Wednesday, May 30, 2007

எஸ். ராமகிருஷ்ணனுடன் சில மணித்துளிகள்

எஸ். ராமகிருஷ்ணனுடன் இது எனது இரண்டாவது சந்திப்பு. முதல் முறை எங்கள் நிறுவனம் நடத்திய நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது, விஜயா வேலாயுதம் மூலம் அறிமுகம். அன்றைக்கு 'அறியப்படாத மனிதர்கள்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில் மெய் மறந்தேன். தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்க மறந்த அல்லது பார்க்க மறுக்கின்ற எளிய மனிதர்களின் அறியப்படாத வரலாற்றை தனது பவுடர் பூசாத வார்த்தைகளில் விவரித்தார். அவர் பேசி முடித்ததும் இளைஞர் குழாம் அவரைச் சுற்றி வளைத்து கேள்விகளால் துளைத்தெடுத்தது. ஏதேதோ கேள்விகள்... கனிவான பதில்கள். தமிழ்நாட்டின் அணுகுவதற்கு எளிமையான எழுத்தாளர்களுள் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். அன்று மதிய உணவிற்கு அஸ்வினி ஹோட்டலில் நானும் அவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். அப்போதுதான் தீராநதியில் வெளியாகி இருந்த 'நூறு கழிப்பறைகளின் கதை' எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியினை சொன்னபோது சிரித்துக்கொண்டார். அப்புறம் நானும் கேனத்தனமான கேள்விகளால் அவரைத் துளைத்தேன்.

இரண்டாவது சந்திப்பு, கோவை புத்தகக்கண்காட்சியில்... பதினொன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
'என்னை உங்களுக்கு மறந்திருக்கும், நான் செல்வேந்திரன்' என்றபடி எனது நண்பர்களை அறிமுகப்படுத்தினேன். என்னோடு வந்திருந்த பத்திரிக்கையாளரது சமீபத்திய நகைச்சுவை ஒன்றை ரசித்ததாக கூறியபடி ஆரம்பித்தார். விகடனில் வரும் அவரது 'கேள்விகள்' புதிய தொடர் நன்றாக இருப்பதைத் தெரிவித்தேன். அவரது நுட்பமான எழுத்தின் தீராத ரசிகரான கணபதி, அவருக்கு ஒரு விவேகானந்தர் படத்தை பரிசளித்தார். புதிய தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு விடைபெற்றேன். எழுதும் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத மனிதன் இவர் என்றார் என்னோடு வந்தவர். அது எனக்குத் தெரியாததா என்ன?

காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை

ஒரு கன்னி முயற்சியாக நண்பர் கந்தசாமி நாகராஜன் 'சித்திரம்' கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பித்தார். அது ஒரிரு பொதுநூலகங்கள், மர்காஷிஸ் கல்லூரி நூலகங்களில் மட்டும் வாசிக்க கிடைக்கும் மாதப்பத்திரிக்கை. அதில் 'உலக கவிதைகளை' அறிமுகப்படுத்தும் நோக்கில் காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை' என்ற பெயரில் மாதாமாதம் தொடர் கட்டுரைகள் எழுதினேன். பாப்லோ நெருடாவிலிருந்து கலாப்ரியா வரை நான் ரசித்த கவிதைகளை எவ்வித மிகை உணர்ச்சியும் இன்றி எளிய தமிழில் எழுதியதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. உள்ளூர் வாசகர் வட்டத்தில் மட்டுமன்றி, கல்லூரி மாணவர்களாலும் விரும்பி வாசிக்கப்பட்டது அந்த தொடர். பல்வேறு காரணங்களால் பின்னாளில் சித்திரம் நின்றது.

தமிழ் வாசகர்களுக்கு நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் சுஜாதா தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். சுஜாதா முத்திரை பெற்ற கவிஞர்கள் சோடை போனதில்லை. அவர் மூலமாகதான் நான் பல கவிதைகளைத் தெரிந்துகொண்டேன். நான் ரசித்த சில கவிதைகளை உங்கள் பார்வைக்கு எவ்வித விமர்சனமும் இன்றி தினம் ஒன்றாகத் தர இருக்கிறேன். இந்த வாரம்

ஆத்மாநாம்

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்என்றார் ஒரு பேரறிஞர்.
நான் சொன்னேன்நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசியப் பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்

புத்தகப்பட்டியல்

யாரேனும் வாங்கிய அல்லது படித்த புத்தகங்களைக் குறிப்பிடும்போது, அது நம்மாலும் படிக்கப்பட்டு இருந்தால் ஒரு பரவசம் வரும். நானும் படித்திருக்கிறேன் என்ற பெருமிதம் தலைதூக்கும். எப்போதும் அப்பட்டியல்களின் ரசிகன் நான். இந்த புத்தகக்கண்காட்சியில் நானும் எனது நண்பர்குழாமும் சூறையாடிய புத்தகங்களின் பட்டியல் இது. ஒவ்வொருவரது வாசிப்பு ரசனையை தேவைகளும், வாழ்க்கை சூழல்களும் தான் தீர்மானிக்கின்றன என்பது எனது நம்பிக்கை. தி ஹிந்து நாளிதழில் பணிபுரியும் அருமை நண்பர் கணபதியின் தீராத தேடல்கள் எப்போதும் உண்மையான ஆன்மீகம் குறித்தானது. அதே சமயத்தில் பவுடர் பூசாத யதார்த்த எழுத்துக்களின் தீவிர ரசிகர். நண்பர் கதிர்வேல், சின்னத்திரை இன்னும் சீரழிக்காத ஒரு சிறிய கிராமத்து பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியர். தமிழிலக்கியங்களை முறையாகக் கற்று அதனை தன்னிடம் பயிலும் மாணாக்கர்களுக்கு எளிமையாக, இனிமையாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நன்னூலையும், தொல்காப்பியத்தையும் தேடும் சுஜாதா. அவரது இளம்வயதுக்கு இந்த ஆசை ஆரோக்கியமானது. சமூகத்திற்கு அவசியமானது. சிவசங்கர் இறை குறித்து எந்த சந்தேகமும் இல்லாத ஆன்மீகவாதி. ராமபக்தன். என்னைப் பற்றித் தெரியும். எழுதப் பழகிவரும் தறுதலை.

