்திருக்கிறார். வந்திருந்தவர் யாரென்றே தெரியாதபோதும் உபசரித்ததை சிலாகித்த ரஜினி, அடுத்தமுறை ரஜினியாகவே போவது என முடிவு செய்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் தனது உதவியாளருடன் அம்பாஸடர் காரில் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவை திறந்த எனது தந்தையிடம் "நான் நடிகர் ரஜினிகாந்த். உங்கள் நண்பர் வேல்சாமி நாயக்கருக்கு வேண்டியவன். ஒரு ஷூட்டிங் வந்தோம். கார் ரிப்பேர் ஆகிவிட்டது. நான் வந்திருப்பது ரசிகர்களுக்குத் தெரிந்தால் கூட்டம் கூடி விடும். இன்றிரவு உங்கள் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார். மீண்டும் அதே உப்புமா... அதே காஃபி. அதே எளிய உபசாரங்கள். சாமான்யன், சூப்பர் ஸ்டார் யாராக இருந்தாலும் ஒன்றுதான். பெரியோரை வியத்தலும் இலமே.. சிறியோரை இகழ்தலும் இலமே என்ற எனது தந்தையின் குணம் அவரை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி விட்டது.

உண்மையில் என் தந்தை பணக்காரர்களிடம் பழகுவதை விரும்புபவர் இல்லை. ஒரே விதி விலக்கு வேல்சாமி நாயக்கர். ரஜினி விஷயத்தில் ரஜினிதான் என் தந்தையை வம்படியாக நண்பராக்கிக் கொண்டார். எத்தனையோ முறை தமது வீட்டிற்கு அழைத்தும் அவர் போனதில்லை. ஆனால் அவரே தொழில் நிமித்தமாக சென்னைக்குச் செல்ல நேர்ந்தால் லதா ரஜினிகாந்திற்கு அகர்பத்திகள், முதலூர் அல்வா, கருப்பட்டி, பனங்கற்கண்டு, குழந்தைகளுக்கு கோவில்பட்டி கடலைமிட்டாய், தடியங்காய் அல்வா (செளந்தர்யாவிற்கு ரொம்ப பிடிக்குமாம்) வாங்கிச் செல்ல தவறியதேயில்லை. அவர்கள் வீட்டில் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அவசர வேலை என்று நழுவி விடுவார். ஒரு முறை ரஜினி வீட்டிலிருந்து வெளியே வரும்போது எதிர்பட்ட பத்திரிக்கையாளர் ரஜினி என்ன சொன்னார் எனக்கேட்டபோது "உங்களையெல்லாம் தினமும் தினமணி படிக்கச் சொன்னார்" என வேடிக்கையாக பதில் சொல்லி விட்டு நகர்ந்தாராம். அவருக்கு தினமணி பேப்பர் என்றால் அவ்வளவு பிரியம். ஒரு முறை முள்ளும் மலருமில் ரஜினியின் நடிப்பு அபாரம் என்று தினமணி பாராட்டி எழுதியபோதுதான் ஒத்துக்கொண்டார் ரஜினி ஒரு நல்ல நடிகர் என்று.

ரஜினி எப்போதாவது எங்களிடம் பேசும்போது 'உங்களுக்கு கிடைச்ச மாதிரி அப்பா எனக்கு கிடைச்சிருந்தா. எவ்வளவு சந்தோஷமா இருக்கும்'. குழந்தை வளர்ப்பது எப்படின்னு உங்க அப்பா இந்த உலகத்திற்கே சொல்லி கொடுக்கலாம். அப்படி வளர்த்திருக்கிறார் உங்களை"ன்னு அடிக்கடி சொல்வார். எப்போதாவது சென்னையிலிருந்து வரும் லதா ரஜினிகாந்த நிறைய திண்பண்டங்களை வாங்கி வருவார்கள். எவ்வளவு வம்படியாக எங்களிடம் இனிப்பைத் தினித்து சாப்பிடச் சொன்னாலும் எங்கள் அப்பாவின் கண்ணசைவு சம்மதம் இல்லாமல் அதை நாங்கள் வாயில் வைத்ததாய் சரித்திரம் இல்லை. ஊர் திரும்பும்போது திருவிழா செலவுக்கு வச்சுக்கோங்க என எங்கள் பையில் பணத்தை திணிப்பார். அவர் ஊருக்கு கிளம்பும் வரை பொறுமையாக இருந்து கிளம்பும் சமயத்தில் 'அப்பா திட்டுவார். பணம் வேண்டாம்' என அவரது கையில் திணித்துவிட்டு ஓடி, ஓளிந்து கொள்வோம்.

பின்னாளில் நாங்கள் வளர்ந்து பெரியவர்களாகும் சமயத்தில் ரஜினி தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சர்ச்சைகள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. அவர் நின்றால், நடந்தால், தும்மினால் கவர் ஸ்டோரிகள் எழுதப்பட்டு வந்த காலம். தனது பிரைவசி, நிம்மதி இரண்டும் கெடுவதாக அவர் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருந்தினார். அவருக்கு ஆறுதலளிக்கும் கடிதம் ஒன்றை அப்பாவும், நாங்களுமாக பதினைந்து பக்கத்திற்கு எழுதி அனுப்பினோம். தினசரி வீட்டு பூஜையில், குடும்ப பிரார்த்தனைகளில், ஆலய வழிபாடுகளில் ரஜினிக்காக வேண்டிக்கொள்வதும், அர்ச்சனை செய்வதும் தொடர்ந்....... எழுதிக்கொண்டிருந்தவனின் பேப்பர் சரலென பிடுங்கப்பட்டது. “என்னடா மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சுட்டியா....?” ஆத்திரத்தில் கத்தினார் அப்பா. பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்தபடி இருந்தான் தினகரன். “டேய் ஒன்னு ஒழுங்கா படி அல்லது தொழில பாரு.... உன் வயசுல பத்து வீட்டுக்கு கட்டை சுமந்து குடும்பத்த காப்பாத்தினேண்டா... தறுதலைப் பயலே எப்ப பார்த்தாலும் பொஸ்தகம் படிக்கிறது, எதையாவது கிறுக்கிட்டு திரியறது.... மாசமானா பென்சன் வாங்குற கிழட்டு பயக கூட இலக்கியம், கிலக்கியம்னு பேசிகிட்டு திரியிறது... உருப்பட மாட்டேடா.... உருப்படவே மாட்ட” மூச்சிரைக்க பேசியவர் தினகரன் எழுதிக்கொண்டிருந்த கதையை சுக்கல் சுக்கலாக கிழித்து எரிந்தார். என்ன செய்து என்ன பயன்? இந்த உலகின் தலைசிறந்த எழுத்தாளனாகிய தினகரனின் ஆர்வத்தை இவரது ஆத்திரமா தடுத்துவிடும். ‘ரஜினி ராசியில்லை, நாளை கமல்ஹாசனை வைத்து முயற்சிக்கலாம்’ எனத் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.

