Tuesday, August 24, 2010

அவசியமற்றவை

சுயானுபவக்குறிப்புகளை எழுதித் தீர வேண்டிய அவசியமென்ன என்கிறார்கள். யார் யாருக்கு எது எது வருகிறதோ அதைச் செய்து விட்டுப் போக வேண்டியதுதானே?! வறுமை இல்லை; பசி இல்லை; வாசிப்பு இல்லை; யோசிப்பு இல்லை; அகச்சிக்கல் - புறச்சிக்கல் ஏதுமில்லை. பின்னே எங்கே இருந்து வரும் லிட்ரேச்சர்?!

***

சில பூனைகளுக்குத் திருட பயம். சில பூனைகளுக்குத் திருடத் தெரியவில்லை. சில பூனைகள் திருடி அகப்பட்டு சூடு கண்டவை. சில பூனைகளுக்குத் திருட சோம்பல். சில பூனைகள் திருட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கின்றன. சில பூனைகள் திருடி முடித்து விட்டன. யாதொரு ஐயமும் இல்லை. எல்லாப் பூனைகளும் திருட்டுப் பூனைகளே...

***

அலுவலகத்தில் ரொம்ப நெருக்கமான நண்பர். தமிழார்வமுள்ள மலையாளி. அவரது சின்னப்பெண் பள்ளியில் பாட்டுப் போட்டிக்குப் பெயர் கொடுத்திருந்தாள். பாரதியின் பாடலொன்றைத் தேர்வு செய்து அவளுக்குப் பயிற்சியும் நான் கொடுக்க வேண்டுமென்பது கோரிக்கை. இரண்டு ஞாயிறுகள் தவணை வாங்கியும் அடியேன் பாட்டைக் கூட தேரிவு செய்யவில்லை. நண்பர் என் முகத்திலேயே முழிப்பதில்லை.

நாங்கள் மூன்று சகோதரர்கள். விஜிபி பிரதர்ஸென ஊரார் செல்லமாக நக்கலடிக்கும் அளவிற்குச் சகோதர ஒற்றுமை. சின்ன அண்ணன் பயல் எல்.கே.ஜியில் இருபது திருக்குறளும், யூ.கே.ஜியில் அறுபது திருக்குறளும் ஒப்புவிக்கிற விசித்திர வீரியன். ‘சித்தப்பா பேச்சுப்போட்டிக்கு ‘விடுதலை வீரர்கள்’ தலைப்புல எழுதிக்கொடுங்க...’ என்றான். வேலைப்பளுவில் மறந்து விட்டேன். குடும்ப உறுப்பினர் பட்டியலில் இருந்தே நீக்கி விட்டார்கள்.

கோவையில் எனக்குக் கிடைத்த தோழியருள் முக்கியமானவர். ஆகப்பெரிய தொழிலபதிபர். சிங்கப்பூர் அரசு உதவியுடன் பெரிய தொழிற்சாலை அமைத்து சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். அவரது பிள்ளைகள் சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர்கள். மற்ற எல்லா பாடத்திலும் கலக்குகிறவர்களால் தமிழை மட்டும் சமாளிக்க இயலவில்லை. மொழிப் பயம் போக்கிக்கொடுங்கள் என்று மன்றாடினார். இதோ அதாவென ஆறெழு மாதங்கள் ஸ்வாஹா!. ‘ஹூ இஸ் செல்வேந்திரன்?’ என்கிறார்.

எதை விடவும் குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லா பெற்றோர்களும் வெரி சென்சிட்டிவ். கல்விக்குச் சிறு இடைஞ்சல் ஏற்பட்டாலும் பெரும் மனச்சோர்வு அடைகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இதை எழுதும் போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஊரில் பிரபலமான மருத்துவரின் மகன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். எல்லாப் பாடத்திலும் அடிபொளீ மதிப்பெண்கள். கணக்கில் மட்டும் பதினைந்தை தாண்ட முடியவில்லை. பல்வேறு டியூசன்களில் வைத்தியம் பார்த்தும் தேறவில்லை. வழக்கு என் கோர்ட்டுக்கு வந்தது. பயலுக்கும் வாய்ப்பாடுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கிறதென்பதைக் கண்டு பிடித்து, இரண்டு மாதங்கள் ஓசை நயத்தோடு வாய்ப்பாட்டைக் கத்த வைத்தேன். அரையாண்டில் 90 மதிப்பெண்கள் எடுத்தான். அந்த டாக்டர் இன்றளவும் என் குடும்பத்தாருக்கு வைத்தியம் பார்த்தால் காசு வாங்குவதில்லை.

