Thursday, December 27, 2012

ஈராறுகால் கொண்டெழும் மந்தி!


* கோட்டிக்காரத்தனமெனினும் மனம் ஒப்பி செய்தால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தான் செய்கிறது!

* உற்றுப் பார்க்காதே... ஒற்றுப்பிழை தெரியும்.

* ஆத்தங்கரை மரமே... அதில் உறங்கும் குரங்கே...# இளவெயினி ராகங்கள்

* ஒரு சிந்தனையாளனாக காலம் தள்ளுவது நீங்கள் நினைக்கிற அளவிற்கு சுலபமானது அல்ல.

* நிர்மலா பெரியசாமிக்கு ஏன் இன்னும் மகாசேசே விருது வழங்கப்படவில்லை?!

* முறுக்கை எண்ணெயில்தானே பொரித்தெடுக்கிறார்கள்; பிறகேன், முறுக்கு 'சுடுகிறேன்' என்கிறார்கள்?!

* எங்கள் வழவில்... கிடக்கும் டயரில்... தங்காமல் நீ ஓடு கொலைகார கொசுவே... டெங்கே அடங்கு... டெங்கே அடங்கு # சங்கே முழங்கு!

* நல்லவனாய் இருப்பதை விடவும், நடிப்பதை விடவும், நல்லவனைப் போல ட்வீட்டுவது கடினமாக இருக்கிறது.

* கேஜ்ரிவாலை ஏதேனும் ஏஜென்ஸி அணுகி விளம்பரப்படங்களுக்கு நடிக்க வைத்தால் செம மைலேஜ் கிடைக்கும் # பிரகலாத் ஹால்கர்/அல்வின் சல்தானா கவனத்திற்கு...

* என் ஓவியங்கள் விற்ற பணத்தில் சல்லி நயாப் பைசா கூட சாரிட்டிக்கு வழங்கப்பட மாட்டாது என உறுதியளிக்கிறேன்.

* ச்சே..கவிதைன்னா வாசிச்சதும் நாண்டுக்கிட்டுச் சாகலாம்னு தோணனும்கிற எளிய விஷயம் கூட தெரியாத மண்டூகங்களின் மத்தியில் கவிஞனாக வாழ்வது கடினம்.

* பட்டம் விடுவது, மீன் பிடிப்பது, பப்புள்ஸ் விடுவதைப் போலவே ஈகிள் துப்பாக்கியில் ரோல் கேப் வெடிப்பதும் பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீஸாக இருக்கிறது.

* பள்ளி ஞாபகங்களைப் போல நெஞ்சடைக்கச் செய்வது வேறேதுவும் இல்லை.

* மனுஷ்யபுத்திரன் ட்வீட்டரில் இல்லை என்பதே பெரும் ஆறுதலாக இருக்கிறது.

* திரு போனில் யாரிடமோ இரைந்து கொண்டிருந்தாள் 'pizza can be delivered in time, people who wants to be unique can wait for creativity'. வாஸ்தவம்தான்.

* கிறுக்கன்களுக்கு தனி நாடும், ஆயுத பலமும் கிடைத்தால் இப்படித்தான் நடக்கும் # இஸ்ரேல்

* சிலபஸ் நல்லா இருக்கான்னு பார்க்கும்போதே ஸ்கூல் பஸ்ஸூம் நல்லா இருக்கான்னு பாருங்க...

* மசகலி, வசகலி போன்ற கொசுவலை சுடிதார்களால் டெங்கு மட்டுப்பட்டிருக்கிறாவென விசாரிக்க வேண்டும்.

* மனசு நினைக்காததையும் சமயங்கள்ல நாக்கு சொல்லிடும். ஃப்ளோவா வருதுன்னா ஸ்லோவா ஆயிடனும். இல்லன்னா சிக்கல்தான்.

* பூ மலர்வது இரவுக்குத் தெரியும்... கவி மலர்வதை இதயமும் அறியும்.

* பெரும்பாலான நாடோடி கதைகளை கம்போடியா என்பவர்தான் எழுதியிருக்கிறார்.

* ஒருவன் உலகின் ஜனங்களையெல்லாம் ஃபாலோயர்ஸ் ஆக்கிக்கொண்டால், அதனால் அவன் அடையும் லாபம் என்ன?! ஒன்றும் இல்லை. ஆமென்.

* ஒரு மணி நேரமாக வானம் கிழிந்து பெய்கிறது. பன்சிட்டி மாலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறேன். நல்ல வேளைக்கு கவிஞன் எவனும் அருகில் இல்லை.

* பெத்து எடுத்தவதான் என்னையும் மொத்தி எடுத்துப்புட்டா... # இளவெயினி சோகங்கள்

* கலையால் கைவிடப்பட்ட கண் சோர்ந்த முதுமையில் அய்யோ என்னைக் கவனியுங்கள்..கவனியுங்கள் என கண்ணெதிரே ஒருவன் தேய்ந்தழிவது எத்தனை துயர் மிகுந்தது?

* ஏன் இன்னமும் கோணங்கியின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கிறது?!

* நாகஸ்வரமும், தவிலும் ஒலிபெருக்கி தேவைப்படாத வாத்தியங்கள் என்பதை எப்பத்தாம்யா தெரிஞ்சுக்கப் போறீங்க?!

* நான் பிஸ்கட்டும்,முறுக்கும் போட்டு போஷித்த கருவாயனை நேற்று சின்மயா நகரில் ஒரு செவளையோடு பார்த்தேன்; வீட்டோடு நாயா போயிட்டான் போல!

* இந்த உலகம் என்னைப் பின்தொடர்வது என் உயர் கவித்துவத்திற்காக, தத்துவத்திற்கா,மொழிநடைக்கா அல்லது ஓவியங்களுக்கா?! குழப்பமாக இருக்கிறது.

* நம்பு; இல்லையெனில் வம்பு.

* சாமிக்கே பாக்கெட் பால். பூசாரிக்குப் பண்ணைப் பாலா?!

* இரையாதே; இரையாகாதே!

* தூங்கும்போது கூட காலை ஆட்டிக்கிட்டு இருக்கணும்; இல்லன்னா 'மண்டய போட்டுட்டான் மடப்பயல்னு' ஸ்டேட்டஸ் போட்ருவானுக! கொள்ளைல போவாணுவோ...!

* ஆடி போனா ஆவணி... தேடிப் போயி சாதி நீ!

* நாட்டு மக்களுக்கென தினமும் ஏதாவது சொல்லாவிட்டால் நமநம என்றிருக்கிறது. தேசத்திற்கு இன்றைய செய்தி ‘உழைத்துயருங்கள்’

* உரிய கிரெடிட் கொடுக்காமல் ஒருவனின் ஐடியாக்களைத் திருடுவது பொன்முட்டையிடும் வாத்தை பொரித்து தின்பதைப் போல.

* பொய் சொன்ன வாய்க்கு போஜனமும் கிடையாது; போண்டாவும் கிடையாது!

* ”எனது பாடலை நதியில் இறக்கி விட்டேன்...அது உன் காலடியை வந்தடையட்டும்”னு கவித்துவமா மெஸெஜ் அடித்தேன்; ரிப்ளை: நதியை மாசுபடுத்தாதே!

* கவிதைகள் கொஞ்சம் ஏப்ப சாப்பையா இருந்தாலும்... அதுக்கு செலக்ட் பண்ற இமேஜஸ்ல நம்மளை அடிச்சுக்க ஆளே இல்லை.

* சாய்ந்து... சாய்ந்து...சைக்கிள் ஓட்டும்போது... அடடா... ஹேய்ய்ய்ய்....

* கூகிள் கூகிள் பண்ணிப்பார்த்தேன் ஒலகத்துல... எங்கம்மா போல டார்ச்சர் கேஸூ எவளும் இல்ல... # இளவெயினி ராகங்கள்

* நீர்ப்பறவையில் லூர்து சாமி, அருளப்ப சாமியென பல சாமிக்கள் வருகிறார்கள். அரங்கசாமியும் வந்திருந்தால், முழுமையான கலைப்படைப்பு ஆகியிருக்கும்.

* ஓரெயொரு ஊரிலே... ஓரெயொரு குட்டிம்மா... குட்டிம்மாக்கு பிடிச்சதெல்லாம் ரெண்டு சட்டி உப்புமா...# கடந்த நிமிடத்தில் இயற்றிய குழந்தை பாடல்.

* புரொபைல் பிக்சர் மாத்துனதும் ஃபர்ஸ்ட் லைக் எவன் போடுறானோ அவன்தான் பாப்பாவோட பாய் ஃப்ரெண்ட் என யூகிக்கலாம்.

* ஜவுளி வாங்கினதுக்கு ஒரு காலண்டர் கொடுத்தான் ஶ்ரீதேவில. 'ஏம்பா...கிங் ஃபிஷர் காலண்டர்லாம் தர மாட்டீங்களா...' திரு என் குமட்டில் குத்தினாள்.

* ஹவுஸ் ஓனர்களின் உளவியல் சித்திரவதைகளுக்குப் பயந்து செய்து கொள்ளும் தற்கொலையே ஹவுஸிங் லோன்!

