Monday, September 22, 2008

ஒரு டெயில் பீஸ்...!

நண்பர் ரிஷான், ரமேஷ் வைத்யாவின் நகைச்சுவை உணர்வைக் குறிப்பிட்டிருந்தார் அதற்கு ஒரு டெயில் பீஸ்....

தெருவில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தோம். ஒரு நாய் அவரைப் பார்த்து விடாமல் குலைத்துக்கொண்டே இருந்தது. அவர் சொன்னார் "உலகின் மிகப் பெரிய எலும்புத் துண்டைப் பார்த்த சந்தோஷம் அதற்கு..."

சேரன் அண்ட் ஹிஸ் ஓல்டு ஸ்பெக்ஸு

ஊரில் பிரபாகர் என்றொரு நண்பன் இருக்கிறான். இளமைக்காலத்தில் ஆண்டுக்கு தலா மூன்று காதல்கள் என்ற விகிதாச்சாரத்தில் காதலித்து வந்தான். மாறன் அம்புகள் மாறி மாறி அவன் மீது பொழிந்து வந்தாலும் விதி வித்தியாசமாய் விளையாடியது. பிரபாகர் யாரைக் காதலித்தாலும் அந்தப் பெண்ணிற்கு உடனே வேறு இடத்தில் திருமணம் ஆகிவிடும்.

பொத்தக்காலன்விளையில் "திருமண வரம் தரும் ஆரோக்கியமாதா ஆலயம்" இருக்கிறது. திருவிழா நாட்களில் கன்னிப்பெண்கள் பிரார்த்தனைக்கு உடனடி பலன் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்றொரு ஐதீகத்தால் மாதாக் கோவில் எங்கள் ஏரியா முழுக்க பிரபலம். அதனால் பிரபாகரனையும் நண்பர்கள் ஆரோக்கியமாதா என்று கேலி செய்வது வழக்கம்.

ராமன் தேடிய சீதை படத்தின் கதையும் கிட்டத்தட்ட அதேதான். திருமணத்திற்கு பெண் தேடுகிறார் சேரன். தனக்கு பார்க்கும் முதல் பெண்ணிடம் தான் சிறுவயதில் கொஞ்சம் புத்தி பேதலித்து சிகிட்சை எடுத்துக்கொண்டதைக் கூற அவரை மணக்க மறுக்கிறார் அப்பெண். இரண்டாவது பெண் திருமணத்திற்கு முன்னிரவில் காதலித்தவனோடு உடன் போதல் செய்கிறாள். இதனால் மனம் தளர்ந்த சேரனுக்கு கண் பார்வையில்லாத ரேடியோ ஜாக்கி நெடுமாறன் (பசுபதி) மற்றும் அவரது மனைவி (கஜாலா) யின் நட்பு கிடைக்கிறது. நெடுமாறனின் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்களாலும், உதாரண வாழ்கை முறையிலும் வாழ்வின் மீதான நம்பிக்கை பிறக்கிறது சேரனுக்கு. மூன்றாவது பெண்ணைப் பார்க்கப்போன இடத்தில் தன்னை மணக்க மறுத்த முதல் பெண்ணையும், வறுமையின் பிடியில் இருக்கும் ஓடிப்போனப் பெண்ணையும் பார்க்கிறார். அவர்களுக்கு உதவுகிறார். மூன்றாவது பெண்ணின் மீதான காதலில் திருட்டுத் தொழிலை விட்டு விட்டு காதலிக்கும் உள்ளூர் ஆட்டோக்காரரின் கதையைக் கேட்டு அப்பெண்ணை அழைத்து புத்திமதி சொல்கிறார். நெடுமாறன் சொன்ன தகவலில் போலீஸ்காரரான நான்காவது பெண்ணைப் பார்க்கப்போன இடத்தில் போராட்டாக் காரரென தவறாகப் புரியப்பட்டு அப்பெண்ணின் கையாலே அடிபட்டுத் திரும்புகிறார். பின் முதலில் பார்த்த பெண்ணையே மணக்கிறார். இருங்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்கிறேன். வாசிக்கும்போது தலை சுற்றுகிறதென்றால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டுத் தொடருங்கள். எத்தா பெரிய எழுத்தாளனென்றால் கூட சுவாரஸ்யப்படுத்தி விடவே முடியாத கேவலத் திரைக்கதை. கூடிய மட்டும் குழப்பாமல் எழுதுவதற்குள் பக்கவாதமே வந்தது போல் இருக்கிறது.

