Friday, October 30, 2009

ப்ளடி... பிளாக்கர்...!

கொஞ்சம் கூப்பினி குடித்தால் பரவாயில்லையென தோன்றியது. கோகோ ஷாப்புக்குள் நுழைந்தேன். அறிவிப்பு பலகையின் இன்றைய ஸ்பெஷல் நீத்தண்ணி என்று எழுதி வைத்திருந்தார்கள். ஒரு கலயம் நீத்தண்ணி முப்பது ரூபாய். கூப்பினியைக் காட்டிலும் மூன்று ரூபாய் குறைவுதான். இந்த கொடிய ரிசஷனில் நீத்தண்ணிதான் பெஸ்ட். ஆர்டர் செய்து விட்டு ஜன்னலோரத்து இருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன்.


எதிர் இருக்கையில் ஆறு வயதுப் பையன் ஒருவன் ஹிம்சாகரின் புத்தகமொன்றைக் கிழித்து கப்பல்கள் செய்து நீச்சத்தண்ணி கலயத்துக்குள் நீந்த விட்டுக்கொண்டிருந்தான். அந்த ஹிம்சாகரின் புத்தகத்தை மூன்று பிறவிகளாகத் தேடிக்கொண்டிருக்கிறேன் நான். காந்தியை நான் சுட்டதையும், பிரவீன் ஆம்தே யாரோடெல்லாம் படுத்தான் என்பதைப் பற்றியும் சுவைபட எழுதப்பட்ட புத்தகம் அது. இந்த பிறவியிலும் அப்புத்தகம் கிடைக்காவிட்டால் பத்ரியிடம் கோரிக்கை வைக்கலாம் என்றிருந்தேன். அப்பேர்பட்ட புத்தகத்தில் கத்திக்கப்பல் செய்பவனை நோக்கி கத்தலாமா? கத்தியைத் தூக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் உற்றுப்பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்டான் பொடியன்... "நீ ஒரு எழுத்தாளனா...?!"


"அட...எப்படித் தெரியும்... என் எழுத்துக்களை வாசித்திருக்கிறாயா... டி.வியில் கூட ஒருமுறை வந்தி..."


"உன்னிடமிருந்து எழுத்துக்களின் அழுகிய வாடை அடிக்கிறது" - அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு தன் கடன் கப்பல் செய்வதே என்பது போல சர சரவென பக்கங்களைக் கிழித்து கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.


அடேயப்பா ராஜபாளையத்தில் பிறந்தவன் போலிருக்கிறது. இந்தச் சின்ன வயதில் எப்படியொரு மோப்ப சக்தி. நான் எழுத்தாளன் என்பதை எளிதில் கண்டு கொண்டானே... ஆனால், இப்படி பொறுப்பில்லாமல் புத்தகத்தைக் கிழித்து கப்பலா செய்வது...


"ஹிம்சாகரை என் ஹிம்சிக்கிறாய்...?!" சற்று உறைப்பாகக் கேட்டேன்.


"குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டலாம். கப்பல் ஓட்டக் கூடாதா?!"


"சைத்தானே... அந்தப் புத்தகத்தின் மதிப்பு தெரியுமா... அது என் சரிதை. நான் காந்தியைக் கொன்ற வரலாறு அதில் இருக்கிறது..."


"என்ன காந்தியைக் கொன்றீரா... ஹா... ஹா... அடிவயிறைப் பிடித்துக்கொண்டு வெடிச்சிரிப்பு சிரித்தான் பொடியன்... மற்றொரு டேபிளில் அமர்ந்து புலி சூப் குடித்துக்கொண்டிருந்த சமவெளி மான் ஒன்று எட்டிப்பார்த்து முறைத்தது. சர்வர் வந்து அமைதியாக பேசுங்கள் அல்லது **டையைக் கசக்கிவிடுவேன் என்று மிரட்டி விட்டுப் போனான். எனக்கு இது ஒன்றும் புதியதல்ல... இந்தக் கடையில் கூப்பினி குடிக்க வரும் ஒவ்வொரு முறையும் இந்த சர்வர் என்னை மகா கேவலமாகப் பேசுவது சகஜம்தான். என் பிரச்சனை சர்வர் அல்ல! இந்தப் பொடியனின் அலட்சியம்தான் எனக்கு பெருத்த அவமானத்தை தந்தது.