வெளிச்ச நகரம்


பாதி வெந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கிய என்னை வரவேற்க தொண்டர்குழாம் மாலை, பொன்னாடைகளோடு காத்திருக்கவில்லை. ஒண்ணுக்கடிக்க கூட ஆட்டோக்காரர்கள் உதவியில்லாமல் ஒதுங்க முடியாதோ என நிணைக்குமளவிற்கு ரயில் நிலைய வாசலில் சுற்றி வளைத்த மாணிக்பாச்சாக்களை தாண்டி டவுண் பஸ்ஸில் ஏறினேன். 'ஒரு துரைப்பாண்டி கொடுங்க' என நான் கேட்டபோது மொத்த பேருந்தும் விலா நோக சிரித்தது. 'சாரிங்க... தொரபாடி கொடுங்க' என சீட்டு வாங்கி ஜன்னலோரம் அமர்ந்து காட்பாடியின் கனபரிமாணங்களைப் பார்த்தபடியே சென்றேன். தன் மேனியெங்கும் வெயிலை சேமிக்கும் வெளிச்ச நகரமாய் இருந்தது வேலுர். உதகை மக்கள் குளிரை எதிர்கொள்வதில் ஒரு மெல்லிய கர்வம் இருக்கும். ஆனால் வேலூரின் ஒவ்வொரு ஜிவராசிகளும் வெளிப்படுத்தும் "உஸ்ஸ்ஸ்ஸ்..." எனும் உஷ்ணப் பெருமூச்சில் வெயிலின் கோரம் வெளிப்படுகிறது.

தந்தை பெரியார் தொழில்நுட்ப கல்லூரியில் எம்.சி.எ. படிக்கும் நண்பனின் ரூமை அடைந்தபோது அவர்கள் சோமபானம் அருந்திக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் ஒரு குசும்பன் 'ஏசுவின் ரத்தம் ஜெயம்' எனக் கத்தினான். நான் கலவரமாவதைக் கண்ட மற்றொருவன் அவனை அதட்டினான். முங்க, முங்க குடித்துக்கொண்டிருக்கும் அவர்களோடு வேலுரைச் சுற்றிப்பார்க்க இயலாது எனத் தோன்றியது. விதியை நொந்து கொண்டு வரவழைக்கப்பட்ட குஸ்கா ('வேலூர் ஜெயில் சாப்பாடு இதை விட நன்றாக இருக்கும்' - குசும்பன்) வை விழுங்கிவிட்டு உறங்கிபோனேன்.
அந்திசாய ஆரம்பித்த வேளையில் நண்பனை உலுக்கி கோட்டைக்கு இழுத்துச் சென்றேன். கோட்டையின் நீள, அகலம் என்னை பிரமிக்க வைத்தது. பிரம்மாண்டமான கோவில்களை தரிசிக்கும்போது அதைக் கட்டியவனின் ஆன்மீக உணர்வு கோபுரத்தில் வழிவதாகத் தோன்றும். ஆடல் பெண்டிர் சிற்பங்களை பார்க்கும்போது சிற்பியின் கலை உணர்ச்சி மார்க்கச்சையோடு சேர்த்துக்கட்டப்பட்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் கோட்டையின் அகழியிலும், கொத்தளத்தில் இருந்த சிறு,சிறு கண்கானிப்பு கோபுரங்களிலும் அதைக் கட்டிய மன்னனின் கண்களில் இருந்த ப்யம் இன்னும் தேங்கி நிற்பதாகத் தோன்றியது எனக்கு. செருப்புக்கால்களோடு கோட்டையின் மேற்சுவரில் ஏறித் தாவி, தாவி நடக்க ஆரம்பித்தோம். கோட்டையின் உயர்ந்த மதில் சுவரில் இருந்து பார்க்கையில் மாலை நேர வேலூர் 'காலை வெயிலுக்கு நான் காரணமில்லை' என எங்கள் காலடியில் விழுந்துகிடப்பது போல இருந்தது. கோட்டையின் மேல் தளத்தின் ஒவ்வொரு பத்து தப்படிக்கும் ஒரு ஜோடி எசகுபிசகான மோனத்திலிருந்தனர். மெரீனாவின் படகு மறைவுகளைவிட பல மடங்கு 'படம் பார்க்கலாம்' என்றான் நண்பன். உடலும் உள்ளமும் உஷ்ணமாகி கிடந்த அவர்களுக்கு கடந்துபோகும் எவரைப்பற்றியும் கவலை இல்லை. அவர்களது சில்மிஷங்களைப் பதுங்கி, பதுங்கி ரசிக்க குஞ்சு, குருணைகள் வேறு. ரத்தம் ஓரே நிறம் படித்து முடித்த ஒரு பின்னிரவில் வேலூர் கோட்டையினைப் பார்த்தே ஆக வேண்டும் என சங்கல்பம் எடுத்ததும், மறுநாள் நூலகத்தில் சிப்பாய் கலகம் குறித்த நூல்களை படித்ததும் நிணைவுக்கு வந்தது. 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசை சேர்ந்த சின்னபொம்மி நாயக்கரால் கட்டப்பட்ட இந்த கோட்டை, சுல்தான்கள், மராட்டிய மன்னர்கள், நவாபுகள், கிழக்கிந்தியக் கம்பெனி என பல கைமாறி இன்று இந்த காதலர்கள் வசம் இருக்கிறது.
கோட்டையின் நடுவே அழகிய ஜலமேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. துவாரபாலகர்கள்கூட கழுத்து நிறைய நகைகளுடன் அருள்பாலிக்கிறார்கள். சுமார் 400 ஆண்டுகளாக பூஜை, புணஸ்காரங்கள் இல்லையாம். அதை நிவர்த்திக்க கோடி தீபம் ஏற்ற சொன்னார்கள். ஏற்றினேன். அந்த இரவில் மின்னொளியில் கோபுரம் ஜொலிக்க, பின்னனியில் தேவாரம் ஒலிக்க. குறுக்கும் நெடுக்குமாய் கடந்து சென்ற சேட்டுப்பெண்களையும் ரசித்துக்கொண்டே கிளம்ப மனமில்லாமல் கிளம்பினேன்.

மறுநாள், திருவண்ணாமலை செல்லும் பஸ் சில விஸ்வரூப ஆஞ்சனேயர்கள் அருள்பாலிக்கும் ஊர்களைக் கடந்து திருவண்ணாமலையை அடைந்தது. ஒன்பது கோபுரங்களும் வாடா ஒரு கை பார்க்கலாம் என்பது போல நெஞ்சு நிமிர்த்தி நின்றுகொண்டிருந்தது. கோவிலின் நுழைவாயிலின் வலது பக்கத்தில் ஒரு மோகினி சிலை இருக்கிறது. தரிசனம் முடிந்து வெளிவரும்போது சிலையை பார்த்தால் ஆலய தரிசனத்தால் ஏற்பட்ட புண்ணியத்தை உறிஞ்சிக்கொள்வாளாம் மோகினி. 'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா?' கூட்டி வந்த உள்ளூர் நண்பரிடம் கேட்க நிணைத்தேன். கேட்கவில்லை. ஆஜானுபாகுவான துவாரபாலகர்கள் சிலையின் கால், கை விரல் நகங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களில் ரசனையே இல்லாமல் கலர் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். இதுமாதிரி முட்டாள்தனங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

எனக்காகத்தான் காத்திருந்தாரோ அண்ணாமலையார் என நிணைக்குமளவிற்கு அபிஷேகத்துடன் அற்புத தரிசனம். எதையும் வேண்டவோ, பிரார்த்திக்கவோ தோன்றவில்லை... காரணங்களேதும் இன்றி நெஞ்சு முட்டி... கண்ணீர் மட்டுமே சுரந்தது. சிறுவயதிலே திருவிழா சொற்பொழிவுகளில் கேட்டறிந்த திருவண்ணாமலை. அங்குபோக வேண்டும் என்ற ஆசை எப்போதும் ஊறிக்கிடந்த என்னை கிறிஸ்தவ, குடிகார நண்பன் அழைத்துவந்து காண்பிக்கிறான். அண்ணாமலையாருக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது போலும். என்னுடன் வந்த உள்ளூர் நண்பருக்கு வரிசையில் நிற்க பொறுமை இல்லாததால், உடனுறை அம்மனை தரிசக்க முடியவில்லை. பண்டாரங்களுக்கு பயந்து ஆயிரங்கால் மண்டபம், தெப்பகுளம் ஆகியவற்றை பூட்டி வைத்திருக்கிறார்கள். ரமணாஸ்ரமம் புணரமைத்த பாதாள லிங்கத்தை தரிசித்துவிட்டு, பெரிய கோபுரத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும் சிற்பத்தைக் காட்டி நண்பனுக்கு கதை சொல்ல முயன்றேன். அவன் ஜடைகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்ததால் பாதிக்கதையோடு கதாகாலட்சேபத்தை முடித்துக்கொண்டேன்.

