Thursday, January 30, 2014

பிழைத்தலெனும் பெரும் திறன்

காலச்சுவடு புத்தாண்டு சிறப்பிதழை வாசித்துக் கொண்டிருந்தவன் துள்ளிக் குதித்தேன். தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக அ.முத்துலிங்கம் கோவை வருகிறார் எனும் செய்தி அதிலிருந்தது. மகுடேஸ்வரனின் வார்த்தைகளில் சொல்வதானால் என்னை நக்கி நகர்ந்த நாயாக அல்லாமல் செத்து விழுந்த ஈயாகச் செய்யக்கூடிய எழுத்தாளர்களுள் அவரும் ஒருவர். எந்த தமிழிலக்கிய வாசகனும் அவரோடு உரையாடும் நாளுக்காக ஆவலோடு காத்திருப்பான். லேப்டாப் டேபிளுக்கு பாய்ந்து உங்களை நான் சந்தித்தே ஆகவேணும். ஸ்டீபன் ஜோசப் ஹார்பரிடமிருந்து கூட சிபாரிசு கடிதம் வாங்கி வர சித்தமாக இருக்கிறேனென மின்னஞ்சல் அனுப்பினேன்.

பிறகு மணிக்கொரு தரம் ரிப்ளை வந்திருக்கிறதா என மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். அ.மு எழுத்தாளர்களை எப்படியெல்லாம் துரத்திப் பிடித்து சந்திப்பாரென்பது ‘வியத்தலும் இலமே’ வாசித்தவர்களுக்குத் தெரியும். நானும் அவரை சந்திக்க என்னவெல்லாம் செய்யலாமென யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து வாசிப்பவன் ஒருவகையில் அவரை உளவு பார்க்கிறவனாகிறான். எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர்களிடம் துப்பு துலக்கியதில் அவர் பாஸ்டனில் அப்ஸராவுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றார்கள். என் உளவுப்படை பாஸ்டனில் அவர் பாலாவின் காரை டிரையல் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதுவரை அப்-டேட் செய்தார்கள். ஒருவேளை பதிலேதும் வராவிட்டால் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கலாமா என ரெஸிடென்ஸி வரை ஒரு எட்டு போய் நோட்டம் விட்டு திரும்பினேன். ’உனக்கு கிறுக்காலே’ என்றாள் திரு. அதானே என ஆமோதிக்கும்படி பார்த்தாள் இளவெயினி.

57வது தடவையாக மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது மெயில் வந்திருந்தது. அவரால் கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தெரிவித்திருந்தார். ஒரு ரன் வித்தியாசத்தில் மேட்ச் தோற்றது போல் ஆகிவிட்டது. இதற்கிடையில், விஷ்ணுபுரம் குண்டர்கள் அவரைக் கடத்திக்கொண்டு போய் ஒரு ஹெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து இலக்கியம் பேசியே இம்சையைக் கூட்டுவோமென நம்பியார் ஸ்டைலில் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார்கள் என்பது தனிக்கதை.

ரொம்பவும் ஏமாற்றமாகப் போய்விட்டது. அவரோடு உரையாடிய உணர்வு கிடைக்கட்டும் என்பதற்காக ‘அங்கே இப்போ என்ன நேரம்?’-ஐ முப்பதாவது தடவையாக வாசிக்கத் துவங்கினேன். மனக்கவலைகளை மறக்கச் செய்வதும், புதிய மனக்கவலைகளை உண்டு பண்ணி விடச் செய்வதும்தானே முத்துலிங்கத்தின் எழுத்துக்கள். பறிப்பாரற்ற காட்டுப்பலா மாதிரி இத்தொகுதியில் ஒரு மகத்தான சிறுகதையொன்று கிடக்கிறது. எடுத்து வாசிக்கும்தோறும் மேலும் கொஞ்சம் ஒளியைக் கூடுதலாகக் கசியவிடும் அக்கதையின் பெயர் ‘யேசு மாதா போன்ற முகம்’. அவரது சிறுகதைகள் தொகுப்பில்தான் இது வந்திருக்க வேண்டும். அவரது எல்லா கட்டுரைகளுமே சிறுகதைகள்தானே என்றாள் திரு. அதுவும் சரிதான்.

‘தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்’ என்பது கருத்தரங்கில் அ.மு பேச வேண்டிய தலைப்பு. அவரது உரையினை வீடியோவில் பேசி அனுப்பியிருப்பார் போல. அதை மாலன் பகிர்ந்திருந்தார். ‘பிழைத்துக் கிடப்பதே பெரும் தற்செயல்!’ என ஒருமுறை ட்வீட்டியிருந்தேன். இந்த உரையும் அதைத்தான் சொல்கிறது.

Tuesday, January 28, 2014

சிவிங்கிப்புலி

1939-ல் இரண்டு அமெரிக்க இளைஞர்கள் இந்தியா வந்தனர். வருகையின் நோக்கம் இந்திய குறுநில மன்னர்களின் ஏகபோக ராஜபோக வாழ்வு முறையினை புகைப்படங்கள், காணொளிகள் மூலம் நேசனல் ஜியாகிரஃபிக்காகப் பதிவு செய்வதே. இந்தியாவெங்கும் அவர்கள் அலைந்து திரிந்து எடுத்த ஆவணப்படங்கள் ‘Life with an Indian Prince' எனும் பெயரில் வெளியாயின.

சிவிங்கிப்புலிகளையும், வல்லுறுகளையும் பழக்கப்படுத்தி வேட்டையாடுவது ராயல் குடும்பத்து இளவட்டங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. சிவிங்கிப்புலிகளைப் பயன்படுத்தி சமவெளி மான்களை வேட்டையாடும் இந்த காணொளி இணையத்தில் பார்க்கக் கிடைக்கிறது. சிவிங்கிப்புலியின் கண்களைக் கட்டி, உடலைக் கயிற்றால் பிணைத்து அதன் சுயவேட்டை சுடுகறியை அபகரிக்கிற காட்சியோடு காணொளி முடிகிறது. சுரண்டல் என்று வந்து விட்டால் இந்திய மன்னர்கள் மனிதன், விலங்கு என்ற பாகுபாடெல்லாம் பார்த்ததில்லை என நினைத்துக்கொண்டேன்.

