Saturday, May 31, 2008

காளியைப் புணர்பவன்

ஆகச்சிறந்த புணர்ச்சியை
நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணரவேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம் கைகள்...

... ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன என்ற வசுமித்ர - னின் கவிதைத் தொகுப்பின் (கறுப்புப் பிரதிகள் வெளியீடு) ஒவ்வொரு கவிதைகளும் இக்கவிஞன் மீதான ஈர்ப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொகுப்பின் சில கவிதைகளை எவ்வளவும் முயன்றும் அணுக முடியவில்லை என்பதை எனது புரிதலின் இயலாமை என்பதாகவேக் கருதுகிறேன் என்ற போதும் குறுவாள், துயரம் போன்ற வார்த்தைகள் அடிக்கடி இடம்பெறுவது ஒரு மெல்லிய அயர்ச்சியைக் கொடுக்கிறது. இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது ஏற்படுகிற வாசாகானுபவத்தைப் பதிவு செய் என்கிறார் ரமேஷ் அண்ணா. அப்படிச் செய்தால் பூனை வெளிப்பட்டு விடும் அபாயம் இருப்பதால் அதைத் தவிர்க்கிறேன்.

துப்பாக்கி தேவை

தாட்சாயிணி,

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ ஃபுல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்குக் காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். 'அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். " தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

- பிரதியங்காரக மாசான முத்து

Thursday, May 29, 2008

முத்ஸ்வாமி

பேராசிரியர் அரங்க. முத்துசாமி வந்திருந்தார். ஓய்வுக்குப் பின் தனது பெயரை முத்ஸ்வாமி என மாற்றிக்கொண்ட அவர் தற்போது கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு தன்னம்பிக்கை, விடா முயற்சி, குறிக்கோள் போன்ற தலைப்புகளில் வகுப்புகள் எடுக்கத் துவங்கி இருக்கிறாராம். அதற்காக மார்க்கெட்டில் கிடைக்கிற ஜெட்லியாக இருங்கள், சட்னியாக இருக்காதீர்கள், காலம் உங்கள் கம்முக்கூட்டில், அள்ள அள்ள பிரச்சனைகள் போன்ற சுயமுன்னேற்றப் புத்தகங்கள், இமெயிலில் வரும் பவர் பாயிண்ட் பிரசண்டேஷன்கள், பழைய பஞ்ச தந்திரக் கதைகளுக்கான புதிய விளக்கங்கள் போன்றவற்றைத் தீவிரமாக சேகரித்து வருகிறார். நேற்றிரவு 20-20 கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தபோது வோடபோஃன் நிறுவனத்தின் விளம்பரத்தை ஒரு ஓவருக்கு ஒரு முறை என்ற வீதத்தில் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு விஷயத்தையும் மாறுபட்டக் கண்ணோட்டத்தில் அணுகுவதில் வல்லவராகிவிட்ட அவர் மேற்கண்ட விளம்பரத்தில் ஒளிந்திருக்கும் மூன்று முத்தான தத்துங்களை முழுபோதையில் எடுத்து வைத்தார்.

1) அழகான பெண்கள் எப்போதும் சுமாரான பையன்களிடமே வீழ்ந்து விடுகின்றனர்.

2) அழகான பெண்ணை ஈர்க்க பல்ஸர், என்73, காது வளையம், மைனர் செயின் எல்லாம் தேவையில்லை. ஒரு சொட்டு மை போதும்.

3) தேர்வு நேரம் முடியப்போகும் முக்கிய தருவாயில் பேனா எழுதாமல் போய்விட்டால் கலங்க வேண்டியதில்லை. சமயோசிதமாக பக்கத்து இருக்கைப் பையனைப் பார்த்து லேசாக சிரித்து வைத்தால் போதும்.

எங்களோடு அமர்ந்திருந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த நிஜாம் அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.

Wednesday, May 28, 2008

நாய்க்காதல்

சாண் ஏறினால்
முழம் சறுக்குகிறதா?
சங்கடப்படாமல்
லிப்டை பயன்படுத்து


அந்த நீங்கள்
யாரென்று கேட்கிறாய்
நீங்களின் பட்டியல்
நீளமானது
நீங்களுக்குள் நீயும்
இருக்கிறாயென்றால்
நீளும் உன் நாவிற்கு பயந்து சொல்கிறேன்
அந்த நீங்களுள் நீ இல்லையென்று...


சட்டம்
தன் கடமையைச்
செய்கையில்
குறுக்கே நிற்காதே!
உட்கார்ந்து கொள்.


செய்
அல்லது
செய்யச் சொல்லிவிட்டு
செத்து மடி


சுத்த தமிழ் பேசுங்களென
முழங்கினார்.
சுத்தமென்பதே
தமிழில்லை


இடைப்பட
குறுகுறு நடந்து
இட்டும் தொட்டும்
சிறுகை நீட்டி
கேட்கிறதக் குழந்தை
பிச்சை


அண்ணல்
கைவைக்க
அவளும்
இடம் கொடுக்க
நடு பஸ்ஸில்
நிகழ்கிறதொரு
நாய்க்காதல்!

Tuesday, May 27, 2008

இருக்கிறேன்

மரபணு சோதனையில்
மரித்த எலிகளுக்கான
மவுன அஞ்சலி கூட்டத்தில்
விஞ்ஞானிகளுக்கு மத்தியில்
ஒரு பருத்த பூனையும் இருந்தது.

யுவான்சுவாங்
வந்துபோனது
எல்லாருக்கும் தெரிகிறது
பாவம்
பாட்டன் பெயர்தான்
பலருக்குத் தெரிவதில்லை
அவளும் அவளும்
ஆக்ரோஷமாய்
திட்டிக்கொள்கின்றனர்
"விபச்சாரியென்று"
அடடா...
இத்தனைநாள்
எதிர்வீட்டில் இருந்தும்
எனக்கிது தெரியவில்லையே...

எப்பொருள்
யார் யார்கை
இருப்பினும்
அப்பொருள் அடிப்பவன்
பக்கிரி!

