Wednesday, September 30, 2009

காஸ்ட் கட்டிங் காதல் !
ரிசஷன், ஸ்லோ டவுன் பஞ்சாயத்துக்கள் விடுகிற பாடில்லை. விலைவாசி உயர்வும் குறைகிற பாடில்லை. 'காஸ்ட் ஆஃப் லிவிங்'கைப் போலவே ஏகிறிப் போயிருக்கிறது 'காஸ்ட் ஆஃப் லவிங்'கும். கலவரத்தில் இருக்கும் காதல் மன்னர்களின் அவசரகால நிதி நெருக்கடியை அரசாங்கம் கண்டு கொள்ளாததால் காதல் செலவினங்களை கட்டுக்குள் வைக்க அசத்தலான யோசனைகளை வழங்கி இருக்கிறோம். இவை உண்மையான காதலர்களுக்கும், காதல் எனும் பெயரில் கழிசடைத்தனம் செய்வோர்களுக்கும் பொதுவானவையே!

வீக் எண்ட் வீக்கம் குறைய

காதலியோடு கிளம்புவதற்கு முன் ஆர்.சி புக், லைசென்ஸ், இன்ஸூரன்ஸ் பேப்பர்களையெல்லாம் பத்திரமாக வீட்டிலேயே வைத்துவிட்டுக் கிளம்புங்கள். வெள்ளுடை வேந்தர்கள் மறிக்கும்போது 'சத்தியமா காசு இல்ல சார்... வண்டியை வேணா வெச்சுக்கோங்க...' என்று உருண்டு புரண்டு கதறுங்கள். ஐய்யோ பாவம் என்று அப்போதைக்கி நம்ம ஜிகிடி காசு கொடுத்து 'காதல் வாகனத்தை' மீட்டுக்கொடுக்கும். அப்பாலிக்கா எப்பவாவது 'அவுட்டிங் போலாமான்னு' கேட்டுப்பாரு....

சினிமா இனிமா

'ஆர்.கேதான் என் தலைவன்னு' ரத்தத்தில் அடித்துச் சத்தியம் பண்ணுங்க... திருவண்ணாமலை, மருதமலை, மலை மலை, அழகர் மலைன்னு மலைவாழ் மனிதனா மாறி அடுத்தடுத்து கூட்டிப்போய் அதகளப்படுத்துங்க... சினிமான்னாலே பொண்ணு இனிமா ஆயிடும்.

இண்டர்வெல் கார்டு போடுறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே 'பாஸ் லைன்ல இருக்காருன்னு...'செல்போனோட ஜகா வாங்கிடுங்க... பாப்கார்ன் கொள்ளையர்கள் பட்டறையை எடுத்து வச்சதுக்குப் பிறகு உள்ளே போய் 'ஹனீ, பாப்கார்ன் இல்ல... பன்னுதான் இருக்காம்...!'

பக்தி ஸ்பெஷல்

உபன்யாசம், ஹரிகதா, நாமசங்கீர்த்தனம்னு எங்கே எது நடந்தாலும் இழுத்துக்கிட்டுப் போங்க... பக்திதான் என் சக்தின்னு உளறுங்க... 'வேயுறுதோளிபங்கன் விடமுண்ட கண்டன்னு' மிட் நைட்ல மெஸெஜ் அனுப்புங்க...'ஆஹா... பையன் அகோரி ஆயிட்டா'ன்னு பாப்பா பறந்துடும்.

இஸபகலா

கவியரங்கம், இலக்கியக்கூட்டம் தொடங்கி ஓய்வு பெற்ற நூலகருக்கு பாராட்டு விழா வரைக்கும் ஒரு எலக்கியக் கூட்டத்தையும் மிஸ் பண்ணிடாதீங்க. 'பின் நவீனத்துவத்தின் உள்ளீடற்ற வெளிகளில் நிகழும் கட்டற்ற பிரதியானது இஸங்களின் பொருண்மைத் தத்துவத்தைப் பகடி செய்வது குறித்த நுட்ப அவதானிப்பு இல்லாதவனெல்லாம் என்ன எழுத்தாளனென்று' ஆத்திரமாக வாதாடுங்கள். ரிபரன்ஸூக்கு 'பாழி' மாதிரி பயங்கரவாத நாவல்களை வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க சாயங்காலம் 'ஸ்பெஷல் கிளாஸ்' இருக்கும்பா பொண்ணு... இதுக்கு மேலயும் தாக்குப்பிடிக்கிற தாட்சாயிணிகளுக்கு இருக்கவே இருக்கிறது எம்.எல்.எம் மீட்டிங்!காபிபோஸா

கக்கத்துல ஒரு பிளாஸ்க்கும், கையில ஒரு சமஹன் பாக்கெட்டுமாவேத் திரியுங்க... பாப்பா பவளவாய் திறந்து 'லெட் அஸ் ஹேவ் எ காஃபி'ன்னு கேட்டதும் 'கோகேய்ன் ரொம்ப பித்தம்... சுண்டிப்போகும் ரத்தம்... சுக்குக்காப்பித்தான் சுத்தம்'னு டண்டணக்கா போடுங்க...

