Saturday, December 31, 2011

தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே

முகநூலில், கூகிள் பஸ்ஸில், புழக்கடையில் என பல இடங்களில் எழுதியதையெல்லாம் இந்த வலைப்பக்கங்களில் தொகுக்க முயல்கிறேன். ‘படப்புல மேஞ்ச மாடு’ மாதிரி கண்ட இடங்களிலெல்லாம் எழுத்தாளன் கிறுக்கிக்கொண்டே இருக்கக்கூடாது; எழுதிய அனைத்தும் ஓரே இடத்தில் வாசிக்க கிடைக்கவேண்டுமெனும் உயரிய நோக்கமே காரணம்.

***

நேற்று மாலை அலுவல் காரணமாக ஒரு தியேட்டருக்குச் சென்றிருந்தேன். கீழரங்கில் ஏழாம் அறிவும், மேலரங்கில் ரா-ஒன்னும் கட்டிப்போடப்பட்டிருந்தன. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மாதிரி கூட்டம் தளும்பிக்கொண்டிருந்தது . அடி, பிடி, ரகளை, கூச்சல், குழப்பம். 50 ரூபாய் பெறுமானமுள்ள டிக்கெட்டுகள் கண்ணெதிரெ 200க்கும், 300க்கும் குத்துப்பிடியாய் போய்க்கொண்டிருந்தது. சேட்டுச் செழிப்பு மிளிரும் பெண் ஒருத்தி - 11 அல்லது 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கலாம். ‘அங்கிள் ரா-ஒன் இருந்தா த்ரீ டிக்கெட்ஸ் கொடுங்க... 1500 தர்றேன்’ என்றாள் எனைப் பார்த்து. கடவுளே, நான் பிளாக்கில் டிக்கெட் விற்பவன் போலிருக்கிறேனா?! பரிதாபமாக விழித்து உதடு பிதுக்கினேன். அவள் அடுத்த மனிதனை நோக்கி நடந்தாள். இதே தியேட்டரில் பாரதி படத்தை 6 பேர்களுடனும், பெரியார் படத்தினை நான்கே பார்வையாளர்களுடனும் ரிலீஸ் நாளில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. தமிழர்களின் சினிமா மோகம் என்று ஒரே வார்த்தையில் சொன்னால் தப்பிதம். இந்தியர்களின் சினிமா வெறி என்றால்தான் சரிப்பட்டு வரும். இஃதொரு தேசிய நோய். அல்லது தேசிய மானக்கேடு.

தீபாவளியன்றே அபிமான நடிகரின் சினிமாவைப் பார்த்தே ஆகவேண்டுமெனும் தகிப்பு ரசிகமன்ற குஞ்சுமணிகளிடம் தொன்றுதொட்டே இருந்துவரும் பழக்கம்தான். பெரும்பாலும் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு மன்றம், கொடி கட்டுதல், கட்-அவுட், பால் அபிஷேகம் போன்ற அமைப்புச் செயல்பாடுகள் ஏதோ ஒரு விதத்தில் ஆற்றுப்படுத்துகிறது. பணம் படைத்தவர்களுக்கு ரோட்டரி, காஸ்மோ கிளப் மாதிரி. ஆனால், இம்முறை என் அனுபவமே வேறு. ஏழாம் உலகத்திற்கு ரிலீஸ் நாளில் டிக்கெட் கிடைக்குமாவென எனக்கு ஏராளமான அழைப்புகள். அழைத்தவர்களில் பெரும்பாலானோர் குடும்ப பெண்கள்தாம். சூர்யா ரசிகைகளாம். எவ்வளவு கொடுக்கவும் தயார், எப்படியாவது ஏற்பாடு செய்யுங்களென மன்றாடுகிறார்கள்.

எனக்கு இவர்களை எதைக் கொண்டுச் சாத்தலாமென வருகிறது. சமைப்பதில், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லித் தருவதில், கணவனுக்கு தொழிலில் உதவுவவதில் இருந்தெல்லாம் இவர்களது அக்கறைகள் விலகிக்கொண்டே இருக்கின்றன. வருடம் முழுவதும் மால்களில் திரிவதும், ஹோட்டலின் இரையெடுப்பதும், தியேட்டர் படிகளில் காத்து கிடப்பதுமாக நகர்ப்புறத்து மத்தியதர வர்க்க பெண்கள் முற்றிலும் கேளிக்கை மனோபாவம் கொண்டவர்களாகி வருகின்றனர் என்பதைக் கண்கூடாகக் காண்கிறேன்.

நகரில் நடக்கும் நாடகங்கள், பட்டி மன்றங்கள், இசைக் கச்சேரிகள், சொற்பொழிவுகள், இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்ல அனுமதிச் சீட்டு கிடைக்குமாவென இதுவரை எந்த பெண்மணியும் எனக்கு போன் செய்து கேட்டதில்லை என்பதையும் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். நடிகன் மீது மோகம் கொள்வது அவரவர் ரசனை சார்ந்தது. அதை ரிலீஸ் அன்றே பார்த்து தீர்த்துவிடத் துடிப்பது தடித்தனம்.

முந்தைய பாரா வரை அடித்து விட்டு நேற்றிரவு உறங்கிப்போனேன். இன்று காலையில் வந்த நாளிதழில், கோவையில் ‘ஏழாம் அறிவு’ படத்திற்கான டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தியேட்டர் வாசலில் அடித்துக் கொலை செய்யப்பட்டார் எனும் செய்தி இடம் பெற்றிருந்தது. என் வீட்டருகே இருக்கும் தியேட்டர்தான். பதட்டத்தோடு அங்கு சென்றேன். நேற்று மாலை கொலை நிகழ்ந்த எந்த தடயமும் இல்லை. டிக்கெட்டுகளுக்காக கூட்டம் அல்லாடிக்கொண்டிருந்தது. பீடு நடை போட்டு பெண்ணொருத்தி எனை நெருங்கி வந்தாள். நான் ஓட்டம் பிடித்தேன்.

***

2011 - நவம்பர் ஃபெஸ்டில் நான் அதிகமும் எதிர்பார்த்திருந்தது ‘லகோரி ஃப்ளூஸ்’ எனும் பாகிஸ்தான் இசைக்குழுவைத்தான். ஏற்கனவே ஸ்ரேயோ கோஷல் நிகர் ‘ஸெப் பங்கோஸி’ன் குரலை கோக் ஸ்டுடியோவில் கேட்டிருந்தேன். ஹனீயா அஸ்லமுக்கும் பிரத்யேக குரல்வளம்தான். மிகுதியும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி நாடுகளைச் சேர்ந்த லெஜெண்டுகளின் இசைக்கோர்வைகளைத்தான் பாடினர். 70களுக்குப் பிறகு பாகிஸ்தானில் எவனும் பாட்டெழுதவில்லையோ என்ற உணர்வு ஆரம்பத்தில் இருந்தாலும் போகப்போக இடம்பெற்ற ‘காதலின் துயரம்’, ‘நண்பர்களை தொலைத்தவர்களுக்கு’, ‘இரவுகள்’ ஆகிய பாடல்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. இரண்டு மணி நேரங்கள் பாடியும் இறுதியில் இடம்பெற்ற உச்சஸ்தாயி பாடல்களில் ஸெப்பின் குரலில் யாதொரு தொய்வும் இல்லை.

லகோரி ஃப்ளூஸ் குழுவிற்கு இதுதான் முதல் இந்திய சுற்றுப்பயணம். முதல் நிகழ்வு சென்னையில்தான் நிகழ இருந்தது. அடுத்தடுத்து விமானங்கள் ரத்து ஆனதால், சென்னை நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு, அந்தப் பெருமை கோவைக்கு கிடைத்தது. தங்களது கடைசிப்பாடல்களை அவர்கள் பாடி முடித்ததும் மொத்த அரங்கமும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ‘இன்னும் கொஞ்சம் பாடுங்கள்’ எனக்கேட்டுக்கொண்டார்கள். ரகளையானதொரு துள்ளிசை போனஸாகக் கிடைத்தது.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் மேடையின் முன் பகுதியில் எனது கணிணியில் வேலை செய்துகொண்டிருந்தேன். பதட்டமாக என்னருகே பாடகி ஸெப் எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் என்ன தேடுகிறீர்கள் என்றேன். சிறிய சதுர பெட்டி ஒன்றினைத் தொலைத்துவிட்டதாகச் சொன்னார். அவரது முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது. அந்தப் பெட்டி இன்றைய நிகழ்வுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அது இசையின் சுவையைக் குறைத்துவிடவும் செய்யலாம்.

நான் ஸெப்பை பதட்டமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். வாலண்டியர்களை அழைத்து உடனே அரங்கத்தில் அப்பெட்டியைத் தேடும்படி பணித்தேன். நிறைய்ய பேர் பரபரப்பாக தேடுவது ஸெப்பிற்கு சங்கடம் தந்திருக்கும் போல. என்னை அழைத்து ‘அந்தப் பெட்டி அப்படியொன்றும் முக்கியமானதில்லை... நான் வழக்கமாய் போடும் வாசனை திரவிய பெட்டிதான் அது...’

நீங்கள் மேடையில்தானே இருக்கிறீர்கள். பார்வையாளர்களுக்கு மணம் வீசுமா என்ன?! கவலையை விடுங்கள்... என்றேன்.

”எனக்குத் தெரியுமே... நான் இன்று வாசனையாக இல்லையென” என பதில் வந்தது.

***

பாரதியார் மெகா கவியா, மொக்க கவியா எனும் வியாபாரம்தான் போன வாரம் முழுக்க கொடி கட்டி பறந்தது. சுத்த அபத்தம். பாரதியார் 559 பக்கங்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனால், கவிதைகளோ 511 பக்கங்கள்தாம் (ஆதாரம்: வர்த்தமானன் மலிவு பதிப்பு அல்லது மட்டமான பதிப்பு) முறைப்படி பாரதி ஒரு கட்டுரையாளரா என்றுதான் சரவலை இழுத்திருக்க வேண்டும். அத்தலைப்பில் சண்டை போட்டு, மண்டை உடைந்து... மிச்சம் மிஞ்சாடி உசிர் இருந்தால்தான் கவிஞரா, சிறுகதையாசிரியரா, கார்ட்டூனிஸ்டா என விவாதத்தை நகர்த்தியிருக்கவேண்டும். நாங்களும் ஆராய்ச்சி பண்ணுவோம்ல :))

***

இன்றோடு அம்மா காலமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. அம்மாவை நினைக்காத நாளில்லையென்பதால், இந்த நாளை மட்டும் தனித்து அனுஷ்டிக்கத் தோன்றவில்லை. கோபத்தில் உதிர்பவை வெறும் ஓசைகள்தாம். அவற்றிற்குப் பொருளில்லை எனும் தெளிவு எனக்கு 25 வயதில் வந்துவிட்டது. அம்மாவுக்கு அது 45 வயதில் வந்திருக்கவில்லை. எதையும் தாண்டிப் போகிற மனப்பக்குவம் வாய்த்திருந்தால், ஒருவேளை அவள் நிறைவாழ்வு வாழ்ந்திருக்கக்கூடும். 14 வயதில் என்னைத் துள்ளத் துடிக்க கதற விட்டு என் கண் எதிரே அம்மா மரணித்தாள். அந்த அதிகாலையில் என் கையாலாத தனத்தை, இந்த உலகை, கடவுளர்களை, மருத்துவர்களை நான் காறி உமிழ்ந்தேன். இன்டென்சிவ் கேர் யூனிட்டில் அவளது கடைசி பத்து நாட்களும் பணிவிடை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பத்து நாட்களும் என்னைச் சுற்றி மரணங்கள் சம்பவித்துக்கொண்டே இருந்தன. அவ்விள வயது அனுபவத்திற்குப் பின் எனக்கு மரணங்கள் உறைப்பதில்லை. மானுட வாழ்வின் தவிர்க்கமுடியாத ஓர் அங்கம் மரணம். லாட்டரி குலுக்கல் போல. யாருடைய எண்கள் விழுகின்றனவோ அவர் கிளம்பித்தான் ஆகவேண்டும். நேற்று மனைவியோடு எங்கேயும் எப்போதும் பார்த்துக்கொண்டிருந்தேன். விபத்துக்காட்சியினை திரு உடல் நடுங்க, கண் கலங்கி பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு அது உறைக்கவேயில்லை. மனுஷ்ய நாடகத்தில் இறப்பு ஒரு சீன்! பிறப்பு ஒரு சீன்! ‘மெர்ஸி பாப்பாவே’ எனக்கு மகளாய் பிறந்து வா. மகனாக செய்ய தவறியவற்றை தகப்பனாக செய்து தீர்க்கிறேன்.