நாளைய காட்சிக்கான
வசனங்களை எழுதலாம்;
புதியதாய் வேண்டுமாம்
புரொடியூசருக்கு...
வசனங்கள் கூடவா?!

சாவகாசங்கள்
எறியூட்டப்பட்ட
எழுத்தாளனொருவன்
எழுதிக்குவிக்கையில்
தற்செயலாய்
பிறந்துவிடுகிறது
கவிதை!

ஆறே வாரத்தில்
கிடைத்துவிட்டது
சிகப்பழகு
இனி
நாய்கள் நக்க வரும்...

Monday, May 26, 2008

மெலட்டூர் மேஜிக் - தி ஹிந்துவில்

'நீ எழுதிய ஓரேயொரு உருப்படியான சமாச்சாரம் மெலட்டூர் மேஜிக் கட்டுரைதான்... மத்ததெல்லாம் அடாஸூ' என்பதுதான் இன்றைக்கு வரை விஸ்வத்தின் அபிப்ராயமாக இருக்கிறது. முடியலத்துவம், சிறுகதைகள் மற்றும் எனது பதிவுகளை அவன் செருப்பால் அடிப்பது கிடக்கட்டும். விஷயம் அதுவல்ல. இந்த ஆண்டு மெலட்டூர் பாகவத மேளாவிற்குப் போக முடியவில்லையே என்ற மனக்குறையைப் போக்கும் விதமாக தி ஹிந்துவில் பிரதீப் சக்ரவர்த்தி அருமையானதொரு கட்டுரையைப் புனைந்துள்ளார். மாலியையும் மெலட்டூர் மக்களையும் வியக்காமல் என்ன செய்வது?

Saturday, May 17, 2008

மாபஸான்: ஓர் எளிய அறிமுகம்

'சிறுகதைகளின் தந்தை' என வர்ணிக்கப்பட்ட மாபஸான், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளர். பாரீஸில் வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர், பிராங்கோ-பிரஸ்ஸியன் போரின் போது ராணுவத்தில் சேர்ந்து தேச சேவை புரிந்தார். போருக்குப் பின் பாரிஸீக்குத் திரும்பிய இவருக்கு கஸ்தேவ் ப்ளாபர்ட் போன்ற எழுத்தாளுமைகளோடு ஏற்பட்ட நட்பு இலக்கிய பரிச்சயத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. 1872 முதல் 1880 வரை கப்பற்படை, கல்வி அமைச்சகம் போன்றவற்றில் அரசுப் பணியில் இருந்தார். அரசுப்பணியில் இருந்து கொண்டே பிரான்ஸின் முன்னனி நாளிதழ்கள் பலவற்றிற்கும் ஃப்ரீலேண்ஸ் செய்தியாளராக தனது பங்களிப்பை செய்து கொண்டிருந்தார். 1880ல் அவரது முதல் கவிதை வெளியானது. அவ்வாண்டின் இறுதியில் அவரது மாஸ்டர் பீஸ் எனக் கொண்டாடப்படும் 'பால் ஆஃப் பேட்' வெளியானது. போர்க்காலத்தில் ஒரு கோச்சில் பயணிகளோடு பயணித்துக்கொண்டிருந்த ஒரு ஊரறிந்த வேசியின் கதைதான் அது. பின்னாட்களில் இக்கதை இயக்குனர் ஜான் போர்டினால் 'ஸ்டேஜ் கோச்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு பெரும்புகழ் பெற்றது. 1881ல் வெளியான இவரது முதல் சிறுகதைத் தொகுதி, இரண்டு ஆண்டுகளில் பன்னிரெண்டு மறுபதிப்புகள் கண்டது. 1883ல் வெளியான இவரது முதல் நாவலான 'ஒரு பெண்ணின் வாழ்க்கை' அந்த ஆண்டின் இறுதிக்குள் 25,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இவரது இரண்டாவது நாவலான பெல்-அமி வெளியான நான்கு மாதங்களில் 37 பதிப்புகள் கண்டது.

தனது இருபதாவது வயதில் சிபிலிஸ் நோயால் தாக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் அவரது உடல் நிலையும் மன நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது சிதைவுற்ற மனநிலையின் வெளிப்பாடு கதைகளிலும் வெளிப்பட்டது. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது ' எ டைரி ஆஃப் மேட்மேன்'. இக்கதையின் கருதான் சுஜாதாவின் 'எதையும் ஒருமுறை' நாவல். இக்கதையில் வரும் நீதிபதி கதாபாத்திரத்தைப் போலவே மாபஸானும் தனது 42வது வயதில் தற்கொலை முயற்சியாகத் தனது தொண்டையை அறுத்துக்கொண்டார். அதில் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக்கொண்டவர் அடுத்த ஆண்டே மரணமடைந்தார்.

முன்னூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், மூன்று பயணப் புத்தகங்கள் எழுதியுள்ள மாபஸான் சிறுகதையின் வடிவத்திலும், கதைக்களத்திலும் மேற்கொண்ட மாற்றங்களும், சோதனை முயற்சிகளும் அவரது வழியொற்றி எழுத வந்த எண்ணற்ற எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தது. அவர்களுள் சாமர்ஸெட்டும், ஓ. ஹென்றியும் முக்கியமானவர்கள். தமிழில் புதுமைப்பித்தன் 'தமிழ்நாட்டின் மாபஸான்' எனக் கொண்டாடப்பட்டார். கடந்த மாதத்திற்கு முன்பு வரை...

டிஸ்கி:
சிறுகதைகள் எழுத முயற்சிப்பது, அரசுப்பணி, முறுக்கு மீசை, எழுத்தாளர்களோடுத் திரிவது, மனச்சிதைவு போன்றவைகள் உங்களுக்கு வேறு யாரையாவது நினைவுப் படுத்தினால் அதற்கு கட்டுரையாளர் எவ்விதத்திலும் பொறுப்பல்ல...

