Saturday, October 25, 2008

வேப்ப மரம்; புளிய மரம்

பெருநகரில் பணத்தை துரத்த ஆரம்பித்த பின் சொந்த ஊரும் வாசனையும் மெல்ல நினைவை விட்டு அகல ஆரம்பித்திருக்கிறது. பிழைப்பைக் கொடுக்கும் ஊர்தான் சொந்த ஊர். பிழைப்பு கொடுப்பவர்கள் சொந்தக்காரர்கள். அவ்வூரின் கலாச்சாரமே நமது சொந்தக் கலாச்சாரம் என்றாகிப்போனது எனக்கு மட்டும் நேர்ந்திருக்காது என்று நம்புகிறேன். சொந்த ஊருக்குப் போவதற்குக் கூட தீபாவளியும், பொங்கலும் தேவையாய் இருக்கிறது. இதர காரணங்களுக்காக ஊருக்குச் செல்ல நிறுவனம் அனுமதியளிப்பதில்லை என்ற காரணம் ரொம்ப சவுகர்யமாக இருக்கிறது.

புதியதாய் ஒரு உடை வாங்கினால் பழைய உடைகளில் ஒன்றை இல்லாதவர்க்கு தானம் செய்ய வேண்டும் என்ற பிரக்ஞை உடையவனாய் சில காலம் இருந்தேன். ஆனால் போட்டுக் கழித்த பழைய உடைகளைப் பிறருக்கு கொடுப்பதில் 'அறச்சார்பு' இல்லை என்பதால் உணவைப் போலவே உடைகளையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சங்கல்பத்தில் சில மாதங்கள் உறுதியாக இருந்தேன். ஆனால், கண்ணைக்கவரும் தள்ளுபடி விளம்பரங்களில் சக விட்டில்களைப் போலவே நானும் பலியாகி பல்லாயிரம் இழந்தேன்.


சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு. அயலூரிலோ அவன் சட்டைக்குத்தான் மதிப்பு என்றொரு சொலவடை இருக்கிறது. அதுவும் கொள்ளைப் பணம் கொடுத்து உடை வாங்க நமக்கு சவுகர்யத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. என்னதான் சிந்தித்தாலும் எழுதினாலும் தகப்பனுக்கு உடை வாங்குகையில் மட்டும் சிக்கனம் எட்டிப் பார்ப்பது ஏதாவது ஒரு உளவியல் அல்லது பிறப்புக் கோளாறாகத்தான் இருக்குமோ?


எது எப்படியோ புத்தாடைகள், இனிப்பு பலகாரங்கள், நண்பர்களுக்கானப் பரிசுப்பொருட்களோடு கனத்த பையைக் கட்டிக்கொண்டு ஊர் செல்ல காத்திருக்கிறேன். இந்த முறையாவது குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு மேலாக ஊரில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்.


ஊர் போய் வந்த பின் 'எப்படி இருந்த ஊர்? இப்படி ஆயிடுச்சேன்னு?!' புலம்பல் கட்டுரை எழுதினா உங்க ஊருக்கே துரத்திடுவேன் என்கிறாள் கேண்டி. நெய்யில் மிதந்த அப்பத்திற்கு வடையின் வருத்தம் புரியுமா என்ன?!


"அன்பு கலக்காத ரொட்டி சுவைக்காது" என்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிபந்தனையற்ற பேரன்பை கலக்குங்கள். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

பணப் பிரச்சனை ('ப்' உண்டுதானே?!)

ஜே. கே. ரித்தீஷ். எத்தனையோ நடிகர்களைத் தந்திருக்கும் கோடம்பாக்கத்திற்கு ஒரு புதிய வரவு. விஜய டி. ராஜேந்தர் என்ற பெயரை தமிழ் ஊடகங்கள் எப்படி மிகவும் கேலிக்குறியதாக்கி இருக்கிறார்களோ அதைப்போலவே கேலிக்குறியப் பொருளாக்கப்பட்ட நாயகன்.