* காதலை எதிர்ப்பதற்கு முன் அரசியல்வாதிகள் அவரவர் பிள்ளைகள், பேரன், பேத்திகளின் காதல் விவகாரங்களைப் பைசல் செய்துவிட்டு வரவும்.

* நடுவுல கொஞ்சம் ஸ்டெம்ப காணோம் # சேவாக்,சச்சின்

* படத்துக்கு பாட்டே பரவாயில்லையெனும் பொது அபிப்ராயத்தை உருவாக்கி ராஜாவை மீட்டெடுத்த மேனன் என நீ இன்று முதல் புகழப்படுவாய்...! # நீஎபொவ

* அம்பார பாக்குல ஒரு பாக்கு என் பாக்குன்னானாம்...

* ஃபெமினா தமிழ்ப் பதிப்பின் ஓரே குறைபாடு அது தமிழில் இல்லாததுதான்.

* 'எதிர்பாரா விருந்தாளி' எனும் பதமே செல்போனால் ஒழிந்து விட்டது.

* டிசம்பர் 31ம் தேதிக்குள் ஏதாவது கெட்டப் பழக்கமொன்றை கற்றுக்கொண்டாக வேண்டும். இல்லையெனில் ஜனவரி ஒன்றாம் தேதி கையறு நிலையாகிவிடும்.

* விண் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் 'யாதவர்களே... யாதவர்களே...' எழுச்சிப் பாடல், ராஜா சார் இசையமைத்ததா?!

* தூங்காத எலிகள் ரெண்டு... தவறாமல் உதைகள் உண்டு... # இளவெயினி ராகங்கள்

* நண்பர்களே...நெய் மீன் என்பது அசல் நெய்யினால் செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை நீங்கள் இன்றாவது தெரிந்து கொள்ள வேண்டும்...

* சிந்திச்சு பார்த்து... சேனலை மாத்து... சிறுசாய் இருக்கையில் மாத்திக்கோ... மொக்கை சிறுசாய் இருக்கையில் மாத்திக்கோ...!

* இந்த கிறிஸ்மஸ்நாளில் எனது ஹார்வர்டு நாட்களை நினைத்துக்கொள்கிறேன்;ரெண்டு செட் ஜூனியரான ஸக்கர்பெர்க் கேக் எடுத்துக்கொண்டுஹாஸ்டலுக்கே வருவான். மெரி கிறிஸ்மஸ்!!!

* அகார்கர், சஞ்ஜெய் பாங்கர், ஜோஹிந்தர், டிண்டா - ஒரே பவுலருக்கு எதற்கு நான்கு பெயர்கள்...?!

* வீட்டு டிவில ரோஹித் சர்மாவை பார்க்கும்போதெல்லாம் சச்சின் கை தட்டி சிரிக்காராம்ல...?!

* அன்சுல் மிஸ்ரா பிறந்த ஊரின் தண்ணீரை என் பிள்ளைக்கு கொடுத்து வளர்க்க ஆசைப்படுகிறேன்.

* புத்தகத்தைக் கொடுத்து உஷார் பண்ண ஒருபோதும் எண்ணாதே! புத்தகம், நட்பு இரண்டையும் இழப்பாய்! - ஜென் குரு மசானமுத்து

* திருவாதிரை நாள் ஒருவாய் களியுண்ண வழியில்லை... பன்னிருகை கோலப்பா... கொண்டாப்பா ஒரு ஜிகர்தண்டா!

(நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிந்தித்து இந்நாட்டு மக்களுக்கு அருளிச்செய்த ட்வீட்டுரைகளின் தொகுப்பு. வாழ்வு வளம்பெற... எண்ணியவை ஈடேற... நாள் தவறாமல் பாராயணம் செய்யுங்கள்...!)

சினிமா ரசனை - புத்தக வெளியீடு


சென்னையில் மக்கள் கலை விழா!


Tuesday, December 4, 2012

விஷ்ணுபுரம் விருது 2012... கவிஞர் தேவதேவனுக்கு...

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதைக் கவிஞர் தேவதேவனுக்கு அளிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓர் இலையைக்கொண்டு ஒரு கானகத்தை உருவாக்குகிறேன் என்று தேவதேவன் ஒருமுறை சொன்னார். அவரது மொத்த கவியுலகமும் ஓர் இலை. மானுடனை ஒரு துளிச்சிதறலாக உணரச்செ

ய்யும் பெரும்கானகமொன்றை சுட்டிநிற்கின்றது அது.

தேவதேவனுக்கு இவ்விருதை அளிப்பதில் பெருமைகொள்கிறோம். இது விஷ்ணுபுரம் அமைப்பின் மூன்றாவது விருது. முதல் விருது 2010இல் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது விருது 2011இல் எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது.
மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் முகமாக அடுத்த தலைமுறையினர் அளிக்கும் விருது என்பதே இவ்விருதின் சிறப்பு. இந்த விருதை ஒட்டி தேவதேவனைப்பற்றிய நூல் ஒன்றும் வெளியிடப்படும்.

வரும் 22- 120 2012 அன்று மாலை கோவையில் விழா நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து கூடுகிறார்கள். 23 ஆம் தேதியும் அங்கே தங்கியிருந்தபின் திரும்புகிறார்கள். வழக்கம்போல இது ஒரு வருடாந்தர கல்யாணக் கொண்டாட்டம்.

தேவதேவனுக்காக ஓர் இணையதளம் நம் நண்பர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தேவதேவன் கவிதைகளை அது தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

தொடர்புக்கு arangasamy@gmail.com

நன்றி: ஜெயமோகன்.இன்

Thursday, November 15, 2012

தருணம்
வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு மழை வந்து விடுகிறது

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
யாராவது வந்து வழி விசாரிக்கிறார்கள்

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலர் தொடர்பு எல்லைக்கு வெளியிலே இருக்கிறார்கள்

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு வயிற்றுப்போக்கு பெருக்கெடுத்துவிடுகிறது

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலரது முதுகில் ஒட்டுப்புல் ஒட்டிக்கொள்கிறது

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு கள்ள சம்போகம் கிட்டுகிறது

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலர் பரோட்டா சாப்பிடுகிறார்கள்

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்
சிலர் கவிதைகள் எழுதுகிறார்கள்.

(தினகரன் தீபாவளி மலரில் வெளியான கவிதை)

Monday, October 22, 2012

சின்மயி

இவ்விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவன் என்கிற முறையில் இணையத்தில் சின்மயி எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டார் என்பதை அறிவேன். அந்தந்த தருணங்களில் இந்த சல்லித்தனத்தை கண்டித்தும் வந்திருக்கிறேன். விவகாரம் இந்த அபாய எல்லையை அடைந்து விடக்கூடாது என்கிற அக்கறையில் சில முறை இருதரப்பிற்கும் இடையே சமாதான முயற்சியையும் எடுத்திருந்தேன். ஆணாதிக்க கும்பல் மனோபாவத்தின் முன் எதுவும் எடுபடவில்லை. சின்மயியின் தன்னிலை விளக்கத்தோடு வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். உங்கள் பார்வைக்கு பகிர்கிறேன்.

சின்மயி விளக்கம்:

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி#TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் . இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கth தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.


Saturday, September 22, 2012

மனக்காளான்


* வா சனியனே / காத்திருக்க நேரமில்லை # காதல் கவிதை


* நல்லவனுக்கு தாகம் எடுத்தா நாடே தண்ணி கொடுக்கும்டா # பன்ச்

* டேய்... அட்ரஸ் இல்லாம திரியற பேயோன் இல்லடா நான்... ஒரிஜினல் ஐடியுள்ள தூயோன் டா # பன்ச்

* டேய்... நான் ஜெயனின் தேரோட்டி... நீ சாருவின் பீர் புட்டி! # பன்ச்

* ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக... சிறிது கடலை போட்டால் தப்பில்லை!

* ஜிந்தாக்கா... ஜிந்தா... ஜிந்தா... ரிங்டோனாக வைக்க உகந்த பாடல்; அழைப்பு வந்தால் அனைவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

* போலீஸ் என்றதும் ஒண்ணுக்கடிக்காத கலகச் சிந்தனையாளர்கள் ட்வீட்டரில் உண்டா...?!

* உன்னைப் பெற்ற மாதா எங்கே... போய் விட்டாரோ... போய் விட்டாரோ... எனும் பழம்பாடலின் மிச்ச வரிகள் எவருக்கேனும் தெரியுமா?!

