Thursday, March 31, 2011

அசாவாமை

குறிப்புகளை
எரித்து
குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன்

குறிப்புகளின்
மதிப்பு
குப்பைகளுக்குச்
சமானமில்லை
ஒரு மாத்து குறைவுதான்

முத்தம்மா கொட்டும் குப்பையில்
எப்போதேனும் தென்படும்
ஆணுறை போல
யாருமில்லாததை உறுதி செய்து கொண்டு
ஆட்காட்டி விரலை மடக்கி பளிப்பு காட்டும்
எதிர் வீட்டு +2 மாணவியைப் போல
காகத்திற்குப் பதிலாய் கரண்ட் கம்பத்தில் கரிச்சான் இருப்பதைப் போல
மேலாளர் விடுப்பில் இருக்கும்போதும்
அவர் மேஜையை ஒழுங்கு செய்யும் சேவகன் போல
அரிதாகவே தோன்றி அப்போதே மறையும் தன்மையுடைத்த


பூந்திக்கொட்டைகளைப் பொறுக்குவது போல
மண்ணரிக்கையில் மினுங்கும் பொற்துகளை புளி ஒற்றி எடுப்பது போல
இறுதி ஓவரில் ஓடி ஓடி ரன் எடுப்பது போல
முகநூலில் நாரியரைத் தேடித் தேடிச் சேர்ப்பது போல
அரும்பாடு பட்டுத்தான் சேகரம் செய்கிறார்கள்


எழுத்தாளனை
எரியூட்ட
அவன் ஆயுளில்
சேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை

நேரடியானவை
நேர்மையற்றவை
எவருக்கும் புரிபைவை
எழுதியவனுக்கே கிரந்தம்
எடுப்புச் சோறென
ஏகப்பட்ட ரகங்கள்

கடைசிப்பேருந்தை தவறவிட்ட
கொசுக்கடி ராத்திரியில்
காணாமற் போன மகனின் சடலத்தை
அடையாளம் காட்ட பிணவறை செல்கையில்
தாமஸன் வெளிவர காத்திருக்கும் விஜர்சன அவஸ்தையில்
புழக்கடை இருளில் கசியும் குரலில்
இல்லாள் இன்னொருவனைக் கொஞ்சுவதைக் கேட்கையில்
கொப்புளானுக்குச் சப்பக் கொடுக்கையில்
மின்னலின் கீற்றலாக குறிப்புகள் தோன்றலாம்


காலாவதியான நாட்குறிப்பேட்டில்
சம்பளக் கவரில்
வினாத்தாளில்
ஏடிஎம் துப்பும் ரசீதில்
அர்ச்சனைச் சீட்டில்
சிகரெட் அட்டையில்
யாதும் தாளே யாவரும் குறிப்பர்

குறிப்புகளை
எரித்து
குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன்



காரணம்1

குறிப்புகளைச் சேகரிப்பவன் ஒருபோதும் எழுதப் புகான்

காரணம் 2

குறிப்புகள் குறிப்புகளாகவே சாபல்யமடையவை
உருமாற்றம் கொள்வதில் உவப்பில்லாதவை

காரணம் 3

குறிப்புகள் கட்டுரையாக முற்பட்டால்
அதன் சீவனைக் கொன்று சிரிக்கும்

காரணம் 4

குறிப்புகளை வைத்துக்கொண்டு கதை எழுதுவது
சித்தியைக் காதலிப்பது போல

காரணம் 5

குறிப்புகள் துணுக்குகளாகும் தருணம்
செல்ல மகள் கிழவனோடு உடன்போக்கு செய்தற் போல


காரணம் 6

காற்றைக் குடித்த காராச்சேவு போல
சுபயோக சுபதினத்தில் அவை
நாசமத்துப் போதல் நாட்டிற்கு நலம்

Saturday, March 19, 2011

பிற்சேர்க்கை

நான்கைந்து மாதங்களுக்கு முன்னரே பரத்தையர் கூற்று குறித்து அதன் ஆசிரியரிடம் விவாதித்ததை அவர் அழகாகத் தொகுத்து இருக்கிறார். முந்தைய கட்டுரையின் பிற்சேர்க்கையாக அதை இங்கே பகிர்கிறேன்:

தொகுப்பை வாசித்தேன். விமர்சனமாக இல்லாமல் அபிப்ராயமாக அத்தொகுப்பின் போதாமைகளைப் பற்றி எழுதுவதே உங்களுக்குச் செய்யும் உபகாரமெனக் கருதுகிறேன் நான். அல்லது நாமே கூட விவாதிக்கலாம். உங்கள் தொகுப்பில் சிறந்த கவிதைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பிறகு பேசலாம். முதலில் போதாமைகளைப் பற்றி.

