Friday, January 28, 2011

அது செல்வேந்திரன்தான்...!

பேயோன் என்ற பெயரில் எஸ்ராவைக் கிண்டலடிக்கிறார்களா...?!
நர்சிமை நக்கலடித்து பதிவு வருகிறதா...?!
பதிவர்களைக் கிண்டல் செய்து விகடனில் வருகிறதா...?!
லதானந்தைப் பற்றி எழுதி இருக்கிறார்களா...?!
பரிசல்காரனைத் திட்டியிருக்கிறார்களா...?!
சந்தேகமே இல்லை; அது செல்வேந்திரன்தான்...!

யாராவது புனைப்பெயருக்குள் ஒளிந்துகொண்டு இன்னொருவரைத் தாக்கி விட்டால், உடனே என்னை கைக்காட்டும் பிச்சைக்காரப் பயல்களின் கூட்டம் வலையுலகில் அதிகரித்து விட்டது. தின்ன சோறு செரிக்காமல் இணையத்தில் பீராய்ந்து கொண்டிருக்கும் வெட்டிப் பயல்களின் சிண்டு முடிக்கும் வேலையை அப்படியே உண்மையென நம்பி பாயைப் பிராண்டும் பதிவர்களைப் பார்க்கையில் எரிச்சலாக வருகிறது.

உண்மையில் எழுத்தின் மூலம் ஒவ்வொரு எழுத்தாளனும் தனது ஆளுமையையே மென்மையாகவோ அல்லது வன்மையாகவோ கட்டமைக்கிறான். எந்த விமர்சனத்தையும் முகத்திற்கு எதிரில் பேசுகிறவனாக, எந்த ஆத்திரத்தையும் எழுத்தில் வடித்து விடுகிறவனாகத்தான் இதுகாறும் இருந்திருக்கிறேன். இப்போது அதற்கும் நேரம் இல்லை. எழுதுகிற ஆர்வமும் இல்லை. சில அசிங்கச் சம்பவங்கள் வலையுலகில் அரங்கேறிய பிறகு பதிவன் என்று சொல்லிக்கொள்வதில் ஏற்பட்ட பெரும்கூச்சத்தால் எழுத்தூக்கமே சூம்பிப் போய்விட்டது.

தவிர, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட நட்பு வட்டத்தால் எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பதும், விவாதிப்பதும், பயணிப்பதுமே களிபேருவுவகை தருவதாக இருக்கிறது. வம்பு, அக்கப்போர், தெருச்சண்டை, முறைவாசல், எதைச் செய்தாவது தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளுதல், பெண்களை ஈனப்படுத்துதல் போன்ற அயோக்கியத்தனங்களின் கூடாரமாக இருக்கும் பதிவுலகில் இருந்து வெற்றிகரமாகத் தப்பித்து வெளிவந்திருக்கிறேன்.

நிம்மதியா இருக்க விடுங்கப்பூ...! ப்ளீஸ்...!

Thursday, January 27, 2011

அருங்கூத்து

நண்பர் ‘மணல் வீடு’ ஹரிகிருஷ்ணன் அழைத்திருந்தார். ‘நாயிவாயிச் சீல’ எனும் சிறுகதைத் தொகுப்பும், ‘அருங்கூத்து’ எனும் நிகழ்த்துக் கலை குறித்த நூலும் அவரது மிகச் சமீபத்திய இரு நூல்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை நெருஞ்சி இலக்கிய வட்டம் கோவையில் ஏற்பாடு செய்துள்ள மூன்று புத்தகங்களின் அறிமுக விழாவில் அவரது அருங்கூத்தும் ஒன்று என்கிற தகவலைச் சொன்னார். நிகழ்வில் ‘சாக்பீஸ் சாம்பல்’ எனும் கவிதைத் தொகுதியும், ‘யாழி’ எனும் நாணற்காடனின் நூலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

விழாவில் வெ.மு.பொதியவெற்பன், மீனாட்சி சுந்தரம், மயூரா ரத்தினசாமி, பொன். இளவேனில் மற்றும் இசை இளஞ்சேரல் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இடம்: தாமஸ் ஹால், சாந்தி தியேட்டர் எதிரே, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில்

நாள்: 30-01-2011 - ஞாயிறு

நேரம்: மாலை 4:00 மணி

திருப்பூர் புத்தகக் கண்காட்சி


Tuesday, January 11, 2011

மனக்காளான்


ஒரு ‘மேண்டில்’ உடைபடும்போது ஓர் அறிவாளி உருவாகிறான்!