* அன்பே / கலக்க விடு / அல்லது கலந்து விடு / இல்லையேல் கலக்கியாகினும் விடு # ட்வீட்டுலக காதல் கவிதை

* இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் / ஒரு இஞ்ச் மட்டும் வச்சு வெட்டுங்க / லேட்டா வந்தா பூ வாங்கிட்டுத்தான் வரணும் / மச்சி, ரெண்டு பால் டிஃபென்ஸ் ஆடிக்க.. / பி சைட்ல மோகன் ஹிட்ஸ் போட்ருங்க / சார் ஒண்ணுக்கு... / ஒங்களுக்கு ஒண்ணும் இல்ல... நீங்க பர்பெஃக்ட்லி ஆல்ரைட்... / எழுத்தாளன் இறந்துவிட்டான்.../ நடிக்க வராவிட்டால் டாக்டர் ஆகியிருப்பேன் / சட்டம் தன் கடமையை செய்யும்... # காலாவதியாகிப் போன வசனங்கள்


* கார் புடிச்சு போக வசதி பத்தாது; பஸ்ஸூல போக பொறுமை பத்தாது. ரெண்டு புள்ளைய பெத்த இந்தியக்கணவர்களுக்கென்று 4 பேர் பயணிக்கும் பைக் தேவை.

* எஸ்ராமகிருஷ்ணன் மீது கொண்ட பக்தியின் காரணமாகவே பவுண்ட் எனும் ஆங்கிலக்கவி தன் பெயரை எஸ்ராபவுண்ட் என மாற்றிக்கொண்டார் # ஆசிறிய குறிப்பு

* புத்தர் எதிரில் வந்தார்; கிட்டப் போய் உற்றுப் பார்த்தால்... அட நம்ம மதுமிதா! டோப்பா இல்லாமல் வந்துவிட்டாராம்!

* தமிழ்க் கவிதை வயலில் நான் முன்னத்தி ஏர்; பேயோன் பின்னத்தி ஏர்.

* உங்கள் நிறுவனத்தின் சேர்மன்/டைரக்டர்/பவுண்டர் பெயரைச் சொல்லி எவரேனும் மிரட்டும் த்வனியில் பேச்சைத் துவங்கினால், 'நான் அவரோட சொந்த மருமகன்தான்' எனத் துணிந்து சொல்லி உரையாடலை ஆரம்பியுங்கள் # டிப்ஸ்

* பேதீல போவான், சொறி நாய், செனக்கூவை, வாரியக்கொண்டை, வெங்கன், தருமக்கொள்ளி, எச்சக்கலை # ட்வீட்டர்களுக்கான புனைப்பெயர் பரிந்துரைகள்

* இன்று வாசித்த சிறுகதையொன்றில் பாவண்ணன் ஓர் ஆச்சர்ய தகவலைக் குறிப்பிடுகிறார். தமிழகத்திலுள்ள எந்த பெண் சிற்பத்திலும் காலணிகள் இல்லை; ஆனால், ஆண் சிற்பங்கள் பலவை காலணி கொண்டுள்ளன என்கிறார். அக்காலத்தில் பெண்கள் காலணி அணிய அனுமதி இல்லையா?!

* ஒரு மருத்துவக் கட்டுரையில் இப்படியொரு வரி வருகிறது: முதியவர்களுக்கு வரும் நோய்கள் தனித்துவம் மிக்கது' # 100 பேயோன் பிறந்து வரணும்...

* வெள்ளிப்பனித்தலையர் என்பவர் பார்க்க நாஞ்சில் நாடன் போல இருப்பாரென நினைக்கிறேன்.

* ஜனத்திரளைக் கண்டதும் பதட்டமடைவதொர் பணக்கார நோய்!

* நகைச்சுவை சிறிதும் இல்லாத படங்களிலும் கூட தன் இசையால் நகைச்சுவையை நிரப்பும் ஆற்றல் கொண்டவர் இளையராசா!

* நான் உத்வேகமுள்ள கீச்சாளனாகப் பரிமளிக்க சில 'நச்' ஃபிகர்களே காரணம். அவர்தம் பெற்றோர்களுக்கு என் வந்தனங்கள்!

* கெட்டுப் போறேன் பந்தயம் எவ்வளவுன்னானாம் ஒருத்தன்...!

* அடுத்தமுறை 'தமிழ் நண்டு' கதையை எவரிடமாவது சொல்வதற்கு முன்பு சுயயோக்கியதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

* சுடுதண்ணியே சுமாரா வைக்கிறவங்கடா நாங்க...! # இல்லத்தரசிகளுக்கான பன்ச்

* நாளிதழ்கள் மாவட்டச் செய்திகளுக்கும், மாநிலச் செய்திகளுக்கும் மத்தியில் ‘ஆதீனச் செய்திகள்’ என ஒருபக்கத்தை ஒதுக்கவைத்த சாதனையாளன் நித்தி!

* மச்சி... நாங்கள்லாம் பஸ்லயே டபுள்ஸ் போறவய்ங்க... நீ சின்னப்பையன்... சரிப்பட்டு வராது # கல்லூரி இளவல்களுக்கான பன்ச்!

* நல்ல எழுத்தாளன் ட்வீட்டிக்கொண்டிருக்க மாட்டான்!

* இதை நான்தான் எழுதினேனெனச் சொல்லும் திராணியற்ற மொன்னையர்களின் கூடாரம்தான் வினவு.

* அவளுக்கென்ன 'அழுகிய முகம்'.... # ரீமிக்ஸ்

* நான் இங்கிலீஷ் பத்திரிகையில் வேலை செய்கிறவன்.நானெல்லாம் இங்கிலீஷ்ல ட்வீட்ட ஆரம்பிச்சா தாங்கமாட்டீங்கடா என்பதை தன்னடக்கதோடு சொல்லியமைகிறேன்

* திணிப்பது துப்பப்படும்; அதற்காக திணிக்காமல் இருக்காதே!

* ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்... அதை 'டிரைவிங்'ல காட்டுறாங்க அனைவரும்... # சிக்னல் சிந்து

* ங்கா, ம்மா, த்தை போன்ற மரபான சொற்களை புறந்தள்ளி 'ப்பா...' என தன் பேச்சை துவங்கும் இளவெயினி அப்பனை பைத்தியம் ஆக்குகிறாள்!

* ஊனமுற்றோர் & முதியோர்களுக்கு மட்டுமே விரைவு தரிசனம். அரசன் முதல் ஆண்டி வரை பொது தரிசனம் என்பதே ஆலயங்கள் கடைப்பிடிக்கவேண்டிய சமதர்மம்.

* சகுனியில் ஒரிஜினல் சகுனி ஜிவிபிதான்... காதெல்லாம் எரியுதுப்பா...!

* சாருவை கிண்டல் செய்வதென்பது 'கைப்புள்ளயை' கட்டதுரை கட்டி வைத்து அடிப்பதற்க்கு ஒப்பு. ஜீவகாருண்யமுள்ளவர்கள் அதைச் செய்யக்கூடாது.

* 120 நாள் கெடாத பாலை டிஸ்டெம்பராக யூஸ் பண்ணமுடியுமா என்று திரு கேட்கிறாள்.

* மனஉளைச்சல்மானி என்றொரு கருவியினை வடிவமைக்கும் முயற்சியில் உள்ளேன்; சகலருக்கும் பயன்படும்.

* சூப்பர் சார்...பிரமாதமான கான்செப்ட்... நீங்களே எக்ஸிக்யூட் பண்ணிடுங்களேன்... # தக்காளி... இனிமே ஐடியா எதுவும் சொல்லுவ...

* இளையவடியா அழகா இருப்பான்னா... மூத்தவடியான்னு ஒருத்தி கொரங்காட்டம் இருப்பான்னு அர்த்தம்னானாம் ஆண்டியப்பன் # தக்காளி யாருக்கிட்ட...

* ச்சே... ஒரு நல்ல ஃபிகருக்கு கல்யாணமாம். என்ன சுயநலமான உலகம் இது?!

* sms களை ட்வீட்டினால், கண்டுபிடித்துவிடுகிறார்கள்; ட்வீட்டுகளை எஸ்ஸெம்மெஸ்ஸினால் மேதை என்கிறார்கள் # என்னமோடா மாதவா

* தங்கம் சீரியலில் அனைத்து பாத்திரங்களும் 150 கிலோவுக்கு மேல் எடையுள்ளவர்களாம்.

* பிறர் உன் குற்றங்களுக்காக வார்த்தைகளால் அர்ச்சிக்கும்போது, நல்ல நண்பன் உன்னைச் செருப்பால் அடிப்பான்!

* நான் ஜோக்கர் இல்லடா ஆக்கர்! # பரிசலுக்கான பன்ச்

* ஏதேனும் விருது பெற விரும்பினால், உன் லாபியை இன்றிலிருந்தே ஆரம்பி!

* உலகில் இரண்டு வகையான மனிதர்களே இருக்கிறார்கள். என் ட்வீட்டுகளைக்கண்டு ஆவேசப்படுபவர்கள் அல்லது ஆவ்சம் போடுபவர்கள்.

* செலிபிரட்டி மானேஜ்மெண்ட் தெரியாததால் பல நேரங்களில் ரசிகைகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறேன் :(

* அழகு பெண்கள் பலரும் திருமணமெனும் பெயரில் நாடு கடத்தப்பட்டு சாஃப்ட்வேர் ஆசாமிகளுக்கு சோறு வடித்துக்கொண்டிருக்கிறார்கள் # வேதனை

* ஜெயமோகன் என்றதும் உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டால் உங்கள் தகுதி, தரம், இடம் குறித்த பதற்றம் நீடிக்கிறது என்று பொருள்.

