Friday, May 16, 2008

பழைய கடிதம்

சாத்தான்குளத்தை விட்டு பிழைப்பு தேடி கோயம்புத்தூர் வந்த ஆரம்ப நாட்களில் தனிமையும், மன அழுத்தமும் கொண்டவனாக இருந்தேன். ஊர் நண்பர்களுக்கு கடிதம் எழுதுவதொன்றே ஆறுதலான விஷயமாகவும் இருந்தது. செல்போன் வாங்குமளவிற்கு பொருளாதாரத்தில் வளர்ந்திருக்காத 2004ம் வருடங்களில் நான் ஜெபராஜிற்கு அடுத்தடுத்து எழுதிய கடிதங்களை பத்திரமாக வைத்திருக்கிறான் என்பதை அவன் இல்லத்திற்கு சென்றிருந்தபோது அறிந்தேன். நாம் எழுதிய கடிதங்கள், நமக்கு வந்த கடிதங்கள் இவற்றை காலம் கடந்து பார்க்கையில், படிக்கையில் ஏற்படுகிற பரவசமும், எழுகின்ற ஞாபகங்களும் செளந்தர்யமானது. கடிதங்களை கையோடு எடுத்து வந்துவிட்டேன். அவற்றுள் ஒன்று...

அன்புள்ள ஜெ,

நலமாய் இருப்பாய் என்று நம்புகிறேன். கோவை வந்த பிறகு நண்பர்கள் கொடுத்தது, எதிரிகள் கொடுத்தது, வாங்கியது, திருடியது என புதிதாக நூற்றி முப்பத்தாறு புத்தகங்கள் அறையை ஆக்ரமித்துள்ளன. கடந்த இரு வாரங்களாக புரட்டிக்கூட பார்க்காத வார, மாத இதழ்களும், துவைக்காத துணிகளும், அலுவலக கோப்புகளும் கட்டிலெங்கும் இறைந்து கிடக்கின்றன. அவசரமாய் முடிக்க வேண்டிய எழுத்து வேலைகளும், துவைக்க வேண்டிய துணிகள், துடைக்க வேண்டிய பொருட்கள் என நேரம் கடத்த எத்தனையோ வழிகள் இருந்தும் உறக்கம் வராத ராவுகளில் எதிரிலிருக்கும் நண்பனிடம் புலம்புவது போன்ற தோழமையுணர்வை கடிதம் எழுதுவது மட்டுமே கொடுக்கிறது. வாசிக்கும்போது உன் முகம் எப்படி இருக்கும் என்ற கற்பனை உறக்கத்தை விரட்டி மேலும் மேலும் எழுதுவதற்கான உற்சாகத்தை தருகிறது.

எதிர்காலம் குறித்த ஒரு மெல்லிய நடுக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை அகலத்திறந்த வாயோடு என்னை விழுங்கி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நீ அனுப்பும் பொன்மொழிகளோ, தன்னம்பிக்கை நூல்களோ என்னை தன்னம்பிக்கை உடையவனாக மாற்றி விடுமா என்ன?! பொருளாதாரம், கல்வி தகுதி, குடும்ப பின்புலம், உடல் நலம் இவைகள்தான் ஒருவனை வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் காரணிகளாக இருக்க முடியும்.

சுற்றிலும் இருக்கும் பெரும்சம்பளக்காரர்களை எதிர்கொள்கையில் இருபத்து மூன்று ஆண்டுகாலமாக திருட, பொய் சொல்ல, பரிகசிக்க, நாடகமாட, கவிதை எழுத பெண்களை வீழ்த்த கற்றுக்கொண்ட ஆர்வத்தை ஆங்கிலம் கற்க, நயமாகப் பேச, நளினமாக நடந்து கொள்ள, அடக்கமாக இருக்கக் கற்றுக்கொள்வதில் காட்டவில்லை என்ற நிதர்சன செருப்பு கன்னத்தில் அறைகிறது. ஒன்று புலம்பித் தீர்க்கிறேன் அல்லது சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறேன். இப்பழக்கங்களில் இருந்து எப்போதுதான் விடுதலை என்று தெரியவில்லை. ம்... தொட்டில் பழக்கம்.

இந்தப் பெருநகரில் ஆங்கிலம் வாளும், கேடயமுமாய் இருக்கிறது. நமக்கு மேலே உள்ளவர்களின் தாக்குதலை கேடயமாகத் தடுக்க, கீழே உள்ளவர்களை வெட்டிச் சாய்க்க என்ற அளவில் ஆங்கிலத்தின் பயன்பாடு இருக்கிறது. இந்த ஆயுதம் இல்லையென்றால் பெருநகரின் சிறு எலி போல பொந்துகளில் மறைந்து மறைந்து ஜீவிதம் செய்தாக வேண்டும்.