"ஏன் நான் காந்தியைக் கொன்றதை நீ நம்பவில்லையா... இதோ என் கழுத்தைப் பார்... என்னை தூக்கிலிட்டதன் கயிற்றுத் தழும்புகள். சாகும் வரைதான் தூக்கிலிடச் சொல்லி உத்தரவு. பரதேசிகள்! நான் செத்தபிறகும் சில நிமிடங்கள் தூக்கில் தொங்க வைத்துவிட்டார்கள். வயலேஷன் ஆஃப் ஜட்ஜ்மெண்ட். செத்த பிறகும் தூக்கில் தொங்குவது எத்தனை அவமானகரமானது தெரியுமா...?"


"நீ காந்தியைக் கொன்றாய் என்பதற்கு இந்த ஆதாரம் போதுமென்று நினைக்கிறாயா... எழுத்தாளா..."


"நிச்சயம் இல்லை. நீ என் அலுவலகத்திற்கு வந்தால் காந்தியைக் கொன்றபோது ரெட்ஜயண்ட் காமிராவினால் எடுக்கப்பட்ட வீடியோவைக் காட்டுகிறேன். வர விருப்பமில்லையெனில் நீயே யூ ட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்"


"என் காதலிக்காகக் காத்திருக்கிறேன்... இன்னொரு நாள் வருகிறேன்."


"ஓகே... பை தி பை... மை நேம் இஸ் செல்வேந்திரன், எமர்ஜிங் ரைட்டர்! உன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே..."


நீண்ட பிரசங்கத்திற்கு தயார் செய்பவனைப் போல தன் தொண்டையைச் செருமிக்கொண்டு துவங்கினான் பொடியன்...


"என் இயற்பெயர் அலெக்ஸாண்டர் டூமாஸ். அது மிகவும் கேவலமான வைதீக பெயர் என்பதால் "ஜெனோவா வீரன் பக்கிரிசாமி" என மாற்றிக்கொண்டேன். என் தாய் அம்புஜம் ராஜஸ்தானைச் சேர்ந்தவள். அவளது எண்பதாவது வயதில் நான் பிறந்தேன். என் பிறப்பு ஒரு சோக சரிதம். வாழ்வியல் கடமைகள் பூர்த்தியாகி விட்டதால் சாந்தாரா இருந்து உயிர் துறக்க ஆசைப்பட்டாள் அம்புஜம். ஆனால், அதற்கு முன் ஊரில் உள்ள பிரமுகர்களுக்கு விருந்தளிக்கத் திட்டமிட்டாள்.


விருந்திற்கு சமூக அக்கறையும், அறச்சீற்றமும் கொண்ட அகவலோசைக் கவிஞன் ஒருவன் வாளி நிறைய்ய கவிதைகளோடு வந்தான். கொஞ்சம் கவனப் பிசகாக இருந்தாலும் வாளியில் இருக்கும் கவிதைகள் எகிறி குதித்து ஜனங்கள் மத்தியில் பரவி விடும் அபாயம் இருந்ததால், அம்புஜம் மிகுந்த கவனத்தோடு அவனிடத்தில் இருந்து வாளியை வாங்கி ஜனசந்தடியற்ற இடத்தில் வைக்கச் சென்றாள். எவனோ ஒரு பிரக்ஞையற்ற பரதேசி தின்றுவிட்டு போட்ட வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்ததில் அவளது கையிலிருந்த வாளி கவிழ்ந்து கவிதைகள் எல்லா திசைகளிலும் பரவியது. விருந்துதானே என உள்ளூர் பிரமுகர்களும் முகமூடி, மூக்குமூடி, காதுமூடி என எந்தவொரு மூடியும் இல்லாமல் வந்து தொலைத்திருந்தனர். எவரையும் காப்பாற்ற முடியவில்லை. எங்கும் மரண ஓலம். அந்தக் கவிஞன் என் தாயின் வளையல்களைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்..." - இந்த இடத்தில் பக்கிரிசாமியின் கண்கள் கலங்கி விட்டன. என்னதான் இருந்தாலும் சிறுவன் தானே... தாயின் நினைப்பு வந்திருக்கலாம். அவனைத் தேற்றும் பொருட்டு சர்வரை அழைத்து 'பொட்டாசியம் குளோரைடு பொரியல்' ஒரு பிளேட் ஆர்டர் செய்தேன்.


