Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது


நாஞ்சில் நாட்டு வாழ்வியலை எழுத்தில் வடித்த அசலான கலைஞனும், மூக்கின் நூனியில் ஆத்திரம் சுமக்கின்ற கோபக்கார இளைஞனும், எங்கள் கும்பமுனியுமான எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டிற்க்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் அவரது எழுத்துக்களையும் நேசிக்கிற வாசகனாக எனக்கு மகிழ்வான தருணம் இது. சொந்த தகப்பனுக்குக் கிடைத்த மரியாதையாகவே என் மனம் துள்ளுகிறது. இது கொண்டாட்டமான தருணம். நான் கொண்டாடக் கிளம்புகிறேன்...

Saturday, December 18, 2010

நினைவூட்டல்

மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கும் விழா நாளை மாலை 5 மணிக்கு கோவை பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கில் நடைபெற இருக்கிறது. விழாவினையொட்டி ஜெயமோகன் ஆ. மாதவனைப் பற்றி எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூல் வெளியிடப்பட இருக்கிறது.

விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், புன்னத்தில் குஞ்ஞப்துல்லா, ஆ. மாதவன், பேராசிரியை எம்.ஏ.சுசீலா, இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

தன்னெழுத்துக்களால் மொழிக்கு அழகு சேர்த்த நம் காலத்தின் மூத்த எழுத்தாளரை வாழ்த்த நல்லிலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட அனைவரையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் அன்போடு அழைக்கிறேன்.

Wednesday, December 1, 2010

விஷ்ணுபுரம்இடையறாத வாசிப்பு, அறிவார்த்தமான விவாதங்கள், தொடர்ந்த பயணங்கள் ஆகியவற்றின் மூலம் இலக்கிய வாசகன் எனும் அந்தஸ்தினை அடையத் துடிக்கும் நல்லிலக்கிய ஆர்வலர்கள் நாங்கள். சமகால எழுத்தாளர்களில் முதன்மையானவரும், இருபதாண்டுகளுக்கும் மேலாக தரமான படைப்பாளிகளைத் திறந்த மனதுடன் தமிழ் வாசகப் பரப்பிற்குச் சிபாரிசு செய்பவரும், தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இரண்டாம் தர எழுத்துக்களை துணிச்சலுடன் விமர்சனம் செய்து வருபவரும், வேறெந்த எழுத்தாளர்களைக் காட்டிலும் வாசக உரையாடலை அதிகம் ஊக்குவிப்பவருமான ஜெயமோகன் எங்களின் ஆதர்ஸமாய் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நாங்கள் ஜெயமோகனின் வழியாகவே இம்மொழியின் உன்னதச் செயல்பாட்டாளர்களைக் கண்டடடைந்தோம் எனச் சொல்வதில் எங்களுக்கு கூச்சம் இல்லை.

தகுதியானவர்களுக்கு உரிய மற்றும் உயரிய மரியாதை என்பதில் கறாரானாவர் ஜெயன். அதன்படியே தமிழின் சிறந்த ஆளுமைகள் பலருக்கும் தன் சொந்தச் செலவில் விழாக்கள் பல எடுத்தவர் அவர். ஜெயமோகன் துவக்கிய அவ்வறப்பணியை அவரது தீவிர வாசகர்களாக நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.

மனதிற்குள் புகுந்து மாயம் பண்ணுகிற மகத்தான கதைசொல்லி ஆ.மாதவன். சிறுகதைகளாலும், நாவல்களாலும் இம்மொழிக்கு அழகு செய்த மூத்த படைப்பாளி. இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெற்றதில்லை. விருது லாபிக்களில் விருப்பம் கொள்ளாத ஆத்மா. இத்தகைய புறக்கணிப்புகள் எது குறித்தும் அலட்டிக்கொள்ளாத ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டிற்கான விருதை வழங்கி தனக்கான கவுரவத்தை தேடிக்கொள்கிறது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’

இவ்விருது வழங்கும் விழா வருகிற டிசம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை - பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.ஏ.சுசீலா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள். இவ்விழாவில் ஆ.மாதவனைப் பற்றி ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூல் வெளியிடப்பட இருக்கிறது.

நம் காலத்தின் மகத்தான எழுத்தாளர் ஒருவரை வாழ்த்த வாருங்களென இலக்கிய அன்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

***

நண்பர்களுள் பலரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள், செலவினங்கள் குறித்து அக்கறையான விசாரணைகளை மேற்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இலக்கிய வாசிப்பை ஊக்குவிப்பது; எழுத்தாளர் - வாசகர் உரையாடலைச் சாத்தியப்படுத்துவது; தகுதியான ஆளுமைகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையையும் செய்வது; ஆகிய குறைந்த பட்ச செயல் திட்டங்களுடன் செயல்பட்டு வரும் இலக்கிய அமைப்பே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

நல்லிலக்கியத்தின் மீது பிடிப்பும் துடிப்பும் இருக்கிற எவரையும் விஷ்ணுபுரம் இருகரம் நீட்டி வரவேற்கிறது. திருகலான மனப்போக்கும், இலக்கிய வம்புகளுக்கு அலையும் மனோபாவமும் எப்பேர்ப்பட்ட குழுமத்தையும் செயலிழக்கச் செய்து விடும். அப்படிப்பட்டவர்கள் வழக்கம்போல யாரும் வராத டீக்கடைக்குள் பத்திரமாக இருந்துகொண்டு எங்களை விமர்சிக்கலாம்.