திருவண்ணாமலை ஆண்டிப்பண்டாரங்களின் மெக்காவாம். மூன்று வேளைச்சோறு கேரண்டி என்பதால் எவரிடமும் பண்டாரங்கள் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதில்லை. ரமணாஸ்ரமத்தில் தியானம் என்ற பேரில் பாதிப்பேர் தூங்கிகொண்டிருந்தார்கள். உலகம் போற்றும் அந்த மகானைப் பற்றித் தெரிந்து கொள்ள சில புத்தகங்கள் வாங்கிகொண்டேன். யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் தொன்னையில் சரிபாதி அன்பு கலந்து சாதம் தந்தார்கள். உலகெங்கும் சீடர்களைக் கொண்டிருந்த இவர் தன்னை ஒரு பிச்சைக்காரன் எனக் குறிப்பிட்டுச் சொன்ன அருளுரைகள் என்னைக் கரைத்தது. கண்ணாடிப்பெட்டிக்குள் அவரது ஒலைக் காற்றாடியையும், சிரட்டையையும் பார்க்கும்போது, கல்யாண மண்டப சாமியார்கள், கூட்டணிக்கு பாடுபடும் ஆதினங்கள், வாரிசு பீடங்கள் அனைவரையும் ஒரு நடை அழைத்து வந்து காட்டலாம் எனத் தோன்றியது. கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது வருகையால் நிகழாது எனத் தோன்றியது.

திருவண்ணாமலை மக்கள் கோவிலைச் சார்ந்து பிழைக்கிறார்கள். ஆனால், எவரும் ஏமாற்றுவதில்லை. அர்ச்சகர்கள் பயமுறுத்தவில்லை. பிச்சைக்காரர்கள் துரத்த வில்லை. செருப்பு கழற்றிபோட்ட இடத்தில் கிடக்கிறது. வழி கேட்டால் சொல்கிறார்கள். வெயிலின் கடுமை முகத்தில் இருந்தாலும் வார்த்தைகளில் இல்லை. கடைக்காரர்கள் கை பிடித்து இழுப்பதில்லை. ஆஸ்ரமங்கள் நன்கொடை நோட்டை நீட்டவில்லை. மக்களுக்கு தாம் வாழும் இடத்தின் மகத்துவம் தெரிந்திருக்கிறதோ.... பழனியை நிணைத்து பாருங்கள். உங்கள் பாக்கெட்டில் பத்து ரூபாய் குறையும்..!
வேலுரை விட்டு கிளம்பும்போது நண்பன் சொன்னான் ' மன்னன் இல்லா கோட்டை, அழகில்லா பெண்கள், நீரில்லா நதியைக் கொண்டது வேலூர்' என்பது உள்ளூர் சொலவடையாம். அத்தோடு இரக்கம் இல்லா கண்டக்டர்கள் என்பதையும் சேர்க்க சொல்லி உள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டால் பரவாயில்லை. அத்தனை கடுமையாக கத்துகிறார்கள். காரணம் வெயிலாகத்தான் இருக்குமோ..?!


நண்பர்களே நான் எழுதிய மெலட்டூர் மேஜிக்கை மீண்டும் ஒரு மீள்பதிவு செய்தால், நட்சத்திர வாரத்தில் பல பேர் படித்து தெரிந்துகொள்வார்களே என நண்பர் மடல் எழுதியிருந்தார். மறுபதிவு செய்வதற்கு பதிலாக அதன் இணைப்பை கொடுத்துள்ளேன். சமயம் கிடைத்தால் வாசித்து பாருங்களேன்.Tuesday, July 10, 2007

காட்டின் ஒரு துண்டு!


பத்திரிகையோடு தொடர்பில் இருக்கும் எவருக்கும் பயணங்கள் அடிக்கடி பரிசாக கிடைக்கும். அப்படித்தான் திடீரென்று அமைந்தது அந்த பயணம். ஆஜானுபாகுவாய் வான்நோக்கி படுத்த நிலையில் அருள்பாலித்துக்கொண்டிருந்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலைச் சென்றடைந்தது கார். 'ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம் தம்பி' என டிரைவர் அறிவுரைக்க கை கூப்பினேன். நம்மூர் கோவில்களில் தரிசனம் முடிந்த பின்னரே பிரகாரம் சுற்றுவது வழக்கம். இங்கு பிரகாரத்தை மூன்று முறை சுற்றிய பின் தரிசனம் செய்வதே வழக்கமாக உள்ளது. பக்தர்கள் தங்கள் பிரச்சனைகளை லெட்டர் பேடில் (டூ: மாசாணியம்மன், ஆனைமலை) எழுதி உண்டியலில் போடும் வேண்டுதல் ஆச்சர்யமூட்டியது.
தரிசனத்தை முடித்துவிட்டு பரம்பிகுளம் செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆதிவாசிகளின் வீட்டுக்கதவுகளில் மம்மூட்டி சிரிக்கும் கேரள எல்லையில் தலைக்கு, வண்டிக்கு, கேமராவுக்கு, செலவுக்கு எனத் தனித்தனியே பணம் வாங்கி கொண்டு தமிழ் தெரிந்த கைடு ஒருவரை உடன் அனுப்பினார்கள்.

