மெலட்டூர் மேஜிக்

"விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து புலம்பெயர்ந்த பாகவதப் பிராமணர்களில் சிலர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள மெலட்டூர் எனும் சிற்றூரில் குடியேறினர். அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது பாரம்பரிய கலையான 'பாகவத மேளா' எனும் நாட்டிய நாடகக்கலை அழிந்து போகாவண்ணம் நிகழ்த்திவந்தனர். அவர்களின் பிந்தைய தலைமுறையினர் வாழ்வியல் தேடல்களுக்காக தொழில், படிப்பு, இருப்பிடங்களை மாற்றினாலும் அக்கலையை புறக்கணிக்காது தங்களது கலாச்சார அடையாளமாகத் தொடர்ந்தனர்.

வெகுஜன ஆதரவு இல்லையென்றாலும் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் வரும் நரசிம்ம ஜெயந்தி அன்று ஆரம்பித்து பத்து நாட்கள் தொடர்ந்து பாகவத மேளா நடத்தி வருகின்றனர். பக்த பிரகலாதன், வள்ளி திருமணம், சதி சாவித்ரி, ருக்மணி கல்யாணம் என பல்வேறு நாடகங்கள் நடந்தாலும், பக்த பிரகலாதன் சரித்திரமே மிகப்பிரசித்தம். மேளா நடக்கும் சமயம் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது, நாடகம் பார்க்க வருபவர்களுக்கும் நாடகத்தை நடத்துபவர்களின் வீட்டிலேயே உணவளிக்கப்பட்டு, தங்கும் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

வானமும், புரோகிதமும் பொய்த்துப்போன நிலையில் 'பாகவத மேளா' வை நடத்த வழியில்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில்தான் நான் தூபாய் சென்றேன். அங்கே கடுமையாக உழைத்து - சம்பாதித்த பணத்தைக் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை நரசிம்ம ஜெயந்திக்கு மெலட்டூர் வந்து ' பாகவத மேளா' வை நடத்திவிட்டு மீண்டும் துபாய் சென்று விடுவேன். எனது வீட்டில் ஏதாவது நற்காரியங்கள் செய்யவேண்டுமென்றால்கூட நான் பாகவதமேளாவிற்கு வரும் இந்த பதினைந்து நாட்களில்தான் நடத்திக்கொள்வார்கள். இடையில் நான் இந்தியா வருவதேயில்லை. நீங்களும் ஒருமுறை மெலட்டூர் வந்து அந்த அற்புதக் கலையை ரசியுங்கள்" என்று அந்த நடுத்தரவயதுக்காரர் பேசி அமர்ந்ததும் அரங்கம் அதிர்ந்தது.