மூன்று நிமிடங்களுக்கு ஒரு விளம்பர இடைவெளி விட்டு எடுத்திருந்தால் சுமார் ஓரு வருட காலம் வெற்றிகரமாக ஓட முடிகிற அருமையான சின்னத்திரை வஸ்துவை சினிமாவாக எடுத்து சீரழித்து விட்டார்கள். ஒரு கதைக்குள் உப கதை. உப கதைக்குள் உப உப கதை என ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் வைத்து படம் பார்க்க வந்தவர்களை படுத்தி எடுத்தார்கள். யதார்த்த நாயகன் சேரனைப் பார்க்கும் போது பரிதாபம் வருவதற்குப் பதிலாக எரிச்சலே மிஞ்சுகிறது. தனது இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களிடம் யதார்த்த நடிப்பை உறிஞ்சி எடுக்கும் அற்புத இயக்குனர், நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்கிற ரீதியில் நிமிடத்திற்கு நிமிடம் கேட்கிறார். ஆட்டோ கிராஃபிற்கு வாங்கியக் கண்ணாடியைக் கழட்ட சாருக்கு இன்னும் மனசு வரலை. எனக்கு மட்டும்தான் எரிச்சலோ என நினைத்தால், சேரன் அடிவாங்கும் க்ளைமாக்ஸில் பக்கத்து சீட் மாமா "இன்னும் ரெண்டு அடி சேத்து போடும்மா...சனியன் என்னமா அறுத்தான்..." என்கிறார்.

"வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்சானாம்"னு நம்ம எம்.எஸ். பாஸ்கர் சொல்வாரே அதே மாதிரி மலச்சிக்கல்ல இருக்கும்போது கம்போஸ் பண்ண மாதிரி பாடல்கள். எழவு வீட்டை ஞாபகப்படுத்தற மாதிரி பின்னணி இசை. கண் பார்வையற்ற நெடுமாறனாகப் பிரமாதப் 'படுத்தி' எடுத்திருக்கிறார் பசுபதி. தன்னம்பிக்கை ஊட்டுகிறேன் பேர்வழி எனப் பக்கம் பக்கமாக டயலாக் பேசும்போது அவர் உண்மையிலே நெடு, நெடு மாறன். முடியல...

க்ளைமாக்ஸ் நெருங்குவதை ஊகித்து எனது தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த கேண்டியை எழுப்பினேன். விழித்தவள் சேரன் அடிவாங்கும் காட்சியில் அவரது கண்ணாடி உடைந்ததை "ஐய்யய்யோ... அந்தக் கண்ணாடி இல்லன்னா.... சேரனின் சினிமா வாழ்க்கையே முடிஞ்சுடுமே..." என உச்சுக் கொட்டினாள். நல்ல வேளை சேரன் இங்கிலீஷில் பேசும் காட்சிகளில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். ப்ளாக் போட்டா "சேரன் அண்ட் ஹிஸ் ஓல்டு ஸ்பெக்ஸுன்னு" தலைப்பு வைப்பா... ப்ளீஸ்..." என்ற அவளது கோரிக்கை இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சேரனுக்கும், ஜெகன்நாத்தும் தங்களது பலம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் இயங்க வேண்டிய களமே வேறு. கலைஞர் டிவியில் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

Wednesday, September 17, 2008

WEEK END WITH CANDY

வேறு எந்த படத்திற்கும் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால்தான் நானும் கேண்டியும் "பொய் சொல்லப் போறோம்" படத்திற்குச் சென்றோம். இயக்குனர் விஜய் தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் 'தல'வலி கொடுத்திருந்ததால் ரொம்பவே பயப்பட்டேன். ஆனால், இந்தப்படம் அவருக்கு பேர் சொல்லும் படைப்பாக மெல்லிய, துல்லிய படமாய் வந்திருக்கிறது.

நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை விழுங்கி ஏப்பம் விடும் ரியல் எஸ்டேட் முதலைகளை அவர்களது பாணியிலேயே பித்தலாட்டம் செய்து இழந்த பணத்தை மீட்கும் சாமான்யர்களின் கதை. துவக்கம் முதல் முடிவு வரை இயல்பை மீறாத, யதார்த்தமான படம். அதே சமயத்தில் ரம்பம் போடாமால், கதறி கண்ணீர் வடிக்காமல் இதமான நகைச்சுவையோடு கலந்து கொடுத்திருப்பதில் இயக்குனரின் திறன் வெளிப்படுகிறது. நிலத்தின் பெயரால் நிகழும் மோசடிகளில் ஒன்றிரண்டின் மர்ம மூடிச்சுகளை அவிழ்க்கிற முயற்சியாகவும், நிலம் வாங்கத் துடிக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும் "ஸ்டார் இமேஜ், கதறடிக்கும் சண்டைக்காட்சிகள், இல்லாத காரணத்தினால் இப்படம் ஓடாமல் போய்விடக் கூடாதே" என்ற பதற்றம் வந்து கொண்டே இருக்கிறது.

