Thursday, July 30, 2009

கலாப்ரியாஇன்று அறுபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என் அபிமான கவிஞர் கலாப்ரியா. நாளை முதல் அவர் வகித்து வந்த வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பிறந்த நாள் வாழ்த்துக்களோடு, அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.

Wednesday, July 29, 2009

சொற்களெடுத்து எறிந்தாய் தோழி!

வணக்கம்,

நான் நலம், நீங்களும் நலமாக இருக்க இறைவனை வணங்குகிறேன். நீங்கள் என்னைத்தேடுவதாக சிலர் என்னைத்தொடர்பு கொண்டார்கள். நீங்கள் யார் என்று நான் அறிய முடியுமா? மட்டக்களப்பில் எந்த வீதியிலிருக்கும் அனோஜாவைத்தேடுகிறீர்கள்?

அனோ.

***

அன்பின் அனோ,

நீங்கள் யாரென்று கேட்டதிலிருந்தே நீங்கள் நான் தேடுகிற அனோஜா இல்லையென்று புலனாகிறது. தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

நான் செல்வேந்திரன், எழுத்தாளன். எனக்கு மட்டக்களப்பில் பிரதீபா திருக்குளத்தரசன் என்றொரு பேனா நண்பி இருந்தாள். அவள் மூலமாக அனோஜா ரத்னவேல் என்றொரு நண்பியும் அறிமுகம். நாங்கள் பால்யத்தில் தொடர்ந்து கடிதங்களின் மூலம் எங்களது நட்பைப் பலப்படுத்திக்கொண்டோம். கொடிய வறுமையில் என்னால் செலவினமிக்க கடிதப் போக்குவரத்தினை மேற்கொள்ள இயலாமல் போய்விட்டது.

இன்றைக்கு வசதியும், வாய்ப்பும் வந்து விட்ட சூழலில் என் சக ஹிருதயர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் எனும் ஆர்வத்தேடலில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்த நண்பர்கள் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் போலும். தொந்தரவிற்கு மன்னியுங்கள்.

நான் தேடுகிற அனோவிற்கு சுமார் 22 வயது இருக்கலாம்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

***

செல்வேந்திரன்,

நீங்கள் தேடும் அனோ நானேதான். ஆனால் இப்ப எனக்கு இந்தியாவில் இருக்கும் எவருடனும் நட்பு வைக்க எனக்கு விருப்பமில்லை. இந்தியாவில் வாழ்பவர்கள் சுயநலவாதிகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். பிரதீபாவின் அப்பா காலமாகிவிட்டார். அவளுக்கும் நட்பு தொடர்வதில் விருப்பமில்லை. நன்றி

இந்தியாவின் எதிரி
அனோஜா

***

"சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமே பேசாதிருங்கள்..." (யாக்கோபு 4:11)

அன்பின் அனோஜா,

தங்களது பதிலுக்கு நன்றி! யாரோடும் நட்பைத் தொடர்வது அல்லது முறித்துக்கொள்வது தங்களின் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட வானத்தின் கீழுள்ள எவருக்கும் அதிகாரம் இல்லை.

