Saturday, May 31, 2008

துப்பாக்கி தேவை

தாட்சாயிணி,

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ ஃபுல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்குக் காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். 'அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். " தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

- பிரதியங்காரக மாசான முத்து

19 comments:

முகவைத்தமிழன் said...

//'அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்.//

ஹா..ஹா..ஹா உங்க நிலையை நெனசால்தான் பரிதாபமாக உள்ளது!!

அய்யனார் said...

நெசமாவே முடியல :)

ச்சின்னப் பையன் said...

ஹாஹா... எவண்டா மாட்டுவான்னு இருக்காய்ங்க போல!!!

செல்வேந்திரன் said...

வாங்க முகவைத் தமிழன், அய்யனார். வருகைக்கு நன்றி

தமிழன் said...

எப்படி உங்களால மட்டும் இது முடியுது.ஆரம்பத்துல கவிதைதுவம் வேறு

செல்வேந்திரன் said...

எல்லாம் உங்களைப் போன்ற தமிழர்களின் ஆசிர்வாதம்தான் தமிழன்...

வெங்கட்ராமன் said...

நல்லா இருக்கு செல்வேந்திரன்.

செல்வேந்திரன் said...

Welcome Venky...

ஆழியூரான். said...

fine.

anand said...

உங்களுடைய கவிதைகளை ரொம்ப நாட்களாய் தேடிகொண்டிருந்தேன் ...........
நன்றி.................பாராட்ட வார்த்தைகள் இல்லை

anand said...

உங்களுடைய கவிதைகளை ரொம்ப நாட்களாய் தேடிகொண்டிருந்தேன் ...........
நன்றி.................பாராட்ட வார்த்தைகள் இல்லை

செல்வேந்திரன் said...

Welcome Azhi & Anand.. thanks for coming..

nathas said...

ha ha ha
:)
Nice !!!

மங்களூர் சிவா said...

ஹா ஹா இதே கதைய நான் எங்கோ ஏற்கனவே படித்திருக்கிறேன். மிக இனிமை.

ஒருவேளை இந்த ப்ளாக்லயே படித்து பின்னூட்டாமல் சென்றிருப்பேன் என நினைக்கிறேன்.

செல்வேந்திரன் said...

வாங்க நாதஸ், மங்களூரார் வருகைக்கு நன்றி.

Anonymous said...

Enjoyed your writings.

ko.punniavan said...

செல்வேந்திரன் நண்பா, உங்கள் வலைப்பதிவை ஜெயின் லிங்கிலிருந்து அடைந்தேன்.படிக்க படு சுவாரஸ்யமாக இருக்கிறது.துப்பாக்கி தேவை என்ன அங்கதம்யா! கண்டிப்பாய் அவர் உங்கள் மாமனாராய் இருக்க மாட்டார்.உங்கள் காதலியையே கைப்பிடிக்க நீங்கள் என்ன சிரமப்பட்டிருப்பீர்கள், வாழ்த்துகள். காதலாகவே வாழ்க.
கோ.புண்ணொயவான். மலேசியா

J..K... said...

Enjoyed the humor:)

J..K... said...

Enjoyed the humor :)