Friday, January 29, 2010

அவசர அறிவிப்பு!

புக் பாயிண்ட் அரங்கில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தினால் நாளை (30.01.2010 சனிக்கிழமை) நிகழ இருக்கும் ‘புத்தக வெளியீட்டு விழா’ இடம் மாற்றப்பட்டுள்ளது.

இடம்: தீபிகா செண்டர் (டான்போஸ்கோ வளாகம்)
22, டெய்லர்ஸ் ரோடு,
ஈகா தியேட்டர் அருகே.

நேரம்: மாலை 5.30 மணி

மேலதிக விபரங்களுக்கு:

பவா. செல்லத்துரை - 9443222997
பாஸ்கர் சக்தி - 9444034932

Tuesday, January 26, 2010

மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழா

பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார், லட்சுமண பெருமாள் ஆகிய மூன்று எழுத்தாளர்களையும் ஒருங்கிணைக்கும் புள்ளி ஒன்று இருக்கிறது. அது ‘மானுட வாழ்வு தரும் அழுத்தத்தை அங்கலாய்ப்புகள் இன்றி அங்கதச் சுவையில் வெளிப்படுத்தக் கூடியவர்கள்’ என்பதுதான். இம்மூவர்களின் படைப்புகளையும் இதழோர புன்னகையின்றி வாசிக்க முடியாது. இந்த புத்தகக்கண்காட்சிக்கு வம்சி புக்ஸ் மூவரது தொகுப்புகளையும் கொணர்ந்திருக்கிறது. அவற்றின் வெளியீட்டு விழா வருகிற 30.01.10 அன்று சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் ஸ்பென்ஸர் பிளாஸா ‘புக் பாயிண்ட் அரங்கத்தில்’ நிகழ இருக்கிறது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் பெருமளவில் கலந்துகொள்ளும் இவ்வி்ழாவில் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொள்ளும்படி ‘அண்ணன்மார்கள்’ சார்பில் அன்போடு அழைக்கிறேன்.

பாஸ்கர்சக்தியின் “கனகதுர்கா”

வரவேற்புரை – கே.வி.ஷைலஜா
வெளியிடுபவர்:
இயக்குனர் மகேந்திரன்
பெறுபவர்:
பத்திரிகையாளர் ஞாநி
உரை:
கவிஞர் யுகபாரதி
இயக்குனர் சிம்பு தேவன்

க.சீ.சிவக்குமாரின் ”உப்புக் கடலைக்குடிக்கும் பூனை”

வெளியிடுபவர்:
கவிஞர் சுகுமாரன்
பெறுபவர்:
கு.கருணாநிதி
உரை:
கவிஞர் இரா.சின்னசாமி

எஸ்.லட்சுமணபெருமாள் கதைகள்

வெளியிடுபவர்:
பத்திரிகையாளர் விஜயசங்கர்
(ஃப்ரண்ட் லைன்)
பெறுபவர்:
கவிஞர் நா.முத்துகுமார்
உரை:
இயக்குனர் ராம்
நிகழ்ச்சி தொகுப்பு:
கவிஞர்கள் உமா ஷக்தி
தி.பரமேஸ்வரி
சிறப்பு விருந்தினர்:
ஓவியர் காயத்ரி கேம்யூஸ்
நன்றியுரை:
பி.ஜே.அமலதாஸ்

Wednesday, January 13, 2010

ஜெயமோகனுடன் ஓர் உரையாடல்

அரங்கசாமி, அருண் எனும் இரு இலக்கிய ஆர்வலர்கள் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் வருகிற 23-01-10 அன்று (சனிக்கிழமை) மாலை 5:30 மணிக்கு கலந்துரையாடல் துவங்கும். நிகழ்வின் சிறப்பு அம்சமாக எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழின் தனித்துவம் மிக்க இருபெரும் எழுத்தாளுமைகளை ஒரு சேர சந்திப்பதும், உரையாடுவதும் வாசகர்களுக்கு கிட்டியிருக்கும் அரிதான வாய்ப்பு. உள்ளூர் மற்றும் வெளியூர் பதிவுலக நண்பர்களும் உரையாடலில் கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம்.

வெளியூர் நண்பர்கள் தங்களது வருகையை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் உறுதி செய்தால், தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் செய்ய ஏதுவாகும். துபாய் பதிவர் சென்ஷி ஏராளமான சந்தேகங்களுடன் நிகழ்விற்கு வருவதாக முதல் சீட்டை ரிசர்வ் செய்திருக்கிறார்.