Thursday, November 25, 2010

நெகிழ்தற் பொருட்டு


ஒருவழியாக திருமணம் முடிந்து; மறுவீடு; வரவேற்பு; விருந்து; பால்காய்ப்பு சம்பிரதாயங்களை முடித்து இன்று இருவரும் வீடு ஏகினோம். இனி நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து படைப்பதே முதற்பணியென முடிவு செய்திருக்கிறோம்.

***

காதல் என்றவுடன் ஆரம்பத்தில் எதிர்த்த குடும்பத்தார் திருமணம் என முடிவான பின் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தது இன்ப அதிர்ச்சி. அண்ணன்மார் அவர்தம் மனைவியர் பிள்ளைகள்; அக்காள்மார் அவர்தம் கணவர்கள் பிள்ளைகள் - சகிதம் திருமணத்திற்கு இருபது நாட்களுக்கு முன்பே விடுப்பு எடுத்து வந்து விட்டார்கள். வீட்டில் ஜே...ஜே என திருவிழா கூட்டம். வாசல் தாண்டி வழிகிற பிரியம் கண்டு ஊரார் வியந்தார்கள்.

‘இருபது நாள் லீவு எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன அதிசய சித்தப்பா...?!’ என ஆத்திரப்பட்ட ஆசிரியை முறைத்துப் பார்த்து விட்டு அண்ணன் மகள் வீட்டுக்குத் திரும்பி விட்டாள். ஆறு வயது அவளுக்கு. அந்த ஸ்கூலே வேண்டாம் என்கிறாள்.

***

தாலிக்குத் தங்கம் அக்காள்மார் வைக்கவேண்டுமென்பது வாணியக்குடி மரபு. அக்காள்மார்கள் அத்தனை வசதி வாய்ந்தவர்களில்லைதான். தங்களது பல்லாண்டுகாலச் சிறுவாட்டுச் சேமிப்பில் பொற்காசுகள் வாங்கி வைத்தார்கள். பதிலுக்குச் செய்யும் சுருள் மரியாதையையும் என் பொருளாதாரம் அறிந்து தவிர்க்கச் சொன்னதில் துளிர்த்தது கண்ணீர்.

***

ஜெயமோகன், தேவதேவன், வசந்தகுமார், கலாப்ரியா, முருகேஷ் பாபு, பாஸ்கர் சக்தி, மாதவராஜ், சிதம்பரம், வடகரை வேலன், தண்டோரா, அப்துல்லா, பா.ராஜாராம், பட்டர் ஃபிளை சூர்யா, ஓ.சு. நடராசன், ஈஸ்வர் சுப்பையா என தங்கள் எழுத்துக்களால் என்னை மகிழ்வித்து வந்தவர்கள் நேரிலும் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்வித்தனர்.

***

திருமணத்திற்கென பிரத்யேகமான ஒட்ட வைத்த சிரிப்பை சிரித்துக்கொண்டிருந்தேன். ஜெயன் ‘செல்வேந்திரன்... நீங்க இன்னும் கொஞ்சம் மலர்ந்து சிரிக்கலாமே...’ என்று சொல்ல அரங்கம் சிரித்தது.

***
மகி கிராணியும் கடலாடி அருணும் இன்ப அதிர்ச்சிகள். முன்னவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறவர். பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களை உற்சாகப்படுத்தி வருபவர். பின்னவர் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள கடலாடி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர். என் வலைப்பக்கங்களின் தீவிர வாசகர். இருவரது வருகையும் வாழ்த்துக்களும் என் மனதில் இன்னமும் ஊறிக்கொண்டே இருக்கிறது.

***

இன்னொருவர் அதிமுக்கியமானவர். குடிப்பதற்கென்றே வந்தார். குடித்துக்கொண்டே வந்தார். குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். குடித்துக்கொண்டே சென்றிருக்கிறார். முதலிரவிற்கு முந்தைய நிமிடங்களில் ‘..ட்டேய்ய்...ங்கொத்தா...’ அலைபேசி வழியே அவரது ஆசீர்வாதம் வந்தடைந்தது.

***

ஈவெண்ட் மானேஜ்மெண்டில் என்னை ஜான் கில்லாடி என்பர். ஆனால், வந்தவர்களை வாங்க என்று கேட்டதைத் தவிர வேறெந்த உபச்சாரங்களும் செய்ய முடியாத அளவிற்கு அரேஞ்மெண்ட்ஸில் கோட்டை விட்டேன். வந்தவர்களனைவரும் சாப்பிட்டார்களா என்ற சந்தேகம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. மன்னிச்சுடுங்க பாஸ்!

***

திருமணத்தை வீடியோ எடுக்கவேண்டும் என்று முடிவு செய்தது ஒரு முட்டாள்தனம். அப்புறம் நல்ல நேரம், கெட்ட நேரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அவர்களது இஷ்டப்படிதான். ஆட்டிப்படைத்து விட்டார்கள். இத்தனைக்கும் அட்வான்ஸ் கொடுக்கையில் எளிமையாய், இயல்பாய் எடுங்கள் போதுமென்று எத்தனையோ முறை சொல்லியும் கேட்டார்களில்லை.