அவன் விசும்பலோடு தொடர்ந்தான்..."என் தாய் புகழ் மிக்கவள். அவள் கேட்டாள் என்பதற்காக ராஜஸ்தான் மன்னர் கானாவிலிருந்து ஒரு கழுதைப்புலியையும் அதை மேய்ப்பதற்கு ஒரு கறுப்பனையும் வரவழைத்தார். மன்னரது இந்த அன்பிற்கு தப்பர்த்தம் எதும் கொள்ள வேண்டியதில்லை. அம்புஜம் ஒரு அறிவுலக மேதை. விஞ்ஞானியும் கூட. கவிதைகள் எழுதும் சிந்தனை ஒருவனுக்கு வராமல் இருக்க அவள் ஒரு சூரணம் தயாரித்தாள். பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசே அச்சூரணத்தை இலவசமாக வழங்கியது. கவிதைகள் மனுவிரோதம் என்றபோதும் அவள் கவிஞர்களை வெறுத்ததில்லை. நாட்டில் கவிஞர்கள் இனம் அருகி வந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு 'கவிஞர் வதை தடுப்புச் சட்டம்' கொண்டு வர பாடுபட்டாள். கவிஞர்கள் வாழ்கிற தெருக்களில் வேட்டை தடை செய்யப்பட்டது. உலோகப் பொருட்களுடன் அத்தெருக்களில் எவரும் நுழைய முடியாது...ச்சே... அப்பேர்ப்பட்டவளைக் கொலை செய்யும் நோக்கோடு அவன் வந்திருக்கலாமா... இதுதான் அறச்சீற்றமா...?!" - திரும்பவும் விசும்பினான் பக்கிரிசாமி. அவனது கண்ணீரில் எனது வேட்டி தெப்பலாக நனைந்துவிட்டது. வேட்டியைக் கழற்றி பிழிந்து பக்கத்து நாற்காலியில் காய வைத்தேன்.


"சரி... அழாதே பக்கி... உன் பிறப்பில் ஏதோ துயரம் என்றாயே... அதைச் சொல்..." என்றேன் நான்.


"அன்றைய விருந்தில் என் தாயுடன் சேர்த்து 78 பேர் மரித்துப் போனார்கள். அம்புஜம் கர்ப்பிணி என்பது யாருக்கும் தெரியாது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடரின் முக்கியக் காட்சி அன்று. சீரியல் பார்க்கும் அவசரத்தில் ஊரார் 78 பிணங்களையும் அவசர அவசரமாகக் கடலில் வீசி விட்டார்கள். அம்புஜத்தின் பிணத்தை கடற் பெருச்சாளியொன்று கடித்தது. பிண வாடைக்கு சுறாக்களும் கூடி விட்டன. பெருச்சாளிக்கும் சுறாக்களுக்கும் ஆகாது என்பது உனக்கு தெரிந்திருக்கலாம். இருதரப்பும் பிணத்திற்கு அடித்துக்கொண்டதில் அம்புஜத்தின் வயிறு கிழிந்து நான் வெளிப்பட்டேன். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்ததால் வெறும் கால்களால் பல நாட்டிக்கல் மைல்கள் நீந்தி யாழ்ப்பாணத்தில் கரையேறினேன். அங்கே அவசர அவசரமாக பலரை மின்படகுகளில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தேன்.
 
மண்டபம் முகாமில் என்னைப் பிடித்து விட்டார்கள். என் பெயர் என்ன என்று கேட்டார் விசாரணை அதிகாரி. என் துயர கதையை அவரிடம் சொன்னேன். அவர் அந்தச் சமயத்தில் 'த்ரீ மஸ்கீட்டர்ஸ்' படித்துக்கொண்டிருந்தார். தான் படித்துக்கொண்டிருக்கிற காரணத்தினாலேயே உலகில் அதை மிஞ்சிய இலக்கியப் பிரதி வேறெதுவும் இல்லையென்றும், இதைப் படிக்காதவன் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே அருகதையற்றவன் என்றும் உறுதியான முடிவுகள் வைத்திருந்தார். நான் எவ்வளவு மறுத்தும் 'அலெக்ஸாண்டர் டூமாஸ்' எனும் பெயரைத் திணித்து விட்டார். முகாமில் வளர்ந்தேன். அங்கிருந்தவர்கள் அன்பானவர்கள். அவர்களிடமிருந்து நான் கண்ணீர் விடவும், ரத்தம் சிந்தவும், மனம் குமையவும், குருட்டு நம்பிக்கையையும் கற்றுக்கொண்டேன்.