Friday, May 16, 2008

பழைய கடிதம்

சாத்தான்குளத்தை விட்டு பிழைப்பு தேடி கோயம்புத்தூர் வந்த ஆரம்ப நாட்களில் தனிமையும், மன அழுத்தமும் கொண்டவனாக இருந்தேன். ஊர் நண்பர்களுக்கு கடிதம் எழுதுவதொன்றே ஆறுதலான விஷயமாகவும் இருந்தது. செல்போன் வாங்குமளவிற்கு பொருளாதாரத்தில் வளர்ந்திருக்காத 2004ம் வருடங்களில் நான் ஜெபராஜிற்கு அடுத்தடுத்து எழுதிய கடிதங்களை பத்திரமாக வைத்திருக்கிறான் என்பதை அவன் இல்லத்திற்கு சென்றிருந்தபோது அறிந்தேன். நாம் எழுதிய கடிதங்கள், நமக்கு வந்த கடிதங்கள் இவற்றை காலம் கடந்து பார்க்கையில், படிக்கையில் ஏற்படுகிற பரவசமும், எழுகின்ற ஞாபகங்களும் செளந்தர்யமானது. கடிதங்களை கையோடு எடுத்து வந்துவிட்டேன். அவற்றுள் ஒன்று...

அன்புள்ள ஜெ,

நலமாய் இருப்பாய் என்று நம்புகிறேன். கோவை வந்த பிறகு நண்பர்கள் கொடுத்தது, எதிரிகள் கொடுத்தது, வாங்கியது, திருடியது என புதிதாக நூற்றி முப்பத்தாறு புத்தகங்கள் அறையை ஆக்ரமித்துள்ளன. கடந்த இரு வாரங்களாக புரட்டிக்கூட பார்க்காத வார, மாத இதழ்களும், துவைக்காத துணிகளும், அலுவலக கோப்புகளும் கட்டிலெங்கும் இறைந்து கிடக்கின்றன. அவசரமாய் முடிக்க வேண்டிய எழுத்து வேலைகளும், துவைக்க வேண்டிய துணிகள், துடைக்க வேண்டிய பொருட்கள் என நேரம் கடத்த எத்தனையோ வழிகள் இருந்தும் உறக்கம் வராத ராவுகளில் எதிரிலிருக்கும் நண்பனிடம் புலம்புவது போன்ற தோழமையுணர்வை கடிதம் எழுதுவது மட்டுமே கொடுக்கிறது. வாசிக்கும்போது உன் முகம் எப்படி இருக்கும் என்ற கற்பனை உறக்கத்தை விரட்டி மேலும் மேலும் எழுதுவதற்கான உற்சாகத்தை தருகிறது.

எதிர்காலம் குறித்த ஒரு மெல்லிய நடுக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை அகலத்திறந்த வாயோடு என்னை விழுங்கி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நீ அனுப்பும் பொன்மொழிகளோ, தன்னம்பிக்கை நூல்களோ என்னை தன்னம்பிக்கை உடையவனாக மாற்றி விடுமா என்ன?! பொருளாதாரம், கல்வி தகுதி, குடும்ப பின்புலம், உடல் நலம் இவைகள்தான் ஒருவனை வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் காரணிகளாக இருக்க முடியும்.

சுற்றிலும் இருக்கும் பெரும்சம்பளக்காரர்களை எதிர்கொள்கையில் இருபத்து மூன்று ஆண்டுகாலமாக திருட, பொய் சொல்ல, பரிகசிக்க, நாடகமாட, கவிதை எழுத பெண்களை வீழ்த்த கற்றுக்கொண்ட ஆர்வத்தை ஆங்கிலம் கற்க, நயமாகப் பேச, நளினமாக நடந்து கொள்ள, அடக்கமாக இருக்கக் கற்றுக்கொள்வதில் காட்டவில்லை என்ற நிதர்சன செருப்பு கன்னத்தில் அறைகிறது. ஒன்று புலம்பித் தீர்க்கிறேன் அல்லது சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறேன். இப்பழக்கங்களில் இருந்து எப்போதுதான் விடுதலை என்று தெரியவில்லை. ம்... தொட்டில் பழக்கம்.

இந்தப் பெருநகரில் ஆங்கிலம் வாளும், கேடயமுமாய் இருக்கிறது. நமக்கு மேலே உள்ளவர்களின் தாக்குதலை கேடயமாகத் தடுக்க, கீழே உள்ளவர்களை வெட்டிச் சாய்க்க என்ற அளவில் ஆங்கிலத்தின் பயன்பாடு இருக்கிறது. இந்த ஆயுதம் இல்லையென்றால் பெருநகரின் சிறு எலி போல பொந்துகளில் மறைந்து மறைந்து ஜீவிதம் செய்தாக வேண்டும்.

ராமதாஸூம், திருமாவளவனும் தரித்திருக்கும் இந்த தமிழ் காவலர்கள் அவதாரமும், நிகழ்த்தி வரும் நாடகங்களும் ஒருவேளை வெற்றி பெருமாயின் நம் அடுத்த தலைமுறையும் பிச்சை எடுக்கத்தான் வேண்டி வரும் போலிருக்கிறது. கையை பிடித்து இழுக்கும் மேஸ்திரிகளிடமிருந்து கொத்து வேலை செய்யும் சேரிப்பெண்களை, திடீர் ரத்தவாந்தி எடுக்கும் பாப்பாப்பட்டி பஞ்சாயத்து தலைவர்களை இவர்கள் முதலில் காப்பாற்றலாம். தமிழைக் காப்பாற்றத்தான் ரிட்டையர்டு தாசில்தார்கள், தமிழாசிரியர்கள், கிழட்டு பண்டிதர்கள், மாஜி நீதிபதிகள், வாசகர் வட்ட நிலைய வித்வான்கள் என ஊருக்கு நூறு பேர் இருக்கிறார்களே. இதை உரக்க சொன்னால் உதை கிடைக்கும். விட்டு விடலாம்.