***
ஒரு வளர்கவி எனை அழைத்து பலரும் ஓட்டுவதாக குறைப்பட்டுக்கொண்டார். கவிஞர்கள் கிண்டல் செய்யப்படுவது இம்மண்ணின் மரபான வழக்கங்களுள் ஒன்றுதான். ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் சொலவடை கண்கண்ட உதாரணம். சமகாலத்தில் கவிஞர்கள் மிகுந்த கேலிக்கு ஆட்படுத்தப்பவதற்கு காரணம் கவிதையெனும் பெயரால் நிகழும் பித்தலாட்டமும், கவிதைக்குப் பின்னால் இருக்கும் லேபர் சார்ஜூம்தான் (உழைப்பின்மை). எதையும் எழுதி, எப்படி வேண்டுமானாலும் வார்த்தை கோர்ப்புகளை உண்டு பண்ணி அவற்றிற்கு இலக்கிய அந்தஸ்து உள்ளது எனும் மாயத்தோற்றத்தை உண்டு பண்ணும் உத்வேகம் ஒரு நோயைப் போல உருவாகியிருக்கிறது. என் அபிப்ராயத்தில் சிறுபத்திரிகை உரிமையாளர்களின் இலக்கிய வேள்வியில் சமீபத்தில் உருவாகியுள்ள பெண் கவிகளுள் 95% போலிகள்தாம். தன்னிரக்கம், கழிவிரக்கம், இருண்மை, பிரிவு துயர் இவைதாம் பாடு பொருள். பித்தேறிய சொற்கள், களிம்பேறிய கனவுகள், கசாயம் ஏறிய கால்சட்டை என கிறுக்குத்தனமான உளறல்கள். இந்த பித்தலாட்டங்கள் கேலிக்குரியவை. மிகையான அபிப்ராயங்களை நம்பி உழைப்பின்மை மிளிரும் வரிகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

சுயவிமர்சன அளவுகோல்கள் கொஞ்சம் தாங்கு சக்தியை கொடுக்குமென நம்புகிறேன். யாம் இதுவரை ஒரு வசனம் கூட இலக்கியத் தரத்திற்கு எழுதியதில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன். கவிதை என்பது எனக்கு ஒரு கடினமான ஆட்டம். அதற்கான பயிற்சியும், உழைப்பும் அதிகம். ஆஹா ஓஹோ வகைமை பின்னூட்டம் எனக்கு மயக்கம் தருவதில்லை. விமர்சனங்கள் அயற்சியளிப்பதில்லை.

வளர்கவிகளுக்கு நான் சொல்வதொன்றுண்டு. இம்மொழி உத்தமமான மகாகவி முன்னோடிகளையுடையது. அம்மரபின் வழி தெரியாமல் இங்கே கவிதைப் பிழைப்பு சாத்தியமில்லை. பெண் என்பதால், பெரிய இடத்துக்காரன் என்பதால் வரும் பாராட்டுரைகளை ஒதுக்குங்கள். கேலிகளை ரசிக்கப் பழகுங்கள். ஏனெனில் கேலிகளைத் தாண்டித்தான் கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். சமகாலத்தில் வீரியத்தோடு செயல்படும் மனுஷ்யபுத்திரனைக்கூட பட்டியல் கவிஞன் / மளிகைக்கடை லிஸ்ட் என்றெல்லாம் விமர்சிக்கத்தான் செய்கிறார்கள். செய்கிறேன். அதனாலெல்லாம் அவர் எழுதிய ரம்ஜான் கவிதையின் புகழ் மங்கிவிடுமா என்ன. எழுதி எழுதிச் செல்லும் எழுத்தின் வழி உங்களை அறியுங்கள். அவ்வளவே.

ஒரு பழந்தமிழ் பாடலை பகிரவும் விரும்புகிறேன்

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே


Thursday, December 29, 2011

அறிவினில் உறைதல்

எடுத்த எடுப்பில் வியாபாரம் பேசுவது என் வழக்கமல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு என அறிமுகம் செய்துகொண்டு, எதிராளி பற்றிய தகவல்களைக் கறந்து, இருவருக்குமான பொது நபர்களை / ரசனைகளைக் கண்டறிந்து உரையாடலை வளர்த்து... இவனுக்காக எதையும் செய்யலாம் எனும் மனநிலைக்கு வரும்போதுதான் மெல்ல படலையை அவிழ்ப்பேன். அப்படித்தான் அந்த மகளிர் பள்ளி தலைமையாசிரியரிடம் பேச்சைத் துவக்கினேன். சலுகை விலையில் ஆங்கில இதழ்களை வழங்குகிறோம். மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக்கொண்டு தங்களது மொழித்திறன் மற்றும் பொது அறிவினை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் என்பதை அவருக்கு விளங்கவைப்பது என் திட்டம்.

தலைமையாசிரியருக்கு நல்ல தமிழ்ப்பெயர். அவரது அப்பா திமுககாரனாக இருக்கக்கூடும் என உத்தேசித்தேன். அவர் ஆச்சர்யப்பட்டார். மேஜையில் பாலகுமாரனின் பொன்வட்டில் இருக்கக்கண்டேன். வரலாற்று நாவல் பிரியராக இருக்கக்கூடும் என மூளை சொன்னது. கல்கி, சாண்டில்யன், கடல்புறா, சிவகாமி சபதமென பேச்சை வளர்க்க வளர்க்க அவர் ஆர்வமானார். என்னிடம் சாண்டில்யன் விகடனில் எழுதியதெல்லாம் அந்தக் காலத்து பைண்டிங் வெர்ஷனாகவே இருக்கிறது. யார் தலையில் கட்டலாமென நெடுநாட்களாக ஆள் தேடிக்கொண்டிருந்தேன். அவருக்கு சாண்டில்யனின் கத்திச்சண்டைக் கதைகளை பரிசளிக்கிறேன் எனச் சொன்னேன். பூரித்துப் போனார்.

மெள்ள நான் வந்த நோக்கத்தினை சொன்னேன். கவனமாக கேட்டுக்கொண்டார். அவர் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கமாவதை கவனித்தேன். சொல்லி முடித்ததும் கண்ணாடியைக் கழற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார். ‘செல்வேந்திரன் நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்காதீங்க. சின்ன இன்ஸிடெண்ட். அப்புறம் நீங்களே சொல்லுங்க...’ பீடிகையுடன் ஆரம்பித்தார்.

வழக்கமா காலையில 11 மணிக்கு ஒரு ரவுண்ட்ஸ் போறது என் வழக்கம். க்ளாஸ் ரூம்ஸ், லேப், லைபரரி, கிரவுண்டெல்லாம் ஒரு விசிட் அடிச்சிடுவேன். இந்த அகாடமிக் இயர் ஆரம்பிச்ச புதுசு. பதினொன்னாம் கிளாஸ் வாசல்ல பொண்ணுங்க எல்லாம் முட்டிக்கால் போட்டுட்டு இருக்காங்க. மேத்ஸ் குரூப் பொண்ணுங்க. எனக்கு ஷாக். மொத்த க்ளாஸூம் வெளியேதான் இருக்காங்க. ஒரு பொண்ணைக் கூப்பிட்டு என்னம்மா பிரச்சனைன்னு கேட்டேன். ஹோம் ஓர்க் பண்ணல மேடம்... அதான் மிஸ் எல்லாரையும் முட்டி போடுங்கன்னு சொல்லிட்டாங்கன்னுச்சி.

உங்களுக்கே தெரியும் செல்வேந்திரன்... பத்தாங்கிளாஸ்ல நல்ல மார்க் எடுத்தவங்களுக்குத்தான் மேத்ஸ் குரூப் கிடைக்கும். நல்லா படிக்கிறவங்களே ஹோம் ஓர்க் பண்ணலன்னா எப்படி?! எல்லாரையும் என் ரூமுக்கு வாங்கன்னு சொல்லி விசாரிச்சேன். ஒரு ஸ்டூடண்ட்ஸூம் வாய் திறக்கல. ஏம்மா என்னம்மா பிரச்சனைன்னு நாடிய தாங்கி நல்லாத்த பண்ணியும் பதிலே வரல. சரி என்கிட்ட நேர்ல சொல்ல கூச்சமா இருந்திச்சுன்னா ஆளுக்கு ஒரு பேப்பர் தர்றேன். உங்க பேர அதுல எழுத வேணாம். ரீசன்ஸ் மட்டும் எழுதுங்கன்னு சொல்லிட்டேன்.

பிள்ளைகளும் ரீசன்ஸ் எழுதி கொடுத்துட்டாங்க. ஒருத்தி எழுதியிருக்கா ‘கரண்டு இல்ல’; இன்னொருத்தி ‘எங்கூட்ல சண்ட’; இன்னொருத்தி ‘நாட்டு கிலிஞ்சி பேச்சி’; இன்னொருத்தி ‘எனக்கு காச்ச, மண்டவலி’; அதிர்ந்து போயிட்டேன் செல்வேந்திரன். இந்தப் பள்ளிக்கூடத்துல பத்து வருஷம் படிச்ச பொண்ணுங்களுக்கு தமிழ்ல ஒரு வாக்கியம் அட ஒரு வார்த்தை கூட எழுத தெரியலீங்க...கடுப்பாயிட்டேன். இதுல தமிழ்மன்றம், முத்தமிழ் கழகம்னு ஆயிரத்தெட்டு வெட்டிச்செலவுகள். தமிழ் டீச்சரை கூப்பிட்டேன். எட்டுலருந்து பத்துவரைக்கும் அவங்கதான் தமிழ் எடுக்கறாங்க.

நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலே சொல்லல. குனிஞ்சே நிக்கிறாங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?! வெளிப்படையா சொல்லுங்க... சரி பண்ணிடலாம்னு எவ்வளோ சொல்லிப்பார்த்தேன் பதிலே வரல. சரி கட்ட கடைசிக்கு உங்களுக்கு என்கிட்ட நேர்ல சொல்ல விருப்பம் இல்லண்ணா... ஒரு பேப்பர் தர்றேன். எழுதிக்கொடுங்கன்னேன். அவங்களும் எழுதிக்கொடுத்தாங்க.

‘நா ஒளுங்காத்தான் செல்லிக் கெடுத்தேன். எவலும் படிக்கள...’ன்னு இருந்திச்சு. சொல்லி முடித்துவிட்டு என் முகத்தை பார்த்தார். நான் ஒன்றும் பேசாமல் நடையைக் கட்டினேன்.

Saturday, December 24, 2011

எழுத்துக்கு மரியாதை

நேற்று நண்பன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். 5 மணிக்கு துவங்க வேண்டிய விழா தமிழ்ப்பண்பாட்டின்படி ஒரு மணி நேர காத்திருக்குப் பின் துவங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம், அதிமுக மாநாட்டுக்கு வந்தது போன்ற உணர்வு எனக்கு. கொஞ்மேனும் அறிவுலக பரிச்சயம் உள்ளவர்கள் ஏன் விஜய், டைரக்டர் ஷங்கர் போன்ற ஆசாமிகள் மீது ஒவ்வாமை கொள்கிறார்கள் என்பது புலப்பட்டது. அப்படத்தோடு சம்பந்தப்பட்ட சகல ஜீவராசிகளும் இருவரையும் பாமாலை பாடி பூமாலை சூட்டினர். அடிக்கிற சிங்கியில் காது கிழிந்துவிடாதா?! பிரபு, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள்கூட விதிவிலக்கல்ல.

இறுதியாக ஏற்புரை வழங்கிய ஷங்கர் ‘இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறதென்றால், த்ரீ இடியட்ஸை இயக்கிய ராஜ்குமார் ஹிரானிக்குத்தான் அப்பெருமை சேரும்’ என மிகுந்த அவையடக்கத்தோடு சொல்ல மொத்த கூட்டமும் சிலிர்த்துக்கொண்டது. என் மனது மட்டும் ‘சேதன்...சேதன்’ என அடித்துக்கொண்டது. மொத்த விழாவிலும் சேத்தன் பகத்தின் பெயர் எவ்வகையிலு குறிப்பிடப்படவில்லை. எந்த இடத்திலும் எழுத்தாளனுக்கு பின்னிருக்கைதானா?! சேதனின் ‘பைவ் பாயிண்ட் சம் ஓன்’ நாவலை பேரரசு இயக்கியிருந்தால் கூட அது வெற்றிகரமான திரைப்படமாகத்தான் இருந்திருக்கும். ஐஐடி வாழ்வின் சகல பரிமாணங்களும், நவ இளைஞர்களின் வாழ்வும் இளமையான மொழியில் சித்தரிக்கப்பட்ட நாவல் அது. எவ்வகையில் பார்த்தாலும் த்ரீ இடியட்ஸின் மூலக்கதையாளனுக்கே முக்கியத்துவம் அதிகம். சரி சேத்தனைத்தான் விட்டார்கள். மிகச்சிறப்பாக நாவலை திரைக்கதையாக்கிய ஜோஷிக்கும் அதே கதிதான்!

***

இந்தச் சங்கடங்கள் ஒருபுறம் இருக்க சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் நிறைவு விழாவில் நேற்று ஒரு அபூர்வம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஆண்டிலிருந்து சிறந்த படங்கள் இரண்டிற்கும், தனிநபர் பங்களிப்பிற்கு ஒன்று என மொத்தம் மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பட்டியலில் இந்த ஆண்டு 12 திரைப்படங்கள் இருந்தன. இவ்விருது ஒரு லட்சம் ரூபாயும் கேடயமும் உள்ளடக்கியது. பொதுவாக தனி நபர் பங்களிப்பு விருதுகள் இயக்குனர்கள் அல்லது நடிகர்களுக்கு வழங்கப்படுவதுதான் வழமை. இந்த ஆண்டு சிறந்த தனிநபர் பங்களிப்பிற்கான விருது ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் கதாசிரியரான பாஸ்கர் சக்திக்கு வழங்கப்பட்டது. மதன், ரோகிணி மற்றும் பிரதாப் போத்தன் அடங்கிய ஜூரிக்களின் ஏகோபித்த தேர்வாக பலத்த கரவோலிகளுக்கு இடையே இவ்விருதினை பாஸ்கர் சக்தி பெற்றுக்கொண்டார். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரமாக நான் இதை கருதுகிறேன் என்றார் பாஸ்கர்.