மணப்பெண்ணின் நாடியை மணமகன் தாங்கி நிற்பதும், ஓரே குளிர்பானத்தில் இரு உறிஞ்சு குழல்களை சொருகிக் குடிப்பதும், மணமகள் ஊட்ட மணமகன் விரல் கடிப்பதும் இல்லாமல் ஒரு திருமண ஆல்பம் சாபல்யம் அடைவதில்லை போலும்.

***


திருமண இறுக்கம் தளர்ந்து மனமாரச் சிரிக்கவும், விரதம் முறித்து வயிறாரச் சுவைக்கவும் வகை செய்தார்கள் திருப்பூர் சேர்தளம் நண்பர்கள். குறுகிய கால அவகாசத்தில் அட்டகாசமான விருந்தினை ஏற்பாடுச் செய்து தந்தார்கள்.

நானும் பரிசலும் முந்தைய பிறவியில் மாமன் மச்சானாய்த்தான் இருந்திருக்க வேண்டுமென்பதை வந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். கேலியும் கிண்டலுமாய் கழிந்தது மாலை.

***

திருப்பூரில் தெருவுக்குத் தெரு மொபைல் கடை வைத்திருக்கும் வீனஸ் குழுமத்தின் முதலாளிகள் அனைவரும் மினி டைகர்ஸ் கிரிக்கெட் டீமின் ஆட்டக்காரர்கள். விளையாட்டுப் பிள்ளைகளாய்த் திரிந்தவர்களில் ஒருத்தன் மட்டும் திருப்பூர் வந்து ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்து பின் அக்கடையையே வாங்கி... பின் ஒவ்வொரு நண்பர்களாக அத்தொழிலில் சேர்ந்து இன்று ஊரையே விலை பேசிக் கொண்டிருக்கிற பிஸினஸ் மகாராஜாக்கள். நான் ஒருத்தன் மட்டும்தான் மணல் கடிகை சண்முகம் மாதிரி. திருச்செந்தூருக்கும் வந்திருந்தார்கள். திருப்பூரிலும் விருந்து பரிசுகளென அசரடித்தார்கள்.

***

புதுப்பொண்டாட்டி கோலமிடும் அழகை தோள் துண்டு, வாயில் சொருகிய டூத் பேஸ்ட் சகிதம் ரசிக்காதவன் தமிழ்க்கணவன் ஆகான். நானும் துணிந்தேன். கேண்டி முதலில் வெள்ளை மாவினால் ஒரு வட்டம் வரைந்தாள். அதை நீல நிறப்பொடி கொண்டு நிறைத்தாள். அருகிலே ஒரு சதுரம். அதை மஞ்சள் நிறப் பொடியால் நிறைத்தாள். அடுத்து ஒரு சிவப்பு முக்கோணம் உருவானது. அதனையொட்டி ஒரு கறுப்புச் செவ்வகம். அதனருகே ஓர் அலட்சிய அறுங்கோணம். துணுக்குற்றேன்.

‘பூவும் பறவைகளும்தான் கோலமா... இது மாடர்ன் ஆர்ட்...’ என்றாள். கோலம் போடத் தெரியலங்கிறத பயபுள்ள எப்படிச் சமாளிக்குது...?!

***

Monday, November 15, 2010

டிக்கெட் போட்டாச்சா...!

திருமணம் என்று முடிவானதும் பிரியத்திற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் நேரில்தான் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று நானும் திருவும் ஏகமனதாக முடிவெடுத்தோம். ஆனால், வாழ்வியல் தேவைக்கென வரித்துக்கொண்ட வேலை அதற்கு வகை செய்யவில்லை. சிலருக்குத்தான் நேரில் அழைப்பிதழ் கொடுக்க முடிந்தது. பலருக்கு கொடுக்க இயலவில்லை. விடுப்பு இல்லை என்பதைத் தாண்டி பலரது முகவரிகள், தொலைபேசி எண்கள் கைவசம் இல்லையென்பதும் ஒரு காரணம்.

காதலியை மனைவியாக்கும் தருணம் எத்தனை கம்பீரமானது. என் தோள்கள் விடைத்திருக்கின்றன. என் முகம் புன்னகையால் ததும்பிக்கொண்டிருக்கிறது. என் கால்கள் இன்னமும் பூமிக்கு வரவில்லை. என் சந்தோச தருணத்தில் என் அன்பிற்குரியவர்களின் இருப்பும், அருகாமையும் அவசியமென மனம் இரைஞ்சுகிறது. என் பிரியத்திற்குரியவர்களே, இந்த இணைய அழைப்பையே உங்களை நேரில் சந்தித்து கரங்களை இறுகப் பற்றி அழைத்ததெனக் கொள்ளுங்கள்.

வருகிற வியாழனன்று (18-11-2010) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி ஆலயத்தில் காலை 9 மணி முதல் 10.30க்குள் உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளுமைகள், சிந்தனையாளர்கள் சூழ என் காதலியின் கைத்தலம் பற்றுகிறேன். உங்களது வருகையும், வாழ்த்துக்களும் அவசியம்.