செல்வேந்திரன்

பெண் ஏன் அடிமையானாள்? பெரியார்
ஜே. ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
எட்டு திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
காமக்கடும்புனல் – மகுடேஸ்வரன்
இன்னும் சில சிந்தனைகள் – சுஜாதா
சிறுகதை எழுதுவது எப்படி – சுஜாதா
உறவுகள் – ருத்ரன்
ஒஷோ குட்டிக்கதைகள்
நூறு எண்ணுவதற்குள் – விக்ரமாதித்யன்


கணபதி சுப்ரமண்யம்

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (சரிதை) - விஜயா பதிப்பகம்
காலம் - ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
தேடிக் கண்டுகொண்டேன் - பாலகுமாரன்
வாழ்விக்க வந்த காந்தி - ஜெயகாந்தன்
ஹிமாலயன் மாஸ்டர்ஸ்
ஸ்வாமி விவேகானந்தர் ஆன் ஹிம்செல்ஃப்
வாழ்க்கையில் மரணத்தின் தத்துவம் - காமத்
காமசாஸ்திரம்
ஒரு பாலியல் தொழிலாளியின் கதை - ஜமீலா
கானகத்தின் குரல் – ஜாக் லண்டன்
கைலாஸ் மானசரோவர் யாத்திரை
புத்தம் சரணம் – மதுரபாரதி
சுவாமி ரங்கனானந்தா

கதிர்வேல்

சத்தியசோதனை
அக்னி சிறகுகள்
க்ரியா தமிழ் அகராதி
ஆழ்வார் எளிய அறிமுகம் - சுஜாதா
சங்க சித்திரங்கள் - ஜெயமோகன்
ராமகிருஷ்ண மடத்தின் இரு சிறிய வெளியீடுகள்

சிவசங்கர்

சித்திர திருப்பாவை
நீதி காத்த ராமன்
விதுர நீதி
108 திவ்ய தேசங்கள்
கம்பராமாயணம் – பேராசிரியர் அறிவொளி உரை

Sunday, May 20, 2007

காதில் புகுந்த கள்ளிச்செடி

புத்தகத் திருவிழாவிற்கு தினமும் போயாகவேண்டும் என்று சங்கல்பம் எடுத்ததால், அலுவலக வேலைகளை முடித்துவிட்டு கிளம்பினோம். நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நான் கடந்த ஐந்தாண்டுகளாக தேடியலைந்து வரும் மு. வரதராசனார் எழுதிய "பெர்னார்ட் ஷா" இந்த கண்காட்சியிலும் கிடைக்கவில்லை. பாரதி புத்தகாலயத்தில் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" வாங்கினேன். சந்தியா பதிப்பகத்தார் கவிஞர். விக்ரமாதித்யனின் " நூறு எண்ணுவதற்குள்" கவிதை நூலை இலவசமாகக் கொடுத்தனர். திலகவதி தன்னுடைய பரிவாரங்களுடன் வந்திருந்தார். எளிதில் கண்டுபிடித்துவிடமுடியாத எளிமை, மாறாத புன்னகை, தெளிவான பேச்சுதான் அவரது அடையாளங்கள். அவரது எழுத்தாற்றலும், மானுடம் மீதான தீராத அக்கறையும் "கல்மரம்" வாசித்தால் புரியும்.

நான்காம் நாள் நிகழ்ச்சியாக கவிதை வாசிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. நண்பர்கள் எவ்வளவோ மறுத்தும் விடாமல் இழுத்துக்கொண்டு, அரங்கினுள் நுழைந்தேன். தேவேந்திர பூபதி, சுகிர்தராணி, கரிகாலன், தென்றல், க்ருஷாங்கினி, இளம்கோ, அவைநாயகன், மரகதமணி என வளர்ந்த, வளர்ந்துகொண்டிருக்கிற, வளர இருக்கிற கவிஞர்களின் கலந்து கட்டின கலவையாக இருந்தது மேடை. தங்களது அபிமான கவிதை ஒன்றும், சொந்த கவிதை ஒன்றும் வாசிக்க வேண்டும் என்பது ஏற்பாடு. சுகிர்தராணி தவிர மீத கவிஞர்களின் கவிதை சத்தியமாகப் புரியவில்லை. ஏதாவது கேட்கவோ, எழுதவோ போனால், புதுச்சேரியில் மீட்டிங் போட்டு "தலையை எடுப்பேன்" என உணர்ச்சி வசப்படுவார்கள். அதிலும் மூத்த கவிஞரான க்ருஷாங்கினி பாடிய "முத்தமும், மூத்திரமும்" கவிதை "உவ்வே" ரகம். கள்ளிச்செடி புடுங்கி காது குடைந்தது போலாகிவிட்டது. கரிகாலன் நல்ல நகைச்சுவையும், இயற்கை மீதான அக்கறையும் மிளிரும் "வீட்டிற்கு புலி வந்த நாளில்" கவிதையை மைக்கை கடித்துக்கொண்டே வாசித்ததில் புலி இறந்துவிட்டது. சுகிர்தராணி தவிர வேறு யாருக்கும் கவிதைகளை வாசிக்க தெரியவில்லை. உரத்த குரலில், ஏற்ற இறக்கங்களோடு, போதுமான இடைவெளி கொடுக்காமல் வார்த்தைகளை மிக்ஸியில் போட்டு அடித்த மாதிரி.... ரிடிகுலஸ்..! மற்றபடி இளம்கவிதாயிணி மரகதமணி அழகாக இருக்கிறார் என்று எழுதினால் ஏதாவது பிரச்சனை வருமா என்ன..?