பரத்தை என்கிற, பொது பாடுபொருளில் இருந்து மாறுபட்ட, கொஞ்சம் அதிர்ச்சிகள் கலந்த ஒன்றைப் பாடத்துணிபவனுக்கு இன்னும் கொஞ்சம் துணிச்சல் தேவை. உங்களது முன்னுரையில் இவையெல்லாம் என் அனுபவங்களா என்று கேட்காதீர்கள் என்ற கோரிக்கை த்வனிக்கிறது இல்லையா? அவை உங்கள் அனுபவம் என்றே வாசகன் கருதினால் அதனால் நமக்கு என்ன நஷ்டம்? மிகத் துணிச்சலான கவிப்பொருளுக்கு அந்த முன்னுடை ஒரு முரண். [இதற்கு, "அது பயம் அல்லது பலவீனம். சொந்த வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைக் காத்துக் கொள்ளச் செய்யும் சிறு உபாயம். அதற்கு இச்சமூகத்தின் முதிச்சிக்குறையும் ஒரு வகையில் பொறுப்பாகிறது" என்று நான் பதில் சொல்கிறேன்].

ஜெயன் அடிக்கடி சொல்வார் - ஜி. நாகராஜன் சித்தரித்த பரத்தையர்கள் அவர் காண விழைந்த பரத்தையர்களே அன்றி கண்ட பரத்தையர் அல்ல. நீங்கள் சித்தரித்த பரத்தையும் கண்ட பரத்தை அல்ல காண விழைகிற பரத்தையே. பரத்தையர்களின் கொலைப்பாதகமோ பொருட் பிடுங்கலோ அவர்கள் நட்டாற்றில் மூழ்கடித்த வரலாறோ இங்கே 99% இருக்கிறது. சமூக உயவுப்பொருளாக பரத்தையர்கள் செயற்படுகிறார்கள் என்பதற்காக அவர்களது செயற்பாடுகளனைத்தையும் நாம் கொண்டாடி விட முடியாது

உங்களுடைய எழுத்துக்களில் நேர்த்தியும், வார்த்தைத் தேர்வுகளில் கவனமும் இருக்கிறது. ஆனால், ஆனால், நான் தொலைந்த இடத்திலேயே நீங்களும் தொலைந்து விடக்கூடாது என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது. ஒரு நல்லெழுத்துக்காரனாய் பரிணமிக்க நீங்கள் நான்கு வரி, ஐந்து வரி தீர்ப்புகளை எழுதுவதைக் கைவிட்டே தீரவேண்டும். இவை துணுக்குத் தோரணங்கள் என்பதைத் தாண்டிய அந்தஸ்தினை ஒருபோதும் தரா. அப்புறம் பல்வேறு தடவைகள் சமூகம் கேட்டுப் புளித்த பழந்தமிழ் வசனங்களில் சிறிய வார்த்தை மாற்றம் செய்வது வார்த்தை விளையாட்டே அன்றி கவிதை அல்ல. நேற்று ஜெயனின் விமர்சன நூலில் ஒரு வரி படித்தேன்: ‘இலக்கியம் மொழியின் சாத்தியக்கூறுகளால் அல்ல; வாழ்வின் சாத்தியக்கூறுகளால் உருவாவதே’.

பரத்தைமையின் கவுச்சியை, கதறலை துள்ளத்துடிக்கச் சொல்லும் கவிதைகள் இத்தொகுப்பில் குறைவு என்கிறேன். தமிழின் முதல் துணுக்கு கவிஞராக நான் குலசேகர ஆழ்வாரைச் சொல்வேன். ரொம்ப எளிமைப்படுத்தல் அவரிடத்திலிருந்துதான் துவங்குவதாக என் யூகம். அடுத்து நகுலன். நகுலனின் கோட் ஸ்டாண்டு வகையரா அதன் எளிமைக்காக வாசகர்களைக் கவர்வதைக் காட்டிலும் கவிஞர்களைக் கவர்ந்த விஷ வித்து போலும். ரெண்டு பேரும் தான் நம்மைக் கெடுத்தச் சண்டாளர்கள்.

["இவற்றில் கணிசமானவை 5 வருடங்கள் முன்பு எழுதப்பட்டவை. இவை பெரும்பாலும் ஆழமற்ற வேடிக்கை பார்க்கிற வகைக் கவிதைகளே. எள்ளல் தான் இதன் ஆதார குணம். நல்ல இலக்கியத்திற்கு இந்த எள்ளல் மட்டும் போதாது என்பதும் புரிகிற‌து. இது சுஜாதா, வைரமுத்து பாணியில் அதே ஆழத்தோடு நின்றுவிடுகிற‌து" என்று பதில் சொல்கிறேன்].