Monday, November 1, 2010

பேச்சரவம்


அசர அசர பெய்து ஓய்ந்திருந்தது மழை. வீட்டைச் சுற்றி மழைச் சகதியின் மந்தகாச மணம். பூமியைக் கீறி முளைவிடத் துவங்கியிருந்த புற்களில் சாவுக்குருவியொன்று புழுக்கொத்திக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்து கூட்டு சேர்ந்தன இன்னுமிரண்டு குருவிகள். கீச்சு கீச்சென்ற தேன் கீதம் கிளம்பியது. எந்த முட்டாள் இவற்றிற்கு சாவுக்குருவியென பெயர் வைத்தானென எரிச்சலாக வந்தது.

செவன் சிஸ்டர்ஸ் எனப்படும் சாவுக்குருவியின் கீச்சொலி அலாதியானது. ஒரு தினத்தை மிகுந்த அழகாக்கக் கூடிய மந்திரம் அந்த கீச்சொலிக்குள் இருக்கிறது. ‘புள்ளும் சிலம்பினகான்’ மனதிற்குள் ஓடியது. படிப்பறை திரும்பி சித்திர திருப்பாவையை எடுத்துக்கொண்டு பறவைப் பாடல்களை மேய்ந்து கொண்டிருந்தேன். புள்ளரையன் (கருடன்), ஆனைச் சாத்தன் (குருவி), புனமயில், இளங்கிளி, கோழி, பல்கால் குயிலினங்கள் என திருப்பாவைப் பறவைகளனைத்தும் என் வீட்டு விருந்தாளிகள் என்பதில் கொஞ்சம் பெருமிதம் கிளம்பிற்று.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் குடியிருக்கிறோமே என்கிற அச்சலாத்தியை அவ்வப்போது போக்குவது பறவைகள்தாம். மைனா, புறா, கவுதாரி போன்ற நிலைய வித்வான்களோடு அவ்வப்போது மரங்கொத்தி, தேன் சிட்டு, கொக்கு, தவிட்டுக்குருவி, சொங்கி நாரை (நானே வைத்த பெயர்! ஒரிஜினல் பெயரைத் துளாவிக்கொண்டிருக்கிறேன்.) போன்ற வெளியூர் ஆட்டக்காரர்களும் அவ்வப்போது ஜூகல் பந்தி நடத்துவதுண்டு.

இன்று வந்தவர் கரிச்சான் குருவி. மினுமினு கருப்பும், மெலிந்த உடலும், நீண்ட இரட்டை வாலுமாய் கேபிள் ஓயரில் உட்கார்ந்திருந்தது அக்குருவி. கரிச்சான் குருவிகளனைத்தும் தொகையரா வகையரா. சங்கீத பரம்பரை . கொண்டு கரிச்சான் குருவி நான்கு சுரங்களில் பாடும் என்பது தியோடர் வாக்கு. தன் கருவாய் மலர்ந்து சங்கீத மழை பொழிய துவங்கியது கரிச்சான். மெய் சிலிர்த்துப் போனவன் கரிச்சானைக் கவரும் முயற்சியில் வீட்டிற்குள் ஓடி ஒரு குத்து பொன்னி அரிசியை அள்ளி கூரையில் வீசினேன். என்னைக் கேவலமாகப் பார்த்து விட்டு சரட்டென பறந்து விட்டது. காற்றில் உந்தி உந்தி கங்காருவைப்போல பறக்கும் கரிச்சானை ஏமாற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். ‘பாவம் பயல்’ என பரிதாபம் கொண்டதோ என்னவோ அந்தரத்தில் அரைவட்டமடித்து திரும்பவும் கேபிள் ஒயரில் லேண்டானது. நான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

செந்திலாண்டவனோடு சமருக்குச் செல்லும் சூரபத்மனைப் போல தலையை இடமும் வலமும் திருப்பிக்கொண்டே இருந்தது கரிச்சான். கேபிள் ஓயரின் இன்னொரு மூலையில் ஒரு காகம் வந்தமர்ந்தது. தொண்டையைச் செருமினாற் போல மெல்ல கரைந்தது காகம். கம்யூனிகேஷன் பிரச்சனையோ என்னவோ தெரியவில்லை. கடும்சினத்தோடு காகத்தின் மேல் பாய்ந்தது கரிச்சான். கழுத்து வாக்கில் ஒரு கொத்து. அலறிப் பறந்த காகத்தை விடாமல் துரத்தி வலது சிறகின் கீழ்ப்புறத்தில் ஒரு கொத்து. முடிந்த மட்டும் வேகம் கொண்டு பறந்தது காகம். கரிச்சானோ ரிவர்ஸ் பல்டி அடித்து காகத்தின் முன் நின்று காற்றில் ஒரு நொடி தாமதித்து அதன் மூக்கில் ஒரு கொத்து. கரிச்சானின் செயல்பாடுகள் அது சீன மடாலயமொன்றில் குஃங்பூ, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி பெற்றிருக்குமோ என நினைக்க வைத்தது. காகம் கொஞ்சமும் எதிர்ப்புணர்ச்சி இன்றி தப்பித்தோம் பிழைத்தோம் என பறந்து கொண்டிருந்தது. எனக்கோ பெருமகிழ்ச்சி. வலியோரை எளியோர் தாக்குகையில் பீறிடும் உற்சாகம். முடிந்த மட்டும் காகத்தை துரத்தி விட்டு திரும்பவும் கேபிளில் அவதார் ஹீரோவைப் போல வந்தமர்ந்தார் திருவாளர். கரிச்சான். முகத்தில் தோரணை குடிவந்திருந்தது. நான் திரும்பவும் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்