காமராஜர் என்ற கர்மவீரனின் கம்பீரமாய் எங்கள் முன்னே நின்று கொண்டிருந்தது பரம்பிகுளம் டேம். தமிழக நீர் ஆதாரங்களுக்கு ஆதாரம் காமராஜர்தான். கக்கன் என்றொரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாய் ஒரு கல்வெட்டு (மினிஸ்டர் - டிபார்ட்மெண்ட் ஃபார் ஓர்க்ஸ்) இருந்தது. அணைக்கட்டுகளைக் கட்டிய தலைவன் அரசு மருத்துவமனையில் அநாதையாய் செத்துப் போனதை நினைக்கும்போது, மச்சான்களுக்கு காண்ட்ராக்ட் விடும் மாண்புமிகுக்களின் முகங்கள் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த பரம்பிகுளம் டேமை வளைத்து போட கேரள அரசு பிரம்ம பிரயத்தனம் எடுத்து வருகிறது. "ஒரு கறிவேப்பிலைகூட சுயமாய் உற்பத்தி பண்ண துப்பு இல்லாதவர்கள் மலையாளிகள்" என்பார் எழுத்தாளர் சக்காரியா. ஆனால், மலையாளிகளுக்குத் தண்ணீர் மீதான காதல் தீர்வதேயில்லை.
பரம்பிகுளத்தில் எப்போதோ ஸ்தூபி ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்ற நேரு வந்தபோது போட்ட மேடை ஒன்று அப்படியே இருக்கிறது. நேருவை நேரில் பார்த்ததை பெருமைவழியச் சொன்னாள் ஒரு டீக்கடை மூதாட்டி. அவளது வாழ்நாள் சாதனைகளில் அதுவும் ஒன்று என அவள் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறாள் போலும். வழியெங்கும், மர அணில்கள், கருங்குரங்குகள், மலபார் பாரகீட்கள் என ஒவ்வொன்றாக அடையாளம் காட்டியபடி வந்தார் கைடு. உலகிலேயே அழகான பறவை கிங்ஃபிஷராகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட ஒரு வளர்ச்சியுற்ற எரும்பு திண்ணி சைசுக்கு, அழகிய வாலும், வெல்வெட் தோலும் கொண்ட ஒரு மர அணில் ஒன்று கண்ணில் சிக்கியது. நீலகிரி ரங்கூன் என அழைக்கப்படும் கருங்குரங்கின் ரத்தம் குடித்தால் ஏதேதோ நோய்கள் தீரும் என்ற மூடநம்பிக்கைதான் குரங்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்ததாம்.பச்சை நிறத்தை முதுகில் கொண்ட 'எமரால்ட் டவ்வை' அடையாளம் காட்டிய கைடிடம் இந்த பெயர்களையெல்லாம் வைத்தது யார் என்று கேட்டேன். 'சலீம் அலி' என்று பதில் வந்தது. வேட்டைக்காரனாய் இருந்த சலீல் அலியின் கையில் இறந்த பறவையில் உடல் ஒன்று கிடைக்க, அதன் நதிமூலம் ஆச்சரியமூட்ட பறவை ஆராய்ச்சியாளானாய் மாறினார் சலீம். 'டாப் ஸ்லிப்பின் ரகசியங்களை உலகறியச் செய்த சலீம், இந்த வனத்தின் காவலர். இந்தக் காட்டின் ஒவ்வொரு இலையிலும் சலீமின் பெயர் எழுதப்பட்டுள்ளது' என உணர்ச்சி வசப்பட்டார் கைடு. இன்று வெளிநாட்டு ஆய்வாளர்கள் சலீம் வைத்த பறவைகளின் பெயர்களைக் கேட்டால் சிரிக்கிறார்களாம்.
'ராக்கெட்டோ டொராங்கோ' என்ற பறவைக்கு ' மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆஃப் தி பாரஸ்ட்' என்று பெயராம். எதையும் நான்கு முறை கேட்டால் அப்படியே சொல்லுமாம். 'இந்த வழியில் தினமும் நான்கு முறை டிரக் போகிறதே... டிரக் மாதிரி கத்துமா?' என நான் அப்பாவியாக கேட்க, கைடு முறைத்தார். நம்மூர் ரெட்டைவால் குருவியும், காக்காவும் கலந்து கட்டின கசமூசா தோற்றமுள்ள பறவை அது.
திடீரென பைசன், பைசன் எனக் குரல் எழுப்பினார் என்னோடு வந்திருந்தவர்களில் ஒருவர். திரும்பிய நான் அதிர்ச்சியில் உறைந்தேன். வெள்ளைக் காலுறை அணிந்தது போன்ற கால்களும், மிரட்டும் கொம்புகளும், ஆண் பைசன்களின் திமில்களும் அச்சமூட்டுவதாக இருந்தது. எவரும் பயப்படும் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டிருந்தது. காட்டு ராஜா சிங்கம் என்றால், காட்டு இளவரசன் பட்டமாவது இவற்றிற்கு கொடுக்க வேண்டும். 'உண்மையில் இந்தியாவில் பைசன்களே இல்லை. இவற்றை காட்டுபோது (இந்தியன் கோர்) என்றுதான் அழைக்க வேண்டும்' என்றார் கைடு. ஒரு தஞ்சாவூர்காரர் காட்டு எருது தம்பதிகளை பிடித்து ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் பெல்டுகளை மாட்டி ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறார். அதன் முடிவுகள் சுவாரஸ்யமானவையாம். சாம்பார் (?!) டியர் என்றழைக்கப்படும் கலைமான்கள் தேமே என காடுமுழுவதும் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

450 ஆண்டுகள் பழமையான கன்னிமாரா தேக்கு மரத்தை சென்றடைந்தோம். பழமை என்றாலே கன்னிமாரா எனப் பெயர் வைத்துவிடுவார்களா என்ன?
6.57 மீட்டர் அகலமும், 48.50 மீட்டர் உயரமும் கொண்ட அந்தமரம் இந்திய அரசாங்கத்தின் 'மஹாவிருக்ஷா புரக்சார்' விருதைப் பெற்றிருக்கிறது. இந்த பழுதடைந்த பூமியின் அகலமான மரங்களுள் ஒன்றான அதன் அகலத்தில் சந்தேகம் கொண்டு இரு கரங்களையும் நீட்டி மரத்தை அளக்க ஆரம்பித்தார் என்னோடு வந்தவர். இதை வெட்டினால் அதைக்கொண்டு வெள்ளை மாளிகைக்கே கதவு செய்யலாம் என்ற ரேஞ்சுக்கு அவர் பேச ஆரம்பித்தார். ஒன்றும் செய்ய இயலாது. 65 வயது கடந்த எந்த தேக்கும் உபயோக படாது. வெட்டினால் பொடி, பொடியாக உதிருமாம். 400 ஆண்டுகளாகப் பார்வையாளர்கள் அதன் அகலத்தில் சந்தேகப்படுவதும், வெட்ட எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுவதையும் மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறது கன்னிமாரா.
இந்த வனத்தின் ஆமைகள் சாதாரணமாக 100 ஆண்டுகள்வரை உயிர் வாழுமாம். வனத்தில் ஆமைகள் வாழ்வதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காட்டுப்பன்றிகள் ஒரு பக்கம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. காட்டின் துப்புரவுப் பணியாளன் என காட்டுப்பன்றிகளைச் சொல்கிறார்கள். காட்டில் கூட பன்றிகளுக்கு இதுதான் நிலை. பரம்பிக்குளம் வைல்ட் லைப் சாங்சுவரியில் ஒரு ஏரிக்கைரையோரம் அழகிய இரண்டு மர வீடுகள் இருக்கிறது. நாளொன்றுக்கு வாடகையாக ரூ.500/- வசூலிக்கிறார்கள். சாப்பாடு கொண்டுவர, பாதுகாப்பு, போன்ற தேவைகளுக்கு பக்கத்திலேயே ஆட்கள் இருக்கிறார்கள். அந்தி சாயும் வேளையில் யூரோப்பிய ஓவியம் போலிருக்கிறது அந்த ஏரிக்கரையும் மரவீடும்.தனக்கான இடம் வந்ததும் இறங்கி கொண்டார் அந்த கைடு. காடு, பறவைகள், தாவங்கள், விலங்குகள் குறித்த அவரது அறிவும் அவதானிப்பும் ஆச்சர்யமூட்டியது. தினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம் அவரது முகத்தில் இருந்தது. மூங்கில் ஒரு வித்திலை தாவரம் என அறிவியல் வகுப்பில் மதிப்பெண்களுக்காகப் படித்திருக்கிறோம். ' என்ன பெருசுன்னாலும் மூங்கில் ஒரு புல்தானே' என்ற கவித்துவ விளக்கமும், காட்டில் தீ முண்டால் எதிர்புறமாக தீ மூட்டி, தீ கொண்டு தீயை அணைப்பது, கங்காணிகளுக்கும் ரேஞ்சர்களுக்கும் உள்ள உறவு, இரு மாநில எல்லையில் வாழ்வதால் ஏற்படும் அசெளகர்யங்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சவாலாக இருக்கும் கல்வி, தொடர்கதையாகும் மரத்திருட்டுகள், என அத்தனை விவகாரங்களிலும் அவர் கொண்டிருந்த அறிவு நிச்சயம் அவரது வருமானத்தைக் காட்டிலும் பலமடங்கு மேலானது.
டாப்ஸ்லிப்பில் ஜீப் ரைடு தொடங்கியிருக்க யானைகளைக் காணும் ஆவலில் கொட்டும் மழையில் வண்டி ஏறினோம். மழை காட்டை கழுவி வைத்திருந்தது. மழையினால் எந்த மிருகத்தையும் காண இயலவில்லை. கும்கீ யானைகளைப் பயிற்றுவிக்கும் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அளவு சாப்பாட்டிற்கு க்யூவில் நிற்கும் யானைகளைப் பார்க்கும்போது மனசு வலிக்கிறது. யானைகளல்ல அவை பசுக்கள்!