ஒரு சாமான்யனின் கதையான 'கானல் நீர்' என்ற கதையில் யதார்த்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவரை தமிழ் சினிமா ரசிகர்களும், விமர்சகர்களும், ஊடகங்களும் முற்றாகத் தவிர்த்தனர். அப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. பெரும் தோல்விகளுக்குப் பின் காணாமல் போய்விட்ட நடிகர்கள் எத்தனையோ பேரை கோடம்பாக்கம் கண்டிருக்கிறது. ஆனால் தன்னை ஒரு பராக்கிரமசாலியாக முன்னிறுத்தி பஞ்ச் டயலாக்குகளோடும் பாடல்களோடும் அதிரடி சண்டைக்காட்சிகளோடும் அவர் நடித்து வெளியான நாயகன் எனும் மசாலா படம் பெரு வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படத்திற்கு பூஜை போட்ட நாளிழிலிருந்தே ஜே. கே. ரித்தீஷ் மீதான மீடியாக்களின் கிண்டல் துவங்கி விட்டது. அவர் மவுண்ட் ரோட்டில் ஹோர்டிங் வைத்தது, எளியோர்க்கு உதவியது, நமக்கு நாமே மாமே மன்றங்கள் அமைத்தது, சினிமாத்துறையின் உள் விவகாரங்களில் தலையிட்டது, அவ்விவகாரத்தில் பாரதிராஜாவிடம் மன்னிப்புக் கேட்டது, மூக்கை அறுவைச் சிகிட்சை செய்தது என அவரது ஒவ்வொரு செய்கைகளும் கேலி செய்யப்பட்டது. அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் சிரிக்கும் அளவிற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அலைகள் வந்து அடித்துவிட்டுப் போகட்டுமே... பாறைகள் என்ன பதிலா சொல்கிறது என அவரும் பேசாதிருந்து விட்டார்.

சற்று அழகற்ற, மாநிறம் கொண்ட, கொஞ்சம் குள்ளமாக, பருத்த மூக்கு உடையவன் ஹீரோ ஆகக் கூடாது என்று இருக்கிறதா? அப்படியென்றால் அழகு, நல்ல உடற்கட்டு, சிவந்த நிறம், நடனம் ஆடும் திறன் இருப்பவன் மட்டும்தான் ஹீரோ ஆகவேண்டுமா. நிஜ வாழ்க்கையில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்கிறதா? அஜீத்தும் சூர்யாவும் ஏதாவது நலத்திட்டங்கள் செய்தால் புகழும் மீடியா, ஜே. கே. ரித்தீஷ்
யாருக்காவது உதவினால் மட்டும் 'ஸ்டண்ட்' , 'பப்ளிசிட்டி' என்று இகழ்வது ஏன்? த்ரிஷாவின் நற்பணி மன்றம் தலைப்புச் செய்தி ஆகிறது ஆனால் ஜே. கே. ரித்தீஷீக்கு ரசிகர் மன்றம் என்றால் ஏன் காமெடியாக்குகிறீர்கள்?

நடனம் ஆடத்தெரியாத பாக்கியராஜ் வெள்ளிவிழா நாயகன் ஆகவில்லையா? கரடு முரடானத் தோற்றம் கொண்ட ராஜ்கிரணின் வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் பணப்பெட்டிகளோடு தவம் கிடந்ததை இவர்கள் அறியாதவர்களா? எலும்புத் தோலுமான தனுஷ் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோவானது தெரியாதா? ஜே. கே. ரித்தீஷை ஊடகங்கள் விமர்சிப்பது கொடிய நுண்ணரசியல். நாம் தமிழர்கள். நமது பூர்வீக நிறமும் அடையாளமும் கொண்டவர் ஜே. கே. ரித்தீஷ். அவரைக் கேலி செய்வது மொத்த அழகற்றவர்களையும் கேலி செய்யும் நிற அரசியல். ஜே. கே. ரித்தீஷ் மீதானக் கேலியை அனுமதிப்பதும், அவைகளைப் படித்து நாம் சிரிப்பதும் நம்மை நாமே கேலி செய்வது போலத்தான். அழகானவன் தான் ஹீரோ என்றால் ஐரோப்பியனை அழைத்து வாருங்கள். நம் எல்லோரையும் விட அவர்கள்தான் சிகப்பு.
- பிரதியங்காரக மாசானமுத்து
வங்கி கணக்கு எண்: 000987654321 / ஐசிஐசிஐ வங்கி / ராம்நகர் கிளை