இன்று முழுவதும் பறவைகளைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருப்பது என முடிவெடுத்தேன் (ஏன்... எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான் அப்படி எதைப்பற்றியாவது யோசித்துக்கொண்டிருப்பாரா என்ன?!) என் மனவெளியெங்கும் கரிச்சான் பறந்துகொண்டே இருந்தது. என்னிடமிருந்த ‘தாமரை பூத்த தடாகம்’, ‘வனங்களில் விநோதம்’, ‘உயிர்ப் புதையல்’ ஆகிய புத்தகங்களில் கரிச்சான்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கரிச்சானுடைய அறிவியல் பெயரோ, ஆங்கிலப்பெயரோ தெரியாததால் இணையத்திலும் தேட இயலவில்லை. கரிச்சானின் அதிரடி சண்டைக்காட்சிகள் மனதிற்குள் ரிவைண்ட் ஆகிக்கொண்டே இருந்தது. பெரியவரோடு வேறு பகை. அழைத்தும் கேட்க முடியாது. சோர்ந்து போனேன்.

தியாகு புக் சென்டரில் குழுமி இருந்த நண்பர்களிடத்தில் கரிச்சானின் சாகசங்களைச் சொன்னேன். விநோதமாகப் பார்த்தார்கள். தியாகுதான் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்ட சலீம் அலியின் புத்தகம் ஓன்றை தேடி எடுத்துக்கொடுத்தார்(இத்தனை அரிதான புத்தகங்கள் இவரைத் தவிர வேறு யாரிடமும் இருக்கும் எனத் தோன்றவில்லை) பறவைகளின் வண்ணப்படங்களோடு அவற்றின் சுபாவங்களைப் பற்றிய குறிப்பும் அப்புத்தகத்தில் இருந்தது. புழுக்கள், சிறு பூச்சிகளை விரும்பி உண்ணும் கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே சிறிதும் இல்லை. தன்னை விட அளவில் பெரிய பறவைகளான பருந்து, கழுகு, காகம் போன்றவற்றைக் கூட தாக்கி ஓட ஓட விரட்டக் கூடியது என்று சலீம் குறிப்பிட்டிருந்தார்.

கரிச்சான் தன் உடலில் இருக்கும் உண்ணிப்பூச்சிகளை அழிக்க எறும்பு புற்றின் மீது அமருமாம். எறும்புகள் வெளிப்படுத்தும் ஃபார்மிக் அமிலத்தில் பூச்சிகள் அழிந்து விடும் என்றும் தன் பயமற்ற வாழ்க்கை முறைக்காக ‘கிங் க்ரோ’ என்றும் அழைக்கப்படுகிறது போன்ற உபரி தகவல்களை இணையம் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.

100கிராம் கூட எடை இல்லாத குருவி பாடுகிறது; காற்றில் சாகசம் செய்கிறது; தன்னிலும் வலிமையான எதிரியை தாக்குகிறது. வேதியியல் முறைப்படி சுயசிகிட்சை செய்து கொள்கிறது. நான் என் தொப்பையைத் தடவியபடி சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்தேன்.

Thursday, October 28, 2010

மனக்காளான்


விரையும் மணல் லாரியிலிருந்து சொட்டடிக்கும் நீர் ஆற்றின் குருதியெனக் கொள்க!

நண்பர் ஒரு கனரக வாகனம் வாங்கி இருக்கிறார். பெயர் 'இன்னோவா'வாம்.

என் பெரும்பாலான வஞ்சி புகழ்ச்சியை சம்பந்தப்பட்ட பெண்கள் 'வஞ்சகப் புகழ்ச்சியென' கொள்கின்றனர் # வருத்தம்

முதிர் கன்னிகளை, வாழாவெட்டிகளை, விதவைகளை வெளித் தெரியாமல் புணர்பவன் செத்துச் சொர்க்கம் போவான்.

உலக மொழிகளிலேயே அதிகம் மொன்னைக் கவிதைகள் எழுதப்பட்ட மொழி எனும் பெருமையும் தமிழுக்கு உண்டு # மொழி ஆய்வு

பகைவனுக்கு அருள்வதும் பிழை! மருள்வதும் பிழை!

அறச்சார்பை குத்தகைக்கு விடலாம் என்றிருக்கிறேன். தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாலோயர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அரசாங்கம் வரி விதிக்கலாம் # யோசனை

ரொம்பவும் அயோக்கியனை அய்யோக்கியன் என்றெழுதலாம் # தமிழ்க் கொடை

உதித் பாடி ஹிட்டடிக்காத தமிழ்ப் பாடலே இல்லை # ஆய்வு

ஆம்லெட்டைக் கண்டுபிடித்தவன் தான் வாழ்ந்த காலத்தில் கவுரவிக்கப்பட்டிருப்பானா என்பதே என் நீண்டகால கவலையாக இருக்கிறது.