Saturday, May 19, 2007

க்விஸூக்குப் போன செல்வேந்திரன்..!பபாசி (தென்னிந்திய புத்தகவிற்பனையாளர்கள் சங்கம்) கோவை வ.உ.சி. திடலில் புத்தகத்திருவிழா நடத்திக்கொண்டிருக்கிறது. அழைப்பிதழும், இலவச அனுமதி அட்டையும் கொடுத்தார் அலுவலக நண்பர் . கிட்டத்தட்ட 200 ஸ்டால்களுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான தலைப்புகள், தாராளமான தள்ளுபடிகள் என்று புத்தகப்பாம்புகளுக்கு கொண்டாட்டம். தினசரி பல தமிழிலக்கிய ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தது. அத்தனை பெரிய புத்தகக்கண்காட்சி கோவைக்கு புதியது. ஸ்டால்களில் கொஞ்ச நேரம் மேய்ந்துகொண்டிருந்தபோது, விஜயா சிதம்பரத்தைக் கண்டேன். மூன்று நாளாகியும் கூட்டத்தைக் காணவில்லை. விற்பனையும் பெரிதாக இல்லை எனவருத்தப்பட்டார். கூட்டத்தைக்கூட்ட சில யோசனைகளைச் சொன்னேன். எதையும் செய்யமுடியாது. காரணம் பட்ஜெட். இப்பவே சில லட்சங்கள் ஏற்பாட்டார்களுக்கு கை நட்டம் என்றார். அட்லீஸ்ட் தொலைக்காட்சி நிருபர்களை அழைத்து ஒரு பிரஸ்மீட்டாவது போடுங்கள் என சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.
புத்தகக்கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு மிக அருகிலேயே அரசுப்பொருட்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு அடிபொழியாய் குவியும் கூட்டம், புத்தகம், இலக்கியம் என்றால் ஏன் வருவதில்லை? காரணம் இருக்கிறது. விளம்பரங்கள் போதவில்லை. பெரும் வாசகப்பரப்பைக் கொண்ட விருந்தினர்கள் (சுஜாதா, வைரமுத்து, மதன், பாலகுமாரன்) வருவார்கள் என்றால், கொஞ்சம் கூட்டம் கூடும். பள்ளி, கல்லூரிகள் வேறு விடுமுறையில் இருக்கிறது. தவிரவும் புத்தகப்பிரியர்களை உற்சாகப்படுத்த தள்ளுபடி மட்டும் போதாது எனத்தோன்றுகிறது.

அரங்கில் பேராசிரியர். எம். ரங்கராஜன் வாசகர் வினாடி வினா நடத்திக்கொண்டிருந்தார். கோவை நன்கறிந்த குவிஷ் மாஸ்டர். சிறுசும் பெருசுமாய் கேள்விகள். உடனுக்குடன் புத்தகமும், பிஸ்கட்டுகளும் பரிசளிக்கப்பட்டது. சாதாரண தமிழிலக்கிய கேள்விகளுக்கு, உள்ளூர் இலக்கியவாதிகள் சிலர் முண்டிபோட்டுக் கொண்டு பதிலளித்து புத்தகங்களைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருந்தனர். ஏத்தனையோ கேள்விகளுக்கு விடை தெரிந்தும் எளிய கேள்விகளுக்கு விடை சொல்ல வெட்கப்பட்டு உட்கார்ந்திருந்தேன். அதில் பல எனது நிறுவனம் குறித்த கேள்விகளும் அடங்கும். ஒடு மீன் ஒட உறுமீன் வரும்வரைக் காத்திருந்தேன். ஒரு ஒலி நாடவை ஒலிபரப்பினார்கள். அது ஜெஸிகாலால் கொலை வழக்கு குறித்து பர்காதத்தின் கேள்விக்கு ஒரு கர,கர குரல் பெண்ணின் உடைந்த ஆங்கில பதிலாக இருந்தது. அந்தக்குரலுக்குச் சொந்தக்காரர் யார்? என குவிஷ் மாஸ்டர் கேட்க அரங்கம் அமைதியாக இருந்தது. அந்தக் கர,கர குரலை எங்கேயோ கேட்டதுபோல இருந்தது. "உமா பாரதி" என உரக்க கத்தினேன். குவிஷ் மாஸ்டர் கழுக்கெனச் சிரித்து கேவலமாக என்னைப்பார்க்க, பதட்டத்தில் "இல்லை இல்லை... ராப்ரி தேவி..." என பதிலை மாற்றிச் சொல்ல கூட்டம் கொல்லேன சிரித்தது. கேவலம், அவமானம் கூசிப்போய் நான் நிற்க அரங்கம் சிரிப்பை விடுவதாக இல்லை. ஒரு சிறிய பெண்குழந்தை எழுந்து "கிரண்பேடி" எனச் சரியான பதிலை சொல்லி புத்தகத்தை வென்றபோது அரங்கம் அதிர்ந்தது. நான் முகமெங்கும் கரியாகி, அவமானத்தோடு அமர்ந்தேன். "ஒக்காளி ஒரு கேள்விக்காவது பதில் சொல்லாமல் போகமாட்டேண்டா" மனதிற்குள் சபதமெடுத்தேன். அடுத்த கேள்வி,

வானம் நீ - வானம் நீங்கிவையம் வந்த -ஞானம் நீ ! - ஞானம் பெற்றார்நாளும் காக்கும் -மோனம் நீ ! - மோனம் நீங்கிஓதும் வேதகானம் நீ !ஏனம் நீ! மீனம் நீ!கூர்மம் நீ ! குறள் நீ!அரியாய் வந்து - அவுணனைஅரிந்த அரியும் நீ !யாவும் நீ ! - யாவும் படைத்ததேவும் நீ - எதையும்விஞ்சியவனும் நீ - எதிலும்மிஞ்சியவனும் நீ...

"மேற்கண்ட வரிகள் யாருடையது... புத்தகத்தின் தலைப்பு என்ன?"
கவிஞர் வாலி.... புத்தகம் அவதாரபுருஷன்"
" - கதறினேன். சரியான பதில் என்று ஒரு புத்தகம்

அடுத்த கேள்வி,

"நான் அவன் இல்லை" படத்தில் வரும் "ராதா காதல் வராதா" என்ற ஒரு பாடல் மட்டும் கே.பியின் "நான் அவனில்லை" படத்தில் இருந்து அப்படியே எடுக்கப்பட்டு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. கேபியின் படத்தில் அப்பாடலுக்கு இசை அமைத்தவர் யார்?"
" மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்"
அடித்தொண்டையிலிருந்து கத்தினேன். மீண்டும் ஒரு புத்தகம்.