திரைப்படத்தின் ஓட்டத்தைத் தடுக்கும் முழு நீள பாடல்கள் இல்லை. மாறாக கதையை நகர்த்தும் சிறிய சிறிய ஜிங்கிள்ஸ் போன்ற பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். அன்றலர்ந்த மலர் போல அழகான ஹீரோயின். உருட்டு விழிகளும், துடிக்கும் உதடுகளும், சுருண்ட முடிகளோடும் யார் மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி முகம். நிறைய டிவி விளம்பரங்களில் பார்த்த ஞாபகம். ராம்நகரில் அவருக்கொரு ரசிகர் மன்றம் திறந்தாகி விட்டது.

பேபியாக வரும் நாசரைக் கண்டால் பயமாக இருக்கிறது. படத்தில் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக வரும் மெளலி நகைச்சுவை நடிப்பில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார். படத்தின் அத்தனைப் பாத்திரங்களும் இயல்பாக நடித்திருப்பதாலும், அருமையான திரைக்கதையாலும் விஜயிடமிருந்து நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்பட்டிருக்கிறது. படம் துவக்கம் முதல் முடியும் வரை கேண்டி யாதொரு கிண்டலும் செய்யாமல் அவ்வப்போது 'கடவுளே' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தாள். இதை விட வேறு என்ன வேண்டும் இந்தப் படத்தைப் புகழ?!
***
தஞ்சை ப்ரகாஷின் ஒரிரு கதைகளைப் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த கட்டுரையாளரும் கூட என்ற அறிமுகத்தோடு காவ்யா சண்முக சுந்தரம் தொகுத்திருந்த 'தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்' நூலை ஓரே மூச்சில் வாசித்து முடித்தேன். எதுமாதிரியும் இல்லாத ஒரு காட்டாற்று நடையில் கோபமும், கேலியும், கவலையும் முண்டியடிக்கும் எழுத்து நடை. பெரும்பாலும் தமிழின் எழுத்து ஜாம்பவான்களான க.நா.சு, வல்லிக்கண்ணன், கரிச்சான் குஞ்சு, பிரமிள், நகுலன், ந. பிச்சமூர்த்தி, ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், மெளனி போன்றவர்களின் இலக்கிய ஆளுமை குறித்தும், அவர்களுடான இவரது நட்பு குறித்தும், தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வொருவரது பங்களிப்பு குறித்தும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றப்படாதது குறித்தும், எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களின் வாழ்க்கை நம்பிக்கையற்றதாய் வறண்டு இருப்பதும் குறித்தான கட்டுரைகள்.

நாம் பார்த்தறியாத மணிக்கொடி எழுத்தாளர்களின் காலத்தில் வாழ்ந்தது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆயிரக்கணக்கான ஆச்சர்யமூட்டும் தகவல்களைப் போகிறப் போக்கில் சொல்லிச் செல்கிறார் ப்ரகாஷ். எழுத்து என்னை மிரட்டமுடியாது, எழுதுகிற பிழைப்பு, பாலம் என்றொரு சிற்றிதழ் ஆகிய கட்டுரைகள் ஒரெழுத்துக் குறையாமல் இன்றைக்கும் அப்படியே பொருந்திப்போவது தமிழ் எழுத்துலகின் அவலம்.

எழுத்தைத் தொழிலாக கொண்டவர்கள் பட்ட, படும் துயரங்களை வார்த்தைகளில் வடித்திருக்கிறார் ப்ரகாஷ். பாலம் என்ற சிற்றிதழைத் துவங்கி அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்மல்ல. இன்றும் கூட சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் புலம் பெயர்ந்துவிட்ட எழுத்தாளர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. தமிழ் வாழ தமிழிலக்கியம் வாழ எழுத்தாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்ற அற்புத எழுத்தாளர்கள் வாழ்க்கைத் தேடலுக்காக ஒரு வேலையில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு அழுகை வருகிறதோ இல்லையோ தமிழுக்கு அழுகை வரும். வாழும் காலத்தில் கவுரவிக்கப்பட்ட எழுத்துக் கலைஞன் எவனும் தமிழ் நாட்டில் இல்லை. செம்மொழி ஆவது இருக்கட்டும். அதற்கு செழுமை சேர்ப்பவர்கள் செல்லரித்துக் கிடக்கிறார்கள். எழுத்தாளர்களின் வாழ்க்கைச் செலவுகளை அரசாங்கமே ஏற்று நடத்துவதும், எழுத்திற்கான ஊதியம் சரியாகக் கிடைப்பதும், விருதுகளும் அங்கீகாரமும் தகுதியானவர்களுக்கு செல்வதும்தான் தமிழைப் பிழைக்க வைக்கும். இல்லாவிட்டால் என்னைப் போன்ற கள்ள எழுத்தாளர்களின் கேண்டிக் கதைகள் மட்டும்தான் மிஞ்சி இருக்கும்.

