Saturday, May 30, 2009

'பச்சை மனிதன்' என்னவானான்?


'காவிரிக்காக ஒரு சினிமா' என்ற அறிவிப்போடு 'பச்சை மனிதன்' துவக்கப்பட்டது. மக்களே அதன் தயாரிப்பாளர்களென பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. 2005 - ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டம். அதற்கான அனுமதிச்சீட்டுக்களை ரூ.10/-க்கு விற்பனை செய்து அதன் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது. இந்த அறப்பணியில் ஏராளமான கல்லூரி இளைஞர்களும் தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர்.

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, இயக்குனர் சேரன், இயக்குனர் லிங்குசாமி, பச்சை மனிதனின் இயக்குனர் ஷரத் சூர்யா ஆகியோரை அறங்காவலர்களாகக் கொண்டு 'பச்சை மனிதன் அறக்கட்டளை' துவக்கப்பட்டது. முதற்கட்டப்படப்பிடிப்பு வேலூர் பகுதிகளில் நடந்து முடிந்த செய்திகள் வார இதழ்களில் வெளியாகி இருந்தது. விவசாயிகளும், மாணவர்களுமே நடிகர்களாக நடித்தனர். "இந்தப்படம் காவிரி விவகாரத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் அவலங்களை இந்திய இதயங்களுக்கு தெரியப்படுத்தும் திரைப்பட மனுவாக இருக்கும்" என்று அதன் இயக்குனர் அறிவித்திருந்தார்.

ஆனாலும், பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளின் காரணமாக படம் பாதி தயாரிப்பில் முடங்கி விட்டது போலும். பணம் கட்டாததால் இணையதளம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. .காவிரிப் படுகை விவசாயிகளுக்காக ஓங்கி ஓலித்திருக்க வேண்டிய குரல் அநியாயமாக அமுங்கிவிட்டது பெரிய சோகம். நல்ல முயற்சிகள் தோல்வியைத் தழுவிவிடுவது சமூகத்தின் தோல்விதான்.

அறங்காவலர்களான லிங்குசாமி, சேரன் போன்றவர்கள் கொஞ்சம் முயற்சியெடுத்து படத்தினை வெளிவரச் செய்தால் போகிற வழிக்கு புண்ணியம் சேரும்.

Friday, May 29, 2009

அதிர்ஷ்டசாலிகள்

மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது தங்கள் இன்னுயிரை நீத்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியளிப்பதாக முறையே மாநில, மத்திய அரசுகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் அறிவித்திருந்தன. நாளது தேதி வரை சல்லி நயாப் பைசா வழங்கப்படவில்லையென்று சி.என்.என் தொலைக்காட்சியில் கிழி, கிழியென்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒளிவெள்ளத்திற்கு முன் அத்தனை லட்சம், இத்தனை லட்சம் என்று அறிவிக்கிறார்கள். அத்தகவல் கோடிக்கணக்கான ஜனங்களை சென்றடைந்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் போய்ச் சேரவில்லையென்பது எத்தனை பேருக்கு தெரியவருகிறது?

***

"உலகமே ஒப்புக்கொண்ட உன்னத எழுத்தாளனாயினும் அவனது படைப்புகளை விமர்சனம் செய்ய அல்லது நிராகரிக்க ஒவ்வொரு வாசகனுக்கும் உரிமை இருக்கிறது" - 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் ஜெயமோகன்.

விமர்சன வெப்பத்தைத் தாங்க முடியாதவன் எப்படி தன்னை எழுத்தாளனென கற்பிதம் செய்துகொள்கிறான் என்பது புரியவில்லை. நான் என்ன எழுதினாலும் ரசி. தப்பித்தவறி விமர்சனம் செய்தால் மவனே நாறிடுவ லெவலில் ஒரு தெருப்பொறுக்கி எழுத்தாளன். அவனுக்கு ஒரு அடிப்பொடி. அந்த அடிப்பொடிக்கு ஒரு அரைப்பொடியென பதிவுலகில் நிகழ்ந்து வரும் கோமாளித்தனங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

விக்ரமன் இவர்கள் கதையைப் படமாக எடுத்தால் 'லா லா' நிறைய்ய்ய போடலாம்.