அடுத்த கேள்வி,

"தென்னிந்தியாவிற்கு முதன்முதலில் அரசியல் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் யார்? "

ஆர்.கே. லஷ்மன், ராஜு, கோபுலூ, மதி, மதன் என்று விதம் விதமான பதில்கள் வந்தது. நான் மெள்ள எழுந்து " மகாகவி. சுப்ரமணிய பாரதி" என்று பதிலளித்து மூன்றாவது புத்தகத்தை தொடர்ந்து பெறும்போது அரங்கம் அதிர்ந்தது. அதற்குள் என்னை அடையாளம் கண்டுகொண்ட சில பதிப்பாளர்கள் கைகுலுக்கினார்கள்.

நான்காவது கேள்வி,

"தேவனின் ஏதாவது நான்கு புத்தகங்களின் பெயர்களைச் சொல்லவும்?"

பதிலளிக்க எழுந்தேன். "சார் போதும். மத்தவங்களும் ட்ரை பண்ணட்டுமே" எனக் குவிஷ் மாஸ்டர் கோரிக்கை வைக்க.. சரி என அமர்ந்தபோதுதான் மனசு ஆறியது.

ஆனாலும்,

1. பதில்கள் தெரிந்தபோதிலும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் என்னைத் தடுத்தது ஏது?
2. அடுத்த கேள்விக்கு யார் பதில் சொல்ல போகிறீர்கள் என்று க்விஷ் மாஸ்டர் அழைத்தபோது எழுந்து நிற்க ஏன் தைரியமில்லை?
3. ஒரு கேள்விக்கு தவறான பதில் சொல்லி, கூட்டம் சிரித்ததில் ஏன் அத்தனை பதட்டமும், வருத்தமும்?
4. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களை சந்திப்பவனும், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றவனுக்கும் கூட ஒரு பொதுஇடத்தில் ஏன் இத்தனை தயக்கம்?
5. அவமானப்பட்டபின், எங்கிருந்து வருகிறது... அந்த கொலைவெறி?

எனக்குத் தெரியவில்லை.... உங்களுக்கு...?

செல்வேந்திரன்.

Saturday, May 12, 2007

ஸ்ரீ முரளீதர சுவாமிஜி
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மூன்று நாள் நாமாபிஷா கேந்திரா நடக்கிறது. வாருங்கள் போகலாம் என ஹிந்து கணபதி வம்படியாக இழுத்துக்கொண்டுபோனார். கணபதி முரளீதர ஸ்வாமிஜியை குருவாக ஏற்றுக்கொண்டவர். மார்கழியில் ராஜ் டிவியிலோ அல்லது பொதிகையிலோ திருப்பாவைகளை விளக்கிக்கொண்டிருப்பார். சற்றுநேரம் கேட்டுவிட்டு பெரிய சுவாரசியம் இல்லை என்று கடந்துவிடுவேன். சாமியார்கள் நடத்துகின்ற கூட்டுபிரார்த்தனைகள், யக்ஞம், யாகம், உபன்யாசத்திற்கு போய் அபாயகரமான பணப்பிடுங்கலுக்கு ஆட்பட்ட அனுபவம் எனக்கு நிறையவே உண்டு. ஆனால் மேற்படி சாமியார்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறார் இவர். வேதம், தர்மம், சாஸ்திரம், தவம், யக்ஞம், கர்மம், யோகம் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கலியுகத்தில் இறைவனை அடைய "நாம சங்கீர்தனமே" எளிய வழி என்ற இவரது கருத்தை மிகத் தெளிவாக, அழகான உதாரணங்களோடு விளக்கினார். டிராமத்தனமில்லாத அந்த அருமையான இரண்டரை மணிநேர உபன்யாசத்தை இரண்டாயிரம் பேர் கவனச்சிதறலில்லாமல் கேட்கவைக்கும் அருமையான சொல்வன்மை. புராணங்கள், வேதங்கள், உபநிசத்துகள், மகான்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், இதர சமயங்கள் என அனைத்திலும் அவருக்கிருந்த பரந்தபட்ட அறிவு ஆச்சரியப்படவைத்தது.


"ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே 1
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 2" - எனும் மகாமந்திரத்தின் மூலமே கலியுகத்தில் இறைவனை அடையலாம் என ஆணித்தரமாக வாதிடும் இவரது பணிகள் வேதபாடசாலைகள், ஆலய புணரமைப்பு, மருத்துவ முகாம் என விரிகிறது.

உபன்யாசம் முடிந்தவுடன் நாமசங்கீர்த்தனம் ஆரம்பமாகியது. வழக்கமாக இதுபோன்ற பொது இடங்களில் நடைபெறும் கூட்டுபிரார்த்தனைகள் அல்லது பஜனைகளில் வாய்திறந்துபாட வெட்கப்படுபவன் நான். ஆனால், "இறைவனின் திருநாமத்தைச் சொல்ல ஏன் வெட்கம்? அதில் உங்களுக்கென்ன அவமானம் வேண்டிக்கிடக்கிறது? ஏதையெதையோ சொல்ல வெட்கப்படாத வாய் பகவான் நாமத்தை சொல்ல வெட்கப்படுகிறதென்றால் உங்கள் பக்தியே கேலிக்கூத்து" என்று அவர் இடித்துரைத்தது நிணைவுக்குவர நானும் கரங்களை தட்டியபடி உரக்க சொல்ல ஆரம்பித்தேன். நாமாவளி பாடி முடிந்தவுடன் அவரது கையாலே கூடியிருந்த இரண்டாயிரன் ஜனங்களுக்கும் நெல்லிக்கனி, குங்கும பிரசாதங்களை வழங்கிவிட்டு அவர் வண்டியேறிய போது இரவு மணி ஒன்பதைக் கடந்துவிட்டது. மூன்று மணி நேரத்தில் எந்த சிஷ்யகோடிகளும் ரசீது நோட்டுகளை மூஞ்சிக்கு முன்னால் நீட்டாமல் இருந்ததில், இவர் அவரல்ல என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.