Friday, October 24, 2008

விரிப்போட்டார் தெரு

"அது என்னங்க 'விரிப்போட்டார் தெரு'ன்னு ஒரு தெரு. என்ன அர்த்தம்?!" என்றாள் கேண்டி. பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு எப்பாடு பட்டாவது விடை கண்டுபிடித்துச் சொல்வது ஆண்வர்க்கத்தின் புராண காலப் பழக்கம் என்பதால் நானும் விடை தேடிப் புறப்பட்டேன்.
சிலப்பதிகாரத்தில் கோவலனின் தந்தை மாநாய்கன். கண்ணகியின் தந்தை மாசாத்துவான். மாநாய்கன் என்றால் திரைகடல் ஓடி திரவியம் தேடும் வணிகன். மாசாத்துவான் என்றால் தரைவழி வாணிகம் புரிபவன் என்று பொருள். இவர்கள் வாணியச் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே வரலாற்று ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை சாத்தான்குளத்தில் வாணிய செட்டியார் என்றழைக்கப்படும் செட்டிமார்களின் குடும்பங்கள் சுமார் 3000 இருந்துள்ளது. அதன் அடையாளமாகத்தான் இன்றளவும் செக்கடி, செக்கடி புதுத்தெரு, செட்டியார் நடுத்தெரு, அருணாசலம் செட்டியார் காம்பவுண்டு, செட்டியார் மேலத் தெரு, செட்டியார் கீழத்தெரு, ஆறுமுகம் செட்டியார் காம்பவுண்டு போன்ற பலத் தெருக்கள் இருக்கின்றன.
செட்டியார்களின் குலத்தொழில் வணிகம். சாத்தான்குளத்துச் செட்டிமார்களும் கடல் மற்றும் தரை வழி வணிகத்தில் கோலோச்சி இருந்திருக்கின்றனர். தரைவழி வணிகம் புரிபவர்கள் வியாபாரத்திற்காகப் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்குச் செல்கையில் பொதிமாடுகளைப் பயன்படுத்தி உள்ளனர். அப்படிப் பயன்படுத்தும் பொதிமாடுகளின் முதுகில் பொருட்களின் சுமை அழுத்தாமல் இருக்க 'விரி' என்ற அழைக்கப்படும் மெல்லிய மெத்தைப் போன்ற விரிப்புகளை பயன்படுத்தி உள்ளனர். அந்த விரியை பெருமளவில் உற்பத்தி செய்பவர்கள் இருந்து வந்த தெருவே விரிப்போட்டார் தெரு என்றழைக்கப்பட்டு வந்துள்ளது. என்று அவளுக்கு விளக்கி முடித்தேன். 'ஏன்யா ஒரு பேச்சுக்கு கேட்டா இப்படியாய்யா சிலப்பதிகாரம், சீவசிந்தாமணின்னு மொக்கய போடுவ' என்றாள் கேண்டி.

Wednesday, October 22, 2008

பிஞ்சு

கண்காட்சிகள், டிரேடு ஃபேர்கள், புத்தகத் திருவிழாக்களில் ஸ்டால்களில் அமர்வது எனக்கு மிகவும் பிடித்தமானது. விற்பனை ஆகிறதோ இல்லையோ விதம் விதமான மனிதர்களை சந்திக்க உதவுகிற ஒரு வாய்ப்பாக அது இருக்கிறது. இந்த முறை புத்தகக்கண்காட்சி ஸ்டாலில் இருந்தபோது சுமார் ஏழு வயது குழந்தையொன்று "அங்கிள் யூ நோ... ஐயாம் எ பொயட்" என்றது. விழிகள் விரிய 'ஏங்கே நீ எழுதிய கவிதைகளில் ஒன்றை எழுது பார்க்கலாம்' என்றேன்.
There was a boy
Who was very coy
When he got a toy
He was filled with joy
என நான்கு வரி கவிதையை ஒரு நோட்டீஸின் பின்பக்கம் எழுதி வைத்துவிட்டு ஓடி மறைந்து விட்டது அக்குழந்தை. எளிய அந்தக் கவிதையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். நேரடியாகப் பொருள் கொள்ள முடிந்து விடுகிற அந்த நான்கு வரிகள் தனிமையான சிறுவனின் பொம்மை கிடைத்த சந்தோஷத்தைத் தவிரவும் வேறொன்றையும் உணர்த்துவதாகத்தான் பட்டது எனக்கு. எளிமைதான் கவிதையின் மொழி. வார்த்தைச் சிக்கனமும், ஓசை நயமும் கொண்ட இந்த நான்கு வரிக்கவிதை என்னை மாதிரி லூஸூப்பயலால் வேறொரு பொருள் கொள்ளப்பட்டு சிலாகிக்கப்படும் என்று அக்குழந்தை நினைத்து இருக்காதுதான். ஆனால் இவள் பிற்காலத்தில் சரோஜினி நாயுடுவின் 'Fate' ஐ விஞ்சும் கவிதைகளை இவள் எழுதுவாள் என்று எனக்கு தோன்றுகிறது.