தன் எழுத்தின் மீதான சந்தேகம் இருக்கும் வரை எழுத்தாளனுக்குத் தோல்வி இல்லை. அந்த சந்தேகத்தை அப்போதைய புறச்சூழல்கள் வெற்றிகொண்டு பாதி வெந்தவை பந்திக்கு வரும்போதே நாம் நம்முடைய தோல்வியை அறிவித்து விடுகிறோம்.

இப்படியெல்லாம் பேசுகிற உரிமை எனக்கு இருப்பதாக நான் நினைத்துக்கொள்கிறேன். உங்களை உற்சாகமிழக்கச் செய்வதென் நோக்கமல்ல. ஆனால் உங்கள் மொழி நேர்த்தி தாண்டி ஒரு வானம்பாடி குரல் ஒலிப்பதை என்னையன்றி யார் எச்சரிப்பார்? எழுதுகிற மொழியில் இருக்கிற ஓசை நயம்தான் உங்களுடைய தனித்துவம். தமிழில் ரொம்பவும் கொஞ்ச பேர்களுக்கே சாத்தியப்பட்டது அது. மகுடு அதில் ஒருவர்.

காந்தியின் நான்காம் குரங்கு கவிதை, தொடையிடுக்கில் வாங்கிக்கொள்வேன் சிறுவிளையாட்டாய், அணைத்துக்கொள்கிறேன் ஒரு தாயைப்போல, திருயோனிப்பெருஞ்சரிதம், 130, 131, 132 மற்றும் 133 ஆகிய கவிதைகள் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இதன் முன்னுரை மிக முக்கியமானது.

அபிலாஷைகள் இலக்கிய உத்வேகத்திற்குத் தடை. உங்களுடைய வெற்றி உங்கள் கவிதைகளின் ஏழாவது வரிக்கு மேல் துவங்கும் என எனக்குப்படுகிறது.
Posted by சி. சரவணகார்த்திகேயன் On Saturday, March 19, 2011

Friday, March 18, 2011

பரத்தையர் கூற்று - வாசக அபிப்ராயம்

வாசக உழைப்பை அதிகம் கோராத, ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடித்து விடுகிற தொகுப்புதான் பரத்தையர் கூற்று. கவிதைகள் குறித்த அபிப்ராயங்களை அவ்வப்போது அதன் ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எழுதுங்களேன் என்றார்.

நவகவிதை இன்று வந்தடைந்திருக்கும் இடம்; கவிதையின் அழகியல் குறித்துத் திறனாய்வாளர்கள் கடைப்பிடிக்கும் கறார் அணுகுமுறை; கவிதைகள் குறித்து நான் உருவாக்கி வைத்திருக்கும் சொந்த அளவுகோல் - இவற்றின் துணையின்றியே இந்நூலை நிராகரிக்க போதிய காரணங்கள் இருக்கின்றன.

பொதுவாக, பரத்தையர் குறித்த சொல்லாடல்கள் ‘அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது’ என்ற த்வனியிலேயே இருக்கக் கண்டிருக்கிறேன். முயங்கிக் கிடப்பவனை முற்றிலும் நிராயுதபாணியாக்கி வெளித்தள்ளும் தாசியரைப் பற்றியோ, ஒளித்து வைத்த காமிராவில் படம் பிடித்து வீட்டிற்கு சிடி வருமென மிரட்டும் சேடிகளைப் பற்றியோ, நெடுஞ்சாலைகளில் தோன்றி ஒதுங்கும் டிரைவரின் சங்கை நெரித்து லாரியை லபக்கும் ராத்திரி ராணிகளைக் குறித்தோ, கவனக்குறைவால் பெற்றெடுக்க நேர்ந்த தளிரை கழிவறைகளில் கடாசி விட்டு கடமையாற்றச் செல்பவர்கள் குறித்தோ எந்த பதிவும் கண்டதில்லை. நிதர்சனங்களோடு முரண்பட்டிருப்பதுதான் அறிவுஜீவித்தனமா என்ற இயல்பான சந்தேகம் எனக்குண்டு. ஒருவேளை நூலாசிரியர் இப்படியான பரத்தையர்களை எதிர்கொண்டதில்லையோ என ஐயப்பட்டால், அவர் முன்னுரையில் இக்கவிதைகளில் சொந்த அனுபவம் கிஞ்சித்தும் இல்லையெனச் சத்தியம் செய்கிறார். ஆக அவர் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே பரத்தையருக்கு நியாயம் தேடத் துணிந்திருக்கிறார். பரத்தைமைப் பற்றி அதிகம் பேசிய ஜி. நாகராஜனின் படைப்புகள், மா. தட்சிணாமூர்த்தியின் ‘திவ்ய தரிசனம்’, ராஜசுந்தர்ராஜனின் ‘நாடோடித் தடம்’, மகுடேஸ்வரனின் ‘காமக்கடும்புனல்’, வா.மு.கோமுவின் ‘சொல்லக்கூசும் கவிதைகள்’ வரிசையில் இடம் பிடிக்கத் தேவையான நேர்மை கவிதைகளில் இல்லை.

