இளவெயினி

என்னுடைய 22-வது வயது வரை நானும் அப்பாவும் சேர்ந்தே சைக்கிளில் சுற்றுவது வழக்கம். அப்பா ஓட்ட முன்பக்க பாரில் அமர்ந்து கொள்வேன். கேரியரில் ஒருநாளும் பயணித்ததில்லை. நண்பர்கள் கேலி செய்வார்கள். பொருட்படுத்தியதில்லை. கிழக்கே தச்சன்மொழி தேவாலயம் துவங்கி மேற்கே பழைய பேருந்து நிலைய காமராஜர் சிலை வரையுள்ள நெடிய சாலையில் இருபக்கங்களிலும் கடைகளைக் கொண்டிருப்பது எங்களூர் பஜார். காமராஜர் சிலை அருகே தூத்துக்குடி மாவட்டத்தின் மிக முக்கியமான நூலகங்களுள் ஒன்றான ராம. கோபால கிருஷ்ணபிள்ளை அரசு பொது நூலகம் இருக்கிறது.

சாயங்காலம் வாசகசாலைக்குச் சென்று கொஞ்ச நேரம் இதழ்களை வாசித்து விட்டு புத்தகங்களை மாற்றி விட்டு ரத்னா ஹோட்டலில் சூடாக சப்பாத்தியும், பாலும் சாப்பிட்டுவிட்டுத் திரும்புவது எங்கள் வழக்கம். வீட்டிலிருந்து கிளம்பினால், நூலகம் செல்லும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் எதிரில் வரும் எனக்கு வேண்டியவர்கள் முகமன் கூறியபடி, சிரித்தபடி, கையை ஆட்டியபடி செல்வார்கள். நானும் ஒரு கையை சற்றே தூக்கி வணக்கம் போன்ற ஒன்றை வைப்பேன். அவர்கள் யாரையும் அப்பாவிற்குத் தெரிந்திருக்காது. இயல்பில் மிக அமைதியானவர் என்பதால் அவரது நட்பு வட்டம் மிகச்சுருக்கமானது. எனக்கு முகமன் வைக்கும் நண்பர்களை ’இவர்கள் யாரென’ அப்பா விபரம் கேட்டபடியே வருவார். கதிரேசன் மகன் என்பதை விட செல்வேந்திரனின் அப்பா என்றுதான் அதிகமும் அறியப்படுகிறேன் என அடிக்கடிச் சொல்வார். புகார் ஒன்றுமில்லை. நானொரு சமூக மனிதனாய் இருப்பதில் அவருக்குச் சிறிய பெருமிதமும் இருந்தது.

250 குடும்பங்கள் வசிக்கும் என்னுடைய அடுக்ககத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இன்று நான் இளவெயினியின் தந்தையாகவே அறியப்படுகிறேன். அவளோடு மாலை நடை பயிலும்போது, பூங்காவில் விளையாடும் போது, ஷாப்பிங் செய்யும்போது திடீரென்று யாராவது முளைத்து ‘ஹேய் இளவெயினி... யார் இது உங்க அப்பாவா...’ எனக் கேட்டு விட்டுச் செல்கிறார்கள். கடையில் ‘சார் இது புட்டிங்ஸ்... பாப்பாவுக்கு இது புடிக்காது. ஜெல்லிதான் புடிக்கும்’ என்கிறான் சிப்பந்தி. அசோஷியேன் பிரசிடெண்ட் வீட்டு ஹாலிங் பெல்லை அழுத்தினால், கதவைத் திறந்த பெண்மணி உள்ளறையைப் பார்த்து ‘ஏங்க இளவெயினி அப்பா வந்திருக்காரு...உங்களைப் பார்க்க என்கிறார்..’ நியு இயர் ஈவ் செலிபிரேசனில் இளவெயினியிடம் அவளது தோஸ்த் ஒருத்தி மைக்கை கொடுத்து பாடச் சொல்ல ‘ஊதா கதரு திப்பன்..ஆது அப்பன்’ எனத் தயக்கமின்றி பாடுகிறாள். தினசரி இதுமாதிரி ஆச்சர்யங்கள் எனக்காகவே காத்திருக்கும். 22 வயதில் எனக்கிருந்த அறிமுகத்தை விட 2 வயதில் இளவெயினிக்கு இருக்கும் வட்டம் பெரிதாக இருக்கிறது.

