Monday, May 11, 2009

யாரய்யா இங்கே எழுத்தாளன்?

ஒருநாள் பயணமாக 14ம் தேதி சென்னை வரவேண்டி இருக்கிறது. காரணம் சொன்னால் கைகொட்டிச் சிரிப்பீர்கள் என்பதால் தவிர்க்கிறேன். அனேகமாக மாலைக்குள் வேலை முடிந்து விடும். அதற்குப் பின் நண்பர்களைச் சந்திக்க உத்தேசம்.

***

பதிவுலக நண்பர்களின் படைப்புகளை அச்சில் பார்ப்பது ஆனந்தம் அளிக்கிறது. பதிவுகளின் மூலமாகவே அறியப்பட்டு, உடனடி விமர்சனங்களின் மூலம் செம்மைப்படுத்தப்பட்ட இவர்களது எழுத்துக்கள் இன்று வெகுஜனப் பத்திரிகைகளில் இடம் பிடிப்பதன் மூலம் 'பதிவு எழுதுவது வெட்டி வேலை' என்கிற ஜல்லி 33,326வது முறையாக முறியடிக்கப்பட்டிருக்கிறது.

***

பதிவுகளை விமர்சிப்பது அல்லது பதிவர்களை விமர்சிப்பது என்பதையெல்லாம் தாண்டி பின்னூட்டங்கள் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எழுதப்படுவதும், அவை முன்யோசனைகள் ஏதுமின்றி அனுமதிக்கப்படுவதும் வருத்தமளிக்கிறது. மூத்த பதிவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுவது மோசமான முன் உதாரணம்.

***

கடமை, உரிமை, சேவை ஆகிய மூன்றும் இணையும் மையப்புள்ளியாக ஓட்டு போடுவது இருக்கிறது. வாக்களிப்பது ஜனநாயகக் கடமையெனில் யார் தன்னை ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும், சரியான நபரைத் தேர்வு செய்வதின் மூலம் தனக்கும், தான் வாழும் சமூகத்திற்குமான சேவையும் அதில் இருக்கிறது.

தகப்பன் செத்துப் போனால் தலைச்சன் பிள்ளை கொள்ளி போட வேண்டியது கடமை. உரிமையும் கூட. "உன் தகப்பனுக்கு நான் கொள்ளி போடுகிறேன். ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொள்..." என்றால் அரிவாளை ஓங்குவார்கள். ஆனால், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஜரூராக ஓட்டுப்போட்டு விடுவார்கள். வறியவர்கள் வேறு என்ன செய்வார்கள் என்கிறாள் கேண்டி. ஆயிரம் ரூபாயில் தீர்ந்து விடுவதா வறுமை?!

***


ஒருமுறை புதுமைப்பித்தன், ரகுநாதன் மற்றும் கு. அழகிரிசாமி ஆகிய மூவரும் சிறுகதை இலக்கியத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்களாம். புதுமைப்பித்தன் சொன்னாராம் "தமிழ்நாட்டில் யாருக்கய்யா கதை எழுத வருகிறது... நம் மூவரைத் தவிர்த்து..?"

சிறிது அமைதிக்குப் பின் சிரித்து, "நம் மூன்று பேர் என்று தாட்சண்யத்துக்காகத்தான் சொன்னேன். என்னைத் தவிர்த்து யார் கதை எழுதுகிறார்கள்?!" என்றாராம் அவர்.

அவர் சொல்லலாம்.

16 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

மூன்றாவது பகுதி புரியவில்லை செல்வா.. பிற வழக்கம் போல சிறப்பாக இருந்தது. அதுவும் இறுதிப்பகுதி அற்புதம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

14ம் தேதியே திரும்புகிறீர்களா? வேலை நாளாயிற்றே.. எப்படி சந்திப்பது?

வால்பையன் said...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்!

முரளிகண்ணன் said...

செல்வா, புது எண் வாங்கியிருந்தீர்கள் என்றால் மெயில் செய்யவும். மே 14 நான் சென்னையில் தான் இருக்கிறேன்.

\\கடமை, உரிமை, சேவை ஆகிய மூன்றும் இணையும் மையப்புள்ளியாக ஓட்டு போடுவது இருக்கிறது\\

மிக நல்ல பாயிண்ட்.

ச.பிரேம்குமார் said...

காரணத்தை சொல்லுங்க செல்வா... நாங்களும் சிரிப்போம்ல ?! :)

ஆயில்யன் said...

//கைகொட்டிச் சிரிப்பீர்கள் என்பதால் தவிர்க்கிறேன்//

என்னங்க மத்தவங்களை சிரிக்க வைக்கிற விசயத்தை மனசிலயே வைச்சுக்கிட்டா எப்பிடி....???

சொல்லுலாம்ல :))

VIKNESHWARAN said...

//தகப்பன் செத்துப் போனால் தலைச்சன் பிள்ளை கொள்ளி போட வேண்டியது கடமை.//

சரியான கூற்றா இது?

ஆ.முத்துராமலிங்கம் said...

சிற்சில விசயங்கள் படிக்க சுவாரசியம்,
|மூத்த பதிவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுவது மோசமான முன் உதாரணம்.|

அமாங்க.

Cable Sankar said...