பரத்தையர் கூற்றை வாசித்த எவரும் இதில் மகுடுவின் சாயல் அதிகம் என்பதை ஒப்புக்கொள்வர். வெளியாகி ஐந்தாண்டுகளாகியும் தன் போன்ற மற்றொன்றை உருவாக்க முடிந்திருப்பதை மகுடுவின் வெற்றியென்றே கொளல் வேண்டும். தொகுப்பிலுள்ள கவிதைகளில் முக்காற்பங்கு மொழிநேர்த்தியுடன் அமைக்கப்பெற்ற துணுக்குகள்தாம். அவற்றிற்கு கவிதை அந்தஸ்தினை வழங்க மனம் மறுக்கிறது. தேய்வழக்குச் சொல்லாடல்களில் இருக்கும் வார்த்தைகளை முன்னுக்குப் பின் அடுக்கி ஓசைநயத்தை உற்பத்திச் செய்வது உழைப்பிற்க்கு எதிரான தப்பித்தல்.

சிஎஸ்கே காயின் செய்திருக்கும் சில வார்த்தைகள் அவரை முக்கியமானவரென நிருவுகிறது. உதாரணமாக ‘திருயோனிப்பெருஞ்சரிதம்’ என்கிற சொல்லாடல். கோலிச்சோடாவிற்குள் உருளும் கோலிக்குண்டினைப் போல மனதில் நெடுங்காலமாய் உருண்டுகொண்டே இருக்கிறது அவ்வார்த்தை. இதுமாதிரியான சொற்ச்சேர்க்கை அவரது பலம். சிஎஸ்கேவினுடைய மொழி சித்தர் மரபின் நீட்சி. அதை வைத்துக்கொண்டு கே.ஆர்.விஜயாவின் அவலக்குரலை எழுப்புவதுதான் அநீதி. சிஎஸ்கே தன் கவிதைகளைக் கொஞ்சம் திறந்த மனதுடன் மறுபரிசீலனை செய்தல் நலம்.

ஆ. மாதவன் கதைகள் - வாசக அபிப்ராயம்

அவனும் நானும் நண்பர்கள். வறிய புலத்திலிருந்து வசதிக்கு மாறியவர்கள். ஒரே தொழில்; ஒரே நிறுவனம்; ஆயினும் ஓர் நிரை அல்ல. அவன் என்னிலும் சாதனையாளன். மிகுந்த அந்தரங்கமாக நட்பின் அடிப்படையில் அவனுக்கு வரவிருக்கும் நல்வாய்ப்பு குறித்த ரகசியமொன்றைச் சொன்னான். யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டான். ஓரிரு வாரங்களில் அவனுக்குத் திருமணம் என ஏற்பாடாகி இருந்தது

அத்தகவலை நான் எவ்வித முகாந்திரமுமின்றி கசிய விட்டேன். நிறுவனத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள். அவனுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பிற்கும் குண்டு வைத்துவிட்டார்கள். ஓரே நாளில் வீதிக்கு வந்து விட்டான். விடைபெறும் முன் என் கரங்களை இறுகப் பற்றி ‘தேங்க்ஸ்டா...கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருடா’ செருப்பாலடித்தது போலிருந்தது. முகம் சிறுத்து தலை குனிந்து கொண்டேன். எவ்வித இலாப நோக்கமுமின்றி நான் நிகழ்த்தின இத்துரோகத்திற்குக் காரணம் என்ன? பொறாமையா?! நிச்சயம் இல்லை. அவனது வளர்ச்சி என்னை எவ்விதத்திலும் சீண்டியதில்லை. உண்மையில் எனக்கு உள்ளூர சந்தோசம்தான் கொண்டிருந்தேன். ஒருவன் வாழ்வழிந்துச் சீரழிவதைக் காண மனம் ரகசிய ஆவல் கொண்டிருந்ததா?! முகமறியா மனிதர்கள் படும் அவலம் கண்டு அல்லற்படுவது பாவனையா?! ஒருவனின் குடியைக் கெடுத்து விட்டுப் பின் அதற்குக் காரணங்கள் தேடும் நான் யார்?! மானுடம் பாடும் நூல்கள்; பெரியோரைத் துணைகொண்டிருத்தல்; பக்தி மார்க்கம் எதுவும் என்னை மனிதனாக்கும் முயற்சியில் துவண்டு விட்டனவா?!

