Monday, June 29, 2009

வால்மீகி - அபிப்ராய பகிர்வுகள்

துணையை இழந்த அன்றில் பறவையின் ஓலம் திருடனாய் இருந்த வால்மீகியை ராமாயணம் எழுத வைத்தது. தன்னால் பாதிக்கப்பட்டவர்களின் ஓலத்தை எதிர்கொள்ள நேரிடுகிற திருடன் தானும் திருந்தி, தன்னைச் சார்ந்தவர்களும் திருந்தி வாழ வகை செய்யும் படம்தான் “வால்மீகி”. கேட்க நன்றாக இருக்கிற கதை. ஆனால், பார்க்க அப்படி இல்லை என்பதுதான் சோகம்.

ஒரு மசாலா கதையெனில் அதை எத்தனைச் சமரசங்களுடனும் எடுக்கலாம். ஆனால், ஒரு நல்ல விஷயத்தைக் கதையாக்கி வெற்றியும் பெற ஓரே வழி யதார்த்தத்தின் வழி நிற்பதுதான் என்பதை சமீபத்திய படங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்து வந்தாலும் அனந்தநாராயணன் போன்றவர்கள் அதை எப்படி கோட்டை விடுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

நேர்த்தியான திரைக்கதையோடும், யதார்த்தத்திற்கான உழைப்போடும் எடுத்திருக்க வேண்டிய படம். திரைக்கதை ஓட்டையினாலும், கிண்டர்கார்டன் நடிப்பினாலும் சிக்கல் பண்ணிவிட்டார்கள். அஜயன்பாலா மாதிரியான ஜாம்பவான்கள் யூனிட்டில் இருந்திருக்கிறார்கள். ஒருதடவை ஸ்க்ரிப்டை காட்டியிருக்கலாம்.

இளையராஜா தன் தோல்வியை பகிரங்கமாக ஓப்புக்கொண்டிருக்கிறார். அவரது காலம் மெள்ள முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் பின்னூட்டத்தில் பக்தமகாஜனங்கள் அம்முவார்கள். அதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா?! ‘கூட வருவீயோ...’ எனும் கொடுமைக்கார பாடல் காட்சியில் ‘ஏம்மா...கூடத்தான் கொஞ்சம் போயேன்...எழவு ஏழரையைக் கொடுக்கிறானே...’ என முன்சீட்டில் முணுமுணுப்புகள் எழுந்தது. பாடல் காட்சிகளில் லேடீஸ் எழுந்து வெளியே போவதை முதன் முதலில் இந்தப் படத்தில்தான் கண்டேன். ‘என்னடா பாண்டியை...’ மட்டும் மூக்கால் பாடி நிமிர்த்தி இருக்கிறார் இசைஞானி!

அகில் இரண்டு படங்களை வெற்றிகரமாக முடித்தும் இன்னும் நடிக்கச் சிரமப்படுகிறார். கதாநாயகி ‘சைந்தவியை’ அவ்வப்போது நினைவுபடுத்துகிறார். அயோக்கிய கதாநாயகன்களைத் திருத்துவதற்காக நாயகிமார்கள் நாளது தேதிவரை பிரயோகித்து வந்த அறிவுரைகளனைத்தையும் பேசி...பேசி... சாகிறார். சாகடிக்கிறார்.

குழந்தைகளை வைத்துக்கொண்டு போடும் ‘கண்ணப்பநாயனார்’ நாடகக் காட்சிகள் இயக்குனரின் பேட்டை எதுவென்பதைக் காட்டுகிறது. நகைச்சுவை அந்தக் காட்சியோடு தேங்கிவிடுவது படத்திற்குப் பெரிய பலவீனம்.

செகண்ட் ஹீரோயின் மல்லூ வீடியோவில் வரும் முதிர்கன்னியைப் போல இருக்கிறார். கடற்கரையில் அவரைப் புரட்டி தொப்புளை கடல் மண்ணால் அடைத்து...உவ்வேக்...

அஜயன் பாலாவிற்கு நல்ல பாத்திரம். தன்மையாக நடித்திருக்கிறார். அவர் போடும் குத்தாட்டத்தைப் புன்னகையோடு ரசிக்க முடிகிறது. அவருக்காகவேனும் ஒருவாட்டி பார்க்கலாம்.

வால்மீகி – அனுபவக்குறை!

Sunday, June 28, 2009

நமக்கு நாமே மாமே!

உலகின் தலைசிறந்த லேப்டாப் எது? விடை கடைசியில்...
***

நமீதா2002 என்கிற ஜிமெயில் ஐடியில் வந்த மெயிலை ஏதோ ஸ்பாம் எனக்கருதி தெரியாமல் அழித்த பாவியானேன். சாட்சாத் நமீதாதான் தன் மச்சான்கள் புளகாங்கிதமடையட்டும் என முதல் கட்டமாக இருபது லட்சம் பேருக்கு அனுப்பி அதில் 22,000 பேரிடமிருந்து பதிலும் பெற்றிருக்கிறார். என் கோபமெல்லாம் என்னைக் கேட்காமல் மெயில் ஐ.டியைக் கொடுத்த சினேகா மீதுதான்.
***

‘நமக்கு நாமே மாமே’ திட்டத்தின்படி எழுதப்பட்ட கிசுகிசுக்கள் அனைத்தும் குறிப்பிடுவது என்னையே என்பதை முதலில் கண்டுபிடித்த மயிலுக்கு இ.வா.பூ வைக் கொடுக்கச் சொல்லி ஞாநிக்கு வேண்டுகோள் வைக்கிறேன். மற்றபடி பதிவைப்படித்து ‘மெய்தான் அரும்பி விதிர்விதித்தவர்களுக்கு... “இவர்தான் உங்க ஹீரோ”-வை சிபாரிசு செய்கிறேன்.
***

சர்ச்சைகள் அண்ணன்மார்களுக்கு பதற்றத்தையும், நண்பர்களுக்கு தர்மசங்கடத்தையும் தருவதால் அவற்றிற்கு பதில் சொல்லி சமர் செய்ய கிஞ்சித்தும் விருப்பமில்லை. இருபதிவர்களுக்கு இடையே விவாதங்கள் நிகழ்கையில் கரையோரத்தில் நிற்கிறவர்கள் ‘ஸ்வாஹா’ என நெய்யூற்றுவதில் பரஸ்பரம் இரண்டு தரப்பும் வெறியேறி...கடைசியில் இந்த உலகம் என்னைத்தான் குறை சொல்லும்.
***

இரண்டு காவலர்களோடு சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தேன். டிவிஎஸ்50ல் ஒரு மத்திம வயதைக் கடந்த பெண்மணி வேகமாக வந்து என்னருகே நிறுத்தி “போலீஸ்காரனுவ இப்படி மீட்டிங் போட்டு பேசினா...நாடு உருப்படுமாய்யா...அவனவன் இங்கே செத்துகிட்டு இருக்கான்...போய் வேலையப் பாருங்கய்யா...” எனப் பொரிந்து தள்ளிவிட்டுப்போனார். அவர் பேசும்போது இருகாவலர்களும் முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பிக்கொண்டனர். அவள் போனதும்தான் திரும்பினர்.

