Sunday, October 12, 2008

தமிழன் என்றொர் இனமுண்டு

*நேற்றிரவு வழக்கமாக சாப்பிடச் செல்லும் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். இட்லிக்கு தொட்டுக்கொள்ள ‘சப்ஜி’ கொடுத்தார்கள். சட்னி, சாம்பார் இல்லை. என்னவென்று விசாரித்தால் காலையிலிருந்து கரண்ட் இல்லையாம். ஏற்கனவே அரைத்த சட்னி புளித்துவிட்டது. சப்பாத்திக்கு ஏற்பாடு செய்த சப்ஜிதான் இருக்கிறது என்று பதில் வருகிறது.

*அடிக்கடி கரண்ட் போய்விடுகிறதென்பதால் மெழுகுவர்த்தி வாங்கி வைக்கலாமென ராம்நகர் முழுக்க சுற்றியும் மெழுகுவர்த்தி கிடைக்கவில்லை. சப்ளை இல்லையாம். மூலப்பொருளான மெழுகின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து விட்டதால் இரண்டு ரூபாய்க்கு விற்ற மெழுகுவர்த்தியின் தற்போதைய விலை ரூ.10/-. பாரதீய ஜனதா கட்சி நடத்திய மெழுகுவர்த்தி வழங்கும் போராட்டத்தில் மெழுகுவர்த்தி வாங்க பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவை செய்தியில் காட்டினார்கள்

*கோவையில் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் முன்னனி நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சப்ளை செய்யாததால், ஆர்டர் கொடுத்திருந்த வெளிநாட்டு நிறுவனம் ரூ.40/- கோடியை அபராதமாக விதித்திருக்கிறது.

*கடந்த ஆண்டு 24% சதவீதம் வரை போனஸ் வழங்கிய பல திருப்பூர் பனியன் கம்பெனிகள் இந்தமுறை தங்களால் 12% சதவீதம்தான் போனஸ் வழங்க முடியும் என அறிவித்திருக்கின்றன. மின்வெட்டினால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு தென்மாவட்டங்களில் இருந்து பிழைக்க வந்த பலரும் ஊர் திரும்பி விட்டனர்.

*அதிகாலை மூன்று மணிக்கே எழும்பியாக வேண்டிய நிலையில் இருக்கும் பால், பத்திரிகை தொழில்களை செய்துவருபவர்களும் இரவுகளில் சரியாக தூங்க முடியாததால் பகலில் தலைசுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் அவதிப்படுகிறார்கள்.

*தங்களது 'புராஜக்டுகளை' செய்து முடிக்க கம்ப்யூட்டர் வாங்குமளவிற்கு வசதி இல்லாத கல்லூரி மாணவர்கள் பலர் புரவுசிங் செண்டர்களையும் பயன்படுத்த முடியாமல் அல்லாடுகிறார்கள்.

ஆனால் இந்தப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஆற்காடு வீராச்சாமியைக் குறை சொல்வதில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாகப் படவில்லை. இந்த வயதிலும் பிரச்சனைகளுக்குரிய மூன்று பெரிய துறைகளுக்கு அமைச்சராக அவர் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி குடும்ப உள்விவகாரத் துறை, மாறன் பிரதர்ஸ் கருவறுப்புத் துறை, போன்றவற்றோடு மின்சார இலாக்காவையும் பார்த்துக்கொள்வது என்பது சாதாரண விஷயமல்லவே...

பிற மாநிலங்களில் நிலை என்ன என்று முறையே பெங்களூர், பாலக்காடு, ஹைதரபாத், நொய்டா, கல்கத்தா நகரங்களில் வசிக்கும் நண்பர்களிடம் விசாரித்தால் பாலக்காட்டில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இருக்கிறதாம். அங்கெல்லாம் மின்சாரத்துறை மந்திரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படவில்லை போலும்.

இது தொடர்பாக எனக்குத் தெரிந்த மின்சார வாரிய உயரதிகாரி ஒருவரிடம் " இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு?" எனக் கேட்டேன்.

"ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கத்தாம்பா செய்யும்"

"அப்புறம்.... சரியாயிடுமா?!"

"இல்ல... உங்களுக்குப் பழகிடும்..."

6 comments:

தமிழ் பிரியன் said...

///"ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கத்தாம்பா செய்யும்"
"அப்புறம்.... சரியாயிடுமா?!"
"இல்ல... உங்களுக்குப் பழகிடும்..."///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

மஞ்சூர் ராசா said...

ஆமாம். ஆறுமாதத்தில் நிச்சயம் பழகிடும்.

இது போன்ற ஒரு மின்வெட்டு இதுவரை வந்ததில்லை என்றே நினைக்கிறேன்.

வெயிலான் said...

// திருப்பூர் பனியன் கம்பெனிகள் இந்தமுறை தங்களால் 12% சதவீதம்தான் போனஸ் வழங்க முடியும் என அறிவித்திருக்கின்றன. //

12 சதவீதம் கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான் செல்வா :(

கட்டபொம்மன் said...

"ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கத்தாம்பா செய்யும்"

"அப்புறம்.... சரியாயிடுமா?!"

"இல்ல... உங்களுக்குப் பழகிடும்..."

அப்புறம் செருப்புல அடிச்சாலும் புத்தி வராம இன்னும் தி.மு.கா, அ.தி.மு.கா வுக்குதானே மாத்தி மாத்தி ஓட்ட போடுறோம் அப்புறம் பேசாமலா இருப்பாங்க

செல்வேந்திரன் said...

தமிழ் பிரியன், மஞ்சூர் ராசா, வெயிலான், கட்டப்பொம்மன் வருகைக்கு நன்றி.

தொழில் செய்வோரின் ஆதங்கம் எல்லாம் தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறதே என்பதுதான்.

1) தற்போதைய மின்சார இருப்பு நிலை என்ன?

2) அதை வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும்?

3) தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன?

4) இன்னும் எத்தனை நாட்களுக்குள் நிலைமை சரியாகும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்து விட்டால் குறைந்தபட்சம் வங்கிகடனில் வாங்கி இயந்திரங்களை விற்று விட்டு கடனையாவது அடைக்கலாம். அல்லது தொழிற்சாலைகளை விரிவு படுத்தும் யோசனைகளையாவது தள்ளி வைக்கலாம். ஆர்டர்களைப் பெறும்போதே டெலிவரி செய்ய இயலாத நிலையை விளக்கலாம். இப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் தொழில் முனைவோர் இருக்கின்றனர். ஒரு வெள்ளை அறிக்கை அவசர தேவையாய் இருக்கிறது.

வெங்கட்ராமன் said...

இந்த வயதிலும் பிரச்சனைகளுக்குரிய மூன்று பெரிய துறைகளுக்கு அமைச்சராக அவர் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி குடும்ப உள்விவகாரத் துறை, மாறன் பிரதர்ஸ் கருவறுப்புத் துறை, போன்றவற்றோடு மின்சார இலாக்காவையும் பார்த்துக்கொள்வது என்பது சாதாரண விஷயமல்லவே...

நெத்தியடி.