உனக்கு இன்னும் ஓர் வேலை கிடைக்காமல் இருப்பது எனக்கு கவலையளிக்கிறது. வாத்யார் வேலைதான் வேண்டும் எனும் உன் லட்சியத்தை பாராட்டுகிறேன். அரசுப்பணி கிடைக்கும் வரையில் ஏதேனும் படி என்ற எனது ஆலோசனையை வழக்கம் போல உதறி விடுவாய் என்றபோதும் இந்தக் கடிதத்திலும் குறிப்பிட்டு முடிக்கிறேன். வரும்காலத்தில் உன்னிடம் மாட்டிக்கொண்டு எதிர்காலத்தை தொலைக்க இருக்கும் மாணவர்கள் நிலையை நினைத்தால் பாவமாக இல்லையா ஜெ?!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்,
22/12/2004

டிஸ்கி:

மேற்கண்ட கடிதத்தை நான் பதிவு செய்வதற்கும் லதானந்திற்கும், எனக்கும் இடையே நிகழும் சர்ச்சைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

Thursday, May 15, 2008

துவைத்தலும் துவைபடுதலும்

ன்னை நானே ரொம்ப பிஸியான ஆளாக கற்பிதம் செய்துகொண்டு என் துணிகளை துவைத்துபோட ஒரு வயதான பெண்ணை பணித்திருந்தேன். எங்களுக்குள் போட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தபடி மூன்று நாட்களுக்கு ஒரு முறை துணிகளை சலவைத்துள் கலந்த நீரில் ஊறவைத்துவிடுவது என் பொறுப்பு. மேற்படி துணிகளை செவ்வனே துவைத்து காயப்போடுவது கிழவியின் பணி. இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட முதல்வாரத்திலிருந்தே கடமை தவற ஆரம்பித்தாள் கிழவி. மூன்று நாட்கள் என்பது ஒரு வாரமாகி, சமயங்களில் பத்துநாட்களுக்கு ஒரு முறை வருவதும் துவைத்தபின் ஏதேச்சதிகரமாக காயப் போடாமல் வைத்துவிட்டு எஸ்கேப் ஆவது என கிழவியின் அழிச்சாட்டியங்கள் நாளுக்கு நாள் அதிகமானது.

தவிரவும், காலர் அழுக்குகளுக்கு யாதொரு பங்கமும் வராமல் துவைப்பது, சட்டை பட்டன்கள் தெறித்து விழும்வரை துணிகளை வெறிகொண்டு அடிப்பது போன்ற சேட்டைகளையும் தட்டிக்கேட்க வழியற்றவனாய் இருந்தேன். இதற்கெல்லாம் உச்ச கட்டமாக இஸ்திரி போட கொடுத்த துணிகள் அழுக்கானவை என்றும் துவைக்காத துணியை கடைப்பக்கம் கொண்டுவராதீர்கள் என்றும் எனது ஆஸ்தான அயனர் அய்யனார் கோபம் கொப்பளிக்க கத்திய ஒரு ஞாயிறு மாலையில் அந்த மிக முக்கிய தீர்மானத்தை எடுத்தேன். இனிமேல் எந்தக்கிழவியின் உதவியையும் நாடாது எனது துணிகளை நானே துவைப்பது என்று.

துணி துவைக்கும் தொழில்நுட்பம் ஒன்றும் நான் அறியாதது அல்ல. துணியின் சகல பாகங்களிலில் இருக்கும் அழுக்கை நீக்கும் வண்ணம் துவைப்பது ஒரு வகை என்றால், காலர், கை இடுக்கு, போன்ற இடங்களில் மட்டும் சற்று கவனம் அதிகம் செலுத்தி துவைத்த துணி போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுவது இன்னொரு வகை. முன்னதை விட பின்னது சுலபம். பத்தாம் வகுப்புவரை படிப்பில் படுசுட்டி என்பது போன்ற ஒரு கற்பிதத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தி வந்ததில் என்னுடைய துணிமணிகள் அம்மாவினாலோ, அக்காக்களினாலோ துவைத்து தரப்பட்டு வந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஒரு துரதிர்ஷ்ட தினத்தில் இருந்து என்னுடைய துணிகளை நானே துவைப்பது, காய போடுவது, எடுத்து மடிப்பது, இஸ்திரி போடுவது, பட்டன் போய்விட்டால் நானே தைப்பது என்ற கடும்போக்கு எனது வீட்டில் கடைபிடிக்கப்பட்டது. ‘சீட்டுக்காரன விட மோசமான பய...’ என்று அப்பத்தா அப்பட்டமாக அறிவித்தாள். ஸ்கூல் பர்ஸ்ட் எடுப்பேன் என நம்பவைத்து நூழிலையில் பாஸ் செய்தேன் என்ற கோபம் அவர்களுக்கு.

சாப்பிடுவது, காபி குடிப்பது, பயணிப்பது, படிப்பது, காலாற நடந்து போய் பெருமாள் கோவில் பேட்டையில் ஒண்ணுக்கடிப்பது என்றால் கூட எனக்கு ஒரு கம்பெனியன் வேண்டும். இந்த பிரச்சனை துணி துவைக்கையிலும் ஏற்படுகையில் எனக்கு சிக்கியவன் விஸ்வம் மட்டும்தான். ஞாயிறன்று துணிகளை ஊறவைத்தபின் விஸ்வத்தை வீடு தேடி சென்று ஏதாவது பொய் சொல்லி அழைத்து வருவேன். ‘ஒரு அஞ்சு நிமிஷம்டா... துணி துவைச்சிக்கிறேன்’ என அவனை அருகே அமர்த்திவிட்டு துவைக்க ஆரம்பிப்பேன். விஸ்வம் எனும் புத்தகப்பாம்பிற்கும் என்னை விட்டால் படித்ததை வாந்தியெடுக்க வேறு ஆள் இல்லை என்பதால், இந்தியா டூடே, வாஸந்தி, விஸ்லவா சிம்போர்ஸ்கா, சங்கசித்திரங்கள் என ஆரம்பித்து சென்றவார உலகம் வாசிப்பான். அவனது பேச்சு சுவாரஸ்யத்தில் துணி துவைக்கும் எரிச்சலே தெரியாது.