டேஞ்சர் டேட்டாஸ்

மிஸ்டு கால் கொடுக்கிறது ஒரு வகையான மன வியாதின்னு ருத்ரன் பேட்டி கொடுத்திருக்கிறார். ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் டான்சில் வளர்ந்து அதுவே கேன்சராகிடும் அபாயம் இருக்கிறது என்று வெர்ஜினியா பல்கலைக்கழகம் கண்டு பிடித்திருக்கிறது. ஹேர் ஸ்பிரே யுஸ் பண்ணின பல பேருக்கு மூளைக் கொதிப்பு வந்துள்ளது என போர்பர்ஸில் போட்டிருக்கிறான். லிப்ஸ்டிக் போட்டால் குடல் புண் வரும்னு ஈ-மெயில் வந்ததுன்னு களேபர கலவர டேட்டாக்களை அரை மணி நேரத்திற்கு ஒருக்கா சொல்லிக்கிட்டே இருங்க...

டிரஸ்

துணிதான் காதலுக்கு சனி. ஆடைகளைப் பரிசளிக்கிற காதல்கள் அரைக்காதல்கள். எதுவும் நிலைத்ததில்லையென செண்டிமெண்ட் புரூடா விடுங்கள். அப்படியும் கேட்காத கிளிகளுக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த படையப்பா சுடிதாரை எடுத்துக்கொடுங்கள்.

பப்பராக்கா பஃபே

டிஸ்கொதேக்கு இழுத்துக்கிட்டு போற அல்ட்ரா அழகு சுந்தரியா?! கவலையே வேண்டாம். பஃப்புக்குள்ள நுழைஞ்சதும் கர்ச்சீப்பை எடுத்து நெத்தியில கட்டிக்கிட்டு 'அண்ணாத்தே ஆடுறார்... ஒத்திக்கோ... ஒத்திக்கோ'ன்னு குத்தி எடுத்துறுங்க... அடுத்தடுத்து அஞ்சலை சாங்குக்கு ஆடினீங்கனா பயவுள்ள... எழவுக்கு ஆடுறவன்னு பட்சி பறந்துடும்.

கிரேட் எஸ்கேப்பூ

பிறந்த நாள், நியூ இயர் என மடிக்கு வெடி வைக்கும் நாட்களில் கவனமாக கண் காணாத இடங்களில் அப்ஸ்ஹாண்ட் ஆவது நல்லது. கால் பண்ணினா 'ஸ்வைன் ப்ளூ' சிம்டம்ஸ் இருக்குன்னு சொல்லுங்க. ஒரு மாசம் ஆனாலும் பார்ட்டி உங்களைத் தேடாது.

மவனே காஸ்ட் கட்டிங் ஐடியா தர்றேன்னு காதலையே கட்டிங் பண்ண பாக்கேறியேடா பாவிங்கறீங்களா...! லூஸ்ல விடுங்க பாஸூ...!

டிஸ்கி: 30-09-09 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியான 'காஸ்ட் கட்டிங் காதல்' எனும் எனது விநோத வஸ்துவின் கரட்டு வடிவம். இப்படி எழுதியதற்காக 'இரண்டு பாட்டியாலா சுடிதார்கள்' அபராதம் என்கிறாள் கேண்டி!

Wednesday, September 23, 2009

ரிலாக்ஸ்!'பேப்பர் விக்கிறதுக்காக கடைகளில் பத்து கவர்ச்சிக்கன்னிகளைக் கூட நிற்க வைச்சுடுவார்' என்று இவரைப் பற்றி வேடிக்கையாகவோ அல்லது வினையமாகவோச் சொல்வார்கள். 32 வருடங்களாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் பழம் தின்று கொட்டை போட்ட கிழட்டுச் சிங்கம் 'சின்னன் தாஸ்'தான் அவர். சர்க்குலேஷன் எனும் கல்லில் நார் உரிக்கிற சமாச்சாரத்தில் இவர் ஒரு தாதா!

பென்னட் & கால்மென் பதிப்பகத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரை தெற்குப் பிராந்தியத்தின் 'பிஸினஸ் டெவலப்மெண்ட் இயக்குனராக' டை.ஆ.இ நியமனம் செய்திருப்பதுதான் நியூஸ் பேப்பர் இண்டஸ்ட்ரீயின் தற்போதைய பரபரப்புச் செய்தி. இவரது வருகையை அடுத்து சென்னையில் நிகழும் 'தி ஹிந்து - டைம்ஸ் ஆஃப் இந்தியா - டெக்கான் க்ரோனிக்கல்' - மும்முனைப் போட்டிகள் தீவிரமடையும் என்பதையும், கோயம்புத்தூரில் கால் பதிக்கும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் போன ஜென்மத்துத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதையும் ஆரூடமாகச் சொல்கிறேன்.

இவரது தாத்தா வி.எம். நாயர் மலையாள மனோராமாவில் எடிட்டராகவும், பாட்டி பாலாமணி கேரளாவின் புகழ் பெற்ற கவிஞராகவும் இருந்தவர். அம்மா மாபெரும் கவிஞர் கமலா சுரையா (கமலா தாஸ்)!