***
உமா ஷக்தி தன்னுடைய சிறுகதை கல்கியில் (21/09/08) வந்திருக்கிறது. படித்துவிட்டு கருத்து சொல் என்றார். உமாவின் கதைகள் மெல்லியல்புகளைக் கொண்டது. எந்த அசாதாரணத்தையும் எதிர்பார்க்க இயலாத எழுத்து நடை. ஒரிரு கதைகளை எழுதிய சக எழுத்தாளன் என்ற முறையில் என்னிடம் அபிப்ராயம் கேட்டதைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளக்கூடாதுதான் என்றாலும் எழுத எதுவும் கிடைக்காத ஒரு பதிவன் வேறு என்னதான் செய்ய முடியும்?!

சுய சிந்தனையும் இலக்கியத் தாகமும் கொண்ட ஒரு மணமுறிவு கொண்ட பெண். அதே போன்ற ஒத்த சிந்தனையும் உயர்ந்த ரசனையும் கொண்ட ஒருவனின் நட்பு அவளுக்கு வசந்தத்தின் வாசலைத் திறக்கிறது என்றபோதும் திருமணம் என்ற அமைப்பு எதிர்பார்ப்புகளைக் கட்டமைக்கும் அபாயம் இருப்பதால் அவனது காதலை நிராகரித்து நண்பனாகவே ஏற்றுக்கொள்ளும் 95களின் கதை. எளிமையான கதை சொல்லும் மொழி உமாவினுடையது என்பதால் அலுக்காமல் ஐந்தே கால் நிமிடத்தில் படித்து முடிக்க முடிகிறது. சட்டெனத் தோன்றிய ஒரிரு கமெண்டுகளை உடனே அழைத்து சொல்லி விட்டேன். உ.ம்:

"இமெயிலில் தமிழில் எப்படி எழுதுவது என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்." - சிறுகதைக்கு இத்தனை சிடுக்கு வாக்கியம் தேவையில்லை. தமிழில் இமெயில் அனுப்பத் தெரிந்து கொண்டேன் என்று எழுதினால் ஒரு வேகம் கிடைக்கும். கொட்டாவி தடுக்கப்படும். (சுஜாதா இல்லாத தைரியத்துல அவனவன் இப்படிக் கெளம்பிட்டானுங்க... என்று நீங்கள் நினைப்பது புரிகிறது)

இல்லைடா; செல்லம் - ஆகிய பிதற்றல் மொழிகளை இலக்கியப் பரிச்சயமும் சுய சிந்தனையும் உள்ளவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களது உரையாடல்களும் கடிதங்களும் கொஞ்சம் கூரிய வார்த்தைகளைக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் ரியாலிட்டி கிடைக்கும்.

இந்தப் பத்திரிகைக்கு இப்படி எழுதினால்தான் போடுவார்கள் என்பதை விட்டொழித்து வெகு விரைவில் அற்புதமான கதைகளோடு உமா ஷக்தி நம்மை சந்திப்பார் என்று நம்புவோமாக...!

(பி.கு: "மீசைக்கார அங்கிள் கதையெல்லாம் அப்பப்போ போடுறாங்கன்னு பயந்து குங்குமம் வாங்கறதையே நிறுத்திட்ட.... ஆனா உமா எழுதறாங்கன்னு கல்கியெல்லாம் வாங்கி கவனமாப் படிச்சு கமெண்ட் எழுதுறீயேடா... ஜொள்ளுப்பார்ட்டிடா நீ!" என்ற கேண்டியிடம் உமா எழுதிய “கடோபநிஷத்” (கிழக்கு வெளியீடு) நூலைக் காட்டினேன். “அடப்பாவி சாமியார்களைக் கூட விடமாட்டியா நீ...!” என்றாள்.