ஓடி ஓடி இளைக்கனும். ஊத்தை வயிறைக் குறைக்கனும். ஆடிப்பாடி சிரிக்கனும். ஆஞ்சியோவைத் தவிர்க்கனும் # விழிப்புணர்ச்சி

தானே வளரும் பிரண்டை போன்ற தாவரங்களை நான் ‘தன்செய்’ என அழைக்கலாமென்றிருக்கிறேன். # தமிழ்க் கொடை

அன்பு கலக்காத கலவி. வம்பு வளர்க்காத கிழவி

விதியெனில் விலக்கும், வீதியெனில் விளக்கும் அவசியமாகிறது. பள்ளத்தால் பல் இழக்கப் பார்த்தேன்.

உண்மையான அன்பு பாட்டிலுக்குள் இருக்கும் சாராயம் போல. குடித்தாலன்றி போதையை உணர முடியாது. # தத்துவமுத்து

பென் ட்ரைவ் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

அற்பங்களின் மீதான அதீத ஆர்வம் வரலாற்றை வடிவமைத்தது.

குருவை மிஞ்சியாக வேண்டிய நிலை ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்படத்தான் செய்கிறது. அதுவே நியதியும் கூட. குருவை மிஞ்ச முடியாதவர்களின் வாழ்வு சீடனாகவே அஸ்தமித்துப் போய்விடுகிறது. தன்னைத் தாண்டி ஓட முடிகிறவனை வாழ்த்தி வழியனுப்புகிற குருவா நீங்கள்...?!

எழுதுவது என் பொழுதுபோக்கு. எழுத்துக்களை விற்பது என் தொழில். என் பொழுதுபோக்கிற்காகப் பேசப்படுவதை விட தொழில் நேர்த்திக்காகப் பேசப்படுவதையே பெரிதும் விரும்புகிறேன். தவிர, வாரக்கடைசி எழுத்தாளனாக வாழ்வதைக்காட்டிலும் வாசகனாக நீடிக்க முயல்வதே எழுத்துலக முன்னோடிகளுக்குச் செய்யும் மரியாதை என நினைக்கிறேன். இனிய இரவு.

நண்பர்களே, பார்வர்டு மின்னஞ்சல்களையும், குப்பை குறுஞ்செய்திகளையும் எனக்கு அனுப்புகையில் நாம் கட்டிய நட்பு பாலத்தின் மீது நீங்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்...!

எழுத்தாளத் துடிப்பில் இருப்பவனுக்கு இணையமும், அதன் வாசகர்களும் முக்கியம் என்று நினைத்திருந்தேன். கடந்த ஐந்தாண்டில் எந்த உருப்படியான வேலைகளையும் செய்யாமல் இருந்ததற்கு இணையம் ஒரு பிரதான காரணம்!

சமூக வலைதளங்களின் செயற்பாட்டாளனாய் இருத்தல் யானையை வைத்து பிச்சையெடுத்தலுக்குச் சமம். அதிலும் புறத்தியானுக்காக எடுக்கும் பிச்சை. இணையங்களின் வழியே கடுகளவு அறிவும், மலையளவு காலவிரயமும் நேரிடும் என்பது என் அவதானிப்பு. முதற்கட்டமாக எழுநூற்றிச் சொச்சம் நபர்களோடு நட்பு கொண்டிருந்த ஆர்க்குட்டை அழித்தெறிந்தேன்.

இறைவா, எனக்கு கூடுதலாக எட்டு மணி நேரம் கொடு. அல்லது புறத்தியார் நேரத்தை 16 மணி நேரமாக குறைத்து விடு # கோரிக்கை

முக்கியமானவனாக நடத்தப்பட முக்கியமானவற்றை மட்டும் செய்!

Sunday, October 3, 2010

திருமண அறிவிப்பு

‘திருமணத்திற்குப் பின் என் வாழ்க்கையே தொலைந்து விட்டது. கல்யாணம் என் வாழ்நாளின் பெரும்கொண்ட தவறு’ எனும் அவலப்பட்டியல் வாசிப்போர் அனேகம் பேர் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். திருமணமாகியும் வாழ்வைப் பழிக்காத ஒருவனையாவது தேடிக் கண்டடைய வேண்டும் என்பது என் சங்கல்பம்.

என் மிக நீண்ட தேடலில் ஜெயமோகனைக் கண்டடைந்தேன். கிட்டத்தட்ட இரு பத்தாண்டுகளைக் கடந்து விட்ட இல்வாழ்வு அவருடையது. மனை மாட்சி பாகம் இரண்டு எழுதும் தகுதியுண்டு அவருக்கு. நான் காதல் திருமணம் செய்யப்போகிறவன் என்றதும் என் இரு கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டு காதல் திருமணத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பம்சங்களைக் கண்கள் ஒளிர ஜெயமோகன் சொல்லச்சொல்ல சிலிர்த்தேன்.

தன் மனைவி கசக்கி எறியும் காகிதத்தைக் கூட சேகரித்து வைத்துக்கொள்ளும் காதலனாகத்தான் இன்றும் ஜெயன் இருக்கிறார். அருண்மொழி அக்காவையும் ஜெயனையும் சேர்த்துப் பார்த்தால் அன்றைக்குத்தான் காதலிக்க ஆரம்பித்தவர்கள் போல இருக்கும். இலக்கியக்கூட்டங்களில் இருவரும் கைகோர்த்து வரும் காட்சியைக் கண்டவர் விண்டிலர் என்பர் என் இலக்கிய நண்பர்கள். திருமணம் காதலின் டெஸ்டினேஷன் அல்ல... டிபார்ச்சர்.

