காட்டின் ஒரு துண்டு!
பத்திரிகையோடு தொடர்பில் இருக்கும் எவருக்கும் பயணங்கள் அடிக்கடி பரிசாக கிடைக்கும். அப்படித்தான் திடீரென்று அமைந்தது அந்த பயணம். ஆஜானுபாகுவாய் வான்நோக்கி படுத்த நிலையில் அருள்பாலித்துக்கொண்டிருந்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலைச் சென்றடைந்தது கார். 'ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம் தம்பி' என டிரைவர் அறிவுரைக்க கை கூப்பினேன். நம்மூர் கோவில்களில் தரிசனம் முடிந்த பின்னரே பிரகாரம் சுற்றுவது வழக்கம். இங்கு பிரகாரத்தை மூன்று முறை சுற்றிய பின் தரிசனம் செய்வதே வழக்கமாக உள்ளது. பக்தர்கள் தங்கள் பிரச்சனைகளை லெட்டர் பேடில் (டூ: மாசாணியம்மன், ஆனைமலை) எழுதி உண்டியலில் போடும் வேண்டுதல் ஆச்சர்யமூட்டியது.
தரிசனத்தை முடித்துவிட்டு பரம்பிகுளம் செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆதிவாசிகளின் வீட்டுக்கதவுகளில் மம்மூட்டி சிரிக்கும் கேரள எல்லையில் தலைக்கு, வண்டிக்கு, கேமராவுக்கு, செலவுக்கு எனத் தனித்தனியே பணம் வாங்கி கொண்டு தமிழ் தெரிந்த கைடு ஒருவரை உடன் அனுப்பினார்கள்.
காமராஜர் என்ற கர்மவீரனின் கம்பீரமாய் எங்கள் முன்னே நின்று கொண்டிருந்தது பரம்பிகுளம் டேம். தமிழக நீர் ஆதாரங்களுக்கு ஆதாரம் காமராஜர்தான். கக்கன் என்றொரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாய் ஒரு கல்வெட்டு (மினிஸ்டர் - டிபார்ட்மெண்ட் ஃபார் ஓர்க்ஸ்) இருந்தது. அணைக்கட்டுகளைக் கட்டிய தலைவன் அரசு மருத்துவமனையில் அநாதையாய் செத்துப் போனதை நினைக்கும்போது, மச்சான்களுக்கு காண்ட்ராக்ட் விடும் மாண்புமிகுக்களின் முகங்கள் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த பரம்பிகுளம் டேமை வளைத்து போட கேரள அரசு பிரம்ம பிரயத்தனம் எடுத்து வருகிறது. "ஒரு கறிவேப்பிலைகூட சுயமாய் உற்பத்தி பண்ண துப்பு இல்லாதவர்கள் மலையாளிகள்" என்பார் எழுத்தாளர் சக்காரியா. ஆனால், மலையாளிகளுக்குத் தண்ணீர் மீதான காதல் தீர்வதேயில்லை.
பரம்பிகுளத்தில் எப்போதோ ஸ்தூபி ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்ற நேரு வந்தபோது போட்ட மேடை ஒன்று அப்படியே இருக்கிறது. நேருவை நேரில் பார்த்ததை பெருமைவழியச் சொன்னாள் ஒரு டீக்கடை மூதாட்டி. அவளது வாழ்நாள் சாதனைகளில் அதுவும் ஒன்று என அவள் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறாள் போலும். வழியெங்கும், மர அணில்கள், கருங்குரங்குகள், மலபார் பாரகீட்கள் என ஒவ்வொன்றாக அடையாளம் காட்டியபடி வந்தார் கைடு. உலகிலேயே அழகான பறவை கிங்ஃபிஷராகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட ஒரு வளர்ச்சியுற்ற எரும்பு திண்ணி சைசுக்கு, அழகிய வாலும், வெல்வெட் தோலும் கொண்ட ஒரு மர அணில் ஒன்று கண்ணில் சிக்கியது. நீலகிரி ரங்கூன் என அழைக்கப்படும் கருங்குரங்கின் ரத்தம் குடித்தால் ஏதேதோ நோய்கள் தீரும் என்ற மூடநம்பிக்கைதான் குரங்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்ததாம்.