இந்த இணைப்பில் அந்த அரிய வீடியோ உள்ளது

Monday, January 27, 2014

பொன்னின் நிறம்..பிள்ளை மனம்..

ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறை முடிந்து ஆறாம் வகுப்பு துவங்கும் முதல் நாள். ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து ஒரே பெஞ்சில்  அமர்ந்து படித்த என் தோழர்களில் மூவரைக் காணவில்லை. ஏ,பி இரண்டு செக்சனிலுமாக மொத்தம் 20 பேர்களுக்கு மேல் வரவில்லை.  முருகேச வாத்தியார் கடும் கோபக்காரர் என்பதைக் கேள்விப்பட்டு வேறு பள்ளிக்கு மாறி இருப்பார்களென நினைத்துக்கொண்டேன். அப்படியில்லை என்பது மறுநாள் தெரியவந்தது. வாசகசாலைக்குச் செல்லும் வழியில் முத்துவைப் பார்த்தேன். அவனுக்கு சற்றும் பொருந்தாத சாரம் (கைலி) அணிந்திருந்தான். மண்ணால் செய்த இரண்டு மூன்று டம்ளர்களைக் கையில் வைத்திருத்தான். அதன் பெயர் குகை என்று பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். மாமாவின் பட்டறையில் சேர்த்துட்டாங்க. இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டேன் என்றான். மற்ற இருவருமே வெவ்வேறு பட்டறைகளில் சேர்ந்து விட்டார்களென்பதைப் புரிந்துகொண்டேன்.

அப்பா வறுமை காரணமாக எட்டாம் வகுப்பைத் தாண்டாமலே காசுக்கடைக்கு வேலைக்குப் போனவர். படிக்க முடியவில்லையே எனத் தான்பட்ட துயரத்தை பலமுறை எனக்கு விளக்கியிருக்கிறார். நண்பர்கள் பட்டறையில் சேர்ந்ததை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. முதல் இடைத் தேர்வு வரை அவர்கள் மீண்டும் வந்து சேர்ந்து விட மாட்டார்களா என மனம் ஏங்கியபடியே இருந்தது.

பிற்பாடு என் படிப்பே பத்தாம் வகுப்போடு அரோகரா ஆகி நாடு ஒரு நல்ல மருத்துவரை இழந்தது. தினசரி சோற்றுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்த நாட்களில், பட்டறைத் தோழர்கள் நக இடுக்கில் ஆட்டையைப் போட்டு வரும் சில்வாணத் தங்கத்தின் உபயத்தால் செழிப்பாகத் திரிவதைப் பார்த்து மலைத்தேன். தினமும் நாற்பது, ஐம்பது கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து வியாபாரம் முடித்து வீடு வந்து கணக்குப் பார்த்தால் முப்பது ரூபாய் கூட லாபம் மிஞ்சியிருக்காது. ‘யானை சாணி போடும்; எலி புழுக்கைத்தானலே போடும்’ என்பார் அப்பா. தங்கத் தொழிலும் அதன் லாபமும் யானையின் சாணியோடு ஒப்பிடப்பட்டது. மீன் கடையில் சீலாவும், இறைச்சிக்கடையில் தொடைக்கறியும், மாணிக்க நாடார் கடை சூடு பக்கோடாவும் ஆசாரிமார்கள் வாங்கியது போக மீதமிருந்தால் மற்றவர்களுக்கு எனும் நிலை உள்ளூரில் உருவானது. சரி நாமதான் உருப்படவில்லை. இவர்களாவது சின்ன வயதிலேயே தொழிலைக் கற்றுக்கொண்டு முன்னேறி இருக்கிறார்களே என சந்தோசப்பட்டேன்.

இன்று மீண்டும் நிலைமை தலைகீழ். தாய்த்தமிழகத்தின் பிற கைவினைஞர்களைப் போலவே இவர்களும் கைவிடப்பட்டார்கள். லட்சக்கணக்கான பொற்கொல்லர்கள் நிறைந்த தென்கோடி மாவட்டங்களில் பலருக்கும் தொழில் இல்லை. நகை உற்பத்தியில் எந்திரமயம்; குடிநாணயம் எனும் வார்த்தையே மெள்ள மறைந்து விளம்பரங்களில் வரும் பிரம்மாண்டமான நகைக்கடைகளை நாடும் மக்களின் மனநிலை; உச்சாணிக்கொம்பைத் தொட்டிருக்கும் தங்கத்தின் விலை; ஊர்ப்புறங்களில் விவசாயம் பொய்த்துப் போனது என கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான காரணங்கள். எல்லா கைத்தொழில்களும் கார்ப்பரேட்டுகளால் கைப்பற்றப்படும் காலம் வரும் எனத் தெரிந்திருந்தால் கவிமணி ’கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’ எனப் பாடியிருக்கவே மாட்டார். பரம்பரை பணக்காரர்களும், வெகு அரிதான வேலைப்பாடுகளைச் செய்பவர்களும் மட்டுமே பிழைத்துக் கிடக்கிறார்கள். வலசை போகும் பறவைகளைப் போல பிழைப்புத் தேடி தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்தபடி உள்ளனர். அதிகார மையங்களில் இவர்களுக்கென்று பேச இன்று ஒரு குரலே இல்லை.

