அருந்தமிழர் குடியிருப்பு, அண்ணா நகர்


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் வீரபாண்டியன். அவரது தந்தையோ தலையில் பாத்திரங்களைச் சுமந்து, வீதி வீதியாய்த் திரிந்து விற்கிற ஏழைக் குடியானவர். வறுமை பிடுங்கித் திங்கும் வாழ்க்கை. மதுரை மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்த வீரபாண்டியனுக்கு படிப்பதைத் தவிர்த்து ஏராளமான கடமைகள் இருந்தன. துப்புரவுப் பணிகளைச் செய்வது, புரோட்டா கடைகளில் வேலை பார்ப்பது வரை எண்ணற்ற சிறு சிறு வேலைகளைச் செய்துதான் பள்ளிப்படிப்பைத் தாண்டியாக வேண்டி இருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 963 மதிப்பெண்களும், புவியியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்றார் வீரபாண்டியன். வீரபாண்டியின் வறிய நிலையைக் கேள்வியுற்ற அன்றைய முதல்வர் கருணாநிதி அவரது கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். கூடுதலாக, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கல்வி உதவித் தொகையாகவும் வழங்கினார். அன்றைய தினங்களின் பரபரப்புச் செய்தியாக வீரபாண்டியன் அடிபட்டார். தன்னைச் சூழ்ந்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு "ஐ.ஏ.எஸ்" ஆவதே என் லட்சியம் என்றார். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஊடகங்களுக்கு முன் "மருத்துவம் படித்து மக்கள் சேவை ஆற்றுவேன்" என்கிற ரீதியில் சூளுரைப்பது வழமைதானே...?!

லயோலாவில் பி.ஏ - சோசியாலஜி வகுப்பில் சேர்ந்த வீரபாண்டியனுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது ஆங்கிலம். மாநகராட்சி மாணவன் ஆங்கிலம் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். கல்லூரிக் காலம் முழுவதும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதிலும், ஆங்கிலப் புலமை பெறுவதிலும் முனைப்பாக இருந்தார் வீரபாண்டியன். கல்லூரிப் படிப்பை முடித்து அரசு ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். அகாடமியில் படித்துக்கொண்டிருக்கும்போதே வேறு பல இடங்களில் பகுதி நேரமாக வகுப்புகள் எடுக்கவும் செய்தார். என்ன செய்வது வயிற்றையும் கழுவியாக வேண்டுமில்லையா?!

மூன்று முறை முதன்மைத் தேர்வு எழுதி தோல்வி! இரண்டு தடவை நேர்காணல் வரை சென்று தோல்வி! வேறு யாராவது இருந்தால், இருக்கிற பிரச்சனைக்கு ஏதாவது பேங்க் எக்ஸாம் எழுதி கிளார்க் ஆகியிருப்பார்கள். முடிந்தவரை முயற்சிப்பதா முயற்சி?! எடுத்த காரியத்தை முடிக்கும் வரை முயற்சிப்பதல்லவா முயற்சி. இதோ ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து, பயிற்சிக்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு ரயில் ஏறிக்கொண்டிருக்கிறார் வீரபாண்டி!

மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று அக்னிச் சிறகுகளில் படித்திருக்கிறேன். ஆசை மட்டும் இருந்தால் ஆச்சா?! மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சாரென அயராத ஒன்பது வருட உழைப்பு நிறைவேற்றி வைத்திருக்கிறது. தக்க சமயத்தில் அவருக்குப் பொருளுதவி செய்த தமிழக முதல்வருக்கும், தன் மகனின் கனவைக் கலைக்காத பெற்றோருக்கும், அவருக்கு சிறு சிறு பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கும், தன் மீது நம்பிக்கையளித்தவர்களுக்கு வெற்றியைப் பரிசளித்த வீரபாண்டியனுக்கும் அழுத்தமான பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன். சற்றே தாமதமாக...

Comments

பாராட்டுக்கள் .. விடாக்கொண்டற் வீரபாண்டிக்கு..
RRSLM said…
வீரபாண்டியன் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். மேலும் மேலும் அவர் வாழ்வில் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்.
பதிவிற்க்காக செல்வேந்திரனுக்கு எமது நன்றி.
செல்வா,

நல்ல பதிவு.

விடா முயற்சிக்கு ஒரு நல்ல உதாரணம்...

பிரபாகர்....
Unknown said…
வீர பாண்டியன் சாருக்கு என் வாழ்த்துக்கள்...!!!