***

லக்கி 'சாரு-ஈழம்' என்ற பதிவில் "முட்டாப்பய நாயக்கன்; முரட்டுப்பய துளுக்கன்" என்ற பதத்தில் யாரைத் தாக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தும் வாளாவிருக்கிறோம். பதிவர்களுக்குள் விமர்சனங்கள் இருந்தாலும் ஜாதி, மத அடையாள பிரிவினைகள் இருந்ததில்லை. மணி கட்டப்படாத பூனைகளின் கதி தெரியுமில்லையா?

***

நடுக்காட்டில் சிங்கத்தை எதிர்கொண்டவனைப் போல மருளும் விழிகளோடு அடியேன் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டு உளறியதை வரும் ஞாயிறு (31/05/09) இரவு இந்திய நேரப்படி 9 முதல் 10:30க்குள் காட்ட இருக்கிறார்கள். நண்பர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

***

என்னுடைய நூறாவது பாஃலோயர் எனும் பெருமையை 'சென்சேஷனல்' சென்ஷி தட்டிச் செல்கிறார். நேற்று சாட்டில் தொடர்பு கொண்டவர் 'இது என் வாழ்நாள் பெருமை' என்று உணர்ச்சி வசப்பட்டார். என்னதான் கோடிக்கணக்கான வாசகர்கள் கூகிள் ரீடரில் படித்தாலும் பாஃலோயர்ஸ் 100ஐ தொட்ட உற்சாகத்தில் கம்ப்யூட்டர் மானிட்டரைத் தூக்கி 'பேட்-அப்' செய்துகொள்கிறேன்.

***

கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததை பட்டாசு வெடித்து கொண்டாடினேன். ஏனெனில், ஈழப்போராட்டத்தை முன்வைத்து நிகழ்ந்த நாடகத்தில் "தேதி குறிப்பிடாத ராஜினாமா கடிதம் எழுதி அப்பாவிடம் கொடுக்கிற காட்சியில்" பிரமாதமாகப் பிண்ணியெடுத்த நடிகையர் திலகம் எங்கே டெல்லிக்குப் போய் அமைச்சகப் பணிகளில் மூழ்கி கலைச்சேவை செய்யாமல் இருந்து விடுவாரோ என்கிற அச்சம்தான். தமிழ்மக்கள் அதிர்ஷ்டசாலிகள்!

Wednesday, May 27, 2009

ஈனத் தலைவர்

லலித் மோடியின் நிர்வாகத் திறனை அகில உலகமே புகழ்ந்து கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இந்தியப் பல்கலைக்கழங்கள் அவருக்கு டாக்டர் பட்டமளிக்கலாம். ஏதாவது வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் தங்கள் மேலாண்மை மாணாக்கர்களுக்கு கெளரவ பேராசிரியராக இவரை அழைத்து வகுப்பெடுக்கச் சொல்லலாம். பின்னே, கொஞ்ச சாதனையா இது? விலைவாசி, வேலையின்மை, பற்றியெறியும் ஈழம் பற்றிய கவலைகளை மறந்து மொத்த தேசத்தையும் டிவிக்கு முன் உட்கார வைத்தது அரும் சாதனையல்லவா?!

அப்துல் கலாம் அளவிற்கு தினமும் பள்ளி மாணவர்களைச் சந்திக்கிறேன். நான் விசாரித்த வரையில் 99% சிறார்கள் ஐ.பி.எல் ஆட்டங்களின் தீவிர ரசிகர்கள். தொழிலதிபர்கள் இடமும் வலமும் நடிகைகளை உட்கார வைத்துக்கொண்டு ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் முத்த மழை பொழிந்ததும், வர்ணனையாளர் 'சீயர் கேர்ள்'ஸை தன் தோள் மீதும், மடி மீதும் உட்கார வைத்துக்கொண்டு பேசியதும், மந்த்ராபேடி உள்பாடியோடு ஸ்கேட்டிங் செய்ததும் குழந்தைகள் குறித்து வியாபாரிகளுக்கு எவ்வித கவலைகளும் இல்லை என்பதை பறை சாற்றியது.