Thursday, September 11, 2008

'பிரியாணி' என்று ஒரு பெண்ணின் பெயர்

சிவா, பூங்கொடி கல்யாண வைபோகமே... (லேட்டஸ்ட் லைவ் ரிப்போர்ட்)என் கல்யாணத்துக்கு நான் கல்யாணத்தன்றுதான் போனேன் என்கிற கதையைச் சொல்ல இது உகந்த தருணமல்ல. நான் சொல்லியிருந்தபடி காலை ஆறு மணிக்கே அம்மா எழுப்பிவிட, மிளகாய்த்தூள் பற்று போட்டது போல் கண்கள் கனல எழுந்து குளித்துவிட்டு (எத்தனை வருஷமாச்சு... அட சீக்கிரம் எழுந்ததைச் சொன்னேன்யா) புறப்பட்டேன். காபியை- சரவணபவனில் வாங்கிக் கொடுப்பார்கள்- மறுத்துவிட்டேன். அங்கே கூட்டம் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 'ஒரே நாளில் பத்தாயிரம் கல்யாணம்' என்று பத்து வருடங்களுக்கு முன்பே வடபழனி கோயிலைப் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். போகிற வழியில் போன். தம்பி செல்வேந்திரன். கல்யாணத்துக்குப் போவதாகச் சொன்னதும் 'ம்... ஜாலி' என்றான். (அவன் வாக்கு பலித்த விதத்தைக் கடைசியில் விளக்குகிறேன்.) 'இங்கே', 'அங்கே' என்று தாக்காட்டி, கோயிலிலிருந்து ஒன்றரை கி.மீ. தள்ளித்தான் வண்டியை பார்க் செய்ய முடிந்தது. வண்டியை நிறுத்தியதுதான் தாமதம் எதிரிலிருந்த கடைக்காரர் வண்டி எடு வண்டி எடு என்று கத்த ஆரம்பித்தார். பதற்றம் அதிகரிக்க அஞ்சே நிமிஷம் என்றேன். கடைக்காரர் பிடிவாதம் பிடிக்கவே, போய்யா என்று விட்டு நடந்தேன். வண்டியில் PRESஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த தைரியம். எதிர்பார்த்ததைவிடக் கூட்டம். ஆச்சர்யகரமாக இளம்பெண்கள் தொகை ஜாஸ்தியாக இருந்தது. நெரிசல். மணமக்களை அடையாளம் தெரியாது. எனக்கே தெரியாமல் என்னிடம் இருந்த பாசத்தால் புறப்பட்டு வந்துவிட்டேன். என் இரண்டே நம்பிக்கைகள்: பாலபாரதி, லக்கிலுக். அவர்களின் முகத்தைக் கண்டுபிடிக்க கூட்டத்துள் முண்டினேன். பெண்களிடம் இடிபடுவதுதான் சிரமமாக இருந்தது (வயிற்றில் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்). ம்ஹூம்... இந்தப் பெருங்கூட்டத்தில் கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்று புரிந்து போயிற்று. கையிலிருந்த பரிசோடு (நம்பவும்) வால்பையன், பரிசல்காரன் ஆகியோரின் வாழ்த்துக்களும் சேர்ந்து கனத்தது. இப்போது என்ன செய்வது? பெண்களின் அன்பான அநுமதியின் அடிப்படையில் ஒரு மூலையில் ஒண்டி யோசிக்க ஆரம்பித்தேன். பெருமளவில் செல்கள் சிதைந்திருந்த மூளை சிந்திக்க மறுத்தது. கடைசியாகத் தொலைத்து, சமீபத்தில்தான் மொபைல் வாங்கியிருந்ததால் கான்டாக்ட் எண் எதுவும் இல்லை. நினைவிலும் எண்கள் இல்லை (செல் பிராபளம்). அப்போதுதான் சிறு கூட்டம் ஒன்று கோயில் தூணைப் பார்த்துக் கொண்டிருப்பது தென்பட்டது. அதில் ரிசர்வேஷன் சார்ட் போல மணமக்கள் பெயர்களும் சந்நிதி எண்களும் கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. ஓ.