அதையே இப்போதும் கடைபிடிக்கலாம் என முடிவு செய்து பக்கத்து ரூம் சிவாவை ‘வாங்க பாஸ்... கொஞ்சம் கம்பெனி கொடுங்க... துணி துவைக்கற வரைக்கும்’ என்றேன். என்னை ஒரு தினுசாக பார்த்தவர் ‘பாஸூ லேசா தலை வலிக்குது’ என்று மாயமாய் மறைந்தார். சைத்தான் கி பச்சா என சபித்துவிட்டு காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு துணி துவைக்க ஆரம்பித்த போதுதான், துணி துவைத்தல் என்பது எத்தனை சிரமமான பணி என்ற உண்மை உறைத்தது. என்னுடைய துணிகளை துவைத்தலே இத்தனை சிரமம் என்றால் ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களின் துணிகளையும் துவைக்கும் வீட்டுப்பெண்களின் சிரமம் புத்தியில் உறைக்கிறது. இத்தனை சிரமமான பணியை நம் பாட்டியின் வயதொத்த ஒரு கிழவியிடம் ஒப்படைத்து விட்டு அதிலும் ஆயிரம் நொட்டை சொல்கிறோமே...ச்சே எத்தனைக் கொடுமை? மனிதாபிமானமே இல்லாதவனாக நடந்து இருக்கிறோமே எனக் குற்ற உணர்ச்சி வாட்டியது.

அந்த சமயத்தில் துவைக்கும் கல்லை கடந்து போன பிரதாப் சேட்டனிடம் நம்முடைய மகாச்சிந்தனையை பகிர்ந்து கொள்ளலாமே என்றழைத்து எனது அபிப்ராயத்தை பகிர்ந்து கொண்டேன். விழிகள் சிவக்க ஆத்திரத்துடன் என்னிடம் சொன்னார் “போய் பணி நோக்கடா மோனே...”

மனுஷ்ய நாடகம்

"எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போடா..."

"யாருக்கும் பதில் சொல்ற அளவுக்கு என் நெலமை இல்லைமா..."

"இப்படி சொல்ல உனக்கு எப்படிடா மனசு வருது?"

" என் நெலமை அப்படிம்மா"

"போடா... நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா? ஒன்னய நம்பி எல்லாத்தயும் எழந்துட்டேனடா... நாங் செத்தாதான்டா என் அன்பு ஒனக்கு புரியும்"

"ப்ளீஸ் அப்படி சொல்லதம்மா"

"அப்படித்தான்"

"ப்ளீஸ் அழாதே"

"ஒன்னய காதலிச்சதுக்கு கண்ணீரும், கதறலும்தாண்டா மிச்சம். ஒனக்காக எத்தன அவமானம், எத்தன கஷ்டம், எத்தன கோவில், எத்தன விரதம்... எல்லாத்துக்கும் சேத்து பெருசா கொடுத்திட்டேடா... ஒங்கூட பழகுன மத்த பொண்ணுங்கள மாதிரி என்னையும் நெனச்சிட்டியேடா"

"ஐயோ மா... ப்ளீஸ்... நாந்தான் முதல்லயே சொன்னேனே... என் குடும்பத்துல இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு... நீதான் கேக்கல... இப்ப வந்து என் சொக்காயை பிடிச்சி இழுக்கற..."

"அதாம்பா நீ ஏன் சொல்ல மாட்டே... ஆம்பள... நீ கரெக்ட்... நாந்தான் சரியில்லாதவளாயிட்டேன்.. நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தேனடா...ஒனக்காக என்னையே கொடுத்தேன். இப்ப நடுத்தெருவுல நிக்கறேன்"

"அப்படியெல்லாம் இல்லம்மா... நான் இருக்கேன்ல... உன்ன அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்மா..."

"ஐயோ கடவுளே... என்ன வச்சிக்கப் போறேன்றியாடா..?"

"ச்சீ அப்படி சொல்லலடி..."

"த்தூ தொடாதடா... நீ தொட்டா எனக்கு கூசுது... நீ நான் காதலிச்ச சதீஷ் இல்லை... வேற யாரோ...ப்ளீஸ் என்னைத் தொடாதே..."

"ஏய் ஆனந்தி என்ன இது? ஏன் இப்படி அழுறே? யாராவது பாத்தாங்கண்ணா? எனக்கும் உனக்கும் தொடர்புன்னு நெனச்சுடுவாங்க...ப்ளீஸ் கண்ண தொடச்சுக்கோ"

“யக்கா கடல வேணுமாக்கா... அவிச்ச கடல...” குறுக்கிடுகிறது சுண்டல் சிறுவனின் குரல்.

“வேண்டாம்பா”

“அண்ணே அக்காவுக்கு வாங்கி கொடுங்கண்ணே... அழுகையை நிப்பாட்டிடும்”

“டேய்... போடா”

“அக்கா சொல்லுங்கக்கா... மொத போணிக்கா...”

“டேய் இம்சை பண்ணாதடா பரதேசி... இடத்த காலி பண்ணு...” ஆத்திரத்தில் இரைந்தான் சதீஷ்.

“ த்தா... ஒத்த ரூவாய்க்கி சுண்டல் வாங்க வக்கு இல்ல... ரோசத்த பாரு...யக்கா இவனுக்கொசரம் கண்ண கசக்காத” சொல்லி நகர்ந்தான் சுண்டல் சிறுவன்.

“ ஐய்யோ சுண்டல் விக்கிறவனுக்கு தெரியுது... எனக்குத் தெரியாம போச்சே...” தலையிலடித்துக்கொண்டு அழத் துவங்கினாள் ஆனந்தி.

இரண்டு மூன்று அடிகள் தள்ளி நின்று கொண்டான் சதீஷ்.

நானும் கிளம்பி விட்டேன்.

Monday, May 12, 2008

ஆஸ்கார் நிச்சயம்!