புதிய விவாதங்கள்

இந்தியாவில் பன்னெடுங்காலமாக கொழுந்து விட்டு எரியும் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியர்களாக நம்முடைய நிலைப்பாடு "காஷ்மீர் நமது" என்பதே மொத்த தேசத்தின் குரலாக இருக்கிறது. இந்தப் பிரச்சனையில் எந்த ஒரு வெளிநாட்டின் தலையீட்டையும் நாம் விரும்புவதில்லை. அனுமதிக்கப் போவதும் இல்லை. இந்நிலையில் பிற நாட்டின் அதிலும் குறிப்பாக அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் நாம் மூக்கை நுழைப்பது சரிதானா? ஒரு நாட்டில் உள்நாட்டுப்போர் நிகழ்கையில் நாம் குறுக்கீடு செய்வது வெளியுறவுக் கொள்கைகளுக்கு முரணானது அல்லவா? தவிரவும் இந்திய இறையாண்மை என்பது தனி நாடு கோரிக்கையை கடுகளவும் ஏற்றுக்கொள்வதில்லையே? மேலும் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என உலக நாடுகள் பலவற்றாலும் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆயிற்றே? இவையெல்லாவற்றையும் விட அவர்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை மிகச் சாதாரணமாக கொலை செய்தவர்கள் ஆயிற்றே? அவ்வரசியல் படுகொலையின் மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதே என்பதெல்லாம் என்னுடைய அறிவு ஜீவி நண்பர்களின் கேள்வியாக இருக்கிறது.

அவர்களுக்கான எனது பதில்,

“உண்மை எப்போதும் இரண்டு பக்கமும் இருக்கிறது. புலிகளின் போராட்டமும் தாக்குதலும் முற்றிலும் அறத்தின் பின் செல்கிறது என்று சொல்லிவிட முடியாது என்ற போதும் துப்பாக்கி முனையில் சமாதானம் என்பது சாத்தியமில்லாதது. மேலும் சமாதானத்தின் பின் சென்று புலிகளின் தரப்பு பலமுறை ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதும் வரலாற்று உண்மை. புலிகளின் இந்தப் போரை சர்வதேச சமூகம் பயங்கர வாதம் என்கிறது ஆனால், தன் சொந்த குடிமக்களின் மீது குண்டு வீசிக் கொல்கின்ற ஒரு அரசை என்னவென்று சொல்வது? இலங்கையில் நிகழும் இந்த போரையும் அதனால் வாழ்வுரிமையை இழந்து விட்டு தவிக்கும் அகதிகளையும் நாம் நிராதரவாக விட்டு விட முடியாது. எங்கோ நிகழும் இயற்கை சீற்றங்களுக்காகவும், குண்டு வெடிப்பு பலிகளுக்காகவும் பதறுகிற இந்திய மனோபாவம் ஸ்ரீலங்கா விஷயத்தில் இப்படி மெளனம் காப்பது புரியவில்லை.