நடப்பிதழ் விகடனில் எஸ்.செந்தில்குமார் எழுதிய ‘உமிக்கருக்கு’ சிறுகதை பள்ளியிலிருந்து பிடுங்கி பட்டறையில் நடப்பட்ட சிறுவர்களின் உலகைச் சித்தரிக்கிறது. தீ நாக்குகள் சுழலும் உமிச்சட்டியில் பழுத்துக்கிடக்கும் சிறிய குகைக்குள் உருகி ஒடத்துடிக்கும் ஒரு சொட்டுப் பொன் வெளிவந்ததும் தட்டி நிமிர்த்து வளைத்து சுழித்து நெளித்து கம்மலாய், வளையலாய், மூக்குத்தியாய், மோதிரமாய், தாலியாய், ஒட்டியாணமாய் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பிவிடும். அம்மாவிடமிருந்து மகளுக்கும், பாட்டியிடமிருந்து பேத்திக்கும், மாமனிடமிருந்து மச்சானுக்கும் வர்க்கத்தாய் கைமாறும். அவற்றிற்கொரு வாழ்வுண்டு. குகைச்சட்டிக்குள்ளிருந்து மீளவே முடியாதென்பதறியாமல் உமிக்கருக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள ஆலாய் பறக்கும் வணங்காமுடிகளின் சின்னஞ்சிறிய சோகங்கள் வாசக மனதில் பெரும்பாரத்தை ஏற்றி விடுகிறது.

கதையை இங்கே வாசிக்கலாம். 

வெள்ளிப்பனித்தலையர்
ஃப்ளோரிடாவின் புகழ் மிக்க குடியகங்களுள் (தண்ணியடிக்கிற பாரைத்தான் அப்படி மொழிப்படுத்தியிருக்கிறேன். கண்டுக்காதீங்க) ஒன்று ஸ்லாப்பி ஜோ. எண்பது வருட பழமையானது என்பதை விட நோபல், புலிட்ஸர் விருதுகளையெல்லாம் பெற்ற எர்னஸ்ட் ஹம்மிங்வே உட்கார்ந்து உபா அருந்திய கடை என்பதுதான் புகழ்வழுவாமைக்குக் காரணம். நீங்கள் சொல்ல வருவது சரிதான் ‘கிழவனும் கடலும்’ எழுதியவர்தான். தன் வாடிக்கையாளரின் நினைவைப் போற்றும் வகையில் 1981-ல் இருந்தே ஹெமிங்வேயைப் போலவே தோற்றமளிக்கும் வெள்ளித்தாடியர்களுக்கான போட்டி ஒன்றை நடத்தி வருகிறது ஸ்லாப்பி ஜோ. நடாத்தி என்றும் இலக்கியர்கள் இதை வாசிக்கலாம். உங்கள் செளகர்யம். சமீபத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட வெள்ளித்தாடியர்களின் படத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். தமிழிலக்கியத்தில் இதே மாதிரி ‘போலத் தோற்றமளிப்பவர்களுக்கான’ போட்டி நடத்துவதாக இருந்தால் உங்கள் சாய்ஸ் யார்?!

இந்த இணைப்பில் மேலும் சில புகைப்படங்கள்: http://www.buzzfeed.com/summeranne/13-modern-ernest-hemingways

Saturday, January 25, 2014

BLink

இன்றைய பிஸினஸ்லைன் நாளிதழுடன் BLink என்றொரு புதிய இணைப்பிதழ் வெளியாகியுள்ளது. அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய பிரிவுகளில் கட்டுரைகளைத் தாங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளிவரும்.

முதல் இதழே அட்டகாசமாய் இருக்கிறது. டாபுளாயிட் வடிவில்  துள்ளலான வடிவமைப்பில் 24 பக்கங்கள். இந்த இணைப்பின் ஆசிரியர் வீணா வேணுகோபால் பரந்து பட்ட வாசிப்பு கொண்ட இலக்கிய ஆர்வலர். அவரது would You Like Some Bread With That Book? புத்தக ஆர்வலர்களின் கவனம் பெற்ற நூல். ஒருவகையில் எனக்கு Ergo-ஐ திரும்ப வாசிக்க வாய்த்த மனநிறைவு.

இன்று பிரபலமாகி வரும் இலக்கியத் திருவிழாக்களை நடத்துவதன் சிக்கல்களை அலசும் ராஸ்மி பிரதாப்பின் கட்டுரையும், ஜெய்ப்பூர் இலக்கியத்திருவிழாவின் க்ளிஷேக்களை மென்பகடி செய்யும் நந்தினி நாயரின் கட்டுரையும் தவறவிடக்கூடாதவை.  ராஸ்மியின் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்: http://www.thehindubusinessline.com/features/blink/the-books-dont-tally/article5614144.ece

Friday, January 24, 2014

ஜோ டி குருஸூக்கு வாழ்த்து விழா


2013-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் நாவலாசிரியர் ஜோ டி குருஸ் அவர்களுக்கு நெய்தல் எழுத்தாளர்கள் ஒன்று கூடி விழா எடுக்கிறார்கள். பிப்ரவரி 1-ம் தேதி சென்னை  லயோலா கல்லூரி எம்.ஆர்.எஃப் அரங்கில் விழா நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்க இருக்கிறார்கள். ’முட்டம்’ நாவலாசிரியர் சிறில் அலெக்ஸ் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்.

Monday, January 13, 2014

இளவெயினி

என்னுடைய 22-வது வயது வரை நானும் அப்பாவும் சேர்ந்தே சைக்கிளில் சுற்றுவது வழக்கம். அப்பா ஓட்ட முன்பக்க பாரில் அமர்ந்து கொள்வேன். கேரியரில் ஒருநாளும் பயணித்ததில்லை. நண்பர்கள் கேலி செய்வார்கள். பொருட்படுத்தியதில்லை. கிழக்கே தச்சன்மொழி தேவாலயம் துவங்கி மேற்கே பழைய பேருந்து நிலைய காமராஜர் சிலை வரையுள்ள நெடிய சாலையில் இருபக்கங்களிலும் கடைகளைக் கொண்டிருப்பது எங்களூர் பஜார். காமராஜர் சிலை அருகே தூத்துக்குடி மாவட்டத்தின் மிக முக்கியமான நூலகங்களுள் ஒன்றான ராம. கோபால கிருஷ்ணபிள்ளை அரசு பொது நூலகம் இருக்கிறது.