என்னுடைய நான்காவது வயதில் எழுத்தாளர் பிரதியங்கார மாசானமுத்து எங்களது முகாமிற்கு வந்தார். உங்கள் துயரங்களை எழுத்தில் வடிப்பேன், அதை வாசிப்பவர்கள் இதயம் வெடித்து உங்களைத் தேடி ஓடி வருவார்கள் என்றார். உங்கள் துன்பங்கள் தீர நீங்கள் அனுபவித்த துயரங்களை என்னிடத்தில் சொல்லுங்கள். ரியலிஸம் ரொம்ப முக்கியம் என்றார். குறிப்பாக பெண்களிடத்தில் ராணுவம் நடந்து கொண்ட விதத்தை நடித்துக் காண்பிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார். மாசானமுத்துவைப் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி என் தாயின் கருவில் இருக்கிற காலத்திலேயே படித்திருக்கிறேன் என்பதால் அவரது பாச்சா என்னிடத்தில் பலிக்கவில்லை. என் தாய் அம்புஜத்தைப் பற்றியும், ராஜஸ்தான் அரண்மனையில் அவளுக்கிருந்த செல்வாக்கைப் பற்றியும் அவன் துருவி, துருவி கேட்டுக்கொண்டே இருப்பான். அதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போது நான் கர்ப்பத்தில் இருந்தேன் என்று சொல்லியும் விடமாட்டான். கானாவில் இருந்து வந்த கழுதைப்புலி மேய்ப்பன்தானே உன் தகப்பன் என்று ஒரு நாள் என்னிடத்தில் கேட்டான். மாசானமுத்து என் குஞ்சைப் பிடித்து அழுத்துகிறான் என கத்தினேன். மொத்த முகாமும் கூடி அவனை நையப் புடைத்துவிட்டது. அவன் பிரான்ஸிற்கு ஓடிப் போய் விட்டான் என சிற்றிதழ் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டேன்... அப்புறம் ஒரு திரைப்பட இயக்குனர் வந்... சொல்லிக்கொண்டிருந்த பக்கிரிசாமி பேச்சை நிறுத்தினான்... திபு திபுவென போலீஸார் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். பக்கிரிசாமியின் முகம் வெளிறியது...அவனது முகத்தில் கலவரமும், பயமும் கொப்பளித்தது...சட்டென வியர்த்துப்போனான்... அவனை அடையாளம் கண்டுகொண்ட போலீஸ்காரனொருவன் அவனது கழுத்தில் துப்பாக்கியை வைத்து இறுக்கினான்... இன்னொருவருவன் பக்கிரிசாமியின் கரங்களைப் பின்பக்கமாகச் சேர்த்துக் கட்டினான்.


நான் வேட்டியை எடுத்து உடுத்திக்கொண்டு ஓட தயாரானேன். "டேய் எழுத்தாளா... என்னைச் சந்தித்ததை எழுதப் போகிறாயா...?!" பக்கிரிசாமி கத்தினான்.


"எழுதுவேன்... பிரச்சனை வந்தால் எடுத்துவிடுவேன்..." சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தலை தெறிக்க ஓடத் துவங்கினேன்.


"த்தூ... ப்ளடி பிளாக்கர்..!" அவன் காரி உமிழும் ஓசை தூரத்தில் கேட்டது.

Wednesday, October 14, 2009

அறிவு ஜீவி

'ரமேஷ் வைத்யா' பதிவினைப் படித்து விட்டு பலரும் தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தனர். அவரது தொலைபேசி எண்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். மருத்துவமனையில் செல்போனை பகிரங்கமாகப் பயன்படுத்த இயலாது. கவுன்சிலிங் வகுப்புகளின் போது பெரும்பாலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். தவிர, தொலைபேசியில் அழைத்துப் பேசுவது என்பது சிகிச்சையில் இருப்போர்க்கு கூடுதல் உபத்திரவம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். அவரது எண்கள் 9566270092. வெளியூர் நண்பர்கள் அவரை உற்சாகமூட்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பலாம் என்பது அடியேனின் யோசனை.