கதை இத்தோடு முடியவில்லை. மதுரையிலிருந்த சு.வெங்கடேசனும் இந்த நிறைவு விழாவிற்கு வரவழைக்கப்பட்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றமைக்காக கவுரவிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் சரத்குமார் தன் சொந்தப்பணத்திலிருந்து வெங்கடேசனுக்கு ஒரு லட்சம் ரூபாயினை மேடையிலேயே வழங்கியிருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது என்னளவில் மிக முக்கியமான நிகழ்வு. விழா அமைப்பாளர்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்துகொள்கிறேன்.

***

“தமிழ் சினிமா ஒரு கூவம் மாதிரி. இரண்டு பாட்டில் மினரல் வாட்டரைக் கொட்டி அதனைச் சுத்திகரித்து விட முடியாது” என எஸ்ரா மற்றும் ஜெயனின் திரைப்பிரவேசத்தைப் பற்றி நாஞ்சில் சொன்னார். இப்போது அவரே மினரல் பாட்டிலாகி இருக்கிறார். பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் என தமிழின் முக்கிய எழுத்தாளுமைகள் கூவத்தை சுத்தம் செய்ய களமிறங்கியுள்ளார்கள். பார்ப்போம்.

Thursday, December 22, 2011

பட்டி தொட்டியெங்கும் பட்டியலடி

ட்டியல் கவிதை எழுதுவது

பாம்புக்கு பேன் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பல்புகளை உடைத்து பச்சடி சமைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பாட்டிக்கு பாலே கற்றுக்கொடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

யானையின் கால்களுக்கு ஆடிடாஸ் தெரிவு செய்வது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பூனைக்கு பாஸ்போர்ட் எடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

ஜக்கி வாசுதேவுக்கு ழகரம் சொல்லிக்கொடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பத்திரத்தை படித்து புரிந்துகொள்வது போல


பட்டியல் கவிதை எழுதுவது

ராகுல்காந்திக்கு பெண் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

எம்.எல்.எம் ஆசாமியிடம் இலக்கியம் பேசுவது போல


பட்டியல் கவிதை எழுதுவது

லேவாதேவிக்காரியைக் காதலிப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பெண்பிள்ளைகளுடைய எதிர்வீட்டுக்காரனின் புன்னகை கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

கல்யாணம் கழிஞ்ச நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

மரவட்டைக்கு மலைப்பாம்பின் சட்டையை அணிவிப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பேச்சுப்போட்டிக்கு மன்மோகனை நடுவராக இருத்துவது போல


பட்டியல் கவிதை எழுதுவது

வீட்டுக்கடன் கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பட்டி டிங்கரிங் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பட்டாயாவில் பஞ்சாமிர்தம் விற்பது போல


ஒரு நக்கல் சிரிப்பு

ஒரு மொன்னை கத்தி

ஒரு முருங்கைக்காய்

ஒரு டயாப்பர்

ஒரு அனால்ஜின்

ஒரு எஸ்.எம்.எஸ்

பட்டியலுக்கு போதுமானதாயிருக்கிறது


சிறு தும்மல்

சிறு கதறல்

சிறு பிளிறல்

சிறு கமறல்

சிறு உதறல்

சிறு சலம்பல்

பட்டியலுக்கு காரணமாயிருக்கிறது


சின்ன பலப்பம்

சின்ன கரித்துண்டு

சின்ன செங்கல்

சின்ன நாமக்கட்டி

சின்ன ஆணி

சின்ன பிரஷ்

பட்டியலுக்கு வேண்டியதாயிருக்கிறது


பெரும் நப்பாசை

பெரும் பதட்டம்

பெரும் உஷ்ணக்கடுப்பு

பெரும் நெஞ்செரிச்சல்

பெரும் பவுத்திரம்

பெரும் கொலவெறி

பட்டியலுக்கு தேவையாயிருக்கிறது


பட்டியல் ஒரு சமகால சீற்றம்

பட்டியல் ஒரு சமகால அவஸ்தை

பட்டியல் ஒரு சமகால துர்கனவு

பட்டியல் ஒரு சமகால சைத்தான்

பட்டியல் ஒரு சமகால சரவல்

பட்டியல் ஒரு சமகால சங்கடம்


பட்டி

தொட்டியெங்கும்

பட்டியலடிப்போம்!


(மாதாமாதம் 15 பக்கங்களுக்கு மேல் பட்டியலிட்டு மரங்களின் தியாகத்தை அர்த்தப்படுத்தும் சமகால பட்டியல் உச்சத்திற்கு சமர்ப்பணம்)

Sunday, December 11, 2011

கிளப்புல மப்புல

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிக்கும் இவ்வமயம் இணையத்தில் 20 பில்லியன் ஹிட்டுகளை அநாயசமாகக் கடந்து விட்டிருக்கிறது ‘கொலவெறி’. பல நூறு வெர்ஷன்கள் உருவாகிவிட்டன. பெண்கள் பாடுவது போல. அரசியல்வாதிகள் பாடுவது போல, குடிகாரர்கள் பாடுவது போல. இன்னும் பல வெர்ஷன்கள் உருவாகும் சாத்தியம் இருக்கிறது. தீந்தமிழில், மலையாளத்தில், தெலுங்கில், ஹிந்தியில், அரபியில் இன்னமும் பெயரறியா பல மொழிகளில் இதே மெட்டமைப்பில் பாடல்கள் உருவாகி உலா வருகின்றன. இந்திய திரையுல பிரபலங்கள் வியந்தோதுகிறார்கள். மெள்ள மேற்கிலும் பரவுகிறது என்கிறார்கள் கடல் கடந்து வாழும் நண்பர்கள். சந்தேகமேயில்லாத தமிழ்ச்சாதனை.

மொழிக்கொலையில் என்ன சாதனை வேண்டிக்கிடக்கிறதென எழவெடுப்பவர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. பொது அபிப்ராயத்திற்கும், ரசனைகளுக்கும் எதிராகச் சிந்திப்பதையே அறிவு ஜீவித்தனத்தின் வெளிப்பாடாகக் கருதுபவர்கள். சமீபத்தில் மண்டையைப் போட்ட ஒரு கஸல் பாடகனுக்கு அஞ்சலி எழுதும்போது ஓர் இசைஜீவி, ‘அவர் யார் தெரியுமா?! ரஹ்மான் ஆஸ்கார் வாங்கும்போது, ரஹ்மானுக்குத் திறமையிருந்தால் அவரை ஒரு கஸலை உருவாக்கச் சொல்லுங்களென’ சொன்னவராக்கும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் எங்களூரில் செத்த பேச்சு என்பார்கள். அவ்ளோ பெரிய அப்பாடக்கரான ஜெக்திக்சிங்கிடம் ‘நீரு ஒரு ஆஸ்கார் வாங்கி காட்டுமய்யா...’ என கேட்க நாதியில்லை. எவருடைய சாதனையையும் சிறுமைப்படுத்த இங்கே எவருக்கும் உரிமையில்லை.

நைட் ஷிப்ட் முடித்து அகாலத்தில் வீடு திரும்புகையில் தினமும் நான் காணும் காட்சி ஒன்றுண்டு. நட்ட நடு ராத்திரியில் குளிரையோ, கொசுவையோ பொருட்படுத்தாமல் சாலையோரங்களில் நாடி நெஞ்சில் சாய்ந்திருக்க தலை குனிந்து உளறிக்கொண்டிருப்பார்கள் டீன் ஏஜ் இளைஞர்கள். கடும் குடியென்பது பார்த்தாலே தெரியும். இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மேல் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களைப் பார்த்து உளறுவோரும் உளர். கிட்டப்போனால், தனியாக புலம்பவில்லை ஹெட்போன் மாட்டிக்கொண்டு எவரிடமோ சண்டையிட்டுக்கொண்டோ, அழுதுகொண்டோ, மன்றாடிக்கொண்டோ, கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டோ இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆம்; இவர்கள் சூப் பாய்ஸ். சுயதவறினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காதலையோ, நட்பையோ தொலைத்தவர்கள். இழந்த சொர்க்கத்திற்காக வருத்தப்பட்டு கண்ணீர் வடிப்பவர்கள்.

‘கொலவெறி’ மனப்பாரம் சுமக்கிற இந்த தலைமுறையின் பாடல். இதில் புழங்குவது அவர்களது வாழ்வின் மொழி. இந்த இசை சுய எள்ளலின் இசை. ஏமாற்றத்தின் இசை. இதற்கு முன்பு தனுஷ் எழுதி பாடிய ‘அடிடா அவள... வெட்டுறா அவள...’ கூட ஒரு சூப் சாங்க்தான். தன் மொழியில், தன் பிரச்சனையைப் பாடுகிற ஒரு பாடலை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். நமக்கும் பிடித்திருந்தால் அணக்கம் காட்டாமல் ரசித்து விடுவோமே. காசா... பணமா...?!

***

கொலவெறி பாடலுக்கு முன்னரே இணையத்தில் வெளியாகி பல லட்சம் ஹிட்டுகளை அடைந்த ஒரு பாடல் ‘கிளப்புல... மப்புல...’ ஒருவகையில் கொலவெறிக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். அசலான தமிழ்-ராப். உருவாக்கியவர் ஆதி எனும் கொங்கு இளைஞனும் அவனது நண்பர்களும்.

கரண்டையைத் தாண்டும் மேலாடை; தலையிலும் முழங்காலிலும் கைக்குட்டையால் கட்டிக்கொள்வது; தொப்புளைத் தொடும் கழுத்துச் சங்கிலி அதன் முடிவில் சொழவு தண்டிக்கு டாலர்; மூக்கில், உதட்டில், நாக்கில், கொதவாளையில் இன்னபிற உடல் உறுப்புகளில் கம்மல்கள்; ஒண்ணுக்கு கேட்கும் விரலில் ஒன்பது வகை மோதிரங்கள்; நடுவிரலில் நண்டுக்கால் மோதிரம்; தோளில் படரும் ஜடாமூடி; தெருச்சண்டையில் பெண்கள் செய்யும் ஆபாச விரல் சமிக்ஞையினை அடிக்கடி காட்டும் காக்காவலிப்பு நடனம்; விரலி மஞ்சளை மிக்ஸியில் அடிப்பது மாதிரி எவனாலும் புரிந்துகொள்ள முடியாத வேகத்தில் வரிகள் - இவைதாம் ஹிப்ஹாப்பின் அடையாளங்களெனக் கொள்ளப்படுகிறது. உண்மை அதுவல்ல.

ஹிப்ஹாப் இசைவடிவம் ஏனோதானா உளறல் வகைமையன்று.
1970களில் அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பரின மக்களின் இசையாக வெடித்துக்கிளம்பிய புரட்சிகர இசைவடிவம்தான் ராப். இதனால்தான் இன்றளவும் ஒடுக்குமுறையை, ஆக்கிரமிப்பை, இனக்கசப்புகளை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இசையாக ஹிப்ஹாப் இருக்கிறது. போருக்கு எதிரான உலகளாவிய இயக்கமான மாவோ ஒவ்வொரு ஆண்டும் வான்கூவர் நகரில் ஹிப்ஹாப் ஃபெஸ்டிவல்கள் நடத்துகிறார்கள். கழகங்களுக்கு எதிரான கலக இசை என்றோ, கலவை இசை என்றோ என்னளவில் இதனை பொருள் கொள்கிறேன்.


சொல்லே இசையாக ஓங்கி ஒலிப்பதுதான் ராப். விளிம்பு நிலையிலிருந்த இனத்தின் இசையெனினும் டிஜேயிங், மிக்ஸிங், கிராஃபிட்டி, பிரேக்கிங், பீட்பாக்ஸ் எனும் ஐவகை ஒழுங்கமைவுகளைக் கொண்டது. இவற்றைக் கடைபிடிக்காமல் உருவாவதை வெற்றுக் கரைச்சல் என்றுதான் கொளல் வேண்டும். கொஞ்சம் பிரயத்தனம் எடுத்துக்கொண்டால், ஹிப்ஹாப் இசைவடிவினை எவரும் கேட்டு ரசித்து கொண்டாட இயலும். தாய்த்தமிழை ராப் இசைவடிவத்திற்குள் புகுத்தி பலரும் சாதனைகள் படைத்திருக்கிறார்கள். மலேஷிய யோகி.பியை தமிழ் -ராப்பிசையின் தந்தை எனலாம். புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் பலரும் ராப்பில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த அசல் அக்மார்க் பச்சைத் தமிழனாக இதில் முத்திரை பதித்திருப்பவர் என நான் ஆதியை சொல்லத் துணிவேன்.