தவிரவும் மின் தட்டுப்பாடு, பங்குச் சந்தை வீழ்ச்சி, வீட்டுக்கடன் வட்டி வீதம், நாக்க மூக்க நாராசம் காணக்கிடைக்கவில்லை, இலவச கலர் டி.வி போன்ற கவலைகளில் ஆழ்ந்திருக்கும் நமக்கு போரும் அது தரும் வலியும் புரிந்திருக்க நியாயம் இல்லை. சகல சுதந்திரங்களும், சவுகர்யங்களும் நிறைந்துவிட்ட வாழ்க்கை முறையில் இருந்து கொண்டு நாம் கற்றுவைத்திருக்கும் விஷயக் குப்பைகளின் உதவியோடு அறிவு ஜீவித்தனமாக ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். உறவுகளை இழந்து, உடல் உறுப்புகளை இழந்து, வீடிழந்து, உணவும் மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் எஞ்சியிருக்கும் ஓரே சொத்தான உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பவர்களின் வலியை உங்களுக்குப் புரிய வைக்க வழியில்லை” என்பதாகத்தான் இருக்கிறது.

அறையில் தினமும் ஈழம் குறித்த விவாதங்கள் நள்ளிரவு வரை நீள்கிறது. இதுவே ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகத்தான் படுகிறது.

Tuesday, October 21, 2008

ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்

1. தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.

2. பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் சந்தனத்துல என்னோட கட்டுரை வந்துருக்கு, தூர மலர்ல என்னோட கதை வந்திருக்கு, யோக்யாவில என்னோட தொடர் வரப்போவுது எனப் பெருங்குரலில் பேசி கலவரமூட்டுவார்கள்.

3. வட்டார மொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று எந்த வட்டாரத்திலும் இல்லாத ஒரு மொழியில் எழுதுவார்கள்.

4. எப்போதும் ஏதாவது ஒரு பிரசுரத்தின் பெயரைச் சொல்லி அதற்காக ஒரு நூலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.

5. ஒவ்வொரு பத்திரிகையின் தன்மைக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு எழுதுவார்கள்.

6. என்பதுகளில் காலாவதியாகிப் போய்விட்ட உத்திகளையும் நாடகத்தனமான உரையாடல்களையும் எழுதி விட்டு அதன்படியே எழுதி ரெமுனரேஷன் வாங்கும்படி சக எழுத்தானுக்கு யோசனை சொல்வார்கள்.

7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.

8. நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.

9. கதைகளிலும், சிந்தனையிலும் செய்ய வேண்டிய மாற்றத்தை தலைமுடியிலும், மோவாய்க்கட்டையிலும் அடிக்கடி மேற்கொண்டு கலவரப்படுத்துவார்கள்.

10. வாசிப்பதைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிகமாக எழுதிக் குவிப்பார்கள் (யாரும் வாசிக்கத் தயாராக இல்லாத போதும்)

டிஸ்கி: ஒரு உரசு உரசி நாளாச்சுல்ல... அதாங்...

மழை நாள்


விடாது பெய்து கொண்டிருந்தது மழை. அவரமாய் குளத்துப்பாளையம் சென்றாக வேண்டும். ஜெர்கினையும் தொப்பியையும் எடுத்துக்கொண்டு பைக்கில் கிளம்பினேன். சாலை எங்கும் பெரு வெள்ளம். ஒவ்வொரு சப்வேயிலும் ஆளை மூழ்கடிக்கும் அளவிற்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு இல்லாததால் கும்மிருட்டு. குண்டு எது குழி எது தெரியாமல் அங்கங்கே கார்களும், பைக்குகளும் பள்ளங்களில் சிக்கி இருந்தது. மாநகராட்சியை சபித்துக்கொண்டே எனக்குத் தெரிந்த சந்து பொந்துகளுக்குள் நுழைந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலையை அடைந்தேன்.