நைஜீரியாவிலிருந்து நேசமித்திரன் அழைத்திருந்தார். எழுத்து அல்லது சினிமாக் கனவுகளை நெஞ்சில் சுமந்து சென்னைக்கு ரயிலேறும் இளைஞர்களுக்கு அபிபுல்லா சாலை வீட்டில் அறிவுமதி அடைக்கலம் கொடுத்ததைப் போல... பல பாட்டுப் பறவைகளின் வேடந்தாங்கலாக ரமேஷின் வீடு இருந்ததை நினைவுப் படுத்தினார். எவ்வித முன்னறிவிப்புமின்றி கிளம்பி, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்க முடிகிற வீடாக ரமேஷின் வீடு இருந்தது. அற்றைத் திங்கள் அந்நிலவில்... பாடல் நினைவுக்கு வருகிறது.
***
குங்குமத்தில் இருபது கவிதைகளும், தினகரன் தீபாவளி மலரில் இரண்டு கவிதைகளும் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் வெகுஜனப்பத்திரிகைகளில் நூறு கவிதைகள் (ஆம்... பத்திரிகை ஆசிரியர்கள் இதை கவிதைகள் என்றுதான் கிளாஸிபை பண்ணுகிறார்கள்!) என்கிற எண்ணிக்கையை எட்டிப் பிடித்திருக்கிறேன். ஸ்கோர் 101*
தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் எழுத வேண்டுமென்கிற என் கனவு சுயமதிப்பீட்டுக் காரணங்களால் தள்ளிப் போகிறது.
***
ஆனந்த விகடனில் ராஜூ முருகன் எழுதிய 'ஹேப்பி தீபாவலி' என்கிற கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை மிகச் சாதாரணமான ஒன்லைன் தான். ஆனால் ராஜூவின் அக்மார்க் கேலியும், பிரத்யேக நரேட்டிவும் கதையோடு லயிக்கச் செய்கிறது. ராஜூ தன் மொழியை இளமையாக மிக இளமையாக வைத்திருக்கிறார். உதிரி உதிரியாய், கன்னி கன்னியாய் எழுதி அவற்றைக் கதையின் ஒரு சுவாரஸ்ய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைப்பது அவரது பாணி. ராஜூவின் கதைகள் பொது வாசகனுக்கும், அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கும் வேறு வேறான உணர்வைத் தருபவை.
***
தமிழ்நதியின் 'ஒரு குடிமகனின் சரித்திரம்' அற்புதமான கட்டுரை அல்லது கதை. சிரிக்க, சிரிக்க படித்து விட்டு வந்தால் கடைசி பாராவில் மனதைக் கனக்க வைக்கிறார். நல்ல கவிதைகள், ஆக்ரோஷ அரசியல் கட்டுரைகள் அல்லது மனதைப் பிழியும் சோகச் சித்திரங்கள் இவைதான் தமிழ்நதி என்கிற என் உள்மன பிம்பத்தை உடைப்பதாக இருந்தது கட்டுரை. http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post.html
***
தமிழ் நாட்டில் எனக்கு குபீர் சிரிப்பைத் தரக்கூடியவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி (வெறுமனே அப்படிச் சொல்ல மனசு வலிக்கிறது. இவரது கார்ட்டூன்கள் அறச்சீற்றத்தாலும், ஆண்மையாலும் வரையப்பட்டவை...) மற்றொருவர் நம் இணைய சிரிப்பு வைத்தியர் குசும்பன். வழமையாய் வலையும், அது தரும் சர்ச்சைகளும் ஏற்படுத்தும் மன உளைச்சலை டாக்டர் குசும்பனார்தான் தீர்த்து வைக்கிறார். அவரது சமீபத்திய ஓபாமா கார்ட்டூன் 'இப்படி ஒரு பரிசைக் கொடுத்து கையை கட்டிப் போட்டுட்டாங்களே... விக்காத பாமையெல்லாம் இனி என்ன பண்றது?!' என்கிற நையாண்டியையும் அதன் உள்ளார்ந்த பொருளையும் மிகவும் ரசித்தேன்.
***
'அறிவு ஜீவி' என்கிற வார்த்தையே ஒரு மித். ஜெயலலிதா ஒரு இண்டலெக்சுவல் என்பது எப்படி பைத்தியக்காரத்தனமான ஒரு கற்பனைப் பிம்பமோ அப்படித்தான் இன்னார் ஒரு 'அறிவு ஜீவி' என்பதும். நம் சுய கற்பனைகளால் கட்டி எழுப்பும் கோட்டை நொறுங்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. புத்தகங்கள் படிக்கிறார்கள், தத்துவ விசாரங்கள் செய்கிறார்கள், பொதுப்புத்தி, பிரைவேட் புத்தி, நுண்ணரசியல், மைக்ரோ அரசியல் என எழுதிக் குவிக்கிறார்கள், சக மனிதனை ரத்தம் வர அடிக்கிறார்கள். வாழ்க அறிவு ஜீவிகள்!