***

குற்றம், நிஜம் போன்ற நிகழ்ச்சிகளின் போக்கு குறித்து 'கும்கீ'யோடு பேசிக்கொண்டிருந்தேன். கள்ளக்காதல், ஆள் கடத்தல், சைக்கோ கொலைகள், ஆவி, பில்லி சூன்யம், ஏவல், அமானுஸ்ய மனிதர்கள், மர்ம சாமியார்கள்தான் 'ரா' மெட்டிரியல்கள். மிரட்டலான ஓப்பனிங், இண்டர்வெல் பிளாக், க்ளைமாக்ஸ் என சினிமாவின் பார்முலா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கடை பிடிக்கப்பட்டுகிறது. இதில் 'சித்தரிக்கப்பட்டவைகள்' என்ற பெயரில் தனி போர்ஷன் வேறு. செருப்பால் அடிக்க வேண்டிய பல மூட நம்பிக்கைகளை மக்கள் உணமையென்று நம்புகிற அளவிற்கு இந்நிகழ்ச்சிகள் சித்தரிப்பது குறித்து கவலைப்பட்டார். தூங்கப் போகிற நேரத்தில் ஒளிபரப்பாகிற இம்மாதிரி கோட்டிக்கார நிகழ்ச்சிகளை குறைந்த பட்சம் குழந்தைகளோடாவது பார்க்க வேண்டாம் என்பது அடியேனின் வேண்டுகோள்.

***

நண்பர் ஹரிகிருஷ்ணன் 'மணல்வீடு' இலக்கிய இதழ்கள் அனைத்தையும் அனுப்பி இருந்தார். முதல் இதழைப் புரட்டியதும் ஓஸியில் படிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. அத்தனை நேர்த்தியான இதழ். என் வாசிப்பு மட்டத்தை தாண்டிய ஒரு உச்சஸ்தாயி மொழியிலும், நடையிலும் இருக்கிற பத்திரிகை. நவீன இலக்கிய இயங்கிகள் பலரது படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன. நம்முடைய கென், அய்யனார் போன்றவர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

"முடியலத்துவத்தை அனுப்பி வையுங்கள். பிரசுரிக்கலாம்" என்றார் ஹரி. நல்ல சாப்பாட்டு இலையில் 'நரலையா' வைப்பது? ம்ஹூம்!

ஆண்டுச் சந்தா நூறு ரூபாய்தான். நான் செலுத்தி விட்டேன்.

***

'மினி டைகர்ஸ்' அணி துவக்கப்பட்ட காலத்தில் அதன் கடைசி பேட்ஸ்மேனாக இருந்து, படிப்படியாக துவக்க ஆட்டக்காரராகி, பின் அணித்தலைமையை ஏற்ற நெடிய வரலாறு என்னுடைய கிரிக்கெட் நோஸ்டால்ஜியாவில் இருக்கிறது. அப்பேர்பட்ட என்னை ஒரு ஆட்டத்தில் பன்னிரெண்டாவது ஆட்டக்காரராக அறிவித்த போது ஏற்பட்ட உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. கோடிக்கணக்கான தெருமுனை கிரிக்கெட்டரில் ஒருவனான எனக்கே இதை தாங்க முடியவில்லையெனில், வாழ்நாள் முழுக்க கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்துவிட்டு தேசிய அணியில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்திலேயே தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முதல் தர கிரிக்கெட்டர்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அந்த துயர் படிந்த நாட்களின் நினைவைத்தான் ஆகாஷ் சோப்ரா ' பியாண்ட் த ப்ளூஸ் ' என்ற நூலில் வடித்து வைத்திருக்கிறார். ஒரு அத்தியாயம்தான் படித்தேன். முடியலை.

***

சிவராமன் அண்ணாவின் சிறுகதைப் போட்டிக்காக நாளது தேதி வரை மூன்று சிறுகதைகள் எழுதி, மூன்றும் திருப்தி ஏற்படுத்தாமல் சிரச்சேதம் செய்யப்பட்டு விட்டது. சிவராமன், ஜ்யோவ் போன்றோரது இலக்கிய ரசனையும், பிற்காலத்தில் புத்தகமாய் வரும் அபாயம் இருக்கின்ற பயமும் கதை எழுதுவதில் ஒரு தடங்கலாய் இருப்பதை உணர முடிகிறது. பரிசல், நர்சிம் எல்லாரையும் தூக்கிச் சாப்பிடும் கதையினை எழுதியாக வேண்டும் என்கிற அற்ப வன்மம் வேறு. 'வெளங்குவியா நீ?' என்கிறாள் கேண்டி. இது அதிகாரத்தின் உரையாடல் அல்லவா?!

***

இனத்தலைவரென்பதை
எழுத்துப் பிழையாக
ஈனத் தலைவரென
எழுதிய பெயிண்டர்
நமுட்டுச் சிரிப்போடு
அழிக்கிறான்!

