Tuesday, April 28, 2009

இரு கடிதங்கள்

அன்பு செல்வாவிற்கு ,

ப்ரிய வணக்கங்கள்.

' சுண்ணாம்பு தடவப்பட்ட வலைப்பதிவர்கள் ' என்ற தலைப்பில் லக்கியின் பதிவை படித்தவுடன் ஏற்பட்ட எனது உணர்ச்சியை லக்கிக்கு ஒரு கடிதமாகப் பதிவு செய்திருக்கிறேன். லக்கியின் பதிவிற்கு அனுப்பப்பட்ட 64 பின்னுட்டங்களிலும் பெரும்பான்மையோர் அவரது கருத்திற்கு எதிர் கருத்து கூறாத நிலையில், புதிய வலைப்பதிவர் என்ற முறையில் எனது பதிவை , எனது எண்ணத்தைப் பலரும் அறிய முடியாத சூழலில் அவரது கருத்திற்கு சரியான எதிர்கருத்தாக எனது பதிவு இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால் அதை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பது உங்கள் பொறுப்பு.

அண்ணாச்சிக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவியுங்கள் .

தோழமையுடன் ,
வசந்த் ஆதிமூலம்.

அன்பின் வசந்த்,
சமீப காலமாய் லக்கியின் எழுத்துப்போக்கு சரியான பாதையில் இல்லை. எழுத்தாளனுக்கு அறச்சீற்றம் முக்கியம். எழுத்தாளனாகும் நப்பாசையில் இருக்கும் லக்கி முகாம்களுக்குள் இருந்து கொண்டு 'ஜிங்-ஜக்' பாணி எழுத்துக்களை எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார். வாசகர் வட்டம் பெருத்தல் ஆரோக்கியமானதுதான். ஆனால், அவர் ரசிகக் கண்மணிகளையல்லவா திரட்டிக்கொண்டுத் திரிகிறார். இது திராவிடக்குஞ்சுகளின் ஆதி புத்தி. தடுக்க முடியாது. தவிர்க்கலாம்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

பின்குறிப்பு:
உங்களது ஆத்திரம் நியாயமானது. ஆனால், 'லக்கி தண்ணியடித்துவிட்டு எழுதுகிறார்' என்பது போன்ற தனிமனித தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம். அப்புறம், லக்கிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?!

Monday, April 27, 2009

கடற்கரை குறிப்புகள்

ரமேஷ் குமார் இப்போது இருக்கும் வீட்டில் இதற்கு முன்பு வாடகைக்கு இருந்தவர் ரமேஷ் வைத்யா. அந்த வீட்டின் கொடுப்பினையோ என்னவோ வைத்யா புத்தகங்களைக் குவித்து வைத்திருந்த அறைகளிலெல்லாம் இப்போது ரமேஷ் குமார் புத்தகங்களைக் குவித்து வைத்திருக்கிறார். நா. முத்துக்குமார் 'பால காண்டத்தில்' தன் வீட்டில் ஒரு லட்சம் புத்தகங்கள் இருந்தன என்று குறிப்பிட்டிருந்தது அனைத்தும் சத்தியம். அனைவரும் பலன் பெறட்டும் என அவரது அப்பா 'அன்னை நூலகம்' என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் இலவச நூலகம் நடத்தியவராம். செய்த புண்ணியம் சும்மா போகுமா?!

***

அட்டகாசமான இண்டீரியரில் அமெரிக்கன் கம்பெனி போல மாறி இருக்கிறது ஆனந்த விகடன் அலுவலகம். விகடன் என் தாய் வீடு. எடிட்டோரியலில் இருக்கும் அத்தனை பேரும் அடியேனின் அண்ணன்மார்கள். முதலில் குரு வணக்கம் செய்து விட்டு, கேபின் கேபினாக சென்று எல்லோரையும் சந்தித்துவிட்டு வந்தேன். சொந்தக்காரனைப் போன்ற பரிவோடு குசல விசாரிப்புகள், உபசரிப்புகள். நிர்வாக ஆசிரியர் ரா. கண்ணனையும், பசுமை விகடன் பொறுப்பாசிரியர் அறிவழகனையும் சந்திக்க முடியாமல் போய்விட்டதில் எனக்கு வருத்தம்.

***

அண்ணாச்சியை முதன் முதலில் சந்தித்தேன். பள்ளி நாட்களிலிருந்தே அவரது ரசிகன் என்பதால் ரொம்பவும் எக்ஸைட்மெண்ட். கொண்டாட்டத்தை மதமாகவும், நகைச்சுவையை மொழியாகவும் கொண்ட இயல்பான ஈர மனுஷன். 'நான் ஒரு ஆணியவாதி'யெனப் பிரகடனப்படுத்தும் துணிச்சல் கொண்டவர். ஆனால் தமிழ்நாட்டில் அய்யனாரின் பெயரை ரிப்பேராக்கியேத் தீருவேன் என ஏன் கங்கனம் கட்டிக்கொண்டு அலைந்தார் என்பதுதான் புரியவில்லை.

அண்ணாச்சி ரசிகர்கள் அளவிற்கு எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருக்கிறார். 'அவர் ஒரு மனுஷன்னு அவர பாக்கறதுக்குப் போறீயேன்னு' கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். எப்போதும் நெகட்டிவாகவே எழுதுவதுதான் காரணம் என்பது புரிந்தது. சாத்தான்குளத்துக்காரன் வேற எப்புடிடே எழுதுவான்? அப்படிங்கிறார்.

***

உள்ளதை நல்லபடி காட்டும் காமிரா தாமிராவினுடையது. அண்ணாச்சியைக் கூட அழகாக படம் பிடிக்க முடியும் என்பது அவரது சமீபத்திய சாதனை. என்னைப் போன்ற ஒரு வீணாப்போனவனோடு சேர்ந்து அழகான ஞாயிறுகளுள் ஒன்றை இழந்தார்.

தாமிராவின் காமிராக் கண்களின் வழியே மட்டுமே என்னைப் பார்த்திருந்த பல நண்பர்கள் 'நேரில் பரதேசியைப் போல இருக்கிறீர்கள்' என்று பகிரங்கமாகச் சொன்னதைக் கேட்டு தற்கொலை முடிவிற்கே வந்தேன் நான். லக்கியைப் பார்த்ததும்தான் மனசு மாறினேன்.

***

லக்கி தன் நிகர எடைக்குச் சமமான ஒரு லேப்டாப்பைச் சுமந்து அல்லது இழுத்து வந்தார். என்னதான் கோட்டிக்காரத் தனமாக எழுதினாலும் தமிழில் அதிகம் பேர் படிக்கும் வலைஞர் என்ற புகழ் அவருக்குத்தான். அதற்கான அவரது உழைப்பு சாதாரணமானது அல்ல. வாழ்த்தலாம் என்று நினைத்தால் நெருங்க முடியவில்லை. அத்தனைக் கூட்டம் மொய்க்கிறது அவரை. லக்கி செலிபிரட்டி ஆகிவிட்டார். சில பிராண்டுகளின் கொ.ப. செ. வாக இருப்பதைத் தவிர்த்தால் இவரை இன்னும் இன்னும் நேசிக்கலாம்.