ஆதி ஒரு அண்டர் கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட். அது என்ன அண்டர் கிரவுண்ட்?! அஃதொர் இயக்கம்; அல்லது பிடிவாதம்; வெகுஜன ஊடகங்களின் வாசல்களில் வாய்ப்புகளுக்காகப் போய் நிற்காமல், அவற்றின் அகோரப் பசிக்காகத் தன் கலையை நீர்த்துப் போகச் செய்யாமல், மனச்சாய்வுகளின்றி மக்களுக்காக மக்களின் மத்தியில் கலை வளர்ப்பவன்தான் அண்டர்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட். இவன் ஒருபோதும் ஊடகங்களை நோக்கிச் செல்லான். மக்களின் மத்தியில் தன் கலையினைக் கசிய விடுவதன் மூலம் ஊடகக் கவனத்தை தன்னோக்கி குவியச் செய்பவன். தமிழிலக்கியத்தில் இதற்கு உடனடி உதாரணமாக நான் கோணங்கியைச் சொல்வேன். பூமணியும் நினைவில் எட்டிப்பார்க்கிறார். விருது செய்திகளில் அவரது பெயர் அடிபட்டதும் ஒரு பெரும் பத்திரிகை அவரிடம் சிறுகதை கேட்டிருக்கிறது ‘இத்தனை காலமும் சிறுபத்திரிகையில் மட்டுமே எழுதுவது என்றிருந்திருக்கிறேன்; இனிமேலும் அப்படியே இருந்துடறனே...’ என பதில் வந்திருக்கிறது.

ஆதியின் ஹிப்ஹாப்தமிழா ஒரு அண்டர்கிரவுண்ட் பேண்ட். இவர்களின் ‘கிளப்புல மப்புல’ பாடல் யூ டியூபில்தான் வெளியானது. கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களின் மத்தியில் பிரபலமாகி, திரும்ப திரும்ப கேட்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டு இன்று மூன்று லட்சம் ஹிட்டுகளை அடைந்த பிறகு ஊடகங்கள் அவர்களைப் பின் தொடர்கிறார்கள். பேட்டி காண்கிறார்கள். எதுவானபோதும் ஆதி ஒரு அண்டர்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்டாகவே தொடர்கிறார். சினிமாக்காரர்களின் வீட்டு வாசலிலோ, சேனல்களின் வாசல்களிலோ நிற்கும் ஆசையில்லை.

தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் தற்போது ஹிப்ஹாப் தமிழா குழுவினரின் இசை நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் ‘தேர்தல் ஆனந்தம்’ பாடலுக்கு இவர்களைத்தான் அணுகினார்கள். இந்திய அரசாங்கத்தோடு இணைந்து இவர்கள் வடிவமைத்த தேர்தல் பாடல் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி வாக்குப்பதிவினை அதிகரிக்கச் செய்தது.

ஹிப்ஹாப் தமிழாவில் அப்படியென்ன ஸ்பெஷல்?! தமிழ்தான் ஸ்பெஷல். முடிந்தவரைக்கும் அழகு தமிழில் சமகாலத்தினைச் சித்தரிக்கிறார்கள். இளைஞர்களின் மொழியில் விரிகிறது இவர்களின் பாடல்கள். தங்களது சமூக விமர்சனங்களை எதிர்ப்புகள் வரினும் முன் வைக்க தவறுவதில்லை. தமிழில் பேசுவதை வெட்கமாக கருதும் தலைமுறையை அத்தலைமுறையின் பிரதிநிதியே கேலி செய்கிறார். ஆதியின் அக்கறை உண்மையானது என்பதை அவரது சமீபத்திய நிகழ்ச்சியொன்றில் கண்டுகொண்டேன். தமிழ்நாட்டில் தமிழராய் இருந்துகொண்டு தமிழில் பேசுவதைக் கேவலமாக நினைப்பதே உண்மையான கேவலம் என்கிறார். அவரது ரசிகர்கள் கரகோஷம் செய்து ஒத்துக்கொள்கிறார்கள். தமிழுணர்ச்சியை தூண்டி காசு பார்ப்பதை வியாபாரி செய்வான். கலைஞன் செய்யமாட்டான். தங்கிலீஷ் பெண்களைக் கேலி செய்யும் ஓர் அழகான பாடல் ஆதியின் அடுத்த ஆல்பத்தில் வெளியாக இருக்கிறது. அதற்குப் பின் ‘ஹேய் வ்வாட்ஸ் அப் யார்ர்... கோன்னா ஹேங்க் அவுட்...’ பீட்டர்கள் கணிசமாகக் குறையும் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பல்கலைக்கழகங்களும், பேராசிரியர்களும், மகாநாடுகளும் தமிழ் வளர்க்கிறேன் பேர்வழி என என்னமோ செய்துகொண்டிருக்கட்டும். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என கிளம்பியிருக்கிறார் ஆதி. அவர் செய்து முடிப்பார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவர் தன் முன்னோடி புரட்சிப்பாடகனாக நினைப்பது ‘எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என முழங்கிக் கிளம்பிய பாரதியை.Saturday, December 10, 2011

அன்புடன் அழைக்கிறேன்

2011 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. விருது வழங்கும் விழா கோவையில் வரும் 18-12-2011 (ஞாயிறு) அன்று நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், பிரதீபா நந்தகுமார், வே.அலெக்ஸ் ஆகியோருடன் இயக்குனர் பாரதிராஜாவும் கலந்துகொண்டு பூமணியை சிறப்பு செய்ய இருக்கிறார்கள். விழாவில், பூமணியின் படைப்புலகம் பற்றி ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்’ எனும் நூலும் வெளியிடப்பட இருக்கிறது. அடியேன் விழாவினை தொகுத்து வழங்குகிறேன். நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, November 20, 2011

அறம் வெளியீடு - ஈரோட்டில்...

தமிழின் தன்னிகரற்ற படைப்பாளுமை ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பான ‘அறம்’ வரும் 26-11-11 (சனிக்கிழமை) ஈரோட்டில் வெளியாகிறது. நிகழ்வில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், பவா செல்லத்துரை, டாக்டர் ஜீவா, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 6 மணிக்கு விழா துவங்க இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்களை அன்போடு அழைக்கிறோம்.

Wednesday, November 2, 2011

எத்தியோப்பிய சிங்கம்

உலகளாவிய எழுத்தாளுமைகள் பலரை அ.முத்துலிங்கம் செய்த நேர்காணல்களின் தொகுப்பு ‘வியத்தலும் இலமே’. எழுத்தாளத்துடிப்பில் இருப்பவனுக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிற நூல். அடிக்கடி எடுத்துப் படிப்பேன். அந்நூலில் விதிவிலக்காக ஜெனிவீவ் எனும் மாரதான் ஓட்டப்பந்தயத்திற்குப் பயிற்சி பெறும் ஒரு பெண்ணுடனான உரையாடல் இடம் பெற்றிருக்கும். அந்த நேர்காணலை அமு ஓர் ஆப்பிரிக்க சொல்லாடலோடு துவங்கி இருப்பார்.

“ஆப்பிரிக்க காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்தைவிட அதிவேகமாக அது ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானை விட அது வேகமாக ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

நீ சிங்கமோ மானோ சூரியன் எழும்போது எழு.

ஓடத்தொடங்கு.”


***
1974ல் எழுத்தாளர்கள் மாநாட்டிற்காக அமெரிக்காவின் அயோவா சிட்டிக்குப் பயணிக்கிறார் அசோகமித்திரன். கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஜாகை அங்கே. அமெரிக்க வாழ்வும், சந்திக்க நேர்ந்த மனிதர்களும்தான் ‘ஒற்றன்’. ஒவ்வொரு அத்தியாயங்களும் தனித்தனியாக ஒரு சிறுகதையின் அனுபவத்தை தரக்கூடியது. ஒட்டு மொத்த வாசிப்பில் தனித்துவமான நாவலாக உருப்பெறும். அசோகமித்திரனின் ஆல்டைம் பெஸ்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் படைப்பு.

ஒற்றன் எனும் தலைப்பிற்கு காரணமாக அமைந்தவர் அபே குபேக்னா எனும் எத்தியோப்பிய எழுத்தாளர். 27 நாவல்களுக்கு மேல் எழுதி அவரது நாட்டில் பெரும்புகழ் மிக்கவராக திகழ்ந்தார். எத்தியோப்பியாவில் அப்போது மன்னராட்சி நிலவியது. மன்னனின் மகனுக்கு நெருங்கிய நண்பராக அபே இருந்தார். தனது சமீபத்திய நாவலான ஒற்றனை பல்கலை பேராசிரியர் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.

அபே குபேக்னா அயோவாசிட்டி எழுத்தாளர் சந்திப்பில் அசோகமித்திரனைத் தவிர வேறு எவரோடும் நெருக்கம் காட்டாத முசுடு. புதியதாக தைத்த ஒரு கோட்டினையே சதாசர்வ காலமும் அணிந்துகொண்டு வளைய வருபவர். சுத்தமாய் இருப்பதில் அவநம்பிக்கையும், குடிப்பதில் ஆர்வமும் கொண்டவர். ஏனோ எல்லோர் மீதும் கண்மூடித்தனமான கசப்புணர்ச்சி. கஜூகோ எனும் அழகிய ஜப்பானிய பெண் எழுத்தாளரோடு நெருங்கிப் பழகும் துடிப்பு அபேவுக்கு உண்டு. ஆனாலும், குபேக்னாவின் எண்ணம் ஈடேற வில்லை. அபேயின் பெயரைக் கேட்டாலே கஜூகா கரித்துக்கொட்டுவாள். இருவருக்குமான சந்திப்பில் ஏதோ ஒரு கசப்பு நிகழ்ந்திருக்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக கஜூகோ அசோகமித்திரன் மீது மிகுந்த அன்பாக இருந்தாள். இது குபேக்னாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. கஜூகாவுடன் தனக்கு இடைவெளி ஏற்பட அமிதான் காரணம் என நினைக்கிறார். உச்சகட்டமாக ஒரு நாள் அசோகமித்திரனை அவர் விழத்தள்ளி அடித்தும் விடுகிறார். சில நாட்களில் அபே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், அயோவாசிட்டியை விட்டு வெளியேறி விடுகிறார்.

சில நாட்களில் எத்தியோப்பியாவில் புரட்சி எனும் செய்தி மட்டும் அசோகமித்திரனை வந்தடைகிறது. தனது நண்பன் குபேக்னா என்னவானார் எனும் கவலையோடு அந்த அத்தியாயத்தை முடித்திருப்பார் அசோகமித்திரன். முற்றிலும் நெகட்டிவாகவே நடந்துகொள்கிற குபேக்னா மீது நமக்கு எள்ளளவும் எரிச்சல் வராது. மாறாக பரிதாபமும், கழிவிரக்கமுமே உண்டாகும். ஆம், நாம் குபேக்னாவை அசோகமித்திரனின் இதயத்தின் வழியாகவே பார்க்கிறோம். இயல்பிலேயே எத்தியோப்பியா எனும் சபிக்கப்பட்ட தேசத்தின் மீது பொங்கும் பாசமும், குபேக்னாவின் தாழ்வுணர்ச்சியும், அவநம்பிக்கையும் நமக்கு பரிவை உண்டாக்குகிறது.

***

குபேக்னா என்னவாகியிருப்பார்?! இப்போது அவருக்கு என்ன வயதிருக்கும்?! எத்தியோப்பியாவில் என்ன செய்துகொண்டிருப்பார்?! எனும் சிந்தனையிலேயே உறங்கிப்போய்விட்டேன். விடிந்ததும் இணையத்தில் குபேக்னாவைக் குடைந்துகொண்டிருந்தேன். எத்தியோப்பிய அரசின் வீழ்ச்சிக்குப் பின் சில வருடங்களிலேயே குபேக்னா இறந்து விட்டார். அவரது ஒரிரு நாவல்கள் எத்தியோப்பியாவில் தடை செய்யப்பட்டன. அவரது ஆசைப்படி ஒற்றன் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகி இருந்தது. அவரது நாவல்கள் தற்போது பெரிதாக வாசிக்கப்படவில்லை. ஆனால், அபே குபேக்னாவின் வரிகள் இன்று உலகம் முழுவதும் ஒரு பிரபலமான சொல்லாடலாக, உத்வேகமூட்டியா, தன்னம்பிக்கையளிப்பதாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது... அவ்வரிகள்


“ஆப்பிரிக்க காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்தைவிட அதிவேகமாக அது ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானை விட அது வேகமாக ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

நீ சிங்கமோ மானோ சூரியன் எழும்போது எழு.

ஓடத்தொடங்கு.”

Sunday, October 16, 2011

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

கம்பார்ட்மெண்ட் முழுக்க நிலக்கடலை தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்கு பீலியும், தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொருத்து கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் என கிடக்கலாம்.

டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லி குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி... திர்னெலி எப்பொ வரும்’ என கடுப்பை கிளப்பி இருப்பார்.