எழுத்தில் தனி மனித தாக்குதல்கள் வேண்டாம் என்பதை ஒரு பிரச்சாரம் மாதிரி செய்கிறவர்கள், தனி மனிதனே பிஸிக்கலாகத் தாக்கப்படும்போது எதிர்வினைகள் ஏதுமற்று வாளாவிருக்கிறார்கள். எதிர்வினை செய்பவர்களும், எதிர்ப்பைக் காட்டுபவர்களும் சண்டைக்கு அலைகிறவர்களாக, சர்ச்சை விரும்பிகளாக அடையாளப்படுத்தி விடும் அபாயம் இருந்தாலும் ஜ்யோவ் தாக்குதலுக்கு எதிரான கண்டனங்களை சக இணைய எழுத்தாளனாகப் பதிவு செய்ய வேண்டிய கடமையும், அவசியமும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சென்னைப் பதிவர்களான தண்டோரா, உண்மைத் தமிழன், நர்சிம் ஆகியோர் முகத்தாட்சண்யத்துக்காகப் பார்க்காமல் சில விஷயங்களைக் கண்டித்து எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

என் மீதும், எனது எழுத்துக்கள் மீதும் 'ஜ்யோவ்' வைத்திருக்கும் அபிப்ராயமும், எனக்கும் அவருக்கும் இருக்கும் சர்ச்சைகளும் உலகறியும். ஆனால், தனது கருத்துக்களை, விமர்சனங்களை முன் வைத்ததற்காக ஒருவர் தாக்கப்பட்டால் அது 'அஜ்மல் கசாப்' - ஆக இருப்பினும் எனது நிலைப்பாடு இதுதான்.
***
அதிரசத்திற்கு மாவு பிசையும் வாசனை எவர் வீட்டு அடுப்பங்கரையிலிருந்தோ கிளம்பி என் விடுதியறை ஜன்னலுக்குள் நுழைகிறது. 'பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு எத்தனை அழகானது' என்ற வண்ணதாசனின் வரிகளும், பிராயத்து தீபாவளித் தினஙகளும் நினைவுக்கு வருகின்றன. அம்மா, அக்கா, மதினிமார்களென கூட்டுக் குடும்பமாய் இருந்த நாட்களில் தீபாவளி என்பது பத்து நாள் வைபவம். முந்திரிக்கொத்து, சுசீயம், சீடை, அதிரசம், முறுக்கு, தட்டை, கடலை பணியாரம், ரசகுல்லா, கல கலா என அவரவர் விருப்புக்கேற்ற பண்டங்களைச் செய்வதில் வீட்டுப்பெண்கள் முனைப்புடன் இருப்பர். எண்ணெய் வழியும் விரல்களும், வியர்வை வழியும் கழுத்துமாக ராப்பகலாக அடுப்படியில் சுட்ட பலகாரங்களை 'சுவாமிக்கு வைக்கனும்டா...' என்கிற ராணுவக்கட்டுப்பாட்டில் தொட விடமாட்டார்கள். ஆனாலும் யாவரும் உறங்குகிற நள்ளிரவில் ரகசியமாக எடுத்துத் தின்றுவிடுவேன். அந்த சாமிக்குத்தங்களெல்லாம் ஒன்று சேர்ந்து என் குடும்பத்தைக் கலைத்துப் போட்டு விட்டதோ என்னவோ?!

பஸ் ஸ்டாண்டில் என் வருகைக்காக அப்பா காத்திருப்பார். வாட்டர் ஹீட்டர் வெந்நீரில் இருவரும் குளிப்போம். கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அரைக்கிலோ பார்சலை விளக்கு முன் வைத்து வணங்கி, ஆளுக்கொரு துண்டை சாப்பிட்டு விட்டு, எதிர் வீட்டுக் குழந்தைகளுக்கு மிச்சத்தைக் கொடுத்து விட்டு விட்டத்தைப் பார்க்கும் வறண்ட தீபாவளி. கேண்டி வந்துதான் வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன்.

