Monday, June 22, 2009

எழுத்தாளர்கள் தாண்டிய நெருப்புக்குண்டம்

சென்ற வாரம் காழியூர் நாராயணன் கணித்த ராசிபலனில் கன்னிராசி அன்பர்கள் எழுத்தாளர்களைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிடத் தவறிவிட்டார்.

***

தொன்னூறுகளின் மத்தியில் தமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்பாய்ச்சலாக அறிமுகமாகிய மூவேந்தர்கள் பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார் மற்றும் ரமேஷ் வைத்யா. இதில் ரமேஷ் வைத்யாவும், பாஸ்கர் சக்தியும் என்னை தம்பியாக தத்தெடுத்து வருடங்கள் ஆகிவிட்டன. க.சீ.சியைச் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தது. தேனியில் சந்தித்தேன்.

அவரது சிறுகதையொன்றின் "ஈடில்லாததும் வீடில்லாததுமான எங்கள் நாய்" எனும் ஆரம்பத்தை எண்ணி சிலாகித்து, சிலாகித்து... சரி அதை விடுங்கள். என் சுயபுராணம் பாடுகையில் அவர் புராணம் எதற்கு?! "முடியலத்துவம் எனும் வார்த்தைக்கே உன்னை முத்தமிடத் துடித்து... போன் நம்பர் தேடினேன். ஒரு பயலும் கொடுக்கலை" என்றார். "விடுங்கண்ணே... அம்புட்டுப் பயலுவளுக்கும் பொறாமை"ன்னேன்.

நாள் முழுக்க அவரோடு பேசிக்கொண்டிருந்த கதைகளனைத்தும் 'அன்பார்லிமெண்டரி'

***

பாஸ்கர் சக்தி வீட்டு முற்றத்தில் 'காவல்கோட்டம்' வெங்கடேசனைப் பார்த்ததும் மிரண்டு பக்கத்து வீட்டு படலையில் பாய்ந்தேன். காரணம்: காவல்கோட்டத்தைக் கொஞ்சம் சொறிந்து பதிவு போட்டிருந்த காரணத்தால்.

"வாங்க செல்வேந்திரன்... உங்க பிளாக் படிக்கிறேன். காவல்கோட்டம் பத்தி எழுதியிருந்தீங்க..." என்று முகமன் கூற "கிழிஞ்சுது..."என்று தயங்கி உட்கார்ந்து பேச துவங்கினேன்.

காவல்கோட்டம் நாவல் பத்தாண்டுகால கடுமையான உழைப்பிற்குப் பின் உருவானது. பலர் அதைப் படிக்காமலே விமர்சனம் செய்வதுதான் வருத்தம் தருகிறது என்றார். உண்மைதான். என்னை மாதிரி மழைக்காளான்கூட ஒரு பக்கம் படித்துவிட்டு 'கிரைண்டர் மொழி' என்று பதிவு போட்டால் வருத்தம் வரத்தானே செய்யும். நான் செய்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பது புரிந்தது.

நரித்தடத்தில் கால் பதிக்கும் முயற்சியில், பேசிக்கொண்டே வயல்வெளிகளினூடாக நடந்து... நடந்து சுடுகாட்டைச் சென்றடைந்தோம். அங்கே நாங்கள் செய்த காரியம் தமிழிலக்கியத்திற்குச் சம்பந்தம் இல்லாதது.

***

தங்கமணி பிரபு எனும் பிரமாதமான நண்பர் தேனியில் கிடைத்தார். சன் டி.வி கொஞ்சம் மானம், மரியாதையோடு இருந்த காலங்களில் 'நம்ம நேரம்' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்தவர். சின்னத்திரை நடிகர் விஸ்வாவும் இன்னொரு பெண்ணும் சகட்டு மேனிக்கு சண்டை போடுகிற நிகழ்ச்சி. மசாலா மிக்ஸ், கரோகி என்று அன்றைய தேதிக்கு பல புதுமைகளைப் புகுத்தி சுவாரஸ்யப்படுத்தியவர் தங்கமணி. தற்போது கோலங்கள் தொடரில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார். விளம்பரப்படங்கள் தயாரிக்கிறார்.

கடும் கவிதை உபாசகர். தவிர்த்து அருமையாக எழுதவும் செய்கிறார். கடை ஒன்றும் வைத்திருக்கிறார். பரிச்சயம் இல்லாததால் காத்தாடுகிறது. சமயம் கிடைத்தால் கொள்முதல் செய்யுங்கள்.