சாயங்காலம் வாசகசாலைக்குச் சென்று கொஞ்ச நேரம் இதழ்களை வாசித்து விட்டு புத்தகங்களை மாற்றி விட்டு ரத்னா ஹோட்டலில் சூடாக சப்பாத்தியும், பாலும் சாப்பிட்டுவிட்டுத் திரும்புவது எங்கள் வழக்கம். வீட்டிலிருந்து கிளம்பினால், நூலகம் செல்லும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் எதிரில் வரும் எனக்கு வேண்டியவர்கள் முகமன் கூறியபடி, சிரித்தபடி, கையை ஆட்டியபடி செல்வார்கள். நானும் ஒரு கையை சற்றே தூக்கி வணக்கம் போன்ற ஒன்றை வைப்பேன். அவர்கள் யாரையும் அப்பாவிற்குத் தெரிந்திருக்காது. இயல்பில் மிக அமைதியானவர் என்பதால் அவரது நட்பு வட்டம் மிகச்சுருக்கமானது. எனக்கு முகமன் வைக்கும் நண்பர்களை ’இவர்கள் யாரென’ அப்பா விபரம் கேட்டபடியே வருவார். கதிரேசன் மகன் என்பதை விட செல்வேந்திரனின் அப்பா என்றுதான் அதிகமும் அறியப்படுகிறேன் என அடிக்கடிச் சொல்வார். புகார் ஒன்றுமில்லை. நானொரு சமூக மனிதனாய் இருப்பதில் அவருக்குச் சிறிய பெருமிதமும் இருந்தது.

250 குடும்பங்கள் வசிக்கும் என்னுடைய அடுக்ககத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இன்று நான் இளவெயினியின் தந்தையாகவே அறியப்படுகிறேன். அவளோடு மாலை நடை பயிலும்போது, பூங்காவில் விளையாடும் போது, ஷாப்பிங் செய்யும்போது திடீரென்று யாராவது முளைத்து ‘ஹேய் இளவெயினி... யார் இது உங்க அப்பாவா...’ எனக் கேட்டு விட்டுச் செல்கிறார்கள். கடையில் ‘சார் இது புட்டிங்ஸ்... பாப்பாவுக்கு இது புடிக்காது. ஜெல்லிதான் புடிக்கும்’ என்கிறான் சிப்பந்தி. அசோஷியேன் பிரசிடெண்ட் வீட்டு ஹாலிங் பெல்லை அழுத்தினால், கதவைத் திறந்த பெண்மணி உள்ளறையைப் பார்த்து ‘ஏங்க இளவெயினி அப்பா வந்திருக்காரு...உங்களைப் பார்க்க என்கிறார்..’ நியு இயர் ஈவ் செலிபிரேசனில் இளவெயினியிடம் அவளது தோஸ்த் ஒருத்தி மைக்கை கொடுத்து பாடச் சொல்ல ‘ஊதா கதரு திப்பன்..ஆது அப்பன்’ எனத் தயக்கமின்றி பாடுகிறாள். தினசரி இதுமாதிரி ஆச்சர்யங்கள் எனக்காகவே காத்திருக்கும். 22 வயதில் எனக்கிருந்த அறிமுகத்தை விட 2 வயதில் இளவெயினிக்கு இருக்கும் வட்டம் பெரிதாக இருக்கிறது.

அவள் வயதையொத்த பத்திருபது பிள்ளைகள் அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார்கள். பலரது பெயர்கள் என் வாயிலேயே நுழையாது. மகிதாவை தகிதா என்பேன். காதனாவை சாதனா என்பேன். ரெஜிதாவை சுஜிதா என்பேன். இளவெயினி கடுப்பாகி என்னைத் திருத்துவாள். புள்ளினங்களை பொத்தாம்பொதுவாக குருவி என்றோ காக்கா என்றோ அழைப்பதில்லை. கொக்கு, புறா, ஆந்தை, மைனா, குருவி, குயில், மயில் என இருபது பறவைகளைத் தனித்து அடையாளம் கண்டுகொள்வாள். இசையில் கடுமையான பிடிப்பு. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் குத்துப்பாடல்களிலும் துலங்கி வரும் வார்த்தைகளைக் கொண்டு அவளே ‘அம்மாடியோவ்...ஆத்தாடியோவ்..’ என இடுப்பை ஒடித்து ஒரு பாடலைப் பாடி காண்பிப்பாள். கானா பாலாவைப் பிடிக்கும் அளவிற்கு பிரதீப்பையும் கேட்பாள். சின்மயி குரலை தனித்து அடையாளம் கண்டு ‘அத்தப் பாட்டு’ என்பாள். புத்தக பின்னட்டையில் ஜெயனையோ, நாஞ்சிலையோ பார்த்தால் முறையே ’மாமா..தாத்தா’ என அடையாளம் கண்டுகொள்வாள். அவளது கதைகளில் புலிக்கு சைக்கிள் ஓட்டத்தான் தெரியும். எலியோ லாரியில்தான் எப்போதும் வரும். பூச்சிகளைத் துன்புறுத்த மாட்டாள். யாராவது அதட்டினால் ‘போடா/போடி’ என மரியாதையாக பதிலளிப்பாள். தாத்தா பாவம். தான் ஒருவள்தான் அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என உறுதியாக நம்புவாள். தாத்தாவை சாப்பிட வைப்பது, வாக்கிங் கூட்டிச் செல்வது, மாத்திரை டப்பா எடுத்துக் கொடுப்பதுவரை எல்லாம் சரிபார்த்த பின்னர்தான் உறங்கச் செல்வாள்.