பரவசமடைகிற விஷயங்கள் சாதாரணமாகிப் போவதும், சாதாரண விஷயங்களில் பரவசம் கொள்வதும்தான் வயதாவதன் அடையாளமா...?! தீபாவளி வாழ்த்துகள்...!

கிடை மட்டமாக ராக்கெட் விடும் சிறுவர்களை கொஞ்சம் எச்சரிக்கையாக வளர்க்க வேண்டும்.

எத்தனை பேரால் காதலிக்கப்பட்டிருக்கிறோமென்பது திருமண அழைப்பிதழை விநியோகிக்கையில்தான் தெரிய வருகிறது!

ஊறுகாய் சில்லிட்டிருக்கிறதென்றால் புதியதாக ரெஃப்ரிஜிரேட்டர் வாங்கி இருக்கிறார்களென்று அர்த்தம்.

நாஞ்சிலுக்கு விருது கொடுத்தால் ஜெயன் ‘சமையல்கட்டின் கலைஞன்’ என்று புக் எழுத வேண்டி இருக்கும்.

எதிரி கூட உங்களைக் கண்டால் புன்னகைக்க பென்சில் மீசை வைத்துக்கொள்ளுங்கள்.

2010ம் ஆண்டின் சிறந்த ட்வீட்டுரையாளர் என்கிற விருதினை சொக்கனுக்கு வழங்குகிறேன். அவரும் திரும்ப எனக்கு வழங்குவாரென நம்புகிறேன்.

அதிகமாக லிங்க் கொடுப்பவர்களை ‘லிங்கரர்கள்’ என்றழைக்கலாமென்றிருக்கிறேன் # தமிழ்க் கொடை 56

தமிழிலக்கியத்தின் எதிர்காலமாக குப்பன் யாஹூவை அவதானிக்கிறேன்.

இரண்டு மணி நேரமாக சொக்கனின் ட்வீட் எதும் வரவில்லை. வேலை ஏதும் செய்கிறாரோ என்று பயமாக இருக்கிறது.

ஜாக்கி சேகரின் நூல்கள் எங்கு கிடைக்கும். அமேஸானில் கிடைக்கவில்லை.

அதிகாலையில் மனதில் ஒரு கவித்தீற்றல் தோன்றியது. மனைவியிடம் சொல்ல ஆரம்பித்தேன். ‘அடுப்புல பால் வச்சிருக்கேன்’ என பதறியபடி ஓடுகிறாள்.

தொப்பை என்பது ஞானத்தின் அடையாளம்!

முடியலத்துவம் தன் கூர்ம இடத்தை நோக்கி நகர்வதை அவதானிக்கிறேன். தற்பெருமையற்ற கவித்துவத்தின் சாதனை.

எவரேனும் என் முடியலத்துவ வரிகளைத் திருடி சென்னை சங்கமத்தில் வாசித்து கைதட்டல் வாங்கி விடக்கூடாதென்பதே என் வருத்தம்.

50கிராம் கோல்கேட் மீது புல்டோசரையே ஏற்றினாலும் அதிலிருந்து 100கிராம் பேஸ்ட் எடுக்க முடியாதென்பதை கேண்டிக்கு எப்படி புரியவைப்பது # குழப்பம்

லாலா மிட்டாய் கடைக்காரர்கள் விஜி விரைவில் குணமடைய கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்...

***

முகநூல் தீற்றல்கள்

நாஞ்சிலுக்கு விருது எனும் செய்தியை முதலில் ஜெயன்தான் போனில் சொன்னார். ‘போங்க சார்... நான் பேப்பர்ல வந்தாதான் நம்புவேன். நாளைக்கு காலைல திடீர்னு ‘கூடுவாஞ்சேரி கோயிந்தனுக்குன்னு’ சொன்னாலும் சொல்லிடுவாய்ங்க சார்...’ என்றேன்.