டிஸ்கி:

‘நாடு இருக்கிற நெலமைல சிறுகதை ரொம்ப அவசியமா?’ ‘ சிறுகதைகள் எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?’ ‘ பத்திரிகைகளில் படைப்புகள் பிரசுரமாக யாரைப் பார்க்க வேண்டும்?’ என்பன போன்ற ஆர்.டி.எக்ஸ் கேள்விகளைக் கேட்கும் 'கலகக்காரர்கள்' அன்றைய தினம் வேறு ஏதேனும் முக்கிய வேலைகளை வைத்துக்கொள்ளும்படி தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறேன்.

Tuesday, January 12, 2010

அய்யனார் கம்மா - வாசக அபிப்ராயம்

மாட்டுக்கு லாடம் அடிக்கிற சஞ்சீவி, பேக் பைப்பர் குமரன், காதல் தூதர் வர்ஷினி, கோயில்கட்டி முருகன், மெடிக்கல் ஸ்டோர்ஸ் பழனிச்சாமி, வெத்தலப்பெட்டி ஐயப்பன், செம்பட்டைக் கிழவி என புழுதிக்காட்டில் புரண்டெழுகிற குணச்சித்தர்கள் வண்டி கட்டி வளைய வரும் நர்சிம்மின் ’அய்யனார் கம்மா’ தொகுப்பை ஏக்-தம்மில் வாசிக்க ஒரு கிராமத்தின் கதையை குறுநாவலாகப் படித்த உணர்வெழுகிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘அய்யனார் கம்மா’ அதிர்ச்சி முடிவால் ஏனைய கதைகளைக் காட்டிலும் தனிக்கவனம் பெறுகிறது. சுதேசமித்திரனின் ‘அணிற்பழம்’ சிறுகதைக்கு இணையான க்ளைமாக்ஸ் திருப்பம். முடிவிலிருந்து தனி அர்த்தம் பெறுகிற இக்கதை மறுவாசிப்பிற்கு துண்டுகிறது.

எங்கள் ஊர் பக்கம் சேட்டைக்காரப் பிள்ளைகளை ’விளங்குற பிள்ளைதான் பொறந்த வீட்ல செத்து போயிருமே’ என்று பெற்றோர்கள் திட்டுவது வழக்கம். ஒரு சொலவடையாக நின்று ரசிக்க முடிவதுதான். ஆனால், பெற்ற பிள்ளையைப் பறி கொடுத்தால் ஆட்டோ சங்கரின் அம்மா கூட கதறி, கதறி அழத்தானே செய்கிறாள்?! பிறந்த சில மணி நேரங்களிலே மரித்து விட்ட தன் குழந்தையை மண்ணடியில் புதைத்து வந்த தகப்பனின் வேதனைதான் ’தந்தையுமானவன்’. கட்டுரையான கதை அல்லது கதையான கட்டுரை.

செம்பட்டைக்கிழவி அசலான கிராமத்தை கண் முன் கொணர்கிறது. கதையின் நேட்டிவிட்டிக்கு நுட்பமான விவரனைகள் உதவுகின்றன. ஆனால், மாடு கட்டும் கல், சும்மாடு, இளந்தாரி கல் என எடுத்ததெற்கெல்லாம் விளக்கம் தருவது ஆயாசம் தருகிறது. இவையெல்லாம் தமிழ் வாசகனுக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட விஷயங்கள்தான் என்பதால் விளக்கங்களைத் தவிர்த்திருக்கலாம்.

அன்றாடம் தரும் நெருக்கடியில் மத்தியான சோற்றையே மறந்து விடுகிற பெருநகரின் பிள்ளைகள் நாம். ஒரு ராத்திரி பிரயாணத்தில் நெருங்கி விடும் தூரத்தில் இருந்தாலும் ‘நாமெல்லோருமே தூரத்து தண்ணீர்தான்’. தொலைபேசியில் உதவி கேட்கிற நண்பனுக்கு நாளையே அழைக்கிறேன் என உறுதியளிக்கிற கதைநாயகன் அடுத்தடுத்த வேலைகளில் ஆழ்ந்து விடுகிறான். நண்பன் கேட்டதை மறந்தும் விடுகிறான். ஒன்றரை வருடங்கள் கழித்து திடீர் ஞாபகம் வந்தவனாய் நண்பனைத் தேடிப் போகையில் அவனது மரணச் செய்தி மட்டுமே அவனை வரவேற்கிறது. ‘ஞாபகமாய் ஒரு உதவி’ மனம் கனக்கச் செய்யும் சிறுகதை.