அவள் வயதையொத்த பத்திருபது பிள்ளைகள் அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார்கள். பலரது பெயர்கள் என் வாயிலேயே நுழையாது. மகிதாவை தகிதா என்பேன். காதனாவை சாதனா என்பேன். ரெஜிதாவை சுஜிதா என்பேன். இளவெயினி கடுப்பாகி என்னைத் திருத்துவாள். புள்ளினங்களை பொத்தாம்பொதுவாக குருவி என்றோ காக்கா என்றோ அழைப்பதில்லை. கொக்கு, புறா, ஆந்தை, மைனா, குருவி, குயில், மயில் என இருபது பறவைகளைத் தனித்து அடையாளம் கண்டுகொள்வாள். இசையில் கடுமையான பிடிப்பு. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் குத்துப்பாடல்களிலும் துலங்கி வரும் வார்த்தைகளைக் கொண்டு அவளே ‘அம்மாடியோவ்...ஆத்தாடியோவ்..’ என இடுப்பை ஒடித்து ஒரு பாடலைப் பாடி காண்பிப்பாள். கானா பாலாவைப் பிடிக்கும் அளவிற்கு பிரதீப்பையும் கேட்பாள். சின்மயி குரலை தனித்து அடையாளம் கண்டு ‘அத்தப் பாட்டு’ என்பாள். புத்தக பின்னட்டையில் ஜெயனையோ, நாஞ்சிலையோ பார்த்தால் முறையே ’மாமா..தாத்தா’ என அடையாளம் கண்டுகொள்வாள். அவளது கதைகளில் புலிக்கு சைக்கிள் ஓட்டத்தான் தெரியும். எலியோ லாரியில்தான் எப்போதும் வரும். பூச்சிகளைத் துன்புறுத்த மாட்டாள். யாராவது அதட்டினால் ‘போடா/போடி’ என மரியாதையாக பதிலளிப்பாள். தாத்தா பாவம். தான் ஒருவள்தான் அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என உறுதியாக நம்புவாள். தாத்தாவை சாப்பிட வைப்பது, வாக்கிங் கூட்டிச் செல்வது, மாத்திரை டப்பா எடுத்துக் கொடுப்பதுவரை எல்லாம் சரிபார்த்த பின்னர்தான் உறங்கச் செல்வாள்.

அப்பாவின் செல்போனை நோண்டக்கூடாது. ஆனால், அம்மாவின் செல்போனில் தேங்கா எண்ணெய் ஊற்றலாம். அப்பாவின் கூலர்ஸ் கீழே இருந்தால் எடுத்து செல்ஃபில் வைக்க வேண்டும். அம்மாவின் கண்ணாடி செல்ஃபில் இருந்தால் எடுத்து ஹாலில் போட வேண்டும். அப்பாவின் புத்தகங்களில் கிறுக்கக் கூடாது. அம்மாவின் அவள் விகடனைக் கிழித்து விளையாடலாம். அப்பா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கிரிக்கெட் பார்க்கலாம். அம்மா சீரியல் வைத்தால் கதறி அழவேண்டும் போன்ற ஞானத்தை பிறப்பிலேயே கொண்டிருப்பவள். அம்மாவைக் கிண்டலடித்து அப்பா இயற்றிய ‘நேத்து வந்தவ நொம்பலம் தாங்கல..’, ‘அம்மாக்காரி அம்மாக்காரி எங்கே போற நீ...’, ’எல்லாமே என் பொண்டாட்டி... நான் என்னாவேன் அவ இல்லாட்டி’ போன்ற பாடல்களுக்கு கைத்தட்டி கூடவே கோரஸ் பாடி மகிழ்வது மட்டும் என்னுடைய சுயமுயற்சியில் உருவானது.