“யார் சார் அவங்க? உங்க டிபார்ட்மெண்டா?!”

“இல்லீங்க...பப்ளிக் வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட்”

“அட... அப்படியா!”

“ம்ஹூக்கும்...நீங்க வேற... ஐயிட்டங்க அது"

அதுசரி நீங்க எதுக்கு திரும்புனீங்கன்னு கேட்க நினைத்து... முழுங்கினேன்.
***


கேள்விக்கான விடை: டெல் இன்ஸ்பிரான் 16 – ஏனென்றால் அதைத்தானே நான் வாங்கி இருக்கிறேன்.

Wednesday, June 24, 2009

ரூல்ஸ் ராமானுஜன்களுக்கு மரியாதை!


சாலை விதிகளை மதிக்காதவர்களின் உயிரையோ, உடல் உறுப்புகளையோ ஆண்டவன் பறிக்கிறான். காவல்துறையோ அபராதம் விதிக்கிறது. என்னைப் போன்ற அம்மாஞ்சிகள் சபிக்கிறார்கள். கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கு...?!

யாருக்கும் உபத்திரவம் கொடுக்காமல் சாலை விதிகளை சப்ஜார்டாக கடைபிடிப்பவர்களுக்கு சின்ன அங்கீகாரம் கொடுத்து உற்சாகப்படுத்தலாமேயென யோசித்தோம். கோவை போக்குவரத்து காவல்துறையுடன் கைகோர்த்து மிஸ்டர். பெர்பெஃக்ட்களுக்கு பரிசுகளை வழங்க முடிவெடுத்து சிக்னல்களில் களம் இறங்கினோம்.

* மஞ்சள் விளக்கு ஒளிரும் போதே மட்டை போடும் திராவிட்களுக்கு...

* எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடாத அஹிம்சாவாதிகளுக்கு...

* தலைக்கவசம் சூடியவர்களுக்கு... (பின்னிருக்கை தங்கமணியும் அணிந்திருந்தால் 'டபுள் போனான்ஸா'!)

* நான்கு சக்கர வாகனமெனில் சீட் பெல்ட் அணிந்திருந்தவர்களூக்கு...

* எமிஷன் சர்டிபிகெட், லைசென்ஸ், இன்ஸூரன்ஸ் இத்யாதிகள்...

* காதுகளை இயர் போன்களுக்கு கடன் கொடுக்காதவர்களுக்கு

பரிசுகள் மட்டுமின்றி, "சாலை விதிகளை மதிக்கும் வாகன ஓட்டி" எனும் ஸ்டிக்கரையும் வாகனங்களின் பின்புறம் ஒட்டினோம். மறுநாள் (நாளை) விழாவிற்கு ஏற்பாடு செய்து கோவை மாநகர கமிஷனர் முன்னிலையில் பாராட்டும், பரிசுகளும் வழங்க இருக்கிறோம்.

இருசக்கர வாகன ஓட்டிகளைத் தேர்வு செய்வது எளிதாக இருந்தது. ஆனால், கோயம்புத்தூர் முழுக்க நிகழ்ந்த இந்த தேடுதல் வேட்டையில் சீட் பெல்ட் அணிந்த காரோட்டிகள்தாம் காணக்கிடைக்கவில்லை. வெகுநேரம் காத்திருந்த பின் ஒருவர் சீட்பெல்ட்டுடன் சிக்கினார். நான் ஓடோடிப் போய் "சார் ஹிந்துலருந்து வர்றோம். சாலை விதிகளைக் கடைபிடிக்கிறவங்களுக்கு பரிசுகள் வழங்குகிறோம் சார். சீட்பெல்ட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுன ஓரே ஆளு நீங்கதான் சார். கங்கிராட்ஸ் சார். நாளைக்கு கமிஷனர் கையால சிறப்புப் பரிசு இருக்கு சார். நீங்க கண்டிப்பா வரணும் சார். உங்க பேரைச் சொல்லுங்க சார். எழுதிக்கறேன்" படபடப்பாய் பேசி முடித்தேன்.

சலனமற்று இருந்தது அவரது முகம்.

"என்னாச்சு சார்?!"

"நாக்கு தமிலு தெளிது... தெலுகுல செப்பண்டி"

Tuesday, June 23, 2009

பதிவுலக கிசுகிசுக்கள்

சமீப காலமாக ஆசிரம நடமாட்டம் அதிகம் இருப்பதால், விரைவில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இதழில் பச்சை, பச்சையாய் பேசும் தொடரை 'கும்பமுனி ரசிகர்' எழுதலாம் என அதிகார வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

***

நேரில் 'ஒங்க காலடி மண் எனக்கு பிரசாதம்' என பாமாலைப் பாடி பூமாலை சூடும் 'ஐஸ் திலகம்' மறைமுகமாக 'இவர் எப்பிடியாபட்டவரென' தாய்க்குலங்களிடம் விசாரணையைப் போட ஏகவருத்தத்தில் இருக்கிறாராம் 'ஏகபத்தினி விரதர்'.

***

யுகப்புரட்சியாளர்கள் சந்திப்பு, நெம்புகோலர்கள் கூட்டம் என தவறாமல் எண்ட்ரி கொடுக்கும் ஹீரோவுக்கு ஆபிஸில் ஆப்பு காத்திருக்கிறதாம். லீவு என்று சிட்டையை நீட்டினால் கட்டையைக் கொடுக்க உத்தேசமாம்.

***

நவீன இலக்கிய தாத்தா ஒருநாள் 'ஐம்பது கட்டுரைகளுக்கு மேல படிச்சிட்டேன். ஒண்ணுகூட ரசிக்கலை' எனச் சொல்ல 'ரசிக்கலன்னா ஏனய்யா ஐம்பது கட்டுரைகள். ஒன்றிரண்டோடு நிப்பாட்ட வேண்டியதுதானே என அந்த 'முந்திரிக்கொட்டை பதிவர்' சொல்ல...அதன்பிறகுதான் முத்துக்கள், குத்துக்கள் என கும்மாங்குத்து பதிவுகள் போட ஆரம்பித்தாராம் அந்த 'ஞான-ரிவர்'.