சின்னன் தாஸூக்கு கோவையில் பலத்த சவால் காத்திருக்கிறது :)

***

அரிந்தம் சவுத்ரியின் சகாக்கள் அஜ்மல் கசாப்பின் ஒரெயொரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, எர்டெல் இணைப்பு, கோடக் மஹிந்திரா வங்கியில் கணக்கு, நீதிமன்ற முத்திரைத்தாளில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் (இதில் அபு சலீமின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது) ஆகியவற்றை வெறும் எட்டாயிரம் ரூபாய் செலவில் செய்து முடித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் செலவழித்தால் ரேஷன் கார்டே கிடைத்திருக்கும் என்கிறார்கள் சண்டே இந்தியன் ஆசாமிகள்.

இந்தியாவைப் போன்ற ஊழல் மலிந்த தேசத்தில் இதுமாதிரியான கேலிக்கூத்துக்கள் ஆச்சர்யமில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட திறந்த மடமாகி விட்டது என்பதற்கான எளிய உதாரணங்கள் ஏர்டெல்லும், கோடக் மஹிந்திராவும்.

பார்த்துக்கொண்டே இருங்கள் முகம்மது அப்சலுக்கும், அஜ்மல் கசாப்பிற்கும் எவனாவது ஒருவன் ஜாமீனே வாங்கிக் காட்டுவான். சில்லாயிரம் செலவில்...

****


மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம் ஆண்டுதோறும் நடத்தும் உழவர் திருவிழாவிற்கு தேசம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் வருவார்கள். எனக்கு மூன்று நாட்களாக அங்கேதான் பட்டறை. கர்நாடாகா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் பலரோடும் உரையாடிக்கொண்டிருந்ததில் தமிழ்நாட்டு விவசாயிகள் அளவிற்கு அவர்களுக்குத் துயரங்கள் இல்லை என்பதை உணர முடிந்தது. விவசாயத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு எப்படி என்று ஒரு டர்பனிடம் கேட்டேன் லேசாக முறைத்து "நாங்கள்தானய்யா அரசாங்கம்" என்றார்.

கர்நாடகாவிலிருந்து தன் பேரப்பிள்ளைகளோடு வந்திருந்த எண்பது வயதுப் பெரியவர் கோபிச்செட்டிப்பாளையத்திலிருக்கும் ஒரு கரும்புத் தோட்டத்தைத் தாம் பார்க்க விரும்புவதாகவும் உடனே ஏற்பாடு செய்யும்படியும் அதிகாரி ஒருவரோடு வாதாடிக்கொண்டிருந்தார். எண்பது வயசுக்கு மேலேயும் செய்தொழிலில் இருக்கிற பிடிப்பை வாய்பிளந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

'கோக்கனட் ஸ்வீட் சிப்ஸ்' தந்தார்கள். உலர வைக்கப்பட்ட தேங்காயை கும்பகோணம் சீவல் தடிமனுக்கு சீவி, அதில் இனிப்பு உள்ளிட்ட ஜாலக்குகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிப்ஸின் சுவை 'டாப் கிளாஸ்'. மத்திய அரசின் தேசிய விவசாயப் புதுமைப் பொருள் திட்டத்தின் தயாரிப்பாம். அரசாங்க தயாரிப்பொன்று இவ்வளவு சுவையாகவும், தரமாகவும் இருந்தது ஆச்சர்யம்!

***

ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்க இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து வருகிற நண்பர்களின் வசதிக்காக அண்ணாச்சி ஏற்பாட்டில் மருதமலை அடிவாரத்தில் ஒரு பங்களாவைப் பிடித்திருக்கிறோம். சேக்காளிகள் மட்டுமல்ல 'டூ' விட்டவர்களையும் இருகரம் நீட்டி அன்போடு அழைக்கிறோம்.

***

ஆக்கிரமிப்பிற்கு எதிரான மாவோவின் 'ஹிப்-ஹாப்' திருவிழா வருகிற 26, 27 தேதிகளில் (சனி, ஞாயிறு) வான்கூவர் நகரில் நிகழ்கிறது. கனடாவாழ் நண்பர்கள் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

***

சசவுரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் மேலாண்மை மாணவர்களிடத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். தலைப்பு வழக்கம் போல 'ஹேபிட் ஆஃப் ரிடீங்'. இந்த முறை பேச்சைத் துவங்குவதற்கு முன் விரல் வித்தை நடிகர், வில் நடிகர், பெரிய இடத்து மாப்பிள்ளை, கண்ணழகி, உச்ச நட்சத்திரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் பிரசித்தி பெற்ற கேள்விகளைக் கேட்டேன். பெரும்பாலும் பெண்கள் பகுதிகளில் இருந்து பட், பட்டென்று பதில்கள் வந்தன. ஆக, வார இதழ்களில் வரும் சினிமாச் செய்திகளையேனும் மாணவர்கள் வாசிக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு செய்தித்தாள்கள் எப்படித் தயாராகின்றன? செய்தி அச்சில் இடம் பெயர்வதற்கு முன் நிகழ்கிற சங்கிலித் தொடர் சுழற்சிகள், அதிகாலையில் வீடு தேடி பேப்பர் வரும் மெக்கானிஸம், கல்விக்கும் எதிர்காலத்திற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்தும் விதம் என்பது பற்றியெல்லாம் தீவிரமாகப் பேசினேன். அரங்கத்தில் இருந்த பாதிப்பேர் உறங்கிப் போனார்கள்.

