Thursday, November 25, 2010

நெகிழ்தற் பொருட்டு


ஒருவழியாக திருமணம் முடிந்து; மறுவீடு; வரவேற்பு; விருந்து; பால்காய்ப்பு சம்பிரதாயங்களை முடித்து இன்று இருவரும் வீடு ஏகினோம். இனி நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து படைப்பதே முதற்பணியென முடிவு செய்திருக்கிறோம்.

***

காதல் என்றவுடன் ஆரம்பத்தில் எதிர்த்த குடும்பத்தார் திருமணம் என முடிவான பின் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தது இன்ப அதிர்ச்சி. அண்ணன்மார் அவர்தம் மனைவியர் பிள்ளைகள்; அக்காள்மார் அவர்தம் கணவர்கள் பிள்ளைகள் - சகிதம் திருமணத்திற்கு இருபது நாட்களுக்கு முன்பே விடுப்பு எடுத்து வந்து விட்டார்கள். வீட்டில் ஜே...ஜே என திருவிழா கூட்டம். வாசல் தாண்டி வழிகிற பிரியம் கண்டு ஊரார் வியந்தார்கள்.

‘இருபது நாள் லீவு எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன அதிசய சித்தப்பா...?!’ என ஆத்திரப்பட்ட ஆசிரியை முறைத்துப் பார்த்து விட்டு அண்ணன் மகள் வீட்டுக்குத் திரும்பி விட்டாள். ஆறு வயது அவளுக்கு. அந்த ஸ்கூலே வேண்டாம் என்கிறாள்.

***

தாலிக்குத் தங்கம் அக்காள்மார் வைக்கவேண்டுமென்பது வாணியக்குடி மரபு. அக்காள்மார்கள் அத்தனை வசதி வாய்ந்தவர்களில்லைதான். தங்களது பல்லாண்டுகாலச் சிறுவாட்டுச் சேமிப்பில் பொற்காசுகள் வாங்கி வைத்தார்கள். பதிலுக்குச் செய்யும் சுருள் மரியாதையையும் என் பொருளாதாரம் அறிந்து தவிர்க்கச் சொன்னதில் துளிர்த்தது கண்ணீர்.

***

ஜெயமோகன், தேவதேவன், வசந்தகுமார், கலாப்ரியா, முருகேஷ் பாபு, பாஸ்கர் சக்தி, மாதவராஜ், சிதம்பரம், வடகரை வேலன், தண்டோரா, அப்துல்லா, பா.ராஜாராம், பட்டர் ஃபிளை சூர்யா, ஓ.சு. நடராசன், ஈஸ்வர் சுப்பையா என தங்கள் எழுத்துக்களால் என்னை மகிழ்வித்து வந்தவர்கள் நேரிலும் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்வித்தனர்.

***

திருமணத்திற்கென பிரத்யேகமான ஒட்ட வைத்த சிரிப்பை சிரித்துக்கொண்டிருந்தேன். ஜெயன் ‘செல்வேந்திரன்... நீங்க இன்னும் கொஞ்சம் மலர்ந்து சிரிக்கலாமே...’ என்று சொல்ல அரங்கம் சிரித்தது.

***
மகி கிராணியும் கடலாடி அருணும் இன்ப அதிர்ச்சிகள். முன்னவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறவர். பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களை உற்சாகப்படுத்தி வருபவர். பின்னவர் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள கடலாடி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர். என் வலைப்பக்கங்களின் தீவிர வாசகர். இருவரது வருகையும் வாழ்த்துக்களும் என் மனதில் இன்னமும் ஊறிக்கொண்டே இருக்கிறது.

***

இன்னொருவர் அதிமுக்கியமானவர். குடிப்பதற்கென்றே வந்தார். குடித்துக்கொண்டே வந்தார். குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். குடித்துக்கொண்டே சென்றிருக்கிறார். முதலிரவிற்கு முந்தைய நிமிடங்களில் ‘..ட்டேய்ய்...ங்கொத்தா...’ அலைபேசி வழியே அவரது ஆசீர்வாதம் வந்தடைந்தது.

***

ஈவெண்ட் மானேஜ்மெண்டில் என்னை ஜான் கில்லாடி என்பர். ஆனால், வந்தவர்களை வாங்க என்று கேட்டதைத் தவிர வேறெந்த உபச்சாரங்களும் செய்ய முடியாத அளவிற்கு அரேஞ்மெண்ட்ஸில் கோட்டை விட்டேன். வந்தவர்களனைவரும் சாப்பிட்டார்களா என்ற சந்தேகம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. மன்னிச்சுடுங்க பாஸ்!