சாலையில் வேறு எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லை. பாலக்காடு செல்லும் ஒரிரு லாரிகளும் சேற்றை என் மீது வாரியடித்து விரைந்து கொண்டிருந்தது. இத்தனைச் சிரமத்தில் இந்தப்பயணம் அவசியமா என யோசித்துக்கொண்டிருந்த விநாடியில் அந்தப் பெண்ணைக் கண்டேன். ஆத்துப்பாலத்திற்கும் குனியமுத்துருக்கும் இடைப்பட்ட சாலையில் மழையில் நனைந்தபடி நடந்து கொண்டிருந்தாள். சுடிதார் ஷாலை தலைமீது முக்காட்டைப் போல் அணிந்திருந்தாள். வண்டியின் வேகம் குறைத்து அவளது முகத்தைப் பார்த்தேன். அழகிய முகம். பதினெட்டு வயது இருக்கலாம். கையில் புத்தாடைகள் வாங்கிய ஜவுளிக்கடை பை. ஏன் இந்த நடு ரோட்டில் நடு ராத்திரியில் அல்லாடுகிறாள்? என நினைத்தபடி கடந்தேன். சிறிது தூரம்தான் சென்றிருப்பேன். அவளது மருண்ட விழிகள் மனதை ஏதோ செய்ய, வண்டியைத் திருப்பி அவளை அணுகினேன். என்னைக் கண்டதும் இன்னும் பயம் கொண்டாள்.

"என்னங்க இது இந்த மழையில நனைஞ்சுகிட்டு இருக்கீங்க...?"

பதிலில்லை.

"பயப்படாதீங்க... இந்த ராத்திரில இப்படி நனையுறீங்களேன்னு மனசு கேட்காமத்தான் திரும்பி வந்தேன்... சொல்லுங்க..."

என் வார்த்தைகளும், என் வாகனத்தில் ஒட்டியிருந்த கம்பெனி ஸ்டிக்கரும் அவளுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். தன் பவளவாய் திறந்து " கோவைப்புதூர் போகனும்... பஸ்ஸோ, ஆட்டோவோ வருமான்னு காத்திருந்தேன். எதுவும் வரலை. அதான் நடந்து போலாம்னுட்டு..."

"அடக்கடவுளே இந்தப் பேய் மழையில் எந்த ஆட்டோங்க வரும்? வண்டில ஏறுங்க நான் குளத்துப்பாளையம்தான் போறேன். கோவைப்புதூர்ல உங்களை இறக்கி விட்டுர்றேன்..."

"இல்லைங்க... பரவால்ல... வேண்டாம் நான் ஏதாவது ஆட்டோ வருதான்னு பாத்துக்கறேங்க"

" ஹய்யோ பயப்படாதீங்க...இனிமே வண்டி வந்து நீங்க போய்ச் சேரவா? ச்சும்மா ஏறுங்க"

பெரும் தயக்கத்துக்குப் பின் வண்டியில் ஏறினாள். மழை தன் உச்சத்தை அடையும் வெறியோடு அடித்து ஆடிக்கொண்டிருந்தது. அவளது உடல் குளிரில் நடுங்குவதை உணர முடிந்தது. என்னிடம் இருந்த தொப்பியை அவளிடம் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னேன். அவளது பயத்தைப் போக்க அவளிடம் பேச்சுக்கொடுத்தேன்.

"என்னங்க இந்த ராத்திரில தனியா?"

"ஹாஸ்டல்ல இன்னிக்குத்தான் பெர்மிஷன் கொடுத்தாங்கன்னு தீபாவளிக்கு பர்சேஸ் பண்ண வந்தேன். பஸ்ஸூல திரும்பறப்போ இருட்டுல ஸ்டாப்பிங் தெரியாம நாலு ஸ்டாப் முன்னமே இறங்கிட்டேன். அப்புறம் பஸ்ஸே வரல. மொபைல் வேற சார்ஜ் இல்லாம சுவிட்ஜ் ஆஃப்"

"எந்த காலேஜ்?"

"சிபிஎம்"

"அட! அங்கதான் என் சித்திப்பொண்ணு படிக்கிறா..."

"எந்த டிபார்ட்மெண்ட்லங்க?"

"ஸ்டேட்டிஸ்டிக் - பைனல் இயர்"

"பேருங்க?"

"சுதா"

"ஓ"

நான் போக வேண்டிய குளத்துப்பாளையம் வந்தது. "நான் இங்கயே இறங்கி நடந்துப் போய்க்கறேங்க" என்றாள் அவள். அவளது ஹாஸ்டல் குளத்துப்பாளையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவு என்பதை நானறிவேன்.

"பரவாயில்லை நான் உங்களை ஹாஸ்டல்லயே விட்டுர்றேன்"

"வேணாங்க உங்களுக்கு ஏன் வீண் சிரமம்... இவ்வளவு தூரம் வந்ததே பெருசு... நான் நடந்து போய்க்கிறேங்க..."