‘நீங்களாவது பரவாயில்லை... நாஞ்சில் செக் வந்தாதான் நம்புவேன்னுட்டாரு...’

***

பரமபக்தனிடம் கோபம் கொள்வது தெய்வத்திற்கு வேண்டுமானால் திருவிளையாடலாய் இருக்கலாம். தேவதைகளுக்கல்ல. # காதல் பித்து

***

‘எனக்கு வாசிப்பு வலது கண். எழுதுதல் இடது கண்’ என்றார் இலக்கிய நண்பரொருவர். ‘சுயமதிப்பீடு இருதயம்’ எனச் சொல்ல நினைத்துச் சொல்லவில்லை.

***

புத்தாண்டு சமரச உடன்படிக்கை: கேண்டி கோபமாக இருக்கும்போது ‘ஓ... ஒரு தென்றல் புயலாகி...’ பாடலை நானும், நான் ஆபிஸூக்குக் கிளம்பும்போது ‘ஒரு நாயகன் உதயமாகிறான்...’ பாடலை அவளும் பரஸ்பரம் பாடுவதில்லையென்று ஒப்பந்தம்.

***

சயனைடின் சுவையைச் சொன்னவர் இல்லை.

***

வீட்டிற்க்குள்ளேயே விபத்துக்குள்ளாகி அறுவைச் சிகிட்சைக்குட்பட்டிருக்கிறார் விஜி. தகவல் கிடைத்ததும் பதறியடித்து விஜியை அழைத்தேன்.

நான்: விஜி, எங்கம்மா இருக்கே… என்னாச்சி…?!

விஜி: கங்கா ஹாஸ்பிடல்ல இருக்கேண்டா…

நான்: எங்க விழுந்த…?!

விஜி: வீட்டுக்குள்ளதான் விழுந்தேன். கை ஒடஞ்சி போச்சி… ரெண்டு சர்ஜரி… பிளேட் வச்சி ஸ்க்ரூ போட்டிருக்காங்க…

நான்: அச்சச்சோ… என்னம்மா இது… எந்த வார்டுன்னு சொல்லு… உடனே கிளம்பி வர்றேன்…

விஜி: 213 - செகண்ட் ஃப்ளோர்… வரும்போது கால்கிலோ முந்திரி பக்கோடா வாங்கிட்டு வாடா…!

***

ஜான்சன் தூக்கியெறிந்த பொருட்களைக்கொண்டு சுந்தரி அமைத்திருந்த காதல் அரங்கத்தை ஒரு நாள் சுந்தரவேல் கண்டுபிடித்து சுருட்டால் சுடு வைத்தார். வலி தாளாமல் 'போல பொன்னஞ்செட்டிப் பயல... ஒத்த ரூபா சம்பாதிக்க துப்பில்லாத தாயோளீ... நூறு கிலோ நக போட்டு கெட்டிக்கொடுக்கதுமாதில்லா அடிக்காங்...' என்று சுந்தரி சீற அன்றோடு சுந்தரவேல் தன்... பெண்களின் மீதான ஆளுகையை விட்டு விட்டார்.(வெளிவரவே வாய்ப்பில்லாத எனது நாவலின் ஒரு பகுதி)

***

சமையலில் மனைவிக்கு உதவுகிறவர்களெல்லாம் பிற்காலத்தில் பெரிய எழுத்தாளர்களாகி இருக்கிறார்கள். இம்மீடியட் உதாரணம்: நாஞ்சில் & ஜெமோ; உருப்படியாய் எழுத முதலில் வெங்காயம் நறுக்கு’ - கேண்டி

***

நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த நண்பர் 5 கிராம் தங்க நாணயம் கொணர்ந்தார். நேற்று நண்பரொருவர் பிளாக்பெர்ரி பரிசளித்தார். இன்று வீட்டுக்கு வந்தவர் விலையுயர்ந்த ஓவியத்தைச் சுவரில் மாட்டிச் சென்றார். சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடத் துவங்கியிருப்பதன் அடையாளம். இக்கொண்டாட்டம் ஐபாட், ஐபேட், ஐ10 என நீட்சி கொள்வது சமூகத்திற்கு நல்லது. யோசிக்கவும்.