இளவெயினி பிறந்து வளர ஆரம்பித்த நாட்களின் முதலில் சொல்ல ஆரம்பித்த ஒரெழுத்து ‘பா’, ஈரெழுத்து ‘ப்பா’. இரண்டாம் மாதத்தில் அப்பா வந்து விட்டது. அம்மா வர ஆறெழு மாதங்கள் ஆகின. அதற்காக அம்மா பாசம் குறைந்தவளில்லை. எந்த பெண் பிள்ளையையும் போலவே அப்பா மீது பெரும்பிடிப்பு. அப்பனுக்கோ பிள்ளை மேல் பெரும் கிறுக்கு.

இன்று இளவெயினி இரண்டு வயதைப் பூர்த்தி செய்கிறாள். அப்பா உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் கொண்டாட்டங்களைத் தவிர்க்கலாமென இருந்தோம். இளவெயினி விஷயத்தில் எளிமை என ஒன்றிருந்ததில்லை. காலை முதலே நண்பர்கள் உறவினர்களின் பரிசளிப்பு. ஈச்சனாரி கோவிலிலும், எங்களூர் பிள்ளையார் கோவிலிலும் கட்டளை. கேக் கட்டிங். இனிப்பு விநியோகம் என பிஸியாக இருக்கிறாள். இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே ஹாலிங் பெல் அடித்தது. கனடாவிலிருந்து இளவெயினி பெயருக்கு ஒரு பரிசுப் பார்சல். என் தோழி அனுப்பியிருந்தாள். கையெழுத்துப் போட்டதும் கூரியர் பையன் கேட்டான் ‘நீங்க...?!’

“இளவெயினி அப்பா சார்”

Comments

raki said…
Sincere prayers for a long and cherished life
இது எல்லார் வீட்டிலும் நடப்பதுதான், உங்க பதிவு என்னையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது, என்னையும் என் மகள் பெயரையோ அல்லது மகன் பெயரை சொல்லியோதான் கூப்பிறாங்க.
//அப்பாவின் செல்போனை நோண்டக்கூடாது. ஆனால், அம்மாவின் செல்போனில் தேங்கா எண்ணெய் ஊற்றலாம். அப்பாவின் கூலர்ஸ் கீழே இருந்தால் எடுத்து செல்ஃபில் வைக்க வேண்டும். அம்மாவின் கண்ணாடி செல்ஃபில் இருந்தால் எடுத்து ஹாலில் போட வேண்டும். அப்பாவின் புத்தகங்களில் கிறுக்கக் கூடாது. அம்மாவின் அவள் விகடனைக் கிழித்து விளையாடலாம். அப்பா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கிரிக்கெட் பார்க்கலாம். அம்மா சீரியல் வைத்தால் கதறி அழவேண்டும் போன்ற ஞானத்தை பிறப்பிலேயே கொண்டிருப்பவள். //

:))))))))))))))))

செல்லத்துக்கு அத்தையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :)
anburaven93 said…
elimaiyaanathu ethaarthamaanathu.
Vaalga valarga
வணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html
அற்புதம்..

வாழ்த்துக்கள் செல்வா!
Sumy S said…
Though i was tempted to give a comment in Thamizh, i find it comfortable to leave a reply in the foreign language itself.... If we had known that the man whom we met on that sunday morning had been such a grrreat creator of words,,,,, we wouldn't have missed u out...
HATS OFF sir!!!
Sumy S said…
If we had known that the man who stepped into our house that sunday morning was such a greeeat creator of words, we wouldn't have missed u out...
HATS OFF SIR!!!
selventhiran said…
அன்பிற்கு நன்றி சுமி. நான் வீட்டிற்கு வந்து ராகினியைப் பற்றியே சொல்லிக்கொண்டிருந்தேன் :-)