விஜயகாந்தின் 'அரசாங்கம்' திரைப்படத்தை இந்த பழுதடைந்த பூமியின் எந்த ஒரு சினிமா விமர்சகனாலும், அறிவு ஜீவியாலும் விமர்சித்து விட முடியாது. விமர்சிக்கவும் கூடாது. அப்படி எவனாவது ஒரு நெம்புகோலன் விமர்சிக்க முற்பட்டால் அது சூரியனைக் கையால் மறைக்க முயல்வதைப் போலத்தான். இத்திரைப்படத்தை பார்த்தால் ரமேஷ் வைத்யா குடிப்பதையும், லதானந்த் உளறுவதையும் நிறுத்தி விடுவார்கள். சிறந்த நடிப்பிற்கான ஆஸ்கார் விருது இந்த ஆண்டு விஜயகாந்தின் வீடு தேடி வரும். இது சத்தியம்.

சீரக மிட்டாய் கவிதைகள்

டோராவைக்
காண்பித்து
அழுகையை
நிறுத்துகிறோம்
சோறூட்டுகிறோம்
ஆட வைக்கிறோம்
பின் குழந்தைகள்
டோராவிடம் மட்டுமே
பேச துவங்குகின்றன...

காற்றின் வழி
நூகர்ந்து விட்ட
குருட்டு பாடகனின்
பாடலுக்கு
ஈயும் பணம்
பிச்சையல்ல...

மணியடித்த பின்னும்
தேர்வெழுதுபவர்கள்
படிப்பாளிகளென
அர்த்தம் கொள்ளப்படுகிறார்கள்
நிரூபிப்பதற்கான

வாய்ப்பு
ஒருபோதும்
கிடைக்காது
நீங்கள் ஒரு
நிரபராதியெனில்!

எழுத்தென்னும்
பெருநோயின்
அறிகுறி
கவிதை!

சாணி
கிடைக்காதிருக்கட்டும்
கொள்ளையழகோடு
சிரிக்கிறது
பூசணிப்பூ

ஆசைகளைக்
கொன்று
கனவுகளைப்
புதைத்து
நரகத்தை
சிருஷ்டிக்க
காதலி
அல்லது
காதலிக்கப்படு

எப்போதோ
பேச
துவங்கி விட்டோம்
நீயும் நானும்
இன்னும்
பேசத்தான்
பழகவில்லை

நல்ல எழுத்துக்கு
நல்ல வாசிப்பு
அவசியம்
பிறகெப்படி
காப்பியடிப்பது?

கடைசி பக்கம்
கிழிந்துவிட்ட
நாவலுக்கு
ஒருவர் மட்டுமா
ஆசிரியர்?!

சப்பென்று
இருக்கிறதுன்
கவிதைகள் என்கிறாய்
படிக்க சொன்னால்
நக்கியா பார்ப்பது?!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Saturday, May 10, 2008

குருவி : ஓர் எளிய அறிமுகம்

இத்திரைப்படத்தில் விஜய் சாக்கடை அடைப்பை வேறெந்த ஹீரோக்களாலும் முடியாத அளவிற்கு அட்சர சுத்தமாக சரி செய்கிறார். வாயினால் கார் ஓட்டி முதல் பரிசை தட்டிச் செல்கிறார். ஓரு ஏரியாவிலிருந்து இன்னொரு ஏரியாவுக்கு பறக்கிறார். மணிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் ஓடி மின்சார ரயிலை மிஞ்சுகிறார். சுமார் பத்தாயிரம் பேர்களை அடிக்கிறார். சில ஆயிரம் பேர்களைக் கொல்கிறார். தரணியின் பிற ஹீரோக்களைப் போலவே சாக்கடையில் விழுந்தபின் விஸ்வரூபம் எடுக்கிறார். தேன் கூட்டைக் கலைக்கிறார். அத்தோடு நின்று விடாமல் த்ரிஷாவின் மனதையும் கலைக்கிறார். புதுமையெனின் இது புதுமை; புரட்சியெனின் இது புரட்சி.

Friday, May 9, 2008

உருண்டை

இன்றிரவு
இளம் மனைவியின்
புதிய பருக்களை
அவன் முத்தமிடலாம்
தன் பருக்களை
பாடிய பழைய கவிஞனை
அவள் மறந்திருக்கலாம்
அவனும் தான் எழுதிய
பழைய பருக்களின் பாடலை
மறந்திருந்தால்
கலிலீயோவின்
கால் செருப்பு
நான்!

Sunday, May 4, 2008

பதுங்குகுழி

பெருநகரில் இரைதேடும் எம்போன்ற எலிகளின் பதுங்குகுழிகளாக இருப்பது மேன்சன்கள்தான். ஊரைப்புறக்கணித்தவர்களும், ஊரால் புறக்கணிக்கப்பட்டவர்களும் கலந்துகட்டிய கலவையாக அனுமாஷ்ய இருண்மைகளையும், விசித்திர கொண்டாட்டங்களையும் உள்ளடக்கியது மேன்சன் வாழ்க்கை. நான் குடியிருந்த திருவேங்கடம் மேன்சன் நகரின் மையப்பகுதியில் இருந்தது. என்னைப்போன்ற ஊடக துறையை சேர்ந்தவர்கள் பெருவாரியாக குடியிருந்ததால் ‘மீடியா ஹோம்’ என்ற செல்லப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தது திருவேங்கடம் மேன்சன்.