காலையும் மாலையும் காட்டில் நடைபயிலும் ஒரு மனிதன் தனது கோட் பாக்கெட் நிறைய தேக்கு விதைகளும், கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்குடனும் தினமும் காட்டுக்குள் செல்வாராம். வழி நெடுக ஈர நிலத்தை வாக்கிங் ஸ்டிக்கால் கீறி ஒரு தேக்கு விதையை வரிசையாக விதைத்துக்கொண்டே செல்வது அவரது வழக்கம். இன்று டாப்ஸ்லிப்பில் இவ்வளவு தேக்கு மரங்கள் இருக்க அவரே காரணம். வூட் எனும் அந்த ஆங்கிலேயே வன அதிகாரிதான் டாப்ஸ்லிப்பை இங்கிலாந்து மரங்களுக்காகச் சூறையாடுவதிலிருந்து தடுத்தவர். மரங்களை வேரோடு வெட்டுவதைத் தவிர்த்து மீண்டும் வளரும்படி வெட்டுவது, ஒரு மரத்தை வெட்டினால் பதிலுக்குப் பல மரங்களை நடுவது, மரங்களுக்குப் பதிலாக மாற்று உபாயங்களைத் தேடுவது என இந்தக் காட்டைக் காப்பாற்ற அவர் ஆற்றிய அரும்பணிகளின் நினைவாக டாப்ஸ்லிப் வன அலுவலகத்திற்கு 'வூட் ஹவுஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் வூட் ஹவூஸ் என்றால் மரவீடு என்றே அனைவராலும் தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.
கேரம்போர்டு ஸ்டிரைக்கர் அகலத்தில் ஒரு மரத்துண்டை காட்டில் கண்டெடுத்தேன். அதுதான் உலகிலேயே பெரிய விதைகளைக் கொண்ட ஒரு காட்டுச் செடியின் விதையாம். பாறை போன்ற உறுதியுடன் இருந்த அந்த விதை, காட்டின் ஒரு துண்டை நான் கையோடு எடுத்து வந்த உணர்வை இன்றும் கொடுக்கிறது.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Monday, July 9, 2007

வக்கீல்கள் ஜாக்கிரதை...!

நட்சத்திர பதிவராகத் தங்களைத் தேர்வு செய்துள்ளோம். சிறிய அறிமுகத்துடன் புகைப்படம் ஒன்றினை அனுப்பிவையுங்கள் என்று தமிழ்மணத்திடம் இருந்து மெயில் வந்திருந்தது. அதனை எளிதாக அனுப்பி வைப்பதற்கான தொழில்நுட்ப குறிப்புகளும் இருந்தது. ஆனால் வழக்கம்போல நான் ஏதோ சொதப்பி புகைப்படமும், அறிமுகமும் தமிழ்மணத்தில் மிஸ்ஸிங். பர்ர்ர்ருவாயில்லை.

கடந்த வருடம் ஒரு சாலை விபத்தில் என்னுடைய சகோதரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகவும் பலவீனமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை சந்தித்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்து இன்ஸீரன்ஸ் பெற தாம்தான் இந்த மருத்துவமனையின் ஆஸ்தான வழக்கறிஞர் என்ற அறிமுகத்தோடு சில,பல கையொப்பங்கள், ஆவணங்களை வாங்கி சென்றுவிட்டார்.

என்னுடைய சகோதரர், அவர் மீது மோதிய லாரியின் உரிமையாளர் இருவருமே தத்தம் வாகனங்களுக்கு உரிய இன்ஸீரன்ஸ், லைசென்ஸ் வைத்திருந்தனர். பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மருத்துவ செலவு சுமார் மூன்று லட்சம், பாதிப்பின் விளைவால் நடக்கும் திறனும் குறைந்து விட்டது. சில வேலைகளை பிறரது உதவி இல்லாமல் செய்ய முடியாது என்கின்ற நிலை. அதனால், ஏற்கனவே செய்து கொண்டிருந்த பணியையும் அவரால் செய்ய இயலாது. அனைத்து பேப்பர்களும் சரியாக இருந்தும், பாதிப்பின் தீவிரம் கடுமையாக இருந்தும் அவருக்கு கிடைத்த தொகை ரூபாய் ஒன்றரை லட்சம்தான்.

காரணம் நம்ம வக்கீல் ஐயாதான். முதலில் படுத்த படுக்கையாக இருந்தவரிடம் தாறுமாறான தகவல்களை வழங்கி, வழக்கு நடத்தினால் நீண்டகாலம் ஆகிவிடும். எனவே இன்ஸீரன்ஸ் நிறுவனத்திடம் சமரசமாக பேசி அவர்கள் வழங்க ஓத்துக்கொண்ட தொகையினை பெற்றுக்கொள்வதே சிறந்தது என பயமுறுத்தி சம்மதிக்க வைத்தது. ஏற்கனவே பணச்சிரமத்தில் உள்ள அவரும் அதற்கு ஓத்துக்கொள்ள சுமார் ஆறு லட்சம் வரை க்ளைம் செய்து கிடைத்திருக்க வேண்டிய தொகை வக்கீலுக்கும், வழக்கிற்கும் மட்டுமே சுமார் 30,000 செலவு செய்த பின் ஒன்றரை லட்சம் கிடைத்திருக்கிறது.

மேற்கண்ட விபத்தில் நான் பெற்ற பாடங்கள்:

1. விபத்து நடந்த உடன் அனுமதிக்கப்படும் மருத்துவமனையில்தான் முழுச்சிகிச்சையும் பெறவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அங்கு முதலூதவி எடுத்துக்கொண்டபின், வேறு எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிட்சை பெற்றுக்கொள்ளலாம். அதை இன்ஸீரன்ஸ் நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.
2. வழக்கறிஞர் உங்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருத்தல் நலம். அல்லது அவரைப் பற்றி தீர விசாரித்துவிட்டு வழக்கை ஓப்படைக்கவும்.
3. வழக்கறிஞர் உங்கள் ஊர்க்காரராக இருத்தல் வேண்டும். அல்லது வழக்கு நடைபெறும் கோர்ட் எந்த ஊரில் இருக்கிறதோ அந்த ஊரைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் வக்கீல் ஏங்கேயோ ஒரு இடத்தில் குடி இருந்தால் உங்கள் வழக்கின் டவுசர் கிழிந்து விடும்.
4. உங்களிடம் போதிய ஆதாரங்களும் வாய்ப்புகளும் இருக்கும்போது, சமரசத்திற்கு உட்படாதீர்கள்.
5. கிளர்க்குக்கு பணம் கொடுத்தேன், ஜட்ஜூக்கு கொடுத்தேன், பப்ளிக் ப்ராசிக்யூட்டருக்கு கொடுத்தேன் என வக்கீல்கள் சொல்லும் கதைகளை நம்பாதீர்கள். ஒரு வக்கீல் மேற்கண்டவர்களுக்கு பணம் கொடுத்துதான் ஒரு விபத்து வழக்கை முடிக்க வேண்டும் என்றால் அவன் ஒரு--------------
6. கூடியமட்டும் இன்ஸீரன்ஸ் நிறுவன அதிகாரிகளோடு தொடர்புகொண்டு நிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
7. வக்கீல் மிரட்டலுக்கு பயப்படாதீர்கள்.