***

கார்க்கிக்கும் எனக்கும் கண்ணுக்குத் தெரியாத நட்பின் முறுக்கேறிய இழைகள் இருக்கின்றன. செல்வேந்திரனைப் பார்ப்பதற்காக வந்தேன் என்று அவர் சொன்னதில் நெஞ்சுக்குள் பெய்தது மாமழை. லக்கி மற்றும் அவரது ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்களோடு சாரு குறித்த காரசார விவாதத்தில் தனியனாய் அனைவரையும் பந்தாடிக் கொண்டிருந்தார். நான் கூட்டத்தில் இருந்து அவரைத் தனியே பிரித்து வந்து அவர் காதில் ஒரு ரகசியம் சொன்னேன். அமைதியாகி விட்டார். நண்பா உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!

***

வால், பதிவர்களில் ரொம்பவும் யூனிக். நிறைய்ய விஷயங்களில் அறுதியான முடிவுகளை வைத்துக் கொண்டு முறைப்பானக் குரலில் வாதாடுவதில் இவர் கும்கீக்கு நிகர். ஆனால், மூத்தவரோ, இளையவரோ வஞ்சகம் இல்லாமல் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் களப்பணியில் வாலை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. கருத்து ரீதியாக அவரோடு எனக்கு பல முரண்கள் இருப்பினும் வாலின் இருப்பு சுவாரஸ்யம் கூட்டியது.

***

ரமேஷ் அண்ணா முன்னெப்போதும் விடவும் மிகுந்த கவலையளிக்கும் தோற்றத்தில் இருக்கிறார். அவரது அருமையையும், அன்பையும் உணர முடியாத மனிதர்களோடே வாழத் தலைப்பட்டு விட்ட தலைவிதி அவருடையது. சென்னைவாழ் அன்பர்கள் நர்சிம், அப்துல்லா, சுந்தர் போன்றோரது நட்பினால் அவருக்கு நல்ல துணை கிடைத்து மகிழ்வாக இருக்கிறார் என்ற என் கற்பனையில் மண் விழுந்தது. கேபிள் சங்கர் ரமேஷை இழுத்துப் போய் இரண்டு இட்லியும், வடையும் சாப்பிட வைத்தேன் என்றார். என்னளவில் இது சாதனை. கடந்த ஐந்தாண்டுகளில் ரமேஷ் அதிகம் சாப்பிட்ட உணவு அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். இந்த வரிகளை எழுதுகையில் ரமேஷின் பழைய கவிதையொன்றில் காதலி கேட்பதாக வரும் வரிகள் நினைவுக்கு வருகிறது.

"ரமேஷ், வயதானாலும்...இன்னும் நீ குழந்தைதானே..." (மணல் புத்தகம்)

சென்னை நண்பர்களே... இந்தக் குழந்தையைக் கொஞ்சம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

***
செல்லமுத்து குப்புசாமி என்கிற பெயர் நாணயம் விகடன் துவங்கப்பட்ட காலத்திலிருந்து அறிமுகம். மனதில் இருந்த பிம்பம் அனைத்தையும் அடித்து நொறுக்குமளவிற்கு எளிமையாக இருந்தார். இனிமையாகப் பேசினார். நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தடை செய்யப்பட்ட ஓரே புத்தகம் இவர் எழுதிய 'பிரபாகரன்'தான்.

***

இரண்டு வருடங்களாய் பதிவனாய் கோல் போட்டாலும் 'தல' எனும் பாலபாரதியைச் சந்தித்து ஆசி பெற்றாலொழிய முழுப்பதிவன் ஆக முடியாது என்பதால் அவரிடம் 'ஞானஸ்நானம்' பெற்றேன். வெறும் அண்ணாச்சியை சன் டி.வி புகழ் அண்ணாச்சி ஆக்கி ஊரையே சிரிக்க வைத்திருக்கிறார். மடத்தின் மூலம் அவ்வப்போது சிறு அரசியல்களில் ஈடுபட்டு வந்த அண்ணாச்சி சன் டிவியில் தோன்றிய பின் மடத்தை மூடிவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடலாமா என யோசிக்க துவங்கி இருக்கிறார்.

***

நந்தா கிடைத்தபோதெல்லாம் அண்ணாச்சியை சிக்ஸராக்கிக் கொண்டிருந்தார். கண்கள் பனிக்க அவரது கும்மிகளை அண்ணாச்சி வாங்கிக் கட்டிக்கொண்டது கண்கொள்ளாக் காட்சி. நந்தா மாதிரி ஆட்கள் இல்லாவிட்டால் அண்ணாச்சி அடங்க மாட்டார்.

***

என்னதான் புனைப்பெயர் என்றாலும் சிவராமன் அண்ணாவைப் போய் பைத்தியக்காரன் என்று விளிப்பது எத்தனைச் சிரமமாய் இருக்கிறது பார்த்தீர்களா?! எல்லோரையும் நேசிக்கும் குணத்தை 'கோபி கிருஷ்ணன்' இவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்திருப்பாரோ?!

சிவராமனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் சேர்ந்து 'கோபி கிருஷ்ணனின் ' நூல்களை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கும் அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு செட் நூல்களின் விலையே ரூபாய் நூறைத் தாண்டுகிறது. தபால் செலவு வேறு இருக்கிறது. இதுவரை நூல்களைக் கேட்டு வந்த மின்னஞ்சல்களில் அதிகம் பேர் இணையத்தில் எழுதுகிறவர்கள் அல்லர் என்கின்ற தகவல் ஆச்சர்யமூட்டியது. இணையத்தின் 'ரீச்' அதிகரித்திருப்பதின் ஆரம்ப அடையாளமாக இதனைக் கொள்கிறேன்.

சிவராமன் அண்ணாவிற்கு என் முத்தங்கள்.

***

ஜ்யோவ்ராம் நவீனத் தமிழிலக்கியத்தில் அப்-டூ டேட் ஆசாமி. அவரது வாசிப்பும், பேச்சும் பிரமிப்பைத் தருகிறது. 'உங்களோட கட்டுரைகள் சுமார் நாற்பது, ஐம்பது படித்திருப்பேன். அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லை. எனக்குப் பிடிக்கவுமில்லை' என்ற முகத்திலடிக்கிற விமர்சன நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது. எதிர்காலத்தில் அவரை ஈர்க்கும்படியான எழுத்துக்களை எழுதுவதற்காக உழைப்பை அதிகப்படுத்தியாக வேண்டும்.

***

நான் மிகவும் ரசித்த இணைய எழுத்துக்கள் இளவஞ்சியினுடையதுதான். எழுத்துக்களைத் தவிர்த்து காமிராவை வைத்துக்கொண்டு கவிதை எழுதுகிறவர். புதுவை இளவேனில், தேனி ஈஸ்வர் போன்றோருக்கு இணையான புகைப்படங்கள் இவருடையது. இளவஞ்சி தொடர்ந்து எழுதாதது தனிப்பட்ட வாசகனாக எனக்கு பெரும் இழப்பு. சென்னைப் பதிவர் சந்திப்பில் எதிர்பாராமல் கிடைத்த இன்ப அதிர்ச்சி இவரைச் சந்தித்ததுதான்.

***

நர்சிம், அப்துல்லா இருவருமே பொதுவான குணாம்சங்களில் இரட்டையர்கள். அந்தப் பட்டியலை பிற்பாடு தருகிறேன். சென்னையின் அழகிய பதிவர் நர்சிம், இளகிய பதிவர் அப்துல்லா. காரணங்களை விளக்க வேண்டியதில்லை. மதுரைக்காரரும், புதுக்கோட்டைக்காரரும் விருந்தோம்பலில் பச்சைத் தமிழர்கள்!