தமிழகத்தின் அண்டை நாடான இந்தியாவின் குரலே தமிழர்களின் குரலென்று தவறாகப் பொருள் கொள்ளப்படுவது ஈழப் பிரச்சனையில் உண்மையான கவலையும், வருத்தமும் கொண்டு கண்ணீர் சிந்துகிற தமிழர்களின் சாபக்கேடு. எங்கள் உணர்வும், கவலையும் உண்மையென்று உங்களிடத்தில் நிரூபணம் செய்ய வேண்டி இருப்பது எத்தனை துரதிர்ஷ்டமானது. ஈழ விடுதலைக்காக தங்களை எரித்துக்கொண்ட முத்துக்குமரன் போன்ற எண்ணற்ற இளைஞர்களின் பிணத்தின் மீது நின்றுகொண்டுதான் இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். உண்மையான அக்கறையோ, அல்லது சுய நோக்கங்களுக்கான நாடகமோ எது எப்படியாயினும் எங்கள் தலைவர்களும், கலைஞர்களும் அவரவர்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடி சிறை சென்ற தகவல்களையெல்லாம் உங்களது கணிணித் திரை காட்டி இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனால், எழவு வீட்டில் நியாயம் பேசுவது அசிங்கமானது. நீ என் சகோதரி. செத்துப்போனவர்கள் என் சகோதரர்கள். நானும் துக்கத்தில் இருக்கிறேன். உங்களோடு சமர் செய்வது என் விருப்பமோ, நோக்கமோ அல்ல. நாங்கள் கள்ள மவுனம் சாதித்தாக நீ சொல்கிற கூற்றில் எனக்கிருக்கிற அபிப்ராயங்களை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். ஆரம்பம் தொட்டே ஈழப் பிரச்சனையைத் தனிப்பட்ட தமிழர்களின் பிரச்சனையாகவே மொத்த இந்தியாவும் கருதிவருகிறது. அவர்கள் தமிழரென்ற போதும் இந்திய வம்சாவளியினர்தானே என்கிற எண்ணம் இந்தியாவில் விதைக்கப்படாமல் போனதற்கு சர்வ நிச்சயமாக திராவிடத் தலைவர்களே காரணம். இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும்போது மொத்த இந்தியாவும் கொதித்துக் கிளம்புகிறது. ஆனால், இலங்கையிலோ, கர்நாடாகாவிலோ, மலேஷியாவிலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் அது பெட்டிச் செய்தியாக மட்டுமே கருதப்படுகிறது. தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?! என்கிற சந்தேகம் எங்களுக்கு எப்போதும் இருந்தே வருகிறது.

செல்வேந்திரன் எனும் பெயரும், என்னுடைய கடிதங்களும், நான் உங்களிடத்தில் காட்டிய அன்பும் நிச்சயம் மறக்கக் கூடியதல்ல. காலம் நம்மைக் கலைத்துப் போட்ட பின்னர், எங்கே போர் உங்களையும் தின்று விட்டதோ எனும் பதட்டத்தில் தேடி, தேடி உங்களைக் கண்டடைந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி. இனி நீங்கள் நட்பைத் தொடராமல் இருந்தாலும் கவலையில்லை.

'திருக்குளத்தரசன்' எனும் பெயர் எத்தனை வசீகரமானது?! பிரதீபாவின் தந்தை மரணமடைந்து விட்ட செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. என் இரங்கல் அவளுக்கு நிச்சயம் தேவை இல்லைதான்.


இப்படிக்கு,

உங்கள் அன்பெனும் பிடிக்குள் சில காலம் அகப்பட்டுக் கிடந்த செல்வேந்திரன்.

Monday, July 20, 2009

சந்தேகம்

ஐ.ஐ.எம் - அகமதாபாத்தின் இருபத்தைந்து வெற்றியாளர்களின் கதையான 'ஸ்டே ஹங்ரி..ஸ்டே ஃபூலிஷ்' புத்தகம் வெளியான ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் ஆசிரியரான ரேஷ்மி பன்சாலும் ஓர் ஐ.ஐ.எம் - மேக்கிங்தான். இந்திய புத்தகச் சந்தையினைத் தாங்கிப் பிடிப்பது சுயமுன்னேற்ற நூல்கள்தாம் என்பதற்கு மேலும் ஒரு சாம்பிள் இது.

***
'ஆப்பு' எனும் பெயரான் கீழ்க்கண்ட நபர்களுள் ஒருவராக இருக்கலாம் என நான் தீவிரமாக சந்தேகிக்கிறேன்.

1. சஞ்ஜெயின் எதிர்வீட்டில் இருக்கும் ஒன்றரை வயது குழந்தை

2. காக்கர்லால்

3. லதானந்தின் கார் டிரைவர்

4. நான்கு மாத சம்பளப் பணத்தை மிச்சப்படுத்தி, 'செகண்ட் ஹேண்ட்' மொபைல் வாங்கி தன் காதலனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு பதிலழைப்பிற்குக் காத்திருக்கும் பைப் கடை முருகேஷ்வரி.