அப்பாவின் செல்போனை நோண்டக்கூடாது. ஆனால், அம்மாவின் செல்போனில் தேங்கா எண்ணெய் ஊற்றலாம். அப்பாவின் கூலர்ஸ் கீழே இருந்தால் எடுத்து செல்ஃபில் வைக்க வேண்டும். அம்மாவின் கண்ணாடி செல்ஃபில் இருந்தால் எடுத்து ஹாலில் போட வேண்டும். அப்பாவின் புத்தகங்களில் கிறுக்கக் கூடாது. அம்மாவின் அவள் விகடனைக் கிழித்து விளையாடலாம். அப்பா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கிரிக்கெட் பார்க்கலாம். அம்மா சீரியல் வைத்தால் கதறி அழவேண்டும் போன்ற ஞானத்தை பிறப்பிலேயே கொண்டிருப்பவள். அம்மாவைக் கிண்டலடித்து அப்பா இயற்றிய ‘நேத்து வந்தவ நொம்பலம் தாங்கல..’, ‘அம்மாக்காரி அம்மாக்காரி எங்கே போற நீ...’, ’எல்லாமே என் பொண்டாட்டி... நான் என்னாவேன் அவ இல்லாட்டி’ போன்ற பாடல்களுக்கு கைத்தட்டி கூடவே கோரஸ் பாடி மகிழ்வது மட்டும் என்னுடைய சுயமுயற்சியில் உருவானது.

இளவெயினி பிறந்து வளர ஆரம்பித்த நாட்களின் முதலில் சொல்ல ஆரம்பித்த ஒரெழுத்து ‘பா’, ஈரெழுத்து ‘ப்பா’. இரண்டாம் மாதத்தில் அப்பா வந்து விட்டது. அம்மா வர ஆறெழு மாதங்கள் ஆகின. அதற்காக அம்மா பாசம் குறைந்தவளில்லை. எந்த பெண் பிள்ளையையும் போலவே அப்பா மீது பெரும்பிடிப்பு. அப்பனுக்கோ பிள்ளை மேல் பெரும் கிறுக்கு.

இன்று இளவெயினி இரண்டு வயதைப் பூர்த்தி செய்கிறாள். அப்பா உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் கொண்டாட்டங்களைத் தவிர்க்கலாமென இருந்தோம். இளவெயினி விஷயத்தில் எளிமை என ஒன்றிருந்ததில்லை. காலை முதலே நண்பர்கள் உறவினர்களின் பரிசளிப்பு. ஈச்சனாரி கோவிலிலும், எங்களூர் பிள்ளையார் கோவிலிலும் கட்டளை. கேக் கட்டிங். இனிப்பு விநியோகம் என பிஸியாக இருக்கிறாள். இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே ஹாலிங் பெல் அடித்தது. கனடாவிலிருந்து இளவெயினி பெயருக்கு ஒரு பரிசுப் பார்சல். என் தோழி அனுப்பியிருந்தாள். கையெழுத்துப் போட்டதும் கூரியர் பையன் கேட்டான் ‘நீங்க...?!’

“இளவெயினி அப்பா சார்”

Thursday, January 9, 2014

தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013


தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர் ஆவர்.இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன்  போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தாரபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில்முதுலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுற்சூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மைபதிப்பகம்  ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக(2006)’, தாமரை பூத்த தடாகம் (2008) வானில்பறக்கும் புள்ளெலாம் (2011)  ஆகிய நூல்களைப்பதிப்பித்தது.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை                    காலச்சுவடு 2006) என்ற தலைப்பில்மொழிபெயர்த்திருக்கின்றார்.     காட்டுயிர் பற்றி இவர்எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல்வெளிவந்தது.  சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம்இவரை தொகுப்பாசிரியராக் கொண்டு The Sprint of the Blackbuck  நூலை 2009  இல் வெளியிட்து.தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராகபணியாற்றியிருக்கின்றார்இயற்கைக்கான உலகநிதியகத்தில் (WWF-India)  அறங்காவலராகஉள்ளார்
1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A)  தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி புலமைமுயற்சியாக கருதப்படுகின்றது.  தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent  நூலுக்காக தேசிய விருதானஸ்வர்ண கமல் விருதை  1997இல் பெற்றார்.இந்நூலின் மொழிபெயர்ப்பு  பாம்பின் கண்  2012இல்வெளிவந்து,  தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள்எழுதியுள்ளார்.    2003இல் தேசிய திரைப்படவிருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராகஇருந்தார்.   .நாசபையின் சார்பில் கென்யாநாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராகபணியாற்றினார்  போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன்  பெங்களூரில் வசிக்கின்றார்,.இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன்உண்டு.
இயல் விருது கேடயமும் 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

Wednesday, January 8, 2014

மனக்காளான்

* கோஸாம்பி வேறு கோளாம்பி வேறு என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...

* அண்ணன் போகிறேன் ஈரோடு /வரும் வரை நடந்து கொள் கூறோடு / கொடியில் காய்கிறதென் துணி / அதை செவ்வனே மடிப்பதுன் பணி # மேன்சன் கால துண்டுச் சீட்டு லிமரிக்கு

* முட்டாப் பயல்களே என விளிக்கும் போது என்னையா கூப்பிட்டீங்க சார்னு... மூவாயிரம் பேர் ஓடி வருகையில் இந்த எழுத்தாளர்களை அசைக்க முடியாது.

* "பாப்பா, உனக்கு அம்மா பிடிக்குமா... அப்பா பிடிக்குமா?!"
"எனக்கு சிப்ஸ்தான்பா புடிக்கும்..." # இளவெயினி அலப்பறைகள்

* கவிதை எழுதிய வண்ணதாசனின் wall-ல் லைக் பண்ணாமல், ஷேர் செய்த வனிதாவின் wall-ல் லைக் பண்ணுறான் பாரு..அவன்தான் அசலான கவிதை உபாசகன்.

* விக்கெட்டைப் பறிகொடுத்தார் என்று எழுதுவதற்குப் பதிலாக அன்பளித்தார் என்று எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கிறது.

* கவிதை கோருவது கெட்டிக்காரத்தனத்தையல்ல; கோட்டிக்காரத்தனத்தை.

* 20 எண்ணத்திற்கு மேல் சாப்பிட்டால் இந்த கிழங்கான் மீன் குமட்டிக் கொண்டு வரும் போல.