* 'அம்பலத்துவம்' என்றொரு இலக்கிய வகைமை எவரும் அறியாமலே பிறந்துவிட்டிருக்கிறது; பேயோன் கூட கவனிக்கத் தவறிவிட்டார்!

* நடந்தே அடைந்து விடும் தூரத்தில்தான் வாழ்வு கிடக்கிறது; நாலு கால் பாய்ச்சல் எதற்கு?!

* எவனோ கண்டடைந்த தத்துவத்தை போட்டு குழப்பிக்கொள்ளும் இடது சாரி, வலது சாரிகளை விட... சம்சாரி மேலானவன்.

* பிறனில் விழைந்து பரணில் ஒளிந்து சேரும் வீட்டின் சீரைக் குலைத்து நாறும் வாழ்வுக்கு நாண்டுக்கிட்டு சாவு!

* இயல்புவாத நடிப்பின் தனித்த அடையாளமான பாபிலோனா எனும் நடிகை என்னவானார் என்கிற சிந்தனையுடன் இன்றைய பொழுதினை துவக்குகிறேன்.

* பிரெஞ்ச்/ஸ்பானீஷ்/ஜெர்மன் அறிந்த யுவதிகள் தேவை. முடியலத்துவத்தை மொழிபெயர்த்து, பிற நாட்டவரின் முழி பிதுக்கலாமென்றிருக்கிறேன்.

* சிக்கன் சாப்பிடுவதை பன்னெடுங் காலமாக ஊக்குவித்து வருகிறேன். எனக்கு ஏதாவதொரு அமைப்பிலிருந்து நிதி கிடைக்கும் சாத்தியம் உண்டா?! # சந்தேகம்

* மனம் கொத்தி பறவை ஹீரோயின் சிவகார்த்திக்கேயனுக்கு அக்கா மாதிரி இருக்கிறார். எனக்கு பொருத்தமாக இருப்பார்.

* அரசியல்வாதிகளின் ஊழல்களை அப்புறம் பார்க்கலாம்; முதலில் அறிவுலகவாதிகளின் ஊழல்களை பைசல் பண்ணுங்கள்!

* 6 வார்த்தைகளைக் கொண்டு உன்னால் கச்சிதமான வசனத்தை உருவாக்க முடியுமெனில், ட்வீட்டரில் நொட்டிக்கொண்டிராதே... போய் நாவல் எழுது.

* தமிழ் எழுத்தாளனெனில் ஜெயமோகன் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கவேண்டும்.

* முகநூலின் அவதார நோக்கமே ஃபிகர் மடிப்பதுதான் என்பதனை ஸக்கம்பெர்க் சரிதை மூலம் புரிந்துகொண்டேன்.

* சொற்களின் குதியாட்டம் கவிதையாகிறது; குத்தாட்டம் முடியலத்துவமாகிறது.

* ட்வீட்டர் என்பது தமிழிலக்கியத்தின் முதியோர் இல்லமா?

* நமக்கு வயதாகி விட்டதால் நாம் விளையாட்டுக்களை நிறுத்தி விடவில்லை; விளையாட்டுக்களை நிறுத்தியதாலே நமக்கு வயதாகி விட்டது.

* இளமையாகவும், அழகியாகவும் இருக்கிறவர்களை 'இழகி' என்றழைக்கலாமென்றிருக்கிறேன். மொழிக்கு நானெழுதும் நன்கொடைகள்தானே இதுவும்.

* ஒருவனின் அறை என்பது அவன் மனமே என்றார் ராமகிருஷ்ணர். டைம்லைனும் அவனவன் மனம் போலவே.

* சுவாமி ஓம்கார் நன்றாக வீலிங் செய்கிறார்; ஹீலிங்கும் செய்யத் தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருப்பார்

* சுயமரியாதையுள்ளவன் எவனுக்கும் 'ப்ளூ ஐடு பாயாக' இருக்கமாட்டான்; நான் இருந்ததில்லை.


* நீ வாத்தாக இருந்தால் பொன்முட்டை இடாதே! # பாருங்களேன் RT பிச்சுக்கும்

* நான் ஆன்மாவை எரித்து எழுதுபவனாக்கும். மெழுகுதிரி தட்டுப்பாடு.

* ஜேகே ஆவண படம் பார்த்த பின் திரு சொன்னாள் 'இயற்கை சிங்கங்களுக்கு பிடரி வைத்தே அனுப்புகிறது'

( மே முதல் ஜூன் வரையிலான ட்வீட்டுகளின் தொகுப்பு; வாழ்வு வளம் பெற...எண்ணியவை எண்ணியபடி முடிய https://twitter.com/selventhiranபின் தொடருங்கள்)

Friday, July 6, 2012

டான் என்பவர்...


டான்
வேகமாக கணக்கிட்டு
காரியங்கள் நிகழ்த்துபவர்
ஆயினும் கணக்குப் பாடத்தில் வல்லுனர் அல்ல!

டான்
பகல் வேளைகளில்
சீட்டாடிக்கொண்டோ
சதுரங்கக் காய்களை நகர்த்திக்கொண்டோ இருப்பார்
ஒழிந்த வேளைகளில்
புகை விட்டுக்கொண்டும்
குடித்துக்கொண்டும் இருப்பார்
ஆயினும் அவர் ஓர் ஊதாரி அல்ல!

டான்
ஒரு பெண் பித்தர் அல்ல
ஆயினும் பெண்களை
மோந்து பார்த்துக்கொண்டே கிடப்பார்.

டான்
ஒரு சிம்மக்குரலோன்
ஆயினும் ஹஸ்கி வாய்ஸில்தான் பேசுவார்!

டான்
பாஸ்போர்ட் அற்றவர்
ஆயினும் எல்லா நாடுகளின்
விசாவும் அவரிடத்தில் உண்டு!

டான்
ஒரு டாம் டாம் டானிக் போல
பார்வைக்கு குளிர்பானம் போலத்தான் இருப்பார்
ஆயினும் கசப்பானவர்!

டான்
யாரும் துரத்தாத போதும்
சுரங்க ரயில் பாதையில்
பாதாள சாக்கடைக் குழாயினுள்
பாலங்களுக்கு அடியில் ஓடிக்கொண்டிருப்பார்
ஆயினும் அவர் ஓர் ஓட்டப்பந்தய வீரர் அல்லர்!

டான்
தன்னுடலில் பாய்ந்த தோட்டாவினை
தானே நோண்டி எடுத்துக்கொள்வார்
ஆயினும் அவர் ஒரு டாக்டர் அல்ல!

டான்
ஆழநெடுங்கடலிலோ
ஆளரவமற்ற தீவுகளிலோ
ஆலம்சூழ் வனாந்தரங்களிலோ
அனாதரவாய் சிக்கிக்கொண்டாலும்
தப்பித்து வந்துவிடுவார்
ஆயினும் அவர் ஒரு சர்வைவல் நிபுணர் அல்ல!

டான் தன் தொழில் ரகசியங்களை
சிகரெட் அட்டையிலோ
எல்..சி ஏஜென்ட் கொடுத்த டைரியிலோ
2 ஜிபி பென் டிரைவிலோ வைத்திருப்பார்
அதை அவரே வேண்டுமென்று தொலைத்து விடுவார்

டான்
தன்னைக் காட்டிக்கொடுப்பவர்களை
விட்டு வைக்க மாட்டார்.
அது முகம் பார்க்கும் கண்ணாடியாக இருந்தாலும் கூட

டான்
சபையில் தோன்றி ஆடவேண்டுமெனில்
உலகெங்கிலுமுள்ள
கொள்ளைக்கூட்டத் தலைவர்கள்
உச்சி மாநாடு நடத்தியாக வேண்டும்.

டான்
அமிதாப்பை போல உயரமாகவோ
ரஜினியைப் போல பரட்டைத்தலையுடனோ
அஜீத் போல பேழை வயிறுடனோ
அல்லது ஒரு நிஜமான டானைப் போலவோ இருக்கலாம்

டான்களைப் பார்த்தே
கோபிநாத் கோர்ட் அணியக் கற்றுக்கொண்டார்
டான்களைப் பார்த்தே
மிஷ்கின் கண்ணாடி அணியத் துவங்கினார்
டான்களைப் பார்த்தே
நித்தி தப்பித்து ஓடவும், தலைமறைவாகவும் கற்றுக்கொண்டார்
டான்களைப் பார்த்தே
மணிரத்னம் தந்தி வசனங்கள் எழுத ஆரம்பித்தார்

டானால்
தப்பிக்க முடியாத சிறை
இதுவரை
கட்டப்படவில்லை.

டானின்
உயிர் பறிக்கும் தோட்டா
உருவாக்கப்படவில்லை

டான்
மோகம் கொள்ளும்
விழிதிகழ் அழகி பிறக்கவில்லை

டான்
தன்னிலை மறக்கும்
தண்ணி எந்த டாஸ்மாக்கிலும் இல்லை.