5. முத்தாலம்பட்டியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பா. கணேசன்

6. ஜெயமோகன்

7. நாமக்கல் - திருச்சி சாலையில் இரவு பத்தரைக்கு மேல் தென்படும் அரவாணி நிர்மலா

8. வெங்கட்பிரபு

9. மனுஷ்ய நாடகத்தில் வரும் தந்தி ஆபிஸ் கிழவர்

10. ஜல்லிப்பட்டி பழனிச்சாமியின் வாழைத்தோட்டத்தில் மறைந்து கொண்டு பச்சைக் கற்பூரத்தை வாழைப்பழத்தில் வைத்து முழுங்க யத்தனித்துக்கொண்டிருக்கும் சரோஜா.

11. ராக்போர்ட் சந்துரு

12. அசினின் மானேஜர்

13. வேளுக்குடி கிருஷ்ணனின் உபன்யாச சிடி வாங்க கிஞ்சித்காரம் டிரஸ்ட் வாசலில் ஆட்டோவில் இறங்கும் பெரியவர் நரசிம்மன்.

14. மாவோ இயக்கத்தின் க்யூப கிளையின் செயலாளர் டாம் என்கிற சீஸ் கட்டர்

15. சுஜித் சோமசுந்தர்

16. தற்கொலை செய்யும் தீர்மானத்தில் 'லேட்டனா காமிரா' பூக்களை வயிறு புடைக்கத் தின்றுவிட்டு மலை உச்சியில் காத்திருக்கும் வரையாடு

யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சந்தேகிக்கலாம்தானே?!

***

வெப்காமிரா வசதி இல்லாதவர்கள் தங்களது காமிரா மொபைலை வெப்கேம் ஆகப் பயன்படுத்தும் வசதியை இந்த இணையதளம் தருகிறது.
***

உறுத்தாத மழை, அழுத்தாத குளிரென கோவை ஒரு சொர்க்கமாக மாறிக்கொண்டிருந்த ரம்மிய மாலையில் ச்சின்னப்பையன், வால் பையன், தாரிணி, விஜிராம், சஞ்ஜெய், வடகரை வேலன் மற்றும் இரு வல்லவர்களுமாக ஒரு சிறிய சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் பலனாக கொங்கு பதிவர்கள் ஒருங்கிணைந்து கொஞ்சம் உருப்படியான நிகழ்ச்சிகளை நடத்தலாம் என ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். விரைவில் நல்ல செய்திகள் வரும்.

***
ஒரு சீனத் தம்பதியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை எர்கோவில் படித்தேன். கணவன், மனைவி இருவருமே 29-04-1982ல் பிறந்தவர்கள். இருவரது பெயருமே 'வேங் யெங்'. இருவருக்கும் ஓரே அலுவலகத்தில் பணியும் கூட. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் சண்டையே போடுவதில்லையாம். காரணம்: சண்டையில் இருவரும் தங்களது பெயரைச் சொல்லியே திட்டியாக வேண்டும் என்பதால்!

***

"யாவரும், கேட்பதற்கு தீவிரமாயும், பேசுவதற்கு பொறுமையாயும், கோபிக்கிறதற்கு தாமதமாயும் - இருக்க கடவர்கள்" - யோகோபு 1:19

***

" I think I am trying to make my head as empty as it was when I was born on to this damaged planet fifty years ago." - Kuri Vonnegut Jr.