Monday, September 21, 2009

புண்ணரசியல்

ஞாநி, கமல்ஹாசன், சுஜாதா, மணிரத்னம் போன்றவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். இந்த லிஸ்டில் சுஜாதாவைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தபோதும், சமூகத்தின் மீதான நிஜ பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இருந்தபோதும் பிராமண குலத்தில் பிறந்து தொலைத்த பாவத்தால் வாழ்நாள் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டவர்கள். படுகிறவர்கள். இவர்கள் தங்களது அடையாளங்களை முற்றிலும் துறந்தபோதும் பகுத்தறிவாளர்களென்றும், முற்போக்குச் சிந்தனையாளர்களென்றும் தங்களைக் காட்டிக்கொள்கிற கூட்டம் இவர்களை ஏற்றுக்கொண்டதே இல்லை. காத்திரமான படைப்புகளோடு இவர்கள் வெளிப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் படைப்பை முன் வைக்காமல் இவர்களது பிறப்பை முன் வைத்து கழிவறை வாசகங்களால் அர்ச்சனை செய்தவர்கள் இன்றைய சமூக நீதிக் காவலர்கள். ஒரு படைப்பாளி தன் நேர்மையை நிரூபணம் செய்யும் பிரயத்தனத்திலேயே ஆயுளைக் கழிக்க வேண்டி இருப்பது தமிழ்ச் சமூகத்தின் சாபம்.

சுயமரியாதை என்பதில் அடுத்தவர் மரியாதையும் இருக்கிறது என்பதை மறந்த இந்த மந்தைக் கூட்டங்கள் கமல்ஹாசனில் உன்னைப் போல் ஒருவன் ஓர் இந்துத்வா திரைப்படம் என்கிற பிம்பத்தை உருவாக்க பதைபதைப்புடன் வலைகளிலும், பத்திரிகையிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. படத்தில் காட்டிய மூன்று தீவிரவாதிகளும் முஸ்லீம்களே என்பதுதான் இந்த வெண்ணெய் வெட்டிகள் முன் வைக்கும் வாதம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்பதைச் சித்தரிக்கும் இந்துத்வா மனோபாவம் கமல்ஹாசனுக்கு என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கமல்ஹாசன் மதச்சார்பற்றவர் என்பதை அவர் தன் சொல்லால், செயலால், படைப்பால் நிரூபணம் செய்துகொண்டிருக்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் அத்துனை பேரும் இஸ்லாமியர்கள் என்பதும். சினிமாவிலும், இலக்கியத்திலும் யதார்த்தம் இருக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிற அறிவு ஜீவி முண்டங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்க மறுப்பதேன்? சிறுபான்மை, மனித நீதி என்றெல்லாம் இவர்கள் அரை நூற்றாண்டு காலமாய் அடித்து வரும் ஜல்லியால்தான் இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க இயலவில்லை. கட்டுப்படுத்தும் சட்டங்களை, கடுமையான தண்டனைகளை தொடர்ந்து விமர்சிக்கிற இதே துப்பு கெட்டவர்கள்தாம் பாராளுமன்றத் தாக்குதலின்போதும், மும்பைத் தாக்குதலின் போதும் தேசத்தின் பாதுகாப்பையும் கேலி செய்து கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள் என்பதை நாம் மறக்க வேண்டியதில்லை.

மதக்கலவரமும் தீவிரவாதமும் ஒன்றல்ல. குஜராத்திலும், அயோத்தியிலும் நிகழ்ந்தது இருதரப்பினர் மனங்களிலும் காலம் காலமாக அடியாழத்தில் புரையோடிப் போயிருந்த வன்மத்தில் வெடித்த கலவரம். ஆனால் தீவிரவாதம் அப்படியல்ல. அதற்கு மதத்தைப் பரப்புதல், எதிரிகளை வேரறுத்தல் என நேரடிக் காரணங்களும் நாடு பிடித்தல், கலாச்சாரங்களை அழித்தல் போன்ற மறைமுக காரணங்களும் நிரம்பியது. 'இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே. ஆனால் இஸ்லாமிய அடிப்படை வாதம் எனும் பயங்கரவாதம் மொத்த மானுடத்திற்கும் எதிரானது. நாடு, நகர எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் வேரூன்றி நிற்கிறது. உலகெங்கிலும் இருக்கிற தீவிர வாத குழுக்களில் பெரும்பான்மை இஸ்லாமிய குழுக்கள் என்பதை மறுக்க எப்பேர்ப்பட்டவனாலும் முடியாது. இந்தியனோ, இந்துவோ எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, ஆப்கனிலோ குண்டு வைத்ததாய், மக்களை நோக்கிச் சுட்டதாய் வரலாறு இல்லை.

கந்தகார் விமானக் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தைத் தாக்கியவர்கள், மும்பைபிலும், கோவையிலும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள், மும்பையில் பொதுமக்களை குருவிகளைப் போல சுட்டுக்கொன்றவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள். மேற்கண்ட பயங்கரங்கள் மொத்த தேசமும் ரத்தமும் சதையுமாய் எதிர்கொண்டது. இதன் கொடிய முகங்களைச் சித்தரிக்கும் போது இதனைச் செய்தவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகிற ஜிகாத்தின் குழந்தைகள்தாம் என்பதைச் சொல்ல எவனுக்குப் பயப்பட வேண்டும் ?!