இலக்கியத்தில் இதற்கு விடை இருக்கிறதா என புத்தகங்களைக் குடைந்து கொண்டிருந்தேன். காரண காரியங்களின்றி மானுடர்கள் குற்றம் புரியத் தலைப்பட்டிருக்கிறார்கள். மனதின் குரோதத்திற்கு வியாக்கியானங்கள் தேவையில்லை என்கிற ஆ. மாதவன் சிறுகதைகள் எனக்கு சற்று ஆறுதல் அளித்தன.

எந்தவொரு இலக்கிய ஆக்கத்தையும் முன்னுரையை வாசித்து விட்டுப் படிக்கும் வழக்கம் எனக்கில்லை. ஆ. மாதவனுடைய சிறுகதைகளை ஒருசேர படிக்கும்போது முற்றிலும் நெகட்டிவான மனிதர்களைச் சித்தரிக்கிற ஒரு எழுத்தாளராகவே எனக்குப் பட்டார். அவரது எழுத்து நடையும் மிகுந்த சாதாரணமாகவும் அயற்சியூட்டுவதாகவுமே தோன்றியது. எளிமையாக எழுதும் எழுத்தாளன் மீது இளக்காரம் எனும் மனக்காளான் முளைத்து விடுகிற தமிழ் மனம்தானே என்னுடையதும்?!

ஆனால், இப்படிப்பட்ட மீடியாக்கர் எழுத்தாளரை ந.பிச்சமூர்த்தி துவங்கி ஜெயமோகன்வரை வாழையடி வாழையாக கொண்டாடி வருகிறார்களே எனும் ஐயத்தில் வேதசகாயகுமார் எழுதிய முன்னுரையையும், ஜெயமோகன் எழுதிய பிற்சேர்க்கை கட்டுரையையும் வாசிக்கத் துவங்கினேன். ஆ. மாதவனின் எழுத்துக்களை எங்ஙனம் எதிர்கொள்வது என்கிற புதிரின் முடிச்சுகள் மெள்ள விலகத் துவங்கின.

பெரும்பாலும் மானுட அன்பைப் பேசுவதுதான் இலக்கியத்தின் பொதுவான குணாம்சமாக இருந்து வந்தது. மாதவனுடைய படைப்புகள் மானுட மனதின் இருண்மைகளை, தீமைகளைப் பேசியது.வேதசகாயகுமார் இதை கரும்புள்ளி என விளிக்கிறார். கதைமாந்தர்களின் மனதில் உறைந்து கிடக்கின்ற காமமும், வன்முறையும், குரோதமும் வெளிப்படுகின்ற தருணங்கள்தாம் ஆ. மாதவனின் கதைகளை முக்கியப்படுத்துகின்றன.

மாதவன் எல்லா மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் போலவே இளமைக்காலத்தில் திராவிடச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு கோபக்கார இளைஞனாக எழுதப் புகுந்தவர். அவருடைய ஆரம்பகால எழுத்துக்களில் பலவும் முரசொலியில் பிரசுரமாகி இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் அவரே டிஸ்கார்ட் செய்து விடுகிறார். அவருடைய எந்தத் தொகுப்பிலும் அவரது ஆரம்பகாலச் சிறுகதைகள் இடம் பெறவில்லை. ஆயினும் ஓரிரு கதைகளில் காணக்கிடைக்கிற ‘ஆன்மிக எள்ளல்’ அவரது திராவிடத் தொடர்பை நினைவூட்டுகின்றன.

மாதவனுடைய ஆகப்பிரதான ஆக்கமென கூறப்படுகிற கிருஷ்ண பருந்தையோ, புனலும் மணலும் நாவலையோ இன்னும் வாசித்தறியேன். ஆயினும், ஒரு வாசக மனதில் விஸ்வரூபம் கொள்ள அவரது சிறுகதைகளே போதுமானதாக இருக்கிறது.

ஆ.மாதவன் கதைகள் தொகுதி 1 & 2 - தமிழினி வெளியீடு

மனசாட்சி



தமிழினி மீண்டும் இணைய வடிவம் பெற்றிருப்பதை இலக்கிய ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம் என்பேன். அதன் வடிவமைப்பு எளிமையாகவும், அசத்தலாகவும் இருக்கிறது.