Thursday, July 16, 2009

ம்

வெறுமை சூழ்ந்திருக்கிற இரவுகளில் மட்டும்தான் உன்னை நினைத்துக்கொள்கிறேனென கணிணித் திரை என்னைக் கேள்வி கேட்கிறது. சத்தியமாக இல்லை. மப்ளரை சுற்றிக்கொண்டு வேர்த்திரைப்புடன் காலைநடை பயில்பவர்கள், பேப்பர் போடும் பெரியவர், 'சார் டீ வாங்கிட்டு வரட்டுமா' எனக் கேட்கும் மேன்சன் வாட்ச்மேன், அலுவலக் கேட்டுக்குள் பைக்கை நுழைக்கும்போது விரைப்பாகி சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி, உடலெல்லாம் வியர்வையில் ஊறித் திளைக்க அரிசி மூடைகளை முதுகில் சுமக்கும் கூலியாள், ஆர்யாஸில் சாப்பிட்டு வாய் துடைத்து வெளிவரும்போது கை நீட்டும் வயோதிக யாசகன், உபன்யாசத்தில் முன்னிருக்கை வெள்ளி முடிவேந்தர்கள், என எல்லோருக்குமே உன் வயது. ஒவ்வொரு வயசாளியைப் பார்க்கையிலும் எனக்கு உன் நினைவு வருகிறது.

ஜன்னல் வழி முகத்தில் விழும் தினமணி. தினமும் உன் நினைவெனும் செய்தியைத் தாங்கி வருகிறது. படித்து முடித்தவுடன் கவனமாக உன்னைப் போலவே அதன் ஓரத்தில் ஒரு 'V' வடிவம் கிழித்து படித்த பேப்பர் எனும் அடையாளம் இடுகிறேன். கட்டுரைகளில் இருந்து கவனமாகக் குறிப்புகள் எடுத்துக்கொள்கிறேன்.

சுடுசோறு அதை விடச் சூடான குழம்பு. பிஞ்சுக் கைகள் அதை பிசையத் தவிக்கும் ஆரம்ப காலம் தொட்டு நீதான் ஊட்டி விட ஆரம்பித்தாய். உன்னையும், ஊரையும் விட்டுப் பிரிகிற முந்தைய இரவுவரைக்கும் அதுதானே வாடிக்கை. இங்கே அத்திப்பூத்த கணக்காக எப்போதாவது என் இலையில் வந்து விழும் பால் வெள்ளைச் சுடுசோறைப் பார்க்கையில் நீ இந்நேரம் சாப்பிட்டிருப்பாயா என்ற யோசனையில் சுடுசோறு ஆறிவிடுகிறது.

உனக்கு நாக்கு இழுத்துக்கொண்டது என்று ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வந்தபோது ராஜா சொன்னான். காலுக்கடியில் பூமி நழுவி, நாக்குழறி, தலை சுற்றி தண்டவாளத்தில் வீழ்ந்தேன். எல்லா ரயில்களும் என் மீது ஏறி இருந்தாலும் உறைத்திருக்காத நிலை அது. 'அட அதெல்லாம் ரெண்டு நாளில் சரியாயிடுச்சிப்பா. இதுக்கே மயங்கிட்டா எப்படி. அவருக்கு வயசாவுதுங்கறத அவரும், நீயும் மறந்துடுறீங்கடே' என்ற ராஜாவிடம் 'அவரு யுலிஸஸ்டா...! ரெஸ்ட்லெஸ் ஸ்பிரிட்டா... அவருக்கு எதுனா ஒண்ணுன்னா சத்தியமா எனக்கு உலகம் இல்லைடா' என்று கதறிக்கொண்டிருந்தேன். மொத்த ரயில் நிலையமும் என்னை வேடிக்கை பார்த்தது.

உன்னோடு பேசியும், கடிதங்கள் எழுதியும் வருடங்கள் ஆகிவிட்டன. உன்னிடமிருந்து கடிதங்களும், மூலநோய்க்கான லேகியமும், முதலூர் அல்வா பார்சல்களும், விநாயகர் கோவில் விபூதியும் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. அதுபோலவே நான் அனுப்பும் பணவிடையும் உங்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கலாம். எழுதுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும் உங்களைச் சுற்றி நிகழும் மாற்றங்களையாவது எனக்கு எழுதி வருவது கண்ணுக்குத் தெரியாத இழைகளைக் கொண்டு என்னை ஊருடன் பிணைக்கச் செய்வதற்கான முயற்சி என்பதை நானறிவேன். 'எத்தனைச் சம்பாத்தியம் வந்தாலும் வெளியூரில் நீ அன்னியனும் பரதேசியும்தானே' என்பதைத்தான் உங்கள் கடிதங்கள் குறிப்பால் உணர்த்துகின்றன.