நாமெல்லாம் பிரிவினைவாதிகள் இல்லையென்றபோதும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குச் சப்பைக்கட்டு கட்டும் கம்மனாட்டிகளைக் கண்டால் ஆத்திரம் பொங்கி ஜெரிமி பெந்தாமை அழைக்க வேண்டி இருக்கிறது. அரசியலைப் பாடமாகப் படித்தவர்களின் கடவுள் ஜெரிமி. பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி என்ற கோட்பாட்டை மானுட குலத்திற்கு வழங்கிய மாபெரும் சிந்தனையாளர் அவர். ஜெரிமி சொன்னதை ஒரு பயலும் கேட்கவில்லை. அதன் விளைவாக செசன்யா துவங்கி நாரிமன் வரை மிஸ்டர் பொதுஜனம் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். அதென்ன கோட்பாடு?!

ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார். இந்த ஒருவரின் மகிழ்ச்சிக்காக 99 பேரையும் ஒடுக்க வேண்டியதில்லை என்பது ஜெரிமியின் வாதம். இதுதான் இந்தியாவில் நிகழ்கிறது. மைனாரிட்டிகளைக் குறித்தே கவலைப்படும் அரசாங்கங்களால் ஒடுக்கப்பட்ட 99 பேர் பொங்கி எழும்போது அந்த ஒருவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

நான்கு பேர் நகர் புகுந்து நானூறு பேரைச் சுடுவதை ஒரு கூட்டம் மனித நீதியின் பெயரால் நியாயம் கற்பித்துக்கொண்டிருக்குமானால் அந்த எழவைப் பேசுகிறவனையும் சேர்த்தல்லவா ஒழிக்க வேண்டும். மனிதனுக்கே இல்லாத உரிமை மிருகங்களுக்கு எதற்கு என்று கமல் எழுப்பும் கேள்விதான் உ.போ.ஒருவனின் நேரடி அரசியல். இதைப் புரிந்து கொள்ள முடியாத ஈர வாரியல்கள் நுண்ணரசியல், புண்ணரசியலென்று புண்ணாக்குத் தனமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முன் முடிவுகளோடு படைப்புகளை அணுகுவது ஓர் அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தை அனுமதிப்பதும் கண்டும் காணாமல் இருப்பதும் பொறுக்கித்தனம். நான் அயோக்கியனும் அல்ல. பொறுக்கியும் அல்ல.

Thursday, September 17, 2009

சோர்விலன்

சோர்விலன் எனும் வள்ளுவப்பதம் அட்சர சுத்தமாகப் பொருந்திப் போவது ஜ்யோவ், சிவராமன் இணைக்குத்தான். வாழ்வு தரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், வியாபார நோக்கங்கள் இல்லாமல், விமர்சனங்களையும் சகித்துக்கொண்டு ஒரு நிகழ்வை நடத்தி அல்லது நடாத்தி முடிப்பதென்பது சாமான்ய காரியம் அல்ல.

இணைய தமிழின் வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்தால் எழுத்துரு, திரட்டிகள், பதிவர் பட்டறை வரிசைகளில் சிறுகதைப் போட்டிக்கும், சிறுகதைப் பட்டறைக்கும் நிச்சய இடம் உண்டு. ஆக்கப்பூர்வமான இப்பணிகளுக்கு இவர்களிருவரும் தங்கள் கைக்காசைக் கரைப்பது கவலை அளிக்கிறது. உரையாடல் அமைப்பின் உறுப்பினர்களையும், புரவலர்களையும் அதிகப்படுத்துவதன் மூலம் ஓரளவு சுமையைக் குறைக்கலாம் என்பதை ஓர் அபிப்ராயமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

சிறுகதை சிருஷ்டி பூர்வமானது. அதைக் கற்றுக்கொடுக்க முடியாது என்பது என் நம்பிக்கை. ஆனால், அதன் தொழில்நுட்பங்களும், சூத்திரங்களும் பகிர்வுக்குறியவை என்பதை பட்டறையில் கலந்து கொண்ட பதிவர்களின் பத்திகள் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அவர்களது பொறுப்பான பதிவுகளுக்கும் வந்தனங்கள்.

***

கோவை வருவதற்கான ரயிலில் ஓப்பன் டிக்கெட் எடுத்து, டி.டி.ஆரைப் பார்த்து அதை ஸ்லிப்பர் கிளாஸாக மாற்றி ஊர் வந்து சேர்ந்தாள் கேண்டி. இந்த நைச்சியம் சர்வ நிச்சயமாக சென்னை கற்றுக்கொடுத்தது. மிரண்ட மான் குட்டியைப் போல இருக்கும் இவளைப் போய் சென்னைக்கு அனுப்பி விட்டீர்களே என்று கேட்காத நபரில்லை. ஆனாலும், அவளது குழந்தைத் தன்மையை சாகடிக்க சென்னையைக் காட்டிலும் பெரிய களம் எது?!