அன்று வழக்கத்திற்கு மாறான பரபரப்பில் இருந்தது திருவேங்கடம் மேன்சன். காரணம் நிஜாம். ஏதையாவது தொலைத்து விடுவதும் பின் நண்பர்கள் குழாமோடு மேன்சனையே பீராய்வதும் அவனது வழக்கமான வேலைகளுள் ஒன்றாகிவிட்டது. அன்றைக்கு நிஜாம் தொலைத்தது தனது செல்ஃபோனை. மொத்தமிருக்கும் இருபது ரூம்களையும், நாற்பத்துமூன்று உயிரினங்களையும் துழாவினால்தான் அவனுக்கு திருப்தி. அவனது பொருள் காணாமல் போனால் அதை தேடிக் கொடுப்பதுதான் தமது கடமையென்று குர்-ஆன் மீது ஆணையிட்டிருப்பார்கள் போலும் அவனது நண்பர்கள், விசித்திரமான புலன் விசாரணைக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தது. நான் அவர்களைக் கடக்கையில் பாசில் சொன்னான் “சார் எங்கேயும் போயிடாதீங்க உங்க ரூமையும் செக் பண்ணனும்”. “என்னது என் ரூமையா... நான் இப்பதானய்யா உள்ளேயே வர்றேன். உங்களுக்கே இது அநியாயமா இல்லையா?” இது நான். என்ன சொல்லி என்ன பயன் அவர்களது விசாரணையின் சுவாரஸ்யமே அடுத்தவர் ரூமில் அதிரடியாக புகுந்து முடிந்தவரை இம்சையைக் கொடுப்பதுதானே. இன்றைக்கு மட்டும் பீரோவைத் திறந்து வெளுத்த துணிகளை எவனாவது கலைத்துப் போட்டானேயானால் அவன் மொகரையை பெயர்க்க வேண்டும் என மனதில் கருவிக்கொண்டே எனது அறையை திறந்துவைத்து அவர்களது வருகைக்கு காத்திருந்தேன்.

நிஜாம் பணக்கார வீட்டுப்பையன். படிப்பைத் தவிர மீத எல்லா விஷயங்களிலும் அலாதியான ஆர்வம் உடையவன். ஆனால், அவனை நகரின் உயர்ந்த கல்லூரியில் சேர்த்து படிக்கும்படி இம்சித்துக்கொண்டிருந்தார் அவனது தந்தை. நிஜாம் ஒரு தனிமனித அலட்சியத்தின் உச்சம். அவன் அறைக்கதவு பூட்டப்பட்டிருந்ததை கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் கண்டதேயில்லை. ஆகஸ்டில் துவைத்து கொடியில் காயப்போட்ட பேண்ட் அக்டோபரில் தன் சொந்த நிறத்தை இழந்து பரிதாப நிலையை அடைந்த பின்னும் அதை எடுக்கமாட்டான். வாயைத் திறந்தால் ஆர்க்குட், என்90 சீரிஸ், ரவி.கே. சந்திரன், பார்முலா ஓன் போன்ற சமாச்சாரங்கள்தான். கல்லூரி விடுதியில் தொடர்ந்து பலமுறை பணங்களை தொலைத்து விட்டுதான் இந்த விடுதிக்கே வந்து சேர்ந்தான்.

நான் மனதார அவர்களை திட்டிக்கொண்டே உடைகளை கழற்றிவிட்டு கைலிக்குள் புகுந்து கொண்டேன். காலையில் படிக்காமல் விட்டுச் சென்ற பேப்பரை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு வந்தபோது நிஜாம் அன் கோ ஹாரிலாலின் அறைக்குள் நுழைய எத்தணித்துக்கொண்டிருந்தது. அறை வாசலில் இருந்த ஹாரிலால் பெருங்குரலெடுத்து அவர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார். ஹாரிலால்தான் இந்த திருவேங்கடம் மேன்சனின் மூத்த பிரஜை. சுமார் இருபதாண்டு காலமாக ஓரே அறையில் தங்கி இருப்பவர். முதுமை தன் முகவரிகளை எழுத ஆரம்பித்துவிட்ட ஐம்பதை நெருங்கிகொண்டு இருக்கும் சரீரம். ஒரு காலத்தில் சொந்தமாக தொழில் செய்து பெரும்பணக்காரராய் இருந்தவராம். வாலிப மிதப்பில் சொந்தங்களைப் புறக்கணித்துவிட்டு ஊதாரியாய் திரிந்ததில் இன்று தொழில், உறவுகள், வாழ்க்கை அனைத்தையும் இழந்துவிட்டு அந்திமத்தை மேன்சனில் கழித்துக்கொண்டிருக்கிறார். நரைத்த சொற்ப முடிகளுக்கு டை அடிப்பதில் ஆரம்பித்து அரை டிராயர் அணிந்து கொண்டு இரவு சினிமாக்களுக்கு சென்று வருவதுவரை தன் வயதான தோற்றத்தை மறைக்க ஹாரிலால் படும்பாடு அலாதியானது.

ஹாரிலால் அடித்து விளையாடும் பிரத்யேக ஏரியா ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ‘அறிவுரை’. பாபுலால் இந்த பக்கம் வருகிறார் என்றால் நிஜாம்&கோ ஆளுக்கொறு திசையாக தெறித்து ஓடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். எதிர்படும் யாருக்கும் யோசனைகளையோ அறிவுறைகளையோ சொல்லத் தயங்காதவர். எதிராளி அதை ரசிக்கிறானா? காது கொடுத்து கேட்கிறானா என்று கவலைப்படுபவர் அல்ல அவர். காலையில் எழுந்தவுடன் ஜாக்கிங் போங்கள், ஹிந்து பேப்பர் படியுங்கள், கரஸ்பாண்டன்ஸில் ஏம்.பி.ஏ சேருங்கள், மணிப்ளஸ்ஸில் பணம் போடுங்கள், நாச்சிமுத்துக்கவுண்டர் பல்க்கில் பெட்ரோல் அடியுங்கள் என அவர் அள்ளித்தூவும் அறிவுரைகளுக்கு அளவில்லை.

ஊரின் நிணைவுகள் உறுத்தி உறக்கம் தொலைக்கும் பின்னிரவுகளில் கதவைத் திறந்து வராண்டா பக்கம் வந்தால் ஹாரிலால் பால்கனியோரம் நின்று புகைத்துக்கொண்டிருப்பது தெரியும். ஒரு துன்பியல் நாடகத்தின் முடிவுத்தருவாய்போல அனுமாஷ்ய விசித்திரமாய் இருக்கும் அவர் நிற்கும் காட்சி. அந்த தருணங்களில் அவரது பார்வையில் மாட்டிக்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. பால்யத்தில் அவர் ஆடிய ஆட்டங்களையும், அந்திமத்தின் அவதியையும் கண்களில் ஈரம் ததும்ப லேசான சாராய மணம் கமழ சொல்ல ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கதற ஆரம்பித்துவிடுவார். அவரை சமாதானப்படுத்திவிட்டு தூங்க செல்கையில் ஏறக்குறைய விடிந்துவிடும்.