அவர் பெயர் மெலட்டூர் நடராஜன். பிரகலாத நாடகத்தில் 'லீலாவதி' எனும் கடினமான வேடத்தை அணிந்து நடிப்பதில் சுற்றுவட்டாரம் முழுக்க பெயர் பெற்ற அவர் அக்கலை அழியாமல் காக்க வெளிநாட்டில் வேர்வை சிந்துகிறார். ஒரு பாரம்பரிய கலையைக் காப்பாற்ற ஒருவன் கடல்கடந்து போக வேண்டிய அவலத்தை உணர்ந்தபோது கட்டாயம் மெலட்டூர் போயாக வேண்டும் என்ற சங்கல்பம் எடுத்துக்கொண்டேன்.
மே தினம் அன்று நரசிம்ம ஜெயந்தி வருகிறது எனத்தெரிந்தவுடன் நானும், நண்பர் சிவசங்கரும் தஞ்சாவூர் கிளம்பினோம். கடைசிப்பேருந்தைப் பிடித்து மெலட்டூர் கிராமத்தில் இறங்கியபோது மணி பத்தரையைக் கடந்திருந்தது. பாகவதர்களும், மிருதங்க வித்வான்களும் சுருதி ஏற்றிக்கொண்டிருந்த ஓசை ஈரக் காற்றில் வந்தடைந்தது. ஹோட்டல்கள் ஏதுமில்லாத அக்கிராமத்துப் பெட்டிக்கடையில் பிஸ்கட் பாக்கட்டுகளை வாங்கிக்கொண்டு இசை வந்த திசை நோக்கி நடையைப் போட்டோம். எதிர்வந்த சைக்கிள்காரரிடம் 'நடராஜ அய்யர்' வீட்டுக்கு எப்படிப் போவது என விசாரித்தோம். "இந்தவாட்டி நடராஜ அய்யர் நாடகம் பத்துநாளு தாமசம். கவலைப்படாதீங்க மாலி அய்யர் நாடகம் இன்னிக்குதான் ஆரம்பிக்குது... இந்த ஒத்தையடிபாதையில போங்க... நாடகம் ஆரம்பிக்க போவுது... சீக்கிரம்.." என்றார். இத்தனைச் சிறிய சிற்றூரில் இரண்டு பாகவதமேளாவா..?! ஆச்சரியம் மேலிட சைக்கிள்காரரிடம் கேட்டேன். "ஒன்னாத்தே இருந்தாக என்ன பிரச்சனையோ... என்னவோ... பத்துவருஷமா தனித்தனியாதேன் போடுறாக..." என்றபடி பதிலுக்குக் காத்திராமல் கிளம்பினார். ஏதோ உள்ளூர் அரசியலில் கலைஞர்கள் இரண்டாய் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். கூத்தாடிகள் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம்...?! யோசித்தபடியே வயல்வெளிகளைக் கடந்து பொட்டலில் அமைக்கப்பட்ட பந்தலை வந்தடைந்தோம். மேடையின் உட்பக்கமாக ஒதுக்கப்பட்ட சிறிய உள்மேடையில் நான்கு பாகவதர்களும் (வாய்ப்பாட்டு) வயலின், மிருதங்க, புல்லாங்குழல், மோர்ஷிங், ஜால்ரா வாத்தியக்காரர்களும் இருந்தனர். ’மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம்’ எனும் தோய்ந்து சாயம்போன ஒரு துணி பேனர் அரங்கின் தலையில் கட்டப்பட்டிருந்தது. ஒளி விளக்குகளில் காட்டுப்பூச்சிகள் ரீங்காரம். ஒரிரு உபயதாரர்களின் (நல்லி, பி.எஸ்.என்.எல்) பேனர்கள் அங்கங்கே கட்டப்பட்டு இருந்தது.

மெலட்டூர் நரசிம்ம ஸ்வாமிகள் சுவாமிகள் ஆலயத்திலிருந்து நரசிம்ம அவதார முகமூடி (மாஸ்க்) ஒரு சப்பரத்தில் எடுத்துவரப்படுகிறது. அதற்கு சில பூஜைகள் செய்யப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தில் அமைந்த தெலுங்கு கீர்த்தனைகளைப் பாகவதர்கள் பாட, முறையாகப் பரதம் கற்றவர்கள் பாத்திரங்களாய் மாறி நடிக்கும் அந்த நாடகத்தில் எள்ளளவுகூட தமிழுக்கும், பெண்களுக்கும் இடமில்லை. ஆண்கள்தான் பெண் வேடமிடுகின்றனர்.

பாகவதர்கள் பாட ஆரம்பித்தனர். முதலில் விநாயகர் வழிபாடு முடிந்து பாத்திர பிரவேஷம் ஆரம்பித்தது. ஹிரண்யகசிபுவின் பிரதாபங்கள் தெலுங்கு கீர்த்தனைகளாக வெளிப்பட அவைக்கு வரும் ஹிரண்யகசிபுவின் வீரம், பராக்கிரமங்கள், திமிர், ஆணவம் அத்தனையும் நடனமொழியில், உருளும் பார்வையில் நம் கண்முன் விரிகிறது. அடுத்து லீலாவதியின் அறிமுகம்... அத்தனை அழகான பெண், அவளது குணம், திறமைகளை கீர்த்தனைகளாகப் பாடுகின்றனர். அடுத்து பிரகலாதனின் பண்பும் பக்தியும், தொடர்ந்து அசுரகுரு சுக்ராச்சாரியார் எனப்பாத்திரப்பிரவேஷம் முடிந்து கதைக்குள் நுழைந்தபோது நேரம் நள்ளிரவைத்தாண்டியது.