Tuesday, October 13, 2009

ரமேஷ் வைத்யா

தமிழ் சினிமாவில் நா. முத்துக்குமார் இருக்கிற இடத்திற்கு நிகரான இடத்தைப் பிடித்திருக்க வேண்டியவர் ரமேஷ் வைத்யா. குறைந்த பட்சம் ஒரு பத்திரிகையில் பொறுப்பாசிரியர் அளவிற்காவது உயர்ந்திருக்க முடியும். அதற்கான அத்தனைத் தகுதிகளும் அவரிடத்தில் இருந்தது, இருக்கிறது. குடியினால் குடும்பம், ஆரோக்கியம், வேலை, சேமிப்பு என அனைத்தையும் இழந்த பின்னும் நாவில் சரஸ்வதி எழுதிய தமிழ் இருக்கிறது. உலகை வெல்ல தமிழ் போதும் என்கிற நம்பிக்கையை பாஸ்கர் சக்தி விதைத்திருக்கிறார். அவரது தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் குடிப்பழக்கத்திலிருந்து மீளூம் சிகிச்சையை அடையாறு மருத்துவமனையில் பெற்று வருகிறார். அரை இட்லியிலிருந்து மூன்று இட்லிக்கு முன்னேறி இருக்கிறார். தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.

துரோகமும், புறக்கணிப்புமே வாழ்வின் மீதான அவநம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள நபர்களில்லை. மீண்டும் அவரை தனிமையும்,வெறுமையும் சூழ்கிறது. தனிமை என்னை வதைக்கும்போது குடி எண்ணம் மீண்டும் தலை தூக்குகிறது என்கிறார். சாப்பாடு, பழங்கள் வாங்கி வர... உடனிருந்து கதைக்க... துணை இல்லாத ஆஸ்பத்திரி தினங்கள் எத்தனை இரக்கமற்றது?!

மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது என ஒரு நேர்காணலில் மம்மூட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது. வேலையில் இருந்தபோது கொண்டாடிய நண்பர்களில் பலரிடம் இருந்து தொலைபேசி குசல விசாரிப்புகள் கூட இல்லை என்பது எத்தனை சோகம்?! பதிவர்கள் அவருக்கு எப்போதுமே பிரியமானவர்கள். பிரியமானவர்கள் மட்டுமில்லை நெருக்கடி தருணங்கள் பலவற்றிலும் உதவியவர்கள். அவர்களில் பலர் அவரை நேரில் பார்க்காததற்கு அன்றாடங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஒரு வார இறுதியை அவருக்காக ஒதுக்குங்களேன். ப்ளீஸ்!

Friday, October 9, 2009

இலக்கிய ஏஜென்ட் - 007


மதனும், ராவும் இணைந்து 'சூரியக்கதிர்' என்றொரு பத்திரிகையை கொணர இருப்பதாகவும், நாமக்கல் தொழிலதிபர் ஒருவர்தான் தயாரிப்பாளரென்றும் யட்சினி சொல்லியது. நவம்பரின் மத்தியில் சந்தைக்கு வரலாம் என்கிறார்கள். புதிது புதிதான பத்திரிகைகளின் வருகை ஆரோக்கியமானதுதான். எல்லா பத்திரிகைகளிலும் நமக்கு வேண்டியவர்களும், வேண்டாதவர்களும் எழுதுகிறார்கள். அப்-டேட்டாக இருக்க எல்லாவற்றையும் வாங்கித்தான் ஆகவேண்டி இருக்கிறது. பாக்கெட் பணால் ஆகிறது.

***

எதிர்வினை அல்லது மாற்று அபிப்ராயங்களுக்கான பேட்டையாக வலை ஒரு போதும் இருந்ததில்லை. வேறெந்த ஊடகங்களிலும் இல்லாத கட்/காப்பி/பேஸ்ட் வசதி இருப்பதனால் எழுதியவன் கேட்கிற நேரடி கேள்விகளை வசதியாக மறந்து விட்டு... ஏதேனும் சில வரிகளையோ, வார்த்தைகளையோ காப்பி, பேஸ்ட் செய்து சித்து விளையாட்டைக் காட்ட வசதியாக இருக்கிறது.