***

திருமணத்தை வீடியோ எடுக்கவேண்டும் என்று முடிவு செய்தது ஒரு முட்டாள்தனம். அப்புறம் நல்ல நேரம், கெட்ட நேரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அவர்களது இஷ்டப்படிதான். ஆட்டிப்படைத்து விட்டார்கள். இத்தனைக்கும் அட்வான்ஸ் கொடுக்கையில் எளிமையாய், இயல்பாய் எடுங்கள் போதுமென்று எத்தனையோ முறை சொல்லியும் கேட்டார்களில்லை.

மணப்பெண்ணின் நாடியை மணமகன் தாங்கி நிற்பதும், ஓரே குளிர்பானத்தில் இரு உறிஞ்சு குழல்களை சொருகிக் குடிப்பதும், மணமகள் ஊட்ட மணமகன் விரல் கடிப்பதும் இல்லாமல் ஒரு திருமண ஆல்பம் சாபல்யம் அடைவதில்லை போலும்.

***


திருமண இறுக்கம் தளர்ந்து மனமாரச் சிரிக்கவும், விரதம் முறித்து வயிறாரச் சுவைக்கவும் வகை செய்தார்கள் திருப்பூர் சேர்தளம் நண்பர்கள். குறுகிய கால அவகாசத்தில் அட்டகாசமான விருந்தினை ஏற்பாடுச் செய்து தந்தார்கள்.

நானும் பரிசலும் முந்தைய பிறவியில் மாமன் மச்சானாய்த்தான் இருந்திருக்க வேண்டுமென்பதை வந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். கேலியும் கிண்டலுமாய் கழிந்தது மாலை.

***

திருப்பூரில் தெருவுக்குத் தெரு மொபைல் கடை வைத்திருக்கும் வீனஸ் குழுமத்தின் முதலாளிகள் அனைவரும் மினி டைகர்ஸ் கிரிக்கெட் டீமின் ஆட்டக்காரர்கள். விளையாட்டுப் பிள்ளைகளாய்த் திரிந்தவர்களில் ஒருத்தன் மட்டும் திருப்பூர் வந்து ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்து பின் அக்கடையையே வாங்கி... பின் ஒவ்வொரு நண்பர்களாக அத்தொழிலில் சேர்ந்து இன்று ஊரையே விலை பேசிக் கொண்டிருக்கிற பிஸினஸ் மகாராஜாக்கள். நான் ஒருத்தன் மட்டும்தான் மணல் கடிகை சண்முகம் மாதிரி. திருச்செந்தூருக்கும் வந்திருந்தார்கள். திருப்பூரிலும் விருந்து பரிசுகளென அசரடித்தார்கள்.

***

புதுப்பொண்டாட்டி கோலமிடும் அழகை தோள் துண்டு, வாயில் சொருகிய டூத் பேஸ்ட் சகிதம் ரசிக்காதவன் தமிழ்க்கணவன் ஆகான். நானும் துணிந்தேன். கேண்டி முதலில் வெள்ளை மாவினால் ஒரு வட்டம் வரைந்தாள். அதை நீல நிறப்பொடி கொண்டு நிறைத்தாள். அருகிலே ஒரு சதுரம். அதை மஞ்சள் நிறப் பொடியால் நிறைத்தாள். அடுத்து ஒரு சிவப்பு முக்கோணம் உருவானது. அதனையொட்டி ஒரு கறுப்புச் செவ்வகம். அதனருகே ஓர் அலட்சிய அறுங்கோணம். துணுக்குற்றேன்.

‘பூவும் பறவைகளும்தான் கோலமா... இது மாடர்ன் ஆர்ட்...’ என்றாள். கோலம் போடத் தெரியலங்கிறத பயபுள்ள எப்படிச் சமாளிக்குது...?!

***

Monday, November 15, 2010

டிக்கெட் போட்டாச்சா...!

திருமணம் என்று முடிவானதும் பிரியத்திற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் நேரில்தான் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று நானும் திருவும் ஏகமனதாக முடிவெடுத்தோம். ஆனால், வாழ்வியல் தேவைக்கென வரித்துக்கொண்ட வேலை அதற்கு வகை செய்யவில்லை. சிலருக்குத்தான் நேரில் அழைப்பிதழ் கொடுக்க முடிந்தது. பலருக்கு கொடுக்க இயலவில்லை. விடுப்பு இல்லை என்பதைத் தாண்டி பலரது முகவரிகள், தொலைபேசி எண்கள் கைவசம் இல்லையென்பதும் ஒரு காரணம்.