Saturday, July 7, 2007

எழுத்தாளர் ஸ்டெல்லாபுரூஸுக்கு உதவ

எழுத்தாளர் ஸ்டெல்லாபுரூஸ் நோயுற்ற தம் மனைவியுடனும், தீராத வறுமையுடனும் போராடி வருகிறார் என்ற செய்தி விகடனில் வெளியாகி இருந்தது. அது குறித்து நான் எழுதியிருந்த பதிவை படித்து விட்ட சில வெளிநாடுவாழ் நண்பர்கள் அவருக்கு எப்படி உதவுவது என தனிமடலிலும், பின்னுட்டத்திலும் கேட்டிருந்தனர். இது தொடர்பாக மேற்படி கட்டுரையை எழுதிய திரு. தளவாய் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அவரது மனைவி ஹேமாவின் பெயரில் நிறைய செக்குகளும், வரைவோலைகளும் விகடன் அலுவலகத்திற்கு வந்த வண்ணம்தான் உள்ளது. உதவி செய்ய நிணைப்பவர்கள் ஆனந்த விகடன், ஆசிரியர் இலாகா, 34, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு அனுப்பலாம்" எனத் தெரிவித்தார். மேலதிக விபரங்களுக்காக ஸ்டெல்லாபுரூஸ் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்ணையும் இணைத்துள்ளேன். அவருக்கு உதவ நிணைப்பவர்கள் அந்த எண்ணிலும் அவரைத் தொடர்புகொள்ளுங்கள். தொ.பே. எண்கள்: 044 - 24842347

Wednesday, July 4, 2007

அவள் விகடன் நடத்தும் கோலப்போட்டி

அவள் விகடனும் ஆசீர்வாத்தும் இணைந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கோலப்போட்டிகள் நடத்தி வருகின்றன. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் நகரங்களைத் தொடர்ந்து வருகிற 15ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது அடுத்த போட்டி. வெற்றியாளர்களுக்கு பரிசாக கலர் டி.வி முதல் பட்டுப்புடவைகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. தவிரவும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ஆச்சர்யமூட்டும் வெகுமதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு நடப்பு இதழ் (ஜூலை6; 2007) அவள் விகடனை பார்வையிடவும்.

Tuesday, July 3, 2007

முதலீட்டைப் பெருக்கும் வழிகள்!

நாணயம் விகடன் சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் "முதலீட்டைப் பெருக்கும் வழிகள்!" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. முதலீட்டு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லுனரான திரு. வி. ரங்கஸ்வாமி நாணயம் விகடன் வாசகர்களுக்கு, சேமிப்பு, முதலீடு, பங்கு வணிகம், ம்யூச்சுவல் பண்டுகள், இன்ஸூரன்ஸ் உள்ளிட்ட வருமானத்தைப் பெருக்கும் வழி முறைகளை 'பவர் பாயிண்ட்' ப்ரசண்டேசனுடன் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்குகிறார். முழுக்க, முழுக்க இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இந்த முறை ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (08-07-07) ஈரோடு மகேஸ்வரி மஹாலில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சிக்கான இருக்கைகள் பதிவு செய்யவும், மேலதிக விபரங்களுக்கும் நடப்பு இதழ் (ஜூலை 15, 2007) நாணயம் விகடனை பார்வையிடவும்.

Monday, July 2, 2007

கமலஹாசன் கவிதைகள்
கமலஹாசனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது படங்களைப் போலவே வேறு எவரையும் நிணைவூட்டாத தனித்த நடைக்கு சொந்தக்காரர். பின் தொடரும் வாசகனுக்கு எந்த சலுகையும் கொடுக்காத எழுத்துக்கள். நுட்பமான வாசிப்பிற்குபின் விரியும் உன்னத அனுபவம் விளங்க முடியாதது கமலைப் போலவே...!


Friday, June 29, 2007

கோவையில் அக்ரி எக்ஸ்போ 2007

கோவை சுகுணா கல்யாண மஹாலில் அக்ரி எக்ஸ்போ-07 எனும் பிரம்மாண்ட விவசாயக் கண்காட்சி இன்று (29-06-07) முதல் நான்கு தினங்கள் நடைபெற இருக்கிறது. பூச்சிமருந்துகள், உரங்கள், விதைகள், விவசாய கருவிகள், பண்ணை கருவிகள் உற்பத்தியாளர்களின் எண்ணற்ற ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது. இன்று காலை முதல் கோவை, ஈரோடு வட்டார விவசாயிகள் படையெடுத்த வண்ணம் இருக்கும் இக்கண்காட்சியில் ஸ்டால் எண் டி-44ல் பசுமை விகடன் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய இதழ்கள் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

Thursday, June 28, 2007

நெய்வேலி புத்தகக் கண்காட்சி


பத்தாம் ஆண்டு நெய்வேலி புத்தகக்கண்காட்சி வரும் ஜூலை 7ம்தேதி முதல் துவங்க இருக்கிறது. பத்து தினங்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்கள் ஸ்டால்களை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரபல எழுத்தாளுமைகள் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், மாணவர்களுக்கான போட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம் என ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்துவருகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் விற்பனை சாதனை படைத்துவரும் விகடன் பிரசுரம், நெய்வேலி புத்தகக்கண்காட்சியை ஓட்டி 'தில்லானாமோகனாம்பாள்' புகழ் கொத்தமங்கலம் சுப்புவின் சில நூல்களை வெளியிட தீர்மானித்துள்ளது.

Wednesday, June 27, 2007

சத்தம் போடாமல் கேளுங்கள்

"அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளித் தூக்கும்போது பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்" எனத் தவிலும், நாகஸ்வரமும் பின்னிப்பெடல் எடுக்க சங்கர் மகாதேவன் பாடும் சத்தம் போடாதே படப்பாடலை கேட்க நேர்ந்தது. " எந்த நேரம் ஓயாத அழுகை / ஏனிந்த முட்டிக்கால் தொழுகை / எப்போதும் இவன் மீது பால் வாசனை / எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை / எந்த நாட்டை பிடித்துவிட்டான் / இப்படியோர் அட்டினக்கால் தோரணை /- திரை இசைப்பாடல்களில் நா.முத்துக்குமார் படைத்துவரும் கவித்துவவரிகள் அசத்துகிறது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் இந்த வலைதளத்திலிருந்து எளிதாக டவுண்லோடு செய்யமுடிகிறது. கேட்டுத்தான் பாருங்களேன்!

Tuesday, June 26, 2007

பெரியாரின் தோல்விக்கு யார் காரணம்?