என்றொரு முடியலத்துவத்தை போன ஜென்மத்தில் விகடனில் எழுதி இருந்தேன். என்னதான் பிரபாகரன் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தன் மகனை விடுதலைப்போரில் களப்பலி கொடுத்து விட்டு, தானும் பலியான நாட்களில், தமிழினத்தலைவர் நம்பர் 10, ஜன்பத் சாலையில் தன் பிள்ளைகளுக்கு பதவி கேட்டு பிச்சையெடுத்துக்கொண்டிருந்தார். இனத்தலைவரா, ஈனத்தலைவரா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

Thursday, May 21, 2009

'ஓஹோ'

சம்பவம் - 1

எலெக்ட்ரானிக் சாதனங்களை விற்கும் கடையொன்றில் நண்பர் 'கே'யை தற்செயலாகப் பார்த்தேன். அதி நவீன ஐ-பாட் ஒன்றினை வாங்கிக் கொண்டிருந்தார். 'இதுதான் இப்ப இருக்கிறதிலே ரொம்ப லேட்டஸ்ட்' என்றார்.

'ஏற்கனவே ஒண்ணு வெச்சிருந்தீங்களே?!'

'அத என் வொய்புக்கு கொடுத்திட்டேன்.'

'ஓஹோ'

சம்பவம் - 2

அலுவலக வேலைக்காக ரிஜிஸ்டர் அலுவலகம் சென்றிருந்தேன். நண்பர் 'எக்ஸ்' பரபரப்பாக அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்.

'சார்... இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?'

'ஒரு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு வந்தேன்.'

'எதாவது பிராபர்டியை விக்கப் போறீங்களா?' மெல்லிய தயக்கத்துடன் கேட்டேன்.

'ச்சே..ச்சே இல்லீங்க...கருமத்தம்பட்டில 'சுஸிலான்' பக்கத்துல ஒரு ஆறு செண்ட் காலிமனை சல்லிசா வந்திச்சி... அதான் முடிச்சிரலாம்னு...'

'ஏற்கனவே அந்த பக்கம் கொஞ்சம் இடம் வாங்கி இருந்தீங்களே?!'

'ஆமாமா... அதுவும் இருக்கு... இதுவும் இருக்கட்டுமேனு... வாங்கிப் போடுறேன்.'

'ஓஹோ'

சம்பவம் - 3

'எ' ஒரு கல்லூரி மாணவன். குடிகார தந்தை குடும்பத்தைக் கவனிக்காத காரணத்தினால் பகுதி நேர வேலைகளைச் செய்து கொண்டு படிப்பைத் தொடர்பவன். எங்கள் நிறுவனத்தில் தினமும் காலை எழு மணி முதல் ஒன்பது மணி வரை செய்கிற பகுதி நேர பணியொன்றிற்கு வந்து கொண்டிருக்கிறான். அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக மாலைகள் அணிந்து, சந்தனம் தெளிக்கப்பட்ட புத்தம்புது பல்சரில் வந்து இறங்கினான்.

'என்னடே வண்டி புதுசா இருக்கு...?!'

'ஆமா சார் நேத்திக்குதான் எடுத்தேன்'

'அப்படியா... அப்பா வாங்கி கொடுத்தாரா...?!'

'இல்ல சார். நானே வாங்கிட்டேன். இன்ஸ்டால்மெண்ட்ல.'

'டெளன் பேமண்ட்?!'

'பதினெட்டாயிரம் கொடுத்தேன் சார்'

'ஓஹோ'

நண்பர்களே,

சம்பவம் ஒன்றில் காணப்பட்ட நபர் 2004ஆம் ஆண்டில் தன் மனைவியின் பிரசவ வகைக்காக என்னிடத்தில் அவசர கடனாக ரூ.10,000/- வாங்கினார். தற்போது அவரது குழந்தை நகரின் உயர்தர பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கிறது. என் பணம்...?! நாளது தேதி வரை 'ஓஹோ'

சம்பவம் இரண்டில் காணப்பட்ட அன்பர் இதற்கு முந்தைய சொத்தினை வாங்க கொஞ்சம் பணம் குறைந்த போது மூன்று நாள் தவணையில் திருப்பித் தருவதாக ரூ.20,000/- வாங்கினார். சொத்து வாங்கி ஆறு மாதங்கள் கழித்து ஐந்தாயிரமும், அதற்கடுத்த மாதங்களில் இரண்டு முறை தலா ஆயிரமுமாக மொத்தம் ரூ.7,000/- திரும்ப தந்திருக்கிறார். மீத பணம்...?! 'ஓஹோ'