***

வெயிலான் வந்திருந்தது என் 'ஹோம் -சிக்கை'ப் போக்க உதவியது. திருப்பூரில் நாளுக்கொரு பதிவர்கள் உருவாகி வருகிறார்கள். வெயிலான் அவர்களுக்கு முன்னோடி. சீக்கிரத்தில் திருப்பூரில் ஒரு பதிவர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்வார் என்று நம்புகிறேன்.

***

எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத அக்னிப்பார்வை, ஊர் சுற்றி, வசந்த் ஆதிமூலம், டோண்டு ராகவன், டாக்டர் புரூனோ, தமிழ்க்குரல், நந்தா, சிவஞானம்ஜி, இராமகி ஐயா, அதிஷா, தண்டோரா, காவேரி கணேஷ், ஹசன், ஜாக்கி சேகர், ரெளத்திரன், ஸ்ரீ, ஆனந்தக்குமார் ஆகிய பதிவர்களைச் சந்திக்க பெரும் வாய்ப்பாக இருந்தது அண்ணாச்சியின் வருகையும் அதனையொட்டிய பதிவர் சந்திப்பும்.

***

இரண்டு நாள் பிரயாணத்திற்கான பயணப்பை வாங்குகையில் கேண்டி சொன்னாள் 'இதெல்லாம் உங்களுக்குப் பத்தாதுங்க... வெறுமனே போவீங்க... புத்தக மூட்டையோட வருவீங்க...' அவள் வாய்க்குச் சக்கரைதான். நண்பர்கள் எக்கச்சக்கமான புத்தகங்களை, டிவிடிக்களை பரிசளித்தார்கள். புத்தக மூட்டைகளோடு ஊர் வந்து சேர்ந்தால் ஆபிஸில் 'புக் கிளப்'பிற்காக நான்கு புத்தகங்களைக் கொடுத்து படிப்பதற்கு லீவும் கொடுத்திருக்கிறார்கள்.

***

'முடிந்தவரை நண்பர்களைச் சந்திப்பது' என்பதைத் தவிர வேறெந்த அறுதியான திட்டங்களும் இல்லாமல்தான் சென்னைக்குச் சென்றேன். என் வருகையையொட்டி சென்னையில் வெயில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. வெயிலே இல்லாவிட்டாலும் சென்னை கசகசப்பாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. நெருக்கடியும், பரபரப்பும்தான் புழுக்கம் தருகிறதோ என்னவோ?!

***

ரமேஷ் அண்ணா வீட்டிற்கு போகாததற்கும், உமா ஷக்தியை சந்திக்க முடியாததற்கும், ஹார்லி டேவிட்ஸன் ஹெல்மெட் வாங்க முடியாமல் போனதற்கும் வைகுண்ட ஏகாதசிக்கு பிரியாணி சாப்பிட்டதுதான் காரணமாய் இருக்க முடியும்.

Friday, April 24, 2009

பின் நவீனத்துவ ஆலயம்!கவி பாடி அமீரகத்தில் கொசுக்களை ஒழித்தவரும், கவி'மட'த்தலைவனுமாகிய ஆசிப் அண்ணாச்சி தலைமையில் சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு நாளை மாலை (25/04/09) மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நிகழ இருக்கிறது. தமிழின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க உள்ளார். சென்னைவாழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம்.

நேரம்: மாலை ஐந்து மணி;

பின்குறிப்பு:

நேரம் தவறி வருபவர்களுக்கு வறுகடலை வழங்கப்பட மாட்டாது.

பின் நவீனத்துவம் பற்றி பேச கண்டிப்பாக அனுமதி இல்லை.

'நள்ளிரவு நயாகரா' நிதானத்துடன் வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்.

***

அலங்கார் ஹோட்டலுக்கு முன் பக்கம் உள்ள சாக்கடை அடைத்துக்கொண்டு விட்டது. துப்புரவுப் பணியாளர்கள் வந்து தூர் வாரியதில் எக்கச்சக்கமாய் காண்டங்கள் வெளிவந்திருக்கிறது. நல்ல வேளை சுற்றிலும் இருபது கிலோமீட்டர் சுற்றளவிற்கு எந்த சாஃப்ட்வேர் கம்பெனியும் இல்லை. தப்பித்தார்கள்.

***

சென்ற மாதத்தில் ஒரு நாள், உயிர் நண்பனொருவனின் செல்லிடப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தேன். எக்கச்சக்கமாய் குஜால் வீடியோ வைத்திருந்தான். ஒரு வீடியோவில் ஓங்கு தாங்காய் வளர்ந்த வேட்டை நாயொன்று பெண்ணைப் புணர்வதைப் போன்ற காட்சி. 'உவ்வே...' என்று வாந்தியெடுத்து, போனைத் தூக்கி ஏறிந்தேன். 'ச்சீய்... எத்தனை வக்கிரம்?! இதையெல்லாம் வச்சிக்கிட்டு அலையுறீயே... கேவலமா இல்ல..' நண்பன் மவுனமாய் நகர்ந்து விட்டான்.

சுசீந்திரம் கோவில் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தேன். பிரகாரத் துண்களில் இருந்த சிற்பமொன்றில் நிர்வாண பெண்ணொருத்தி தன் கால்களை வான் நோக்கி நீட்டியபடி இருக்க, முன்னும் பின்னுமாக இரண்டு புராண காலத்து மிருகங்கள் அவளைப் புணரும் முயற்சியில் இருந்தன. இந்தக் கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், பிற்காலத்திய நாயக்கர்களும் அதன் திருப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். எப்படி யோசித்துப்பார்த்தாலும் விலங்குகளோடு உறவு கொள்ளும் சமாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது போலிருக்கிறது. நண்பனை அவசரப்பட்டு திட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது.

பிரகாரத் துண்களில் மற்றொரு ஆச்சர்யம் ரிஷிகள், முனிவர்களின் சிற்பங்கள். அவர்களது குறிகள் 'ஸீரோ டிகிரியில்' வரும் காட்டு வாழைப்பழ வர்ணனையை ஒத்திருக்கிறது. அதிலும் ஒரு முனிவரின் ஆண்குறியை அவரே சுவைக்கிறார். முனிவர்கள் காமத்தை ஜெயித்ததாகவும், புனிதர்களாகவும்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தச் சிற்பங்கள் அந்த கட்டமைப்பை உடைப்பதால் 'சுசீந்திரம் - ஒரு பின்நவீனத்துவ ஆலயம்'னு சொல்லிடலாமா?!

Thursday, April 23, 2009

சோத்துக்கு அலைஞ்சேன்!

கனஜோராய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது பந்த். போலீஸ் காவலுடன் பஸ்கள் ஓடும் என பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து விட்டு 'பஸ்களை இயக்காதே' என அதிகாரிகளுக்கு உத்தரவிடும் திராவிடக் குஞ்சுகளின் அக்மார்க் 'டச்'சோடு. பந்தினை முன்னின்று நடத்தும் திருக்குவளை கருணாநிதி முன்னேற்ற கழகத்தின் குடும்பச் சொத்துக்களான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு விளம்பர இடைவேளை கொடுத்து கோடிகளைக் குவித்துக்கொண்டிருந்த பொழுதில் என்னைப் போல பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சோற்றுக்கு அலைந்து கொண்டிருந்தோம்.