மெலட்டூர் மேஜிக்

"விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து புலம்பெயர்ந்த பாகவதப் பிராமணர்களில் சிலர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள மெலட்டூர் எனும் சிற்றூரில் குடியேறினர். அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது பாரம்பரிய கலையான 'பாகவத மேளா' எனும் நாட்டிய நாடகக்கலை அழிந்து போகாவண்ணம் நிகழ்த்திவந்தனர். அவர்களின் பிந்தைய தலைமுறையினர் வாழ்வியல் தேடல்களுக்காக தொழில், படிப்பு, இருப்பிடங்களை மாற்றினாலும் அக்கலையை புறக்கணிக்காது தங்களது கலாச்சார அடையாளமாகத் தொடர்ந்தனர்.

வெகுஜன ஆதரவு இல்லையென்றாலும் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் வரும் நரசிம்ம ஜெயந்தி அன்று ஆரம்பித்து பத்து நாட்கள் தொடர்ந்து பாகவத மேளா நடத்தி வருகின்றனர். பக்த பிரகலாதன், வள்ளி திருமணம், சதி சாவித்ரி, ருக்மணி கல்யாணம் என பல்வேறு நாடகங்கள் நடந்தாலும், பக்த பிரகலாதன் சரித்திரமே மிகப்பிரசித்தம். மேளா நடக்கும் சமயம் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது, நாடகம் பார்க்க வருபவர்களுக்கும் நாடகத்தை நடத்துபவர்களின் வீட்டிலேயே உணவளிக்கப்பட்டு, தங்கும் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

வானமும், புரோகிதமும் பொய்த்துப்போன நிலையில் 'பாகவத மேளா' வை நடத்த வழியில்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில்தான் நான் தூபாய் சென்றேன். அங்கே கடுமையாக உழைத்து - சம்பாதித்த பணத்தைக் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை நரசிம்ம ஜெயந்திக்கு மெலட்டூர் வந்து ' பாகவத மேளா' வை நடத்திவிட்டு மீண்டும் துபாய் சென்று விடுவேன். எனது வீட்டில் ஏதாவது நற்காரியங்கள் செய்யவேண்டுமென்றால்கூட நான் பாகவதமேளாவிற்கு வரும் இந்த பதினைந்து நாட்களில்தான் நடத்திக்கொள்வார்கள். இடையில் நான் இந்தியா வருவதேயில்லை. நீங்களும் ஒருமுறை மெலட்டூர் வந்து அந்த அற்புதக் கலையை ரசியுங்கள்" என்று அந்த நடுத்தரவயதுக்காரர் பேசி அமர்ந்ததும் அரங்கம் அதிர்ந்தது.

அவர் பெயர் மெலட்டூர் நடராஜன். பிரகலாத நாடகத்தில் 'லீலாவதி' எனும் கடினமான வேடத்தை அணிந்து நடிப்பதில் சுற்றுவட்டாரம் முழுக்க பெயர் பெற்ற அவர் அக்கலை அழியாமல் காக்க வெளிநாட்டில் வேர்வை சிந்துகிறார். ஒரு பாரம்பரிய கலையைக் காப்பாற்ற ஒருவன் கடல்கடந்து போக வேண்டிய அவலத்தை உணர்ந்தபோது கட்டாயம் மெலட்டூர் போயாக வேண்டும் என்ற சங்கல்பம் எடுத்துக்கொண்டேன்.
மே தினம் அன்று நரசிம்ம ஜெயந்தி வருகிறது எனத்தெரிந்தவுடன் நானும், நண்பர் சிவசங்கரும் தஞ்சாவூர் கிளம்பினோம். கடைசிப்பேருந்தைப் பிடித்து மெலட்டூர் கிராமத்தில் இறங்கியபோது மணி பத்தரையைக் கடந்திருந்தது. பாகவதர்களும், மிருதங்க வித்வான்களும் சுருதி ஏற்றிக்கொண்டிருந்த ஓசை ஈரக் காற்றில் வந்தடைந்தது. ஹோட்டல்கள் ஏதுமில்லாத அக்கிராமத்துப் பெட்டிக்கடையில் பிஸ்கட் பாக்கட்டுகளை வாங்கிக்கொண்டு இசை வந்த திசை நோக்கி நடையைப் போட்டோம். எதிர்வந்த சைக்கிள்காரரிடம் 'நடராஜ அய்யர்' வீட்டுக்கு எப்படிப் போவது என விசாரித்தோம். "இந்தவாட்டி நடராஜ அய்யர் நாடகம் பத்துநாளு தாமசம். கவலைப்படாதீங்க மாலி அய்யர் நாடகம் இன்னிக்குதான் ஆரம்பிக்குது... இந்த ஒத்தையடிபாதையில போங்க... நாடகம் ஆரம்பிக்க போவுது... சீக்கிரம்.." என்றார். இத்தனைச் சிறிய சிற்றூரில் இரண்டு பாகவதமேளாவா..?! ஆச்சரியம் மேலிட சைக்கிள்காரரிடம் கேட்டேன். "ஒன்னாத்தே இருந்தாக என்ன பிரச்சனையோ... என்னவோ... பத்துவருஷமா தனித்தனியாதேன் போடுறாக..." என்றபடி பதிலுக்குக் காத்திராமல் கிளம்பினார். ஏதோ உள்ளூர் அரசியலில் கலைஞர்கள் இரண்டாய் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். கூத்தாடிகள் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம்...?! யோசித்தபடியே வயல்வெளிகளைக் கடந்து பொட்டலில் அமைக்கப்பட்ட பந்தலை வந்தடைந்தோம். மேடையின் உட்பக்கமாக ஒதுக்கப்பட்ட சிறிய உள்மேடையில் நான்கு பாகவதர்களும் (வாய்ப்பாட்டு) வயலின், மிருதங்க, புல்லாங்குழல், மோர்ஷிங், ஜால்ரா வாத்தியக்காரர்களும் இருந்தனர். ’மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம்’ எனும் தோய்ந்து சாயம்போன ஒரு துணி பேனர் அரங்கின் தலையில் கட்டப்பட்டிருந்தது. ஒளி விளக்குகளில் காட்டுப்பூச்சிகள் ரீங்காரம். ஒரிரு உபயதாரர்களின் (நல்லி, பி.எஸ்.என்.எல்) பேனர்கள் அங்கங்கே கட்டப்பட்டு இருந்தது.