கணவனுக்கும் பிள்ளைக்கும் மத்தியில் சிக்குண்டு லீலாவதி நடத்தும் பாசப்போராட்டம், உலகிடம் ஜெயித்து மகனிடம் தோற்றுப்போகும் ஹிரண்யகசிபுவின் அவஸ்தை அதைத் தொடர்ந்து அவனுக்கு எழும் ஆத்திரம், பிரகலாதனின் பரிபூரண பக்தி என அனைத்தையும் எனது கேமராவில் சுழன்று, சுழன்று பதிவு செய்தேன். பாஷை புரியாதது... இசை புரியாதது... நிருத்தம், அடவு, பதம், ஜதி, பாவம், அபிநயம், கரணங்கள் என்ற நாட்டியக்கலையின் எந்த ஒரு விஷயமும் தெரியாத எனக்கு பிரகலாத சரித்திரம் என் கண்முன்னே நிகழ்வதான உணர்வை அக்கலைஞர்கள் ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

பிரகலாதனிடம் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு நான் மவுனசாட்சியாக நின்றுகொண்டிருப்பதாகத் தோன்றியது. ஹிரண்யனைக் கட்டுபடுத்தவும் முடியவில்லை, லீலாவதியின் கண்ணீரையும் நிறுத்தமுடியவில்லை. கையறுநிலையில் நின்றிருந்தேன் நான். நாடகத்தின் உச்சகட்டமாக தூணிலிருந்து நரசிம்மஸ்வாமிகள் எழும் காட்சி நிகழும்போது கிழக்கில் சூரியன் எட்டிப்பார்க்க ஆரம்பித்தான். சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் நரசிம்மஸ்வாமிகளின் முகமூடி அணிந்துகொண்டு அவதாரமெடுத்தார். பொங்கி.. ஆர்ப்பரித்து, திமிறி ஹிரண்யனின் நெஞ்சைக்கிழிக்க பரபரத்த அவரை இருக்கையோடு சேர்த்து இருக்கி கட்டியிருந்தனர். ஐந்து இளந்தாரிகள் அவரை இருக்கிப்பிடித்தும் அவரை அடக்க முடியவில்லை. ஆக்ரோஷமாய் உருமிக்கொண்டிருந்தார். ஹிரண்யகசிபு வேடமணிந்தவரை மேடையை விட்டு அகலச்சொல்லிவிட்டனர். சாந்தி.. சாந்தி எனப் பார்வையாளர்களும், நடிகர்களும் அவரிடம் கெஞ்ச ஆரம்பித்தனர். அவரது திமிறலை அவர்களால் அடக்க இயலவில்லை. பிரகலாதனை அவரது மடியில் அமரச்செய்தனர். பிரகலாதன் "ஆசிர்வாதம் பண்ணுங்கோ... சாந்தமூர்த்தி நீங்க.. அமைதி.. அனுக்கிரகம் பண்ணுங்க" என்று தமிழில் கெஞ்ச ஆரம்பித்தார். அவரது ஆவேசம் அடங்குவதாகத் தெரியவில்லை. அந்தப்பெரியவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நான் பயப்பட ஆரம்பித்தேன். எனது கால்கள் நடுங்கத்தொடங்கியது. அவரைப்பார்த்தால் உண்மையான ஹிரண்யகசிபையும் கொன்று ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் ஹிரண்யகசிபுவையும் கொல்வார் என்று தோன்றியது. நான் செய்த குற்றங்கள் நினைவுக்கு வந்தன. திமிறிக்கொண்டு வந்து என்னைக் கிழித்துபோட்டுவிடுவாரோ எனப்பயம் கொண்டேன். நரசிம்மஸ்வாமிகளுக்கு தீப ஆராதனைகள் காட்டப்பட்டபின் கொஞ்சம் ஆசுவாசமானார். பார்வையாளர்கள் அவரிடம் குங்குமப்பிரசாதம் வாங்கிக்கொண்டனர். எனக்கு அவர் அருகில் போகவே பயம். வாங்கவில்லை. நரசிம்மஸ்வாமிகளும், அவரது முகமூடியும் சிறிய சப்பரத்தில் மேளம் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டபின் நாங்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி மெதுவாக நடந்தோம்.
பெரியவரின் ஆவேசக்குரல் மனதின் அடியாளத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருந்தது. "கலைஞன் முதிர்ச்சியடைய அடைய அவனது கலை இளமையாகிறது" என எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