இது என்ன தலைப்பிடாத அவியல், கொத்துபரோட்டா, ஜுகல்பந்தி போன்றதா..?? நல்லாருக்கு

அனுஜன்யா said...

ஆயிரம் ரூபாயில் வறுமை தீராது. ஆனால் ஆயிரம் ரூபாயின் தீவிரத்தையே பார்த்திராதவர்களுக்கு அது பெரிய தொகை. மேலும், நிறைய பேருக்கு அடுத்த வேளை தாண்டி யோசிக்கும் வாய்ப்பும், பழக்கமும், சூழலும் இல்லவே இல்லை. அதனால்தான் அவர்கள் வறியவர்கள் :(

நானும் 'தமிழ் நாட்டில் யாருக்கைய்யா கதை எழுத வருகிறது?' என்று பரிசல், ஆதி, நர்சிம் இவர்களைக் கேட்டேன். நான் தமிழ் நாட்டில் இப்போது இல்லை என்பதால் அவர்களும் மௌனமாகவே இருந்து விட்டார்கள் :)

அனுஜன்யா

"அகநாழிகை" said...

15 அன்று டக்லஸ் வருகிறார். 14 நீங்களா ?
***
பதிவு அருமை.

இறுதியில் எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன்.


//சிறிது அமைதிக்குப் பின் சிரித்து, "நம் மூன்று பேர் என்று தாட்சண்யத்துக்காகத்தான் சொன்னேன். என்னைத் தவிர்த்து யார் கதை எழுதுகிறார்கள்?!" என்றாராம் அவர்.//

''அகநாழிகை''
பொன்.வாசுதேவன்

செல்வேந்திரன் said...

ஆதியண்ணே, அனேகமா இப்ப புரிஞ்சிருக்கும். அதெல்லாம் பாக்கலாம்ணே...

வால், வாழ்த்துக்களுக்கு நன்றி!

முரளிகண்ணன், பழைய எண்களையே கேட்டுப் பெற்றுக்கொண்டேன்.

பிரேம் அண்ணே & ஆயில்யன் ஒரு ரெண்டு நாள் பொறுங்கப்பு...

விக்கினேஸ்வரன், எங்க ஊர் பக்கம் அப்படித்தான்...

முத்துராமலிங்கம், வருகைக்கு நன்றி.

கேபிள் அண்ணே, இதுக்கு சரியான பெயர் "சல்லியின் ஜல்லி"

அனுஜன்யா, அவசரமா ஒரு லோடு அடியாட்கள் வேணும்... வேலை மும்பைலன்னு பரிசல் போன் பண்ணினார். அதுக்குத்தானா?!

அகநாழிகை வருகைக்கு நன்றி. இந்த முறையும் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அதனாலென்ன இன்னொரு முறை வந்தால் ஆயிற்று.

உட்டாலக்கடி தமிழன் said...

//செல்வா, புது எண் வாங்கியிருந்தீர்கள் என்றால் மெயில் செய்யவும். மே 14 நான் சென்னையில் தான் இருக்கிறேன்.//

சூப்பர் தல

Anonymous said...

//ஒருநாள் பயணமாக 14ம் தேதி சென்னை வரவேண்டி இருக்கிறது. காரணம் சொன்னால் கைகொட்டிச் சிரிப்பீர்கள் என்பதால் தவிர்க்கிறேன். அனேகமாக மாலைக்குள் வேலை முடிந்து விடும். அதற்குப் பின் நண்பர்களைச் சந்திக்க உத்தேசம்.//

லக்கிக்கு இது தெரியுமா?

கும்க்கி said...

நல்லது செல்வா.
பதிவுகளின் விமர்சன பின்னூட்ட நுண் அரசியல் குறித்த உங்கள் பார்வையும்,
அதன் பின் மறைந்துள்ள உண்மைகளும் லேசாக குழம்ப வைப்பதுடன்....அண்மைக்காலமாக பூடக பதிவுகள் அதிகரிப்பதன் பின்னனியில் எந்த மாதிரியான நாகரிகம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியிருப்பதுடன்,

வேணாம் சாமி. செல் பேசி தீத்துக்கறேன்.

Suresh said...

//பதிவுகளை விமர்சிப்பது அல்லது பதிவர்களை விமர்சிப்பது என்பதையெல்லாம் தாண்டி பின்னூட்டங்கள் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எழுதப்படுவதும், அவை முன்யோசனைகள் ஏதுமின்றி அனுமதிக்கப்படுவதும் வருத்தமளிக்கிறது. மூத்த பதிவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுவது மோசமான முன் உதாரணம்.//

மிக சரியாக சொன்னிங்க நிறைய பதிவர்கள் இப்போது எழுதுவதே விட்டு விட்டு இல்லை என்றால் மறைந்து எழுதுகிறார்கள் .. எனக்கு போன் போட்டு பேசினாங்க.. என்ன செய்ய துரத்தியது பல பேரை போல... நமக்கும் அவர்கள் ஆலோசனை கொடுத்தாங்க...

பூனைக்கு யாரவது மணி கட்டிதானே ஆகனும் இல்லைனா புதுசா வரவங்க எல்லாரும்... பல பசங்க மாதிரி பயந்த அய்யோ சாமி விட்டா போதும் என்று ஒடியவர்கள் ஏராளம்