***


'இவர்தான் உங்க ஹீரோ' தொடரை வெறித்தனமாய்ப் படித்து முறுக்கேறிப் போயிருக்கும் பதிவர் 'இவர்தான் உங்க பதிவர்' எனும் பரபரப்புத் தொடரை எழுதப்போகிறாராம். நெம்ப பரபரப்பைக் கிளப்பும் என்கிறார்கள் சைபர் தேசத்தவர்கள்.

***

அச்சில் ஏறும் கதைகளின் கருவும் உருவும்தாம் நம்ம 'சட்ட திட்டமான' பதிவருக்கு ஏக்கத்தையும் தேக்கத்தையும் கொடுத்திருக்கிறதாம். ஆவி, பாவியென பதிவர்கள் பிஸியாக இருக்கும் சமயத்தில் பரபரப்பு பதிவுகள் போட்டு முதலிடத்தைப் பிடிக்கும் திட்டமாம். வட்டிக்கு வாங்கி மடிப்பொட்டி வாங்கி இருக்கிறார்.

***
நேரில் 'பிரபுக்களவை' ஆசாமி போல தோற்றமளிக்கும் டிப்-டாப் ஆசாமி அவர். ஆனால், எந்த நட்பையும் தெருமுனையோடு நிறுத்தி விடுவார். காரணம் வேறொன்றுமில்லை. இவரது குடியிருப்பு கற்காலத்தை நினைவூட்டுவதாக இருப்பதால்தானாம்.

***
பரமேஸ்வரனின் கடாட்சம் பெற்ற குருக்களின் கதை 'ஓ.ஹென்றிக்கு' இணையானது என ஓயாமல் சொல்லி வரும் 'தெக்கத்தி ஆளு' விரைவில் உள்ளூர் தொலைக்காட்சி தொகுப்பாளிகள், விளம்பர மாடல்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆவண படமாக்க போகிறாராம். ஜில்பான்ஸியெல்லாம் இல்லாத கண்ணீர் காவியமாக இருக்கும் என்கிறார்கள் மாம்பழ ஊர்க்காரர்கள்.

***
'எப்ப பாத்தாலும் பொட்டிய கட்டிக்கிட்டு அழறீங்களே' என ஏகவசனம் பேசும் தன் சரிபாதிக்கும் ஒரு கடையைத் துவக்கிவைத்து தப்பிக்க நாள் குறித்திருத்திருக்கிறாராம் ஜோடியாய்த் திரியும் 'கேடி' பதிவர்.

***
மாய்ந்து மாய்ந்து வலையை அலங்கரித்த தன் பெயரை எங்கேயும் குறிப்பிடாததால் வடக்குப் பக்கம் கரை ஓதுங்கியவர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். விரைவில் வீட்டுக்கு அழைந்து விருந்து வைத்தாலும் ஆச்சர்யமில்லை.

Monday, June 22, 2009

நீங்க என்ன சொல்றீங்க?


வாஷிங்டனிலிருந்து நண்பர் ராஜன் அழைத்திருந்தார். மூன்று வயதுப் பெண் தமிழ் பேச தடுமாறுகிறாள் என்று வருத்தப்பட்டார். உடனடியாக இசையருவியைப் பொழியச் செய்யுங்கள். மூன்றே வாரத்தில் 'யம்மாடி...ஆத்தாடி' என தெள்ளுதமிழ் தெறிக்குமென்றேன். உண்மை. மூன்றுமாதங்கள்தாம் 'கிரா டேலி' என்னோடு தங்கி இருந்தாள். வான்கூவர் திரும்பு முன் அன்றைய சூப்பர் ஹிட்டான 'சரக்கு வெச்சிருக்கேன்...எறக்கி வச்சிருக்கேனை...' பிரமாதமாய்ப் பாட கற்றுக்கொண்டு விட்டாள்.

தமிழ்நாட்டுத் தகப்பன்களுக்கு குழந்தை ஆங்கிலம் பேச வேண்டுமென்கிற கவலை. அமெரிக்க ஆர்.ஆருக்குத் தன் குழந்தை தமிழ் பேச வேண்டுமே என்கிற கவலை. எனக்கோ குழந்தைகள் கதை கேட்டு வளர்கிறார்களா என்கிற ஒரே கவலைதான்.

திரும்ப திரும்ப கதைகள் கதைகள் என்றே பிரச்சாரம் செய்கிறாயே....கதைகள் அப்படியென்ன செய்துவிடும் என்கிற கேள்வியை எப்போதும் எதிர்கொள்கிறேன். கதைகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடச் செய்யும், கதைகள் பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் அஹிம்சையால் தலை குனியச் செய்யும், மாபெரும் தேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும்.

***

'வேர்களை மறத்தல்' என்ற எனது கருத்திற்கு திரு. கோவிக்கண்ணன் எதிர்வினை ஆற்றியிருந்தார். திரும்பவும் சொல்கிறேன் பெருமைகளை மட்டுமல்ல சிறுமைகளையும் ஒருவன் தெரிந்தே தீரவேண்டும். பாரம்பரிய பெருமைகள் உடையவன் அதைக் குலைக்காமல் நடந்துகொள்ளவும், ஒடுக்கப்பட்ட வரலாற்றினை உடையவன் தனக்கு நேர்ந்தது பிறிதொருவனுக்கு நேர்ந்துவிடாமல் போராடவும் நிச்சயம் வரலாறு அவசியம். "வரலாற்றினை மறப்பவர்கள் அதை திரும்பவும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும்" என்று ஒருவரும் "வரலாறு நமக்கு நினைவூட்டலாம், எச்சரிக்கலாம். ஆனால் தடுக்கக்கூடாது" என்று இன்னொருவரும் வார்த்தை யுத்தம் நடத்தியது என் நினைவூக்கு வருகிறது. ஒருவர் அடல் பிஹாரி வாஜ்பாய். இன்னொருவர் யாரென்று சரியாகச் சொல்பவருக்கு ஒரு முடியலத்துவம் பரிசு.