* ஜெயமோகன் எதிர்ப்பு என்பது சேகுவேரா டி-சர்ட் அணிவது போல.

* என் வலைப்பதிவின் ஓரே வாசகர் டிடிதான் என்பது பரிதாபகரமான உண்மை. டிடி என்பது திண்டுக்கல் தனபாலன்.

* எங்க அத்தைப் பொண்ணு பாக்கறதுக்கு ஒங்கள மாதிரியே இருப்பா... ஒரே வித்தியாசம்... நீங்க அவள விட அழகு... # பிக்கப் லைன்ஸ்

* பு.க.கா-விற்கு வெளிவர இருக்கும் ஒரு கவிதைத் தொகுப்பின் பெயர் “ஏன் என்னைக் கொல்கிறீர்கள்?” # எவ்வளவு நேர்மை

* அன்பின் நிறமது தும்பை

* சோமசேகர கனபாடிகளுக்குள் ஓர் எழுத்தாளன் இருந்தான். அவனே அவரை சாகவும் அடித்தான்.

* ஆசான் கூற்றுப்படி அறிவுஜீவியாதல் சிரமம் என்பதால் அற்பஜீவியாகவே தொடரலாமென்றிருக்கிறேன்.

* வாணிராணி-ல் ஒரு கேரக்டருக்கு பேய் பிடித்திருக்கிறதாம்; ஒருத்தருக்குத்தான் என்பதை நான் நம்பவில்லை.

* கலா மாஸ்டருக்கு இவ்வளவு தாமதமாக டாக்டர் பட்டம் வழங்கிய சமூகத்தின் தடித்தனத்தை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.

* பாரதி, சுஜாதாவுக்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்டா அராத்துதான். இதுவே ரஷ்யனில் எழுதியிருந்தால் தல்ஸ்தாய், தஸ்தவ்ஸ்கிக்குப் பிறகு அராத்துவாகத்தான் இருப்பார்.

* வாசித்து, சிந்தித்து, விவாதித்து, எழுதி, பேசி - அறிவுஜீவி ஆகமுடியாதவர்கள் கெஜட்டில் தங்கள் பெயரை அறிவுஜீவி என மாற்றிக்கொள்வது சுலபமான வழி.

* எங்கே போனாலும்ம்ம்ம்... நீங்க 'ஸ்ப்ரே' பண்ணுங்க...

* நல்ல நல்ல ஃபிகர்களை எண்ணி..எந்தன் ஞாயிறு துவங்குது தம்பி...

* மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கோபிநாத்திடமெல்லாம் நிச்சயம் தீபாவளியைப் பற்றிய துயர்மிகு சம்பவங்கள் பத்து வருடத்திற்கு ஸ்டாக் இருக்கும்.

* ரவீந்திர ஜடேஜா இரண்டு குதிரைகள் வளர்க்கிறார்; எதிர்காலத்தை திட்டமிடுவதில் இந்த கிரிக்கெட்டர்களுக்கு ஈடு இணை இல்லை போலிருக்கிறது.

* பழைய பேப்பர் எடுக்க வந்தவர் செல்போனில் ஒலிபரப்பிய கானா பாடல் இப்படித் துவங்குகிறது 'மண்வெட்டி மூஞ்சிக்கு மஞ்சளப் பூசி மினுக்குற பொண்ணே'


* நாங்கள் எழுத்தாளர்களிடம் அனுமதி கேட்டு கடிதங்கள் எழுதினோம். ஸ்டாம்ப் ஒட்ட மறந்து விட்டதால் அனைத்தும் திரும்பி வந்துவிட்டன - பதிப்பாளர் பலராமன்

* செத்துப் போன எழுத்தாளர்களிடம் சொர்க்கத்துக்கு எழுதி அனுமதி கேட்டிருக்கிறோம். மீதி எழுத்தாளர்கள் சாகட்டும் என காத்திருக்கிறோம் - பதிப்பாளர் பலராமன்

* நான் மிஸ்டு கால் கொடுத்தால் திருப்பிக் கூப்பிடுகிற எழுத்தாளர்களிடம் மட்டுமே அனுமதி வாங்குவேன் - பதிப்பாளர் பலராமன்

* 'உழவர் சந்தைக்குப் போறதெல்லாம் மார்க்கட் விசிட்னு பேட்டா க்ளைய்ம் பண்ண முடியாதுடா அப்பரசெண்டுகளா...'

* விஜி வீட்டு கொலுவில் ஒளவையார் ஆப்பிரிக்கப் பழங்குடியினரோடு பேசிக்கொண்டிருக்கிறார். கேட்டால் குறியீடு நீயே கண்டுபிடி என்கிறார்.

* நட்ட கல்லும் பேசுமோ நஸ்ரியா படம் பார்க்கையில்?

* ‘சகதர்மினி சள்ளை சகிக்க முடியாதோர் சங்கம்’ ஆரம்பிக்கலாமென்றிருக்கிறேன்.

* மறதி உள்ளவனை நிழலும் ஏமாற்றும்.

* பிழைத்துக் கிடப்பதே பெரும் தற்செயல்.

* உன் ரசனையை வளர்த்துக் கொள்; பொது ரசனையை புரிந்து கொள்.

* ராசாத்தீ... என் ஆச ராசாத்தீ... பாடல் ராசா இசையமைத்ததா?! கேட்க இனிமையாக உள்ளதே...

* ரீ-சேல் வேல்யூ உள்ள வம்புகளை விலைக்கு வாங்குவதில் தவறில்லை.

* தன்முனைப்புள்ளவன் எந்த நகரத்தையும் பழிக்க மாட்டான்.

* @Dhanshikaa1 'யா யா' இன்னும் பார்க்கவில்லை; ஆனால், போஸ்டரிலே உங்கள் நடிப்பு பிரமாதமாக இருந்தது. கீப் ராக்கிங் மேடம்!