காதலியை மனைவியாக்கும் தருணம் எத்தனை கம்பீரமானது. என் தோள்கள் விடைத்திருக்கின்றன. என் முகம் புன்னகையால் ததும்பிக்கொண்டிருக்கிறது. என் கால்கள் இன்னமும் பூமிக்கு வரவில்லை. என் சந்தோச தருணத்தில் என் அன்பிற்குரியவர்களின் இருப்பும், அருகாமையும் அவசியமென மனம் இரைஞ்சுகிறது. என் பிரியத்திற்குரியவர்களே, இந்த இணைய அழைப்பையே உங்களை நேரில் சந்தித்து கரங்களை இறுகப் பற்றி அழைத்ததெனக் கொள்ளுங்கள்.

வருகிற வியாழனன்று (18-11-2010) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி ஆலயத்தில் காலை 9 மணி முதல் 10.30க்குள் உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளுமைகள், சிந்தனையாளர்கள் சூழ என் காதலியின் கைத்தலம் பற்றுகிறேன். உங்களது வருகையும், வாழ்த்துக்களும் அவசியம்.

Monday, November 1, 2010

பேச்சரவம்


அசர அசர பெய்து ஓய்ந்திருந்தது மழை. வீட்டைச் சுற்றி மழைச் சகதியின் மந்தகாச மணம். பூமியைக் கீறி முளைவிடத் துவங்கியிருந்த புற்களில் சாவுக்குருவியொன்று புழுக்கொத்திக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்து கூட்டு சேர்ந்தன இன்னுமிரண்டு குருவிகள். கீச்சு கீச்சென்ற தேன் கீதம் கிளம்பியது. எந்த முட்டாள் இவற்றிற்கு சாவுக்குருவியென பெயர் வைத்தானென எரிச்சலாக வந்தது.

செவன் சிஸ்டர்ஸ் எனப்படும் சாவுக்குருவியின் கீச்சொலி அலாதியானது. ஒரு தினத்தை மிகுந்த அழகாக்கக் கூடிய மந்திரம் அந்த கீச்சொலிக்குள் இருக்கிறது. ‘புள்ளும் சிலம்பினகான்’ மனதிற்குள் ஓடியது. படிப்பறை திரும்பி சித்திர திருப்பாவையை எடுத்துக்கொண்டு பறவைப் பாடல்களை மேய்ந்து கொண்டிருந்தேன். புள்ளரையன் (கருடன்), ஆனைச் சாத்தன் (குருவி), புனமயில், இளங்கிளி, கோழி, பல்கால் குயிலினங்கள் என திருப்பாவைப் பறவைகளனைத்தும் என் வீட்டு விருந்தாளிகள் என்பதில் கொஞ்சம் பெருமிதம் கிளம்பிற்று.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் குடியிருக்கிறோமே என்கிற அச்சலாத்தியை அவ்வப்போது போக்குவது பறவைகள்தாம். மைனா, புறா, கவுதாரி போன்ற நிலைய வித்வான்களோடு அவ்வப்போது மரங்கொத்தி, தேன் சிட்டு, கொக்கு, தவிட்டுக்குருவி, சொங்கி நாரை (நானே வைத்த பெயர்! ஒரிஜினல் பெயரைத் துளாவிக்கொண்டிருக்கிறேன்.) போன்ற வெளியூர் ஆட்டக்காரர்களும் அவ்வப்போது ஜூகல் பந்தி நடத்துவதுண்டு.

இன்று வந்தவர் கரிச்சான் குருவி. மினுமினு கருப்பும், மெலிந்த உடலும், நீண்ட இரட்டை வாலுமாய் கேபிள் ஓயரில் உட்கார்ந்திருந்தது அக்குருவி. கரிச்சான் குருவிகளனைத்தும் தொகையரா வகையரா. சங்கீத பரம்பரை . கொண்டு கரிச்சான் குருவி நான்கு சுரங்களில் பாடும் என்பது தியோடர் வாக்கு. தன் கருவாய் மலர்ந்து சங்கீத மழை பொழிய துவங்கியது கரிச்சான். மெய் சிலிர்த்துப் போனவன் கரிச்சானைக் கவரும் முயற்சியில் வீட்டிற்குள் ஓடி ஒரு குத்து பொன்னி அரிசியை அள்ளி கூரையில் வீசினேன். என்னைக் கேவலமாகப் பார்த்து விட்டு சரட்டென பறந்து விட்டது. காற்றில் உந்தி உந்தி கங்காருவைப்போல பறக்கும் கரிச்சானை ஏமாற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். ‘பாவம் பயல்’ என பரிதாபம் கொண்டதோ என்னவோ அந்தரத்தில் அரைவட்டமடித்து திரும்பவும் கேபிள் ஒயரில் லேண்டானது. நான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