ராமதாஸூம், திருமாவளவனும் தரித்திருக்கும் இந்த தமிழ் காவலர்கள் அவதாரமும், நிகழ்த்தி வரும் நாடகங்களும் ஒருவேளை வெற்றி பெருமாயின் நம் அடுத்த தலைமுறையும் பிச்சை எடுக்கத்தான் வேண்டி வரும் போலிருக்கிறது. கையை பிடித்து இழுக்கும் மேஸ்திரிகளிடமிருந்து கொத்து வேலை செய்யும் சேரிப்பெண்களை, திடீர் ரத்தவாந்தி எடுக்கும் பாப்பாப்பட்டி பஞ்சாயத்து தலைவர்களை இவர்கள் முதலில் காப்பாற்றலாம். தமிழைக் காப்பாற்றத்தான் ரிட்டையர்டு தாசில்தார்கள், தமிழாசிரியர்கள், கிழட்டு பண்டிதர்கள், மாஜி நீதிபதிகள், வாசகர் வட்ட நிலைய வித்வான்கள் என ஊருக்கு நூறு பேர் இருக்கிறார்களே. இதை உரக்க சொன்னால் உதை கிடைக்கும். விட்டு விடலாம்.

உனக்கு இன்னும் ஓர் வேலை கிடைக்காமல் இருப்பது எனக்கு கவலையளிக்கிறது. வாத்யார் வேலைதான் வேண்டும் எனும் உன் லட்சியத்தை பாராட்டுகிறேன். அரசுப்பணி கிடைக்கும் வரையில் ஏதேனும் படி என்ற எனது ஆலோசனையை வழக்கம் போல உதறி விடுவாய் என்றபோதும் இந்தக் கடிதத்திலும் குறிப்பிட்டு முடிக்கிறேன். வரும்காலத்தில் உன்னிடம் மாட்டிக்கொண்டு எதிர்காலத்தை தொலைக்க இருக்கும் மாணவர்கள் நிலையை நினைத்தால் பாவமாக இல்லையா ஜெ?!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்,
22/12/2004

டிஸ்கி:

மேற்கண்ட கடிதத்தை நான் பதிவு செய்வதற்கும் லதானந்திற்கும், எனக்கும் இடையே நிகழும் சர்ச்சைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

11 comments:

SLATE said...

Dear Selventhiran!

Your short story "pazhaya kaditham" is so good!

லதானந்த் said...

எனது இனிய நண்பர் திரு செல்வேந்திரன் அவர்கள் தனது வலை தளத்தில் “பழைய கடிதம்” என்றதொரு நல்ல சிறுகதையை எழுதியிருந்தார். டாக்டர் மு.வரதராசனார்கூடத் “தம்பிக்கு” என்று நிறைய கடிதங்கள் மூலம் நல்ல பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். அவரை அடியொற்றி தற்போது எழ்தியுள்ள சிறுகதையின் நீட்சியாக “நண்பனுக்கு” என்ற தலைப்பில் இவரும் வருங்காலத்தில் பல ஆகச் சிறந்த கதை/கட்டுரைகளை எழுதிட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

இச் சிறுகதையின் நாயகனுக்கு ஒரு தகவல். ஆங்கிலக் கேடயம் இல்லாது போனால்கூடப் பரவாயில்லை. தமிழ்க் கோமணத்தையாவது ஓட்டையில்லாமல் அணிந்து கொள்ளப் பழகுக. இல்லையெனில் அ.கு.ஆகிவிடும் சாத்தியங்கள் உண்டு.

ஏனென்றால் ஏறக்குறைய 235 வார்த்தைகள் கொண்ட தங்களது சிறுகதையில் காணக் கிடைக்கின்ற 25 சந்திப் பிழைகளின் அட்டவணை இதோ: (இது தவிர “ஓர் வேலை” என்பன போன்ற பிழைகள் தனி!)வ.எண்
சிறுகதையின் நாயகனின் எழுத்தில்

பிழை நீக்கம் செய்த பிறகு
1 விட்டு பிழைப்பு விட்டுப் பிழைப்பு
2 தேடி கோயமுத்தூர் தேடிக் கோயமுத்தூர்
3 நண்பர்களுக்கு கடிதம் நண்பர்களுக்குக் கடிதம்
4 வாங்குமளவிற்கு பொருளாதாராம் வாங்குமளவிற்குப் பொருளாதாராம்
5 கடிதங்களை பத்திரமாக கடிதங்களைப் பத்திரமாக
6 இல்லத்திற்கு சென்றிருந்தபோது இல்லத்திற்குச் சென்றிருந்தபோது
7 இவற்றை காலம் கடந்து இவற்றைக் காலம் கடந்து
8 கடிதங்களை கையோடு கடிதங்களைக் கையோடு
9 வாரங்களாக புரட்டி வாரங்களாகப் புரட்டி
10 அலுவலக கோப்புகளும் அலுவலகக் கோப்புகளும்
11 தோழமையுணர்வை கடிதம் தோழமையுணர்வைக் கடிதம்
12 உற்சாகத்தை தருகிறது உற்சாகத்தைத் தருகிறது
13 என்னை தன்னம்பிக்கை என்னைத் தன்னம்பிக்கை
14 கல்வி தகுதி கல்வித் தகுதி
15 குடும்ப பின்புலம் குடும்பப் பின்புலம்
16 வீழ்த்த கற்றுக்கொண்ட வீழ்த்தக் கற்றுக்கொண்ட
17 தாக்குதலை கேடயமாக தாக்குதலைக் கேடயமாக
18 போல பொந்துகளில் போலப் பொந்துகளில்
19 இந்த தமிழ் இந்தத் தமிழ்
20 தமிழ் காவலர் தமிழ்க் காவலர்
21 கையை பிடித்து கையைப் பிடித்து
22 பஞ்சாயத்து தலைவர்களை பஞ்சாயத்துத் தலைவர்களை
23 உரக்க சொன்னால் உரக்கச் சொன்னால்
24 லட்சியத்தை பாராட்டுகிறேன் லட்சியத்தைப் பாராட்டுகிறேன்
25 எவ்வித தொடர்பும் எவ்விதத் தொடர்பும்