எனவே, தோழர்களே....!

***

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தார் ‘கந்தர்வன் நினைவு சிறுகதை போட்டி’ அறிவித்திருக்கிறார்கள். கதைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 25. கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர். ரமா. ராமநாதன்,
மாவட்டச் செயலாளர் - தமுஎகச,
2/435, பாரதி நகர், ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் - 622 301

மேலதிக விபரங்களை 9865566151 என்ற எண்ணில் பெறலாம்.

***

திரைப்பட அபிப்ராயங்களைப் பலரும் திறம்பட எழுதுகிற காரணத்தால் நான் குறைத்துக் கொண்டேன்.

பெருநகரில் காதலர்கள் படும் இடர்பாடுகளைக் கவனித்திருக்கிறார் சுசீந்திரன். நா.ம.அல்ல - திரைப்படத்தின் முற்பாதி அசத்தலாகவும், பிற்பாதி அயற்சியாகவும் இருந்தது. பாஸ்கர் அண்ணா தன் வசனங்களால் படத்தைப் பாதி தாங்குகிறார். முற்பாதி முழுக்கத் தியேட்டர் அதிர அதிர சிரிக்கிறது.

துருத்திக்கொண்டு நிற்கிற சாதீயப் பெருமைகளையும், ஹீரோயிசத்தையும் சகித்துக்கொள்ளத் திராணி இருந்தால் வம்சம் அம்சமான படமே. ஓர் இனக்குழுவின் உச்சிக்குணங்களைச் சொல்லுகிற தருணத்தில் அதன் எச்சித்தனங்களையும் சித்தரித்த நேர்மைக்காகவும், சம்பவங்களினுடே காட்சிப்படிமமாய் மென்கவிதைகளைக் கோர்க்கிற கவித்துவ கதையாடலுக்காகவும் பாண்டிராஜ் எனக்கு முக்கியமாகப் படுகிறார்.இசையும் கைகொடுத்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

***

ஏராளமானப் பரிசுப்பொருட்கள், வாழ்த்துக்கள், கை குலுக்கல்களோடு இருபத்தெட்டாவது வயதை இனிதே கடந்தேன். வாழ்நாள் முழுக்க அன்பின் ஈரச்சாரலில் நனைந்து கொண்டே இருப்பது இறையருள்.

***
மனதிற்குகந்தவர்களைப் பற்றி முடிந்தவரைக்கும் எழுதாமல் இருப்பது உசிதம். நாம் உருவாக்கும் சொற்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் எவ்விதமானச் சங்கடங்களை உருவாக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இனிப்பேயானாலும் சர்க்கரை நோயாளிக்குப் புகட்டினால் சங்கடம்தானே?!

Saturday, August 14, 2010

இருக்கிறேன்

தமிழாய்ந்த முதுகூகை அவர். அவ்வப்போது பட்டாயாவில் பட்டையைக் கிளம்பும் வழக்கமுண்டு. அன்பு கலக்காத கலவி - வம்பு வளர்க்காத கிழவி என்பது என் அபிப்ராயம். மறுத்தார் அவர்.

ஒவ்வொரு முறை போகும்போதும் மறக்காமல் சின்னச்சின்ன கவரிங் நகைகள், ஸ்டிக்கர் பொட்டுக்கள் வாங்கி வைத்துக் கொள்வாராம். உடை தளர்த்தும் முன்னர் உனக்காகத்தான் வாங்கி வந்தேனென நீட்ட அகம் நெகிழ்ந்து அன்பு பெருக்கெடுக்கும் என்கிறார். அரை நாள் சகவாசத்திலும் அன்பை எதிர்பார்க்கிறது மனம்.