செந்திலாண்டவனோடு சமருக்குச் செல்லும் சூரபத்மனைப் போல தலையை இடமும் வலமும் திருப்பிக்கொண்டே இருந்தது கரிச்சான். கேபிள் ஓயரின் இன்னொரு மூலையில் ஒரு காகம் வந்தமர்ந்தது. தொண்டையைச் செருமினாற் போல மெல்ல கரைந்தது காகம். கம்யூனிகேஷன் பிரச்சனையோ என்னவோ தெரியவில்லை. கடும்சினத்தோடு காகத்தின் மேல் பாய்ந்தது கரிச்சான். கழுத்து வாக்கில் ஒரு கொத்து. அலறிப் பறந்த காகத்தை விடாமல் துரத்தி வலது சிறகின் கீழ்ப்புறத்தில் ஒரு கொத்து. முடிந்த மட்டும் வேகம் கொண்டு பறந்தது காகம். கரிச்சானோ ரிவர்ஸ் பல்டி அடித்து காகத்தின் முன் நின்று காற்றில் ஒரு நொடி தாமதித்து அதன் மூக்கில் ஒரு கொத்து. கரிச்சானின் செயல்பாடுகள் அது சீன மடாலயமொன்றில் குஃங்பூ, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி பெற்றிருக்குமோ என நினைக்க வைத்தது. காகம் கொஞ்சமும் எதிர்ப்புணர்ச்சி இன்றி தப்பித்தோம் பிழைத்தோம் என பறந்து கொண்டிருந்தது. எனக்கோ பெருமகிழ்ச்சி. வலியோரை எளியோர் தாக்குகையில் பீறிடும் உற்சாகம். முடிந்த மட்டும் காகத்தை துரத்தி விட்டு திரும்பவும் கேபிளில் அவதார் ஹீரோவைப் போல வந்தமர்ந்தார் திருவாளர். கரிச்சான். முகத்தில் தோரணை குடிவந்திருந்தது. நான் திரும்பவும் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்

இன்று முழுவதும் பறவைகளைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருப்பது என முடிவெடுத்தேன் (ஏன்... எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான் அப்படி எதைப்பற்றியாவது யோசித்துக்கொண்டிருப்பாரா என்ன?!) என் மனவெளியெங்கும் கரிச்சான் பறந்துகொண்டே இருந்தது. என்னிடமிருந்த ‘தாமரை பூத்த தடாகம்’, ‘வனங்களில் விநோதம்’, ‘உயிர்ப் புதையல்’ ஆகிய புத்தகங்களில் கரிச்சான்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கரிச்சானுடைய அறிவியல் பெயரோ, ஆங்கிலப்பெயரோ தெரியாததால் இணையத்திலும் தேட இயலவில்லை. கரிச்சானின் அதிரடி சண்டைக்காட்சிகள் மனதிற்குள் ரிவைண்ட் ஆகிக்கொண்டே இருந்தது. பெரியவரோடு வேறு பகை. அழைத்தும் கேட்க முடியாது. சோர்ந்து போனேன்.

தியாகு புக் சென்டரில் குழுமி இருந்த நண்பர்களிடத்தில் கரிச்சானின் சாகசங்களைச் சொன்னேன். விநோதமாகப் பார்த்தார்கள். தியாகுதான் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்ட சலீம் அலியின் புத்தகம் ஓன்றை தேடி எடுத்துக்கொடுத்தார்(இத்தனை அரிதான புத்தகங்கள் இவரைத் தவிர வேறு யாரிடமும் இருக்கும் எனத் தோன்றவில்லை) பறவைகளின் வண்ணப்படங்களோடு அவற்றின் சுபாவங்களைப் பற்றிய குறிப்பும் அப்புத்தகத்தில் இருந்தது. புழுக்கள், சிறு பூச்சிகளை விரும்பி உண்ணும் கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே சிறிதும் இல்லை. தன்னை விட அளவில் பெரிய பறவைகளான பருந்து, கழுகு, காகம் போன்றவற்றைக் கூட தாக்கி ஓட ஓட விரட்டக் கூடியது என்று சலீம் குறிப்பிட்டிருந்தார்.

கரிச்சான் தன் உடலில் இருக்கும் உண்ணிப்பூச்சிகளை அழிக்க எறும்பு புற்றின் மீது அமருமாம். எறும்புகள் வெளிப்படுத்தும் ஃபார்மிக் அமிலத்தில் பூச்சிகள் அழிந்து விடும் என்றும் தன் பயமற்ற வாழ்க்கை முறைக்காக ‘கிங் க்ரோ’ என்றும் அழைக்கப்படுகிறது போன்ற உபரி தகவல்களை இணையம் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.

100கிராம் கூட எடை இல்லாத குருவி பாடுகிறது; காற்றில் சாகசம் செய்கிறது; தன்னிலும் வலிமையான எதிரியை தாக்குகிறது. வேதியியல் முறைப்படி சுயசிகிட்சை செய்து கொள்கிறது. நான் என் தொப்பையைத் தடவியபடி சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்தேன்.