விஜிராம், சிவக்குமார் போன்ற அன்பின் பேருருவங்கள் சாப்பிட வரச்சொல்லி அழைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. அண்ணன் சஞ்செய் தன் கையாலே சமைத்து என் பசியாற்றினார். என்ன தவம் செய்தனை?!

***

உள்ளூர் சேனல் ஒன்று நேரலை ஒளிபரப்பில் கிரிக்கெட் தொடர் நடத்த இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அடியேன் ஆடி வரும் அமெச்சூர் கிரிக்கெட் அணியின் பெயரை 'ஆண்டி-வார்' என மாற்றி, சிங்கள இளைஞனொருவரை அணியின் தலைவராக நியமனம் செய்து போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கிறோம். போட்டித் தொடர் முழுவதும் 'ஸ்டாப் - வார்' கறுப்பு நிற டி-சர்ட்டை அணியத் திட்டம். விசாரித்ததில் சென்னையில் மட்டுமே கிடைப்பதாகக் கேள்வி. எங்கே கிடைக்கும், என்ன விலை என்பதை யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

***

அன்பின் விஜி,

பெண்ணை அச்சமுறும் வகையில் பார்ப்பது கூட 'ஹராஸ்மெண்ட்'தான் என்பது என் உறுதியான எண்ணம். 'பாலியல் வல்லுறவு' எந்த தளத்தில், எந்த அளவில் நிகழ்ந்தாலும் கண்டனத்திற்குறியது. அதே சமயத்தில் ஆணும், பெண்ணும் ஒத்திசைந்து உறவு கொள்வதை நாம் விமர்சிக்க வேண்டிய முகாந்திரம் ஏதுமில்லை.

வாரியார் சொல்வார் "காமன் எல்லோருக்கும் காமன்" என்று. ஒரு குறிப்பிட்ட துறையில் பணியாற்றுபவர்கள் அனைவரும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள் எனும் பொருள்படும்படியான வரிகளைத்தான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

***

'லக்கி எழுதுவதில் சாருவைக் காப்பியடிக்கிறார் பார்த்தீர்களா?!' என நண்பரொருவர் சாட்டினார். 'சவம் என்னத்த காப்பியடிச்சா என்னவே... பிடிச்சா படியும், பிடிக்கலன்னா ஓழியும்'னேன். பின்ன புதுசா என்னத்தையோ கண்டு பிடிச்ச மாதிரி சொன்னா கோவம் வருமா? வராதா?!

Tuesday, April 21, 2009

பணியிடக் காமம்

மயில் (எ) விஜிராம் சமீப காலமாகத்தான் எழுதத் துவங்கி இருக்கிறார் என்றாலும் வாசிப்பின் வீரியம் அவரது எழுத்தில் தென்பட்டதை கண்டுகொண்டேன். கோவையில்தான் இருக்கிறார் என்பதறிந்து கேண்டியோடு சென்று சந்தித்தேன். வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் கற்றுக்கொள்ளும் வேகமும், கலைகளின் மீது தீராத தாகம் கொண்ட ஆச்சர்ய பெண்மணி. அவரோடு பேசியது பெரும் புத்துணர்ச்சியைத் தருவதாக இருந்தது என்றாள் கேண்டி. வெகுநாட்களுக்குப் பின் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வந்தோம். கம்பு, சோளம் என்று அன்றாட வாழ்வில் இருந்து அகன்று விட்ட பாரம்பர்ய உணவுப் பொருட்களை நவீன யுகத்திற்கு ஏற்ப சமைத்துக் கொடுத்தார். நளபாகம்.

***

திருச்செந்தூர் முருகன், குலசை முத்தாரம்மன், உவரி சுயம்பு லிங்கம், சுசீந்தரம் தாணூமாலயன், கன்னியாகுமரி பகவதி, மனப்பாடு மணல் மாதா, தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர், ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி, திருநெல்வேலி நெல்லையப்பர் என்று எனது அபிமான கோவில்களைத் தரிசித்துவிட்டு, தாமிரபரணி படித்துறையில் உடலும் உள்ளமும் ஊற குளித்துக் கரையேறி இன்று விடுதியறை ஏகினேன்.

பெரிய பக்தியெல்லாம் ஒன்றுமில்லை. கோவில் பிரகாரங்களில் வெறுமனே சுற்றி வந்து முன்னோர்களின் கலைத் திறனை நாளெல்லாம் வியந்து கொண்டிருப்பதில் ஒரு பிரியம். தவிரவும், நெல்லை என்றால் என் பணியிடத் தோழர்களின் மனதில் இருக்கும் பிம்பத்தைக் கலைத்தாக வேண்டிய கட்டாயமும் இருந்தது. அதைச் செவ்வனே செய்து முடித்தேன். முல்லைத் தமிழ் மணக்கும் நெல்லைச் சீமையின் பெருமைகளை மூச்சுத் திணற சொல்லித் தீர்த்தேன். பாரதியின் வீட்டை, பாஞ்சாலங்குறிச்சியை, குற்றால நாதரை பார்த்தேயாக வேண்டுமென்கிறார்கள்.

***

சாகஸங்கள் நிறைந்த காமிக்ஸூகளைப் படிக்கையில் ஏற்படும் குதுகலத்தோடு 'அயன்' படத்தை ரசித்தேன். கே.வி. ஆனந்த் தேடல் நிறைந்த படைப்பாளி என்பதை படம் நெடுகக் கிடைக்கும் விவரணைகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அவரது 'டெக்னாலஜி விருப்பத்தைப்' பல பேட்டிகளின் மூலம் யூகித்து வைத்திருந்தேன். படங்களில் டெக்னாலஜிக்களை 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' போல எளிமையாக அறிமுகப்படுத்துவது பாராட்டத்தக்கது.

பலரும் சொல்லியடி பாடல்கள்தாம் படத்தைப் பெரிதும் பலவீனப்படுத்துகிறது. ஐந்து பாடல்களையும் நீக்கிவிட்டு, ஜெகனின் பாத்திரப்படைப்பை செம்மைப் படுத்தி, வில்லனின் உறுமலைக் குறைத்திருந்தால் அயன் அனைவராலும் விரும்பப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது. ரியலிஸ படங்களை எடுப்பதற்கான தகுதியும் உழைப்பும் கே.வி. ஆனந்திடம் நிரம்பி இருப்பதன் சாட்சியம் காங்கோ காட்சிகள். வணிகக் காரணங்களுக்கும் வளைந்து கொடுத்தாக வேண்டிய கட்டாயங்கள் எதிர்காலத்தில் அவருக்கு இல்லாமல் இருக்கட்டும்.

***

'கன்னிகளை கணிணி போல பயன்படுத்தினீர்கள்' என்ற பி.ஜி. கதிரவனின் வரிகள் கேண்டியை மிகுந்த ஆத்திரப்படுத்தி விட்டது. இப்படி எழுத அவருக்கு என்ன துணிச்சல். இந்த மென்பொருள் துறைப் பெண்களெல்லாம் அமைதி காத்து இதனை ஆமோதிக்கிறார்களா?! யாரவன் எனத் தேடிப் போய் எழுதிய விரல்களை ஒடித்திருக்க வேண்டாமா?! குறைந்த பட்சம் முகத்தில் காரித் துப்பி இருக்க வேண்டாமா?! என்றெல்லாம் கொந்தளித்தாள். அவளை ஆற்றுப்படுத்தினேன்.