வாழ்க வளமுடன்....!!


இது போல கஷ்ட்டப்பட்டு வாழ்வில் முன்னேறியவர்கள் நமக்கு அதிகாரிகளாக கிடைப்பது நம் பெருமை...!! அவர்களுக்குத்தான் தெரியும் வாழ்க்கையின் அழகு...!!!
செல்வேந்திரன்,
அருமையான பகிர்வு.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
பகிர்விற்கு நன்றி செல்வா.. வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் :))
இளைஞர்களை ஊக்கிவிக்கும் பதிவு.
பதிவின் உள்ளே எதிர் கால ஐ. ஏ . எஸ் ஒளிந்திருக்கிறாரோ ? :)

ஸ்வாமி ஓம்கார்
selventhiran said…
சூரியன், ஆர்.ஆர், பிரபாகர், லவ்டேல், அகநாழிகை, சென்ஷி வருகைக்கு நன்றி!

ஸ்வாமி, ஐ.ஏ.எஸ் ஆசையெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது. வெறும் ஆசையாக மட்டுமே இருந்ததால் நீர்த்துப்போய்விட்டது.
சாத்துறா தம்பி
நல்ல பகிர்வு..
மாசிலன் said…
வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள். இருப்பினம், நான் இங்கு பொதுவாக‌ சொல்ல வருவது யாதெனில், சிறுபான்மையினர்கள் அதிலும் மிக முக்கியமாக சாதி ரீதியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது இந்திய‌ சமூகமானது போட்டு பின்னி தைத்து வைத்து முன்னேறவிடாமல் மூச்சையடைக்கும் பாழும் வலையில் இருந்து தப்பித்து வெளி வருவதற்கு ஒரே வழி இது போன்ற ஐ.ஏ.எஸ் படிப்பு மட்டும்தான் என்கிற இலட்சிய கனவினை பரப்புவது மிகவும் ஆபத்தானதே என்பதுதான். வேறு பலதரப்பட்ட தொழிற்துறைகளிலும், வியாபார துறைகளிலும், விளையாட்டுத்துறைகள் போன்ற எண்ணற்ற துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் சாதீய வலைகளிலிருந்து தப்பித்து முன்னேறவும் வழிகள் உண்டு என்பதனையும் இவ்வகை மக்களுக்கு அறியக்கொடுத்தல் நன்று. அனைவராலும் வீரபாண்டியன்போல் வைராக்கியத்துடன் உழைப்புடன் கூடிய சீரிய படிப்பால் முன்னுக்கு வர முடியாது. இவரைப்போன்ற வேறுவகை மனிதர்களுக்கு வேறுவகை திறமைகள் இருக்கலாம். அந்தந்த திறமைகளுக்கேற்ற துறைகளில் அவரவர் தத்தம் முன்னேற்ற பாதைகளை தேடியமைத்து சாதிமத வலைகளிலிருந்து விடுபடும் முறைகளும் இருக்கின்றன என்பதனை தெரியவைத்து ஊக்கப்படுத்தவேண்டும். பதிவிற்கு மிக்க நன்றி.
வீரபாண்டிக்கு.. பாராட்டுக்கள், a living example for விடா முயற்சிக்கு
Unknown said…
தாமதமாய் என்றாலும்
தரமான பதிவு.
நல்ல பதிவுண்ணே !

ஐ .ஏ. எஸ். ஆகிருந்தாக் கூட இம்புட்டு பேருக்கு உங்களைத் தெரிஞ்சிருக்குமான்னு தெரியல
முடியலத்துவம் எல்லா கட்டத்துலயும் வாறதுதான...
திராணி வேற
தெய்வம் வேறடாம்பாரு எங்க அய்யா......
ஏதும் கூடப் பேசிருந்தா கோவிச்சுகுறாதீக..
Thamizhan said…
உழைப்பும் ,ஊக்கமும் தடைக்கற்களை உடைத்தெரியும் உளிகள்.
வளரட்டும் வீரபாண்டியர்களும்,முக்கியமாகப்
பெண்குலத்து வீராங்கணைகளும்.
இது எங்கோ நிலவும் நிகழ்வுகளாக இல்லாமல் அங்கங்கே நிகழப் படித்து,பதவியில் இருக்கும் நம்மைப் போன்ற பலர் தங்கள் நன்றிக் கடனாக ஒருவரையாவது முன்னேற்றிவிட வழி வகுப்போம்.
தமிழகத்தில் அவருக்கு போஸ்டிங் போட்டா கல்விக்கு கண்டிப்பா நிரைய செய்வாருன்னு நம்புறேன்!
Thamiz Priyan said…
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்... பகிர்வுக்கு நன்றி செல்வா!
\\\அன்றைய தினங்களின் பரபரப்புச் செய்தியாக வீரபாண்டியன் அடிபட்டார். தன்னைச் சூழ்ந்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு "ஐ.ஏ.எஸ்" ஆவதே என் லட்சியம் என்றார். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஊடகங்களுக்கு முன் "மருத்துவம் படித்து மக்கள் சேவை ஆற்றுவேன்" என்கிற ரீதியில் சூளுரைப்பது வழமைதானே...?!////