பச்சை நிறத்தை முதுகில் கொண்ட 'எமரால்ட் டவ்வை' அடையாளம் காட்டிய கைடிடம் இந்த பெயர்களையெல்லாம் வைத்தது யார் என்று கேட்டேன். 'சலீம் அலி' என்று பதில் வந்தது. வேட்டைக்காரனாய் இருந்த சலீல் அலியின் கையில் இறந்த பறவையில் உடல் ஒன்று கிடைக்க, அதன் நதிமூலம் ஆச்சரியமூட்ட பறவை ஆராய்ச்சியாளானாய் மாறினார் சலீம். 'டாப் ஸ்லிப்பின் ரகசியங்களை உலகறியச் செய்த சலீம், இந்த வனத்தின் காவலர். இந்தக் காட்டின் ஒவ்வொரு இலையிலும் சலீமின் பெயர் எழுதப்பட்டுள்ளது' என உணர்ச்சி வசப்பட்டார் கைடு. இன்று வெளிநாட்டு ஆய்வாளர்கள் சலீம் வைத்த பறவைகளின் பெயர்களைக் கேட்டால் சிரிக்கிறார்களாம்.
'ராக்கெட்டோ டொராங்கோ' என்ற பறவைக்கு ' மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆஃப் தி பாரஸ்ட்' என்று பெயராம். எதையும் நான்கு முறை கேட்டால் அப்படியே சொல்லுமாம். 'இந்த வழியில் தினமும் நான்கு முறை டிரக் போகிறதே... டிரக் மாதிரி கத்துமா?' என நான் அப்பாவியாக கேட்க, கைடு முறைத்தார். நம்மூர் ரெட்டைவால் குருவியும், காக்காவும் கலந்து கட்டின கசமூசா தோற்றமுள்ள பறவை அது.
திடீரென பைசன், பைசன் எனக் குரல் எழுப்பினார் என்னோடு வந்திருந்தவர்களில் ஒருவர். திரும்பிய நான் அதிர்ச்சியில் உறைந்தேன். வெள்ளைக் காலுறை அணிந்தது போன்ற கால்களும், மிரட்டும் கொம்புகளும், ஆண் பைசன்களின் திமில்களும் அச்சமூட்டுவதாக இருந்தது. எவரும் பயப்படும் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டிருந்தது. காட்டு ராஜா சிங்கம் என்றால், காட்டு இளவரசன் பட்டமாவது இவற்றிற்கு கொடுக்க வேண்டும். 'உண்மையில் இந்தியாவில் பைசன்களே இல்லை. இவற்றை காட்டுபோது (இந்தியன் கோர்) என்றுதான் அழைக்க வேண்டும்' என்றார் கைடு. ஒரு தஞ்சாவூர்காரர் காட்டு எருது தம்பதிகளை பிடித்து ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் பெல்டுகளை மாட்டி ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறார். அதன் முடிவுகள் சுவாரஸ்யமானவையாம். சாம்பார் (?!) டியர் என்றழைக்கப்படும் கலைமான்கள் தேமே என காடுமுழுவதும் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
450 ஆண்டுகள் பழமையான கன்னிமாரா தேக்கு மரத்தை சென்றடைந்தோம். பழமை என்றாலே கன்னிமாரா எனப் பெயர் வைத்துவிடுவார்களா என்ன?
6.57 மீட்டர் அகலமும், 48.50 மீட்டர் உயரமும் கொண்ட அந்தமரம் இந்திய அரசாங்கத்தின் 'மஹாவிருக்ஷா புரக்சார்' விருதைப் பெற்றிருக்கிறது. இந்த பழுதடைந்த பூமியின் அகலமான மரங்களுள் ஒன்றான அதன் அகலத்தில் சந்தேகம் கொண்டு இரு கரங்களையும் நீட்டி மரத்தை அளக்க ஆரம்பித்தார் என்னோடு வந்தவர். இதை வெட்டினால் அதைக்கொண்டு வெள்ளை மாளிகைக்கே கதவு செய்யலாம் என்ற ரேஞ்சுக்கு அவர் பேச ஆரம்பித்தார். ஒன்றும் செய்ய இயலாது. 65 வயது கடந்த எந்த தேக்கும் உபயோக படாது. வெட்டினால் பொடி, பொடியாக உதிருமாம். 400 ஆண்டுகளாகப் பார்வையாளர்கள் அதன் அகலத்தில் சந்தேகப்படுவதும், வெட்ட எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுவதையும் மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறது கன்னிமாரா.