லீலாவதியாக நடித்தவர் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாம். நம்பமுடியவில்லை. பிரகலாதன் அரிதாரம் கலைத்து எதிரே வந்துகொண்டிருந்தார். ஜீன்சும், டி-சர்ட்டும் அணிந்திருந்த அந்தச்சிறுவனா கால்மணி நேரத்திற்கு முன்புவரை கண்களில் பக்தியும், உடல் மொழியில் மிரட்சியும் காட்டிக்கொண்டிருந்த சிறுவன். ஆச்சரியம்!


ஊள்ளூர் அரசியல், உலகின் கேலி, பொருளாதார இழப்பு, அங்கீகாரமோ பாராட்டோ இல்லை என்றபோதும் இதுபோன்ற கலைகளைக் கற்றுக்கொள்ளவும், நடத்தவும் எது ஊந்துசக்தியாக இருக்கிறது? என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. "கலை எனும் போதை ஒருவனுக்கு ஏறிவிட்டால் சாமான்யத்தில் விடுவதில்லை" என்றுசிவசங்கர் சொன்னார் . பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது எங்களுக்கு முன்னரே அங்கு காத்திருந்த ஒரு பெரியவர் எங்களிடம் "என்ன தம்பி நாடகம் பார்க்க வந்தீங்களா?" என்றார். லேசான சாராய மணம் வீசியது. அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். "தம்பி நானும் பிராமணந்தான்... பக்கத்துல ஊத்துக்காடு... ஒருகாலத்திலே நான் பாகவதமேளாவில் அசுரனாய், பிரகலாதனாய், ஹிரண்யனாய், லீலாவதியாய் அரிதாரம் பூசியவன்... இன்னிக்கு விவசாயம் இல்லாம எங்க ஊரே புகைஞ்சு போச்சு.... காவிரியும், மழையும் கையவிரிச்சதனால அக்கிரஹாரம் காலியாகி அமெரிக்கா, கனடான்னு அவனவன் காணாமபோயிட்டான். நரசுஸ் காபில மானேஜரா வேலை செஞ்சேன். எம்புள்ளைங்களும் சென்னை, கோவைன்னு செட்டிலாகிட்டாங்க... ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்கமுடியல... என்னோட நாடக நினைவுகள் தாங்கமா வந்துட்டேன்..." என்றவர் கண்ணில் ஈரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அலைபாயுதே கண்ணா, ஆடாமல் அசங்காது என உலகப்புகழ்பெற்ற பாடல்களை இயற்றிய ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் ஊரில் காலம்காலமாய் நிகழ்ந்த கலை ஒன்று காணாமல் போன வலி அவரைக் குடிக்கவைத்திருக்கிறது. மெலட்டூரிலும் ஓரே அக்ரஹாரம் இரண்டாகப்பிரிந்து துவேஷம் கொள்வதும், ஒருவர் நடத்தும் மேளாவிற்கு மற்றொருவர் போவதில்லை என்றும் அவர் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோது தஞ்சை செல்லும் முதல்பேருந்து அமைதியைக் கிழித்தபடி வந்தது. ஏறி அமர்ந்தபோது பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்தது போக்கிரி பட பாடல்!

Comments

Anonymous said…
ya i like bhagavamela , only reason behind is, be a tanjourien ,
but one problem its in telugu .

more thing my name to selvendhiran happy to c or view such unique name
i proud........
selventhiran said…
மிக்க நன்றி செல்வேந்திரன்.
நேரில் போய் பார்த்தது வந்த அனுபவத்தைத் தந்தது உங்கள் பதிவு.நன்றி செல்வேந்திரன்.

இதற்கு முந்தைய'புகைப்படங்கள்' பதிவில் புகைப்படங்களுக்கான குறிப்பு கொடுத்தால் நல்லாயிருக்குமே.
செல்வெந்திரன்,
உங்களின் இந்தப் பதிவை இப்பொழுது தான் மெலட்டூர் நடராஜனிடம் சொல்லிப் படிக்கச் சொல்லியுள்ளேன்.