ஹாரிலாலிடம் இருக்கும் சர்ச்சைக்குறிய இன்னொரு விஷயம் மூத்திரக்குடி. மொரார்ஜி தேசாயின் நேரடி வாரிசு போல தனது மூத்திரத்தை தானே குடிப்பதுடன், பிறரையும் குடிக்க சொல்லி வற்புறுத்துவார். தமக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் அருமருந்து மூத்திரம் என்றும் அதைக் குடிப்பதில் தமக்கு எந்த சிறுமையும் இல்லை என்றும் மூத்திரவாடையடிக்கும் அவரது வாயால் சொல்லக் கேட்காதவர்கள் ராம்நகரில் குறைவு. அவர் வயதையொத்தவர்கள் அவரைப் பரிகசிக்க உபயோகிக்கும் வார்த்தை ‘நாறவாயன்’ என்பதுதான்.

இன்றைக்கு நிஜாமின் அழிச்சாட்டியத்திற்கு பலியாகப் போவது பெருசுதான் என நிணைத்துக்கொண்டு அவர்களது ரூமை அடைந்தபோது உரையாடல் தன் விளிம்புகளைத் தாண்டி சச்சரவு என்ற நிலையை அடைந்துவிட்டிருந்தது.

‘டேய் பெரிய மனுஷன், சின்ன மனுஷன் இல்லையாடா? உங்க தாத்தன் வயசு எனக்கு... என் ரூமை சோதனை போடனும்றீயே உனக்கு அறிவிருக்காடா?’ என்றார் ஹாரிலால் ஆத்திரமாக. ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது எனக்கு என்னோட மொபைல்தான் முக்கியம். விசாரணைன்னு வந்துட்டா பெரியவனாவது? சின்னவனாவது? மொதல்ல வழிய விடுங்க தேடனும்’ - இது நிஜாம். நிஜாமின் வார்த்தைகள் அவருக்குள் கடும் ஆத்திரத்தை கிளப்பிவிட்டது என்பதை அவர் முகம் சிவப்பதிலிருந்து அறிய முடிந்தது.

‘தேவடியா மவனே, யார் ரூமை யாருடா சோதனை போடுறது?’

‘யாருடா தேவடியா மவன்? நீதாண்டா தேவடியா மவன் அநாதைப்பயலே?’

வார்த்தைகள் தடித்துவிட்ட ஆத்திரத்தில் ஹாரிலால் கைநீட்டிவிட.... நடைபெறும் கலவரத்தின் அபாயம் உணர்ந்தவர்களாய் அத்தனைபேரும் ஓடிவந்து திமிறும் இருவரையும் பிடித்துக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தராதரமின்றி வார்த்தைகளை உமிழ்ந்தனர். யார் என்ன சமாதானம் சொல்லியும் இருவரும் கேட்பதாயில்லை. நிஜாம் அவர்தான் திருடன் அவருடைய ரூமை சோதனையிட்டால் உண்மை வெளியாகும் என உரத்தக்குரலெடுத்து கத்திக்கொண்டிருந்தான். அவரது ரூமை சோதனையிட அனுமதிக்காவிட்டால் தான் போலீஸிற்கு போக இருப்பதாக அறிவித்தான். தான் உயிரோடு இருக்கும் வரை தன் ரூமிற்குள் நிஜாமை அனுமதிக்க முடியாது எனப் பிளிறிக்கொண்டிருந்தார் ஹாரிலால்.

ஹாரிலாலுக்கு வேண்டியவரும் அவருடைய ஆத்ம நண்பருமான எதிர்கடை அண்ணாச்சி இருவரையும் சமாதானம் செய்துவிட்டு, தாம் ஒரு பொது ஆளாக உள்ளே போய் சோதனை செய்வதாக சொன்ன யோசனையை அனைவரும் ஆமோதித்தனர் பாபுலாலைத் தவிர... ஹாரிலாலின் செய்கை விநோதமாகவும் அவர் திருடியிருப்பார் என்பது போலவும் யாவருக்கும் தோன்றியது. நிஜாம்கூட போகலாம் ஆனால் அண்ணாச்சியை அனுமதிக்க முடியாது என புலம்ப ஆரம்பித்தார் ஹாரிலால். ஆனால் அவரது வார்த்தைகளைக் கேட்க யாருமே தயாராக இல்லை. அனைவரும் அண்ணாச்சியை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பினார்கள். அவரது அறையைக் குடைந்துவிட்டு வெளியே வந்த அண்ணாச்சியின் முகம் இருண்டிருந்தது. உள்ளே மொபைல் எதுவுமில்லை. யாரும் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் என சுரத்தில்லாத குரலில் சொல்லிவிட்டு ஹாரிலாலை ஏறிட்டும் பார்க்காமல் படியிறங்கி போய்விட்டார் அண்ணாச்சி. அனைவரும் கலைந்து அவரவர் ரூமிற்கு திரும்பினர்.

மறுநாள் காலை ஹாரிலாலின் அறைக்கதவுகள் அகலத் திறந்திருந்தன. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஹாரிலால் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு இரவே போய்விட்டார் என்பது தெரிந்தது. எதிர்கடை அண்ணாச்சி அவரது ரூமில் பார்த்தது காண்டம் என்றும், செக்ஸ் புத்தகங்களாய் இருக்கலாம் என்றும், அண்ணாச்சி மனைவியின் புகைப்படம் என்றும் ஊகங்கள் மேன்சன் முழுவதும் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. பாபுலால் அறையின் சுவர்களில் இருந்த காந்தியும், மொரார்ஜி தேசாயும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அறையெங்கும் மூத்திரவாடை நிரம்பியிருந்தது.

- செல்வேந்திரன்