முதலில் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும், தி.மு.கவினரும் பாருங்கள் என்றார்கள். பின் அரசு அலுவலர்களிடம் டிக்கெட்டை கொடுத்து விற்றாக வேண்டும் என்றார்கள். இப்போது பள்ளிமாணவர்கள் பார்த்துவிட்டு கட்டுரை எழுத வேண்டும் என பரிசெல்லாம் அறிவித்திருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான விதைகளை தூவிய அற்புத தலைவர் தந்தை பெரியார். அவரது வரலாற்றை ஞானராஜசேகரன் திரைப்படமாக எடுக்கிறார் என்றபோது நான் மகிழ்ந்தேன். காரணம் ஆளுமைகளின் வாழ்வை படம்பிடிக்கும்போது அவதார புருஷர்களாக மட்டுமே காட்டாமல் அவர்களின் தனிமனித பலவீனங்களோடும் காட்சிப்படுத்தும் நேர்மையை அவரது பாரதியில் நான் கண்டிருக்கிறேன். அத்தனை கோடி தமிழர்களின் மனதிலும் ஒவ்வொரு விதமான பாரதி இருக்கிறான். அத்தனைபேரின் மனப்பிம்பத்தையும் ஈடுகட்டும் பாரதியை எடுப்பதில் இருந்த சிக்கல்களை லாவகமாக கையாண்ட திறமையான இயக்குநர் அவர். திரைப்படங்கள் எடுப்பதற்கு முன் அதற்கு தேவையான உழைப்புகளுடன் களமிறங்குபவர் என்பதால் பெரியாரும் பெருவெற்றி பெரும் என்றுதான் நிணைத்திருந்தேன். ஆனால் அவரது முந்தைய முயற்சிகளைப் போலவே பெரியாரும் ஒரு பிரமாண்ட தோல்வியை தழுவியதன் காரணம் அதற்கு பூசப்பட்ட திராவிட சாயம்தான். படத்திற்கு கலைஞர் அரசு பெருந்தொகையை அளித்ததும், அதனைத் தொடர்ந்த பெரியாரின் பிள்ளைகளின் படம் குறித்த முழக்கங்களும், போஸ்டர்களும் சுத்தமான தி.க முத்திரையை குத்திவிட்டது. பெரியார் என்றாலே கடவுள் மறுப்புதான் என்ற போதிலும் பரவலாக வெளித் தெரியாத பெரியாரின் ஏனைய முகங்களை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இருந்தது பெரியார் திரைப்படம். ஆனாலும் திராவிட கழகத்தினர் அதன்மேல் செலுத்திய ஆர்வமும் ஈடுபாடும் மிஸ்டர். பொது ஜனத்தை படத்தை பார்க்க விடாமல் செய்துவிட்டது. ஒரு இலக்கிய சந்திப்பில் ஞானராஜசேகரன் ஆக்ரோஷமாய் கேட்டார் “நான் ஜானகிராமனின் மோகமுள்ளை படமாக்கினேன். படத்தில் நடித்தவர்களுக்கு விருது கிடைத்தது. படம் ஓடவில்லை. அடுத்து நான் எடுத்த பாரதி பலத்த பாராட்டுகளைப் பெற்றது என்றபோதும் மொத்த தமிழ்நாடே அதை சன் டி.வியில்தான் பார்த்தது. இப்போ பெரியார். நல்ல சினிமா எடுக்கவேண்டும் என நிணைக்கும் என் போன்றவர்கள் கோடம்பாக்கம் தெருக்களில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா?”. இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. உங்களிடம்..?

Saturday, June 23, 2007

அப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது?

1. அவர் என்ன சொன்னாலும் கேட்க, செயல்படுத்த ஆர்வமுள்ள குழந்தைகள், மாணவர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் அரைத்த மாவாக கூறியது கூறலாகத் தொடந்து ஓரே மாதிரியான "கனவு காணுங்கள்" பிரச்சாரம்.
2. சமூகத்தில் பெரிய அத்துமீறல்கள் நடக்கும்போது நமக்கு ஏன் வம்பு என வாயை மூடிக்கொண்டிருப்பது... அது தமிழ்நாட்டில் நிகழும் 'மதுரை வன்முறையானாலும் சரி' வேறு மாநிலங்களில் நிகழும் மதக்கலவரமாக இருந்தாலும் சரி.
3. 'காந்திஜியின் எளிமை செலவினமிக்கது' என்று ஒருமுறை சரோஜினி நாயுடு சொன்னதுபோல கலாமின் எளிமையும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு முறை கலாமின் வருகைக்கு ஹெலிபேடு அமைக்க பல மரங்கள் என் கண் முன்னால் வெட்டப்பட்டபோது மனசு துடித்தது.
4. நமக்கென் வம்பு என முகமது அப்சல் விவகாரத்தில் இன்றுவரை ஒரு முடிவு எடுக்காமல் இருப்பது. ஒன்று தூக்கில் போட சொல்லுங்கள், இல்லை மன்னித்து விடுங்கள் இரண்டுமில்லாமல் அமைதியாக இருந்தால் என்ன சார் கணக்கு?
5. அரசியல்வாதிகள் அனைவரிடமும் நாகரீக போக்கை கடைபிடித்தவர். எவரோடும் உரசல் இல்லை என புகழ்கிறார்கள். அப்படி ஒருத்தர் ஐந்தாண்டுகள் காலம் தள்ளியிருப்பது ஒருவகை வெங்காய தனம். மோதி மிதித்திருக்க வேண்டும், தவறுகளை, ஊழல்களை வன்மையாக கண்டித்திருக்க வேண்டும். விமர்சித்திருக்க வேண்டும்.

ஆசிப் மீரான் வீட்டருகே காண்டா மிருகம்

சு.கி. ஜெயகரன், இவர் ஒரு மண்ணியல் நிபுணர். சாத்தான்குளத்தின் காராமணி என்ற ஆற்றின் கரையில் மண் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, களிமண் படிவத்திலிருந்து ஒரு பெரிய எலும்புக்கூடு இவரிடம் அகப்பட்டது. அரை மீட்டர் நீளம் கொண்ட அந்த மண்டை ஓட்டு எலும்பை ஆய்வுகளுக்குட்படுத்தியதில் ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கிடைத்தன. பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காண்டாமிருகத்தின் எலும்பு அது. அந்த எலும்பின் அளவுகளை வைத்து கணிக்கும்போது அந்த காண்டாமிருகம் கிட்டத்தட்ட ஒரு யானையின் அளவிற்கு பெரிதாக இருந்திருக்க வேண்டும் எனக் கணித்திருக்கின்றனர் ஆய்வாளர்கள். தற்போது அந்த எலும்பு சென்னை அருங்காட்சியகத்தில் புவியியல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. "உலகம் ஒரு காலத்தில் ஹோல்சேல் காடு, நாமெல்லாம் அந்தக் காட்டை திருத்தி அதன் மேல் வசதியா வாழ்ந்துகிட்டு இருக்கோம்"னு என் தந்தை அடிக்கடி சொல்வார். இப்ப விஷயம் அதுவல்ல சாத்தான்குளம்கிறது சாதாரண காடு இல்லை. காண்டாமிருகம் மாதிரி படா, படா விலங்குகள் உலவுன காடு. அந்த காட்டின் டார்ஜான்கள்தான் நானும் ஆசிப் மீரானும்! சாக்கிரதை......

Wednesday, June 20, 2007

மேலதிகாரியின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

ஒரு சிறுகதை எழுதினாலும் எழுதினேன். என்னை நடுரோட்டில் நிற்க வைத்து பாண்டை அவிழ்க்க வேண்டும் என்றெல்லாம் பதிவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, அவர்களது நீண்டநாள் பிரச்சனையான 'மேனேஜர் டார்ச்சருக்கு' ஒரு தீர்வு சொன்னால் மன்னித்து விடுவார்கள் என இப்பதிவை எழுதுகிறேன்.