* வாட் ப்ரோ - என்ன சகோதரா?
  வாட் புரோ - என்ன தரகரே?
  வாட் ப்ரா - என்ன உள்ளாடை? # சரியா உச்சரிச்சு தொலையுங்கடா நொன்னைகளா..

* பெண்கள்தாம் உலகின் சொல்முடுக்கிகள்.

* ஒரு டைஃபாய்டு காய்ச்சல் 9800 ரூபாய் அசலாகிறது.

* மோவ்ஹாக் ஹேர்ஸ்டைல் ஒரு பின்நவீனத்துவ அழகியல்.

* கவிதையில் வன்மத்தை ஒரு ரஸமாக அறிமுகப்படுத்தியது முடியலத்துவம்தான்.

* ஆய்வாளன் எல்லா தரப்பையும் யோசிக்க வேண்டும்; கட்டுரையாளன் அப்படியல்ல. தான் சொல்லவேண்டியதின் மீது ஆணியடித்தால் போதுமானது.

* எவ்வளவு எடிட் செய்தாலும் சமீபத்திய கட்டுரைகளெல்லாம் 1000 வார்த்தைகளைத் தாண்டிநிற்கின்றன.எதற்கும் ஆகாதவனாகி விட்டேனோ என பதட்டம் நீடிக்கிறது.

* கேப்டன் என்றழைத்தால் ஆண்களுக்கும், மேடம்ஜி என்றழைத்தால் பெண்களுக்கும் கடுப்பு கிளம்புவது பார்க்க ஜாலியாக இருக்கிறது.

* சாயங்காலம் ஆனால் இந்த ’மிஸ்டர் குமார்’ என்பவனின் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை # சீரியல் சில்லுண்டிகள்

* ஒரு கீச்சர் இந்நாட்டின் பிரதமராவது உங்களனைவருக்கும் பெருமையானவிஷயம்தானே...ட்வீட்டப்புக்குக் கூப்பிடலாம். ’ஐ சப்போர்ட்’ கேட்கலாம்..etc etc.. # மோடி

* தலைவா பார்த்தேன்; அவிலாஞ்சி சாக்லேட் பாக்டரியில் கதை விவாதம் நடந்திருக்கும் போல.

* எல்லாமே என் பொண்டாட்டி.... நான் என்னாவேன் அவ இல்லாட்டி... # ஒரு எக்ஸ்ட்ரா காபி கிடைக்கவேண்டுமெனில் பாட வேண்டிய பாடல்.

* ஒரு  சில திரைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து மனஎழுச்சி கொள்வதற்கான பிரதான காரணம் சில டிவிடிக்களே நம்மிடம் இருப்பதுதான்.

* நொங்கு என்ன விலைன்னே?
  20 ருவாய்க்கி எட்டெண்ணம்
  நமக்கு என்னென்னெ விலை?
  உங்களுக்கு மலிவுதான்...எட்டெண்ணம் 20 ருவா தம்பி # திர்னேலி

* அங்கதமே அங்குசம்.

Sunday, January 5, 2014

இரு உதவிகள்

உதவி-1

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் எனது நண்பரின் சகோதரி. சுமார் 52 வயது மதிக்கத்தக்கவர். மனநலம் பாதிக்கப்பட்டவர். வாய் பேசவும் இயலாது. பல ஆண்டுகளாக வீட்டுப்பராமரிப்பில் இருந்த இவர் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு காணாமல் போய் விட்டார். காணாமல் போன அன்று நைட்டி அணிந்திருந்தார். தலைமுடி கட்டையாக வெட்டப்பட்டிருக்கும். சிங்காநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுக்க அலசியாகி விட்டது. கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மனநல காப்பகங்கள், ஆதரவற்றோர் விடுதிகளிலும் விசாரித்து விட்டோம். இன்று வரை கிடைக்கவில்லை. மேற்படி அடையாளங்களுடைய பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் 9442002114 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உதவி-2

சற்று நேரத்திற்கு முன் கோவை க்ராஸ்கட் சாலை கமலா ஸ்டோர்ஸ் அருகேயுள்ள டூ-வீலர் பார்க்கிங் ஏரியாவில் ஒரு ஜவுளிப்பையினை தொலைத்து விட்டேன். என் மனைவிக்கும், குழந்தைக்கும் வாங்கிய புத்தாடைகள் அதில் இருந்தன. அந்த பார்க்கிங் பகுதியைச் சுற்றியுள்ள கடைகள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோக்காரர்கள், காவலர்கள் என அனைவரிடமும் விசாரித்து விட்டேன். கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் உதவுங்கள்: 9003931234

- செல்வேந்திரன்
  05-ஜனவரி-2014 

Thursday, January 2, 2014

பாட்டுத் திறம்


கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி புலம் ஸ்டாலில் அமர்ந்திருக்கும்போது ‘பாட்டுத் திறம்’ நூல் சூடான பக்கோடாவைப் போல விற்றுக்கொண்டிருந்ததைக் கண்டு ஆர்வமாகி இந்நூலை வாங்கினேன். நவீன கவிஞரான மகுடேசுவரன் ஒரு திரைப்படப் பாடலாசிரியரும் கூட. திரைப்படங்களுக்குப் பாட்டெழுதும் வேட்கை பள்ளி நாட்களிலேயே அவருக்கிருந்ததை அவரே நூலில் பதிவு செய்திருக்கிறார். அனேகமாக பஞ்சு அருணாசலம் அவரது அந்நாளைய ஆதர்ஸமாக இருந்திருக்கலாமென்பது என் துணிபு.