***

Saturday, January 8, 2011

இலக்கிய வெறி

எல்லோர்க்குமான
கவிதையொன்றினை எழுதிடும்
முனைப்பு கொண்டேன்.

சொற்கட்டு
ஓசை நயத்தோடு
வார்த்தைச் சிக்கனத்தையும்
வசீகர சப்-டெக்ஸ்டுகளையும்
மனதிற்கொண்டேன்.

அழகியலும் முக்கியமல்லவா
உறுமீன் கொக்கைப் போல
வார்த்தைக்கு தவம் இருந்தேன்
சமூக பிரக்ஞையும் வேண்டும் என்றது மனசாட்சி

‘கொசுக்களின் இருப்பிடம்
நோய்களின் பிறப்பிடம்”
என்பதாக கவிதையை முடித்தேன்.

கொன்னு கொலையெடுத்தல்


குடியிரவு
கொண்டாட்டத்தை
முற்போக்கு, பிற்போக்கென
பேசியே அழித்தானவன்
போடா புறம்போக்கு!
***

முதிர் கன்னிகளை
வாழாவெட்டிகளை
விதவைகளை
வெளித் தெரியாமல்
புணர்பவன்
செத்துச் சொர்க்கம் போவான்.
***


விரையும்
மணல் லாரியிலிருந்து
சொட்டடிக்கும் நீர்
ஆற்றின் குருதியெனக் கொள்க!
***


பரிசுத்த ஆவிக்கும்
பாதிரிக்கும் சண்டை
அழைத்தபோதெல்லாம்
கூப்பிட்ட குரலுக்கு
ஓடோடி வந்த ஆவிக்கு
ஆட்டோ வாடகை
தரவில்லையென்பது
பிரதான புகார்!

Friday, January 7, 2011

பட்டியல்


காலை வெயில்
மாலை பதனீர்
மஞ்சள் மனம்
மங்கள இசை
ஒளி புகா கானகம்
அடுத்தடுத்து சொல்கிற "ராஜாக்கு செக்"
அதிகப்பிரசங்கி குழந்தைகளின் கேள்விகள்
பரிசாக வந்த முத்துலிங்கம் புத்தகம்.
நெய்யில் வதங்கும் முருங்கை இலை
கருணைக்கிழங்கு மசியல்
முருங்கை மரத்து அணில்
வேப்பமர காற்று
வடம் இழுக்கையில் கிடைக்கும் பானகம்
அதிர்கின்ற வீணை
அசை போடும் மான்
சரியும் முந்தானை
விரிகின்ற முல்லை
மையிருட்டு காதலர்கள்
சுடும் பகல் கனவு
சுகமான உன் நினைவு

Thursday, January 6, 2011

பேய்க்கரும்பு


உன் கவலைகளும்
நீ ஏற்படுத்தும் கவலைகளும்
என் கவலைகளாக
இருப்பதைக் கவனித்தாயா?!

***

எனக்கான குயில்
எல்லா இடங்களிலுமிருந்து
பாடிக்கொண்டிருக்கிறது
நானோ
உனக்கான பாடலோடு
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்

***

காற்றைக் கிழித்து
காதில் நுழைகிறது
குயிலோசை
நீ என்னைக் கிழித்து
உன்னைச் சொருகும்
தருணங்களை
நினைத்துக்கொள்கிறேன்.

***

எங்கு சுவைத்தாலும்
இனிக்கின்ற
பேய்க்கரும்பு
நீ!

***

அன்பெனும்
மதயானை
எதைக் கொண்டு அடக்க
எதைக்கொண்டு மறைக்க?!

***

மொழி
கலைத்து ஆடும்
என் சிறுபிள்ளை
விளையாட்டை
நீ கவிதையென்கிறாய்…!