***

சுற்றுச்சுழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஓயிட்லி விருது இவ்வாண்டு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.டி மதுசுதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்காருக்கு நிகரான இவ்விருதுச் செய்தி பெரிதாகக் கொண்டாடப்படாதது எனக்கு பெரிய ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் ஒருசேர அளிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே நிகழும் போராட்டங்களைக் குறித்த அவரது ஆய்வுகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மதுசுதன் குறித்து முன்னணி இதழ் ஒன்றிற்காக நெடும் கட்டுரையொன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஒயிட்லி விருதின் இன்னொரு உபபிரிவிற்கான விருதைப் பெற்றிருப்பவர் கடல் ஆமைகளுக்காகப் போராடும் தமிழகத்தின் சுரஜா தாரிணி. காஞ்சிபுரத்துக்காரர்.

***

"எங்க தலைவரை எப்படியெல்லாம் திட்டினீங்க... ராஜம் கிருஷ்ணனுக்கு மூணு லெட்சம் கொடுத்ததப் பத்தி எதுனா எழுதினீங்களா...?" என்று கேட்டு எழுதியிருந்தார் ஒரு பெயரிலி.

ஐய்யா கனவானே, மூத்த குடிமக்களுக்காக தேசிய வங்கிகள் வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் ஆண்டொன்றுக்கு 12 %. அதன்படி மாதம் மூன்றாயிரம் ரூபாய் கிடைக்கும். சென்னையில் இந்தப் பணத்திற்கு ஒண்ட ஓரிடம் கிடைக்காது. சாப்பாடு, மருத்துவச் செலவுகளுக்கு எங்கே போவது? எழுத்தாளர்களும் சமூகத்திற்காக உழைத்து ஓய்ந்து போன தொழிலாளர்கள்தாம். எழுத்தாளர்கள் நல வாரியம் அமைத்து வறுமையின் பிடியில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்தால் மானத்தோடு சாவார்கள். படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை வைத்துக்கொண்டு குருவி ரொட்டிதான் வாங்க முடியும். இதுல உங்களுக்கு பாராட்டு வேற கேட்குதா?!

***
தமிழகம் எதிர்கொள்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் ஒட்டுமொத்த தீர்வு கிடைத்துவிட்டது. கடவுள் ஒன்றும் இரக்கம் இல்லாதவன் இல்லை. ஒருவழியாக நம் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்த்து ஒரு விடிவெள்ளியை அனுப்பி வைத்திருக்கிறார். இவர் ஊழலை, அராஜகத்தை ஒழிப்பார். எங்கள் உங்கள் வீதிகளில் பாலாறு ஓடும், கிழவிகள் பாம்படத்தைக் கழற்றி வீசி பறவையினங்களைத் துரத்துவார்கள், வயசுப்பெண்களோ பின் தொடரும் நாய்களை செல்போனை வீசி துரத்துவார்கள். பஞ்சம் எனும் வார்த்தையும் பசி எனும் வார்த்தையும் தமிழகராதியிலிருந்து நீக்கப்படும். குழந்தைத் தொழிலாளர்களின் விலங்குகள் உடைபடும். இந்தியக் கடன்களனைத்தும் அடைபடும்.

விடிவெள்ளி விஜயைத் தொடர்ந்து அல்வா வாசு, செல் முருகன், போண்டா மணி ஆகியோரும் அரசியலில் குதித்தால் உலக நாடுகளோடு, செவ்வாய் கிரகத்தையும் நமது காலணி நாடாக்கி விடலாமென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!

எழுத்தாளர்கள் தாண்டிய நெருப்புக்குண்டம்

சென்ற வாரம் காழியூர் நாராயணன் கணித்த ராசிபலனில் கன்னிராசி அன்பர்கள் எழுத்தாளர்களைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிடத் தவறிவிட்டார்.

***

தொன்னூறுகளின் மத்தியில் தமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்பாய்ச்சலாக அறிமுகமாகிய மூவேந்தர்கள் பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார் மற்றும் ரமேஷ் வைத்யா. இதில் ரமேஷ் வைத்யாவும், பாஸ்கர் சக்தியும் என்னை தம்பியாக தத்தெடுத்து வருடங்கள் ஆகிவிட்டன. க.சீ.சியைச் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தது. தேனியில் சந்தித்தேன்.

அவரது சிறுகதையொன்றின் "ஈடில்லாததும் வீடில்லாததுமான எங்கள் நாய்" எனும் ஆரம்பத்தை எண்ணி சிலாகித்து, சிலாகித்து... சரி அதை விடுங்கள். என் சுயபுராணம் பாடுகையில் அவர் புராணம் எதற்கு?! "முடியலத்துவம் எனும் வார்த்தைக்கே உன்னை முத்தமிடத் துடித்து... போன் நம்பர் தேடினேன். ஒரு பயலும் கொடுக்கலை" என்றார். "விடுங்கண்ணே... அம்புட்டுப் பயலுவளுக்கும் பொறாமை"ன்னேன்.

நாள் முழுக்க அவரோடு பேசிக்கொண்டிருந்த கதைகளனைத்தும் 'அன்பார்லிமெண்டரி'

***

பாஸ்கர் சக்தி வீட்டு முற்றத்தில் 'காவல்கோட்டம்' வெங்கடேசனைப் பார்த்ததும் மிரண்டு பக்கத்து வீட்டு படலையில் பாய்ந்தேன். காரணம்: காவல்கோட்டத்தைக் கொஞ்சம் சொறிந்து பதிவு போட்டிருந்த காரணத்தால்.

"வாங்க செல்வேந்திரன்... உங்க பிளாக் படிக்கிறேன். காவல்கோட்டம் பத்தி எழுதியிருந்தீங்க..." என்று முகமன் கூற "கிழிஞ்சுது..."என்று தயங்கி உட்கார்ந்து பேச துவங்கினேன்.

காவல்கோட்டம் நாவல் பத்தாண்டுகால கடுமையான உழைப்பிற்குப் பின் உருவானது. பலர் அதைப் படிக்காமலே விமர்சனம் செய்வதுதான் வருத்தம் தருகிறது என்றார். உண்மைதான். என்னை மாதிரி மழைக்காளான்கூட ஒரு பக்கம் படித்துவிட்டு 'கிரைண்டர் மொழி' என்று பதிவு போட்டால் வருத்தம் வரத்தானே செய்யும். நான் செய்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பது புரிந்தது.

நரித்தடத்தில் கால் பதிக்கும் முயற்சியில், பேசிக்கொண்டே வயல்வெளிகளினூடாக நடந்து... நடந்து சுடுகாட்டைச் சென்றடைந்தோம். அங்கே நாங்கள் செய்த காரியம் தமிழிலக்கியத்திற்குச் சம்பந்தம் இல்லாதது.