பணியிடக் காமம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் அனைத்துத் துறைகளுக்கும் பொதுவானது. சினிமா, காவல்துறை, கல்வி, ஆன்மீகம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது முறையான / முறையற்ற உறவுகள். தவிர, என் சக ஊழியன் என்னைக் கற்பழித்தான் என்றோ, கர்ப்பமாக்கி விட்டு காணாமல் போனான் என்றோ மென்பொருள் துறை சார்ந்த எந்த பெண்ணும் புகார் செய்ததாகத் தகவல் இல்லை. மாறாக அவர்களை வாகனஓட்டிகள் கடத்தியதும், கற்பழித்ததும், கொன்றதும், கொள்ளையடித்ததும்தான் வரலாறு. பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட அசிங்கமான கற்பனைக்கு கவிதை ஆடை அணிவித்த பி.ஜி. கதிரவன் போன்ற முட்டாள் பேராசிரியர்களிடம் பயிலும் மாணவர்களைக் குறித்துதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.

Saturday, April 18, 2009

டிஸ்கோதேக்கு வரலைம்மா

பயணங்கள் மட்டுமே என்னை புதுப்பித்து திருப்பித் தருகின்றன. கல்யாணம், சாவு, திருவிழா எல்லாம் ஊர் சுற்ற ஒரு சாக்கு. ஜன்னலோரத்து இருக்கையும் முகத்தில் மோதும் காற்றும் துரோகங்களையும் துன்பங்களையும் எளிதாக மறக்க வைக்கிறது தானே?!

இன்று இரவு கிளம்பி திருச்செந்தூர் செல்கிறேன். 19/04/09 ஞாயிறு திருச்செந்துரிலிருந்து கிளம்பி கடற்கரைச் சாலை மார்க்கமாகவே பயணித்து கன்னியாகுமரியை அடைவதாக உத்தேசம். இரு தினங்களுக்கான பயணத் திட்டம்.

மறுபடி அடுத்த வார வெள்ளி இரவு ஆசிப் மீரான் அண்ணாச்சியை சந்திப்பதற்காகச் சென்னை செல்கிறேன். சனி, ஞாயிறு (25 & 26) சென்னையில் இருப்பதாக உத்தேசம். ரமேஷ் வைத்யா, ரமேஷ் குமார், பைத்தியக்காரன், பாஸ்கர் சக்தி, தாமிரா என அண்ணன்மார்களால் நிறைந்திருக்கிறது சென்னை. அத்தனை அண்ணன்களையும் சந்திக்கும் திட்டம் இருப்பதால் 'டிஸ்கோதே' போன்ற உபத்திரவங்களுக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம் என தோழிமார்களுக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறேன்.

Friday, April 17, 2009

பிற்பகலிலாவது உலகத்தின் மீது பிரியமாயிருங்கள்!

விகடனில் வெளியான எனது கீழ்க்கண்ட கவிதைக்கு பல்வேறு விதமான அபிப்ராயங்கள் தினமும் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் வந்து கொண்டிருக்கின்றன. காட்டமான எதிர்க்கவிதையொன்று நடப்பு இதழில் பிரசுரமாகியுள்ளது.

கற்றதனால் ஆன பயன்...
- செல்வேந்திரன், கவிதை

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியெனப் பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
'இந்தியா ஒளிர்கிறது' என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோஷம்தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்...
'கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?'

பிற்பகலிலாவது உலகத்தின் மீது பிரியமாயிருங்கள்!
- பி.ஜி.கதிரவன், கவிதை

எல்லோரும்
வருமான மாமிசம் தின்கிறவர்களே..!
ஆனால், அதை மாலையாய்த் தோளில் போட்டு
தேசத்தை வீச்சச் செய்தது நீங்கள் மட்டுமே
ஜே.கே.ரித்தீஷூக்கே
செலவழிக்கக் கற்றுத் தந்தவர்கள்
நீங்களாகவே இருக்கக்கூடும்.
தவறு
கணினி மொழி கற்றதல்ல நண்பனே...
'கசிந்த கண்' உடன்பிறப்புகளின்
'காய்ந்த வயிற்று' பெற்றோரின்
கசங்கல் நிமிர்த்தாத தன் முனைப்பே.
வாங்கிய வருமானத்தைக்கொண்டு
வாடகைகளை ஏற்றினீர்கள்.
ஒண்டுக்குடித்தனங்கள்
வாகனங்கள் குறைந்த சாலைகளில்
வாழ வந்தன.
மனை விலை உயர்த்தினீர்கள்
பிணம் வைத்து அழவும் வீடின்றி
நடுத்தரச் சுமை தாங்கிகளுக்கு
நாக்குத் தள்ளி நாடி குறைந்தது
'என்ன விலை அழகே'
உங்களின் விருப்பப் பாடலானபோது
'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்'
எங்களுக்கே எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டது.
கணினிகளைக் கையாண்ட கன்னிகளையே
கணினிகளாய்க் கையாண்டும்
அதை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் இறுமாந்த
கலாசாரக் காவலர்கள்
நீங்கள் அன்றி வேறு எவர்..?
வரி போகிறதே என்று உங்களுக்கும்
உயிர்போய் விடக் கூடாதே என்று
எங்களுக்கும்
கவலைகள் மாறுபட்டன.
உங்களைப் பற்றி
சினிமா எடுத்தோம்
பத்திரிகைகளில் எழுதினோம்
நிஜம்தான்,
வளர்ச்சிகளே வாழ்த்தப்படும்
வீக்கங்கள் எப்போதும்
விமர்சிக்கத்தானே படும் நண்பனே..?
உதிர்ந்த பிட்டைக் கூட
இந்த சொக்கர்களுக்குத் தராத
நீங்கள் பற்றிச் சண்டை போடக் கூட
எங்களிடம் சட்டை இல்லையே
யாது செய்வோம் நண்பனே..?
போகட்டும் நண்பனே...
மன்னிக்கத் தெரிந்ததால் தமிழனாய் இருப்பவர்கள்
வீதிக்கு வந்த உங்களுக்காக
பழைய சோற்றிலும்
பச்சை மிளகாயிலும் பாதி தருவோம்.
பாவி நண்பா!
பர்கருக்கும் பீட்ஸாவுக்கும் எங்கே போவோம்?
பெற்றவர்கள் இருப்பதை
பெரும்பாலும் மறந்தவர்களே...
நினைவிருக்கட்டும்,
உங்களின் கணினி யுகத்தில்
முற்பகல் செய்யின்
முற்பகலே விளையும்.
பிற்பகலிலாவது
உலகத்தின் மேல் பிரியமாயிருங்கள்!

நன்றி: விகடன்

Thursday, April 16, 2009

விஷம் குடிப்பேன்

ஜி. நாகராஜனின் ஆக்கங்கள் முழுத்தொகுதி படித்துக்கொண்டிருக்கிறேன். நாகராஜன் சிற்றிதழ்களுக்கு எழுதிய வாசகர் கடிதங்களும் அத்தொகுதியில் இருக்கிறது. 1972ல் ஞானரதம் இதழில் வெளியான கலாப்ரியாவின் கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்தைப் படித்ததும் கலாப்ரியாவின் கவிதை மொழியின் வயது பிரமிப்பை அளித்தது. பதினாறு வயதில் அவரது முதல் கவிதை பிரசுரமாகி இருக்கிறது. நாற்பதாண்டு காலமாய் தமிழ்க்கவிதைச் சூழலில் உயிர்ப்போடும் வீரியத்தோடும் இயங்கி வருகிறார் என்பதை அறிந்து ஆச்சர்யம் கொண்டேன். அவர் இன்னும் பல கவிதைகள் எழுதி என்னையும் தமிழ் வாசகர்களையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

***

"விஜயை மீட் பண்ணனுமா?! கோக் குடிங்க"ன்னு ஊர் முழுக்க விளம்பரப் படுத்தி இருக்கிறார்கள். "அதுக்கு நான் விஷத்தையே குடிப்பேன்" என்று சொல்லிச் சிரித்தாள் கேண்டி. விஜய டி.ஆரின் குறள் டி.வி போஸ்டரைப் பார்த்துவிட்டு ஒரு அட்டகாசமான கேப்ஷன் சொன்னாள். "குரல்வளையைக் குறி வைத்து..."