***

சின்னமனூர் ஸ்ரீதர் என்றால் பலருக்கும் தெரியாது. ராமேஸ்வரம் படத்தின் வசனகர்த்தா என்றால் ஜீவா ஆக்ரோசமாகப் பேசும் "அவர் யாரென்டு தெரியுமோ...?!" வசனங்கள் உங்கள் நினைவிற்கு வரலாம். தற்போது ரோஜாக்கூட்டம் தொடர் அவரது பேனாவண்ணத்தில்தான் பீடுநடை போடுகிறது.

ரமேஷ் வைத்யாவின் முன்னாள் அண்டை வீட்டுக்காரர். அத்தனை அனுசரனையாய் ரமேஷின் அம்மாவிற்கு உதவிகள் செய்வார். தோளில் சுமந்து சிலிண்டர் கொண்டுவந்து கொடுப்பதைக் கண்ணால் கண்டிருக்கிறேன். இவரெல்லாம் அவர் அருகில் இருக்கும்போது எனக்கு எந்தக் கவலைகளும் இருந்ததில்லை.

***

உயிர்மையின் மூலமாக நரன் எனும் பெயர் பரிச்சயம். வடகரை அண்ணாச்சியின் புண்ணியத்தில் ஒரு பொன்மாலைப் பொழுதில் நரனைச் சந்தித்தேன். நவீன கவிதை என்கிற சமாச்சாரத்தில் நான் 'தோத்தாங்குளி' என்பதால் சர்வஜாக்கிரதையாகக் கவிதையல்லாத விஷயங்களை அளவளாவினோம்.

நரன் சொன்ன எல்லா விஷயங்களையும் வாராவாரம் தொடராக எழுதினால் எந்தப் பத்திரிகையின் சர்குலேஷனும் பிச்சுக்கும். அவரும் கடை விரித்திருக்கிறார்.

***

சு. லெட்சுமணப்பெருமாள் பேசத் துவங்கினால், சகல ஜீவராசிகளுக்கும் சிரிப்பாணி பொத்துக்கொண்டு வரும். இத்தனைக் கதைகளை இவர் எங்கே பிடிக்கிறார் என்று ஆச்சர்யம் வருகிறது. இவருக்கும் எங்களைப் போல குலத்தொழில் தீப்பெட்டி என்பதால் சில வியாபாரத் தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

***
'தமிழ் எழுத்தாளர்கள் கோழைகள்' என்கிற ரீதியில் வெளியான பேட்டியினையும், அதன் பின் வெளியான சூடான மறுப்பினையும் தொடர்ந்து நூல் பிடித்து தமிழ்நதியைப் பின் தொடர்கிறேன். சில சல்லிப்பதிவன்களால் என்னிடத்திலும் கொஞ்சம் அச்சத்தோடே பேசத் துவங்கினார். நானொரு பச்சைப்பயல் என்பதை இந்நேரம் கண்டுகொண்டிருப்பார்.

கேண்டிக்கு ரொம்பவும் பிரியமான எழுத்தாளர் தமிழ்நதி. பரஸ்பரம் இருவரும் விரும்பியும் ஒருவரையொருவர் சந்திக்க இயலாமல் போய்விட்டது. விருந்தாளி அவர்தான் என்றபோதும் எனக்கு விருந்தோம்பல் செய்துகொண்டே இருந்தார். பதில் மரியாதையாக லொட, லொடத்துக்கொண்டே இருந்தேன்.

***
இயக்குனர் திருமுருகனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். 'அட... நீங்கதான் செல்வேந்திரனா?! உங்க எழுத்துக்களோட பரம ரசிகன் சார் நானு... உங்களை சந்திப்பேன்னு நெனச்சுக்கூட பாக்கல... ரொம்ப பட படப்பா இருக்கு...' என ஓடோடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டார் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். கவிதையெல்லாம் எழுதுவார் என்று சொன்னதும் வேறு அறைக்கு மாறிக்கொண்டார்.

15 comments:

ச.பிரேம்குமார் said...

ஆகா! எலக்கியவாதிங்க எல்லாம் சேர்ந்துட்டீங்களா :)

Raghavendran D said...

//நவீன கவிதை என்கிற சமாச்சாரத்தில் நான் 'தோத்தாங்குளி'//

உங்களுக்கு ரொம்பதான் அடக்கம் செல்வா.. :-))

லவ்டேல் மேடி said...

கலக்குறிங்க குரு... வாழ்த்துக்கள்....!!!!