தமிழ்த் திரையிசைப் பாடல்களில் எண்பது விழுக்காடு காதல் அல்லது காமம். பத்து விழுக்காடு சுயபீற்றல். இன்னொரு பத்து விழுக்காடு பிரிவு துயர் அல்லது தத்துவப்புலம்பல் - இவைதான் என் சொந்த வகைப்பாடாக ஒரு காலத்தில் இருந்தன. அர்த்தமற்ற உளறல்கள், ஆபாசம், தேய்வழக்கு சொற்கள், ஒரே மாதியான பாவங்கள் ஆகியனவற்றிலிருந்து ஒரு நவீன வாசகன் விலகியிருக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

ஆனால், வயதாக வயதாக சில பாடல்கள் நம்மை நெருங்கி வருகின்றன. நாமறியாமலே அவற்றோடு ஒரு நேசம் உருவாகி விடுகிறது. நம் சொந்தவாழ்வின் தருணங்களோடு ஒட்டி உறவாடக்கூடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்பது மெள்ள புத்திக்கு உறைக்கிறது. பிரக்ஞையோடு பாடல் வரிகளை, இசை நுணுக்கங்களை, பாடகர்கள் காட்டும் ஜாலங்களை ரசிக்கத் துவங்குகையில் உலகின் எந்த இசை வடிவங்களோடும் ஒப்பிடத்தகுந்த அம்சங்கள் தமிழ்த் திரையிசையில் பல பாடல்களுக்கு இருக்கின்றன என்பது தெளிவாகிறது.

கண்ணதாசன், வாலி, பஞ்சு அருணாசலம், புலமைப்பித்தன், கங்கை அமரன், முத்துலிங்கம், நா. காமராசன், ஆபாவாணன், குருவிக்கரம்பை சண்முகம் ஆகிய பாடலாசிரியர்கள் எழுதிய சில பாடல்களின் நாடகீய தருணங்களை, வரிகளில் தவழும் கவித்துவத்தை, கவிகளின் சொற்தேர்வுத் திறனை தனக்கேயுரிய செறிவான உரைநடையில் அலசுகிறார் மகுடேசுவரன். கூடவே, பாடல் உருவான வரலாற்றுச் செய்திகளையும் சொல்லிச் செல்வது வாசிப்பு சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. எங்கேயோ கேட்ட குரலின் தோல்வியே ரஜினி தான் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க வைத்தது; ஊமை விழிகளில் ஆபாவாணன் கைக்கொண்ட சினிமா ஸ்கோப் தொழில்நுட்பம் எப்படி தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியது; ’இதோ இருக்கானே இவன் செருப்பு, சாயபுவைத் தவிர, எல்லா பூவையும் எழுதிட்டான்’ என கங்கை அமரனைப் பற்றி கண்ணதாசன் அடித்த கமெண்ட்; பக்த பிரகலாதாவிற்குப்  போடப்பட்ட செட்டில் வண்ண விளக்குகளைப் பொருத்தி படம் பிடிக்கப்பட்டதுதான் ’இளமை இதோ இதோ...’ பாடல்; பாரதிதாசன் திரைப்படங்களுக்குப் பணியாற்ற வாங்கிய பெருஞ்சம்பளம் என சுவாரஸ்யமான தகவல்களை அடுக்கிக்கொண்டே இருக்கிறார் நூலாசிரியர்.

தனிப்பட்ட ரசனையில் எனக்குப் பிடித்த தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாசலமும், கங்கை அமரனும். எளிமையான சொற்களை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் மகத்தான பாடல்களை உருவாக்கிய இவர்களிருவரும் அதற்குரிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்களா என்பது கேள்விக்குரியது. இவர்களது வரிகளெல்லாம் சமகாலத்திய பெரும்புலவர்கள் எழுதியதாகவே தமிழ்ச்சமூகம் கருதியது வன்கொடுமை. இவர்கள் எழுதிய பாடல்களைத் துப்பறிந்து கண்டுபிடிப்பது, அதன் கவித்துவ உச்சங்களை அலசுவது என் வழக்கமான வாடிக்கைகளுள் ஒன்று. இந்நூலில் கங்கை அமரனின் உச்ச கட்ட வெற்றிப்பாடலான மாங்குயிலே அலசப்பட்டுள்ளது. பஞ்சு அருணாசலத்தைப் பற்றி இரண்டு விரிவான கட்டுரைகள் உள்ளன.

மகுடேசுவரனின் உரைநடை தமிழினி எழுத்தாளர்களுக்கேயுரிய மயக்கமூட்டும் மொழிச்செறிவு கொண்டது. மேலதிகமாக மகுடேஸ்வரன் அழகான கலைச்சொற்களை உருவாக்கும் திறன் படைத்தவர் (உதாரணங்கள்: ஹெட்செட் - கருஞ்சரடு; ஹீரோயிசப் படங்கள் - நாயக மயக்கப் படங்கள்; மீட்டர் - அதேயளவான நேரத்தன்மையுள்ள). கீழே அவரது உரைநடைக்கு சில சாம்பிள்களைக் கொடுக்கிறேன்.

”ஒரு பாடல் கேட்ட அனுபவத்தில் விழுந்து செத்த ஈயாகிவிட வேண்டுமேயன்றி நக்கி நகர்ந்த நாயாகிவிடக்கூடாது.”

”செவியுள்ளவனின் செங்குருதிக்குள் ரத்தத் துகள்களைப் போல  நடமாடிக்கொண்டே இருக்கின்றன பஞ்சு அருணாசலத்தின் பாடல்கள்.” 

”எண்பதுகளில் இளமைப் பருவத்திலிருந்தவர்களின் எலும்பு மஜ்ஜையை ஆராய்ந்து பார்த்தால் இந்தப் பாடல் எழுப்பிய உணர்வின் கடைசித் தொற்று எங்காவது தென்படலாம்.”

இந்நூல் பெரும்பாலும் எண்பதுகளின் மத்தியில் வெளியான பாடல்களைப் பேசுகிறது. போலவே அடுத்தடுத்த பத்தாண்டுகளில் வந்த பாடலாசிரியர்களைப் பற்றியும், பாடல்களின் திறனைப் பற்றியும் அவர் நூலெழுதி வெளியீட்டால் வாசிக்கத் தயாராக இருக்கிறேன்.

நூலின் பெயர்: பாட்டுத் திறம்
ஆசிரியர்: மகுடேசுவரன்
விலை: ரூ.90/-
வெளியீடு: புலம்