***

தங்கமணி பிரபு எனும் பிரமாதமான நண்பர் தேனியில் கிடைத்தார். சன் டி.வி கொஞ்சம் மானம், மரியாதையோடு இருந்த காலங்களில் 'நம்ம நேரம்' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்தவர். சின்னத்திரை நடிகர் விஸ்வாவும் இன்னொரு பெண்ணும் சகட்டு மேனிக்கு சண்டை போடுகிற நிகழ்ச்சி. மசாலா மிக்ஸ், கரோகி என்று அன்றைய தேதிக்கு பல புதுமைகளைப் புகுத்தி சுவாரஸ்யப்படுத்தியவர் தங்கமணி. தற்போது கோலங்கள் தொடரில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார். விளம்பரப்படங்கள் தயாரிக்கிறார்.

கடும் கவிதை உபாசகர். தவிர்த்து அருமையாக எழுதவும் செய்கிறார். கடை ஒன்றும் வைத்திருக்கிறார். பரிச்சயம் இல்லாததால் காத்தாடுகிறது. சமயம் கிடைத்தால் கொள்முதல் செய்யுங்கள்.

***

சின்னமனூர் ஸ்ரீதர் என்றால் பலருக்கும் தெரியாது. ராமேஸ்வரம் படத்தின் வசனகர்த்தா என்றால் ஜீவா ஆக்ரோசமாகப் பேசும் "அவர் யாரென்டு தெரியுமோ...?!" வசனங்கள் உங்கள் நினைவிற்கு வரலாம். தற்போது ரோஜாக்கூட்டம் தொடர் அவரது பேனாவண்ணத்தில்தான் பீடுநடை போடுகிறது.

ரமேஷ் வைத்யாவின் முன்னாள் அண்டை வீட்டுக்காரர். அத்தனை அனுசரனையாய் ரமேஷின் அம்மாவிற்கு உதவிகள் செய்வார். தோளில் சுமந்து சிலிண்டர் கொண்டுவந்து கொடுப்பதைக் கண்ணால் கண்டிருக்கிறேன். இவரெல்லாம் அவர் அருகில் இருக்கும்போது எனக்கு எந்தக் கவலைகளும் இருந்ததில்லை.

***

உயிர்மையின் மூலமாக நரன் எனும் பெயர் பரிச்சயம். வடகரை அண்ணாச்சியின் புண்ணியத்தில் ஒரு பொன்மாலைப் பொழுதில் நரனைச் சந்தித்தேன். நவீன கவிதை என்கிற சமாச்சாரத்தில் நான் 'தோத்தாங்குளி' என்பதால் சர்வஜாக்கிரதையாகக் கவிதையல்லாத விஷயங்களை அளவளாவினோம்.

நரன் சொன்ன எல்லா விஷயங்களையும் வாராவாரம் தொடராக எழுதினால் எந்தப் பத்திரிகையின் சர்குலேஷனும் பிச்சுக்கும். அவரும் கடை விரித்திருக்கிறார்.

***

சு. லெட்சுமணப்பெருமாள் பேசத் துவங்கினால், சகல ஜீவராசிகளுக்கும் சிரிப்பாணி பொத்துக்கொண்டு வரும். இத்தனைக் கதைகளை இவர் எங்கே பிடிக்கிறார் என்று ஆச்சர்யம் வருகிறது. இவருக்கும் எங்களைப் போல குலத்தொழில் தீப்பெட்டி என்பதால் சில வியாபாரத் தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

***
'தமிழ் எழுத்தாளர்கள் கோழைகள்' என்கிற ரீதியில் வெளியான பேட்டியினையும், அதன் பின் வெளியான சூடான மறுப்பினையும் தொடர்ந்து நூல் பிடித்து தமிழ்நதியைப் பின் தொடர்கிறேன். சில சல்லிப்பதிவன்களால் என்னிடத்திலும் கொஞ்சம் அச்சத்தோடே பேசத் துவங்கினார். நானொரு பச்சைப்பயல் என்பதை இந்நேரம் கண்டுகொண்டிருப்பார்.

கேண்டிக்கு ரொம்பவும் பிரியமான எழுத்தாளர் தமிழ்நதி. பரஸ்பரம் இருவரும் விரும்பியும் ஒருவரையொருவர் சந்திக்க இயலாமல் போய்விட்டது. விருந்தாளி அவர்தான் என்றபோதும் எனக்கு விருந்தோம்பல் செய்துகொண்டே இருந்தார். பதில் மரியாதையாக லொட, லொடத்துக்கொண்டே இருந்தேன்.

***
இயக்குனர் திருமுருகனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். 'அட... நீங்கதான் செல்வேந்திரனா?! உங்க எழுத்துக்களோட பரம ரசிகன் சார் நானு... உங்களை சந்திப்பேன்னு நெனச்சுக்கூட பாக்கல... ரொம்ப பட படப்பா இருக்கு...' என ஓடோடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டார் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். கவிதையெல்லாம் எழுதுவார் என்று சொன்னதும் வேறு அறைக்கு மாறிக்கொண்டார்.

Sunday, June 21, 2009

என்னுரை


அனைவருக்கும் வணக்கம்.

எழுத்துலகில் தவழும் குழந்தையான என்னை இங்கே பேச அழைத்திருப்பது பாஸ்கர் சக்தி என் மீது கொண்டிருக்கும் அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகவேக் கொள்கிறேன். முன்மேடை சம்பிரதாயங்கள் நீண்டபடி இருக்க பின்னிருக்கையில் அமர்ந்து மாணவர் கணேசன் எழுதிய புத்தகத்தைப் படித்து முடித்தேன். பத்திரிகைகளில் வந்த அறிவியல் துணுக்குகளைத் தானே தொகுத்திருக்கிறான் என்று அலட்சியத்தோடு அணுகிய நான் ஆச்சர்யப்பட்டுப்போனேன். அந்த ஆச்சர்யங்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெலட்டின் என்பது தூய கொழுப்பாம். ஆம், கொழுப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கின்ற இடங்களில்தானே இன்றைக்கு ஜெலட்டின்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. சுத்தமான தங்கத்தை கையால் பிசையலாம், சுப்பிரமணியசிவா பிறந்த ஊர் வத்தலக்குண்டு, நமது தேசிய பழம் மாம்பழம் ஆகிய தகவல்கள் எனக்கு நிச்சயம் புதுசு. இந்தப் புத்தகத்திற்குப் பின் இருக்கிற மாணவன் கணேசனின் உழைப்பு சாமான்யமானதல்ல என்பது புத்தகம் முழுவதும் நிரம்பி இருக்கிற ஆச்சர்யங்களில் தெரியவருகிறது. அவரைப் போலவே வளர்ந்து வரும் சக எழுத்தாளனாக எனது பேனாவை தம்பி கணேசனுக்கு பரிசளிக்கிறேன். இந்தப் பேனா என் எழுத்துக்களுக்காக எனக்குக் கிடைத்த முதல் பரிசு. நேற்று என் விடுதியறை ஏகிய நண்பனொருவன் பரிசளித்துச் சென்ற பேனா இது.