***

நண்பர் ஆர்.ஆர் அமெரிக்காவாசி. பதிவில் எப்போதோ குறிப்பிட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் புத்தகத்தை ஞாபகம் வைத்திருந்து வரும்போது வாங்கி வந்ததில் எனக்கு ஏக மகிழ்ச்சியும் பெருமையும். எழுத்தூக்கம் முற்றிலும் வடிந்து தேக்க நிலையில் இருக்கும்போது கிடைக்கும் இதுமாதிரியான பரிசுகள் உற்சாகம் கொள்ள வைக்கின்றன.

***

கார்லோ புரூனியைப் பற்றி ஜொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஜாக்குலின் கென்னடிக்கு அடுத்து அழகால் புகழ் பெற்ற அதிபரின் மனைவி. தன்னுடைய அறக்கட்டளை வகைக்காக வளைதளம் ஒன்றைத் திறந்துள்ளார். ரசிக மகா ஜனங்களின் வசதிக்காக

***

நடுக்காட்டில் குடியிருப்பு, சதா பெய்து கொண்டிருந்த மழை, கழுதைப்புலியோடு ஒரு சந்திப்பு, யானைக்கூட்டம் சுற்றி வளைப்பு, வாகனம் சேற்றில் சிக்கிக்கொண்டது, கொஞ்சூண்டு ரத்தம் சிந்தியது என 'ரியல் அட்வெஞ்சர்' டூராக இருந்தது பொக்காபுரம் பயணம். அடர்கானகப்புலியாக இருந்து சமவெளி மானாக மாறிவிட்ட அய்யனார், உமா கதிர், சிவக்குமரன் மற்றும் வெயிலானோடு வனம் புகுந்தது அற்புத அனுபவம்.

இந்தக் காட்டிற்கு நான் செல்வது இது ஐந்தாவது முறை. ஒவ்வொரு முறையும் காடு புதிது புதிதான ரகசியங்களை எனக்காக அவிழ்க்கிறது. காடு குறித்த புரிதல்களும், காட்டின் மீதான நெருக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காட்டில் வாழ வேண்டும் என்கிற என் ஆதி வெறியைக் கொஞ்சமேனும் தீர்க்க உதவிய வெயிலானுக்கு அழுத்தமான அன்பு முத்தங்கள்.

கழுதைப்புலிகள் குறித்தும் யானைகள் குறித்தும் கடந்த தினங்களில் திரட்டிய தகவல்களைக் கொண்டு இரு கட்டுரைகளை மும்முரமாக எழுதி வருகிறேன்.

***

இணையத்தில் சோவாறிக்கொண்டிருந்தபோது கனடாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் மயூராவின் வலைப்பூவைக் கண்டறிந்தேன். எளிய மொழியில் எழுதப்பட்ட மென்மையான கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயத்தில் ஈழம் தொடர்பான கவிதைகளில் ஆத்திரமும் அருமையாக வெளிப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 'எனக்கும் உங்களுக்கும் நீண்டதொரு வழக்கு உண்டு' என்ற நெடுங்கவிதையை கந்தகுரு கவச த்வனியில் வாசிக்க... பக்தி இலக்கியத்தில் மயூராவின் கல்வியும், மொழியில் அவருக்கு இருக்கும் லாவகமும் புலப்படுகிறது.

***

புதிய தலைமுறையின் முதலிரண்டு இதழ்களும் சூடான பக்கோடாவைப் போல விற்றுத் தீர்ந்திருக்கின்றன. ஆனால், இதை வைத்துக்கொண்டு அதன் எதிர்காலத்தை தீர்மானித்துவிட முடியாது என தோன்றுகிறது. இதழின் அமைப்பும் உள்ளடக்கமும் முழுக்க முழுக்க இளைஞர்களை... குறிப்பாக கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களை பத்திரிகைகள் வாங்க / படிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தாம் முடிந்திருக்கின்றன.

முன்னணி கடைகளில் விசாரித்த வரையில் புத்தகத்தை கேட்டு வாங்கிச் செல்வது என்னைப் போன்ற கிழ போல்டுகள்தாம். எர்கோ, காலேஜர் போன்ற இளமை இதழ்களைப் போல இன்னும் கொஞ்சம் இளகு தன்மை இருந்தால் தேவலை என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.

பெப்ஸி, கோலா, ஜீன்ஸ், ஸ்டெட், பல்ஸர் போல 'புதிய தலைமுறை'யும் இளைஞர்களின் அடையாளம் ஆனால் மட்டுமே சர்குலேஷன் ரீதியான வெற்றியை பெற முடியும் என யூகிக்கிறேன்.