டான் ஒரு காந்தி
டான் ஒரு புத்தன்
டான் ஒரு பித்தன்
டான் ஒரு ஜித்தன்

ஆனால் பாருங்கள்
டைரக்டர் பேக்-அப் சொன்னதும்
டானென்று அவர் வீட்டிற்கு வந்தாகவேண்டும்.


Tuesday, May 29, 2012

மனக்காளான்


* ஏழரை ஆகியும் தூங்குபவனோடு ஏழரையும் சேர்ந்து தூங்குகிறது என்பதறிக!

* நல்லவர்... வல்லவர்... சீனுவானவர்... வார்த்தையில் உண்மை உள்ளவர்...!

* அலர்ஜிக்கு மருந்துண்டு; அறவுணர்ச்சிக்கில்லை!

* மேட்ச் விளையாடுறதுக்கு முன்னடி தயிர்ல சக்கரை கலந்து சாப்பிட்டா நல்லா ரன் அடிக்கலாமாம்; சீனு மாமா சொன்னார்.

* டேய்... த்ரிஷா முன்னாடி சீனு மாமாவ இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேடா...?!

* சீனுமாமா ஒருங்கிணைப்பில் ஒலிம்பிக் சென்றால் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது உறுதி!

* டேய் டெங்கு, அடங்கு! இல்லையேல் ட்வீட்டடித்தே உன்னை அடக்குவோம் - தமிழ் ட்வீட்டர்கள் பேரவை

* சுஜாதா இறக்கவில்லை; ஆவியாக பரிசலின் உடலில் புகுந்துவிட்டார் # பாருங்களேன் அவரும் இப்போ இதுமாதிரி என்னமாச்சும் சொல்லுவார்!

* இன்று மேட்ச் எதுவும் இல்லாததால் ட்வீட்டர்கள் ஹைலைட்ஸ் பார்த்து ட்வீட்டுவார்கள் என நினைக்கிறேன்

* உயிரோசை என்பது இன்னொரு தமிழ்மணம்!

* கலா மாஸ்டருக்கு பிடித்த பிளேயர் பிராவோதானாம்...!

* ட்வீட்டருக்கென்று கீழ்த்தரமான பெயர்களைத் தெரிவு செய்துகொள்வது ஒருவகையான மனநோய்தான். இவர்கள் போனிலோ அல்லது நேரிலோ அறிமுகம் செய்து கொள்ளும்போது 'ஓதப்புடுக்கன்' என சொல்லாமல் 'அறிவழகன்' என்றுதான் சொல்கிறார்கள்.

* என் அனுபவத்தில், எவனுக்கு அதிகமாக போன் வருகிறதோ அவன் உருப்படாமலும், அதிகம் அவுட்கோயிங் பேசுபவனே முன்னேறியும் கண்டிருக்கிறேன்.

* உன்னளவில்தான் நாங்கள் அடிமைகள். பெயர்த்தெடுத்த பெருங்கற்களை உன் தலையில் போடுவதை ஒத்தி வைப்பதன் மூலம் மேலதிகமான ஒருநாளை வழங்கும் கடவுளர் யாம்!

* அயோக்கியனாகக் கூட இருந்துவிட்டு போ! ஆனால், யோக்கிய சிகாமணி போல சுயகற்பிதம் செய்துகொண்டு இம்சையை கூட்டாதே...! # அறிவுரை

* கலைஞனுக்கில்லை கட் ஃஆப் டேட்!

*  ‘ஸ்ரீ ராமராஜ்யம்’ பாடல்கள் கேட்டால் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...! - ராஜா சார் ராக்ஸ்!

* செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவென...கேட்டுக்கொண்டிருக்கிறேன்; இவ்வளவு அருமையான இசையை இளையராஜா சாரினால்தான் உருவாக்கியிருக்க முடியும்.

* திரு: உப்புமா சாப்பிட்டு போங்க...! நான்: சொன்ன சொல்லே உணவாய் உண்டேன்...!

* விஜய்க்கு 17 வயசு இருக்குமான்னு அக்‌ஷய்குமார் கேட்டாராம்; இப்பதான் தெரியுது இவன் ஏன் பிக்கப் ஆகலன்னு!

* சிஎஸ்கேவின் வர்ணனைகளைப் பார்க்கும்போது மதுமிதா என்பவர் ஓபரா வின்ப்ரே போல இருப்பாரென நினைக்கிறேன்.

* யாரும் என்னை புகழ வேண்டாம்; என் கணிப்புகளின் வெற்றி விகிதம் 98%. மீத 2 சதவிகிதத்திற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன் # அவையடக்கம்

* சூப்பர் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படுவது போல, மொக்கைகளுக்கு மங்கிக்குல்லாய் வழங்கப்படும் # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* தற்சமயம் வீரர்களின் நெற்றி காலியாகத்தான் உள்ளது; அதிலும் விளம்பரங்கள் செய்து வருவாய் ஈட்டப்படும் # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* பவுலர் அண்டர் ஆர்ம் போடவும், ஓரே பேட்ஸ்மேன் ரைட், லெப்ட் என கலந்து ஆடிக்கொள்ளவும் அனுமதி # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* உள்ளூர் டீம் எதுவும் விளையாட ஆசைப்பட்டா எண்ட்ரன்ஸ் ஃபீஸ் கட்டிட்டு விளையாடலாம் # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* 80 மீட்டர் தாண்டி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு 8 ரன்கள் தரப்படும் # நான் ஐபிஎல் சேர்மன் ஆனால்

* இசையில்தான் இளமை பறிபோய்விட்டதே நாம் ஏன் ‘பழைய ராசா’ என்றழைக்கக்கூடாது?!

* சேவாக் என்பவர் 'பரமார்த்த குரு ஸ்கூல் ஆஃப் தாட்ஸினைச்' சேர்ந்தவர் போல.

* சுரைக்காய், சுரைக்காய்னியே சொனை கெட்ட மூளி... விளக்க பொருத்தி மூக்க பாரு... # சிக்ஸர் கேட்ட ரசிகர்களுக்கு கெயில்

* நம்புங்கள்... டேனி மாரிஸன் பைத்தியம் இல்லை!

* இன்று தமிழ் ட்வீட்டுலகம் ஊடகங்களால் கவனிக்கப்படுவது பரிசல் போட்ட பிச்சையினால் என்பதை மறந்துவிட வேண்டாமென பரிசல் ட்வீட்டச் சொன்னார்!

* நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...உதயநிதி ஸ்டாலினைப் பார்க்கையில் ஜித்தன் ரமேஷ் நினைவுக்கு வரவில்லை?!

* தமிழ் ட்வீட் சூழலைப் பார்க்கும்போது பேசாமல் பிரெஞ்சிலோ, ஸ்பானிஸ் மொழியிலோ ட்வீட்டலாம் போலிருக்கிறது.

* ட்வீட்டரில் வெளியிடும் எனது தொடர்பு எண்களை மகளிர் குறித்து வைத்துக்கொண்டு என்னை அழைத்து தொந்தரவு செய்யவேண்டாம்; நான் கடலை போடுபவன் அல்லன்!

* பட்டப்பகல் வேளையில் அழைத்து 'ஃப்ரீயா இருக்கீங்களா சார்'என உரையாடலைத் துவக்கும் பக்கிகளே...செய்வதற்கு ஒன்றுமில்லாத நாளே என் வாழ்வில் இருந்ததில்லை. ட்வீட்டிக்கொண்டு இருந்திருப்பேன்.

* ஆண் மகவைப் பெற்றெடுத்தார் ராஜஸ்தான் ராயல்ஸின் ஷில்பா ஷெட்டி; இதில் மேட்ச் பிக்ஸிங் ஏதும் இல்லை. நம்புங்கள்!

* ஒரு சேல்ஸ் பெர்சனிடம் டேட்டா ஃபேஸ் கேட்டுத் தொந்தரவு செய்வது அவனை காயடிப்பதற்குச் சமம் # பொதுவா சொன்னேன்!

* திடீரென்று ஒரு பெண் ஃபேஸ்புக்கிலிருந்து ‘டிஸ் அப்பியர்’ ஆகிவிட்டால், நம்ம பயளுக எவனோ வேலைய காட்டிட்டான்னு அர்த்தம்!

* இந்த சுஜாதாவால் அநியாயமாக ஒரு கழுதையின் மானமும் அல்லவா சேர்ந்து போகிறது # மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி

* அழகைப் பற்றிய சுயபிரக்ஞையே அவலட்சணத்தின் முதல் படி! - சிந்தனையாளர் அரங்கசாமி

* ஒரே நோக்கத்திற்காகப் போராடுபவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டால், அது சுயநலக் கனவுதான் என்பது பல்லிளித்து விடுகிறது.

* பிரபலங்கள் பொது இடங்களில் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். பிரபலங்கள் பொது இடங்களில் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

* அரைமணி நேரம் சேர்ந்தார்ப் போல் தொலைபேசி அழைப்பு இல்லாவிட்டால், சரியாக உழைக்கவில்லையோ என்று சந்தேகம் வருகிறது.