***
பொதுவாக மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு கணித ஆற்றல் அவசியம். உள்ளும் புறமுமான கணக்கீடுகளில் மேகத்தை துரத்துபவர்கள். 13 * 13 எவ்வளவு என்றால் எனக்கு குறைந்தபட்சம் ஒரு கால்குலேட்டர் தேவை. லாப சதவீதம் காண்பது எப்படி என்பது கூட தெரியாது. எல்லாம் உத்தேசம்தான். பள்ளிக்காலத்தில் கணக்கோடு பெரும் பிணக்கு. சைன் டீட்டா, காஸ்ட் டீட்டா, லாக் புக், அல்ஜீப்ரா போன்றவை சாத்தானின் ஆயுதங்களென பள்ளி வாசல் வரை என்னை விடாமல் துரத்தியது.

ஆனால் பாருங்கள் இந்த நவீன யுகத்தில் ஒருவன் எண்களைப் புறக்கணித்துவிடவே முடியவில்லை. மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண், நிரந்தர கணக்கு எண், ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு, இண்டர்நெட் பாங்கிங் எண்கள், வண்டி நம்பர், எம்ப்ளாயி கோட், இண்டர்நெட் லாக்கிங் எண்கள், லைப்ரரி கார்டு எண்கள், பிராவிடண்ட் பண்ட் அக்கவுண்ட் நம்பர் என நாள் முழுதும் எண்கள் நம்மைத் துரத்தத்தான் செய்கிறது. நான் இன்னமும் எனது மொபைல் எண்களை அட்டையில் எழுதி சட்டைப்பையில் வைத்திருக்கிறேன். திடீர்னு கேட்டா சொல்லத் தெரியனும்ல.

***

'கற்றதனால் ஆன பயன்' கவிதை வடிவத்தில் தோற்றிருந்தாலும் கருத்து ரீதியாக பெருவெற்றி கண்டிருக்கிறது. உலகெங்கிலும் இருந்து பாராட்டுதல்களும், கடும் எதிர்வினைகளும் கலந்து கட்டி வந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஆதரவான முதல் குரல் உங்களுடையது என்று அறிந்த, அறியாத மென்பொருள் நண்பர்கள் பலரும், பல இடங்களிலிருந்து அழைத்துப் பேசுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. திங்கள் சத்யா போன்ற கலாச்சாரக் காவலர்கள் எனக்கு துடைப்பங்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்தபட்சம் ஒரு துடைப்பமாவது அனுப்பி வையுங்கப்பா... ரூம் ரொம்ப குப்பையாக் கிடக்குது...

Saturday, April 11, 2009

வேண்டுகோள்

கவிஞர் நா. முத்துக்குமாரின் சகோதரரும், பிரபல பத்திரிகையாளருமான நா. ரமேஷ் குமார் பட்டாம்பூச்சி பதிப்பகத்தை நிர்வகித்து வருகிறார். 'புத்தகப் பட்டியல்' போட்டியில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பட்டாம்பூச்சி பதிப்பகத்தின் சார்பில் பரிசுகளை வழங்க முன் வந்திருக்கிறார். போட்டியில் பங்கேற்ற இணைய எழுத்தாளர்கள் தங்களது முகவரியை அடியேனின் இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
k.selventhiran@gmail.com

Monday, April 6, 2009

மானத்தோடு வாழ்வது எப்படி?

வாக்குகளுக்காகப் பணம் வாரி இறைக்கப்படுவதைக் கண்டிக்கின்ற தொனியில் 'கண்ணுக்குத் தெரிந்த கயமையைக் களையுங்கள்!' என்கின்ற கட்டுரை தினமணியில் வந்திருந்தது. பழ. கருப்பையா எழுதி இருக்கிறார். திருமங்கலம் தேர்தல் இந்தியாவின் அவமானம் என்றெல்லாம் அவருக்கு ஏக வருத்தம். அ.தி.மு.க முகாமில் இருந்துகொண்டு இப்படி எழுதினால் சனங்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள் என்பது அவருக்குத் தெரியாது போலிருக்கிறது. சாத்தான்குளம் இடைத்தேர்தலில் பெய்த பண மழையில் நனைந்த எங்களூர் ஜனங்களுக்கு இன்னும் ஜலதோஷமே விட்டபாடில்லை. சரி அது கிடக்கட்டும். ஓட்டுக்காகக் காசு என்பதைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது யார்?

சி.பா. ஆதித்தனார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். 1957ல் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலின் போது காசு வினியோகம் துவங்கி இருக்கிறது. எங்கே மாற்றிப்போட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தில் சாமிப் படங்களைக் காட்டி சத்தியம் வேறு வாங்கிக்கொண்டு ஜெயித்தார்களாம்.

ஆக ஓட்டுக்குக் காசு என்கிற கான்செப்ட் துவங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. யாராவது விழா எடுத்தால் காசு வாங்கிக்கொண்டு கலந்து கொள்ளலாம்.

***

பொருளாதாரச் சரிவினால் அச்சு ஊடகங்கள் நாளுக்கு நாள் அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் பல பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களின் உயிர்நாடியான விளம்பர வருவாயில் மரண அடி விழுந்ததே இதற்கு காரணம். தொழில் நிறுவனங்கள் செலவினக் குறைப்பு நடவடிக்கையாக முதலில் எடுத்ததே விளம்பரச் செலவுகளை ஏகத்திற்கும் குறைத்ததுதான்.

ஏற்கனவே பத்திரிகை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களது வாழ்வே கேள்விக் குறியாகிவிடும் அபாயம் இருக்கிறது.

***

எழுத்தாசை கொண்ட நண்பரொருவர் நெடு நாட்களாகப் புத்தகம் எழுதும் முயற்சியில் இருக்கிறார். ஆசை மட்டும் இருந்து அதற்கான முயற்சியோ பயிற்சியோ இல்லாததால் எதைப் பற்றி எழுதுவது என்கிற முடிவுக்குக் கூட வர முடியாத நூதனப்பிரச்சனை. இதுமாதிரி கேசுகளிடம் அல்லல் பட்டுச் சாகவேண்டும் என்பது என் தலைவிதி.

ஒரு நாளைக்கு தலா இரண்டு முறையாவது போன் பண்ணி தாலியை அறுக்கிறார். நேற்றிரவு பதினொரு மணிக்கு அழைத்து 'முறையாக வாழ்வது எப்படி?'ன்னு எழுதட்டுமா என்று கேட்டார். "அதை விட 'மானத்தோடு வாழ்வது எப்படி?'ன்னு எழுதுங்க. நாட்ல பல பேருக்கு அதுதான் இல்லைன்னு" சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்தேன்.