***

தென்மாவட்ட சிற்றூர்களில் ஒரு குடும்பம் ராவோடு ராவாக ஊரைக் காலி செய்து கிளம்புகிறதெனில் சந்தேகமே இல்லாமல் திருப்பூருக்குத்தான் சென்றிருப்பார்கள் என தீர்மானித்துக்கொள்ளலாம். விவசாயம் பொய்த்து, வேறு தொழில் வாய்ப்புகளுமின்றி, இம்சிக்கும் சிட்டை வட்டியால் மொத்த குருதியும் சுண்டிய பின் வாழ வழி தேடி ஓடுவோரின் கடைசிப் புகலிடம் திருப்பூர்.

வறண்ட தலையும் கலைந்த விழிகளுமாய் திருப்பூரின் வெறிச்சோடிய வீதிகளில் திரியும் தெக்கத்தி இளைஞர்களின் புகைப்படங்களை நாளிதழ்களில் பார்க்கையில் கண்கள் கசிகின்றன. நடப்பு இதழ் தமிழினியில் இப்பிரச்சனை குறித்து மணல்கடிகை கோபாலகிருஷ்ணன் மற்றும் கவி மகுடேஸ்வரன் எழுதிய இரண்டு விரிவான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இருவரும் இத்தொழிலினர் என்பதால் தகவல் புஷ்டியோடு இருக்கின்றன இக்கட்டுரைகள்.

ஆயிரத்துச் சொச்சம் பேர்கள் மட்டுமே படிக்கின்ற தமிழினி சமூக பிரச்சனைக்கு 16 பக்கங்கள் ஒதுக்குகிறது. திருப்பூரில் மட்டுமே பத்தாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிற தமிழகத்தின் முன்னணி வெகுஜன வார இதழ்கள் இப்பிரச்சனை குறித்து உருப்படியான எதையும் எழுதாதது தடித்தனமன்றி வேறென்ன?! லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை தமிழ் மக்களுக்கு போய்ச் சேரவேண்டியதில்லையென நினைக்கிறார்களா?!

***

நாதஸ்வரத்தில் வசனங்களே இல்லாமல் ஒரு எபிஸோட் என விளம்பரித்தார்கள். என்னே புதுமையென்று அலுவல் விட்டு அவசர அவசரமாய் கிளம்பி வந்து பார்த்தேன். இதுகாறும் தனித்தனியாய் ஒப்பாரியைப் போட்டவர்கள் கோரஸாய் ஒப்பாரினார்கள். என்ன எழவுய்யா இது...?!

***

பத்மவிபூஷண் டாக்டர் ராஜேந்திர பச்சோரியின் பேச்சை கேட்க நேரிட்டது. இயற்கையைச் சீரழிப்பதில் மேல்தட்டின் பங்கே அதிகம். இயற்கைச் சமனநிலை குலைந்து ஏற்படும் பேரிடர்களில் அவர்கள் சுலபமாகத் தப்பித்து விடுகிறார்கள். எளியோர்கள் மாட்டிக்கொண்டு உயிரிழக்கிறார்கள், வீடு இழக்கிறார்கள், வேலை இழக்கிறார்கள் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். வேகம் என்பதே அபத்தம் நாம் தவறான பாதையில் பயணிக்கையில் என ஜிடிபி மதிப்பீடுகளை விளாசினார். தனிமனிதனால் கடைப்பிடிக்க முடிகிற மூன்று எளிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

1) மாமிசம் உண்பதைக் கொஞ்சமேனும் குறைத்துக்கொள்ளுங்கள்.
2) சைக்கிள் மிதியுங்கள்
3) முடிந்தவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள்

***
நடப்பு இதழ் சூரியகதிரில் அடியேனின் சொற்சித்திரம் ‘தூஸ்ரா’ வெளியாகியுள்ளது. சிறுகதைக்குரிய அந்தஸ்து கிஞ்சித்தும் இல்லைதான் ஆனால், வாசிக்க உற்சாகமாக இருந்தது என ஜெயன் குறிப்பிட்டிருந்தார். உற்சாகமாகத்தான் இருந்தது வாசிக்க :)

***

கொஞ்ச காலத்திற்கு முன் நான் பணியாற்றிய நிறுவனமொன்றில் உதவாக்கரை சக ஊழியன் ஒருவன் இருந்தான். ‘உப்பானது சாரமற்றுப் போனால்...’ எனும் விவிலிய வாசகத்தை அடிக்கடி நினைவூட்டுகிறவன். அவனால் நிறுவனத்திற்கோ, குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ ஏன்... அவனுக்கே கூட பிரயோசனமில்லை என்பது சான்றோர் வாக்கு. மிகச் சமீபத்தில் அவனைச் சந்திக்க நேர்ந்தது. நம்பினால் நம்புங்கள் அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஆகி இருந்தான். சுஜாதாவின் பீட்டர் கதை நினைவுக்கு வந்தது. ஆனால், இந்தப் பக்கியிடம் பீட்டரின் குணாம்சங்கள் எதுவும் தட்டுப்பட்டதாக நினைவே இல்லை. எப்படி நிகழ்ந்தது இந்த ஆச்சர்யம்?!