விழா துவங்குகையில் திடீரென்று மின்சாரம் தடைபட்டது. என் பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன் "சார் தலையக் குனிஞ்சுக்கங்க... மேடையில் பூரா வாத்திமாரா இருக்காங்க... பயலுக கல்லை, கில்லை தூக்கி ஏறிஞ்சுட போறானுங்க. இருட்டுல எவன் பண்ணினான்னும் தெரியாது." அதைச் சொன்னதற்காக வெட்கப்படுகிறேன். ஆசிரியர்கள் பரிசு வாங்கும்போது இத்தனைக் கொண்டாட்டமாய் ஆரவாரம் செய்கிற மாணவர்களை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தவிர, ஓர் இலக்கியக் கூட்டத்தில் இத்தனைச் சிறார்கள் இருப்பதும் வேறெங்கும் காணக்கிடைக்காதது.

முத்தாலம்மன் பள்ளி. என்னய்யா பள்ளிக்கூடம் இது? பத்தாம் வகுப்பு துவங்கிய முதல் வருடத்திலேயே நூறு சதவீத தேர்ச்சி அதிலும் எட்டு மாணவர்கள் 450க்கு மேல். கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு தங்க மோதிரம் பரிசு. வெளியூர் பள்ளிக்கூடங்களில் படித்து நல்ல மார்க் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு. நாளொன்றுக்கு குறைந்தது பத்து பள்ளிக்கூடங்களுக்காவது பணிநிமித்தம் போகிறேன். இத்தனை ஜனநாயகமான பள்ளியை வேறெங்கும் பார்த்ததில்லை. கல்வி முற்றிலும் வணிகமயமாகிப் போன சூழலில், வகுப்பில் ஒரு மாணவன் படித்த விஷயங்களைக் குறிப்பெடுக்கிறான். அவனைப் பாராட்டுகிற ஆசிரியர் தன் முயற்சியில் அதைப் புத்தகமாய்க் கொண்டுவந்து பெரும்சபைதனில் அதை வெளியிட்டு, பாராட்டி, பரிசளித்து.... நானெல்லாம் கவிதை எழுதுவது குற்றமென்று கருதப்படுகிற கல்விச் சுழலிலிருந்து வந்தவன். ஒருவேளை முத்தாலம்மன் பள்ளியில் படித்திருந்தால் என்னாலும் ஒரு புத்தகம் போட்டிருக்க முடியுமோ என்னவோ?!

பாஸ்கர்சக்தியைப் பற்றிப் பேசும் அளவிற்கு நான் இலக்கியவாதியும் அல்ல. இலக்கிய வாசகனும் அல்ல. என்னளவில்,

பாஸ்கர் என்றால் அன்பு

பாஸ்கர் என்றால் கண்ணியம்

பாஸ்கர் என்றால் உற்சாகம்

பாஸ்கர் என்றால் ஊக்கம்

பாஸ்கர் என்றால் நகைச்சுவை

இந்தத் தருணத்தில் பாஸ்கர் சக்தி எனும் தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையொன்றின் பத்தியை இங்கே நினைவு கூர்கிறேன்.

"பாஸ்கர் சக்தி வெண்ணிலா கபடிக்குழுவில்தான் வெளிப்பட்டிருக்கிறார். அவரது எழுத்துக்களில் உள்ள சிரிப்பை நகைச்சுவை அங்கதம் என்றெல்லாம் சொல்லமுடியாது. அது ஒருவகை குசும்பு. தேனி வட்டார ஆட்களுக்கு அந்த ‘ங்ய‘ உச்சரிப்பின் மூலம் அந்தக்குசும்பை உருவாக்க முடியும். பாலாவிடம் அது உண்டு. இயக்குநர் சிங்கம்புலி அதில் ஒரு மாஸ்டர். ஏன்,நான்கடவுளின் ‘எலி‘ செந்தில் கூட அபாரமான குசும்பு உள்ளவன்தான்.
பலகாட்சிகளில் அந்த ‘நாட்டுக்‘ குசும்பு வெளிப்படுவதை அரங்கில் ரசிகர்கள் சிரித்து மகிழ்வதைக் கண்டேன். வசனம் என்னும்போது அது வசனம் மட்டுமல்ல, அந்தச்சந்தர்ப்பத்தை எழுதியமைத்திருக்கும் விதம்தான். குறிப்பாக அந்த பரோட்டா வீரரின் மனைவியும் அவரும் பேசிக்கொள்ளும் இடங்களைச் சொல்லலாம்.
எழுத்தாளராக பாஸ்கர் சக்தி தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்களிப்பை ஆற்றமுடியும். வாழ்த்துக்கள்."
எழுத்தின் சகல பரிமாணங்களிலும் பாஸ்கர் பல வெற்றிகளைக் குவிப்பார் என நானும் வாழ்த்தி அமைகிறேன். வணக்கம்.
தேனி இலக்கிய விழாவில் நான் பேசியவற்றில் என் ஞாபக அறைகளிலிருந்து சேகரம் செய்து எழுதி இருக்கிறேன். இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப அவசியமா என்று கேட்கக்கூடாது. நானெல்லாம் எழுத்தாளனாக்கும் என்ன எழுதினாலும் நீங்க படிச்சுத்தானே ஆகணும்?!

Saturday, June 13, 2009

அறிவிப்பு

நமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது வெளிநாடுகளில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. என்னதான் இந்தியா பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கையோ, நாக்கையோ நுழைக்காது என்றாலும் நாம் அப்படி இருந்துவிட முடியுமா?! குறைந்தபட்சம் ரூம் போட்டு அழலாம் என்று போனால் சிங்கிள் 1200/- டபுள் 2500/- என்கிறார்கள். சிக்கன நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு எங்கேயாவது குளக்கரையில் உட்கார்ந்து கதறலாம் என்று முடிவு செய்து ஊர் முழுக்க திரிந்தேன். எல்லா குளங்களையும் பிளாட் போட்டு விட்டார்கள்.