கே. 'ரிபீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்' என்று மணமேடையில் கத்துவேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்ததை நிறைவேற்றிவிடலாம். பெயர்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். மங்களூர் சிவா என்பது புனைபெயர் என்பதும் அவருடைய இயற்பெயர் சிவ சம்திங் என்பதும் ஒருசேர நினைவுக்கு வந்தது. மணமகளின் பெயர் block ஆகிவிட்டது. 'விளங்கும்" என்று நினைத்துக்கொண்டு பட்டியலில் சிவ வைத் தேடத் தொடங்கினேன். இன்று காலை எழரை ஒன்பது முகூர்த்தத்தில் மட்டும் 147 கல்யாணங்கள். நல்லது. விதவிதமான பெய‌ர்கள். 43‍வது ரமேஷ் என்று கண்டிருந்தது. சில விநாடிகளில் தலையை உலுப்பி சுதாரித்துக்கொண்டு... ஹ... பெண்ணின் பெயர் பூங்கொடி... மணமகள் பட்டியலில் தேடத் தொடங்கினேன். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பெயர்களில் பல விநோதமாக இருந்தன. தேஜஸ்தா, அன்னமணி, கல்பசுரிதா ஆகியவை சில உதாரணங்கள். 'பிரியாணி' என்று ஒரு பெண்ணின் பெயர். உற்றுப்பார்த்ததில் 'பிரியாரணி' என்று இருந்தது. (பிரியராணியின் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.)பூங்கொடி பெயர் இல்லை. சிவாவைக் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் ஆசை, வீம்பாகவே மாறிவிட்டது. புலனாய்வுப் பத்திரிகையாளர் விடுவேனா..? சரவணபவனில் நுழைந்தேன். அங்கே முந்தைய முகூர்த்தத்தின் 147 கல்யாண கோஷ்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தது. சந்தோஷம். கண்ணுக்கெட்டியவரை தென்பட்ட முகங்களில் பார்வையை ஓட்டினேன். அப்பாவி முகங்கள், கெத்தான முகங்கள்... பதிவருக்குண்டான ரெண்டுங்கெட்டான் முகங்கள் எதுவும் தென்படவில்லை. ஓ.கே. எப்படியும் ரெண்டு பதிவராவது ஆபீசுக்கு மட்டம் போடுவார்கள், ஒரு நல்ல கடையாகப் பார்த்து உட்கார்ந்து, ஒரு நாலு மணி நேரம் நாட்டைக் காப்பாற்றுவதைப் பற்றி விவாதிக்கலாம் என்று நேறு ராத்திரி வாங்கி வண்டியின் சைடு பாக்ஸில் வைத்திருந்ததைத் தனி மனித ராணுவமாகவே காலி செய்யவேண்டியதுதான் என்று, வண்டியை எங்கே நிறுத்தினோம் என்று யோசித்தபடி நடந்தேன். அனிச்சையாக வண்டிச்சாவிக்காக பாக்கெட்டுக்குள் கை போனது. ஆம், சாவி இல்லை. வண்டி இருக்குமா என்று அடுத்த பதற்றம். நடையை எட்டிப் போட்டேன். ஹ... வண்டி இருந்தது. வண்டியிலேயே சாவியும் இருந்தது. ஆனால் இரண்டு சக்கரங்களிலும் காற்றுத்தான் இல்லை. லோக்கல் ஆட்களைப் பகையேல்!ஆபீஸுக்கு போன் போட்டு "வடபழனி முருகன் கோயிலில் கல்யாணம் வைத்தால் உணவு வகையறா செலவைப் பெருமளவு குறைக்கலாம்" என்று நாணயம் விகடனுக்கு ஒரு துணுக்கு சொல்லிவிட்டு, சந்தடி சாக்கில் வொர்க்கிங் ஃப்ரம் ஹோம் சொல்லி பங்க்ச்சர் வண்டியின் சைடு பாக்ஸைத் திறந்தேன். By: ரமேஷ் வைத்யா.