மெலட்டூர் நரசிம்ம ஸ்வாமிகள் சுவாமிகள் ஆலயத்திலிருந்து நரசிம்ம அவதார முகமூடி (மாஸ்க்) ஒரு சப்பரத்தில் எடுத்துவரப்படுகிறது. அதற்கு சில பூஜைகள் செய்யப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தில் அமைந்த தெலுங்கு கீர்த்தனைகளைப் பாகவதர்கள் பாட, முறையாகப் பரதம் கற்றவர்கள் பாத்திரங்களாய் மாறி நடிக்கும் அந்த நாடகத்தில் எள்ளளவுகூட தமிழுக்கும், பெண்களுக்கும் இடமில்லை. ஆண்கள்தான் பெண் வேடமிடுகின்றனர்.

பாகவதர்கள் பாட ஆரம்பித்தனர். முதலில் விநாயகர் வழிபாடு முடிந்து பாத்திர பிரவேஷம் ஆரம்பித்தது. ஹிரண்யகசிபுவின் பிரதாபங்கள் தெலுங்கு கீர்த்தனைகளாக வெளிப்பட அவைக்கு வரும் ஹிரண்யகசிபுவின் வீரம், பராக்கிரமங்கள், திமிர், ஆணவம் அத்தனையும் நடனமொழியில், உருளும் பார்வையில் நம் கண்முன் விரிகிறது. அடுத்து லீலாவதியின் அறிமுகம்... அத்தனை அழகான பெண், அவளது குணம், திறமைகளை கீர்த்தனைகளாகப் பாடுகின்றனர். அடுத்து பிரகலாதனின் பண்பும் பக்தியும், தொடர்ந்து அசுரகுரு சுக்ராச்சாரியார் எனப்பாத்திரப்பிரவேஷம் முடிந்து கதைக்குள் நுழைந்தபோது நேரம் நள்ளிரவைத்தாண்டியது.

கணவனுக்கும் பிள்ளைக்கும் மத்தியில் சிக்குண்டு லீலாவதி நடத்தும் பாசப்போராட்டம், உலகிடம் ஜெயித்து மகனிடம் தோற்றுப்போகும் ஹிரண்யகசிபுவின் அவஸ்தை அதைத் தொடர்ந்து அவனுக்கு எழும் ஆத்திரம், பிரகலாதனின் பரிபூரண பக்தி என அனைத்தையும் எனது கேமராவில் சுழன்று, சுழன்று பதிவு செய்தேன். பாஷை புரியாதது... இசை புரியாதது... நிருத்தம், அடவு, பதம், ஜதி, பாவம், அபிநயம், கரணங்கள் என்ற நாட்டியக்கலையின் எந்த ஒரு விஷயமும் தெரியாத எனக்கு பிரகலாத சரித்திரம் என் கண்முன்னே நிகழ்வதான உணர்வை அக்கலைஞர்கள் ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

பிரகலாதனிடம் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு நான் மவுனசாட்சியாக நின்றுகொண்டிருப்பதாகத் தோன்றியது. ஹிரண்யனைக் கட்டுபடுத்தவும் முடியவில்லை, லீலாவதியின் கண்ணீரையும் நிறுத்தமுடியவில்லை. கையறுநிலையில் நின்றிருந்தேன் நான். நாடகத்தின் உச்சகட்டமாக தூணிலிருந்து நரசிம்மஸ்வாமிகள் எழும் காட்சி நிகழும்போது கிழக்கில் சூரியன் எட்டிப்பார்க்க ஆரம்பித்தான். சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் நரசிம்மஸ்வாமிகளின் முகமூடி அணிந்துகொண்டு அவதாரமெடுத்தார். பொங்கி.. ஆர்ப்பரித்து, திமிறி ஹிரண்யனின் நெஞ்சைக்கிழிக்க பரபரத்த அவரை இருக்கையோடு சேர்த்து இருக்கி கட்டியிருந்தனர். ஐந்து இளந்தாரிகள் அவரை இருக்கிப்பிடித்தும் அவரை அடக்க முடியவில்லை. ஆக்ரோஷமாய் உருமிக்கொண்டிருந்தார். ஹிரண்யகசிபு வேடமணிந்தவரை மேடையை விட்டு அகலச்சொல்லிவிட்டனர். சாந்தி.. சாந்தி எனப் பார்வையாளர்களும், நடிகர்களும் அவரிடம் கெஞ்ச ஆரம்பித்தனர். அவரது திமிறலை அவர்களால் அடக்க இயலவில்லை. பிரகலாதனை அவரது மடியில் அமரச்செய்தனர். பிரகலாதன் "ஆசிர்வாதம் பண்ணுங்கோ... சாந்தமூர்த்தி நீங்க.. அமைதி.. அனுக்கிரகம் பண்ணுங்க" என்று தமிழில் கெஞ்ச ஆரம்பித்தார். அவரது ஆவேசம் அடங்குவதாகத் தெரியவில்லை. அந்தப்பெரியவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நான் பயப்பட ஆரம்பித்தேன். எனது கால்கள் நடுங்கத்தொடங்கியது. அவரைப்பார்த்தால் உண்மையான ஹிரண்யகசிபையும் கொன்று ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் ஹிரண்யகசிபுவையும் கொல்வார் என்று தோன்றியது. நான் செய்த குற்றங்கள் நினைவுக்கு வந்தன. திமிறிக்கொண்டு வந்து என்னைக் கிழித்துபோட்டுவிடுவாரோ எனப்பயம் கொண்டேன். நரசிம்மஸ்வாமிகளுக்கு தீப ஆராதனைகள் காட்டப்பட்டபின் கொஞ்சம் ஆசுவாசமானார். பார்வையாளர்கள் அவரிடம் குங்குமப்பிரசாதம் வாங்கிக்கொண்டனர். எனக்கு அவர் அருகில் போகவே பயம். வாங்கவில்லை. நரசிம்மஸ்வாமிகளும், அவரது முகமூடியும் சிறிய சப்பரத்தில் மேளம் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டபின் நாங்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி மெதுவாக நடந்தோம்.
பெரியவரின் ஆவேசக்குரல் மனதின் அடியாளத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருந்தது. "கலைஞன் முதிர்ச்சியடைய அடைய அவனது கலை இளமையாகிறது" என எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

