க்விஸூக்குப் போன செல்வேந்திரன்..!



பபாசி (தென்னிந்திய புத்தகவிற்பனையாளர்கள் சங்கம்) கோவை வ.உ.சி. திடலில் புத்தகத்திருவிழா நடத்திக்கொண்டிருக்கிறது. அழைப்பிதழும், இலவச அனுமதி அட்டையும் கொடுத்தார் அலுவலக நண்பர் . கிட்டத்தட்ட 200 ஸ்டால்களுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான தலைப்புகள், தாராளமான தள்ளுபடிகள் என்று புத்தகப்பாம்புகளுக்கு கொண்டாட்டம். தினசரி பல தமிழிலக்கிய ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தது. அத்தனை பெரிய புத்தகக்கண்காட்சி கோவைக்கு புதியது. ஸ்டால்களில் கொஞ்ச நேரம் மேய்ந்துகொண்டிருந்தபோது, விஜயா சிதம்பரத்தைக் கண்டேன். மூன்று நாளாகியும் கூட்டத்தைக் காணவில்லை. விற்பனையும் பெரிதாக இல்லை எனவருத்தப்பட்டார். கூட்டத்தைக்கூட்ட சில யோசனைகளைச் சொன்னேன். எதையும் செய்யமுடியாது. காரணம் பட்ஜெட். இப்பவே சில லட்சங்கள் ஏற்பாட்டார்களுக்கு கை நட்டம் என்றார். அட்லீஸ்ட் தொலைக்காட்சி நிருபர்களை அழைத்து ஒரு பிரஸ்மீட்டாவது போடுங்கள் என சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.
புத்தகக்கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு மிக அருகிலேயே அரசுப்பொருட்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு அடிபொழியாய் குவியும் கூட்டம், புத்தகம், இலக்கியம் என்றால் ஏன் வருவதில்லை? காரணம் இருக்கிறது. விளம்பரங்கள் போதவில்லை. பெரும் வாசகப்பரப்பைக் கொண்ட விருந்தினர்கள் (சுஜாதா, வைரமுத்து, மதன், பாலகுமாரன்) வருவார்கள் என்றால், கொஞ்சம் கூட்டம் கூடும். பள்ளி, கல்லூரிகள் வேறு விடுமுறையில் இருக்கிறது. தவிரவும் புத்தகப்பிரியர்களை உற்சாகப்படுத்த தள்ளுபடி மட்டும் போதாது எனத்தோன்றுகிறது.

அரங்கில் பேராசிரியர். எம். ரங்கராஜன் வாசகர் வினாடி வினா நடத்திக்கொண்டிருந்தார். கோவை நன்கறிந்த குவிஷ் மாஸ்டர். சிறுசும் பெருசுமாய் கேள்விகள். உடனுக்குடன் புத்தகமும், பிஸ்கட்டுகளும் பரிசளிக்கப்பட்டது. சாதாரண தமிழிலக்கிய கேள்விகளுக்கு, உள்ளூர் இலக்கியவாதிகள் சிலர் முண்டிபோட்டுக் கொண்டு பதிலளித்து புத்தகங்களைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருந்தனர். ஏத்தனையோ கேள்விகளுக்கு விடை தெரிந்தும் எளிய கேள்விகளுக்கு விடை சொல்ல வெட்கப்பட்டு உட்கார்ந்திருந்தேன். அதில் பல எனது நிறுவனம் குறித்த கேள்விகளும் அடங்கும். ஒடு மீன் ஒட உறுமீன் வரும்வரைக் காத்திருந்தேன். ஒரு ஒலி நாடவை ஒலிபரப்பினார்கள். அது ஜெஸிகாலால் கொலை வழக்கு குறித்து பர்காதத்தின் கேள்விக்கு ஒரு கர,கர குரல் பெண்ணின் உடைந்த ஆங்கில பதிலாக இருந்தது. அந்தக்குரலுக்குச் சொந்தக்காரர் யார்? என குவிஷ் மாஸ்டர் கேட்க அரங்கம் அமைதியாக இருந்தது. அந்தக் கர,கர குரலை எங்கேயோ கேட்டதுபோல இருந்தது. "உமா பாரதி" என உரக்க கத்தினேன். குவிஷ் மாஸ்டர் கழுக்கெனச் சிரித்து கேவலமாக என்னைப்பார்க்க, பதட்டத்தில் "இல்லை இல்லை... ராப்ரி தேவி..." என பதிலை மாற்றிச் சொல்ல கூட்டம் கொல்லேன சிரித்தது. கேவலம், அவமானம் கூசிப்போய் நான் நிற்க அரங்கம் சிரிப்பை விடுவதாக இல்லை. ஒரு சிறிய பெண்குழந்தை எழுந்து "கிரண்பேடி" எனச் சரியான பதிலை சொல்லி புத்தகத்தை வென்றபோது அரங்கம் அதிர்ந்தது. நான் முகமெங்கும் கரியாகி, அவமானத்தோடு அமர்ந்தேன். "ஒக்காளி ஒரு கேள்விக்காவது பதில் சொல்லாமல் போகமாட்டேண்டா" மனதிற்குள் சபதமெடுத்தேன். அடுத்த கேள்வி,