சீட்டு நம்பர், பெர்த் நம்பர் என இரண்டு எண்கள் எல்லா டிரெய்னிலும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்று மேட்ச் ஆனால் போதும் என்பது இதில் பயணிப்பவர்களின் பொது அபிப்ராயம். இதுதான் என் பெர்த் என வாதிடும் எவரும் வென்றதில்லை. ‘ரெண்டு நம்பர் போட்டு வெச்சவன்ட போயி கேளுலெ... எங்கிட்ட ஏன் எழவு எடுக்க...’ (நான் சிலமுறை ‘பிரதிவாதி’ சீட்டில் இருக்கும் எண்ணிற்கான பர்த்தில் போயாவது சென்று படுத்துவிடலாமென முயற்சித்தால், அங்கனக்குள்ளயும் ஒரு அண்ணாச்சி சாமியாடிக்கொண்டிருப்பார்)

சாப்பாட்டு பொட்டலத்தை அவிழ்த்து விட்டு அநியாய விலை கொடுத்து வாங்கின அக்குவாபீனாவை ஓபன் பண்ணிய அடுத்த நிமிடமே ‘தண்ணீ கொஞ்சம் கிடைக்குமா தம்பீ...’ என சர்வ நிச்சயமாக ஒருவர் கேட்பார். வாங்கி மடக் மடக்கென குடித்து விட்டு மிச்ச தண்ணீரில் கை கழுவி வாயும் கொப்பளித்து விட்டு கடமையுணர்ச்சியோடு காலி பாட்டிலைத் திரும்ப தருவார் ‘எந்த ஊர் தண்ணீடே... எழவு சப்புன்னுல்லா இருக்கு’ எனும் ஒருவரி விமர்சனம் பதிலீடாகக் கிடைக்கலாம்.

‘விஎஸ்கே செட்டுல டின்னு வருதுடே. கச்சாத்துல எத்தனைன்னு பாத்து எண்ணி எறக்கி வைய்யி. லோடு மேன் நான் இல்லண்ணா டின்னுக்கு ஆறு ரூவா கேப்பான் தாயோளீ... அவனுக்கு 5 ரூவாய்க்கி மேல சல்லிப்பைசா கொடுக்காத... கடய எடுத்து வெக்கயில வெங்காய மூடய மறந்து தொலச்சிடாதல. தக்காளி கெடந்து நாறுது. சவம் மீனாட்சி ஓட்டல்காரன் கேட்டான்னா ரெண்டு, மூனு கொறச்சி தள்ளிடு...ஏய்... அண்ணாச்சி ஊர்ல இல்லன்னு சாயங்காலமே கடய சாத்திராதீங்கலே... சாவிய பத்திரமா அக்காட்ட கொடுத்து வீட்டுக்குப் போங்க...கம்பெனிக்காரன் எவன் வந்தாலும் அண்ணாச்சி ஊர்ல இல்ல.. பெறவு வான்னு சொல்லு...ரெகுலர் ஆளுககிட்ட பதனமா பேசுங்கலே. எவன் கேட்டாலும் ஓசி சிரெட்டு கொடுக்காதீய... ’ என ஒவ்வொரு பெட்டிக்கும் உச்சஸ்தாயில் ஏதாவது ஒரு அண்ணாச்சி இருந்த இடத்திலிருந்தபடியே தன் அப்பரஸெண்டுகளிடம் மன்றாடிக்கொண்டிருப்பார். ஆனால், செல்போன் என்பது ஒலிபெருக்கி அல்ல. அதில் மெதுவாகப் பேசினாலே, எதிர்முனைக்கு கேட்கும் என்பதை ஏன் இதுவரை யாரும் அவருக்குச் சொல்லிக்கொடுக்க முயலவில்லை என்பதுதான் எனக்கு புரியாத புதிர்.

கழிப்பறைக்கு வெளியே இருந்து திறப்பதற்கான ஒரு கொண்டி தவிர, உள்ளேயிருப்பவர்கள் பூட்டிக்கொள்ள ஒரு கொண்டி இருப்பது முட்டாள்தனமன்றி வேறென்ன?! முன் யோசனை இன்றி கதவைத் திறந்துவிட்டால், இடுப்பு வரை ஏற்றி விட்ட வேட்டியும், தோளில் கோடு போட்ட அன்- டிராயர் சகிதமாக அண்ணாச்சி ‘குத்தவெச்சாசனம்’ செய்து கொண்டிருப்பார். வெளியே வந்ததும் ‘கொள்ளக்கி இருக்குதவன எட்டிப்பாக்கியே அறிவு இருக்காலே... செத்த மூதி...’ என்பார்.

புத்தகத்தை எடுத்து அட்டையைப் புரட்டியிருக்க மாட்டோம். சட்டென்று பாய்ந்து விளக்கையணைத்து விட்டு பிறகு உத்தமரைப் போல ‘தம்பீ... வாசிக்கியளோ’ என பதமாக கேட்பார்கள். இவர்களாவது பரவாயில்லை. ஒருமுறை ஒரு பெரியவர் ‘வெள்ளனே எதும் பரீச்சயா’ என்றார். நான் இல்லையென தலையாட்டி கதை புஸ்தகம் என்றேன். அப்புறம் என்ன எழவுக்குடே லைட்ட போட்டு எரிக்குதே... கரண்டு பில்லு எவம்லே கட்டுகது’

லேசாகப் பேச்சுக்கொடுப்பவர்கள் பெருசாக ஆப்படிப்பார்கள். தம்பி எந்த ஊருக்குப் போறீய என துவங்குவார்கள். ‘கோயம்புத்தூரா... எம்மவன் வேல்முருகன் அங்கனதான கட வச்சிருக்கான். நெல்லை ஸ்டோர்ஸூன்னு. தெரியுமா அவன?!’ ஆகச் சிக்கலான கேள்வி. கோவையில் தடுக்கி விழுந்தால், ஒரு நெல்லை ஸ்டோர்ஸ்தான். எந்த ஏரியாவுல என மையமாக கேட்டு வைப்பேன். மேட்டுப்பாளையம் ரோட்டுல என பதில் வரும். மேட்டுப்பாளையம் வரைக்கும் மேட்டுப்பாளையம் ரோடுதான்... எந்த ஏரியான்னு சொல்லுங்க என சொன்னால் ஆச்சு. ‘ஏய்... எத்தன வருசமாட்டு எனக்க மவன் அங்க இருக்கான்... மேட்டுப்பாளையம் ரோடு நெல்லை ஸ்டோருன்னு கேட்டா தொட்டில்ல கெடக்க புள்ள கூட சொல்லுமே... மெயினான எடத்துல இருக்க அவங்கடய தெரியல்லங்க... நீயெல்லாம் என்னத்தப் பொழச்சி...’ கோவை வரும்வரை நம்மை எரிச்சலாகவேப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஓபன் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரிசர்வில் ஏறி படுத்துக்கொள்ளுபவர்கள். டிடிஆரையும், பயணிகளையும் படுத்தும்பாடு சொல்லில் ஒளிரும் சுடர். ஒருமுறை முழங்கை வரைக்குமான தொள, தொள சட்டையும், கதர் வேட்டியும் அணிந்த பெரியவர் ஒருவர் ஓபன் டிக்கெட்டோடு அப்பர் பர்த்தில் படுத்துக்கொண்டார். தன்னுடைய ரிசர்வ்டு டிக்கெட்டைக் காட்டி அவரோடு மன்றாடிக்கொண்டிருந்தார் ஒருவர். ‘வெள்ளக்காரங்கிட்ட சண்டயப் போட்டு வண்டிய வாங்கி வுட்டவம்ல நாங்கள்லாம்... செம்பகராமம்பிள்ளன்னு ஆரல்வாய்மொழில வந்து கேட்டுப்பாருல... உன்னய மாதி காசு கொடுத்துதாம்ல நானும் ஏறியிருக்கன். இவ்வளவு சீட்டு சும்மா கெடக்குதுல்லா... அங்கன போயி கட்டய சாயில... இங்கன வந்து கேறுகே...தூமைவுல்லா...’

அப்பர் பெர்த் என்றால் காற்றாடியைப் போட்டதும் சாணி மணம் கமழும். காரணம் வேறொன்றும் இல்லை. தங்களது பாதரட்சைகளின் பாதுகாப்பு கருதி அவற்றை ஃபேனின் மேல் கச்சிதமாகச் சொருகி வைத்திருப்பார்கள்.

ஆனபோதும், ஆனபோதும்… கோவையிலிருந்து கிளம்பும்போதும் சரி, திருநெல்வேலியிலிருந்து திரும்பும்போதும் சரி ‘ஏல, லேய், ஏய் மக்கா, மக்களே, தம்பீ, அண்ணாச்சி’ என ஏதோவொரு பதத்தில் விளித்து... ஏழெட்டு கேள்விகளில் நமக்கும் அவருக்குமான பொது மனிதர் ஒருவரைக் கண்டுபிடித்து ‘அவாள் நல்லாருக்காளா... தங்கமான மனியனாச்சே’ என விசாரித்து ஊர் கதை, குடும்ப கதைகளைக் கேட்டறிந்து...பனங்கிழங்கையோ, முந்திரிக்கொத்தையோ தின்னக் கொடுத்து, தாண்டவன்காடு வந்தீங்கன்னா தவசி நாடார் வீடு எதுன்னு கேட்டு வாங்க...தசரா ஜே..ஜேன்னு இருக்கும் என அழைக்கவும் தவறாமல், இறங்கும் போது தோளைத் தட்டி ‘தம்பீ...அப்பா, அம்மாக்கள வயசான காலத்துல வச்சி காப்பாத்துங்கடே...அவாள் மனசு குளிர்ந்தாதான் வாழ்க்கைல முன்னுக்கு வரமுடியும்’ என புத்திமதி சொல்லி விடைபெறும் மனிதர்கள் இந்த ரயிலெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு சாயலில், சிறு அசைவில், எச்சில் தெறிக்க சிரிக்கும் சிரிப்பில் பெரியப்பாவை, சின்ன தாத்தாவை, கடையநல்லூர் மாமாவை, அப்பாவை, பெரிய அத்தானை, எட்டாம் வகுப்பெடுத்த பால்துரை சாரை, பருவம் பார்க்கும் ஏசுவடியானை நினைவுபடுத்துபவர்களாக இருந்துவிடுவது என்றும் பிடிபடாத ஆச்சர்யம்.

Friday, September 23, 2011

திருப்பூரில் எஸ்.ராமகிருஷ்ணன்

திருப்பூர் சேர்தளம் நண்பர்கள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் வரும் ஞாயிறு (25-09-2011) அன்று வாசக சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஹோட்டல் அரோமாவில் மாலை 4:30 மணிக்கு உரையாடல் துவங்குகிறது. நண்பர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

Tuesday, August 30, 2011

மனக்காளான்

சென்டிமெண்டல் இடியட் என்பதன் சரியான மொழிபெயர்ப்பு ‘சுரணையுள்ளவன்’

எதையும் இன்றே செய்தாக வேண்டுமெனும் அவசியம் இல்லை; நாளை என்றொரு நாள் இருக்கையில். # de motivation corner

நவீன கவிதைகள் வாசிக்கையில் குமட்டல் ஏற்படுவது என் தனிப்பட்ட பிரச்சனையா அல்லது உங்களுக்கும் இப்படித்தானா?!

மாமல்லன் - ருத்ரன் - இத்தனை பொருத்தமாக பெயர் அமைவது அபூர்வம். நான்-ஸ்டாப் அடிதடி!

ஊஞ்சல் ஆடி உடம்பை குறைக்க இயலாது.

விழிதிகழ் அழகிகள் என்னை ட்வீட்டரிலும், முகநூலிலும் ஃபாலோ செய்தால் போதும். நேரில் வேண்டாமே. ப்ளீஸ்! # கோரிக்கை

நதியின் நினைவில் ரதியின் குளியல்!

வாழ்வு ஒரு மல்யுத்த மேடை. ஒரு ‘பஞ்ச்’ வாங்கி விழுந்து விட்டால், 10 எண்ணுவதற்குள் எழுந்தாக வேண்டும். நான் எழுவேன்.

தன்னையே பேசுதல் தற்கொலைக்குச் சமம்!

அப்பனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்!

நித்தியானந்தாவை அவரது குதிரை கீழே தள்ளிவிட்டதாம். எவ்ளோ ‘பெரிய குதிரைகளையெல்லாம்’ ஹேண்டில் பண்ணினவர் அவர்?! :)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; நின்னை நன்றாக நினைந்துருகுமாறு # காதல் பித்து

இந்தக்காலத்துல இப்படியொரு புள்ளையா என எனைப் பார்க்கும்போதெல்லாம் வியத்தலை தாய்மார்கள் கைவிடல் வேண்டும் # கோரிக்கை

இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்; அவரும் என்னுடைய பிறந்த நாளுக்கு மறக்காமல் வாழ்த்துவார் என நம்புகிறேன்.

‘ஸீ த்ரூ’ ஹெல்மெட் கிடைத்தால் கொஞ்சம் பெட்டர். உள்ளிருப்பவன் அழகன் என்று பாவையருக்கு தெரியவேண்டுமே # ஆதங்கம்

ஒரு விக்; காதோரம் கனத்த கிருதா; கருத்த முறுக்கு மீசை முடிந்தால் ஒரு மச்சம் என தன் கெட்டப்பை தங்கபாலு மாற்றினால் மட்டுமே அரசியல் எதிர்காலம்.

பிட்னெஸ் ஒன்னில் என்னுடன் ஏராளமான பெண்களும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் என்னுடைய வாசகியர் என்று குழப்பமாக இருக்கிறது.