எழுத்தாளரின் பயணத் திட்டம்

07/04/09

இரவு 9:45 - நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி பயணம்

08/04/09

காலை 6:00 முதல் 8:00 - சாத்தான்குளம்

காலை 9:00 முதல் மதியம் 2:00 - பரமன்குறிச்சி ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

மதியம் 3:00 முதல் 5:00 - திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயம்

மாலை 5:00 முதல் 7:00 - காயல்பட்டினம்

இரவு 7:00 முதல் 12:00 - பரமன்குறிச்சி ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

09/04/09

காலை 9:00 முதல் 11:00 - கோவில்பட்டி

காலை 11:00 முதல் 4:00 - சாத்தூர்

மாலை 7:00 முதல் 9:00 - திருநெல்வேலி

இரவு 9:45 - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸில் கோவை பயணம்

வாசகர்கள் முன் அனுமதி பெற்று சந்திக்கும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பேட்டி விரும்பும் பத்திரிகையாளர்கள் அரசியல் தவிர்த்த கேள்விகளோடு பயண அமைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

Friday, April 3, 2009

புத்தகப் பட்டியல் - போட்டி முடிவுகள்

அன்பின் பைத்தியக்காரனுக்கு,

ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்திற்கும் இடையே நிகழ்ந்ததென சொல்லப்படும் உரையாடல் உயிர்மையில் பிரசுரமாகி இருந்தது. அதில் அ.மு குறிப்பிட்டிருந்த நூல்களையும், எழுத்தாளர்களையும், சிறுகதைகளையும் பெரும் மிரட்சியோடு வாசித்து விட்டு, ஒரு மனிதனால் இத்தனை பேரைத் தேடித்தேடி வாசித்தல் இயலுமா என்று நிலைகுத்திய பார்வையோடு யோசித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு ஏற்பட்ட பிரமிப்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகி விட்டது எனக்கு.
உங்களைப் போன்ற மனிதர்கள் ஆபத்தானவர்கள். என் கொள்முதல் 'எலியிடம் கிடைத்த மஞ்சள் துண்டு' என்பதைச் சொல்லாமல் சொல்லி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டுவிட்டது. இந்த வரிகளைத் தட்டச்சு செய்யும் கணத்தில் எனது மேஜையெங்கும் இரைந்து கிடக்கிற புத்தகங்கள் அத்தனையும் குப்பைதானோ என்றொரு சந்தேகம் கிளம்பி தலைக்கு மேலே வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. பல்சுவையளிக்கும் பாக்கெட் நாவல்களை வாரந்தவறாமல் வாங்கிப்படிப்பவனையொத்த வாசிப்பனுவத்தை வைத்துக்கொண்டா இந்த இலக்கிய உலகத்தில் காலம் தள்ள முன் வந்தாய் என ஒவ்வொரு வரியிலும் என்னை நீங்கள் கேலி செய்கிறீர்கள்.

ஆ... விட்டேனா பார் என்று இதைக்காட்டிலும் அதிகமாய் வாசித்துத் தள்ளுகிறேனெனக் கிளம்பி உடலெங்கும் சூடுபட்டுத் திரும்ப விருப்பமில்லை. ஏனெனில் சுஜாதா எழுதுவதே பல நேரங்களில் புரிவதில்லை எனக்கு. இதில் மேநாட்டு எழுத்தாளர்களையும் அவர்களது யுத்திகளையும், கருத்துக்களையும் படித்து, புரிந்து... வெளங்கிடும்.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்தாக வேண்டிய பத்து புத்தகங்கள் என்று கேட்டால் திருக்குறள், பகவத் கீதை, சத்திய சோதனை என்றுதான் பதில்கள் வரும் என்ற என் எண்ணத்தில் அத்தனைப் பேரும் மண் அள்ளிப் போட்டீர்கள். ஏன் காமசாஸ்திரத்தை எவரும் குறிப்பிடவில்லை. வீட்டைக் கட்டமைத்ததே காமம்தானே என்று அதிசயித்திருந்தேன். அப்போதுதான் உங்களது பட்டியல் வந்து சேர்ந்திருந்தது காமசூத்திரத்தோடு. பிரமாதம்.

இந்தச் சில்லறைப் போட்டியினால் பலனடைந்தது நான்தான். கேள்வியுற்றிராத சுமார் ஆயிரம் புத்தகங்கள், நானூறு எழுத்தாளர்கள் அட பெயர்களையாவது தெரிந்து கொள்ள முடிந்தது பார்த்தீர்களா?! ஒவ்வொருவரது பட்டியலும் ஒரு விதம். அவரவர் ஆளுமையையும், சித்தாந்தங்களையும் தீர்மானிப்பது அவரவர் வாசிப்பே என்று நானே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

அவரவர் கருத்தில், தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கை முறையில் அவரவர் பட்டியல் சிறந்தது. இதில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து இதுதான் சிறந்தது என்று ஏனையோரை சங்கடப்படுத்த வேண்டுமா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் உங்களது அழைப்பு வந்தது. யாரையும் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்ற உங்களது வேண்டுகோள் என் யோசனையைப் பலப்படுத்தியது. சரி எல்லோருக்கும் பரிசளித்து விடலாம் என யோசித்தேன். வேண்டாம் ஈரவெங்காயம் காய்ந்த வெங்காயமாகி விடுவார்.

எனவே போட்டியில் கலந்துகொண்டதன் நினைவாக அவரவர் செலவில் உள்ளூரில் ஒரு புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி அறிவித்துவிடலாம். என்ன கொஞ்சம் பேர் திட்டுவார்கள். தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே பின்னாட்களில் மறந்துவிடுவார்கள் என்று நம்புவோமாக...!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

பத்தினி

சேங்காளிபுரம் சுந்தரராம தீட்சிதரின் உபன்யாசத்திற்குப் போயிருந்தேன். இப்போதெல்லாம் உபன்யாசங்களில் அபார்ட்மெண்ட் வாசிகள், சாஃப்ட் வேர் ஆசாமிகள், அமெரிக்காவாழ் பிராமணர்கள் போன்றவர்களைக் கிண்டலடிப்பது பேஷன் ஆகிவிட்டது.

வெளியூர் போயிருந்த கணவன் வீடு திரும்பி இருந்தானாம். அவனது மனைவி 'என்னங்க... ரெண்டு நாளைக்கி முன்ன அல்வா கிண்டியிருந்தேன். நீங்க இல்லாம சாப்பிடப் பிடிக்கல... அப்படியே வச்சிட்டேன்' என்றாளாம். ஒரு பதிவிரதை புருஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் எப்படிய்யா அல்வா கிண்டலாம்? இது பத்தினி செய்கிற காரியமா? என்று அவையோரைக் கேட்டார் தீட்சிதர். நான் நெளிந்தேன்.

அடுத்து, 'வேலை கிடைக்கலை... வேலை கிடைக்கலைன்னு சொல்றாங்க... கனகதாரா ஸ்தோத்திரத்தை நாளொன்றுக்கு ஆயிரம் தடவை வீதம் மூன்று மாதத்திற்கு சொல்லி வந்தால் இந்திரனுக்கு நிகரான பதவி கிடைக்கும். அதைச் செய்யுங்கோ முதல்ல...' நான் கேண்டியைக் கூட்டிக்கொண்டு கனகதாரா தியேட்டருக்குக் கிளம்பிவிட்டேன். போய்யா நீரும் உம்ம உபன்யாசமும்...