இந்த வனத்தின் ஆமைகள் சாதாரணமாக 100 ஆண்டுகள்வரை உயிர் வாழுமாம். வனத்தில் ஆமைகள் வாழ்வதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காட்டுப்பன்றிகள் ஒரு பக்கம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. காட்டின் துப்புரவுப் பணியாளன் என காட்டுப்பன்றிகளைச் சொல்கிறார்கள். காட்டில் கூட பன்றிகளுக்கு இதுதான் நிலை. பரம்பிக்குளம் வைல்ட் லைப் சாங்சுவரியில் ஒரு ஏரிக்கைரையோரம் அழகிய இரண்டு மர வீடுகள் இருக்கிறது. நாளொன்றுக்கு வாடகையாக ரூ.500/- வசூலிக்கிறார்கள். சாப்பாடு கொண்டுவர, பாதுகாப்பு, போன்ற தேவைகளுக்கு பக்கத்திலேயே ஆட்கள் இருக்கிறார்கள். அந்தி சாயும் வேளையில் யூரோப்பிய ஓவியம் போலிருக்கிறது அந்த ஏரிக்கரையும் மரவீடும்.
தனக்கான இடம் வந்ததும் இறங்கி கொண்டார் அந்த கைடு. காடு, பறவைகள், தாவங்கள், விலங்குகள் குறித்த அவரது அறிவும் அவதானிப்பும் ஆச்சர்யமூட்டியது. தினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம் அவரது முகத்தில் இருந்தது. மூங்கில் ஒரு வித்திலை தாவரம் என அறிவியல் வகுப்பில் மதிப்பெண்களுக்காகப் படித்திருக்கிறோம். ' என்ன பெருசுன்னாலும் மூங்கில் ஒரு புல்தானே' என்ற கவித்துவ விளக்கமும், காட்டில் தீ முண்டால் எதிர்புறமாக தீ மூட்டி, தீ கொண்டு தீயை அணைப்பது, கங்காணிகளுக்கும் ரேஞ்சர்களுக்கும் உள்ள உறவு, இரு மாநில எல்லையில் வாழ்வதால் ஏற்படும் அசெளகர்யங்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சவாலாக இருக்கும் கல்வி, தொடர்கதையாகும் மரத்திருட்டுகள், என அத்தனை விவகாரங்களிலும் அவர் கொண்டிருந்த அறிவு நிச்சயம் அவரது வருமானத்தைக் காட்டிலும் பலமடங்கு மேலானது.
டாப்ஸ்லிப்பில் ஜீப் ரைடு தொடங்கியிருக்க யானைகளைக் காணும் ஆவலில் கொட்டும் மழையில் வண்டி ஏறினோம். மழை காட்டை கழுவி வைத்திருந்தது. மழையினால் எந்த மிருகத்தையும் காண இயலவில்லை. கும்கீ யானைகளைப் பயிற்றுவிக்கும் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அளவு சாப்பாட்டிற்கு க்யூவில் நிற்கும் யானைகளைப் பார்க்கும்போது மனசு வலிக்கிறது. யானைகளல்ல அவை பசுக்கள்!
காலையும் மாலையும் காட்டில் நடைபயிலும் ஒரு மனிதன் தனது கோட் பாக்கெட் நிறைய தேக்கு விதைகளும், கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்குடனும் தினமும் காட்டுக்குள் செல்வாராம். வழி நெடுக ஈர நிலத்தை வாக்கிங் ஸ்டிக்கால் கீறி ஒரு தேக்கு விதையை வரிசையாக விதைத்துக்கொண்டே செல்வது அவரது வழக்கம். இன்று டாப்ஸ்லிப்பில் இவ்வளவு தேக்கு மரங்கள் இருக்க அவரே காரணம். வூட் எனும் அந்த ஆங்கிலேயே வன அதிகாரிதான் டாப்ஸ்லிப்பை இங்கிலாந்து மரங்களுக்காகச் சூறையாடுவதிலிருந்து தடுத்தவர். மரங்களை வேரோடு வெட்டுவதைத் தவிர்த்து மீண்டும் வளரும்படி வெட்டுவது, ஒரு மரத்தை வெட்டினால் பதிலுக்குப் பல மரங்களை நடுவது, மரங்களுக்குப் பதிலாக மாற்று உபாயங்களைத் தேடுவது என இந்தக் காட்டைக் காப்பாற்ற அவர் ஆற்றிய அரும்பணிகளின் நினைவாக டாப்ஸ்லிப் வன அலுவலகத்திற்கு 'வூட் ஹவுஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் வூட் ஹவூஸ் என்றால் மரவீடு என்றே அனைவராலும் தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.