* அஞ்ஞாடியை இன்னும் படிக்கவில்லையென்பது சுய அவமானமாக இருக்கிறது. எல்லாச் சிறப்புகளையும் தாண்டி பூமணி மொழிக்குள் குறும்பு செய்யும் கலைஞன். இத்தனை வருடங்களில் அது குறைவு படாமல் உள்ளதாவெனப் பார்க்கும் ஆவல்!

* சுவாமி ஓம்கார் அவர்களைச் சந்திக்க இவ்விடம் அணுகவும். சாதா தரிசனம் ரூ.150/- தட்கால் சேவா ரூ.300/-

* என்ன நினைத்தாரோ பட்டீஸ்வரர் திடும்மென வாடா பார்த்து நாளாச்சி என்று விட்டார். பேரூரில் இருக்கிறேன் # சிவன் எங்கூடயும் பேசுவார்டா...

* சிறை மீண்ட நெஞ்சத்தான் ஆ.ராசாவினை வரவேற்கிறோம்; தற்சமயம் ஆதீனங்கள் எதுவும் காலியாக இல்லாததால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கிறோம்!

* ஓர் உபயோகமற்ற தினத்தின் குற்ற உணர்வினை மிளகு தூவின கோழி சூப்பினால் குறைக்க முடியும்.

* சவம்... நவகவிதையினைப் புரிந்துகொள்ள எழுதிய கவிஞனையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துவைத்திருக்க வேண்டியுள்ளது!

* சுயவேட்டைக் கறியின் சுடுசுவையே...!

* என் இனிய பெண்ணே, எப்போதும் நினைவில் வை! 'நாம் ஒருபோதும் அவர்கள் அல்ல...!'

* த்ரிஷா கால் கிலோ... தமன்னா கால் கிலோ... காஜல் கால் கிலோ... எல்லாமா சேர்த்துக் கட்டின பெரிய பொட்டலம் பேச்சியம்மா...

* ட்வீட்டர்கள் கூடிப்பேசி... ஜாதிவாரி கணக்கெடுப்பில் ‘ட்வீட்டர் ஜாதி’ என குறிப்பிடும்படி கேட்டுக்கொள்வார்களென்று நினைக்கிறேன்.

* ஒரு பெருநகரத்தில் வாழ்வதென்றால் எவ்வளவு கவனம் தேவைப்படுகிறது. கவனம் தப்பினால் கவளம் தப்பிடும்.

* நான் விமர்சனங்களை வரவேற்க்கிறேன்; ஆனால், ஒருபோதும் அவற்றை ஒத்துக்கொள்ளமாட்டேன் # எழுத்தாளன்டா...!

* ஒரு நாளுக்கு அரைமணிக்கூறெனும் நாளிதழ் வாசிக்கத் துணியாதவனின் தொழில் ஓரங்குலம் கூட நகராது!

* மகா கலைஞர்களெனினும் சிறிதளவு நேர்மைக்குறைபாட்டினைக் கொண்டிருக்கிறார்கள்; ஆக சுவையான கருப்பட்டிக் காபியின் அடி மண்டி போல.

* நம்மைப் பற்றிய நல்லெண்ணம் உருவாகி விடாமல் பார்த்துக்கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது?!

* எவனோ ஒரு மனநோயாளிதான் 5 ஸ்டார் சாக்கலேட்டின் பிராண்டிங் இன்சார்ஜ்! # அப்பாவோட பேண்ட்

* நிகில் முருகனுக்கு இந்தமாதிரி சட்டைகள் எங்கு கிடைக்கின்றன?!

* நாஞ்சில் நாடன் நாவல் எழுத உட்காரும்போது ரெயில்வே டைம் டேபிள், பஸ் டிக்கெட்டுக்கள், ஹோட்டல் பில்களை எழுத்து மேஜையில் எடுத்துவைத்துக்கொள்வாரென அவதானிக்கிறேன்.

* ரொம்பவும் இம்சித்த மலையாளி நண்பனொருவனை இப்படி இகழ்ந்தேன்: ‘உம்மண்சாண்டியவிட கேவலமானவனா இருக்கீயேடா...’

* @oviyaa666 உங்களை எல்லோரும் 'களவாணி' ஓவியா என்றழைக்கிறார்களே...அப்படி எதை திருடினீர்கள்?!

* தன் சல்லித்தனங்களுக்கு இலக்கியத்தில் நியாயம் தேடுபவனால், எழுத்தாளனாக அல்ல... வாசகனாகக் கூட ஆக இயலாது!

* 'என் தங்கம் என் உரிமை' விளம்பரம் லட்சியவாத வகைமைக்குள் வருமாவென ஜெயனிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

* டிசிக்கு வேண்டாத எவனோதான் பார்த்தீவை கோர்த்து வுட்ருக்கான்!

* காடுவெட்டி குருவின் பேச்சை கேட்டேன். ஆதீனமாக அனைத்து தகுதிகளும் உள்ள பேச்சு!

* பாசி நிறுவன ஊழலை முதன் முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வெண்கலப் பூட்டை போட்டவள்தான் இன்றெனக்கு கோதுமை தோசை சுட்டுத் தருபவள்!

* ஓரேயொரு கீரை வடைக்கு ஒன்பது பேர் போட்டி! # கூடங்குளம்; உம்மன்சாண்டி...

* 'லேய் மாங்குடி...' எனும் விளியை நெல்லை டவுண் ஆசாரிமார்கள் புழங்கக் கேட்டிருக்கிறேன்; மடப்பயலே என்று அர்த்தமாம்! இப்போது புழக்கம் உண்டா?!

* மதுரை ஆதீனத்திற்க்கும் எங்கள் வடவை ஆதீனத்திற்க்கும் உள்ள ஓரே வித்தியாசம்: கிரீடத்திற்க்குப் பதிலாக ஹெல்மெட் அணிந்திருப்பதுதான். # ஓம்கார்

* நீங்கள் தூசிகளையே கவனித்துக்கொண்டிருந்தால், மூச்சு விட சிரமப்படுவீர்கள்!

* இரு பைக் பண்பாளர்கள் காலையிலேயே சாலையில் மோதிக்கொண்டனர்; 'மாதா,பிதா,குரு வைவோம்!'

* உங்க பேப்பர்ல விளம்பரம் கொடுத்தேன்;ரெஸ்பான்ஸே இல்ல-அஞ்ஞானி; ரெஸ்பான்ஸ் வரல... விளம்பரத்துல ஏதோ பிரச்சனை - விஞ்ஞானி

* காற்றாலை ஓடி மின்வெட்டு நீங்கியது என மகிழ்பவன் அஞ்ஞானி; பருவம் மாறி காற்றடிக்கிறதேயென யோசிப்பவன் விஞ்ஞானி!

* போக்காளன் என்னத்த திம்பானோ... நிலையழிஞ்சி நிக்கானே... # கெயில்

* கெயில் விளையாடும்போது இந்திய விமானங்கள் பறக்கத் தடை!

* ஆனால், நாளையே இளையராஜா இசையமைக்கும் படத்திற்குப் பாட்டெழுதச் சொன்னால், பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்வான் இந்த செல்வேந்திரன்!

* லோக்கல் பிராண்ட் கொஞ்சம் பெர்சனலைஸ்டாத்தான் இருக்கும்; சட்டுன்னு மயங்கிறக் கூடாது :) # பொதுவாச் சொன்னேன்

* என் கடைசி முயற்சியாக அறம் சிறுகதை தொகுப்பினை இளையராஜாவிற்கு அனுப்பிவைக்கலாமென்றிருக்கிறேன்.

* சாமி’ என்ற வார்த்தையை முதலில் இளையராஜாவிடம் எவன் பிரயோகித்தானோ அவனே அவரது முதல் குழியை வெட்டியவன்.

* வானத்தின் கீழ் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதென்று எதுவுமில்லை! அறிவுதளத்தில் நிகழ்கிறதா என்பதை மட்டும் கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.

* டெக்கான் க்ரானிக்கலுக்கும், டெக்கான் சார்ஜஸூக்கும் தரத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை.

* தமிழ் சினிமாவில் மகேஸ்வரி என்றொரு மொக்கை நடிகை இருந்தார்; கிரிக்கெட்டிற்க்கு அதுமாதிரி பார்த்தீவ் பட்டேல்!

* நான் மட்டும் எழுத்தாளனாக இல்லாமல் இருந்திருந்தால் ட்வீட்டரில் பலரைப் பின்தொடர்ந்திருந்திருப்பேன்.

* தினமலரில் டவுட் தனபாலு எழுதுவது மனுஷ்யபுத்திரனா என்று ஒரு நண்பன் போனில் விளிக்கிறான் # கிருத்தாளம் புடிச்ச பயலுகய்யா...

* தங்கள் தோப்பில் பறித்த இளநீர் குலைகளை ஒரு வாசகி வீடு ஏகி தந்துச் செல்கிறார். மொழி வளர்ச்சிக்கு என்னமா பாடு படுகிறார்கள்?!