சம்பவம் மூன்றில் காணப்பட்ட இளைஞர் தனது ஹாஸ்டல் பீஸை பல மாதங்களாகியும் கட்டாததால் கிழிந்த பாயும், அழுக்கு ஜீன்ஸூகளோடும் வெளியேற்றப்பட்ட நாளொன்றில் என்னைச் சந்தித்தார். அவருக்கு ஒரு வேலையும், தங்க இடமும், பல்சர் வாங்குவதற்கு முந்திய தினம் வரை தலா ஒரு வேளை உணவும், அவ்வப்போது கல்விச் செலவுக்கான பணமும் அடியேனின் நித்தியப்படி. இதைத் தவிர்த்து புரொஜக்ட் செய்ய படிப்பு முடித்த பின்னர்தான் தரமுடியும் என்ற முன்னறிவிப்போடு வாங்கிய கடன் ரூ.2,000/- பணம் வருமா?! 'ஓஹோ'

அத்தியாவசிய தேவைக்கு மேல் இருக்கும் உபரி பணம், தேவை இருக்கிற ஒருவருக்கு பயன் படட்டுமே என்ற அபிப்ராயத்தில், நண்பர்கள் எப்போது கேட்டாலும் கடன் கொடுப்பதுண்டு. இந்த பைத்தியக்காரத்தனத்தினாலே சேமிப்புகளை இழந்தேன். என் வாழ்நாளில் ரமேஷ் வைத்யாவிடம் ஒரு முறை கடன் வாங்கியதே முதலும் கடைசியும். அவர் என் கூடப் பிறக்காத அண்ணன் என்றபோதும் ஒவ்வொரு இரவும் உறுத்தல் இருந்தது.

ஒரு மடிக்கணிணி வாங்க மூன்று வருடங்களாய் முக்குகிறேன். முடியவில்லை. திசையெட்டும் வங்கிகள் இருக்கிறது. நாளொன்றிற்கு கடன் வேண்டுமாயென நான்கு அழைப்புகளாவது வருகிறது. கேட்டால் கொடுத்து உதவ ட்அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கடன்பட வாழ்தலின் கசப்பினை நினைத்து தவிர்க்கிறேன். வாங்கிய கடன்கள் குறித்த உறுத்தல்கள் எதுவுமில்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்கும் இவர்களைக் குறித்து கேண்டியிடம் புலம்பிக்கொண்டிருந்தேன்.

'நீ ஒரு கேனை' என்றாள்.

'ஓஹோ'

Friday, May 15, 2009

நீயா? நானா?பத்து நாட்களுக்கு முன் 'நீயா? நானா?' டீமிலிருந்து அழைத்து நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்டு பேச விருப்பமா என்றார்கள். விருந்தினராகக் கலந்துகொள்ளும் அளவிற்கு என்ன தகுதி இருக்கிறது?! தவிரவும், டாக் ஷோக்களில் பேசும் அளவிற்கு நாவன்மையும் நமக்கில்லை என்பதறிந்து ஏதேதோ காரணங்கள் சொல்லி தவிர்த்தேன். நான்காவது முறை லைனில் வந்தவர் இயக்குனர் ஆண்டனி. "சார்... யாரோ தப்பா தகவல் கொடுத்துருப்பாய்ங்க... நான் அவ்வளவு வொர்த் ஆசாமி இல்லீங்க...ச்சின்னப்பையன்..". "விகடனில் உங்க கவிதைகளைப் படிச்சிருக்கேன். அதுபோதும் உங்களைச் சொல்ல... கிளம்பி வாங்க..." வைத்துவிட்டார்.

தயங்கி, தயங்கி விடுப்பு வாங்கி, உதறல்களோடு ஏ.வி.எம் வந்தடைந்தேன். கோ-ஆர்டினேட்டர்
"அன்றாட வாழ்வில் போலித்தனம்" போன்றதொரு தலைப்பினை சொல்லி இருந்தார். ஒன்றிரண்டு பாயிண்டுகள் வைத்திருந்தேன். நிஜத்தில் தலைப்பு "இந்தியக்குடும்பங்களின் நாடகத்தனம் இயல்பானதா? தவிர்க்க வேண்டியதா?" வெளங்கிரும்... நான் பன்னிரெண்டு வருடங்களாய் அனாதை. 1997ல் என் தாயின் மரணத்திற்குப் பின் எங்கள் குடும்பம் சிதறுண்டு போய்விட்டது. இந்த லட்சணத்தில் குடும்பங்களைப் பற்றி நான் என்ன பேச?

நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினராகக் கவிஞரும், நடிகருமான சினேகன். கோபிநாத், ஆண்டனி, சினேகன் ஆகிய மூவரும் ரொம்ப இயல்பாகவும், பழக எளிமையானவர்களாகவும் இருந்ததால் கொஞ்சம் உதறல் குறைந்தது. ஆனாலும், மைக் முன்னால் நின்று "மைக் டெஸ்டிங்... ஒன், டூ, த்ரி..." சொல்வதென்றால்கூட நான்கைந்து தடவை திணறுகிற வர்க்கத்தைச் சார்ந்தவனென்பதால், ஆரம்பத்தில் தடுமாறி அப்புறம் கைத்தட்டல்களோடு முடித்தேன்.

அனேகமாக 'நீயா? நானா?' நிகழ்ச்சியின் இளவயது விருந்தினர் நானாகத்தான் இருப்பேன். என்னை ஏன் விருந்தினராகத் தேர்வு செய்தார்கள் என்பதற்கு கோபிநாத்தின் விளக்கம் அருமையானதாகவும், பெருமையானதாகவும் இருந்தது.

ஒளிபரப்பாகும் நாள் சொல்கிறேன். ப்ளீஸ்... பார்த்துடுங்க....

Wednesday, May 13, 2009

ஜெம்ஸ் முட்டாய்

ஜன்னலுக்கு வெளியே
காலில் சலங்கை கட்டிய
கழைக்கூத்தாடியொருவன்
ஒலிக்கும் உருமிக்கேற்ப
சாட்டையைச் சுழற்றுகிறான்.
பீறிடும் ரத்தம் பதிவாகிறதென் நோக்கியாவில்
யூ ட்யூபில் பதியலாம்
ஆர்க்குட்டில் போடலாம்
வலைப்பூவில் எழுதலாம்
என்73 என்றால் சும்மாவா?

***

ஓடிப்போன மகளைக்
காவல் நிலையத்தில்
கண்ட தகப்பன்
மொய்க்கவர் ஏங்கே கிடைக்குமென
ஏட்டய்யாவை விசாரித்தார்
எனக்கெதுக்கு கவர்?
அப்படியே கொடுங்களென்றார் அவர்.

***

எப்போதோ
பேசத் துவங்கிவிட்டோம்
நீயும் நானும்
இன்னும் பேசத்தான்
பழகவில்லை

***
'ணங்'கென
ஒலியெழுப்பும்
காபித்தம்ளர்
முந்தைய நாள்
ஊடலை ஓசையோடு
அறிவிக்கிறது உலகிற்கு!

***

யுவான்சுவாங்
வந்து போனது
எல்லோருக்கும்
தெரிகிறது
பாவம்
பாட்டன் பெயர்தான்
பலருக்கும் தெரிவதில்லை!

Tuesday, May 12, 2009

சல்லிக்கற்கள்

எஜமானனை
வளைக்கும் வேலைக்காரி
துணுக்குகளை
எதிர்கொள்கையில்
எத்தனை முயன்றும்
துளிர்த்துவிடுகிறது கண்ணீர்!

***

கிராமம் பெயர்ந்த
கிழவியொருத்தி
வெற்றிலை பிடுங்கும்
பேரனிடம்
'மாடு முட்டுமென'
பயமுறுத்துகிறாள்.
எந்த மாடு
எட்டு மாடி
ஏறிவரும்?!

***

மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.

***

விண்ணப்பங்களை
நிராகரிக்கையில்
உறுத்தல்கள்
ஏதுமில்லையா?
சபாஷ்!
நீங்கள் ஒரு
மேலாளர் ஆகிவிட்டீர்.

***

Monday, May 11, 2009

யாரய்யா இங்கே எழுத்தாளன்?