கேரம்போர்டு ஸ்டிரைக்கர் அகலத்தில் ஒரு மரத்துண்டை காட்டில் கண்டெடுத்தேன். அதுதான் உலகிலேயே பெரிய விதைகளைக் கொண்ட ஒரு காட்டுச் செடியின் விதையாம். பாறை போன்ற உறுதியுடன் இருந்த அந்த விதை, காட்டின் ஒரு துண்டை நான் கையோடு எடுத்து வந்த உணர்வை இன்றும் கொடுக்கிறது.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
Comments
மலைப் பிரதேசங்களில் நான் பார்த்தது குற்றாலமும் திருப்பதியும் தான்.
இது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அதிகமாக ஆசைப் படுபவன் நான்
good - baskar
யானையை நினைக்கும்போது மனசு பாரமாகுது. ரேஷனா? அதுக்கா? ஐய்யோ(-:
காமராஜர் என்ற கர்மவீரனின் கம்பீரமாய் எங்கள் முன்னே நின்று கொண்டிருந்தது பரம்பிகுளம் டேம். தமிழக நீர் ஆதாரங்களுக்கு ஆதாரம் காமராஜர்தான். கக்கன் என்றொரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாய் ஒரு கல்வெட்டு (மினிஸ்டர் - டிபார்ட்மெண்ட் ஃபார் ஓர்க்ஸ்) இருந்தது. அணைக்கட்டுகளை கட்டிய தலைவன் அரசு மருத்துவமணையில் அநாதையை செத்து போனதை நிணைக்கும்போது, மச்சான்களுக்கு காண்ட்ராக்ட் விடும் மாண்புமிகுக்களின் முகங்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
great personality
பச்சை நிறத்தை முதுகில் கொண்ட 'எமரால்ட் டவ்வை' அடையாளம் காட்டிய கைடிடம் இந்த பெயர்களையெல்லாம் வைத்தது யார் என்று கேட்டேன். 'சலீம் அலி' என்று பதில் வந்தது. வேட்டைக்காரனாய் இருந்த சலீல் அலியின் கையில் இறந்த பறவையில் உடல் ஒன்று கிடைக்க, அதன் நதிமூலம் ஆச்சரியமூட்ட பறவை ஆராய்ச்சியாளானாய் மாறினார் சலீம். 'டாப் ஸ்லிப்பின் ரகசியங்களை உலகறியச் செய்த சலீம், இந்த வனத்தின் காவலர். இந்தக் காட்டின் ஒவ்வொரு இலையிலும் சலீமின் பெயர் எழுதப்பட்டுள்ளது'
certainly
450 ஆண்டுகள் பழமையான கன்னிமாரா தேக்கு மரத்தை சென்றடைந்தோம். பழமை என்றாலே கன்னிமாரா எனப் பெயர் வைத்துவிடுவார்களா என்ன? 6.57 மீட்டர் அகலமும், 48.50 மீட்டர் உயரமும் கொண்ட அந்தமரம் இந்திய அரசாங்கத்தின் 'மஹாவிருக்ஷா புரக்சார்' விருதைப் பெற்றிருக்கிறது
viruthu petta maram
அந்தி சாயும் வேளையில் யூரோப்பிய ஓவியம் போலிருக்கிறது அந்த ஏரிக்கரையும் மரவீடும்.
photo pottirukkalamla
தினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம்
paavam
மூங்கில் ஒரு புல்தானே' என்ற கவித்துவ விளக்கமும், காட்டில் தீ முண்டால் எதிர்புறமாக தீ மூட்டி, தீ கொண்டு தீயை அணைப்பது, கங்காணிகளுக்கும் ரேஞ்சர்களுக்கும் உள்ள உறவு - puthumaiyana infn.