ஆர்மோனியம், தபேலா இல்லாமல் நாடகம் பார்க்க என்னவோ போல் இருக்கிறது # தியேட்டர் ஃபெஸ்டிவல்

இனி முகநூலில் உருப்படியான விஷயங்களை மட்டுமே எழுதச் சொல்லி ஒரு தோழி கேட்டுக்கொண்டாள். உருப்படி 1) அங்காடித் தெரு அஞ்சலி கோவையில் எழுந்தருளியுள்ளார்; உருப்படி 2) எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ரிங்டோன் ‘நான் போகிறேன் மேலே மேலே...’

’டேட்டா பேஸ்’ என்பது ஒரு சாவிதான். அதை ஜேப்பிலேயே வைத்துக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. பூட்டைத் திறந்தால்தான் புதையல் கிடைக்கும்.

தமிழக பள்ளிகளில் சொல்லித்தரப்படும் பெரும்பாலான உடற்பயிற்சிகள் ‘அந்தி வரும் நேரம்...’ பாடலில் இருந்து எடுக்கப்பட்டவை.

எல்லா டிக்ஸ்னரியிலும் தேடிப்பார்த்துவிட்டேன். ஜோவியல் என்பதற்கு பல்லிளித்தல் எனும் பொருளில்லையாம்.

எதையாவது ஒன்றைப் பற்றி ஓயாமல் கரைந்து கொண்டே இருப்பதை கவுன்சிலிங் என வரையறுக்கலாம்.

குழுவாக கூடி அடிக்கடி வெட்டித்தனமாகப் பேசிக்கொண்டிருப்பதை விட, சும்மாயிருத்தல் சாலச் சிறந்தது. கலெக்டிவ் உளறல்களை விட தனிநபர் உளறல்கள் கொஞ்சம் பரவாயில்லை ரகம்!

‘incentive' என்பது சாராயம் வாங்கிக்கொடுத்து சாக்கடையை சுத்தம் செய்யச் சொல்வது போலத்தான். # டீமோகார் ( டீ மோட்டிவேஷன் கார்னர்)

தகுதியானவன் அங்கீகாரம் மறுக்கப்படும் இடங்களை விட்டு மெளனமாக நகர்ந்து விடுகிறான்.

ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். எனது கம்பார்ட்மெண்டில் கணிசமான பெண்கள். பக்கவாட்டு பர்த்தில் படுத்திருந்தவர் உற்சாகமாக விசிலில் பாடல்களை உருவாக்க முனைந்துகொண்டிருந்தார். உறங்கும் நேரம் நெருங்கியும் சேட்டை குறைகிற மாதிரி தெரியவில்லை. திடீரென நான் சத்தமாக “கிருஷ்ணா வந்தாச்சி...” என்றேன். கொல்லென சிரித்தது ரயில். அதன்பிறகு அவர் விசிலடிக்கவில்லை.

கோவை செல்ல செண்ட்ரல் வந்தோம். பத்தாவது பிளாட்பாரத்தில் சேரன் நின்று கொண்டிருந்தது. ஒன்பதாவது பிளாட்பாரத்தில் நிஜாமூதின் நகர்ந்துகொண்டிருந்தது. உடன்வந்த மருமகன் “மாமா... அந்த டிரெயின்தான் முதல்ல போகுது... வா ஓடிப்போய் ஏறிக்கலாம்...”

888 மார்க்குகள் வாங்கி அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங் ஹால் வாசலில் தேவுடு காத்துக்கொண்டிருக்கும்போது மருமகன் சொன்னான் “இந்தக் காலேஜ் கூட பரவால்ல மாதிரிதான் இருக்கு...வேணும்னா இங்கயே கூட படிச்சிக்கிறேன். ஒண்ணும் பிரச்சனையில்ல”

போன வாரத்தில் ஒருநாள் விசய் அவர்களின் தந்தையார் எஸ்.ஏ.சந்திரசேகர் கோவை வந்திருந்தார். ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். “எங்கள் அப்பாவே...!”

வடபழனியில் கண்டேன் “சிம்ரன்’ஸ் ஆப்பம் கடை!” சிம்ரன் ஆப்பக்கடை என்றால் கூட பரவாயில்லை. “ ‘ஸ் “ அப்பாவியான எனக்கே வேறு மாதிரியான அர்த்தங்களைக் கொடுக்கிறது.

மலைச்சரிவில் முன்னால் பயணிக்கும் காரிலிருந்து வீசப்படுகிறது ஒரு காலி பாட்டில். பைக்கை நிறுத்தி அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு தன் பயணத்தை தொடர்கிறான் ஓர் இளைஞன். எனக்கு அவனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு இதற்கு மேல் எதுவும் தேவையில்லை.

”விஜய் டிவி புரொமோல டைரக்டர் விஜய் பேசிக்கிட்டு இருந்தாரு... தெய்வத்திருமகளுக்காக 3 வருஷம் உழைச்சேங்கிறாரு... ஏன்யா ஒரு டிவிடிய மனுஷன் 3 வருஷமாய்யா பார்ப்பான்...?!” - ரமேஷ் வைத்யா போனில்...

ஜல்லிப்பட்டி பழனிச்சாமி எனும் மகத்தான படைப்பாளி இலக்கிய உலகில் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் மர்மம் என்னவோ?!

மனம் உபன்யாசங்களிலும், ஆன்மிக சொற்பொழிவுகளிலும் நாட்டம் கொள்கிறது. உள்ளூர் தடித்தாண்டவராயன்கள் சிடிக்கள் கொடுத்து உதவவும் (நண்பர்கள்னு சொன்னா மட்டும் கொடுத்துடறாய்ங்களா...)

என்னோடு உரையாடிய பெண்கள் சாட்டினை வெளியிட்டால்தான் நான் எத்தனை கிரியேட்டிவானவன் என்பது தெரியவரும் # கோரிக்கை

பித்தேறிய சொற்கள்; களிம்பேறிய நினைவுகள்; பிரியத்தின் நிழற்தடம்; கட்டற்ற கனவுகள்; சொற்களின் மற்போர் என சில வார்த்தைகள் சிக்கி இருக்கின்றன. கவிதை தேறும் அபாயம் இருக்கிறது. மகனே செத்தீங்கடா...!

நான் எதையேனும் நேரம் ஒதுக்கி வாசித்து விட்டால், அதற்கு ஓர் இலக்கிய அந்தஸ்து வந்து ஒட்டிக்கொள்வதை அவதானிக்கிறேன்.

ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு எழுதிய 923 கோவை மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை. பெற்றோர்களிடம் ஐஐடி ஆசை காட்டி, உங்கள் பிள்ளைகளை அதற்கென தயார் செய்கிறோம் என பணம் பிடுங்கும் பயிற்சியகங்கள் கோவையில் ஏராளமாய் இருக்கின்றன. மூன்றாம் வகுப்பு பிள்ளைகளைக் கூட குறிவைத்து தாக்கும் கும்பல் அது. விதம் விதமாய் தேர்வுகள் நடத்துவார்கள். ஆயிரக்கணக்கில் பணம் கேட்பார்கள். ஒருவகையில் இந்த தோல்வி வரவேற்கத்தக்கது.

‘As god loves you, please give me 50 paisa...!' என தெளிவான ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி பிச்சையெடுக்கும் ஒருவரை இன்று கோவை ரயில் நிலையத்தில் கண்டேன். பார்வைக்கு கடும் பைத்தியம் போல இருந்தார். அழுக்கேறிய, இடுப்பிற்குக்கீழ் எதையும் மறைக்கவேண்டிய அவசியமில்லாத ஆடைகள். கக்கத்தில் பொறுக்கிச் சேர்த்த குப்பைகள் அடங்கிய சிறிய சிமெண்டு சாக்கு பை. கண்களில் குறுகுறுப்பான ஒளி; எனக்கு இயல்பிலேயே ஆங்கிலத்தோடு தகராறு என்பதால் அவர் பேசியதில் அடிக்கடி காதில் விழுந்தது ‘As god loves you, please give me 50 paisa...!' வாசகம் மட்டுமே. ‘உங்களையெல்லாம் நேசிக்கும் கடவுள் என்னை நேசிக்கத் தவறிவிட்டார். எனக்கு 50 பைசா கொடுக்க உங்களுக்கு என்ன கேடாம்..?!’ என்பதுதான் சப்-டெக்ஸ்ட் என நினைத்துக்கொண்டேன்.

கொஞ்சம் பிரயத்தனப்பட்டால், இவரது லைஃப் ஸ்டைலை மாற்றிவிடலாம். நான்கு பேர் பார்க்கிற மாதிரி இவரது காலில் விழுந்து வணங்கி, சட்டைப்பைக்குள் சில நூறு ரூபாய் தாள்களைத் திணித்து விட்டால் போதும். அதன்பிறகு இங்கிலீஷ் சாமியாரை வழிபடும் முறை, சிறப்பு கட்டணச் சேவை, அண்ணாரின் அருள்வாக்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேடி வந்து காலில் விழுதல், மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என பிஸியாகி விடுவார். பொறாமையில் ஒன்றும் செய்யாமல் நகர்ந்து விட்டேன்.

வறுத்த நிலக்கடலைப் பருப்புகளோடு, ஒரு துண்டு புதுக்கருப்பட்டியையும் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு... ஒரு சொம்பு தண்ணீரை குடித்து விட்டுப் படுக்கப்போகிறேன்.

கருத்து கணிப்பு நடத்தலாம் என எடிட்டோரியல் தலைமை முடிவு செய்தவுடன், ஏரியா நிருபர்களுக்கு தகவல் பறக்கும். கேட்க வேண்டிய கேள்விகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைப்பார்கள். ஏரியா ரிப்போர்ட்டர்கள் என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஏரியாவுக்கும் போய் செய்தி சேகரிக்கும் வழக்கம் எப்போதோ காலாவதியாகி விட்டது. உள்ளூர் தினசரிகள், செல்போன் மூலம் அல்லது புகைப்படக்காரரை அனுப்பி என அவர்களை வந்தடையும் செய்திகள் மூலமே ரீ-ரைட் பிழைப்பை நடத்துபவர்கள் அவர்கள். எனவே,கருத்துக்கணிப்பு படிவத்தை பார்த்ததும் அவர்களுக்கு குமட்டிக்கொண்டு வரும். செல்போனை நோண்டி தங்களுக்கு தெரிந்த ஒரு 10 பேருக்கு போனைப் போடுவார்கள். அந்த 10 பேரில் பாதி பேர் வாய்ச்சவாடல் வெங்கப்பயல்களாக இருப்பார்கள். ஓட்டு போடும் வழக்கம் இருக்காது. அவர்களது வெர்ஷனை வாங்கி படிவங்களை நிரப்பி அனுப்பி விடுவார்கள். கடைசியில் சிறுபிள்ளை வெள்ளாமை கதைதான். உண்மையான தகவல் வீடு வந்து சேராது.

இதைப் படிப்பவர்களே உங்கள் ஆயுளில் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு கருத்துக்கணிப்பை எதிர்கொண்டிருக்கிறீர்களா?! முகநூலில் இருக்கும் என் ஆயிரத்துச் சொச்ச நண்பர்களில் எவரும் எந்த கருத்துக்கணிப்பிலும் பேசி இருக்கமாட்டார்கள் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. உண்மையான வாக்காளர்கள் ஏரியா ரிப்போர்ட்டர்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் அளவிற்குச் செழிப்பானவர்கள் இல்லை. அதனால், அவர்களது அபிப்ராயம் வெளிவர வாய்ப்பில்லை. பத்திரிகைகள் தங்களது நிருபர்களை விட அலுவலக பியூன்களை அதிகம் நம்பலாம்.

முன்பெல்லாம் விம எனக்கு அவ்வப்போது போன் செய்து பேசுவார். இப்போது சுத்தமாக அவர் அழைப்பதில்லை. நான் இலக்கியத்திற்கு உள்ளே இருக்கிறேனா அல்லது வெளியே இருக்கிறேனா என்று அச்சமாக உள்ளது.

முதன்முதலாக ஏரோஃபிக்ஸ் வகுப்பில் கலந்துகொண்டேன். டிரெய்னர் உள்பட அத்தனை பேரும் இளம்பெண்கள். ‘கூச்சம் தவிர்’ என்று எண்ணித் துணிந்தேன். அகண்ட கண்ணாடியில் அஜீத்குமார் மாதிரியே யாரோ ஆடுகிறார்களே என்று ஊற்றுக் கவனித்தால், அடக்கடவுளே... அது நான்தான். நெற்றியில் கைக்குட்டையை கட்டி திருப்பிப்போட்டு குத்தும் ஆட்டங்களை விட எளிதான அசைவுகள்தான் எனினும், ஆடச்சிரமமாய் இருக்கிறது. பத்து நிமிடங்களில் குடல் வாய்க்கு வரும் அளவிற்கு மூச்சிரைக்கிறது. தொப்பையைக் குறைப்பதற்குள் நான் ஒருவழியாகி விடுவேன் போலிருக்கிறது.