அஞ்சுகிராமம், பூதப்பாண்டி, வட்டக்கோட்டை பகுதிகளில் கொஞ்சம் தாமரை பூத்த குளங்கள் இருப்பதால் நாளை (14-06-09) மதியம் வரை குளக்கரைகளிலும், மாலை கன்னியாகுமரி கடற்கரையிலும் நின்று கதறி அழுவதாக உத்தேசம். நாளைய தினம் எதையும் கிழித்தோ, நெம்பியோ, புரட்டியோ போட வேண்டிய கட்டாயம் இல்லாத நாஞ்சில் நாட்டு பதிவர்கள் எவரேனும் வந்தால் 'சிறப்பு கூட்டுக் கதறலு'க்கு ஏற்பாடு செய்யலாம்.நன்றி. வணக்கம்.

Monday, June 8, 2009

மாமுனி விஜயம்

கலை மாமணி விருது பெற்றமைக்காக எழுத்தாளர் பாஸ்கர் சக்திக்கு அவரது சொந்த கிராமமான வடபுதுப்பட்டி மக்கள் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். 09-06-09 - செவ்வாயன்று நிகழ இருக்கும் மேற்படி விழாவில் 'காவல் கோட்டம்' சு. வெங்கடேசன், சு. லட்சுமணப்பெருமாள், தமிழ்நதி, க.சீ. சிவக்குமார், ஜே. ஷாஜகான் இவர்களோடு தமிழ்க்கவிதையில் புதுப்பாய்ச்சல் நிகழ்த்தி வரும் 'முடியலத்துவ மாமுனி'யும் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

தேனி பகுதியைச் சார்ந்த பதிவர்கள் பரிசுப் பொருட்களுடன் வரவேண்டிய முகவரி:

செளந்தரராஜப் பெருமாள் கோவில் - வடபுதுப்பட்டி
நேரம்: மாலை 6.00 மணி

Friday, June 5, 2009

எதை நீங்கள் நாடகத்தனம் என்கிறீர்கள்?

எதை நீங்கள் நாடகத்தனம் என்கிறீர்கள்?

நாகரீகம் (அ) கெளரவம் போன்ற காரணங்களுக்காகச் செய்யும் இயல்பை மீறிய செயல்களையும், வாழ்வியல் தேவைகளுக்கான வேடிக்கை மிகுந்த பிரயத்தனங்களையும் நாடகத்தனமென்று நான் கருதிக்கொள்கிறேன்.

அன்றாட வாழ்வில் நாடகத்தனம் இருக்கிறதா?

ஆம்; சர்வ நிச்சயமாக இருக்கிறது.

எங்கெல்லாம் இருக்கிறது?

ஒன்றிற்கு மேற்பட்ட மனிதர்கள் சேர்ந்து வாழ தலைப்பட்ட எல்லா இடங்களிலும்.

உதாரணங்கள்

இந்த உரையாடல் அல்லது இதன் நோக்கம்கூட.

நீங்கள் நாடகத்தனத்தோடுதான் உரையாடிக்கொண்டிருக்கிறீர்களா?

ஆம்; கொஞ்சம் சிக்கலாக யோசித்துப்பார்த்தால் பூமியின் சகலபாகங்களிலும் நாடகத்தன்மை வழிந்து கொண்டிருக்கிறது.

எதை நீங்கள் அதிகபட்ச நாடகமென்பீர்கள்?

கடவுள் பக்தி

அதற்கடுத்து?

காதல்

காதலில் நாடகத்தனமா?

ஆம்; அது காதலைச் சொல்கையில் துவங்கி விடுகிறது.

நாடகத்தனம் தேவைதானா ஆம் எனில் அதன் அளவுகோலாக தாங்கள் நினைப்பது?

நாடகத்தனம் ஒரு சமூக உயவுப்பொருள். அளவுகோல்: 'புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்'

குடும்ப வரலாறு அத்தனை முக்கியமானதா?

எல்லா வரலாறும் முக்கியமானது. குடும்ப வரலாற்றினையாவது தெரிந்துகொள்வது குறைந்தபட்ச தகுதி.

தமிழ் வாழ்வியலில் போலித்தனங்கள் மிகுந்திருக்க காரணங்கள் இருக்கிறதா?

நாடகக்காரர்கள் சினிமாக்காரர்களாக அவதாரம் எடுத்தார்கள். பின் அவர்களே அரசியல் தலைவர்களானார்கள். அதனால்தான் சினிமாவிலும், அரசியல் மேடைகளிலும் மிகை உணர்ச்சி நாடகங்கள் நிகழ்ந்தேறின. தமிழர்களின் வாழ்வில் சினிமாவும் அரசியலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தனித்து சொல்ல வேண்டியதில்லை.

மலேசியாவில் இருக்கும் ராஜஸ்ரீயோடு சாட்டில் நிகழ்த்திய உரையாடலை எழுதுவதற்கு எதுமற்ற காரணத்தினால் பதிவாக்கி இருக்கிறேன். அசுவாரஸ்யமில்லையென்றால் சொல்லுங்கள். மீதத்தையும் பதிவிடுகிறேன்.

Thursday, June 4, 2009

கேள்விகள்

பெயர் குறித்து...

மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில் முருகன், கணேசன், சுடலை, கருப்பசாமி போன்ற அதிகம் புழக்கத்தில் இருக்கிற தென்மாவட்ட பெயர்களை வைக்காமல் கொஞ்சம் 'யூனிக்'கான பெயரைப் பெற்றோர்கள் தேர்வு செய்ததால்.

கடைசி அழுகை...

பிரபாகரனின் மரணச்செய்தி கேட்டு

கையெழுத்து...

அது நாளுக்கொரு வேடம் போடுகிறது. பிடிக்கவில்லை.

மதிய உணவு...

சூடான சாதமும் அதை விட சூடாக மீன் குழம்பும்.

நட்பு குறித்து...

நானொரு நயவஞ்சகன். பெரும்பாலும் சுயலாபங்கள் கருதி.

குளியல்...

ஓடையில் அல்லது தாமரை பூத்த தடாகங்களில்

ஒருவரைப் பார்க்கும்போது எதை கவனிப்பீர்கள்?

நான் போலீஸ் அல்ல. எதையும் கவனிக்க மாட்டேன்.

பிடித்தது...

சக மனிதன் மீதான அன்பு

பிடிக்காதது...

பொறாமையும், பொய்யும்

துணையிடம் பிடித்ததும் பிடிக்காததும்...

பக்த மீராவைப் போன்ற அன்பு (இரண்டுக்கும் ஓரே பதில்)

அருகாமை குறித்த ஏக்கம்...

அப்பா

அணிந்திருக்கும் ஆடை...