"அட என்னங்க நீங்க பிக்காளித்தனமா பேசிகிட்டு... மூணு கிலோ மீட்டர் சல்பி மேட்டருங்க... "என்றேன். அவள் சிரித்தாள்.

அவளை ஹாஸ்டலில் இறக்கிவிட்டு அவளது நன்றிகளைப் பெற்றுக்கொண்டு குளத்துப்பாளையம் திரும்ப மணி பன்னிரெண்டு ஆகிவிட்டது. நான் உறங்கச் சென்றேன்.

Monday, October 13, 2008

இயற்றலும் ஈட்டலும் காத்தலும்

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த உலகில் பணம்தான் இறையாண்மையும், கர்வமும் மிக்கதாக இருப்பது புரியவருகிறது. அதனிடத்தில் பக்தியும், பயமும், மரியாதையும், அன்பும் அக்கறையும் கொண்டவர்களிடத்தே மட்டுமே அது இருக்க விரும்புகிறது. அபிப்ராயத்திற்காகவும், அன்பிற்காகவும், கவுரவத்திற்காகவும் தன்னைப் பிரயோகிப்பவர்களிடத்தில் ஒரு போதும் இருக்க விரும்புவதில்லை. பணத்தைக் கையாள்வது அன்பிலாப் பெண்ணுடன் வாழ்வதைக் காட்டிலும் சிரமமானதாக இருக்கிறது.

எதிர்படும் எவரையாவது நிறுத்தி “நில்லுங்கள்... உங்கள் பையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்? சரியாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றால் எவரிடமும் பதில் இல்லை. தன் பையில் / பர்ஸில் இருக்கும் பணத்தின் அளவு கூடத் தெரியாத அளவிற்கு திரியும் பழக்கம் வந்துவிட்டது நமக்கு.

தினமும் இன்றைய செலவிற்கென்று குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்வதும் அன்றைய நாளின் முடிவில் எவ்வளவு செலவு செய்தோம் என்ற கணக்கினைப் பார்ப்பதும் வழக்கொழிந்து விட்டது. ஒரு ஐஸ்க்ரீமையோ, தந்தூரி சிக்கனையோ, பத்திரிகையையோ வாங்குகையில் அதன் மதிப்பிற்கு உகந்த பணத்தைத்தான் செலவழிக்கிறோமா என்ற பிரக்ஞையின்றி விசிறி அடிக்கிறோம்.

கடந்த மாதத்தில் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி தினசரி ஆகும் செலவுகளைக் குறித்துக்கொண்டே வந்ததில் நான் எத்தனைப் பெரிய ஊதாரி என்பது புரிய வந்தது. மேன்ஷனில் வாழும் திருமணமாகாத இளைஞனாகிய நான் ஒரு நாளைக்கு ரூ.562/- என்ற வீதத்தில் செலவு செய்திருக்கிறேன்.

உணவு
4062.00
பெட்ரோல்
1290.00
சினிமா (டிக்கெட் செலவு மட்டும்)
437.00
திருமணம் மற்றும் பரிசு பொருட்கள்
220.00
அலுவல் நிமித்தம் நிகழ்ந்த செலவு
400.00
காஸ்மெடிக்ஸ், முடி திருத்தல், துணி துவைத்தல்
737.00
இணையம்
165.00
கல்விச் செலவு
950.00
ஊருக்கு அனுப்பிய தொகை
5000.00
கடன் கொடுத்தது
700.00
செல்போன் பில்
750.00
இதழ்கள்
10.00
புதிய ஆடைகள்
680.00
அறை வாடகை மற்றும் மின்சாரம்
1150.00
இதர
300.00
செப்டம்பர் மாத மொத்தச் செலவு
16851.00
“எழுதிப் பார்க்காதவன் கணக்கு அழுதுப் பார்த்தாலும் தீராது” என்று அப்பா அடிக்கடி சொல்வார். அது எத்தனை உண்மை என்பது ஒரு மாத கணக்கை எழுதிப் பார்த்ததிலேயே புரிந்து விட்டது. புத்தியோடு பிழைக்கலாம் என்றிருக்கிறேன்.