* யாமறிந்த பதிவரிலே பரிசல் போல் பண்பாளன் எங்கும் காணோம்னு திரேஸ்புரம் அருமை நாயகம் அண்ணாச்சியே சொல்லிருக்காருல்லா...

* நாஞ்சில் துபாயிலும் தின்பதைப் பற்றியே பேசினார் என்பதை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது.

* அபிலாஷ் கிரிக்கெட் பற்றி என்னமா எழுதுகிறார்?! அவருக்கு மட்டும் கிரிக்கெட் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால், இன்னும் எப்படியெல்லாம் எழுதுவாரோ?!

* போலியான ஆவேசத்துக்கு கொஞ்சமும் குறைவுபடாதது மிகையான தன்னிரக்கம். பின்னதற்கு முன்னது பரவாயில்லை.

* சமகால இளைஞிகளின் ரசனைமட்டம் சற்று குறைவுபட்டுள்ளது என்பதை என்னைக் காதலிப்பதாகச் சொல்வதிலிருந்து தெரிந்துகொள்கிறேன்.

* 150 மிலி லிக்யூட் ஃபாரபின் குடித்துக் கொண்டிருக்கிறேன் # அன்னபூர்ணா காஃபி

* ஒரு வாசல் மூடி மறுவாசல் திறப்பான் இறைவன்; அதற்காக அவரை கேட் கீப்பராகவே பயன்படுத்தக்கூடாது.

* யாரும் ஷேர் பண்ணாத ஓவியமே... டேக் பண்ணினால் நாறிடுமே... என் புரொஃபைல் பிக்சர் ஆனாய்... நான் ஆபீஸ் மிக்ஸராய் ஆனேன்... # தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கும் பாடல்

* ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்த அழகியே...' # த.சினிமாவில் எதிர்பார்க்கும் வரிகள்

* டைம் லைனில் நான் காத்திருந்தேன்... உன் 'ட்வீட்' வந்ததும் பூப்படைந்தேன்... மென்சன் போட்டு ஒரு முத்தம் தா... டி.எம்-ல் மொத்தம் தா! # த.சி.எ.பா

* ஏ.டி.எம் சென்டரைப் பூட்டிப் புழங்குகிற நகரம் என்னுடையது; காலை 10க்கு திறந்து மாலை 5க்கு சாத்தி விடுகிறார்கள் # சாத்தான்குளம்

* தனித்திருக்காதே; பசித்திருக்காதே; விழித்திருக்காதே!

* *ல்வினை உகுத்து வந்து பால்வினை ஊட்டும்! # ஆபாச ட்வீட்

* பெண்களிடம் சாட்டும்போது மட்டும் எப்படி இப்படியொர் கனலும் கவித்துவம் வந்து ஒட்டிக்கொள்கிறது?! # வியப்பு

*

முடியலத்துவம்பிரம்மமாய்
நின்ற தோனி
பிளந்ததோர்
பிஸ்லா ஆணி
இழந்ததோ
நம்ம சீனி!

சித்தி
நித்தி
லத்தி
புத்தி!

ஏடா மூடா
அதிக சோடா
கேடா முடியும்
கேளடா நீயும்!

கரீம் பாய்
வெட்டி வீசிய
ஆட்டின் வால் ஒன்று
சாக்கடையில் எழுதிச் செல்கிறது
கறிக்கடைக்காரனின்
கனவுக் கவிதையை!

தார்க்குச்சியின் முனையில்
சோம்பியிருக்கிறது
மாட்டு ஈ
அதை ஓட்டு நீ!

எதைச்செய்ய
மறந்தாலும்
தமிழ் ட்வீட்டர்
பரிசலை
துதி செய்ய மறவாதே - மனமே

அனுஷ்கா
அதிசயா
அதிஷா
எவற்றின்
நடனமாடும் நிழல்கள் நாம்?!

எனக்கு நீயிருக்க
உனக்கு நானிருக்கேன்
நமக்கு நாயிருக்கு!

ராமச்சந்திரனா என்று கேட்டார்
போடா மயிரு என்றேன்
எந்திரிச்சு போயிட்டார்.

(பூனம் பாண்டேவுக்கு பிரிய முத்தங்களுடன்)

Tuesday, March 6, 2012

மயக்கமென்ன?!

திர்கடை கோனார்தான் வந்து விபரம் சொன்னார். லேத்திலேயே போன் இருக்கிறது. வேலைக்காரர்களுக்கு போன் வருவதை முதலாளி விரும்பமாட்டார். ஓட்டிக்கொண்டிருந்த மிஷினை அப்படியே நிறுத்திவிட்டு வேஸ்ட் காட்டனில் க்ரீஸ் கரங்களைத் துடைத்துக்கொண்டான் கணேசன். முதலாளியிடம் விபரம் சொல்லிவிட்டு உடனே கிளம்பியாகவேண்டும். போனவாரம்தான் கொஞ்சம் முன்பணம் வாங்கி இருந்தான். திரும்பவும் கேட்டால் கண்டபடி திட்டுவார். வேறு வழியில்லை.

ஒருவழியாக தயங்கி, தயங்கி விபரத்தை சொன்னதும் அவரே உள்பாக்கெட்டுக்குள் கைவிட்டு இரண்டு 500 ரூபாய் தாள்களைத் தந்தார். யூனிபார்மை மாத்திட்டுப் போடா என்றார். அதற்கெல்லாம் நேரமில்லை. 9:45க்கு டிரெயினைப் பிடித்தாக வேண்டும். அதை தவறவிட்டால் அடுத்தது அதிகாலை 3 மணி பாஸஞ்சதான். இப்பவே லேட். கணேசன் அப்படியே கிளம்பினான்.

சந்தையடியில் எழாம் நம்பரைப் பிடித்து ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்புறம் ஸ்டாப்பில் இறங்குவதற்குள் மணி 9:40 தாண்டிவிட்டது. சப்வேக்குள் இறங்கி கூட்டத்தை விலக்கி அவசரமாக ஓடினான் கணேசன். டிக்கெட் கவுண்டரில் கொள்ளனா கூட்டம். க்யூவில் நின்று டிக்கெட்டை வாங்குவதற்குள் டிரெயின் வாஞ்சி மணியாச்சியையே தாண்டிவிடும். தெரிந்த முகம் எதும் தட்டுப்படவில்லை. கொஞ்சம் பாந்தமான முகமாய் தெரிந்த ஒரு பெண்ணிடம் விபரத்தைச் சொன்னான். கவனமாகக் கேட்டுவிட்டு போயி வரிசையில நின்னு தம்பி... ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத... காலு செத்தவ நானே நிக்கிறேன்ல...அசிங்கப்படுத்திவிட்டாள். அதற்குள் பின்னாடி நிற்பவர்கள் கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவரவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். சட்டென்று முடிவெடுத்தான் கணேசன். நான் ஒருத்தன் வித்-அவுட்ல போறதுனால ரயில்வே ஒண்ணும் திவாலாகிடாது!

இரண்டிரண்டு படியாக தாவி தாவி 4வது பிளாட்ஃபார்முக்குள் கணேசன் நுழையும்போது நாகர்கோவில் எக்ஸ்பிரஸின் கடைசிப்பெட்டியின் பெருக்கல்குறி தூரத்தில் மறைந்துகொண்டிருந்தது. ச்சை...என்ன எழவுடா இது...?! தரித்திரம் வுடாம தொரத்துது...?! கணேசனுக்கு மூச்சு வாங்கியது. வேல சொன்னா பேல வருதுங்கான்என எப்பவோ முதலாளி திட்டியது சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலை. தூரத்தில் இருந்த ஓரே கடையும் கடைசி பலகையை வைத்து அடைத்துக்கொண்டிருந்தான். அவ்வளவு தூரம் நடக்கவும் சடவாக இருந்தது. இனி பாசஞ்சர் வரும்வரை பிளாட்பார்மில் காத்திருக்கவேண்டியதுதான். ஏழாம் நம்பருக்கு காத்திருந்ததை விட ஒரு ஆட்டோவைப் பிடித்திருந்திருக்கலாம். ஆனால், முதலாளி கொடுத்த ஆயிரத்தில் 100 அதுக்கே சரியாகப் போயிருக்கும். ஊரில் நிறையச் செலவுகள் காத்திருக்கிறது. பெருமூச்சு விட்டுக்கொண்டு குடிநீர் குழாயினைத் தேடி நடக்கத்துவங்கினான். அவனை இருகண்கள் இருளில் கண்காணித்துக்கொண்டிருந்தன.