முதுகுப்பக்கம் கிழிந்த வெள்ளை பனியனும், அதே நிற அரைக்கால் சட்டையும்

பாடல்...

'ஒரு வெட்கம் வருதே...வருதே...'

வர்ண பேனாவாக மாறினால்...

கடல் நீலம்

பிடித்த மணம்...

ஆரஞ்சு சுளையைப் பிரிக்கையில் வரும் மணம்.

நீங்கள் அழைக்கப்போகும் நபர்கள்...

யாரையும் அழைக்கப்போவதில்லை. காரணம் பல கேள்விகள் அபத்தம்.

பிடித்த பதிவு...

கார்க்கியின் குறும்படம்

பிடித்த விளையாட்டு...

கிரிக்கெட்

கண்ணாடி அணிபவரா...

இல்லை

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

வாழ்க்கைக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் படங்கள்

கடைசி படம்...

பசங்க

பருவகாலம்...

மார்கழி

படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்...

'ஹூ வில் க்ரை வென் யூ டை'

டெஸ்க்டாப் படம்...

அடுத்த நல்லபடத்தை தாமிரா எடுக்கும் வரை

பிடித்த சத்தம்...

தப்புச் சத்தம்

பிடிக்காத சத்தம்...

'க்ரீச்..'

அதிகபட்ச தொலைவு...

மைசூர்

தனித் திறமை...

பதட்டமின்றி பொய் சொல்வது

ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம்...

குழந்தை தொழிலாளர்கள்

உள்ளிருக்கும் சாத்தான்...

காமம்

சுற்றுலா தலம்...

ஆபிஸ்

ஆசை...

எல்லோராலும் விரும்பப்படுபவனாக வாழ

மனைவி..
.
திருமணமாகவில்லை

வாழ்வு பற்றி...

'அறுபது வருட சமரசம்'

***
தாமிரா என் மீது கொண்டிருக்கும் அன்பின் அத்தனை சலுகையையும் எடுத்துக்கொள்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன். அவர் சொல்லி நான் செய்கிற முதல் காரியம் அனேகமாக இதுதான். 'ஆமூகி' பெயரிலேயே எழுத வலியுறுத்தியதன் மூலம் அவருக்கு பெருந்துரோகம் செய்த அவஸ்தை எனக்கு. தாமிரா என்ற பெயர்தான் அவருக்கு பொருத்தம்.

Wednesday, June 3, 2009

சகஹிருதயர்களே!

நீயா? நானா? - 1

நீயா? நானா? - 2

இந்த வரிகளைத் தட்டச்சு செய்யும் நிமிடத்தில், விடாது ஓலிக்கும் என் செல்ஃபோனை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொள்கிறேன். ஞாயிறு இரவிலிருந்து இப்படித்தான் இது ஓலித்துக்கொண்டிருக்கிறது. உறவினர்கள், ஊர்க்காரர்கள், பள்ளித் தோழர்கள், எழுத்தாள நண்பர்கள், சக ஊழியர்கள், ஊடக நண்பர்கள், பதிவுலக சொந்தங்கள் என்று எத்தனையெத்தனை பேர்கள்?! பல பேர்களிடம் முதல் முறையாக இபோதுதான் பேசுகிறேன். அத்தனை உரிமையாக என்னிடத்தில் தங்களது வாழ்த்துக்களையும், விமர்சனங்களையும் சுட்டி விட்டுப் போகும் இவர்களை நினைத்து நானும் சொல்கிறேன் 'என்ன தவம் செய்தனை?'

நள்ளிரவு முழுவதும் பேசித் தீர்த்துவிட்டு விடிகாலையில் கணிணியைத் திறந்தால் நான்கைந்து நண்பர்கள் வீடியோவுடன் பதிவுகள் போட்டிருந்தார்கள். ஆச்சர்யம் தீரவில்லை. இவைகளைத் தவிர்த்து குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், நேரில் என சகல வழிகளிலும் எனக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

தொலைபேசியில் பல பதிவர்களின் மனைவிமார்கள் நன்றி சொன்னார்கள். நம்மைச் சுற்றியுள்ளவர்களைக் கவனிக்காமல் ஆர்க்குட்டிலும், ஃபேஷ் புக்கிலும், பதிவுலகிலும் நண்பர்களைத் தேடி அலைவதைப் பதிவு செய்தமைக்காகத்தான் இந்த நன்றிகள். "ஆபிஸ் விட்டு வந்ததும் நேரே கம்யூட்டர்தாங்க. நடுராத்திரி ஆனாலும் எந்திரிக்கறதில்லை. சாப்பிட்டியா, பசங்க சாப்பிட்டாங்களான்னு கூட கேட்பதில்லை. இப்ப உங்க செல்வேந்திரனே சொல்லிட்டாரு... திருந்துற வழிய பாருங்கன்னு சொல்லிருக்கேன்" என்றொரு மிஸர். பதிவர் சொன்னபோது சிரிப்பு வந்தது. நம் வீட்டுப் பெண்கள் விரும்புவதெல்லாம் அன்பான விசாரணைகளும், அனுசரணையான பேச்சும்தானே? 'மவனே, உனக்கென்ன நீ ஈஸியா சொல்லிட்ட... கல்யாணமானா தெரியும்' என்று என்னிடத்தில் முண்டாவை முறுக்கியவர்களும் உண்டு. அவர்களுக்கு என் ஓரே பதில் 'அன்பானவர்களிடம் அடங்கித் தோற்றுவிடுவதே நன்று'.

வெளியூர்ப் பிரயாணம் முடித்து அவசரமாக வீடு திரும்புகையில், கார் ரிப்பேராகி நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் டிவி இருக்கிற விடுதியறையை வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சியைப் பார்த்தவர், வீட்டு டி.வி ரிப்பேராகிவிட முடி திருத்துனர் கடையை திறக்கச் சொல்லி நிகழ்ச்சியைப் பார்த்தவர், உள்ளூர் கேபிளில் விஜய் வராததால் டி.டி.எச் வாங்கியவர் என்று நெகிழ வைக்கும் சம்பவங்கள் ஏராளம். யாரையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிற நிலையில் இல்லை. 'பேரன்புத் திணறல்' எனும் நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனி மடல் நன்றிகளை அனுப்பும் பெருவேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.

தங்களில் ஒருவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அதைத் தனக்கே கிடைத்ததெனக் கொண்டாடும் என் சகஹிருதயர்களே, இவன் என் நண்பன் என நீங்கள் உற்சாகமாய்ச் சொல்லிக்கொள்ளும்படியானக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுவதொன்றே என் நன்றியைக் காட்டும் வழியென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!