***

(தினகரன் தீபாவளி மலரில் வெளியானவை)

Monday, January 3, 2011

சனிமூன்

குறுக்கொடிக்கும் வேலைகளிலிருந்து சின்னாட்களெனும் மனைவியை மீட்கும் பொருட்டு கிறித்து பிறந்தநாளில் மைசூர் புகுந்தோம். சுற்றுலா அபிவிருத்திச் செயல்பாட்டிற்கென தனக்கிருந்த பெருமையை கருநாடகம் வெகுவாக இழந்திருக்கிறதென்பதை ஒவ்வொரு அங்குலத்திலும் உணர முடிகிறது. உள்ளூர்வாசிகள் இது கர்நாடகத்தின் இருண்டகாலம் என தலை கவிழ்கிறார்கள். குமாரசாமியும், எடியூரப்பாவும் மெய்வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் ஊழலே கண்ணாயினாராய் இருந்ததன் உறுபலன்.

***
இந்தியாவின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை பெருமையுடைத்த மைசூர் ஸூவில் கொக்கு, குருவி முதல் ஆப்பிரிக்க யானைவரை பராமரிக்க தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவை எந்த லட்சணத்தில் செலவழிக்கப்படுகின்றன என்பதை எவரும் மறுபரிசீலனை செய்வதில்லை போலும். அத்தனை உயிரினங்களும் மோனத்தை வெறித்தபடி சாவை அசை போட்டுக்கொண்டிருக்கின்றன. எலும்பும் தோலுமான வெள்ளைப் புலி, உடலெங்கும் சொரி பிடித்த ஆப்பிரிக்க யானை, தண்ணீரைக் கண்டு பல நாட்களாகி விட்ட முதலைகள், சாக்கடையில் புழு தேடும் ஃபெலிக்கான்கள் :(

மைசூர் ஸூவின் பிரதான சிறப்பம்சமே அமேஸானைப் பூர்விகமாகக் கொண்ட உயிரினங்களும், சில ஆஸ்திரேலிய சிறப்பினங்களும்தான். வாக்கப்பட்ட பூமி ஊழல் தேசமாயிற்றே...பிறந்த இடத்தின் பெருமை பேச முடியாமல் மெளனித்திருக்கின்றன.
மைசூர் மகாராஜாவின் அரண்மனை கேண்டிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதன் சவுந்தர்யத்திலிருந்த சுரண்டலும், ஐரோப்பிய மோஸ்தரும் அவளுக்கு எரிச்சலூட்டியது. ‘கால் பிடித்து காத்த அரண்மனை’ என்றழைத்தாள்.

சுதந்திரத்திற்காக திப்பு போராடிக்கொண்டிருந்த போது மைசூர் உடையார் பரம்பரையின் வாரிசுகள் அவருக்கு துரோகம் இழைத்தனர். லட்சுமியம்மணி அப்போது கோயம்புத்தூரிலிருந்த கர்னல் புலர்டனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த துயர வரலாற்றினை நான் சொல்லக் கேட்டதும் அவள் என்னை இழுத்துக்கொண்டு அரண்மனையையை விட்டு வெளியேறினாள்.

***


பிருந்தாவன் செல்ல முடிவெடுத்தது ஒரு முட்டாள்தனம். விடுமுறை நாட்களென்பதால் வந்து குவிந்த வாகனங்களுக்கு அளவில்லை. நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் வாகன நெரிசல். குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள் தாறுமாறாய் நிறுத்தப்பட்டிருந்தன. நாங்கள் பயணம் செய்த பேருந்தின் கதவுகளைத் திறக்க இயலவில்லை. ஏசி பேருந்து என்பதால் ஜன்னல்களுக்குப் பதில் கண்ணாடிச் சுவர்தான். ஐந்து மணி நேரம் பேருந்துக்குள் சிறைப்பட்டோம். இதற்கிடையில் நெரிசலுக்குள் சிக்கிக்கொண்ட சில முதியவர்களுக்கு மூச்சுத்திணறல், மாறடைப்பு ஏற்பட 108 வாகனமும் மேலேறி வர வழியில்லை. மருந்துக்குக் கூட போலீஸ்காரர்களைக் காண முடியவில்லை. ஆத்திரம் தாளாமல், மைசூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் எண்களை நடத்துனரிடம் வாங்கி அழைத்தேன். சம்பந்தப்பட்ட பகுதி ‘மாண்டியா’ மாவட்டத்தின் கீழ் வருகிறது. அந்த ஊர் ஸ்டேசனில் போதிய காவலர்கள் இல்லை என்று பதில் வந்தது. எரிபொருளின்மையால் வண்டியின் எஞ்சின் அணைந்து ஏசி செயலிழந்தது. டேம் மீன் ஆசையில் மதியச் சாப்பாட்டினை ரத்து செய்திருந்த கேண்டி என் மார்பில் மயங்கிச் சரிந்தாள். பேருந்தின் மேற்கூரையிலிருந்த அவசர கால கதவினை நடத்துனர் திறக்க முயற்சித்தார். பெயிண்டோ, துருவோ அல்லது என் விதியோ எதனாலோ அது இறுகி இருந்தது. திறக்கவில்லை. தண்ணீர் தண்ணீரென்று கதறினேன். கொடுப்பாரில்லை. கடும் சினத்தோடு, நின்று கொண்டு பயணிப்போர் பிடித்துக்கொள்ளும் கம்பியைப் பிடித்து குருவி விஜய் பாணியில் தலைகீழாய் நின்று கதவை ஒரு உதை விட்டேன். திறந்து கொண்டது. யாரோ ஒருத்தர் ‘சைத்தான் கி பச்சா’ என்றது காதில் விழுந்தது. குறுகலான திறப்பின்வழி வெளியேறி தண்ணீர் பாட்டிலோடு திரும்பினேன். கேண்டி உற்சாகமாக பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். “என்ன சார்... ஹீரோ மாதிரி ஜபர்தஸ்த் காட்டறீங்க...” பேருந்தே சிரிக்க ‘பொளேரென’ அறைவாங்கினாள். ஹனிமூன் சனிமூனானது.