முகமது கைஃப் மாதிரி உடம்பை இளைத்து, என் அதகள காமெடி அசைவுகளுக்கு நமுட்டுச் சிரிப்பை வெளிப்படுத்தும் சேட்டு ஃபிகர்களின் தூக்கத்தை கெடுப்பதே என் உடனடி லட்சியம். விஜிமேல் ஆணை

உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியவர்கள் என்று முகநூல் அழகழகான பெண்களை அறிமுகப்படுத்துகிறது. முகநூலின் இந்த துர்பிரச்சாரம் என்னை பதட்டப்பட வைக்கிறது. கேண்டிக்கு தெரிந்தால், நப்பி விடுவாள்.

பல்லிடுக்கு மாமிசமாய்
நினைவிடுக்கில் உறுத்துகிறாய்
சொல்லடுக்கின் சுடர் ஒளியே - நின்
கண்ணசைவில் கவி பிறக்கும்

ஊண் காட்டிச் சிரிக்கின்றாய்
உன்மத்தம் கொள்கின்றேன்
ஊரறிய முகநூலில்
உன் புகழை தெளிக்கின்றேன்

என்னுடைய அனுமதி இல்லாமல் புகைப்படங்களை முகநூலில் இருந்து தரவிறக்கம் செய்து பலரும் தங்களது கணிணியில் ஸ்கிரீன் சேவராகப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிகிறேன். இது குற்றம். படம் தேவைப்படுவோர் “உசுருக்குச் சமானம்டே கூலிங்கிளாசு” என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு தங்களது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து visalatchi.ram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் செய்தால், என் முதன்மை வாசகியும், அணுக்கத் தொண்டருமான விஜி எனது லேட்டஸ்ட் படங்களை உங்களுக்கு அனுப்பிவைப்பார்.

Tuesday, August 23, 2011

இன்கிரிமென்ட் பெற இனிய வழிகள்!

விசாரித்துப் பார்த்ததில் அப்பரைசல் பேப்பர்களைக் கிழித்து காது குடைவதுதான் உலகியல்பு என்பது தெரியவருகிறது. சாதித்துக் கிழித்தெல்லாம் ஊதிய உயர்வு பெறும் யதார்த்த காலகட்டத்தைத் தாண்டி பின் நவீனத்துவ யுகத்தில் வாழ்கிறோம். பயமுறுத்தியோ அல்லது பரிதாபப்பட வைத்தோதான் சல்லி பெயர்த்தாக வேண்டும். நெடுநாள் ஆய்வுகளுக்குப் பின் எனது லட்சோப லட்ச வாசகர்களுக்காக சில டிப்ஸூகளை வழங்குகிறேன்.


1) ‘ஹேங்க் ஓவர்’-ல் வரும் தாடிக்காரன் போல தோற்றம் மாறுகிறவரைக்கும் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், தலை சீவுதல் ஆகிய நான்கினையும் தீவிரமாக கைவிடல் வேண்டும். உங்களது பார்வை டிஷ் ஆண்டனா போல் வான் நோக்கியோ அல்லது தெரு விளக்கு போல தரை நோக்கியோ மட்டும் இருக்கட்டும். ‘ஏன் தம்பி சேவிங் பண்ணலையா’ எனக்கேட்கும் எவரிடமும் ‘காசில்லை சார்...’ என கூசாமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

2) பரணில் ஏறி தாத்தாக்களின் பழைய பட்டன் போன சட்டைகளைத் தேடி எடுத்து அணிய வேண்டும். பித்தான்கள் இல்லாத இடங்களில் ஊக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இம்முறையில் ஒரு சட்டைக்கு குறைந்தபட்சம் 4 ஊக்குகளேனும் இருத்தல் உசிதம்.

3) ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை மேலாளரின் வீடு தேடிப் போய் ‘சார்... பழைய சட்டை, பேண்ட் எதுனா இருந்தா கொடுங்க சார்...’ என கேட்டு கலவரப்படுத்தலாம்.

4) உங்களது மேஜையில் மானேஜர் கண்ணில் படும்படி சீசன் டவல், டூத் பிரஷ், டூத் பேஸ்ட், சோப்பு டப்பா, சீயக்காய் பொடி ஆகியவற்றை அடுக்கி வைத்துக்கொள்ளவும். என்ன தம்பி இது என பரிவுடன் விசாரித்தால் ‘வீட்டுல தண்ணி பில் கட்டி ஆறு மாசம் ஆச்சி சார்... இப்ப இங்கனதான் சார் குளியல்’ என பதிலளிக்கவும்.

5) சாயங்காலம் மணி 5:00-ஐ தொட்டதும் மின்னல் வேகத்தில் ஆபிஸிலிருந்து ஓடி மறையவும். ‘ஏம்பா அவ்வளவு சீக்கிரம் கெளம்பற’ என விசாரித்தால், ‘சாயங்காலம் 6:00 டூ 11:00 ஒரு தட்டுக்கடையில பார்ட் டைம் ஜாப் பாக்கிறேன் சார்’ என பதில் சொல்லலாம்.

6) அலுவலக கார் பார்க்கிங் ஏரியாவில் ஒரு கூடையைக் கவிழ்த்து 4 கோழிகளை வளர்க்க ஆரம்பிக்கவும். அப்புக்குட்டி ஸ்டைலில் அவற்றை வாஞ்சையோடு வளர்த்து அலுவலகத்திற்குள்ளேயே முட்டை வியாபாரம் ஆரம்பிக்கவும்.

7) அடிக்கடி மேனேஜருக்கு போன் செய்து, ‘சார், பெட்ரோல் இல்லாம மவுண்ட்ரோட்டுல நிக்கிறேன்; யார்கிட்டயாச்சும் ஒரு 20 ரூபா கொடுத்து அனுப்புங்கன்னு’ சொல்லனும்.

8) அலுவலகத்திற்கு சாப்பாடு எடுத்து வரும் டப்பர் வேரை கடாசி விட்டு தூக்கு வாளியில் ‘தண்ணியும் பழையதுமாக’ எடுத்து வரவும். மானேஜர் சாப்பிடச் செல்லும் நேரமாகப் பார்த்து, டைனிங் டேபிளில் அவருக்கு எதிரில் அமர்ந்து கொள்ளவும். அவர் கொண்டு வந்திருக்கும் பொரியல், அவியல் சமாச்சாரங்களில் சரிபாதியை கேட்டு வாங்கி சாப்பிட வேண்டும்.

9) டேபிளில் நல்ல ஆங்காரமான காளி படம் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். போட்டோவின் அடியில் ஏராளமான குங்குமத்தை கொட்டி வைத்து அதன் மீது ஒரு எலுமிச்சையை வைத்துக்கொள்ளவும். டேபிளின் இடது ஓரத்தில் மலையாள மாந்தீரிக போதகம், ஏழே நாட்களில் ஏவல் கற்றுக்கொள்ளுங்கள் போன்ற புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொள்ளுதல் நல்ல பலன்களைத் தரும்.

10) இணையத்திலிருந்தும், நாளிதழ்களிலிருந்தும் ‘வாண்டட்’ விளம்பரங்களை சேகரம் செய்து சக ஊழியர்கள் அனைவருக்கும் நாளொன்றுக்கு 15க்கும் குறையாமல் மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டும். தவறாமல் மேலாளருக்கு சிசி போடவும்.

11) எப்போதும் பாய்சன் விலை எவ்வளவு; சயனைடு எங்க கிடைக்கும்; தூக்கு போட கயிறு எவ்வளவு முழம் வேண்டும் என்று விசாரணையை முடுக்குதல் உடனடி பலன் தரலாம்.

12) கம்பெனி சார்பில் நடத்தப்படுகிற ‘பால் ரூம் பார்ட்டிகளுக்கு’ வீட்டிலிருந்து பாத்திர பண்டங்களை கையோடு எடுத்து வரவேண்டும். பார்ட்டி நடக்கும்போதே பாத்திரங்களில் உணவுப்பொருட்களை வாங்கி அடைக்க வேண்டும்.

13) பேச்சில் எப்போதும் நகரில் பிரபலமான பள்ளிகள், கல்லூரிகள் இவற்றின் பிரின்ஸிபால், தாளாளர்கள் பெயர் அடிபடட்டும். எப்படியும் மகளுக்கு சீட்டு, மச்சானுக்கு சீட்டு என இவன் உதவி தேவைப்படும் என மேலாளர்கள் பவ்யம் காட்டுவார்கள்.

14) ‘உயிர் காக்க உதவுங்கள்’ பாணி அட்டைகளை தயார் செய்துகொள்ளவும். (சாம்பிள் அட்டைகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கிடைக்கும்; நானே தயாரித்து கொடுக்கவேண்டுமெனில் காப்பிரைட்டிங் செலவினங்கள் தனி) லிஃப்டிற்குள் நுழைந்ததும் உள்ளிருப்போரிடம் மவுனமாக வினியோகியுங்கள். (ஒரிருவர் பழக்கதோசத்தில் சில்லறை தருவார்கள்)

15) முகநூலில் ‘உடல் உறுப்புகள் விற்பனைக்கு... சிறுநீரகம் - 2 லட்சம் (இரண்டையும் வாங்குவதாக இருந்தால் 20% சிறப்பு தள்ளுபடி!); கல்லீரல் - 3 லட்சம்; ரத்தம் லிட்டர் ஒன்றுக்கு - ரூ.2,475/-’ என அறிவியுங்கள்.

எதற்கும் மசியவில்லையெனில் ‘அன்னா ஹசாரே... எனக்க சின்னையாக்க மவந்தானேன்னு’ சொல்லிப் பாருங்க...!’

Monday, August 1, 2011

சென்னையில் இருப்பேன்

மருமகன் மாரிக்கண்ணனின் பொறியியல் கவுன்சிலிங்கிற்காக நாளை (02-08-2011) ஒருநாள் மட்டும் சென்னையில் இருப்பேன். மதியம் 2 மணிக்குள் அண்ணா பல்கலைக்கழக வேலைகள் முடிந்துவிடும். நண்பர்களைச் சந்திக்கும் உத்தேசம் உண்டு.

Thursday, July 21, 2011

மதுரையில் ஜெயமோகன்!


மதுரைவாழ் நண்பர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

திரைச்சீலை - வாசக அபிப்ராயம்

சிறு பிராயத்தில் அம்மா என்னை சினிமா பார்க்க அனுமதிப்பதில்லை. சினிமாவே சகல பாவங்களுக்கும் ஊற்றுக்கண் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. அப்படித்தான் அன்றைக்கு சினிமாக்களும் வெளியாகிக்கொண்டிருந்தன என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. அம்மாவின் மரணத்திற்குப் பின் கோவைக்கு புலம் பெயர்ந்தேன். மேன்ஷன் வாழ்வின் உக்கிரமான தனிமையிலிருந்து விடுவித்துக்கொள்ள திரைப்படங்கள் பெரிதும் உதவின. அவ்வகையில், நீண்ட துறவுக்குப் பின் நான் பார்த்த முதல் திரைப்படம் ‘காதல்’. (அதற்கு முன் வீட்டிற்குத் தெரியாமல் ஒரு முறை ‘சீவலப்பேரி பாண்டி’ பார்த்ததாக ஞாபகம்) கொஞ்சம் பிரக்ஞையோடு சினிமா பார்க்க ஆரம்பித்து ஆறு ஆண்டுகள்தாம் ஆகின்றன.

இளம் சினிமா பார்வையாளனாக ஜீவாவின் திரைச்சீலை புத்தகம் என்னை பெரிதும் கவர்ந்தது. நவீன எழுத்தாளர்களுள் பலரும் திரை விமர்சனங்கள் எழுதுகிறார்கள். உலக சினிமா என்றதும் அவர்களது தோளில் தனி ரொமான்டிக் மொழி ஒன்று வந்து உட்கார்ந்து பிரச்சனை உண்டு பண்ணி விடுகிறது. இயக்குனரே கண்டறியாத பல்வேறு சப்-டெக்ஸ்டுகளையும், கேட்டறியாத பின் நவீனத்துவக் கூறுகளையும் தங்களது ஆய்வுச்சாலையில் கண்டறிந்து, சீவிச்சீவி கூரானதொர் ஓடங்கம்பால் சாத்தி எடுத்தி விடுகிறார்கள்.

வெகுஜன பத்திரிகைகள் சுஜாதா என்ன எழுதினாலும் வாசலில் காத்திருந்து வாங்கி பிரசுரித்த காலம் போல நவயுகத்தில் ஸ்டார் எழுத்தாளர்கள் என்ன பிதற்றினாலும் அவற்றை வாங்கி பிரசுரிக்க தீவிர இலக்கிய பத்திரிகைகள் சில தயாராக இருக்கின்றன. அவற்றின் பசிக்கு இரை போட எழுத்தாளர்களுக்கு ‘உலக சினிமா’ எளிமையானதொரு உபாயம். பாண்டி பஜாரில் ஒரு டிவிடியை வாங்கினால் ஆச்சு. படத்தின் திரைக்கதை எழுதப்பட்ட பக்கங்களைக் காட்டிலும் மிக அதிகமான பக்கங்கள் எழுதிக் குவித்து விடுவார்கள். அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு உலக சினிமாவும் திரை வரலாற்றில் மைல் கல்; பின் நவீனத்துவ கொண்டாட்டம்; வழமைக்கு எதிரான கலகம். இதுமாதிரி ஒரு சினிமா தமிழில் வருமா எனக்கேட்டு சமகால தமிழ் இயக்குனர்களுள் தங்களுக்குப் பிடிக்காத ஒருவருக்கு சரமாரி வசவு. அத்தோடு, எவருக்குத் தெரியப்போகிறது என தப்புத்தப்பான தரவுகளும் நிச்சயம் இருக்கும்.