மிஷ்கினின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், "நீங்கள் கேட்கிற சமாச்சாரத்திற்கு என்னைக் காட்டிலும் இன்னார் பொருத்தமாக இருப்பார்" என்று கைகாட்டி விடுகிற பொழைக்கத் தெரியாத கோயிந்துக் குணம் குடும்பத்திற்கு கேடு. ஒரு வீட்டில் இரண்டு கோயிந்துகள் வேண்டாமே என்றுதான் உலகைப் படித்து வர அவளை சென்னைக்கு அனுப்பினேன்.

***

தமிழ்ப் பதிப்புலகம் பற்றிய ஆர்.வெங்கடேஷின் கட்டுரையும், தமிழ் வலையுலகம் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணணின் கட்டுரையும் சமீபத்தில் படித்த முக்கிய பதிவுகள்.

***
சன் பிக்ஸர்ஸின் சச்சின் டெண்டுல்கர் 'விஜய் ஆண்டனி'தான். அவர் குத்துற குத்தில் தியேட்டரில் கூட்டம் அம்முகிறது. இயக்குனர்களோ வருகிற ரசிகர்களை கும்மி அனுப்புகிறார்கள். 'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சகபதிவர்கள் எழுதிய விமர்சனங்களை நம்பி தியேட்டருக்குப் போனால் உதை காத்திருக்கிறது.

படத்தில் கல்லூரியெங்கும் திரியும் 'ரிச்சி கேர்ள்ஸ்'களை விட சுமாராக இருக்கிறார் பிரியாமணி. அம்மையாரின் குரல்வளமும் அமோகம். அவரை எவ்வித முகாந்திரமும் இன்றி காதலிக்கிறார் சிக்ஸ்பேக் லிஸ்டில் லேட்டஸ்ட் வரவான பிரித்வி. பாஸ்போர்ட் சைஸ் போட்டாவை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே திரிகிற ஒரு காரணம் போதாதா அம்மையாருக்கும் காதல் வைரஸ் தொற்றிக்கொள்ள... சரி விடுங்கள் கதையை வேறு விமர்சனங்களில் படித்திருப்பீர்கள்.

காதலி எலெக்சனில் தன்னை எதிர்த்து நிற்கிறாரென்றால் உடனே வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு போடுங்கம்மா ஓட்டு பிரியாமணியைப் பார்த்துன்னு கூவுகிறவன்தானே ஐடியல் காதலன். அதை விட்டுட்டு புண்ணாக்கு மாதிரி...

காதலிப்பது எப்படின்னு ஒரு பொஸ்தவம் போட்டாத்தான் சரிப்படும் போலருக்கு...

படங்கள்: ஆதிமூலகிருஷ்ணன்

Tuesday, September 15, 2009

விகடனும் நட்சத்திர உதிர்தல்களும்

I

விகடனில் இல்லாவிட்டாலும் அங்கே நிகழும் நட்சத்திர உதிர்தல்கள் பற்றி நண்பர்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அது விகடனின் உள்விவகாரம் என்றாலும் உதிர்தல்கள் பற்றிய என் பொதுவான அபிப்ராயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றைய தேதிக்கு தமிழின் பிற ஊடகங்களிலும், திரையுலகிலும் கோலோச்சிக்கொண்டிருக்கிற மீடியா பெர்சனாலிட்டிகளில் விகடனின் தயாரிப்புகள் என என்னால் சுமார் நூறு பேரையாவது சொல்ல முடியும். இதன் பொருள் விகடனில் பணி செய்தால் திறமைசாலிகளாகி விடுவார்கள் என்பதல்ல. திறமையான நபர்களை அடையாளம் கண்டுகொள்வதில் விகடன் தவறுவதில்லை என்பதுதான். நட்சத்திரங்கள் நகரும்போது அவர்கள் புதிய நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள்.

சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், இணைய தளங்கள், புதிது புதிதாய் துவக்கப்படும் பத்திரிகைகள் என சந்தர்ப்பங்களின் சாளரங்கள் திறந்திருக்கிற சூழலில் இடம்பெயர்ச்சி சாதாரணமானது. நட்சத்திரங்கள் ஓரிடத்திலேயே தங்கி விடுவதில்லை.

எவர் இருப்பினும் இல்லாது போயினும் அன்றாடப் பணிகளும், வளர்ச்சிப் பாதையிலான பயணமும் தொடர்ந்து கொண்டிருப்பதும்தான் ஒரு அமைப்பின் ஆரோக்கிய அடையாளம். தங்களது இருப்பை வாசகர்களுக்குக் காத்திரமாக உணர்த்திக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்போது இல்லையென்றபோதும் விகடன் தயாரிப்புகளில் எவ்வித 'ஸ்லாக்கினெஸ்'ஐயும் காண முடியவில்லை.

வலைப்பூக்களில் அல்லது சிறு பத்திரிகைகளில் மட்டுமே இயங்கி வருகிற எழுத்தாற்றல் மிக்க பலரும் தங்களது திறனை நிரூபிப்பதற்கான தளம் உருவாகி இருப்பது கூடுதல் சிறப்பு. விகடன் என்றில்லாமல் பதிவர்களுள் பலர் பல்வேறு பத்திரிகைப் பணிகளில் பரிமளிப்பதைக் காணமுடிகிறது.