ஒருநாள் பயணமாக 14ம் தேதி சென்னை வரவேண்டி இருக்கிறது. காரணம் சொன்னால் கைகொட்டிச் சிரிப்பீர்கள் என்பதால் தவிர்க்கிறேன். அனேகமாக மாலைக்குள் வேலை முடிந்து விடும். அதற்குப் பின் நண்பர்களைச் சந்திக்க உத்தேசம்.

***

பதிவுலக நண்பர்களின் படைப்புகளை அச்சில் பார்ப்பது ஆனந்தம் அளிக்கிறது. பதிவுகளின் மூலமாகவே அறியப்பட்டு, உடனடி விமர்சனங்களின் மூலம் செம்மைப்படுத்தப்பட்ட இவர்களது எழுத்துக்கள் இன்று வெகுஜனப் பத்திரிகைகளில் இடம் பிடிப்பதன் மூலம் 'பதிவு எழுதுவது வெட்டி வேலை' என்கிற ஜல்லி 33,326வது முறையாக முறியடிக்கப்பட்டிருக்கிறது.

***

பதிவுகளை விமர்சிப்பது அல்லது பதிவர்களை விமர்சிப்பது என்பதையெல்லாம் தாண்டி பின்னூட்டங்கள் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எழுதப்படுவதும், அவை முன்யோசனைகள் ஏதுமின்றி அனுமதிக்கப்படுவதும் வருத்தமளிக்கிறது. மூத்த பதிவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுவது மோசமான முன் உதாரணம்.

***

கடமை, உரிமை, சேவை ஆகிய மூன்றும் இணையும் மையப்புள்ளியாக ஓட்டு போடுவது இருக்கிறது. வாக்களிப்பது ஜனநாயகக் கடமையெனில் யார் தன்னை ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும், சரியான நபரைத் தேர்வு செய்வதின் மூலம் தனக்கும், தான் வாழும் சமூகத்திற்குமான சேவையும் அதில் இருக்கிறது.

தகப்பன் செத்துப் போனால் தலைச்சன் பிள்ளை கொள்ளி போட வேண்டியது கடமை. உரிமையும் கூட. "உன் தகப்பனுக்கு நான் கொள்ளி போடுகிறேன். ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொள்..." என்றால் அரிவாளை ஓங்குவார்கள். ஆனால், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஜரூராக ஓட்டுப்போட்டு விடுவார்கள். வறியவர்கள் வேறு என்ன செய்வார்கள் என்கிறாள் கேண்டி. ஆயிரம் ரூபாயில் தீர்ந்து விடுவதா வறுமை?!

***


ஒருமுறை புதுமைப்பித்தன், ரகுநாதன் மற்றும் கு. அழகிரிசாமி ஆகிய மூவரும் சிறுகதை இலக்கியத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்களாம். புதுமைப்பித்தன் சொன்னாராம் "தமிழ்நாட்டில் யாருக்கய்யா கதை எழுத வருகிறது... நம் மூவரைத் தவிர்த்து..?"

சிறிது அமைதிக்குப் பின் சிரித்து, "நம் மூன்று பேர் என்று தாட்சண்யத்துக்காகத்தான் சொன்னேன். என்னைத் தவிர்த்து யார் கதை எழுதுகிறார்கள்?!" என்றாராம் அவர்.

அவர் சொல்லலாம்.

Monday, May 4, 2009

அவசர கடிதம்

பிரியமானவர்களே,

நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் புழங்கிக்கொள்ளட்டுமென என் அறையின் சாவியை கதவிடுக்கில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். "இப்படி சாவியை வெளியே வைத்துவிட்டு போகிறீர்களே... ஏதாவது களவு போய்விட்டால் என்ன செய்வீர்கள்?!" என்ற கேள்வியைக் கேட்காத நபரில்லை. "இந்த அறையின் ஓரே உயரிய பொருள் நான்தான். நான் வெளியே இருக்கையில் என்ன கவலை?!" என முல்லா பாணியில் பதில் சொல்வது வாடிக்கை.

நிற்க. இன்று காலை ஆறு மணிக்கும் ஆறு பத்திற்கும் இடையேயான ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது செல்போன் களவாடப்பட்டு விட்டது. குளியலறைக்குள் "வில்லினையொத்த புருவம் வளைத்தனை..."பாடிக்கொண்டிருந்தபோது செல்லினை யாரோ வளைத்துவிட்டார்கள். அவசர தேவைக்கோ, காதலியோடு கதைக்கவோ, மாலை நேரத்துக் குடிக்கோ, பிள்ளையின் படிப்புச் செலவிற்கோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காவோ களவாடப்பட்டிருக்கலாம். காரணத்தோடுதானே எதுவும் காணாமல் போகிறது.