திரு செல்வேந்திரனுக்கு ஒரு தகவல். நண்பர் அப்பநாயக்கன்பாளையம் அரங்க. முத்துச்சாமி தங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறார். விபத்தில் சிக்கிய அவர் தற்போது தடி ஊன்றாமலேயே நடக்கிறார். இருப்பினும் கையில் தடியோடுதான் இருக்கிறார்.

ரமேஷ் வைத்யா said...

என்னதான் பிரச்னை என்றாலும் லதானந்த் அவர்களை, 'லதானந்திற்கு' என்று குறிப்பிட்டு அஃறிணை ஆக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

லதானந்த் said...

இன்கிலீஷ் கேடயம் இல்லாட்டிங்கூடப் பரவாயில்லை தமிழ்க் கோமணத்தையாவது ஓட்டையில்லாமத் தெச்சுப் போடவும். இல்லாட்டி அ.கு. ஆக வாய்ப்பிருக்கு
235 வார்த்தைச் சிறுகதையிலே 25 சந்திப் பிழைகளா?

ஆமா! அது சிறுகதைதானே? ஹி ஹி!

செல்வேந்திரன் said...

லதானந்த் அவர்களுக்கு, முறையான தமிழறிவு இல்லாத எம்போன்ற தற்குறிகளின் அறிவுக் கண்களைத் திறக்கும் அகல் விளக்காக நீங்கள் ஒருவர்தான் இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் இல்லையென்றால் நான் தற்கொலைதான் செய்ய வேண்டி இருந்திருக்கும்.

தங்களது தமிழறிவும், அன்பும் பெரும் வியப்பளிக்கிறது. தங்களிடம் தமிழ் டியுசன் சேர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

ரி said...

செலுவா! ஒரி பண்ணிக்காதே! லதானன்ந்த் கெடக்குறான் கஸ்மாலம். நீ எயுதுற மாரியே எயுதுப்ப. அவன் இன்னா பெரீய வின்னானியா? அவங் கண்டி கைல கெட்ச்சான் டரியலாய்டுவான்.

ரி said...

இன்னாபா செலுவா! ஒண்ணியும் பேஜார் ஆவாதே! அந்த ஸோ பார்ட்டி எப்பமோ எட்த்த் போட்டோங்களை வுட்டுனு கீறான். நீ எப்பையும் எயுதறா மாரிய்யெ எய்தும்மெ! அவன மாரி எத்தினி தொள தொள கேஸுங்களுக்குத் தண்ணி காட்ருப்பேன் நானு!

மஞ்சூர் ராசா said...

கடிதங்கள் படிப்பதே ஒருவித தனியான அனுபவம் தான். இந்த கடிதத்திலும் அதை அனுபவிக்கும் வாய்ப்பிற்கு நன்றி செல்வா.

தமிழ்நதி said...

நான் உண்மையில் கடிதம் என்று நினைத்தே படித்தேன். சிறுகதை எனப் பின்னூட்டங்களிலிருந்து தெரிந்துகொண்டேன். எதுவானாலும்... வலி தரும் ஒரு நிராதரவு தெரிந்தது. உங்களைப் பின்பற்றி நானும் 'பழைய கடிதங்களை'பதிவிடலாமா என்று யோசிக்கிறேன். ஆனால் ஒன்று இவை உண்மையான கடிதங்கள்:)

செல்வேந்திரன் said...

வாங்க தமிழ்நதி. வராத விருந்தாளி வந்திருக்கீங்க... வரவேற்று ஒரு காபி கொடுக்கக்கூட இணையத்துல வசதி இல்லை பாத்தீங்களா... நிஜமாவே அது கடிதம்தாங்க... நம்ம வாசகாஸ்தான் அதை சிறுகதையா கன்சீவ் பண்ணிட்டாய்ங்க...இனி பழைய கடிதங்களை அப்படியே ஸ்கேன் செய்து பதிவிட வேண்டியதுதான். நீங்களும் கடிதங்களைப் பதிவிடுங்கள். அடுத்தவர் கடிதத்தைப் படிப்பது அலாதியானதுதானே :)