1. பணத்திற்காக நீதான் இந்த வேலையை தேர்ந்தெடுத்தாய். உன்னுடைய சம்பளத்தை அவர்கள் தவறாமல் கொடுத்து விடுகிறார்கள். ஓ இவர்கள் என்னை அடிமை போல் நடத்துகிறார்கள் என ஏன் புலம்புகிறாய்?
2. சிறிய விஷயங்களையெல்லாம் ஏன் பெரிது படுத்துகிறாய்? யாரும் உன்னை அடிமைப்படுத்தவில்லை. இப்போதைய உனது சூழ்நிலை சாதகமாக இல்லையென்றால் அதற்கு வேறு யாரையும் குறை கூறாதே.
3. நீ அவர்களின் கீழ் வேலை செய்வதும் செய்யாததும் ஒரு பொருட்டு அல்ல. உன்னை விட்டால் அந்த வேலையை செய்ய நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
4. முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு. அப்போது உலகமே உனக்கு நல்லதாக தெரியும்.
5. பிறரிடம் குற்றம் காணும் பழக்கத்தை விட்டுவிடு. நீ வெறுப்பவர்கள் எல்லாம் படிப்படியாக உன்னை ஏற்றுக்கொள்வதை நீ காண்பாய்.

மேற்படி ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவதில் உதவியாக இருந்தவர் திரு. சுவாமி. விவேகானந்தர், மனிதவள மேம்பாட்டாளர்.

Monday, June 18, 2007

ஒரு ஜட்டியின் கதை

இந்த தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருந்த சிறுகதை என்வரையில் மிகச் சிறந்த படைப்புதான். ஆனால், நலம் நாடும் நண்பர்கள் பலபேரும் எனது மரியாதைக்கு அது உகந்ததாக இல்லை என்பதால், பல்வேறு விவாதங்களுக்குப்பின் இதை அப்புறப்படுத்திவிட்டேன். எந்த பாலுறுப்பையும் குறிப்பிடாமல், ஆபாச வார்த்தைகளின்றி செய்யப்பட்ட ஒரு படைப்பு பிறர் மனதை புண்படுத்துகிறது என்பதனால் நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை படிக்க விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள். தனிமடலில் அனுப்பி வைக்கிறேன்.

மிக்க அன்புடன்,

செல்வேந்திரன்.

Sunday, June 17, 2007

புதிய தொழில் தொடங்குகிறார் ஜெயலலிதா

ட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, ஹைதரபாத் திராட்சை தோட்டத்திற்கும் தொந்தரவு, கொடநாடு குடைச்சல் என அடுத்தடுத்த தோல்விகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க புதிய தொழில் முயற்சிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளார் ஜெயலலிதா. தற்போது அவரது தோழியுடன் சேர்ந்து ஒரு டிராவல் ஏஜென்சியை துவக்கியுள்ளார். பல்வேறு பேக்கேஜ் டூர்களுக்கு அழைத்து செல்ல தீர்மானித்துள்ள அவர்கள் முதல் கட்டமாக ஜூனியர் விகடன் மற்றும் தினத்தந்தி நிருபர்களை கொடநாடு எஸ்டேட்டிற்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்கள். டிராவல் ஏஜென்சியின் பெயர் "ஜெசிகலா டிராவல்ஸ்" . பேரைக் கேட்டா ச்சும்மா அதிருதில்ல...

Thursday, June 14, 2007

நிஜம் நிழலாகிறது

"சேரி திரளும் அன்று நாடு புரளும்" என்ற புரட்சி கோஷத்தோடு தமிழக அரசியல் வானில் திருமாவளவன் அடியெடுத்து வைத்தபோது, ஆஹா ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்காக ஒரு தலைவன் கண்முன்னே உருவாகிறார் என்ற மகிழ்ச்சி இருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில்தான் அவரது செயல்பாடுகளும் இருந்தன. விடுதலைச் சிறுத்தை இயக்கத்தில் எண்ணற்ற தலித் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் குணமிக்கவர்களாக இருந்தனர். "அடங்க மறு, அத்து மீறு" "வாள் கைமாறினால்தான் உன் வாழ்க்கை மாறும்" என உணர்ச்சி பிழம்பாக பொதுக்கூட்டங்களில் திருமாவின் முழக்கத்தை கேட்கும்போது தமிழ்நாட்டின் ஓடுக்கப்பட்ட சமூகத்திற்கு வெளிச்சம் பாய்ச்சும் நபராக இவர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திருமா எம்.எல்.ஏ ஆனபோது, சட்டமன்றத்திற்குள் சேரியின் அவலங்களை கட்டவிழ்ப்பார் என நம்பினர் பலர்.

திராவிடக் கட்சிகள் கூட்டணிக்குள் சிறுத்தைகளை வளைக்க காய்களை நகர்த்த ஆரம்பித்தபோது, அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரமாக போகிறார் என்ற நிலையில், சினிமாக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று களம் மாறினார். கடைநிலை மக்களின் பிரதிநிதியின் இந்த திடீர் மாற்றத்தால் நல்ல விளம்பர வெளிச்சம் கிடைத்ததேயன்றி மக்களுக்கு எவ்வித பயனுமில்லை. அதற்கடுத்து பா.ம.கவினருடன் கைகோர்த்து எடுத்த தமிழ்க் காவலன் அவதாரம், குஷ்பு கற்பு சர்ச்சை எல்லாம் அவரது பயணத்தை திசை திருப்பும் காரணிகளாகத்தான் இருந்தது. இதற்கெல்லாம் மணிமகுடமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் திருமா. முதலில் அன்புத்தோழி, இப்போது கலகம் என்றொரு படம். கலகம் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிக்க தமிழின் முண்ணனி நடிகைகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து திருமா விகடனில் அளித்துள்ள பேட்டியில் " ஓரே ஆளு நூறு பேரை பந்தாடுற பாணி படம் இல்லை. பார்வையிலேயே பதற வைப்பேன். கட்சி ஆரம்பிச்ச இத்தனை வருஷங்களில் எதிர்பார்த்த வளர்ச்சி அடையலங்கிறது வருத்தமான விஷயம்தான். தொண்டர்கள் சோர்ந்து போகாம இருக்க ஏதாச்சும் செய்யனுமே. என் கருத்துக்களை மக்களிடன் கொண்டு செல்ல சினிமா ஒரு நல்ல ஊடகமாக இருக்கும்" என்கிறவர் 'நம்ம படம் அதிரடியா வெடிக்கும்; ஆதரவா அணைக்கும்' என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறார் இன்றைய வழக்கமான ஹீரோக்களின் வாய்ச்சவடால் பேட்டி போல!

சினிமாவில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம், அதற்கு இன்றைய கதாநாயகர்களே கண்முன் நிற்கும் உதாரணம். ஆனால் நிஜவாழ்வில் ஹீரோ ஆவது கடினம். ஒருபக்கம் எம்.எல்.ஏவும் கவிஞருமான ரவிக்குமார் ஆளுங்கட்சியினரோடு நல்ல உறவு கொண்டு இலங்கை அகதிகள் பிரச்சனை முதல் எத்தனையோ வெகுஜன பிரச்சனைகளை கலைஞரின் பார்வைக்கு கொண்டு சென்று தீர்வு காண்கிறார். ஆனால் கட்சியை வழிநடத்தும் திருமாவோ பன்ஞ் டயலாக், டூயட், ஆக்க்ஷன், பேட்டி என தடம் மாறுகிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக வீதிக்கு வந்து போராடுங்கள் அதுவே தொண்டர்களை உற்சாகப்படுத்தும். தொண்டர்களை ரசிகர்களாக மாற்றினால் அழுகின்ற பிள்ளைக்கு கிடைக்கவேண்டிய பால் கட்-அவுட்களுக்கு அபிஷேகமாகிவிடும்!