உங்கள் எழுத்து நேரில் சென்று வந்த அனுபவத்தைத் தந்தது.

மிக நன்றாக பாகவத மேளாவைக் கவர் செய்திருக்கிறீர்கள்..
உங்களுக்கு நடராஜனைத் தெரியுமா?

http://mrnatarajan.blogspot.com/

அன்புடன்,
சீமாச்சு..
செல்வேந்திரன் அவர்களே

வணக்கம். அவரவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த ஊர் சொர்க்கம். அதை பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்கும் போது நாம் குழந்தைகள் ஆகிவிடுகிறோம். நான் வாழ்ந்து வளர்ந்த ஊர் மெலட்டூர். நான் பாகவத மேளா நடராஜன் அல்ல. அவர் சுப்பிரமணியன் நடராஜன். நான் ராமசந்திரன் நடராஜன். எனக்கு பங்கரா நடனம் மட்டுமே ஆடத் தெரியும். பரதம் ரசிக்க மட்டுமே தெரியும்.
உங்கள் பதிவு பிரமாதம். பாகவத மேளா மற்றும் மெலட்டூரை பற்றி விரிவான பதிவுகளை கூடிய விரைவில் பதிவு செய்கிறேன்.

எனது சமீபத்திய விகடன் சிறுகதையில் மெலட்டூர் அனுபவங்களையே எழுதியிருக்கிறேன். மெலட்டூர் ஆசாமி மெலட்டூரை பற்றியே எழுதினால் நன்றாக இருக்காது என்பதால் பக்கத்து ஊரான ஒம்பத்து வேலியை குறிப்பிட்டு இருக்கிறேன்.

எனது கதைகளில் மனித நேயம், கிராமீயம், சமுதாய சீரழிவுகளை படம் பிடிக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

மெலட்டூர்.இரா.நடராஜன்.
Anonymous said…
selva, azhagaga melattur makkalin unarvukalaiyum, kalayai kaakka avargal entha alavukku sirathai edukiraarkal enpathaiyum vivarithu irukireerakal - avarkalukul privu nerudum seyal - unakalukkum, antha makkalukkum iraivan arul paalikatuum
vijai
நேரில் பார்த்த அனுபவத்தைத் தந்தது பதிவு.
selventhiran said…
வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
Raghav said…
" எந்த ஒரு விஷயமும் தெரியாத எனக்கு பிரகலாத சரித்திரம் என் கண்முன்னே நிகழ்வதான உணர்வை அக்கலைஞர்கள் ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்" - நானும் ஒரு மெலட்டூர்காரன் நீங்கள் கூறிய எதுவும் தெரியாத கண்ட ஒவ் ஒரு முறையும் பாகவத மேளாவில் தொலைந்துபோன எங்கள் ஊர்க்காரன்.அருமையான நடையில் பாகவத மேளாவை எழுதி உள்ளீர்கள் என்றபோதும் அவை மேளாஎனும் நாடிய நாடகத்தை முழுமையாக கற்பனைக்குள் கொணரமுடியாததாக இருபது அதன் சிறப்பே!

"ஐந்து இளந்தாரிகள் அவரை இருக்கிப்பிடித்தும் அவரை அடக்க முடியவில்லை." -என்ன இருந்தாலும் இது மிகவும் மிகைபடுதபட்டு எழுதி இருபதாகவே கொள்கிறேன்

"அந்த நாடகத்தில் எள்ளளவுகூட தமிழுக்கும், பெண்களுக்கும் இடமில்லை" - இரண்டுக்குமே உண்மையான நல்ல கரணங்கள் உள்ளன. அவை மேளாவின் பழமை காகவும் சரியான காரணங்களே! மேலும் தமிழில் ஒவ் ஒரு காட்சியின் அர்த்தகள் முன்பே கூறிவிடுகிறார்கள், இதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

எப்படி இருந்த போதிலும் உங்கள் பதிவு மிகை இல்லாமல் பாராட்டும்படி உள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது!

Popular Posts