‘எல்லாப் பயலுவலும் ஓடிப் போயிட்டாய்ங்க. என்னையும் டிரான்ஸ்பர், டீ-புரொமசன், மெமோன்னு என்னென்னமோ பண்ணிப்பார்த்தாங்க. உட்கார்ந்த இடத்தை விட்டு அசையலையே. கடைசீல இருக்கறதிலே சீனியர்னு மேனேஜர் ஆக்கிட்டாங்க...’ என்று சிரித்தபடி பதிலளித்தான்.

அழகாகத் தொடுத்து நெருக்கிக் கட்டப்பட்ட பூமாலையில் ஒவ்வொரு பூக்களாக விடுபட எஞ்சிய பூவே பூஜைக்குப் போகிறது என்பார் விகடன் அசோகன். உண்மைதான்.

***

உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் அழைத்தார். சக நண்பர்களோடு சேர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அமைக்க இருப்பதாகவும் அதற்கு நல்ல பெயரைச் சிபாரிசு செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். கொஞ்சமும் யோசிக்காமல் ‘மனசாட்சி’ என்று வைக்கும்படிச் சொன்னேன்.

எப்படியும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு திருடத்தான் போகிறார்கள். கொஞ்சமாவது உருத்தட்டும் என்றுதான்.

***

Monday, March 7, 2011

புலவர் நாஞ்சில் நாடன்!

இலக்கிய விழாக்கள் நடத்துவதில் நன்றாகத் தொழிற்பட்டவர் விஜயா வேலாயுதம் அவர்கள். ஆனால், நாஞ்சிலுக்காக அவர் நடத்திய பாராட்டு விழா அத்தனைச் சுவையாக இல்லை. முத்தையாவையும், குணசேகரனையும் தவிர பேசியவர்கள் எவருக்கும் நாஞ்சிலைப் பற்றிய முழுச்சித்திரம் தெரியவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி ‘புலவர் நாஞ்சில்நாடன் இன்னும் பல பாடல்கள் படைத்து விடுதலை நெருப்பை அணையாமல் காக்கவேண்டும்’ என்று முழங்கினார். எய்த தமிழாசிரியை இருக்க அம்புச் சிறுமியை மன்னிக்கலாம்தான். ஆனால், அடுத்துப் பேசிய ஒரு கொடியோன் நாஞ்சில் நாடனைத் தமிழ் இலக்கிய உலகிற்கு முதன் முறையாக அறிமுகப்படுத்துவது போலப் பேசினார். தான் ஏற்கனவே வாரமலரிலும், குடும்ப மலரிலும் படித்துச் சுவைத்த சிறுகதைகளோடு ஒப்பிட்டு நாஞ்சிலார் இன்னும் கடுமையாக உழைத்து இலக்கியத்தில் அடைய வேண்டிய இடங்களைச் சுட்டிக் காட்டினார். சுடுமணற் புழுவெனத் துடித்துப் போயினர் பார்வையாளர்கள். கேண்டி செல்போனை எடுத்து வீசட்டுமாவென கேட்டுக்கொண்டே இருந்தாள். பேச்சாளர் அடுத்து நாஞ்சில் படிக்க வேண்டிய நூல்கள், தெரிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர்களுக்குத் தாண்டினார். உள்ளூர்ப் பிரமுகர்களில் சிலர் வேலாயுதத்திடம் ‘இது பாராட்டு விழாதானே...?!’ என்கிற நியாயமான ஐயத்தை நிவர்த்தி செய்து கொண்டனர். இதற்கு மேல் உட்கார்ந்திருந்தால் நாஞ்சிலுக்கு நிகழும் அவமானத்தைக் கண்டு நான் வாளாவிருந்தேனென வரலாறு நிந்திக்குமென்பதால் கிளம்ப முடிவெடுத்து பக்கத்திலிருந்தவரிடம் பேச்சாளர் யாருங்க என்றேன் ‘தமிழ்த்துறைத் தலைவர் - பாரதியார் பல்கலைக்கழகம்’ என்று பதில் வந்தது!