வானம் நீ - வானம் நீங்கிவையம் வந்த -ஞானம் நீ ! - ஞானம் பெற்றார்நாளும் காக்கும் -மோனம் நீ ! - மோனம் நீங்கிஓதும் வேதகானம் நீ !ஏனம் நீ! மீனம் நீ!கூர்மம் நீ ! குறள் நீ!அரியாய் வந்து - அவுணனைஅரிந்த அரியும் நீ !யாவும் நீ ! - யாவும் படைத்ததேவும் நீ - எதையும்விஞ்சியவனும் நீ - எதிலும்மிஞ்சியவனும் நீ...

"மேற்கண்ட வரிகள் யாருடையது... புத்தகத்தின் தலைப்பு என்ன?"
கவிஞர் வாலி.... புத்தகம் அவதாரபுருஷன்"
" - கதறினேன். சரியான பதில் என்று ஒரு புத்தகம்

அடுத்த கேள்வி,

"நான் அவன் இல்லை" படத்தில் வரும் "ராதா காதல் வராதா" என்ற ஒரு பாடல் மட்டும் கே.பியின் "நான் அவனில்லை" படத்தில் இருந்து அப்படியே எடுக்கப்பட்டு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. கேபியின் படத்தில் அப்பாடலுக்கு இசை அமைத்தவர் யார்?"
" மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்"
அடித்தொண்டையிலிருந்து கத்தினேன். மீண்டும் ஒரு புத்தகம்.

அடுத்த கேள்வி,

"தென்னிந்தியாவிற்கு முதன்முதலில் அரசியல் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் யார்? "

ஆர்.கே. லஷ்மன், ராஜு, கோபுலூ, மதி, மதன் என்று விதம் விதமான பதில்கள் வந்தது. நான் மெள்ள எழுந்து " மகாகவி. சுப்ரமணிய பாரதி" என்று பதிலளித்து மூன்றாவது புத்தகத்தை தொடர்ந்து பெறும்போது அரங்கம் அதிர்ந்தது. அதற்குள் என்னை அடையாளம் கண்டுகொண்ட சில பதிப்பாளர்கள் கைகுலுக்கினார்கள்.

நான்காவது கேள்வி,

"தேவனின் ஏதாவது நான்கு புத்தகங்களின் பெயர்களைச் சொல்லவும்?"

பதிலளிக்க எழுந்தேன். "சார் போதும். மத்தவங்களும் ட்ரை பண்ணட்டுமே" எனக் குவிஷ் மாஸ்டர் கோரிக்கை வைக்க.. சரி என அமர்ந்தபோதுதான் மனசு ஆறியது.

ஆனாலும்,

1. பதில்கள் தெரிந்தபோதிலும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் என்னைத் தடுத்தது ஏது?
2. அடுத்த கேள்விக்கு யார் பதில் சொல்ல போகிறீர்கள் என்று க்விஷ் மாஸ்டர் அழைத்தபோது எழுந்து நிற்க ஏன் தைரியமில்லை?
3. ஒரு கேள்விக்கு தவறான பதில் சொல்லி, கூட்டம் சிரித்ததில் ஏன் அத்தனை பதட்டமும், வருத்தமும்?
4. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களை சந்திப்பவனும், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றவனுக்கும் கூட ஒரு பொதுஇடத்தில் ஏன் இத்தனை தயக்கம்?
5. அவமானப்பட்டபின், எங்கிருந்து வருகிறது... அந்த கொலைவெறி?

எனக்குத் தெரியவில்லை.... உங்களுக்கு...?

செல்வேந்திரன்.

Comments

//எனக்குத் தெரியவில்லை.... உங்களுக்கு...?//

இப்ப வரைக்கும் தெரிஞ்சுக்கிட்டீங்களா. இல்லையா :)