நான் இடது கையால் அவ்வப்போது சிப்ஸ்களை கொறித்துக்கொண்டு, ஈரம் நிரம்பிய கோயம்புத்தூர் காற்றை அனுபவித்துக்கொண்டு கணிணி தட்டிக்கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் நீ திசையன்விளை பேருந்து நிலையத்திலோ, உடன்குடி பேருந்து நிலையத்திலோ சாத்தான்குளத்திற்குச் செல்லும் கடைசிப் பேருந்திற்காய் காத்திருந்து கொண்டிருப்பாய். கடந்து செல்லும் காவலன் "யாருய்ய்யா அது?" என விசாரிக்க 'வியாபாரிங்கய்யா' என பவ்யமாகச் சொல்லி அமைதி காப்பாய். அவன் வம்படியாக பத்து ரூபாயையோ அல்லது ஒரு டஜன் தீப்பெட்டியையோ பிடுங்கிச் செல்வான். அன்றைய தினத்தின் சம்பாத்தியத்தில் சாத்தானுக்கு பங்கு கொடுக்க நேர்ந்ததை எண்ணி வருந்தும் வேளையில் "சாத்தான்குளம்" எனும் போர்டு அணிந்த பஸ் நுழைந்தால் சுமைகளோடு ஓடி ஏறி இடம்பிடித்து ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து மகன் இந்நேரம் தூங்கி இருப்பானா என்ற கவலையோடு பயணிக்கத் துவங்கி இருப்பாய். உன் கவலைகள் வீணாக வேண்டாம். நான் உறங்கச் செல்கிறேன்.

Monday, July 13, 2009

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்

கவிஞர் மயூரா ரத்தினசாமி என் முதுகிற்குப் பின்னால்தான் இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஏர்வாடியில் இருந்து ஹரிகிருஷ்ணன் வரவேண்டி இருந்திருக்கிறது. என் அறையிலிருந்து பத்து கட்டிடங்கள் தாண்டி மயூரா ரத்தினசாமியின் அச்சகம் இருக்கிறது. இத்தனை நாள் தெரியாது போனது துரதிர்ஷ்டமே. அவரது ‘நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்’ தொகுப்பினை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

***

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசனின் இயக்குனர் திரு.ஸ்ரீதரன் ஒரு தமிழர் என்று தொடந்து உள்ளூர் பத்திரிகைகள் எழுதி வருவது எதனால் என்று தெரியவில்லை. அவர் கேளராவின் கருகாபுத்தூர் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெயரே ‘இலத்துவலப்பில் ஸ்ரீதரன்’ என்பதுதான்.

***

அப்துல்லாவை அழைத்தால் ‘என்ன பாடுறது...’ பாடலை வெல்கம் ட்யூனாக வைத்திருக்கிறார். அவரது சமீபத்திய திரைப்பிரவேசம் தெரிந்தவர்களுக்கு அந்த வெல்கம் ட்யூனின் மெல்லிய நகைச்சுவை புரியும். அவர் அடுத்தடுத்து மாற்றிக்கொள்ள என் சார்பில் சில பாடல்களை சிபாரிசு செய்கிறேன்...
பாட்டுப் பாடவா பாட்டுக் கேட்கவா..
பாட்டு ஒண்ணு நா பாடட்டுமா...
பாட்டாலே புத்தி சொன்னா...
பாடவா என் பாடலை...
நான் பாடும் பாடல்...
பாடும்போது நான் தென்றல் காற்று...
என்னைப் பாடச் சொல்லாதே...
பாடறியேன் படிப்பறியேன்...
ரசிகமகா ஜனங்களும் பாட்டாய் துவங்கும் பாடல்களை அவருக்காக சிபாரிசு செய்யலாம்.