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்ததும், வாய் விட்டுச் சிரிக்க வைத்ததுமாக இருந்த இரு கதைகள் ‘தலைவர்கள்’ மற்றும் ‘வெத்தலப்பெட்டி’ ஆகிய இருகதைகளும்தாம். நல்ல நகைச்சுவைக் கதைகள் அவை.
 
‘அவங்க அண்ணே அந்த ஜிம்ம வச்சுருக்கானா மூடிட்டானா?’ // ‘அரட்டையில் ஐக்கியமாகி குவார்ட்டரில்தான் வீட்டிற்குப் போவார்கள்’ // ‘ பகுத்தறிவு பாசறையென அழைக்கப்படும் டாஸ்மாக்’ // ‘சாஜ்ஜாப்பு என்பதை வேறுவழியில்லாமல் எழுதச்சொல்லித்தான் தெரிந்துகொண்டார்களாம்’ // போன்ற சொல்லாடல்கள் மதுரை மண்ணுக்கே உரிய அக்மார்க் லந்துகள். நர்சிம்மின் படைப்புகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கிடக்கிற சிரிப்பாணி வரிகள் கதைகளைச் சலிக்காமல் முன்னெடுத்துச் செல்கின்றன.
தொகுப்பின் பல்வேறு கதைகள் பதிவுலக வாசகர்களை மனதில் வைத்து எழுதப்பட்டிருப்பது ஒரு குறைபாடாகவே தெரிகிறது. மரணம், சந்தர்ப்பவதம், மனக்குரங்கு, அன்பின், தொடரும் முடிவுகள், மாநகரம் ஆகிய ஆறு கதைகளும் என்னளவில் அச்சுத்தகுதி ஏதுமற்ற மிகச்சாதாரணமான கதைகள்தாம். எழுத்தாளர்களின் ஆரம்ப அடையாளங்களுள் ஒன்று வார்த்தை விளையாட்டுக்கள். அவை கதைகளின் அழகைக் குலைத்து அமெச்சூர் தனத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் கொண்டவை. நர்சிம் அவற்றைக் கவனமாக தவிர்க்க வேண்டும்.
 
நர்சிம்மிற்கு இளமையான மொழி நடை வாய்த்திருக்கிறது. அவரது ஞாபக அறைகளில் ‘நோஸ்டால்ஜியா’ பசுமையாக சேகரம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பொலிவு கெடாமல் வாசகனுக்கு கடத்த முடிகிறது. தன் நிலப்பரப்பை விஸ்தாரமாகப் பதிவு செய்ய முடிகிற எழுத்தாளன் தோற்றதேயில்லை. நர்சிம்மால் மண் மணம் மாறாத நாவல் ஒன்றினை எழுதிட முடியும் என்பதன் அடையாளமாக இந்த மீச்சிறு தொகுப்பு எனக்குத் தோன்றுகிறது.

Friday, January 8, 2010

கிளிஞ்சல்கள் பறக்கின்றன...

என்னதான் எஸ்.எம்.எஸ், இ-மெயில் என்று வந்து விட்டாலும் வாழ்த்து அட்டை ஏற்படுத்துகிற பரவசம் அலாதியானது என்பதால் மிக நெருங்கியவர்களுக்கு மட்டும் ஆண்டின் துவக்கத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது வழக்கம். வாழ்த்து அட்டைகளின் விலை, அஞ்சல் செலவுகளை விட்டுத் தள்ளுங்கள். அதை தேர்வு செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம், ஒவ்வொரு அட்டையிலும் வாழ்த்துச் செய்திகளை எழுதும் நேரம், அஞ்சலகம் செல்லும் நேரம் என சுமார் இரண்டரை மணி நேரங்களைச் செலவு செய்திருக்கிறேன்.


ஒருவரிடம் இருந்து கூட வாழ்த்து அட்டை கிடைத்தது என்கிற குறுஞ்செய்தி தகவல் கூட இல்லை. பதில்களை எதிர்பார்த்து அனுப்புவதில்லை என்ற போதும் பிரிய மனிதர்களின் தகவல் தொடர்பு எந்தளவில் இருக்கிறது என்பது ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. சாதனங்களும், சாத்தியங்களும் அதிகம் இருக்கும் நவ யுகத்தில் கூட ஹூயுமன் ரிலேசன்ஷிப்பின் லட்சணம் இப்படித்தான் இருக்கிறது.