லீலாவதியாக நடித்தவர் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாம். நம்பமுடியவில்லை. பிரகலாதன் அரிதாரம் கலைத்து எதிரே வந்துகொண்டிருந்தார். ஜீன்சும், டி-சர்ட்டும் அணிந்திருந்த அந்தச்சிறுவனா கால்மணி நேரத்திற்கு முன்புவரை கண்களில் பக்தியும், உடல் மொழியில் மிரட்சியும் காட்டிக்கொண்டிருந்த சிறுவன். ஆச்சரியம்!


ஊள்ளூர் அரசியல், உலகின் கேலி, பொருளாதார இழப்பு, அங்கீகாரமோ பாராட்டோ இல்லை என்றபோதும் இதுபோன்ற கலைகளைக் கற்றுக்கொள்ளவும், நடத்தவும் எது ஊந்துசக்தியாக இருக்கிறது? என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. "கலை எனும் போதை ஒருவனுக்கு ஏறிவிட்டால் சாமான்யத்தில் விடுவதில்லை" என்றுசிவசங்கர் சொன்னார் . பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது எங்களுக்கு முன்னரே அங்கு காத்திருந்த ஒரு பெரியவர் எங்களிடம் "என்ன தம்பி நாடகம் பார்க்க வந்தீங்களா?" என்றார். லேசான சாராய மணம் வீசியது. அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். "தம்பி நானும் பிராமணந்தான்... பக்கத்துல ஊத்துக்காடு... ஒருகாலத்திலே நான் பாகவதமேளாவில் அசுரனாய், பிரகலாதனாய், ஹிரண்யனாய், லீலாவதியாய் அரிதாரம் பூசியவன்... இன்னிக்கு விவசாயம் இல்லாம எங்க ஊரே புகைஞ்சு போச்சு.... காவிரியும், மழையும் கையவிரிச்சதனால அக்கிரஹாரம் காலியாகி அமெரிக்கா, கனடான்னு அவனவன் காணாமபோயிட்டான். நரசுஸ் காபில மானேஜரா வேலை செஞ்சேன். எம்புள்ளைங்களும் சென்னை, கோவைன்னு செட்டிலாகிட்டாங்க... ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்கமுடியல... என்னோட நாடக நினைவுகள் தாங்கமா வந்துட்டேன்..." என்றவர் கண்ணில் ஈரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அலைபாயுதே கண்ணா, ஆடாமல் அசங்காது என உலகப்புகழ்பெற்ற பாடல்களை இயற்றிய ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் ஊரில் காலம்காலமாய் நிகழ்ந்த கலை ஒன்று காணாமல் போன வலி அவரைக் குடிக்கவைத்திருக்கிறது. மெலட்டூரிலும் ஓரே அக்ரஹாரம் இரண்டாகப்பிரிந்து துவேஷம் கொள்வதும், ஒருவர் நடத்தும் மேளாவிற்கு மற்றொருவர் போவதில்லை என்றும் அவர் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோது தஞ்சை செல்லும் முதல்பேருந்து அமைதியைக் கிழித்தபடி வந்தது. ஏறி அமர்ந்தபோது பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்தது போக்கிரி பட பாடல்!

Saturday, May 5, 2007

எனது புகைப்படங்கள்


இந்த புகைப்படங்கள் அனைத்தையும் எடுக்க உதவியாக இருந்த டிஜிட்டல் கேமராவை "குட்டையன் கடை புரோட்டாமாதிரி..." கையாண்டதால் தற்போது ஒரு கேமரா சர்வீஸ் செண்டரில் உதிரிபாகங்கள் அனைத்துக் கழற்றப்பட்ட நிலையில் உள்ளது. அதன் எதிர்காலத்திற்காய் பிரார்த்தனை செய்யுங்கள்.
Thursday, May 3, 2007

ரசீதுக்கட்டை ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்திற்கு எனது மூன்றாவது விசிட் இது. இரண்டு முறை உள்ளூர் நண்பனுடன், இந்த முறை சிவசங்கருடன். சிவசங்கர் புராணக்கதைகளோடும், வரலாற்றுப்பிண்னனியோடும் ஆன்மீக விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் வல்லவர். விடுமுறை தினங்களில் கோவையிலிருந்து திருச்சி செல்வதே சவாலான விஷயம். சுமார் ஆறுமணி நேர காத்திருப்பு, ஐந்தரை மணிநேர பஸ் பயணத்திற்கு ஸ்ரீரங்கம் வந்துசேர்ந்தபோது மிகவும் களைப்புற்றிருந்தோம்

கோவிலின் முன்பு சாக்குகளால் சுற்றுசுவர் எழுப்பபட்டு, ஆயுதம் தாங்கிய நான்கைந்து போலீசாரின் பாதுகாப்பில் பெரியார் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். பிரார்த்தனைகள் அர்த்தமற்றது என்ற புத்தன் கடவுள் ஆக்கப்பட்டான். தனிமனிதவழிபாட்டை வன்மையாகக் கண்டித்த பெரியாரின் சிலைகளை ஊர்தோறும் திறந்து சிலையின் பெயரால் அரசியலும், வன்முறையும் செய்கிறார்கள் பெரியாரின் பிள்ளைகள். "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" என்று ஜி.நாகராஜன் சொன்னது நிணைவுக்கு வந்தது.