***

சுயமுன்னேற்றப் பயிலரங்குகளில் அமர ஒருபோதும் விரும்புபவனல்ல நான். ஆனாலும், தொடர்ந்து பல பயிலரங்குகளுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறேன். ஏவனாவது ஒரு அங்கி அணிந்த மந்திரவாதி, கோல் செட்டிங், இண்டிஜூவல் எஃபெக்டிவ்னஸ் என்று என்னை சாவடிக்கிறான்.

சமீபத்தில் ஒரு பயிலரங்கில் வினாத்தாள்கள் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள்...

பெர்மணண்ட் கோல் – மனிதனாக வாழ்வது

புரொபஷனல் கோல் – மனிதனாக வாழ்வது

சோஷியல் கோல் – மனிதனாக வாழ்வது

ஸ்பிரிட்ஜூவல் கோல் – கடவுளை மனிதர்களுக்காக செயலாற்ற வைப்பது – என்று நிரப்பிக் கொடுத்தேன்.

***

நான் தாலி எடுத்துக்கொடுத்தால்தான் கல்யாணம் என்று சங்கல்பம் செய்திருந்த நண்பர் அமர்நாத்தின் திருமணம் கூடுவாஞ்சேரியில் நிகழ்ந்தது. ஒருநாள் மின்னல் பயணமாக ஞாயிறன்று சென்னை வந்து திரும்பினேன். கன்னட பிராமண முறைப்படி நிகழ்ந்த அத்திருமணத்தில் மணமகளின் தலையலங்காரத்தில் முன் நெற்றியின் இருபுறமும் எலுமிச்சைப் பழங்கள் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. பார்க்க பெரிய மனுஷனாய் இருக்கிறானேயென்று பக்கத்தில் இருந்த பெரியவர் ஒருத்தரிடம் விளக்கம் கேட்டேன்.
“ஹி...ஹி...கேரா இருந்தா... புளிஞ்சு குடிக்கத்தான்”
இவனெல்லாம் கல்யாணத்துக்கு வரலன்னு... சரி விடுங்க.

Saturday, July 11, 2009

அருந்தமிழர் குடியிருப்பு, அண்ணா நகர்


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் வீரபாண்டியன். அவரது தந்தையோ தலையில் பாத்திரங்களைச் சுமந்து, வீதி வீதியாய்த் திரிந்து விற்கிற ஏழைக் குடியானவர். வறுமை பிடுங்கித் திங்கும் வாழ்க்கை. மதுரை மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்த வீரபாண்டியனுக்கு படிப்பதைத் தவிர்த்து ஏராளமான கடமைகள் இருந்தன. துப்புரவுப் பணிகளைச் செய்வது, புரோட்டா கடைகளில் வேலை பார்ப்பது வரை எண்ணற்ற சிறு சிறு வேலைகளைச் செய்துதான் பள்ளிப்படிப்பைத் தாண்டியாக வேண்டி இருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 963 மதிப்பெண்களும், புவியியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்றார் வீரபாண்டியன். வீரபாண்டியின் வறிய நிலையைக் கேள்வியுற்ற அன்றைய முதல்வர் கருணாநிதி அவரது கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். கூடுதலாக, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கல்வி உதவித் தொகையாகவும் வழங்கினார். அன்றைய தினங்களின் பரபரப்புச் செய்தியாக வீரபாண்டியன் அடிபட்டார். தன்னைச் சூழ்ந்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு "ஐ.ஏ.எஸ்" ஆவதே என் லட்சியம் என்றார். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஊடகங்களுக்கு முன் "மருத்துவம் படித்து மக்கள் சேவை ஆற்றுவேன்" என்கிற ரீதியில் சூளுரைப்பது வழமைதானே...?!