***

ஆயிற்று நண்பர்களே. பல காலம் போராடி இரு தரப்பின் சம்மதமும் பெற்று ஒரு வழியாய் நவம்பர் - 18ல் திருமணம் என முடிவாகி இருக்கிறது. சித்தர்களும், மன்னர்களும் கட்டி வைத்த பெரும் கல் மண்டபமொன்றில் நண்பர்கள் புடை சூழ, கடலலை கால் நனைக்க திருச்செந்தூரில் என் காதற் பெருமாட்டியின் கைத்தலம் பற்றுகிறேன். விரைவில் கல்யாணப் பத்திரிகையோடு வந்து கதவைத் தட்டுகிறேன் தோழர்களே.

***

திருமண விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் பொதுவாக எப்போது? எங்கே? பெண் என்ன செய்கிறாள்? - போன்ற கேள்விகள்தான் புறப்பட்டு வரும். அழைத்த நண்பர்களெல்லாம் ‘கல்யாணச் செலவுக்குப் பணம் எதுவும் தேவையா? என்கிறார்கள். வறுமையின் கூர்முனையில் நிற்கும் ரமேஷ் அண்ணா கூட துரத்துகிறார். நல்ல வாழ்க்கைத்தானடி வாழ்ந்திருக்கிறேன் என்றேன் கேண்டியிடம்...!

***

‘உன்னை இம்ப்ரெஸ் பண்ண ஒரு புக் படிச்சுக்கிட்டு இருக்கேன் ’ என்றொரு குறுந்தகவல் கேண்டியிடமிருந்து... ஆர்வத்தில் என்ன புத்தகமென்று ரிப்ளைனேன்.

‘எருமை வளர்ப்பு - அக்ரி யூனிவர்சிட்டி வெளியீடு’

எனக்காகப் பிரார்த்தியுங்கள் தோழர்களே!

Friday, September 17, 2010

செய்தொழில்

லாகிரி வஸ்துகள், புகழ், அதிகாரம் இவையெல்லாம் தருகிற போதையினைக் காட்டிலும் கொடியது செய்தொழில் போதை. செய்கிற வேலையிலே உன்மத்தம் கொள்பவனின் உடலும், மனமும் வெறியேறி சுற்றம் பகைத்து, உறவுகள் பிரிந்து, சுயம் அழிந்து கடைசியில் எல்லாம் கட்ட மண்ணாவது கண்கூடு.

லெளகீகம் செழிக்க சம்பாத்தியத்தோடு மாறாத காதலும், தீராத பேரன்பும் முட்டுவழியாகின்றன. பத்திரிகை விற்பனையில் சில செக்மெண்டுகளுக்கு நான் ஒரு அத்தாரிட்டி என்பதை நிருவும் முயற்சியில் குடும்பத்தைத் தொலைத்து விட்டேன். மெய்வருத்தம் பாராத, பசி நோக்காத, கண் துஞ்சாத ஆறு வருட ஓட்டத்தில் ஓய்வுக்கு இடமில்லை. தினம் தினம் வேகத்தை கூட்டியாக வேண்டி இருக்கிறது. நான் என்னவாகப் போகிறேனென்பதில் செலுத்திய கவனத்தை நான் என்னவாக இருக்கிறேன் என்பதிலும் காட்டியிருக்க வேண்டும் போலும்.

***

சுஜாதாவிற்குப் பிண்டம் வைக்க பாலகுமாரன் கயா சென்ற செய்தி அறிந்து அதிர்ந்தேன். பிண்டம் வைப்பதன் பின்னால் இருக்கும் ஆன்மிக நம்பிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். தன் ரத்த சொந்தம் அல்லாத ஒருவருக்குப் பிண்டம் வைக்க நினைத்ததும், அதற்காக கயா வரை சென்றதும் சகஎழுத்தாளன் மீது பாலகுமாரன் கொண்டிருந்த பிரியத்தைக் காட்டுகிறது.

***

ஆம்புலன்ஸ் அலறிக்கடக்கும் ஒவ்வொரு முறையும் 'இறைவா உள்ளிருக்கும் உயிரைக் காப்பாற்று...' என்று அரற்றுகிற மனம்தான் சகலருடையதும் என்று நம்புகிறேன். நேற்று சிக்னலில் ஆம்புலன்ஸ் வந்ததும் பதறி வழி விட்ட ஜனங்களெல்லாம் அரை நொடி கடவுளென நினைத்துக்கொண்டேன்.

***

தொடர்மழைக் காலங்களின் மேகமூட்டம் மனதில் ஒரு மென்சோகம் கொடுக்கும் கவனித்திருக்கிறீர்களா?! எதையும் செய்யத் தோன்றாமல் வெறுமனே இருக்கத் தோன்றும். காஞ்சனா தாமோதர் கதையொன்றில் விஞ்ஞான ரீதி விளக்கம் கண்டேன் 'சூரிய ஒளி மூளையில் மெலட்டோனின் என்ற சுரத்தலை ஊக்குவிக்கிறதாம். இந்த சுரத்தலின் அளவு குறைகிறபோது புரியாத மனச்சோர்வு வந்துவிடும். குளிர் அல்லது மழைக்காலங்களில் பல கலாச்சாரங்களும் விளக்குப் பண்டிகைகள் கொண்டாடுவதும் காரணத்தோடுதான்' என்றொரு குறிப்பு இருந்தது.