***


கோவை வேளாண்பல்கலைக்கழகம் 09-01-10 மற்றும் 10-01-10 ஆகிய இரு தினங்களிலும் (சனி, ஞாயிறு) மலர்க் கண்காட்சியை நடத்துகிறது. கடந்த ஆண்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வண்டி கட்டிக்கொண்டு வந்து பார்த்தார்கள். கண்காட்சியில் பிரத்யேக மலராக நானும் ஓர் அரங்கில் பூத்திருப்பேன். உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


***


லீனா மணிமேகலையின் கவிதைகளை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று ‘வினவு வியாபாரிகள்’ லீனாவின் சொந்த வாழ்க்கையை ஊகங்களின் அடிப்படையில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இக்கட்டுரையின் மூலம் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் போன்ற வார்த்தைகளை உபயோகிக்கும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள்.


பதிவைக்காட்டிலும் அதிக அதிர்ச்சி அளித்தது மருத்துவர் ருத்ரனின் பின்னூட்டமே. அவர் குறித்து முன் தீர்மானம் செய்து வைத்திருந்த அறிவு ஜீவி பிம்பம் உடைந்து விட்டது.


***


வம்சி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள கிளிஞ்சல்கள் பறக்கின்றன - கவிதைத் தொகுதியில் 'நேயன் விருப்பம்' எனும் எனது கவிதையும், பெருவெளிச் சலனங்கள் - கட்டுரை தொகுப்பில் 'கதைகளை தின்பவன்' எனும் எனது கட்டுரையும், மரப்பாச்சியின் சில ஆடைகள் - சிறுகதைத் தொகுப்பில் 'பதுங்கு குழி' எனும் எனது சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வோடு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


***


என்னுடைய முந்தைய கட்டுரை ‘வசந்த விழா!’அசுவாரஸ்யமாக இருந்தது என நண்பர்கள் பலர் தெரிவித்தார்கள். அக்கட்டுரை முழுக்க முழுக்க தகவல்களால் அடைக்கப்பட பொதி. ஒரு பத்திரிகைக்காக எழுதப்பட்டு அசுவாரஸ்ய காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.

Wednesday, January 6, 2010

வசந்த விழா!

கர்நாடகம், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் மகரசங்கராந்தியாகவும், தமிழகத்தில் பொங்கலாகவும், அஸ்ஸாமில் மஹாபிகுவாகவும், ஆந்திராவில் போகியாவாகவும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் பஞ்சாபில் லோஹ்ரியாக கொண்டாடப்படுகிறது. லோஹ்ரி பஞ்சாபின் பாரம்பர்ய அடையாளங்களுள் ஒன்று. இயற்கைக்கும், நெருப்பிற்கும் நன்றி சொல்லும் இவ்விழாவின் கொண்டாட்டங்களும், சரித்திரமும் சுவாரஸ்யமானது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி13ம் தேதி கொண்டாடப்படுகிறது லோஹ்ரி. விழா நாளன்று மாலையில் உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி மரத்துண்டுகளால் நெருப்பினை மூட்டுகின்றனர். அவ்வாறு மூட்டப்படும் நெருப்பிற்கு ‘பரிக்ராமா’ என்று பெயர். அந்த நெருப்பிற்கு மரியாதை செய்யும் விதமாக இனிப்பு வகைகள், சோளம், கிழங்கு மற்றும் காய்கறி வகைகளை தீயில் இடுவர். பின்னர் டோலக் எனும் தோல் கருவியின் ஒலிக்கேற்ப, கிராமிய நடனமான பாங்க்ராவினை ஆடத் தொடங்குவார்கள். ‘ஆதர் ஆயே.. திலாதர் ஜாயே..’ (வறுமை ஒழியட்டும், வளமை பெருகட்டும்) எனும் பாடலை உற்சாகமாக ஆண்களும் பெண்களும் பாடத் துவங்குவர். அந்த நெருப்பில் சுடப்படும் முள்ளங்கியை உண்பவர்களுக்கு வளம் சேரும் என்பது பஞ்சாபியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பெண்கள் தனியாக நெருப்பு மூட்டி, அதனைச் சுற்றி நளினமான நடனங்களை ஆடுவர். பெண்கள் மூட்டும் நெருப்பிற்கு ‘கிட்டா’ என்று பெயர்.