Friday, September 5, 2008

ஆடுவோமே... கள்ளு போடுவோமே"

"ஆடுவோமே... கள்ளு போடுவோமே" என்ற இந்தப் பதிவு என் இலக்கியத் தாயின் மாண்பைக் குறைப்பதாக இருப்பதாக எனது நண்பர்கள் குறைபட்டுக்கொண்டதால் அதனை நீக்கம் செய்துவிட்டேன். பாரதியை யாரும் "கஞ்சா கசக்கி" என்றோ ஜி. நாகராஜனை யாரும் "பொம்பளைப் பொறுக்கி" என்றோ விக்கிரமாதித்தனை யாரும் "குடிகாரப்பயல்" என்றோ அழைப்பதும் இல்லை. அர்த்தப்படுத்திக் கொள்வதும் இல்லை. படைப்பாளி வேறு; படைப்புகள் வேறு என்று பிரித்துப் பொருள் கொள்ளும் அளவிற்கு சமூகம் வளராத காரணத்தினாலும், என் அன்பு இலக்கியத்தாயின் மீது நான் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாகவும் இக்கட்டுரையை இங்கிருந்து நீக்கி விடுகிறேன். மனதில் இருந்து அல்ல...

Thursday, September 4, 2008

துரோணாச்சாரியார்

கேண்டியின் குறுஞ்செய்திகளைத் தாண்டி எப்போதாவது சில நல்ல தகவல்களும் இன்பாக்ஸூகளை வந்தடையத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் வடிவேல் அண்ணன் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக சேர்ந்த தகவலும். நண்பர்களின் வாயிலாக நான் அறிந்து வைத்திருக்கின்ற தகவல்களின்படி மிஷ்கின் நல்ல இயக்குனர் மட்டுமல்ல. நல்ல மனிதரும் கூட. தேர்ந்த வாசிப்பும், சினிமா ஞானமும் தாண்டி சக மனிதர்கள் மீதான அவரது அன்பை படைப்புகளின் மூலமாகவும், செய்கைகளின் மூலமாகவும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர். உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கொடுக்கிற வெகு சிலர்களில் ஒருவர். அவரோடு வடிவேல் இணைந்திருப்பது சந்தோஷமளிக்கிறது. சில நேரங்களில் ஒத்த துருவங்களும் ஒன்றை ஒன்றை ஈர்க்கும் போலும். டைரக்டர் வடிவேல் என்றே அவரது எண்களை மொபைலில் சேமித்துக்கொண்டு விட்டேன்.

அபினவ் பிந்திராவுக்கு தங்கம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் மொத்த அலுவலகமும் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிக்கொண்டிருந்தோம். இனிப்பில் வறுத்த முந்திரியாக இந்திய அணியின் வாலிபால் பயிற்சியாளரான ஸ்ரீதரனுக்கு துரோணாச்சாரியார் விருது கிடைத்த செய்தியும் வந்தடைந்தது. இந்திய அணிக்காக அவர் விளையாடிய காலத்தில் ஏற்கனவே அர்ஜூனா விருது பெற்றவர். பயிற்சியாளராகவும் இந்திய வாலிபால் அணிக்கான அவரது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அநேகமாக துரோணாச்சாரியார் விருது பெரும் முதல் தமிழர் இவராகத்தான் இருப்பார். அன்று மாலையே அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்திய வாலிபால் அணியில் தற்போதைய நிலை, இத்தாலியில் ஐந்தாண்டுகள் லீக் ஆடிய போது கிடைத்த அனுபவங்கள், வீரர்களை விட அதிகமாக அரசியல்வாதிகள் ஆடும் விளையாட்டு, வாலிபால் வலிமை பெற மேற்கொள்ள வேண்டியவைகள் என்று அவரது கவலைகளும் கனவுகளும் அதிகம் இருக்கின்றன. முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக விளையாடிய களைப்போ அலுப்போ கடுகளவும் தெரியவில்லை. இன்னும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துக்களை கொடுத்துவிட்டு கேண்டியைப் பார்க்கச் சென்றேன். வாலிபால் மாதிரி சுக்ரீவன் பால், அனுமன் பால் எல்லாம் ஏன் வரவில்லை என்று அவள் கேட்கும் அபாயம் இருப்பதால் ஸ்ரீதரனை சந்தித்ததை சொல்லவில்லை.

திரைப்படங்களுக்கு கேண்டியை அழைத்துச் செல்வது நள்ளிரவு வடபழனியில் நடப்பதை விட அபாயகரமானது என்பதால் குசேலனுக்குத் தனியனாய் சென்றேன். அருமையான கதைகளை வைத்துக்கொண்டு கோமாளித்தனம் செய்வதில் தான் ஒரு வல்லவர் என்பதை பி.வாசு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பாபாவைக்கூட பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்து திரும்பிய பரம ரஜினி ரசிகனான என்னையே சாவு அடி அடித்து அனுப்பினார்கள். ஒரு முழுத்தலைவலியை முழுமையாக உணர்ந்தேன். 'அஞ்சு பாபி ஜார்ஜ் தங்கம் வாங்கி விட்டார்' என்ற ஒரு குறுந்தகவலும் அதைத் தொடர்ந்து 'வாங்கிய இடம்: ஜாய் ஆலுக்காஸ், பனகல் பார்க், சென்னை' என்றொரு மெஸெஜும் கேண்டியிடம் இருந்து வந்தது.

அற்புதமானவை

பபாஸி கோவையில் இரண்டாம் முறையாக நடத்திய பதினொறு நாள் புத்தகத் திருவிழாவில் அனைத்து நாட்களிலும் முழு நேரமும் கண்காட்சியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டைவிடவும் இம்முறை விற்பனையும், வாசகர் வரத்தும் மிகவும் குறைவுதான். ஆடிக்கழிவுகளில் ஆழ்ந்திருக்கும் மக்களை புத்தகங்கள் பக்கம் ஈர்ப்பது சிரமமான காரியம்தான். ஜாதுகர் ஆனந்த், ரஸ்ஸியன் சர்க்கஸ், பனிமலை அனுபவம், எதையெடுத்தாலும் பத்து ரூபாய் கடைகளுக்கு மொய்க்கும் கூட்டத்தில் பத்து சதவீதம் புத்தகக்கடைகள் பக்கம் வந்தால் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்புகள் வாழ்ந்துவிடும் சாத்தியம் இருக்கிறது.

