Thursday, January 19, 2012

மயக்குறு மகள்

ரகுவம்சத்திலே ஒரு வரி வருகிறது ‘அவள் இடக்கையை ஊன்றி எழுந்தாள்; ஆண் மகவு பிறக்கும்’. திரு கருவுற்ற நாள் முதலே இடக்கரம் ஊன்றிதான் எழுந்து வந்தாள். ஹரிவராசனக் குரலோன் ரமேஷ் வைத்யா வீட்டுக்கதவில் குளவி கூடி கட்டியிருக்கிறதா எனச் சோதிக்கச் சொன்னார். மண் கூடெனில் மகன்தான் என்பதவர் வாக்கு. க்ரில் கேட்டில் நான்கைந்து குளவிகள் கூடு கட்டியிருந்தன.

வயிற்றில் உதை அதிகம் இருந்தால், பனிக்குடம் உடையும் முன் ரத்தகசிவு ஏற்பட்டால் ஆண் குழந்தைதான் என்றார்கள் உறவினர்கள். இவை நீங்கலாக, என் பூட்டன் அனைந்தபெருமாள் காலந்தொட்டு ஐந்து தலைமுறைகளாக தலைச்சன்பிள்ளை ஆண் என்பது வரலாறு. திருவும் ஒரு ஆண்பிள்ளை பெற்று ஐஸ்வர்யா ராயின் சம்பந்தியாகும் கனவில்தான் இருந்தாள். என் உள்ளுணர்வு மட்டும் ‘மெர்ஸி...மெர்ஸி...’ எனச் சொல்லிக்கொண்டிருந்தது.

கணிப்புகளை, ஊகங்களை, எதிர்பார்ப்புகளை அடித்து நொறுக்கி கடந்த வெள்ளிக்கிழமை (13-01-2012) என் மகள் உதித்தனள் உலகம் உய்ய. வெள்ளிக்கிழமை பெண் பிறப்பது அதிர்ஷ்டம் என நண்பர்கள் சொன்னார்கள். உண்மைதான் போலிருக்கிறது. அவள் பிறந்த நொடியில் செல் சிணுங்கியது. வெகுநாட்களாக போக்கு காட்டிக்கொண்டிருந்த பெருந்தொகை ஒன்று வங்கிக்கணக்கில் வரவாகி இருந்தது. சிங்கப்பூர் செல்லும் பயண தேதிக்குள் கிடைத்துவிடுமா கிடைக்காதா என இழுபறி நிலையிலிருந்த பாஸ்போர்ட்டை போஸ்ட்மேன் தேடி வந்து கொடுத்துச் சென்றார்.

***

பெர்த் சூட் எனப்படும் அறையினை தெரிவு செய்தால், பிரசவத்தின் போது கணவனை உடனிருக்க அனுமதிக்கிறார்கள். அதற்கென கட்டணமுண்டு. மனைவி படும் அவஸ்தைகளை காசு கட்டியா ரசிப்பது?! நெருப்புக்குண்டத்தின் மேல் நின்ற உணர்வெனக்கு. பெர்த் சூட்டுக்குள் நிற்கும் எந்த ஒரு கணவனும் இதற்கு மேல் பிள்ளைகள் தேவையில்லை என முடிவெடுத்துவிடுவான். அவள் வலியில் பங்கெடுத்துக்கொள்ள முடியாத பெரும் குற்றவுணர்ச்சியும் சூழ்ந்துவிடுகிறது.

கத்தலும், கதறலும், துள்ளலும், துடிப்பும் வலிமறப்பான் ஊசியை போடும் வரைதான். நவ விஞ்ஞானம் வலிகளற்ற பிரசவத்தினை சாத்தியமாக்கி இருக்கிறது. டாக்டர்களும், நர்சுகளும் புடை சூழ நின்று திருக்குறள் அரசி எனும் பெயரை கேலி செய்து, ‘எங்கே ஒரு திருக்குறள் சொல்லுங்க பார்ப்போம்...பாப்பா கேட்கட்டுமெனச் சொல்ல...’ திரு சிரித்துக்கொண்டே, தனக்குத்தெரிந்த ஒரே குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ சொல்லி முடிப்பதற்குள் பாப்பா பிறந்துவிட்டாள்.