Sunday, October 12, 2008

தமிழன் என்றொர் இனமுண்டு

*நேற்றிரவு வழக்கமாக சாப்பிடச் செல்லும் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். இட்லிக்கு தொட்டுக்கொள்ள ‘சப்ஜி’ கொடுத்தார்கள். சட்னி, சாம்பார் இல்லை. என்னவென்று விசாரித்தால் காலையிலிருந்து கரண்ட் இல்லையாம். ஏற்கனவே அரைத்த சட்னி புளித்துவிட்டது. சப்பாத்திக்கு ஏற்பாடு செய்த சப்ஜிதான் இருக்கிறது என்று பதில் வருகிறது.

*அடிக்கடி கரண்ட் போய்விடுகிறதென்பதால் மெழுகுவர்த்தி வாங்கி வைக்கலாமென ராம்நகர் முழுக்க சுற்றியும் மெழுகுவர்த்தி கிடைக்கவில்லை. சப்ளை இல்லையாம். மூலப்பொருளான மெழுகின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து விட்டதால் இரண்டு ரூபாய்க்கு விற்ற மெழுகுவர்த்தியின் தற்போதைய விலை ரூ.10/-. பாரதீய ஜனதா கட்சி நடத்திய மெழுகுவர்த்தி வழங்கும் போராட்டத்தில் மெழுகுவர்த்தி வாங்க பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவை செய்தியில் காட்டினார்கள்

*கோவையில் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் முன்னனி நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சப்ளை செய்யாததால், ஆர்டர் கொடுத்திருந்த வெளிநாட்டு நிறுவனம் ரூ.40/- கோடியை அபராதமாக விதித்திருக்கிறது.

*கடந்த ஆண்டு 24% சதவீதம் வரை போனஸ் வழங்கிய பல திருப்பூர் பனியன் கம்பெனிகள் இந்தமுறை தங்களால் 12% சதவீதம்தான் போனஸ் வழங்க முடியும் என அறிவித்திருக்கின்றன. மின்வெட்டினால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு தென்மாவட்டங்களில் இருந்து பிழைக்க வந்த பலரும் ஊர் திரும்பி விட்டனர்.

*அதிகாலை மூன்று மணிக்கே எழும்பியாக வேண்டிய நிலையில் இருக்கும் பால், பத்திரிகை தொழில்களை செய்துவருபவர்களும் இரவுகளில் சரியாக தூங்க முடியாததால் பகலில் தலைசுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் அவதிப்படுகிறார்கள்.

*தங்களது 'புராஜக்டுகளை' செய்து முடிக்க கம்ப்யூட்டர் வாங்குமளவிற்கு வசதி இல்லாத கல்லூரி மாணவர்கள் பலர் புரவுசிங் செண்டர்களையும் பயன்படுத்த முடியாமல் அல்லாடுகிறார்கள்.

ஆனால் இந்தப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஆற்காடு வீராச்சாமியைக் குறை சொல்வதில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாகப் படவில்லை. இந்த வயதிலும் பிரச்சனைகளுக்குரிய மூன்று பெரிய துறைகளுக்கு அமைச்சராக அவர் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி குடும்ப உள்விவகாரத் துறை, மாறன் பிரதர்ஸ் கருவறுப்புத் துறை, போன்றவற்றோடு மின்சார இலாக்காவையும் பார்த்துக்கொள்வது என்பது சாதாரண விஷயமல்லவே...

பிற மாநிலங்களில் நிலை என்ன என்று முறையே பெங்களூர், பாலக்காடு, ஹைதரபாத், நொய்டா, கல்கத்தா நகரங்களில் வசிக்கும் நண்பர்களிடம் விசாரித்தால் பாலக்காட்டில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இருக்கிறதாம். அங்கெல்லாம் மின்சாரத்துறை மந்திரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படவில்லை போலும்.

இது தொடர்பாக எனக்குத் தெரிந்த மின்சார வாரிய உயரதிகாரி ஒருவரிடம் " இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு?" எனக் கேட்டேன்.

"ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கத்தாம்பா செய்யும்"

"அப்புறம்.... சரியாயிடுமா?!"

"இல்ல... உங்களுக்குப் பழகிடும்..."