இந்த வாரம் காளியூர் நாராயணன் சொன்னாரா.....?? உங்களுக்கு புகழாரம் சேர்க்கும் வாரமென.....???

மாதவராஜ் said...

ரசித்துப் படித்தேன். இதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் க.சீ.சிவக்குமார், சு.வெங்கடேசன், லட்சுமணப்பெருமாள் ஆகியோர் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பது கூடுதல் சுவாரசியம்.
வழக்கமான சிறு சுய எள்ளலுடன் கூடிய பதிவு.

தண்டோரா said...

சுவாரசியம்..அருவி நடை..தம்பிக்கு காலை வணக்கமும்,வாழ்த்துக்களும்..

பைத்தியக்காரன் said...

செல்வா,

முதல் முந்நூறு பக்கங்களை கடப்பதுதான் 'காவல் கோட்டத்தின்' சவால். அதைத் தாண்டிவிட்டால் வாசிப்பவர்களை இழுத்துச் சென்றுவிடும்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தமிழ்நதி said...

'கேண்டி'என்பது யார்? என்னை யாருக்கெல்லாம் பிடிக்கும் என்பதை அறியும் ஆவல்தான்:)

ஸ்ரீதர் said...

காவல்கோட்டம் பற்றி நிறைய கேள்விப்பட்டாயிற்று.நேர்மறையாகவும் எதிர்மறையாகவும். புத்தகத்தின் அளவு சற்றே பயமுறுத்தினாலும் எப்படியும் படித்து விட வேண்டுமென்றிருக்கிறேன்.

மங்களூர் சிவா said...

/
தமிழ்நதி said...

'கேண்டி'என்பது யார்?
/

கேண்டி என்பது குச்சி மிட்டாய்!
:)

மங்களூர் சிவா said...

/
ச.பிரேம்குமார் said...

ஆகா! எலக்கியவாதிங்க எல்லாம் சேர்ந்துட்டீங்களா :)
/

ரிப்பீட்டு
:))

Karthikeyan G said...

//தொன்னூறுகளின் மத்தியில் தமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்பாய்ச்சலாக அறிமுகமாகிய மூவேந்தர்கள் பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார் மற்றும் ரமேஷ் வைத்யா.//

உங்களிடம் பிடித்தே இந்த நக்கல்தான். :-)

க. தங்கமணி பிரபு said...

அடப்பாவிகளா, மேடைலதான் பேசவுடலே! பின்னூட்டத்தகூடவா போடமாட்டீங்க?? ஒரு தரமான கலைஞன் எப்படித்தான் முன்னேறுவது?

செல்வேந்திரன் said...

வாய்யா பிரேமு,
ராகவேந்தரன், அடக்கமெல்லாம் ஒண்ணுமில்லை. சில கவிதைகளையெல்லாம் பலமாசம் ஊறப்போட்டு அடிச்சும் மண்டைக்கு ஏறல...
லவ்டேல், இதுல என்ன கலக்க வேண்டி இருக்கு... வீட்டுல 'சோவாறிப் பய'ங்கிறாய்ங்க
மாதவராஜண்ணே, வெங்கடேசன்கிட்ட உங்களைப் பத்திதான் ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தேன்.
தண்டோராண்ணே வாங்க.
பைத்தியக்காரண்ணே, ஏதும் உள்குத்தோட சொல்றீங்களா...:)
ஸ்ரீதர், உடனே படிச்சிட்டு தாங்க...
மங்களூர், கிர்ர்ர்ர்ர்ர்ர்
கார்த்திக்கேயன் நான் எங்க நக்கினேன்? இந்தியாடூடே இலக்கிய மலர் - சிறுகதைப் போட்டியிலிருந்து வரலாற்றை வாய் வலிக்க சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதால், பார்வர்ட் டூ தமிழிலக்கிய தேடல் இயந்திரம் 'ஜ்யோவ்'
தங்கமணி, எங்கேயோ பின்னூட்டம் போட்டுட்டு எங்கேயோ தேடினா எப்படி இருக்கும்?!

இரா.சிவக்குமரன் said...

...

க. தங்கமணி பிரபு said...

//"தங்கமணி, எங்கேயோ பின்னூட்டம் போட்டுட்டு எங்கேயோ தேடினா எப்படி இருக்கும்?!"//

ஹலோ, நாங்கதான் ப்ளாக்குக்கு ரெம்ப புதுசுன்னு முன்னமே சொன்னமே! அப்புறமும் ஏன் வார்றீங்க? வழிய கரெக்டா சொன்னா போய்கிடுவோம்ல!!