குளிரும் கொசுவும் சேர்ந்து கடிக்க ஆரம்பித்தன. கணேசனைப் போலவே வண்டியை தவறவிட்ட வியாபாரிகள் சிலர் பெஞ்சுகளில் சாக்கை விரித்து கால்களை அதனுள் நுழைத்துக்கொண்டு படுத்துக்கொண்டனர். கந்தலாய் இருந்த பிச்சைக்காரன் மேல் நாய்க்குட்டி ஒன்று ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தது. அவன் குட்டியின் காதுகளை இழுத்து, இழுத்து சீண்டிக்கொண்டிருந்தான். வேடிக்கையாக இருந்தது. எடை போடும் மெஷின் ஒன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தார். எந்த ஊருக்கோ ஏற்றி அனுப்பப்பட வேண்டிய சரக்குப்பெட்டிகளின் மேல் இரண்டு போர்ட்டர்கள் குவார்ட்டர் பாட்டிலை திருகிக்கொண்டிருந்தார்கள். பகலெல்லாம் பரபரப்பாய் இயங்குகிற ரயில்நிலையம் இரவானதும் இவர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது என கணேசன் நினைத்துக்கொண்டான்.

பத்து வருடங்களுக்கு முன் இதே மாதிரி விடிய விடிய ரயில்நிலையத்தில் கணேசன் காத்துக்கிடந்திருக்கிறான். கூடவே மருண்ட விழிகளோடு ஜெபமணியும். வாழ்மான கட்டத்துல அற்புதராஜ் அண்ணன்தான் கைச்செலவுக்குப் பணம் கொடுத்து சிலுவையும் போட்டு அனுப்பிவைத்தவர். நீ யோக்கியங்கிறதுனால கிறிஸ்தவனா இல்லாட்டியும் இவளை உன் கையில புடிச்சி கொடுக்கேன். மானத்தோட வச்சி காப்பாத்து. ஊர்க்காரவனுங்களை நான் சமாளிச்சுக்கறேன் என தைரியம் கொடுத்த மனுஷன். இரு வீட்டார் கோபம் தணிந்து ஊருக்குள் நுழையவே ஐந்து வருடங்கள் ஆனது. ஜெபமணி இந்து சமயத்தை தழுவி ஜெயலட்சுமியாகி மாதாந்திர வெள்ளிகளில் விளக்கு பூஜைக்கு போய்க்கொண்டிருக்கிறாள். பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்பதைத் தவிர ஒரு குறையும் இல்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வேட்டு கம்பெனிக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருந்த கணேசனுக்கு கோயம்புத்தூரில் கிரைண்டர் கம்பெனியில் வேலை கிடைத்து 8 மாதங்கள் ஆகிறது.

மணி பன்னிரெண்டை தொட்டபோது கணேசனுக்கு வயிறு கலக்கியது. கட்டண கழிப்பிடம் நோக்கி நடந்தான். அது பூட்டிக்கிடந்தது. இந்த நேரத்தில் எங்கு போவது?! வேல சொன்னா பேல வருதுங்கான் என முதலாளி சொல்வது சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது. வயிற்றில் பொருபொருவென இரைச்சல். மதியம் சாப்பிட்டது ஒத்துக்கொள்ளவில்லை. வயித்தால போகும்போல பட்டது. நல்லவேளைக்கு காலி தண்ணீர் பாட்டில் ஒன்று மூடியில்லாமல் தரையில் கிடந்தது. அதில் தண்ணீர் பிடித்துக்கொண்டு தண்டவாளத்தில் இறங்கி இருளில் மறைந்தான் கணேசன். அவனை கண்காணித்துக்கொண்டிருந்த கண்கள் பரபரத்து செல்போனை எடுத்து பட்டன்களை அழுத்த துவங்கியது.

வயிறு காலியானது பெரிய நிம்மதியைக் கொடுத்தது. ரயிலுக்கு இன்னும் முழுசாக ஒரு மணிநேரம் இருக்கிறது. லேத்து அலமாரியில் போன வாரமே வாங்கி வைத்திருந்த பாலகுமாரனின் கரும்பு கட்டில் கிடந்தது. கொண்டு வந்திருந்தால், படித்திருந்திருக்கலாம். அதையெல்லாம் எடுத்து வைக்கிற மனநிலையிலோ, சாவகாசத்திலோவா இருந்தோம். மெள்ள நடந்து கடைப்பக்கம் வந்தான். மூடப்பட்டிருந்த கடையின் பக்கவாட்டு தூணில் கயிறு கட்டப்பட்டு அதில் பத்திரிகைகளின் போஸ்டர்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தொடைகளைப் பரத்தி அவஸ்தையாக குத்த வைத்திருந்த ஒரு நடிகையின் படம் போஸ்டரின் முக்கால்வாசியை ஆக்ரமித்திருந்தது. போஸ்டரின் ஓரத்தில் தண்டவாள காமுகன் தப்ப விடுகிறதா காவல்துறை?!, யாரோடும் கூட்டணி இல்லை- நின்றசீர் நெடுமாறன்’’ரேச்சலுடன் நட்புதான் - மனம் திறக்கிறார் கிஷோர்காந்த்சுவாரஸியமாக படித்து விட்டு போஸ்டரை பாதியாகக் கிழித்தான் கணேசன். ஒன்சைடு எழுத.

மசமசவென்று ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்த கம்பத்தின் அடியில் அமர்ந்து பைக்குள் துழாவினான். சட்டைபாக்கெட்டில் ரிபீல் கிடந்தது. பேப்பரை நான்காக மடக்கி பிள்ளையார் சுழி போட்டு எழுத துவங்கினான். மாலதி, மாலினி, மாலைமதி, மாலா... நான்கு பெயர்கள் எழுதுவதற்குள் தலையில் சொடெரென விழுந்தது அடி. திடுக்கிட்டு நிமிர்ந்தவனைச் சுற்றி நான்கைந்து போலீஸ்காரர்கள். எந்திரிக்க முற்பட்டவனை பூட்ஸ்கால்கள் உதைத்தன. சுளீர் சுளீரென முதுகில் விழுந்தது லத்தியடி. அய்யோ...அம்மா...ஏன் சார் அடிக்கறீங்க வலியில் கதறினான் கணேசன். தாயோளீ... எங்க உள்ளவண்டா நீயி... கொத்தாக தலைமயிரைப் பற்றி நிமிர்த்தி கேட்டவன் கொஞ்சம் உயரதிகாரியாக இருக்கவேண்டும். சார் பாசஞ்சருக்காக காத்துக்கிடக்கிறேன் சார்... நாகர்கோவில் எக்ஸ்பிரஸை மிஸ் பண்ணிட்டேன்... தட்டுத்தடுமாறி பதில் சொன்னான். முதுகில் கம்பு பட்ட இடங்கள் எரிந்தது. வாய்க்குள் எங்கோ ரத்தம் கசிந்திருக்கவேண்டும். பச்சை வாடையை உணர்ந்தான். டிக்கெட்ட காட்டுறா என்றார் ஒரு கான்ஸ்டபிள். அவசர அவசரமாக பேண்ட் பாக்கெட், சட்டைப் பாக்கெட்டில் துளாவிய கணேசனுக்கு உயிரே போய் விட்டது. ஆஹா...டிக்கெட் எடுக்கவில்லை. டிரெயினை கோட்டை விட்டதும், கீழே போய் பாசஞ்சருக்காவது டிக்கெட்டை எடுத்திருந்திருக்கலாம். இனி எவ்வளவு சொன்னாலும் நம்பமாட்டார்கள். பரிதாபமாக நடுங்கும் கரங்களைக் குப்பியபடி அவசரத்துல டிக்கெட் எடுக்கல சார்... சொல்லி முடிக்கவில்லை முகத்தில் இரும்பாக இறங்கியது ஒரு குத்து.

ஏரப்பாளீ நாயி... பேப்பர்ல பொட்டச்சிங்க பேரு எழுதி வச்சிருக்கான் சார்... இந்தத் தாயோளீதான் சார் அக்யூஸ்டு. அவசரமாம் அவசரம். இவனை 5 மணி நேரமா வாட்ச பண்ணிக்கிட்டு இருக்கேன் சார்... தூக்கிட்டுப்போய் சாமான்ல சூடு வச்சா ஒத்துக்குவான் சார்...

அடித்த அடியில் மயங்கி விழுந்த கணேசனை அள்ளி டிராலியில் போட்டு தள்ளிக்கொண்டு போயினர் போலீசார். ரயில்வே ஸ்டேசன் சரவுண்டிங்கில் ஓரே மாதத்தில் அடுத்தடுத்து ஐந்து கற்பழிப்பு கொலைகள். கொய்யாப்பழம் விற்பவள், குருட்டு பாடகி, கழிப்பறை சுத்தம் செய்பவள், பிச்சைக்காரி இவர்களோடு ஒரு லேடி கான்ஸ்டபிளையும் கற்பழித்து தண்டவாளத்தில் வீசியிருக்கிறான். பத்து நாட்களாக பழியோ பழியென்று காத்துக்கிடந்து பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டார்கள்.

ஜெயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதையும், குழந்தைக்கு தன் தாய் மாலையம்மாவின் பெயரை வைக்கத்தான் துண்டுச்சீட்டில் பெயர்களை யோசித்து எழுதியதையும் கணேசன் அவர்களுக்குச் சொல்லி விளங்கவைக்க முடியாத ஆழமான மயக்கத்திற்குள் போய்விட்டிருந்தான் கணேசன்.

- செல்வேந்திரன்.