கடந்த ஆண்டில் வாங்கிய புத்தகங்களில் இன்னும் ஒரிரண்டு புத்தகங்களைப் படிக்கவில்லையென்றாலும் அபிமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்த்துவிட்டால் ஒரு 'ஷிவரிங்' ஏற்படத்தான் செய்கிறது. நகுலனின் நினைவுப்பாதை, பிரமிள் படைப்புகள், ஜெயமோகனின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், ஜி. நாகராஜன் ஆக்கங்கள் முழுத்தொகுதி, செழியனின் உலக சினிமா, ஓஷோவின் ஒரு மறைஞானியின் சுயசரிதை, கந்தர்வன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், விடுதலைப்புலி திப்பு சுல்தான், தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள், இந்தியப் பத்திரிக்கைகள் 1955 முதல் ஆகிய புத்தகங்களை வாங்கினேன்.

மற்ற எதையும் விட மனுஷ்யபுத்திரனின் தலையங்கம் (இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் பற்றி எழுதும்போது மட்டும் பூனை வெளிவரும் என்ற போதும்) என்னைத் தொடர்ந்து உயிர்மை வாங்க வைக்கிறது. சில இதழ்கள் வாங்க தாமதமாகி விடுகிறது அல்லது தவறிவிடுகிறது என்பதால் ஓராண்டுக்கான சந்தாவை செலுத்தினேன்.

திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்த விக்னேஸ்வரி சுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலையும், நாஞ்சில் நாடனின் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மையும் (நாஞ்சிலாரின் கையொப்பத்துடன்) வாங்கி பரிசளித்தாள். நாங்களிருவரும் அறிந்த ஓரு உள்ளூர் பத்திரிகையாளர் 'ஆபாச எதிர்ப்பு கருத்தரங்கு' ஒன்றில் வீறு கொண்டு சூலுரைத்த தகவல் வெளியாகி இருந்த நாளிதழைப் படித்துவிட்டு 'கிழி...கிழின்னு கிழிச்சுட்டார்பா.." என நக்கலோடு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். கியான் ரிக்தா மேடம் ஓஷோவின் வெற்றுப்படகு இரண்டு பாகங்களையும் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்ததுடன் எனது பிறந்தநாளை ஸ்வீட், கேக் என அனைத்து ஸ்டால்காரர்களுக்கும் விநியோகித்து என்னை நெகிழ வைத்தார்.

வழக்கமாக கிழக்கு பதிப்பகத்தை நெல்லிக்காய் வியாபாரிகள் என கிண்டல் செய்யும் கேண்டி இந்தமுறை முழுக்க முழுக்க கிழக்கில்தான் புத்தகம் வாங்கினாள். கேம்பஸ் நெருங்குவதைத் தொடர்ந்து ஸிக்ஸ்மா, அம்பானி, நாராயணமூர்த்தி மற்றும் சில பாரதி புத்தகாலய வெளியீடுகளையும் நண்பர்களுக்குப் பரிசளிக்க ஆங்கில கிராமர் புத்தகங்களையும் வாங்கிக்கொண்டாள். எங்களது மேனேஜ்மேண்ட் புத்தகம் ஒன்றை எப்படியாவது அவளது தலையில் கட்டிவிடலாம் என முயற்சித்தேன். நான் சிபாரிசு செய்த காரணத்தினாலோ என்னவோ முற்றிலுமாக நிராகரித்தாள். கணபதி அண்ணன் தன்னால் மூன்றாயிரம் ரூபாய்க்குத்தான் புத்தகம் வாங்க முடிந்தது என வருத்தப்பட்டார். இதற்கும் பணவீக்கம்தான் மறைமுகக்காரணி எனக் கோபப்பட்டார்.

புத்தகங்களை வாங்குவதிலும், விற்பதிலும் பரிசளிப்பதிலும் மிகுந்த தீவிரமாக இருந்ததால் எனது அபிமான பேச்சாளர்களான கு. ஞானசம்பந்தன், எஸ். ராமகிருஷ்ணன், பர்வீன் சுல்தானா மற்றும் கோபிநாத் ஆகியவர்களின் பேச்சைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. இம்முறை நான் வாங்கிய அனைத்து புத்தகங்களுமே அற்புதமானவை. இவைகளை வைத்துக்கொண்டு இந்த மழைக்காலத்தை அனுபவிக்க போகிறேன்.