***

ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் பெருக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ‘ஹேப்பனிங் சிட்டி’ ஆகி இருக்கிறது கோவை. சொற்பொழிவு, உபன்யாசம், கர்நாடக சங்கீதம், மெல்லிசை, துள்ளிசை, நாம சங்கீர்த்தனம், நூல் அறிமுகம், பாராடு விழா, பொருட்காட்சி, விண்டேஜ் கார், ஏரோ ஷோ, உணவுத் திருவிழா, விளையாட்டு போட்டிகளென தினமும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் நகருக்குள் நடந்து கொண்டே இருக்கின்றது. பார்க்கத்தான் நேரம் இல்லை.

***
தேகம் படித்தேன். க்ரியேட்டிவிட்டி என்றால் கிலோ என்ன விலையெனக் கேட்கும் சின்னத்தனமான எழுத்து. மொன்னையான சாணி நடை. சுத்தைக் கடலையைச் சவைப்பது போலிருந்தது வாசிப்பனுபவம். நேற்றைக்கு பிலாக் எழுத ஆரம்பித்த இளம்பதிவன் கூட இதைக்காட்டிலும் சுவாரஸ்யமாய் எழுதுவான். மொத்த நாவலிலும் இலக்கியத்தரத்தில் ஒரு வாக்கியம்... அட.. ஒரு வார்த்தைக் கூட தட்டுப்படவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தைக் கடக்கையிலும் ‘வெங்கப்பய காவடி விழுந்து விழுந்து ஆடிச்சாம்...’ என்றுதான் தோன்றியது.

இதுமாதிரி அசிங்கங்களைக் கூட்டி அள்ளவேண்டிய தலையெழுத்து மனுஷ்யபுத்திரனுக்கு. விரும்பிச் செய்திருப்பாரென்று என்னால் நம்பவே முடியவில்லை. ரோட்டில் வீசினால் கூட பிறிதொரு நபருக்கு துன்பம் நேரிடும் அபாயம் இருப்பதால் அடுப்பில் வீசினேன்.

***

வாழ்வியற் கலையின் பிதாமகனென நான் கருதும் பெர்னார்ட் ஷா; 800 ஆண்டு கால விடுதலைப் போராட்ட சரிதம்; டப்ளின் உலகிற்களித்த அரசியல் சிந்தனையாளர்கள்; பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை; செழுமையான அரசியலமைப்புச் சட்டமென அயர்லாந்து மண் எனை ஈர்க்க இருந்த நூற்றுக்கணக்கான காரணங்களுள் புதியதாக அந்நாட்டின் கிரிக்கெட் அணியும் சேர்ந்திருக்கிறது. ஜென்ம விரோதியான இங்கிலாந்துடனான வெற்றி மொத்த ஐரீஷையும் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது.

இந்தியாவுடனான ஆட்டம். 5 ஓவர்களுக்கு 9 ரன்கள்தாம் தேவை என்கிற சல்பி சிச்சுவேஷன். 46வது ஓவரை வீச வருகிற பவுலர், கேப்டனோடு விவாதித்து மொத்த பீல்டிங்கையும் மாற்றி அமைத்து ஆக்ரோஷத்துடன் பந்தை வீசுகிறார். இந்த ‘நெவர் கிவ்-அப்’தான் ஐரீஷ் மண்ணின் ஆதார குணம்.

***

கோவையில் மீண்டும் ஒரு சிறுமி சிதைக்கப்பட்டிருக்கிறாள். கொலையாளி ஏற்கனவே ஒரு பெண்ணைக் கொன்று புணர்ந்தவன் என்கிறார்கள். நெக்ரோபிலியா!

கமிஷனர் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். எட்டு வயதுச் சிறுமியிடம் வீட்டின் கார் டிரைவர் வேலையைக் காட்டி இருக்கிறான். முஷ்டியை முறுக்கி மூக்கில் ஓரே குத்து. மூக்குடைந்து ரத்தம் கொட்டி டிரைவர் நிலை குலைந்த நேரத்தில் சிறுமி தப்பித்து விட்டாள். விசாரித்ததில் சிறுமி மலேசியாவில் படித்தவள் என்பது தெரிய வந்தது. மார்ஷியல் ஆர்ட்ஸ் மலேசிய கல்வி முறையில் கட்டாய பாடமாம்.

குட் டச், பேட் டச்; தற்காப்புக் கலைகள், நீச்சல் போன்றன கலிமிகு வாழ்வின் கட்டாய தேவைகள். நீச்சல் தெரிந்திருந்தால் கால்வாயில் தள்ளி விடப்பட்ட முஸ்கினும், ரித்திக்கும் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.

Saturday, March 5, 2011

விட்டல்தாஸ் மகராஜ் - கோவையில்



இன்று (05-03-2011) துவங்கி 13ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில் (ஆர்.எஸ்.புரம்) மாலை 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் அவர்களின் நாமசங்கீர்த்தன பஜனை நடைபெற இருக்கிறது.