நட்சத்திரங்களின் ஒளிவெள்ளம் 757, அண்ணா சாலையில் மட்டும் இல்லாமல்... உயரே, உயரே சென்று ஒளிர்ந்தால்தான் விகடனுக்குப் பெருமை.

II

"நான் விகடனெல்லாம் படிக்கிறதே இல்லை, அட்டையைக் கிழிச்சிட்டா குமுதம், குங்குமம், விகடன் எல்லாம் ஒண்ணுதான், விகடனை பாத்ரூமில்தான் படிக்க முடியும்" வகையரா அறிவுஜீவி வெர்ஷன்களில் எனக்கு ஒருபோதும் ஏற்பில்லை. தமிழ் வாழ்வியலோடு இயைந்து இருக்கிறவர்கள் தவிர்க்க முடியாதது விகடன் என்பது என் அபிப்ராயம். அதன் மீதான கடுமையான விமர்சனங்கள் சர்க்குலேஷன் வளர்ச்சிக்குத்தான் உதவி இருக்கிறதே தவிர வீழ்த்தி விடவில்லை என்பதுதான் கடந்த காலங்களின் நிதர்சனம். ஆனால், பன்னிரு ஆண்டுகளாக விகடனின் வாசகன் என்கிற ரீதியில் அதன் உள்ளடக்கத்தில் நான் இழந்ததும், இழந்ததாகக் கருதுவதும் மிக மிக அதிகம்.

1) சுஜாதாவின் அனுபவக்குறிப்புகளான 'கற்றதும் பெற்றதும்' கொடுத்த சுவாரஸ்யத்தின் சுவை. அவரது மறைவுக்குப் பின்னர் அன்றாடங்களை ஓட்டிய அனுபவத் தொடர் இல்லாதது ஒரு குறை. இன்றைய தேதிக்கு இதற்கு 'ஆப்ட்'னான நபர் சாருநிவேதிதா!

2) சாரு, ஜெமோ, எஸ்.ரா, பிரான்ஸின் கிருபா போன்ற தீவிர இலக்கியவாதிகளை பெரும்வாசகத்திரள் அறிய ஒரு தளமாக இருந்தது விகடன்தான். இந்தப் பட்டியல்களில் விகடன் தவறவிட்டவர்கள் அல்லது இன்னும் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அ.முத்துலிங்கம், கண்மணி குணசேகரன், வா.மு. கோமு, தியோடர் பாஸ்கரன், சுகுமாரன், பால் ஸர்க்காரியா....

3) குவாண்டனமோ சிறைக் கைதிகள் ரத்தத்தால் கடல் நுரையில் எழுதிய கவிதைகளை, குஜராத் கலவரத்தின் உண்மை முகம் காட்டும் அறிக்கையை, முகம்மது அப்சலின் நேர்காணலை இன்னும் எத்தனையோ விஷயங்களை உயிர்மையில் வாசிக்கிறேன். விகடன் மாதிரி ஜாம்பவான் நிறுவனங்கள் கொணர்கிற செய்திகளைக் காட்டிலும் பிரமாதமாய் தருகிறார் மனுஷ்யபுத்திரன்.

4) மணிரத்னம், பி.ஸி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ரவி.கே. சந்திரன், கமல்ஹாசன், பாலுமகேந்திரா மாதிரி சினிமா ஜாம்பவான்களின் பேட்டிகளுக்குத்தான் ஆசைப்படுகிறேன். கஞ்சா கறுப்பு, வெற்றி கொண்டான், நமீதா போன்ற நிலைய வித்வான்கள் எரிச்சலூட்டுகிறார்கள்.

5) என்னைப் போல் முந்தாநாள் பெய்த மழையில் முளைத்தவர்களுக்கு கடந்த கால சுவாரஸ்யங்களை அறிய விகடன் பொக்கிஷம் ஒரு வாய்ப்பு. ஆனால், 'மணிமொழி நீ என்னை மறந்து விடு' என்பதெல்லாம் சமூக விரோதச் செயல்!

6) கூகிளாண்டவனின் வளர்ச்சிக்குப் பின் 'லாங் ஜம்ப்' அடித்து தாண்டுவது மதன் பதில்களைத்தான்.

7) கொடி மரத்தையும், பலி பீடத்தையும் கடந்தால் கருடாழ்வாரைச் சேவிக்கலாம். மேற்கில் ஏழு நிலைக் கோபுரம், கிழக்கே ஒன்பது நிலைக்கோபுரம் என்றெல்லாம் கோவிலின் 'ப்ளூ பிரிண்ட்'ஐ எழுதுவதற்குப் பெயரா ஆன்மீக தொடர்?! இதெல்லாம் உலகம் முழுக்க இருக்கிற கோவில்களின் பொதுவான அமைப்பு முறை. வேளுக்குடி பேசுகிறார், அனந்தபத்மனாச்சாரியாரின் உபன்யாசம் என்று எஸ்.எம்.எஸ்ஸினாலே மக்கள் போட்டது போட்டபடி கிளம்புகிறார்கள். காஷ்யபன்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கவேண்டிய காலம் இது!