கன்னக்கதுப்புகள் பொசுங்கும் மொட்டை வெயிலில் விடுதியைத் தேடி கண்டுபிடித்து, குளித்துவிட்டு விசுவரூபதரிசனம் பார்க்க கிளம்பினோம். வழக்கத்திற்கு மாறாக மிகநீண்ட க்யூ இருந்தது. சிறப்புதரின க்யூவில் புகுந்த எங்களுக்குப்பின்னால் ஒரு முதிய ஜோடி கால்களை மாற்றி, மாற்றி நின்று கொண்டிருந்தது. கணவர் பாலக்காட்டு ஐயர், மனைவியோ தெலுங்கு பிராமின். தங்களது அந்திமத்தை ஊர்சுற்றிக் கழிக்கும் அளவிற்கு பணவசதி கொண்டவர்கள் என்பது நவரத்தின மோதிரங்களிலிருந்து தெரிந்தது. சில பேர் க்யூவில் நிற்காமல் இடையே புகுந்து செல்கிறார்களே என புலம்பிக்கொண்டிருந்தார் மாமி. இடைவிடாமல் புலம்பிய மாமியை மாமா ஆத்திரத்துடன் " என்ன பண்ணலாம்? எல்லாரையும் தூக்கில் போட்றலாமா?" எனக்கேட்டவுடன் மொத்தக் க்யூவே சிரித்தது. அவமானம் தாங்காமல் தெலுங்கில் திட்ட அவர் பதிலுக்கு மலையாளத்தில் திட்ட, உயர்மட்ட ஆங்கிலமும் கலந்துகொள்ள பகவான் தரிசன க்யூவில் பன்மொழிபுகழுரைகள். வயதான ஜோடிகளுக்கு எனது யோசனை ஊர்சுற்றிப்பார்ப்பதாக இருந்தால் மே மாதத்தை தேர்வு செய்யாதீர்கள். வெயிலும், கூட்டமும் உங்கள் முதுமையால் தாக்குப்பிடிக்க முடியாத சுமை.
தென் திசை இலங்கை நோக்கும் அரங்கனைத் தவிர ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள் நரசிம்மர் சன்னதியில் அழகிய சித்திரங்கள் சூழ இருக்கும் ஆக்ரோச நரசிம்மசுவாமிகளும், ஸ்ரீமத்ராமனூஜர் சன்னதியும்தாம். நாங்கள் சென்றதினம் சித்ராபவுர்ணமி-நரசிம்ம ஜெயந்தியாய் இருந்தும் இரு சன்னதிகளும் பூட்டப்பட்டிருந்தது. ஒரு அழகியபெண் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபத்தில் அமர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருந்தாள்.
சிவசங்கர் குலசேகரஆழ்வார் கோவில் கைங்கர்யத்துக்கு தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, மதில் சுவர் கட்டும் பணிக்காக கொள்ளையடித்த வரலாற்றினை சுவைபட சொல்லிக்கொண்டிருந்தார். திருமங்கை ஆழ்வார் காலத்தில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கு, நம்மாழ்வார் திருஉருவசிலையை நம்மூர் ஆழ்வார்திருநகரியிலிருந்து எடுத்துவருவார்கள். பின்பு ராமானுஜர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் சிலை ஒன்றை செய்தார் என்ற அவரது தகவல்கள் ஆச்சரியமூட்டியது. சைவத்தின்பால் ஆர்வம் கொண்டிருந்தாலும் சோழமன்னர்களும், பாண்டியர்களும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கைங்கர்யம் செய்வதில், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்றார்.
கோவிலுக்குள் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு நுழைவுக்கட்டணமாக வெரும் ஒரு ரூபாய்தான் வாங்குகிறார்கள். உள்ளே நுழைந்தால் பண்டைய மன்னர்களின் வாள், செப்புப்பட்டயங்கள், சிற்பங்கள், பழைய பூட்டுகள், நாணயங்கள், இரும்பு கவசங்கள், ஆலய வரலாறினை விளக்கும் குறிப்புகள் என ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஆனால் 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' என்ற கதையாக பிரசாத ஸ்டாலில் இருந்த கூட்டத்தில் ஒரு சதவீதம்கூட அருங்காட்சியகத்தில் இல்லை.
மாலிக்கப்பூரின் சூறையாடல்களுக்குப்பின்னும் அழகும் கம்பீரமும் குறையாத ஸ்ரீரங்கம் கோவிலின் ஒரே அருவருக்கத்தக்க விஷயம்... அங்கு பணியில் இருக்கும் அர்ச்சர்கர்களிடம் தற்போது தலைதூக்கி இருக்கும் ரசீதுக்கட்டை பணப்பிடுங்கல்தான். ஒவ்வொரு சன்னதியிலும் அர்ச்சகர்கள் ஏதாவது யாகம், அர்ச்சனை, பூஜை, கைங்கர்யம் என சொல்லி முகத்திற்கு முன்னாள் ரசீது நோட்டை நீட்டுகிறார்கள். சீக்கிரத்தில் பழனியை பின்னுக்கு தள்ளிவிடுவார்கள் எனத்தோன்றுகிறது. தாயார் சன்னதியில் ஒரு புதுமணத்தம்பதியிடம் தக்கணுண்டு மஞ்சள் பொடியைக் கொடுத்துவிட்டு ஒரு பட்டர் ரூ.300/- பிடுங்கிய அநியாயம் நடந்தது. ஜாக்கிரதை..!

இந்த பயணத்தில்தான் முதன்முதலாக டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்த தெரிந்துகொண்டேன். நான் எடுத்த சிலபடங்கள் நன்றாக இருப்பதாக அலுவலக நண்பர்கள் சொன்னதால் இந்த பதிவில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அனைத்து படங்களும் என்னால் எடுக்கப்பட்டதே...!