வூட் எனும் அந்த ஆங்கிலேயே வன அதிகாரிதான் டாப்ஸ்லிப்பை இங்கிலாந்து மரங்களுக்காக சூறையாடுவதிலிருந்து தடுத்தவர். மரங்களை வேரோடு வெட்டுவதை தவிர்த்து மீண்டும் வளரும்படி வெட்டுவது, ஒரு மரத்தை வெட்டினால் பதிலுக்கு பல மரங்களை நடுவது
enna maa manithar - indian nukku kooda intha unarvu illai
keep it up - baskar
நன்றி.
//'வூட் ஹவுஸ்' // இதனை Wood's house என்று மாற்றினால் வூட்டுடைய வீடாகி போகும். இணையத்திலிருந்த படங்களுக்கு பதிலாக நீங்களே படங்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த முறை புகைப்பட பெட்டியோடு போங்கள்
பரம்பிக்குளம் போயிருக்கிறேன்..படகில் அந்த நீர்நிலையில் சென்று கொண்டிருக்கும் போது மழைத்தூரலோடு நனைந்து கொண்டு யானைக்கூட்டங்களை கண்ட நினைவு..மிக அருமையானா இடம்.
உங்க கேமரா இன்னுமுமா சரியாகல. . . . .?
வாழ்த்துகள்
நாலு நாளா அந்தப்பக்கமே வரல்டே!
தப்பா எடுத்துக்காத சர்ரியா?
நம்மூரு பய நட்சத்திரம்னா சும்மாவாட்டே?
கலக்கு இந்த கிறுக்குபுடிச்ச ப்ளாக்கரு வேலை செய்ய மாட்டேங்கு
அதான் வாழ்த்து சொல்ல முடியலை
இதையே உன் பதிவுல் பின்னூட்டமா போடு.
நல்லா இருடே!!
சாத்தான்குளத்தான்
அருமையான எழுத்து நடை.
//தினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம்//
இந்த மாதிரி Rangerகளே இன்றைய நாட்களின் Wood கள். அந்த ரேஞ்சரின் படத்தையும் போட்டிருக்கலாமே.
\\பத்திரிக்கையோடு தொடர்பில் இருக்கும் எவருக்கும் பயணங்கள் அடிக்கடி பரிசாக கிடைக்கும\\
சர்வேசன் தமிழ்நாட்டின் தலைபபத்து இடங்கள் சர்வேயில் கலந்து கொண்டு இது போன்ற இடங்களை சொல்லுங்களேன். நாளை என்னைப்போன்றோர் போய்வர ஆசைப்படுவோம்.
எப்படிச் செல்வது எங்கு தங்குவது யாரைத் தொடர்பு கொள்வது போன்ற விபரங்களையும் தொடர்ந்து தரவும். நான் முதலில் டாப்ஸிலிப் போய் அப்புறம் இங்கு சென்றேன் என நினைக்கிறேன்.
அன்புடன்
ச.திருமலை
மிகவும் அருமையான பதிவு.
அப்புறம் வேதாத்திரி மகரிஷியோட ஆஸ்ரமம்,'விஸ்வநாதன் வேலை வேணும்' கெஸ்ட் ஹவுசு,குரங்கருவி இங்கே எல்லாம் போவலியோ??
---வாழ்நாள் சாதனைகளில் அதுவும் ஒன்று ---
---'இந்த வழியில் தினமும் நான்கு முறை டிரக் போகிறதே... டிரக் மாதிரி கத்துமா?' ---
---காட்டு ராஜா சிங்கம் என்றால், காட்டு இளவரசன் பட்டமாவது ---
---காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம் அவரது முகத்தில்---
மிக நல்லப்பதிவு!
சலிம் அலியின் நூல்களில் விஞ்ஞானப்பெயரும் அளித்துள்ளார் அப்படி இருக்கையில் அவர் சூட்டிய வட்டார காரணப்பெயருக்கு வெள்ளைக்காரன் சிரித்தால் அது அவரைப்பற்றிய அறியாமையே!