லயோலாவில் பி.ஏ - சோசியாலஜி வகுப்பில் சேர்ந்த வீரபாண்டியனுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது ஆங்கிலம். மாநகராட்சி மாணவன் ஆங்கிலம் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். கல்லூரிக் காலம் முழுவதும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதிலும், ஆங்கிலப் புலமை பெறுவதிலும் முனைப்பாக இருந்தார் வீரபாண்டியன். கல்லூரிப் படிப்பை முடித்து அரசு ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். அகாடமியில் படித்துக்கொண்டிருக்கும்போதே வேறு பல இடங்களில் பகுதி நேரமாக வகுப்புகள் எடுக்கவும் செய்தார். என்ன செய்வது வயிற்றையும் கழுவியாக வேண்டுமில்லையா?!

மூன்று முறை முதன்மைத் தேர்வு எழுதி தோல்வி! இரண்டு தடவை நேர்காணல் வரை சென்று தோல்வி! வேறு யாராவது இருந்தால், இருக்கிற பிரச்சனைக்கு ஏதாவது பேங்க் எக்ஸாம் எழுதி கிளார்க் ஆகியிருப்பார்கள். முடிந்தவரை முயற்சிப்பதா முயற்சி?! எடுத்த காரியத்தை முடிக்கும் வரை முயற்சிப்பதல்லவா முயற்சி. இதோ ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து, பயிற்சிக்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு ரயில் ஏறிக்கொண்டிருக்கிறார் வீரபாண்டி!

மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று அக்னிச் சிறகுகளில் படித்திருக்கிறேன். ஆசை மட்டும் இருந்தால் ஆச்சா?! மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சாரென அயராத ஒன்பது வருட உழைப்பு நிறைவேற்றி வைத்திருக்கிறது. தக்க சமயத்தில் அவருக்குப் பொருளுதவி செய்த தமிழக முதல்வருக்கும், தன் மகனின் கனவைக் கலைக்காத பெற்றோருக்கும், அவருக்கு சிறு சிறு பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கும், தன் மீது நம்பிக்கையளித்தவர்களுக்கு வெற்றியைப் பரிசளித்த வீரபாண்டியனுக்கும் அழுத்தமான பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன். சற்றே தாமதமாக...

Sunday, July 5, 2009

ராயல் சல்யூட்!


நாடோடிகள் பார்க்க பெரும் ஆவல்! காரணம் சசிகுமாரோ, சமுத்திரக்கனியோ அல்ல. அபிநயா! வாய் பேச முடியாத அந்த தேவதையின் முதல் படம். படத்தைப் பார்த்த எவருக்கும் அபிநயா வாய் பேச முடியாதவர் என்ற சந்தேகம் வர கடுகளவும் வாய்ப்பில்லை. தேர்ந்த இயக்கத்திற்கும், திறமையான நடிப்பிற்கும் ஒரு ராயல் சல்யூட்!

தாத்தா பெயர் தெரியாத மகள், பாட்டன் பெயர் தெரியாத தகப்பன், பூட்டன் பெயர் தெரியாத பாட்டி... வேர்களைத் தேடும் கதாநாயகன் தன் பூட்டன் பெயர் ரங்கா என்றும் அவர் பர்மாவிலிருந்து வந்தவர் என்று சொல்லும்போது தியேட்டர் அதிர்கிறது. படத்தின் துவக்க காட்சியிலே என்னுடைய ஆதார பிரச்சாரங்களுள் ஒன்றான 'குடும்ப வரலாறு அறிதல்' குறித்த அருமையான, அழுத்தமான பதிவு இருந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியளித்தது. மீண்டும் ஒரு ராயல் சல்யூட்!

மத்திம வயதைக் கடந்த எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஒரு காதல் ஜோடிக்காவது உதவி செய்த அனுபவம் இருக்கும். பேயோட்டம் ஓடி, பேருந்தை மறித்து, புதுமண தம்பதிகளை பஸ் ஏற்றி, அடுத்த நொடியிலே தங்கச் சங்கிலி, கைவசம் இருக்கிற பணமெல்லாம் கொடுத்து அப்பாடா என பெருமூச்செறியும் காட்சியில் கண்ணீர் துளிர்த்தது. சசிகுமாரின் யதார்த்த நடிப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்!