சிரிப்பும், கேலியுமான சுகப்பிரசவம்.

***

கருவுற்றதும் திரு செய்தியாளர் பணியினை ராஜினாமா செய்தாள். வீட்டு வேலைக்கு வைத்திருந்த பெண்ணை நிறுத்திவிட்டு, தானே வேலைகளைச் செய்யத் துவங்கினாள். மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தாள். பத்து மாதங்களில் ஒரிரு நாட்கள்தான் என்னால், அவளை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.

டாக்டர் கீதா அர்ஜூன் எழுதிய நூல் மிகுந்த உதவிகரமாக இருந்தது. யூ ட்யூபில் ஏராளமான பேறுகால வீடியோக்கள் காணக்கிடைத்தன. அவை பிரசவம் குறித்த அர்த்தமற்ற பயத்தினை களைந்தன. மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் வழங்கிய அறிவுரைகளைக் கறாராக கடைப்பிடித்தாள்.

பைத்தியக்கார சீரியல்களை அறவே புறக்கணித்தாள். கருவுற்ற காலங்களில் ஆழி சூழ் உலகு; கன்னி; அறம் போன்ற பெரிய புத்தகங்களைப் படித்து முடித்தாள். வீட்டில் முடங்காமல் கோவையில் நடந்த பொதுநிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொண்டாள். குடும்ப விழாக்களிலும் தவறாமல் ஆஜர். இடையில் கொஞ்ச நாட்கள் ஊர்த்திருவிழாவிற்கும் போய் வந்தோம். பத்து மாதங்களும் வாந்தி, தலைசுற்றல் நிற்காமல் தொடர்ந்தது. இடையிடையே மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டி இருந்தது.ஆனாலும், எப்போதும் உற்சாகமான மனநிலையிலேயே இருந்தாள்.

தோழமைகள் என்னைக் காட்டிலும் திருவை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். பதார்த்தங்களோடு நண்பர்கள் பார்க்க வராத நாளே இல்லை. அவர்களது யோசனைகளும், அனுபவங்களும் பல சந்தர்ப்பங்களில் உதவிகரமாக இருந்தன.

***

ரத்தக்கசிவு ஏற்பட்டபோது நான் அலுவலகத்தில் இருந்தேன். உயிர்நண்பர் கபிலமாறன் திருவை ஐந்தாவது நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தகவல் கொடுத்தார். பேய் வேகத்தில் கிளம்பி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள். நண்பர்கள்.

‘பணம் எவ்வளவு வேணும்?!’, ‘துணைக்கு அம்மாவை அனுப்பி வைக்கிறேன்’, ’நான் கிளம்பி வர்றேன்’, ‘பேமிலி டாக்டரை ஹாஸ்பிடலுக்கு அனுப்பறேன்’, ‘சிசேரியன்னா பிளட் கேப்பாங்க...பதட்டப்படாதே நான் கொடுக்கிறேன்...’ இன்னும் என்னென்னவோ கேள்விகள். இந்த மருத்துவமனை தினங்களில் ஒருவேளை உணவு கூட கேண்டீனில் சாப்பிடவில்லை. முறைவைத்துக்கொண்டு எடுப்புச்சாப்பாடு வந்துகொண்டே இருந்தது.

தைப்பொங்கலன்று டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். கபிலமாறன் பொங்கல் கொண்டாட்டங்களைப் புறக்கணித்து முழுதினமும் என்னோடே இருந்தார். திருவையும், குழந்தையையும் திருப்பூரில் தாய்வீட்டில் சேர்ப்பித்து, தொட்டில், கொசுவலை, பெட் இன்னபிற சமாச்சாரங்களை சேகரம் செய்து ஊர் திரும்புபோது நள்ளிரவு தாண்டிவிட்டது.