லோஹ்ரி தினத்தன்று சிறுவர்கள் வீடு வீடாக சென்று ‘துல்லா பட்டி’யின் புகழ் பாடும் பாடல்களை பாடுவர். (துல்லா பட்டி பஞ்சாபின் ராபின்ஹூட். பட்டிராஜபுத் வம்சத்தை சேர்ந்தவரும், மொகலாய மன்னர்களை துணிவோடு எதிர்த்ததால் ஜஹாங்கீரால் கொலை செய்யப்பட்டவருமான மாவீரன் சாந்தாளின் பேரன்தான் துல்லா பட்டி. இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த இவர், அக்பரின் காலத்தில் வாழ்ந்த வழிப்பறிக்கொள்ளையர். பணக்காரர்களிடம் கொள்ளையடித்த பணத்தை ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்தவர். இந்திய பெண்கள் மத்திய கிழக்கு ஆசியாவின் அரேபிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு அடிமைகளாக விற்கப்படுவதிற்கு எதிராக முழு மூச்சோடு போராடிய போராளி. மீட்கப்பட்ட இந்துப் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து இந்து இளைஞர்களுக்கு பாரம்பர்ய முறைப்படி திருமணம் செய்து வைத்த சமூக புரட்சியாளர்தான் துல்லாபட்டி) அச்சிறுவர்களுக்கு பணம், இனிப்பு வகைகள், பரிசு பொருட்கள், அன்பளிப்பது வழக்கம். இளைஞர்களுக்கோ இது ஒரு காதல் விழா. மாலையில் நடனம், பாட்டு கொண்டாட்டத்தோடு தங்கள் வயதொத்த பெண்களுடன் பேசி மகிழும் வசந்த விழாவாகவும் இருக்கிறது லோஹ்ரி.

பொதுவாக பஞ்சாபில் அக்டோபரில் கோதுமையை விதைத்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்வது வழக்கம். குளிர்காலம் முடிந்து வசந்தம் துவங்குவதை நல்ல அறுவடைக்கான நம்பிக்கையாக கருதுகின்றனர் விவசாயிகள். பஞ்சாபியர் குளிர்காலத்தை பவுஸ் என்றும் அதனைத் தொடர்ந்து வரும் மாதத்தை மகி என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி, பூமியின் மகர ரேகை சூரியனை நோக்கி திரும்புகிற நாள் மகி தினம் என்றழைக்கப்படுகிறது. அன்று மகர ராசிக்கு சூரியன் இடம் பெயர்வதாகவும் நம்பபடுகிறது. லோஹ்ரி திருநாளின் அடுத்த தினமான மகித்தினத்தன்று பெண்கள் கோதுமை, எள், சர்க்கரை பாகு, வேர்கடலை, சோளம் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் தின்பண்டங்களையும், கறும்பு சாறு பாயாசத்தையும் இறைவனுக்கு படைக்கின்றனர். அன்றைய உணவில் மக்கா சோள ரோட்டியும் கடுகு இலையில் செய்யப்படும் கூட்டும் இடம் பெறும்.

மகி போர் வீரர்களுக்கு மரியாதை செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. சீக்கியர்களுக்கு ஐந்து கட்டளைகளை வழங்கியவரான குரு கோவிந்த் சிங்கின் நாற்பது முக்கிய சீடர்கள் அவுரங்கசீப்பிற்கு எதிரான போரில் மரணமடைந்தனர். டிசம்பர் 29ம் தேதி மரணமடைந்த அவர்கள் ஜனவரி 13ல் தான் எரியூட்டப்பட்டனர் (இந்த சம்பவத்திற்கு பிறகுதான் சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது). போரில் தங்கள் இன்னுயிரை நீத்தவர்களுக்கு மரியாதை செய்யும் தினமாகக் கருதப்படுகிறது மகி தினம். இந்த மகி தினத்தன்று வண்ணமயமான சந்தைகள் கூடும். கிராமத்து மக்கள் ஒன்று கூடி இளைஞர்களுக்கான பல்வேறு பந்தயங்கள் நடத்துவர். பாட்டுப்போட்டி, மல்யுத்தம், பெண்களுக்கான போட்டிகள் என களை கட்டும் சந்தை. ஆரம்பத்தில் பஞ்சாபில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த மகிதினம் தற்போது ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, டெல்லி பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. திருமணமான பின் வரும் முதல் லோஹ்ரியும், தலைச்சன் பிள்ளை பிறந்த பின் வரும் முதல் லோஹ்ரியும் தமிழ்நாட்டு தலைதீபாவளி போல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

தகவல் தொடர்புத்துறையின் வளர்ச்சிக்கு பிறகு இரண்டாம் தலைமுறை இளைஞர்கள் டெல்லி, பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு புலம் பெயர்ந்த பின்னரும் லோஹ்ரி தன் பாரம்பரிய அடையாளங்களை இழக்காமல் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் காலமாற்றத்தின் அடையாளமாக இரவு நடனவிருந்துகளில் மது புகுந்திருக்கிறது. சிறுவர்களுக்கான பரிசுப் பொருளாக காட்பரீஸ் மாறியிருக்கிறது. நம் வீட்டு குக்கர் பொங்கல் போல!

(விக்கினேஸ்வரிக்கு...)