சின்னமணி கதாபாத்திரம் ராமநாதபுரம் வள்ளலை மனதில் வைத்துப் பின்னப்பட்டது போலத் தோன்றுகிறது. சிறுபத்திரிகைகளில் 'பிம்ப அரசியல்' என்று சிக்கல் பண்ணுகிற சமாச்சாரத்தை எத்தனை கேலி செய்திருக்கிறார்கள்?! வெடிச்சிரிப்பு காட்சிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!

மிஷ்கின் கூட்டணி இல்லாமலும் ஜெயக்கொடி நாட்டமுடியும் என நிரூபணம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர். 'சம்போ சிவ சம்போ' நாடி நரம்புகளை முறுக்கேற்றுகிறது. படத்திற்கு ஒரு குத்துப்பாட்டு எனும் டெம்ப்ளேட்டில் இருந்து சீக்கிரம் தப்பிக்க ஐநாக்ஸ் அய்யனார் அருள் புரிய வேண்டும். பின்னணி இசை பலரும் சொல்வது போல ஏ க்ளாஸ்! அதற்கும் ஒரு ராயல் சல்யூட்!

கோவிலில் பார்த்து தகவல் சொன்னதும் "வாம்மா மின்னல்" மாதிரி பட்னு கிளம்பும் பெண்ணை இப்படியா கையை, காலை இழந்து கடத்துவது?! அரும்பாடுபட்டு சேர்த்து வைத்தார்கள் என்கிற ஓரே காரணத்திற்காக இரண்டு பேரும் பிடிக்கவில்லையென்றாலும் கூட வாழ்ந்தேதான் தீரவேண்டுமா?! ஒரு காதில் அடிபட்ட பரணிக்கு ஏன் இரண்டு காதிலும் பஞ்சை வைத்து அடைக்கிறார்கள்?! இருதரப்பு அரசியல் அழுத்தமும் இருக்கிற குற்றவாளிகளை காவல்துறை இத்தனைக் கண்ணியமாகவா விசாரிக்கும்?! என்பது மாதிரியான எனது முந்திரிக்கொட்டை கேள்விகளைத் திரைக்கதையின் விறுவிறுப்பும், பரபரப்பும் முழுங்கித் தின்றுவிடுகிறது. ராயல் சல்யூட் பாலோஸ்...!

சசிக்குமாரின் தனிப்பட்ட நட்பினால் ஒருத்தி காதலனை இழக்கிறாள், ஒருவன் காலை இழக்கிறான், மற்றொருவன் கேட்கும் திறனை இழக்கிறான், பாட்டி உயிரை இழக்கிறாள், அனைவரது பெற்றோர்களும் நிம்மதியை இழக்கிறார்கள், காவல்துறைக்கும் அடியாட்களுக்கும் அவதி....கூடா ஒழுக்கம் கேடாய் முடியும் என்பதுதான் படத்தின் சப்-டெக்ஸ்டாக எனக்குப் படுகிறது.

எந்த படத்தையும் திருட்டு விசிடியில் மட்டுமே பார்க்கும் என் நண்பரொருவர் 'நாடோடிகள்' கிடைக்கவில்லையென அங்கலாய்த்தார். என்னய்யா காரணம் என்றால், "நல்ல படங்களை தியேட்டரில் போய் பாருங்க சார்" அப்படின்னு ரெகுலர் சப்ளையர் சொல்லிட்டானாம். கடுமையான சட்டங்களால் ஒருபோதும் திருட்டு விசிடியைத் தடுக்க முடியாது. நல்ல படங்கள் மட்டுமே அதைச் செய்யும். சசிகுமார், சமுத்திரக்கனி போன்ற நல்லசினிமாவின் நண்பர்கள் அதைச் சாதிப்பார்கள்