இதுமாதிரியான பிரச்சனைகளினால் சிற்றிதழ்களில் வரும் சினிமா கட்டுரைகளை பதற்றத்தோடு கடந்து விடுவேன். ஆனால், ஜீவாவின் ‘திரைச்சீலை’ மிகையான உணர்ச்சிகளை, வார்த்தை ஜாலங்களை நம்பாமல், பாசாங்கற்ற எளிய மொழியில் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என எழுதப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதுகிறார் என்றால், அவ்வகைப்படங்களில் இதற்கு முன் வந்த முன்மாதிரி படங்களை, இயக்குனரின் பூர்வாசிரமத்தை, ஏனைய படங்களிலிருந்து வேறுபடும் இடங்களை மிக விரிவான தகவல்களோடு விளக்கிச் செல்லும் பாணி ஜீவாவினுடையது. தமிழ் சினிமாவின் பின்னடைவை, பைத்தியக்காரத் தனங்களை லேசான கிண்டலுடன் கடந்து விடுகிறார். இந்த மென் அங்கதம் நூல் முழுதும் தொடர்ந்து நம்மை புன்னகைக்க வைக்கிறது.


***

ஒவ்வொரு ஆண்டும் சினிமாவிற்கான தேசிய விருதுகளோடு சினிமா குறித்த புத்தகம் ஒன்றிற்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது என்கிற செய்தியே எனக்கு புதிது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு தேசிய விருது பெற்று தந்திருக்கிறது இந்நூல். இதற்கு முன் அறந்தை நாராயணன் எழுதிய புத்தகத்திற்கு 1982ல் விருது கிடைத்திருக்கிறதாம். இந்தச் செய்தியினால் உந்தப்பட்டே இரண்டு புத்தகங்கள் வாங்கி, ஒன்றினை பேச்சாளர் கோபிநாத்திற்குப் பரிசளித்தேன். அவர் அதை படித்திருக்க வாய்ப்பில்லை என்பதை ‘விஜய் விருதுகள்’ நிகழ்வின் ஒளிபரப்பின் மூலம் புரிந்துகொண்டேன். வருத்தப்பட்டேன்.

சினிமா விளம்பரங்கள் வரைவதை பரம்பரைத் தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஜீவா. தமிழகத்தின் முதல் திரையரங்கமான லிபர்டியும் அவர் வீட்டு வாசலில்தான் இருக்கிறது. சிறுவயது முதலே சினிமா மீதான ஆர்வம் அவரை ஒரு கலைக்களஞ்சியமாகவே மாற்றி இருக்கிறது. நூல் முழுவதும் அரிய பல தகவல்களால் நிரவப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து ரசனை இதழில் அவர் சினிமா கட்டுரை தொடர்களை எழுதி வருகிறார். அனேகமாக மிக நீண்டகாலம் எழுதப்பட்டு வரும் சினிமா தொடர் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

***

நூலிலுள்ள 37 கட்டுரைகளில் 16 கட்டுரைகள் மட்டுமே இந்திய சினிமாக்கள் மற்றும் இந்திய திரை ஆளுமைகள் குறித்தவை. மீதமுள்ள கட்டுரைகள் சர்வதேச சினிமாக்கள் பற்றியவை. சிவாஜி கணேசன், ஸ்ரீதர், இளையராஜா, சத்யஜித் ரே, ஸ்ரீனிவாசன், குருதத் ஆகியோரைப் பற்றிய சொற்சித்திரங்கள் சிறப்பானவை.

சர்வதேச திரைப்படங்களைப் பொருத்தவரையில் என்னை தனிப்பட்ட முறையில் பெரிதும் கவர்ந்த ஷஷாங்க் ரிடெம்ப்ஷனும், ஹோட்டல் ருவாண்டோவும் தொகுப்பில் இடம்பிடித்திருந்தன. ‘ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ சாக்கடையில் விழுந்து தன் வாழ்வை மணமாக்கிக்கொண்டவனின் கதை. கடின முயற்சியினால், ஒளிபுகா சிறையிலிருந்து தப்பிக்கிறான் கதைநாயகன். மிகுந்த உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம்.

‘ஹோட்டல் ருவாண்டோ’வின் கதை நாயகன் கழுத்துப்பட்டையை கட்டி சரிபார்க்கும் காட்சி உருக்கமானது. சாலையெங்கும் மனித பிணங்கள் இரைந்து கிடக்கும் சமூகத்தில் நாகரீகமும், நளினமும் அர்த்தமிழக்கின்றன என்பதுணர்ந்து கதவை அடைத்துக்கொண்டு அழுகிற ஒரு காட்சி படத்தில் இருக்கிறது. படம் பார்க்கையில் எனக்கெழுந்த கேவல் இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறது. இது தவிர, உலக திரைப்பட வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த பல்வேறு திரைப்படங்கள் பற்றியும் ஜீவா அற்புதமாக எழுதியுள்ளார்.

***
இதுதான் ஜீவாவின் முதல் நூல் என்பதை நம்ப முடியாமல் செய்வது அவரது மொழி நடைதான். அவர் உருவாக்கும் சொற்றோடர்கள், பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன. ஒரு சின்ன உதாரணம் ‘தாத்தாவாக நடித்தவரின் முகத்தில் அவஸ்தை ஒரு மூக்குக்கண்ணாடி போல் பொருந்தியிருக்கிறது’; நூலின் மற்றொரு சிறப்பம்சம் அங்கதம். நிறைய கிண்டல்கள் நம்மை புன்னகைக்க வைக்கின்றன. சிறு உதாரணம் ‘சேனல்கள் வந்தபிறகு தூர்தர்ஷன் உருப்படாமல் போய்விட்டது. எப்போதாவது இரவு 12 மணிக்கு மேல் பிராந்திய படங்கள் காட்டப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன’


***

‘மனிதனுக்கு சட்டையும், நூலுக்கு அட்டையும் முக்கியம்’ எனும் மகத்தான கொள்கை உடையவன் நான். ஜீவாவின் ஒவியங்கள் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் அட்டைகளை அலங்கரித்துள்ளன. குறிப்பாக நாஞ்சிலாரின் பல நூல்களின் அட்டையில் ஜீவாவின் ஒவியங்கள்தாம் இருக்கும். அப்பேர்பட்ட ஜீவாவின் புத்தகத்திற்கான அட்டை வடிவமைப்பு அத்தனை அழகாக இல்லை என்பது என் அபிப்ராயம். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

***

ஒரு எளிய வாசகனுக்கு சினிமா ரசனையுட்டி, உள்ளிழுக்க இச்சிறு நூல் போதுமானது என சொல்லத் துணிவேன்.

Monday, July 4, 2011

விருந்து

நானும் கேண்டியும் சனி, ஞாயிறுகளில் சினிமா, ஷாப்பிங் போன்றவற்றை கூடிய மட்டும் தவிர்த்து விடுவோம். ஜனத்திரளில் அல்லாட பிடிக்காது. மாறாக, நண்பர்கள் வீட்டிற்கு திடீர் விசிட் அடிப்போம்.

அப்படிச் செல்லும்போது, ‘வந்துகொண்டிருக்கிறோம்’ என தகவல் கொடுப்பதில்லை என்பது பாலிசி மேட்டர். முன்னரே சொல்லிவிட்டால் சிக்கன் பிரியாணி, காலிபிளவர் சில்லி, குலோப் ஜாமூன் போன்ற ஆஞ்சியோ சமாச்சாரங்களை செய்து வைத்திருப்பார்கள். தவிர்க்கவும் முடியாது. தப்பிக்கவும் முடியாது.

முன்னறிவிப்பு இல்லாமல் செல்கையில் மிஞ்சிய ரசத்தை, மீதமான பொரியலை, லேசாக புளித்த மாவில் வெங்காயத்தை அரிந்து போட்டு சுட்ட அதிரடி பணியாரத்தை அல்லது அவசர உப்புமாவைச் சாப்பிட்டு விட்டு நெஞ்சு கரிக்காமல் வீடு திரும்பலாம். பெண்கள் விரைவாக அல்லது பதட்டமாக சமைக்கும் போது உபத்திரவம் இல்லாத உணவுகளைச் சமைப்பார்கள் என்பது என் அபிப்ராயம்.

பரிசு பொருட்கள் தர்மசங்கடத்திலிருந்தும் தப்பிக்கலாம் என்பது இன்னொரு வசதி. சட்டை பிட்டுகள், புடவை, அலங்கார பொருட்கள் துவங்கி ஐபாடு வரை அவரவர் வசதிக்கேற்ப வாங்கி வைத்து இருப்பார்கள். எவருக்கும் திருப்பி செய்யும் வசதியான நிலையில் நாங்கள் இல்லாததால் இதுமாதிரி பொருட்கள் மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதில் அதிர்ச்சியைத் தந்துவிடும்.

கேண்டி சட்டென்று எவருடனும் ஒட்டிக்கொள்வாள். வீட்டிற்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில், ‘தாளிசம் பண்ணிட்டா மீனைப் போடுவீங்க... பச்சை வாசம்லா வரும். ஒரு கொதி வந்ததுக்கப்புறம் ஒண்ணு ஒண்ணா உண்டியல்ல காசு போட மாதில்லா போடனும்’ என திருநெல்வேலியிலே பிறந்தவளாட்டம் பெண்களுக்கு சமையல் குறிப்புகளையும்; பிக்ஸட் டெபாசிட் ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட்... கோல்டு இ.டி.எஃப்ல இன்வெஸ்ட் பண்ணுங்க என ஆண்களுக்கு நிதி ஆலோசனைகளையும் அள்ளி வீசிக்கொண்டிருப்பாள்.

போகிற வீடுகளில் எனக்கென்று ஒரு பெருசு காத்திருக்கும். பேச்சுத்துணைக்கு யார் கிடைப்பாரென ஏங்கிப்போயிருக்கும் அவர்களோடு பட்டறையைப் போடுவதில் எனக்கு அலாதி ஆனந்தம். நல்ல கேலி, சுவாரஸ்யமான தகவல், கேட்டிராத சொலவடை இவற்றோடு சில அனுபவ வழிகாட்டுதல்கள் கிடைப்பதோடு பாட்டன், பூட்டன்களோடு மகிழ்ந்து குலாவ வகையற்ற வாழ்முறையில் அஃதொரு பெரிய ஆறுதலும் கூட.

இறைவன், குரு, குழந்தைகள், முதியோர் ஆகியோரை வெறும் கையுடன் சந்திக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். (நவயுகத்தில் இந்தப் பட்டியலில் அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்) அசல் நெய்யில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், சாக்கலேட்டுகள், கேக்குகள் போன்றவை விருந்திற்குச் செல்லும்போது வாங்கிச் செல்லும் பொதுவான பொருட்களாக இருக்கிறது. சாக்கலேட்டுகள் குழந்தைகளுக்கும், இன்னபிற இனிப்புகள் சகலருக்கும் கேடு விளைவிப்பவை. பழங்கள் எக்காலத்திற்கும், எவருக்கும் பொருத்தமானவை. ஒருமுறை என் வீட்டிற்கு வந்தவர் காய்கறிகள் கூட வாங்கி வந்திருந்தார். நாங்கள் பொதுவாக நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும்போது கைக்குத்தல் சம்பா அவல், உடன்குடி புதுக்கருப்பட்டி, முரல் கருவாடு, பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, கோவில்பட்டி வெட்டுக்கடலை மிட்டாய் போன்ற நினைவுச் சாமான்களில் ஏதாவது ஒன்றோடு செல்வோம். என் அக்கா அவளே செய்த உளுந்தங்களி, தட்டை, கடலை பணியாரம், கல கலா, புட்டமுது, கோதுமை அல்வா இவற்றில் ஏதாவது ஒன்றில்லாமல் எவர் வீட்டுக்கும் செல்வதில்லை. கடையில் என்றைக்கோ செய்து வைத்திருக்கும் இனிப்பை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துக்கொண்டு போவதைக் காட்டிலும் பிரத்யேக அன்பைக் கலந்து செய்து வரும் பலகாரங்கள் என்றென்றைக்குமாக நினவில் வாழும் இல்லையா?!

சரி... இதெல்லாம் இப்போது ஏன் என்கிறீர்களா?! சற்று நேரத்திற்கு முன் சமீபத்தில் திருமணமான பல விருந்துகளைக் காண இருக்கிற நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். எழுதுங்க என்று கேட்டுக்கொண்டதனால்.

(பாகம் - 1 முற்றிற்று)

பாகம் - 2 ஒரு மினி டிரைலர்

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்;
உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்;
விருந்தும் மருந்தும் மூன்று நாட்களே;
அதிதி தேவோ பவ;
செல்விருந்து ஓம்பி வரும் விருந்து பார்த்திருப்பான்;
முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து;
இன்னும் பல சிந்தனைகள் முகிழ்க்க இருக்கின்றன.