வீரபாண்டியன் அவர்களுக்கும் உங்கள் Follow up க்கும் பாராட்டுக்கள்
அவருக்கு பள்ளிக்காலத்தில் இருந்து உறுதுணையாய் இருந்து, தேர்வுகளுக்கு அவர் தயாரிப்பில் ஈடுபட்டிக்கொண்டிருந்த போது அவருக்கு பல உதவிகளையும் செய்த அவரது மாமா பொண்ணும் பாராட்டுக்குறியவர் . சமீபத்தில் இருவரும் தூய தமிழ் முறையில் திருக்குறள் படித்து, திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.
Thamira said…
வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள்.! பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றி.!

முடிந்தவரை முயற்சிப்பதா முயற்சி?! எடுத்த காரியத்தை முடிக்கும் வரை முயற்சிப்பதல்லவா முயற்சி.// வரிகள் அழகு.!
நல்ல பகிர்வு அண்ணே
Sukumar said…
நண்பர் வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள்.... கல்லூரி நாட்களில் அவரை பார்த்திருக்கிறேன்.... அவரது உழைப்புக்கும் முயற்சிக்கும் பல சிகரங்களை அடைய வாழ்த்துகிறேன்....
அண்ணன் செல்வேந்திரனுக்கு நன்றி.....!
செல்வேந்திரன்,

இப்படி கஷ்டப்பட்டு உழைத்து முன்னேரியவரை அறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு முதலில் நன்றி...

வீரபாண்டியன் அடிதள மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துவோம் !

திருகுறள் படித்து திருமணம் முடித்த அவருக்கு ஒரு சொட்டு!!!


நட்புடன்,
மறத்தமிழன்.
selventhiran said…
ரமேஷ் அண்ணா, தீப்பெட்டி, மாசிலன், நியாஸ், செல்வராஜ் ஜெகதீஸன், நேசமித்திரன், தமிழன், மங்களூர், வால், தமிழ் பிரியன், நாஞ்சில், ஜோசப், ரெட்மகி, சுகுமார், மறத்தமிழன், வருகைக்கும் அபிப்ராயங்களுக்கும் நன்றிகள்!

ஆமுகியண்ணே, அவ்வரிகள் கவிதாசன் அடிக்கடி பிரயோகிப்பது.
Anonymous said…
//மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று அக்னிச் சிறகுகளில் படித்திருக்கிறேன். ஆசை மட்டும் இருந்தால் ஆச்சா?! மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சாரென அயராத ஒன்பது வருட உழைப்பு நிறைவேற்றி வைத்திருக்கிறது. தக்க சமயத்தில் அவருக்குப் பொருளுதவி செய்த தமிழக முதல்வருக்கும், தன் மகனின் கனவைக் கலைக்காத பெற்றோருக்கும், அவருக்கு சிறு சிறு பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கும், தன் மீது நம்பிக்கையளித்தவர்களுக்கு வெற்றியைப் பரிசளித்த வீரபாண்டியனுக்கும் அழுத்தமான பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன்.//

Exactly!!!

//அவருக்கு பள்ளிக்காலத்தில் இருந்து உறுதுணையாய் இருந்து, தேர்வுகளுக்கு அவர் தயாரிப்பில் ஈடுபட்டிக்கொண்டிருந்த போது அவருக்கு பல உதவிகளையும் செய்த அவரது மாமா பொண்ணும் பாராட்டுக்குறியவர் .//

That support and determination should have been the pillar of strength for him.
Intha sethiyai veliyitta thiru.Selventhiran avarkalukkum, vaazhthiya anaivarukkum en nencharntha nandrikal...

Nandriyudan
Ga. Veerapandian