திருச்சி கல்யாணசுந்தரம்தான் தமிழின் மிக மோசமான உபன்யாசகர் என்ற என் அபிப்ராயத்தில் சுந்தரராம தீட்சிதரையும் சேர்த்துவிட்டேன். அனந்தபத்மாச்சாரியார், ஆராவமுதாச்சாரியர், வேளுக்குடி கிருஷ்ணன் போன்றோரது உபன்யாசகங்கள் கொங்கு மண்டலத்தில் எங்கு நடந்தாலும் முன் வரிசையில் அமர்ந்து கேடபதுண்டு. அவர்கள் தங்களது பேச்சில் கூடுமானவரை பிற்போக்குத்தனங்களைத் தவிர்க்கிறார்கள். சேங்காளிபுரம் போன்றவர்கள் கற்காலத்திற்கு கைபிடித்து இழுக்கிறார்கள்.

***

தியாகு புக் சென்டர் முன் வடகரை வேலன், சஞ்செய் போன்ற சான்றோர்களும் இன்ன பிற ஆன்றோர்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு கல்லூரிகளில் நிகழும் விழாக்களில் நடிக, நடிகையர் கலந்துகொள்வது பற்றி திரும்பியது. பல கல்லூரி நிறுவனங்கள் நடிகர்களை அழைத்துவர பல லட்சம் செலவு செய்கிறது போன்ற புள்ளி விபரங்கள் வந்து விழுந்துகொண்டிருந்தது. நானும் இந்தக் கோயம்புத்தூருக்கு வந்து ஐந்தரை வருடங்களாகிறது. சிறிதும் பெரிதுமாக நாளொன்றுக்கு சுமார் இருநூறு விழாக்கள், கூட்டங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எந்த ஒரு விழாவிலும் நாஞ்சில் நாடன் தலைமை வகிக்கிறார் என்றோ, முன்னிலை வகிக்கிறார் என்றோ வந்ததில்லை. நக்குகிற நாய்களுக்கு செக்கு போதும் போலிருக்கிறது.

***

பாளையங்கோட்டையில் புஸ்பலதா மெட்ரிக்குலேஷன் என்றொரு பள்ளி இருக்கிறது. அங்கே இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் மழை நீர் சேமிக்கும் திட்டத்தை அமல்படுத்தி அந்த நீரின் மூலம் ஒரு பெரும் தென்னந்தோப்பையும், நீச்சல் குளத்தையும் உருவாக்கி சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். ரொம்பவும் ஆச்சர்யப்பட்டேன் என்று தகவல் சொன்னார் மரம் யோகநாதன்.

மரம் யோகநாதனைப் புதிதாகப் புகழ ஒன்றுமில்லை. இயற்கைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட ஈர மனுஷன். தனி மனிதனாக காட்டை உருவாக்கிய சாதனைத் தமிழன். கோயம்புத்தூரில் சாதாரண அரசுப்பேருந்து நடத்துனராகப் பணியாற்றிக்கொண்டு லட்சக்கணக்கான மரங்களை நட்டுக்கொண்டிருக்கிறார் என்பதைத் தமிழின் அத்தனை ஊடகங்கள் மூலமாகவும் அறிந்திருப்பீர்கள். அவரது சமீபத்திய குறும்படம் 'தாகம்' பற்றி விகடன் வரவேற்பறையில் எழுதி இருந்தார்கள். அதனை முதன் முதலில் எனக்காகத் திரையிட்டு காட்டியபோதே எனக்குப் பரிச்சயமுள்ள பத்திரிகைகளில் எழுதுகிறேன் என்று சிடி வாங்கி வந்து இன்றோடு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. உடலெங்கும் கொழுப்பு சேர்ந்துவிட்ட என்னால் எப்படி எழுத இயலும். தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டேன்.

***

உன்னுடைய பதிவுகள் முழுவதும் உனக்கு நேர்ந்ததைப் பற்றியும் உன்னைப் பற்றியும்தான் எழுதுகிறாய். என்னைப் போன்ற வாசகனுக்கு அதில் என்ன அக்கறை / சுவாரஸ்யம் இருக்க முடியும் என்று பெயர் வெளியிட முடியாத நண்பர் மெயில் அனுப்பி இருந்தார். அவர் எனது பதிவின் நெடுநாள் வாசகர்.

பிளாக் என்பது தபால், செல்போன் போல என் நண்பர்களைத் தொடர்பு கொள்ளும் ஒரு சாதனம். என்னுடைய எழுத்துப் பயிற்சிக்கான ரஃப் நோட். என் அபிப்ராயங்களை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ள எளிதான ஊடகம். அவ்வளவுதான். தவிரவும் எனக்கு நேர்ந்ததைத்தான் நான் எழுதமுடியுமே தவிர உங்களுக்கு நேர்ந்ததை நான் எழுதினால் பல்லிளித்துவிடும். தவிர, நான் எழுதிய அனைத்தையும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதொன்று போதாதா என் எழுத்தில் ஏதோ இருக்கிறது என்பதற்கு.

Wednesday, April 1, 2009

லேடீஸ் ஹாஸ்டல்

காலை ஐந்து மணி. கேண்டி அழைத்திருந்தாள்.

"சொல்லுமா"

"எங்க இருக்க"

"ராம்நகர்ல டோர் கால்ஸ் பார்த்துகிட்டு இருக்கேன்... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு...? ஏதாவது பிரச்சனையா...?!"

"கைய அறுத்துக்கிட்டேன்"

"ஐய்யய்யோ ஏன்... என்னாச்சி"

"பழம் வெட்டறப்போ கையில வெட்டிக்கிட்டேன். ரத்தம் கொட்டுது. நிப்பாட்ட முடியல..."

"ஐய்யய்யோ...பக்கத்துல யாராவது இருக்காங்களா?!"

"யாரும் இல்ல"

"அடக்கடவுளே... பாத்து வெட்டக்கூடாதா?! எதிர்த்தாப்ல இருக்கிற க்ளினிக் திறந்திருக்கா"

"இல்ல... ஆ... அம்மா தலைசுத்துதே..."

லைன் கட்டாகி விட்டது. திரும்ப அழைத்தால் போன் சுவிட்ச் ஆஃப். அடக்கடவுளே இந்த நேரத்திலா 'லோ பேட்டரி'. அடித்துப்பிடித்து எதிர்வரும் நபர்களை இடித்து வளைத்துத் திருப்பி அவளது ஹாஸ்டலுக்கு விரைந்தேன். லேடீஸ் ஹாஸ்டலுக்குள் எப்படி நுழைவது? வாசலில் நின்று 'வாட்ச்மேன்...வாட்ச்மேன்...' பதிலில்லை. சரி யாராவது கேண்டியின் தோழிகள் வந்தால் தகவல் சொல்லி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்விடலாம் என்று வெளியே காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் கழிந்தும் மனித சஞ்சாரமே இல்லாததால் என் பதட்டம் அதிகரிக்கத் துவங்கியது. சரி இதற்கு மேல் பொறுக்க முடியாது என கதவைத் திறந்து கொண்டு நுழைய முற்பட்டால் "யாருப்பா அது பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள நுழையுறது...?!' கேலியாகச் சிரித்தபடி கதவின் மறைவில் இருந்து வெளிப்பட்டாள் கேண்டி.

"நல்லா ஏமாந்தியா.... ஏப்ரல் ஃபூல்!"

எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்.