Thursday, March 31, 2011

அசாவாமை

குறிப்புகளை
எரித்து
குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன்

குறிப்புகளின்
மதிப்பு
குப்பைகளுக்குச்
சமானமில்லை
ஒரு மாத்து குறைவுதான்

முத்தம்மா கொட்டும் குப்பையில்
எப்போதேனும் தென்படும்
ஆணுறை போல
யாருமில்லாததை உறுதி செய்து கொண்டு
ஆட்காட்டி விரலை மடக்கி பளிப்பு காட்டும்
எதிர் வீட்டு +2 மாணவியைப் போல
காகத்திற்குப் பதிலாய் கரண்ட் கம்பத்தில் கரிச்சான் இருப்பதைப் போல
மேலாளர் விடுப்பில் இருக்கும்போதும்
அவர் மேஜையை ஒழுங்கு செய்யும் சேவகன் போல
அரிதாகவே தோன்றி அப்போதே மறையும் தன்மையுடைத்த


பூந்திக்கொட்டைகளைப் பொறுக்குவது போல
மண்ணரிக்கையில் மினுங்கும் பொற்துகளை புளி ஒற்றி எடுப்பது போல
இறுதி ஓவரில் ஓடி ஓடி ரன் எடுப்பது போல
முகநூலில் நாரியரைத் தேடித் தேடிச் சேர்ப்பது போல
அரும்பாடு பட்டுத்தான் சேகரம் செய்கிறார்கள்


எழுத்தாளனை
எரியூட்ட
அவன் ஆயுளில்
சேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை

நேரடியானவை
நேர்மையற்றவை
எவருக்கும் புரிபைவை
எழுதியவனுக்கே கிரந்தம்
எடுப்புச் சோறென
ஏகப்பட்ட ரகங்கள்

கடைசிப்பேருந்தை தவறவிட்ட
கொசுக்கடி ராத்திரியில்
காணாமற் போன மகனின் சடலத்தை
அடையாளம் காட்ட பிணவறை செல்கையில்
தாமஸன் வெளிவர காத்திருக்கும் விஜர்சன அவஸ்தையில்
புழக்கடை இருளில் கசியும் குரலில்
இல்லாள் இன்னொருவனைக் கொஞ்சுவதைக் கேட்கையில்
கொப்புளானுக்குச் சப்பக் கொடுக்கையில்
மின்னலின் கீற்றலாக குறிப்புகள் தோன்றலாம்


காலாவதியான நாட்குறிப்பேட்டில்
சம்பளக் கவரில்
வினாத்தாளில்
ஏடிஎம் துப்பும் ரசீதில்
அர்ச்சனைச் சீட்டில்
சிகரெட் அட்டையில்
யாதும் தாளே யாவரும் குறிப்பர்

குறிப்புகளை
எரித்து
குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன்காரணம்1

குறிப்புகளைச் சேகரிப்பவன் ஒருபோதும் எழுதப் புகான்

காரணம் 2

குறிப்புகள் குறிப்புகளாகவே சாபல்யமடையவை
உருமாற்றம் கொள்வதில் உவப்பில்லாதவை

காரணம் 3

குறிப்புகள் கட்டுரையாக முற்பட்டால்
அதன் சீவனைக் கொன்று சிரிக்கும்

காரணம் 4

குறிப்புகளை வைத்துக்கொண்டு கதை எழுதுவது
சித்தியைக் காதலிப்பது போல

காரணம் 5

குறிப்புகள் துணுக்குகளாகும் தருணம்
செல்ல மகள் கிழவனோடு உடன்போக்கு செய்தற் போல


காரணம் 6

காற்றைக் குடித்த காராச்சேவு போல
சுபயோக சுபதினத்தில் அவை
நாசமத்துப் போதல் நாட்டிற்கு நலம்

12 comments:

Latha Vijayakumar said...

மிக அருமை

பரிசல்காரன் said...

அற்புதம் செல்வா. காரணங்கள் உண்மை.

பரிசல்காரன் said...

அற்புதம்..

காற்றில் எந்தன் கீதம் said...

அருமையான செறிவான நடை சகோதரரே வாழ்த்துக்கள்.....

ஒவ்வாக்காசு said...

சட சட-ன்னு மழை அடிக்கிறது மாதிரியான ஒரு பதிவு. Class.

Answer to your post lies in your profile itself, Selva: "If you want something in life reach out and grab it!". :)))

நட்புடன்,
ஒவ்வாக்காசு.

vaanmugil said...

பிரமாதம்...காரணங்கள் காரணங்கள் அட்டகாசம்...

சுழியம் said...

////எழுத்தாளனை
எரியூட்ட
அவன் ஆயுளில்
சேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை///

Gud one :-)

Chitra said...

எழுத்தாளனை
எரியூட்ட
அவன் ஆயுளில்
சேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை


......ஆழமான கருத்தக்களும் அருமையான எழுத்து திறனும், உங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை அடையாளம் காட்டுகின்றன. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

பத்மகிஷோர் said...

//முகநூலில் நாரியரைத் தேடித் தேடிச் சேர்ப்பது போல
அரும்பாடு பட்டுத்தான் சேகரம் செய்கிறார்கள்//
அடடா....

சி. சரவணகார்த்திகேயன் said...

that's a well-knitted poem.
liked it a lot.
also added it to the படித்த‌து / பிடித்தது series in my site:
http://www.writercsk.com/2011/04/100.html

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

சரவணகார்த்திகேயனின் வலைத்தளத்திலிருந்து இங்கு வந்தேன். ‌மிக அருமையான கவிதை இ‌து. வாழ்த்துக்கள்

SELVENTHIRAN said...

கருத்துக்களுக்கு நன்றி தோழர்களே