***

மகுடேஸ்வரன் சந்திப்பு வந்தவனை பஸ் ஸ்டாண்டில் மடக்கி பெரிய கொடிவேரிக்கு அழைத்துச் சென்றார்கள் திருப்பூர் நண்பர்கள். வழியில் ஒரு கிராமத்தில் கண்ணுக்குள் புல்லினை விட்டு கற்கள் எடுக்கும் வைபவம். மயிர்க் கூச்சம் எடுத்து திரும்பி நின்று கொண்டேன். கல்லெடுக்கும் கிழவிதான் சாமிநாதனின் ஆஸ்தான கண் வைத்தியராம். அடிக்கடி கண்களைச் சுத்தம் செய்துகொள்வேன் என்றார். எதையும் அறிவியல் அடுப்பிலெற்றி அவித்துப் பார்த்தால் மட்டுமே நம்புவது எங்கள் குல வழக்கம்.

யாரும் அறியா வண்ணம் தண்ணீருக்குள் அமிழ்ந்து தனியாகக் குளித்துக் கொண்டிருப்பவர்களின் கால்களைப் பிடித்து அமுக்கி கொலை செய்து பாறைக்குள் ஒளித்து வைப்பதை குலத்தொழிலாக செய்யும் விற்பன்னர்கள் கொடிவேரியில் இருக்கிறார்கள். பிணத்தை தேடி எடுத்துத் தர பல்லாயிரம் தொகை. தேனிலவுக்கு வந்து தாலியைத் தொலைத்தவர்களின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் நண்பர்கள். அழகின் இருப்பிடமெல்லாம் ஆபத்தின் பிறப்பிடமாய் இருக்கிறதே ஈசுவரா!

***

நட்புகளால் நிரவப்பட்டதென் வாழ்வு. பரிசளிப்பதும், பரிசு பெறுவதும் அன்றாட நிகழ்வுகள். பரிசளிப்பது சந்தேகமில்லாமல் ஒரு கலைதான். என்னுடைய வெளிநாட்டு நண்பர்களுள் சிலர் (வாசகரென்று எழுதினால் சண்டைக்கு வருவார்கள்) உயர் ரக மதுப் போத்தல்களையெல்லாம் உறவுகளிடம் கொடுத்தனுப்புகிறார்கள். எழுதுகிறவனுக்கு குடிப்பழக்கம் இருக்கும் என்ற நம்பிக்கை.

மதுவிற்கு எதிரானவனாக அதை எவருக்கும் மறுபரிசளிக்கவும் முடியாது. தொலையட்டும் சனியனெனெ வீசியெறியவும் முடியாது. நண்பர் கொடுத்ததாயிற்றே. அலங்காரப் பொருளாய் இருக்கட்டுமென அலமாரியில் அடுக்கி வைத்திருந்தேன். ஓ இந்தப் பழக்கமெல்லாம் வேற வந்தாயிற்றாவெனக் கேட்கிறார் திடீர் விருந்தாளி.

புத்தகப் பரிசுகள் வேறு ரகம். ஏற்கனவே படிக்க வேண்டிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் இருக்க பாவ மூட்டை போல் சுமையேறிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடிக்காத புத்தகம் உருவாக்கும் மன அழுத்தம் கடுமையானது.

கூலர்ஸ், ஐபாடு, இசைத்தட்டுக்கள், ஜீன்ஸ், காலணிகள் இவையெல்லாம் ஏன் பரிசுப் பொருட்களுக்குரிய அந்தஸ்தினை அடையவில்லை?!

***
ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.

‘ஏழ்வை, பயலுவல, என்னத்தையாவது, நோக்கம், சவம், செஞ்சிக்கிட்டு வச்சிக்கிட்டு’ போன்ற பிரத்யேக தூத்துக்குடி பதப்பிரயோகங்களைக் காது குளிர கேட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

***

உதவி ஆசிரியராய் வெளியேறின ரமேஷ் பொறுப்பாசிரியராய் உயர்ந்திருக்கிறார். ‘பிணவறைக்குள்ளிருந்தும் பின்னூட்டமிடுவேன்டா...ராஸ்கல்...!’ என்கிற நறநறத்த குரலில் ஒரு தன்முனைப்பு இருக்குமில்லையா. அதுதான் நெட்டித் தள்ளுகிறது.

***

உறக்கம் கிறக்கம் வணக்கம்.