எத்தியோப்பிய சிங்கம்

உலகளாவிய எழுத்தாளுமைகள் பலரை அ.முத்துலிங்கம் செய்த நேர்காணல்களின் தொகுப்பு ‘வியத்தலும் இலமே’. எழுத்தாளத்துடிப்பில் இருப்பவனுக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிற நூல். அடிக்கடி எடுத்துப் படிப்பேன். அந்நூலில் விதிவிலக்காக ஜெனிவீவ் எனும் மாரதான் ஓட்டப்பந்தயத்திற்குப் பயிற்சி பெறும் ஒரு பெண்ணுடனான உரையாடல் இடம் பெற்றிருக்கும். அந்த நேர்காணலை அமு ஓர் ஆப்பிரிக்க சொல்லாடலோடு துவங்கி இருப்பார்.

“ஆப்பிரிக்க காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்தைவிட அதிவேகமாக அது ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானை விட அது வேகமாக ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

நீ சிங்கமோ மானோ சூரியன் எழும்போது எழு.

ஓடத்தொடங்கு.”


***
1974ல் எழுத்தாளர்கள் மாநாட்டிற்காக அமெரிக்காவின் அயோவா சிட்டிக்குப் பயணிக்கிறார் அசோகமித்திரன். கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஜாகை அங்கே. அமெரிக்க வாழ்வும், சந்திக்க நேர்ந்த மனிதர்களும்தான் ‘ஒற்றன்’. ஒவ்வொரு அத்தியாயங்களும் தனித்தனியாக ஒரு சிறுகதையின் அனுபவத்தை தரக்கூடியது. ஒட்டு மொத்த வாசிப்பில் தனித்துவமான நாவலாக உருப்பெறும். அசோகமித்திரனின் ஆல்டைம் பெஸ்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் படைப்பு.

ஒற்றன் எனும் தலைப்பிற்கு காரணமாக அமைந்தவர் அபே குபேக்னா எனும் எத்தியோப்பிய எழுத்தாளர். 27 நாவல்களுக்கு மேல் எழுதி அவரது நாட்டில் பெரும்புகழ் மிக்கவராக திகழ்ந்தார். எத்தியோப்பியாவில் அப்போது மன்னராட்சி நிலவியது. மன்னனின் மகனுக்கு நெருங்கிய நண்பராக அபே இருந்தார். தனது சமீபத்திய நாவலான ஒற்றனை பல்கலை பேராசிரியர் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.

அபே குபேக்னா அயோவாசிட்டி எழுத்தாளர் சந்திப்பில் அசோகமித்திரனைத் தவிர வேறு எவரோடும் நெருக்கம் காட்டாத முசுடு. புதியதாக தைத்த ஒரு கோட்டினையே சதாசர்வ காலமும் அணிந்துகொண்டு வளைய வருபவர். சுத்தமாய் இருப்பதில் அவநம்பிக்கையும், குடிப்பதில் ஆர்வமும் கொண்டவர். ஏனோ எல்லோர் மீதும் கண்மூடித்தனமான கசப்புணர்ச்சி. கஜூகோ எனும் அழகிய ஜப்பானிய பெண் எழுத்தாளரோடு நெருங்கிப் பழகும் துடிப்பு அபேவுக்கு உண்டு. ஆனாலும், குபேக்னாவின் எண்ணம் ஈடேற வில்லை. அபேயின் பெயரைக் கேட்டாலே கஜூகா கரித்துக்கொட்டுவாள். இருவருக்குமான சந்திப்பில் ஏதோ ஒரு கசப்பு நிகழ்ந்திருக்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக கஜூகோ அசோகமித்திரன் மீது மிகுந்த அன்பாக இருந்தாள். இது குபேக்னாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. கஜூகாவுடன் தனக்கு இடைவெளி ஏற்பட அமிதான் காரணம் என நினைக்கிறார். உச்சகட்டமாக ஒரு நாள் அசோகமித்திரனை அவர் விழத்தள்ளி அடித்தும் விடுகிறார். சில நாட்களில் அபே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், அயோவாசிட்டியை விட்டு வெளியேறி விடுகிறார்.

சில நாட்களில் எத்தியோப்பியாவில் புரட்சி எனும் செய்தி மட்டும் அசோகமித்திரனை வந்தடைகிறது. தனது நண்பன் குபேக்னா என்னவானார் எனும் கவலையோடு அந்த அத்தியாயத்தை முடித்திருப்பார் அசோகமித்திரன். முற்றிலும் நெகட்டிவாகவே நடந்துகொள்கிற குபேக்னா மீது நமக்கு எள்ளளவும் எரிச்சல் வராது. மாறாக பரிதாபமும், கழிவிரக்கமுமே உண்டாகும். ஆம், நாம் குபேக்னாவை அசோகமித்திரனின் இதயத்தின் வழியாகவே பார்க்கிறோம். இயல்பிலேயே எத்தியோப்பியா எனும் சபிக்கப்பட்ட தேசத்தின் மீது பொங்கும் பாசமும், குபேக்னாவின் தாழ்வுணர்ச்சியும், அவநம்பிக்கையும் நமக்கு பரிவை உண்டாக்குகிறது.

***

குபேக்னா என்னவாகியிருப்பார்?! இப்போது அவருக்கு என்ன வயதிருக்கும்?! எத்தியோப்பியாவில் என்ன செய்துகொண்டிருப்பார்?! எனும் சிந்தனையிலேயே உறங்கிப்போய்விட்டேன். விடிந்ததும் இணையத்தில் குபேக்னாவைக் குடைந்துகொண்டிருந்தேன். எத்தியோப்பிய அரசின் வீழ்ச்சிக்குப் பின் சில வருடங்களிலேயே குபேக்னா இறந்து விட்டார். அவரது ஒரிரு நாவல்கள் எத்தியோப்பியாவில் தடை செய்யப்பட்டன. அவரது ஆசைப்படி ஒற்றன் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகி இருந்தது. அவரது நாவல்கள் தற்போது பெரிதாக வாசிக்கப்படவில்லை. ஆனால், அபே குபேக்னாவின் வரிகள் இன்று உலகம் முழுவதும் ஒரு பிரபலமான சொல்லாடலாக, உத்வேகமூட்டியா, தன்னம்பிக்கையளிப்பதாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது... அவ்வரிகள்


“ஆப்பிரிக்க காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்தைவிட அதிவேகமாக அது ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானை விட அது வேகமாக ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

நீ சிங்கமோ மானோ சூரியன் எழும்போது எழு.

ஓடத்தொடங்கு.”

Comments

அருமையான பகிர்வு ! பதிவு!

அசோகமித்ரன் எனக்கும் மிகவும் பிடித்தவர். ‘ஒற்றன்’ படித்ததில்லை!

ஓடத்தொடங்குவோம்!
அருமையான எழுத்து நடை வாழ்த்துக்கள்...!!!
தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேனே
தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேனே
Ashok D said…
:)

//தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேனே//

நானுந்தேன்
சேமித்து வைக்க வேண்டிய பதிவு
Naanjil Peter said…
எத்தோப்பியாவில் 13 ஆண்டுகள் வாழ்ந்த்தால் உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. நல்ல மனிதர்கள். ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் வரும் பொழுதும் நல்ல மனிதர்கள் கொல்லப்படுவார்கள்; சிறையில் காலவரையன்றி அடைத்து வைக்கப்படுவார்கள் அல்லது நாட்டை விட்டு அகதிகளாக ஓடிவிடுவார்கள். மீண்டும் நான் கண்டதில் நல்ல மனிதர்கள்.