***

மைசூர் பிரயாணத்தின் ஓரே ஆறுதல் கரஞ்சி ஏரிதான். கயல்கள் துள்ளும் ஓசை கேட்கும் துல்லிய அமைதியில் உறைந்திருந்தது ஏரி. கிங் ஃபிஷர், ஃபெலிக்கான், நீர்க்கோழி, ஸ்னேக் பேர்டு என பத்து வகையான பறவைகளின் வாசஸ்தலம். பறவை ஆர்வலர்களுக்கென்று பிரத்யேக வாட்ச் டவர் இருக்கிறது. படகிற்கு வந்திருப்பவன் பறவைக் கோட்டி பிடித்தவன் என்பதறிந்த படகோட்டி உற்சாகத்தோடு ஏரியின் மறுகரை நோக்கி துடுப்பைப் போட்டான். பறவைகளை அடையாளம் காட்டி அவற்றின் இயல்புகளை உடைந்த ஆங்கிலத்தில் உரக்கச் சொன்னான். மொத்த பயணிகளில் ஒரு நாளைக்கு ஒருவன் கூட பறவைகளில் கவனம் செலுத்துவதில்லையென ஆதங்கப்பட்டான். பாம்பினைப் போல கழுத்தினைக் கொண்ட ‘ஸ்னேக் பேர்டு’ பறவைகளை மிக நெருக்கத்தில் பார்க்க பரவசமாக இருந்தது.

***

பேருந்து நிலையங்களைத் தம் மூத்திரக் கடலில் மூழ்கடிப்பது இந்திய தேசிய குணம் என்பதால் மைசூர் கார்ப்பரேஷன் ‘உச்சா ஓசு. கக்கா காசு’ என கழிப்பிடங்களை அமைத்துள்ளது. புத்தம் புதுசாய் இருக்கிறது மைசூர் பஸ் ஸ்டாண்டு.

மைசூரில் கண்ட இன்னொரு ஆச்சர்ய ஐடியா எல்லா நடத்துனரும் தங்களது பையில் பாலித்தீன் கவர்கள் வைத்திருப்பது. பிரயாணிகள் பேருந்துக்குள் வாந்தியெடுத்து விடக்கூடாதென.

***

பென்சில் ஃபிட் ஜீன்ஸூம், ஸ்லிவ்லெஸ் டி-சர்ட்டும் - அதில் குதர்க்கமாய் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களுமாய் வளையவரும் கன்னடத்துப் பைங்கிளிகள்தாம் மைசூரின் வனப்பிற்குக் காரணம். அரை மீட்டர் கடப்பதென்றாலும் ஐந்தாறு அழகிகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. இன்னொருமுறை சாவகாசமாய் வரவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.