சசிக்குமாரும், சமுத்திரக்கனியும் தங்கள் படங்களில் நட்பைச் சிலாகிக்கும்போது கொஞ்சம் ‘எக்ஸாகிரெட்’ பண்ணுகிறார்களோ எனத் தோன்றும். தலையிலடித்துக்கொள்கிறேன். என் நெஞ்சு விம்மி, கண்கள் பனிக்க சொல்கிறேன் ‘இக்கட்டான தருணங்களில் உறவுகள் ஓடிவிடும்; நண்பன் கூடவே இருப்பான்’

***

மொத்த சேல்ஸ் டீமும் நாட்கணக்கில் இரவும் பகலும் உழைத்தாலன்றி கரையேற முடியாததொரு நெருக்கடியான அலுவலக சூழலில்தான் திருவிற்கு பிரசவ வலி வந்தது. எனக்காக அலுவலக தோழர்கள் சுமையினைப் பகிர்ந்துகொண்டார்கள். நான் விடுப்பிலிருந்த நான்கு தினங்களும் அவர்கள் என்பொருட்டு நள்ளிரவு இரண்டு மணி, மூன்று மணி வரை அலுவலகத்தில் உழைத்தார்கள். வாழ்நாளில் மறக்கமுடியாத தோழமைகள்.

***

பாப்பா அப்போதுதான் பிடுங்கி, கழுவிய ஊட்டி கேரட்டினைப் போல் இருக்கிறாள். மூன்று கிலோ பஞ்சுப்பொதி. அம்மாவையே வார்த்த ஜாடை. முதல் மூன்று தினங்கள் அவள் அழவே இல்லை. பால் வெள்ளைக் கண்களை உருட்டி, உருட்டி முளித்துக்கொண்டிருந்தாள். முகத்தருகே குனிந்து ‘பாப்பா’என வாஞ்சையாக அழைத்தால் மெள்ள சிரிக்கிறாள். டேலியா பூத்தது போலிருக்கிறது.

திருவிற்கு இப்போதுதான் ஒரு பெரிய மனுஷி தோரணை வந்து சேர்ந்திருக்கிறது. ‘எருமை மாட்டிற்கு மான்குட்டி எப்படி பிறந்தது?!; தங்கச்சிலை வடிவமைப்பாளர்;’ என்றெல்லாம் பெண்பிள்ளைகளின் தகப்பன்களை பிராயத்தில் கேலி செய்து திரிந்திருக்கிறேன். திரு அவ்வரிகளை ஞாபகமூட்டி கேலி செய்கிறாள்.

***

இரண்டு நாட்கள் கூட இருவரையும் பிரிந்திருக்க முடியவில்லை. நானே பார்த்துக்கொள்கிறேனென நேற்று திருப்பூரிலிருந்து இருவரையும் அழைத்து வந்துவிட்டேன். தங்கவளையல்கள், மோதிரங்கள், கொலுசுகள் வரவேற்கப்படுகின்றன :)

Thursday, January 5, 2012

முடியலத்துவம்

நண்பர்களே...

இந்த புத்தகக் கண்காட்சிக்கு எனது ‘முடியலத்துவம்’ பட்டாம்பூச்சி பதிப்பகத்தினரால் வெளியிடப்படுகிறது. அடியேனின் முதல் புத்தகம். சில வருடங்களுக்கு முன் ‘முடியலத்துவம்’ விகடனில் தொடர்ந்து பல வாரங்கள் தொடராக வந்தபோது பரவலான கவனிப்பை பெற்றது. அத்துடன் குங்குமம், மல்லிகை மகள், தினகரன் தீபாவளி மலர் ஆகிய இதழ்களில் வெளியான கவிச்சேட்டைகளுடன் இத்தளத்தில் எழுதப்பட்ட முடியலத்துவ கவிதைகளையும் தாங்கி வெளிவருகிறது தொகுப்பு. விலை ரூ.50/-

சென்னை புத்தகக் கண்காட்சியில் பட்டாம்பூச்சி பதிப்பக ஸ்டாலில் (எண் 25) புத்தகம் கிடைக்கும். இது தவிர சென்னையில் நர்மதா பதிப்பகம் மற்றும் நியூ புக்லேண்ட் ஆகிய கடைகளில் கிடைக்கும். இணையத்தின் மூலம் பெற்றுக்கொள்ள இங்கு க்ளிக்கவும்.

நன்றி!