மூளையை எத்தனை கசக்கினாலும் எவரையும் சந்தேகம் கொள்ள இயலவில்லை. விடுதியறையின் இரும்புக்கதவுகள் திறக்கப்படாத அதிகாலையில் வெளியாட்கள் யாரும் உள்ளே வர வாய்ப்பில்லை. இருக்கிற நாற்பது மனிதர்களையும், இருபது அறைகளையும் துளாவும் அளவிற்கா நம்மிடம் நைச்சியம் இருக்கிறது. திருடிய ஒருவருக்காக முப்பத்தொன்பது மனிதர்களை எப்படி அவமானப்படுத்துவது?! வெட்டென மறந்தேன்.

கடவுள் புண்ணியத்தில் காசு இருக்கிறது. ஆனால், ஐந்தரை வருடங்களாய் தேடிச் சேர்த்த எண்கள்?! செல்போனை எடுத்த புண்ணியவான் சிம்கார்டையாவது வீசி விட்டுச் சென்றிருக்கலாம். அத்தனை அறம் இருக்கிறவன் ஏன் திருடுகிறான் என்கிறீர்களா?! அதுவும் சரிதான்.

ஆனது ஆகிவிட்டது. உங்களது எண்களைத் தெரியப்படுத்துங்கள். அடுத்த மொபைல் திருடு போகும்வரை கதைத்தாக வேண்டும்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Sunday, May 3, 2009

சாருவின் கடிதமும் பின் நவீனத்துவமும்

நர்சிம்-ன் பதிவில் வெளியான சாருவின் கடிதத்தில் ரஹ்மானை முகம் தெரியாத ஐரோப்பியர்கள் ரசிப்பதாகக் குறிப்பிட்டிருந்தது அனைத்தும் சத்தியம். எனது நெருங்கிய தோழியும், லோன்லி பிளானட்டின் செய்தியாளருமான வெரோனிக் மெனோ பிரான்ஸைச் சேர்ந்தவள். ஸ்லம்டாக் மில்லினரின் 'ரிங்கி...ரிங்கி...ரிங்கா'தான் மொத்த பிரான்ஸையும் கட்டுப்படுத்தி இருக்கிறது என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தாள்.

மாவோ - கனடாவின் வான்கூவர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு போருக்கு எதிராகப் போராடும் வலிமை மிக்க இயக்கங்களுள் ஒன்று. அதன் ஸ்தாபகனும், பார்பேரியனும், என் ஆரூயிர் தோழனுமாகிய ஆரோன் மெக்கிரடி 'ஜெய் ஹோ...'தான் தனது ரிங்டோன் என சாட்டில் குறிப்பிட்டான். ஏ.ஆர். ரஹ்மான் யுனிவர்சல் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டது. ஊர்க்குருவியையும் பருந்தையும் ஒப்பிடுவது, சுகுமாரன் கவிதைகளோடு முடியலத்துவத்தை ஒப்பிடுவது போன்ற கேணத்தனம்.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சாருவின் இசை ரசனையின் மட்டத்தை நிரூபணம் செய்ய இந்த சர்ச்சைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத யுவனின் மகனையெல்லாம் இழுக்க வேண்டுமா?! இது அக்மார்க் அயோக்கியத்தனம் அல்லவா?! சீர்காழியை ரசிப்பது பாமர ரசனையின் அடையாளம் என்ற வரிகள் எத்தனை பெரிய அரசியல்?! யார் அக்ரஹாரத்து அம்பி என்ற வினாவை எழுப்புகிறதில்லையா?! இதில் சாதிய ஒடுக்குமுறை குறித்த பிளாஷ் பேக் வேறு. த்தூ!

சாருவிற்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் திராணி இல்லை. ஆதவன் தீட்சண்யாவிற்கான பதிலை இப்படித் துவங்குகிறார் "ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ போல் தோற்றமளிக்கும் இவர் என்ன உழவனா?" யார் எதைச் சொன்னாலும் முதலில் மரணத்தாக்கு தாக்குவது. அப்புறம் பதில் சொல்வதென்பது ஒருவேளை அவர் தோளில் சுமக்கும் பின்-நவீனத்துவ பாணியோ என்னவோ?!