8) தொட்டிலில் இருக்கும்போதே ஓஷோவையும், ஜிட்டுவையும் படித்தவர்களுக்கு 'சங்கரம் பிள்ளை' யாரென்பது நன்றாகவே தெரியும். ( இந்த 'இன்னோவெட்டிவ் சாமியாரின்' சமீபத்திய தத்துவத்தெறிப்பு "இப்போதும் நாட்டில் 65 சதவீத ஜனத்தொகை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், 100 பேர் சாப்பிடுவதற்கு 65 பேர் சமைப்பதைப் போல இருக்கிறது. 100 பேர் சாப்பிட 8 அல்லது 10 பேர் சமைத்தால் பரவாயில்லை. 65 பேர் அதில் ஈடுபட்டால்? அரிதான மனித சக்தியை வீணாக விரயமாக்க்கும் இதை விட பெரிய முட்டாள்தனம் வேறு என்ன இருக்க முடியும்?" ஜனங்களின் வறுமையும், தேசத்தின் பஞ்சமும் இவர்களைப் போன்றவர்களுக்கு தெரிந்திருந்தால்தான் ஆச்சர்யமே... அவருடனா பஞ்சாயத்தை தனியாக வைத்துக்கொள்ளலாம்) நீண்டகால நிலைய வித்வான் போட்டியில் கவிஞர். வாலியைப் பின்னுக்குத் தள்ளிய பெருமை இவருக்கே!

9) கருணாநிதி எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு என்பது எனக்கு கொள்ளை இன்பம். ஆனால், அதை ஜூவியோடு நிறுத்திக்கொள்ளாமல் விகடனில் எசப்பாட்டை தொடர்வது கொஞ்சம் சங்கடம்.

10) விகடன் சினிமா விமர்சனங்களின் நேர்மையில் கோட்டம் விழுந்து விட்டது. வாசகர்கள் தரமான விமர்சனங்களுக்குத் தவறாமல் நாடுவது 'பிளாக்குகளையே' என்பது ஞாநியின் அருள்வாக்கு. யதார்த்த நாயகனும் அதை வழிமொழிந்திருக்கிறார். 'ண்ணா'வின் படங்களை விமர்சனத்தில் வாரு, வாரென்று வாறிவிட்டு, மார்க்குகளையும் வாரி வழங்குவதில் விகடன் ஒரு வள்ளல் என்பதும் மாமுனியின் அபிப்ராயம்.

பட்டியலிடுவது என்று வந்து விட்டால் பத்து எண்ணிக்கையைத் தாண்டாமல் இருப்பது வலையுலக மரபு என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Saturday, September 5, 2009

கண் தானம்

நர்சிம் கண் தானம் குறித்து எழுதியிருந்த பத்தி எப்போதோ குறிப்பெடுத்து வைத்திருந்த கவிதையொன்றை தேடி எடுத்து பதிவெற்றத் தூண்டியது. வாசுதேவ் நிர்மல் எழுதிய சிந்தி மொழிக்கவிதையான இதை வைரமுத்துவின் தொகுப்பொன்றில் படித்த ஞாபகம். பெயர்தான் தெரியவில்லை.

கண் தானம்

நான்
இப்படித்தான்
உயில் எழுத விரும்புகிறேன்

நான் இறந்தவுடன்
என் கண்கள்
பார்வையற்ற ஒருவன் கண்களில்
பதிக்கப்பட வேண்டும்

இந்த
தங்க உலகத்தை
அவன் தரிசிக்க வேண்டும்

ஆடும் அலைகள்
கலர்ப் பறவைகள்
அப்பாவி வண்ணத்துப்பூச்சிகள்
மினுமினுக்கும் நட்சத்திரங்கள்
வானவில்லை பிரசவிக்கும் மேகங்கள்
அத்தனை அதிசயங்களையும்
அவன் தரிசிக்க வேண்டும்

அவன்-
மரணமடைந்தால்
அதே கண்களை
பார்வையற்ற இன்னொருவனுக்குப்
பதிக்க வேண்டும்
இப்படியாக
என் கண்கள்
ஊழியின் எல்லைவரை
யுகங் கடந்து வாழ வேண்டும்

என் கண்கள்
மரணத்தை
வெல்ல வேண்டும்.

கண்தானம் செய்ய இங்கே க்ளிக்குங்கள்.

Thursday, September 3, 2009

சந்திப்பு


ஜீவா எனும் பெயரை அறியாத சமகால இலக்கியவாதிகள் இருக்க முடியாது. கோயம்புத்தூர் என்று அறிமுப்படுத்திக்கொண்டால் ஜீவாவைத் தெரியுமா என்கிற கேள்வியைத்தான் படைப்பாளிகள் முன்வைப்பார்கள்.

புகழ்மிக்க ஓவியரும், உலக சினிமா உபாசகரும், தீவிர இலக்கியப் பரிச்சயமும் உடைய ஓவியர் ஜீவானந்தன் கோவையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். அவரோடு பதிவுல நண்பர்கள் கலந்துரையாட வருகிற ஞாயிறன்று சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பர்களை அன்போடு அழைக்கிறோம்.

நாள்: 6-9-09 - ஞாயிறு

இடம்: கோவை வ.ஊ.சி பூங்கா

நேரம்: மாலை 5:30