***

கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஆர்.எஸ். புரம் - டி.பி சாலையில் இயங்கி வந்த தியாகு புக் செண்டர் காமாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும் இந்த லெண்டிங் லைபரரியை உள்ளூர் வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது என் அவா.

***


தெரு நாய்க்குச் சோறு வைக்காதே தினமும் வந்து நிற்கும். தண்ணீர் கேட்கும் அந்நியனா கவனம் நடுநிசியில் கன்னம் வைக்க நோட்டம் பார்க்க வந்திருக்கலாம். ராத்திரி நேரம் லிப்ட் கொடுக்காதே கழுத்தில் கத்தி வைக்கலாம். பர்ஸை பறிகொடுத்தேன் என கைநீட்டுபவனுக்கு பணம் கொடுக்காதே வாங்கிப் போய் குடிப்பான். சாலை விபத்தா நில்லாமல் பற உதவினால் உபத்திரவம். மனைவியைச் சாத்தும் குடிகாரனா தடுக்காதே வில்லங்கம். கை நீட்டும் கிழவிக்குப் பிச்சையிடாதே. உழைத்துப் பிழைக்கச் சொல். என்னிடத்தில் மட்டும் அன்பாயிரு!

என் அன்பே, ஊராள்வான் திருட்டையும், புரட்டையும் தண்டிக்கத் திராணி இல்லை. மன்னிக்கிறோம். விளிம்பு நிலைச் சீவன்களின் வயிற்றுப்பாட்டில்தான் நமக்கு எத்தனை எச்சரிக்கையுணர்வு?! 'ஏற்பது இகழ்ச்சி' என்று சொன்ன ஒளவைதான் 'இயல்வது கரவேல்', 'ஈவது விலக்கேல்', 'ஐயம் இட்டு உண்' என்றும் சொன்னாள்.


***

சமீபத்திய விகடனில் அதிஷாவின் கதையொன்றினைக் கடந்தேன். பஞ்சம் பிழைக்க பெருநகர் பெயர்ந்து வாழத் தலைப்பட்டு வேர்பிடிக்காத மனதின் புழுக்கமும், வெக்கையும். அபாரமான குறுங்கதை.

***

நாம் நடந்தால், வாழ்வும் நம்மோடு நடக்கும். - பாதசாரி

Tuesday, August 24, 2010

அவசியமற்றவை

சுயானுபவக்குறிப்புகளை எழுதித் தீர வேண்டிய அவசியமென்ன என்கிறார்கள். யார் யாருக்கு எது எது வருகிறதோ அதைச் செய்து விட்டுப் போக வேண்டியதுதானே?! வறுமை இல்லை; பசி இல்லை; வாசிப்பு இல்லை; யோசிப்பு இல்லை; அகச்சிக்கல் - புறச்சிக்கல் ஏதுமில்லை. பின்னே எங்கே இருந்து வரும் லிட்ரேச்சர்?!

***

சில பூனைகளுக்குத் திருட பயம். சில பூனைகளுக்குத் திருடத் தெரியவில்லை. சில பூனைகள் திருடி அகப்பட்டு சூடு கண்டவை. சில பூனைகளுக்குத் திருட சோம்பல். சில பூனைகள் திருட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கின்றன. சில பூனைகள் திருடி முடித்து விட்டன. யாதொரு ஐயமும் இல்லை. எல்லாப் பூனைகளும் திருட்டுப் பூனைகளே...

***

அலுவலகத்தில் ரொம்ப நெருக்கமான நண்பர். தமிழார்வமுள்ள மலையாளி. அவரது சின்னப்பெண் பள்ளியில் பாட்டுப் போட்டிக்குப் பெயர் கொடுத்திருந்தாள். பாரதியின் பாடலொன்றைத் தேர்வு செய்து அவளுக்குப் பயிற்சியும் நான் கொடுக்க வேண்டுமென்பது கோரிக்கை. இரண்டு ஞாயிறுகள் தவணை வாங்கியும் அடியேன் பாட்டைக் கூட தேரிவு செய்யவில்லை. நண்பர் என் முகத்திலேயே முழிப்பதில்லை.

நாங்கள் மூன்று சகோதரர்கள். விஜிபி பிரதர்ஸென ஊரார் செல்லமாக நக்கலடிக்கும் அளவிற்குச் சகோதர ஒற்றுமை. சின்ன அண்ணன் பயல் எல்.கே.ஜியில் இருபது திருக்குறளும், யூ.கே.ஜியில் அறுபது திருக்குறளும் ஒப்புவிக்கிற விசித்திர வீரியன். ‘சித்தப்பா பேச்சுப்போட்டிக்கு ‘விடுதலை வீரர்கள்’ தலைப்புல எழுதிக்கொடுங்க...’ என்றான். வேலைப்பளுவில் மறந்து விட்டேன். குடும்ப உறுப்பினர் பட்டியலில் இருந்தே நீக்கி விட்டார்கள்.

கோவையில் எனக்குக் கிடைத்த தோழியருள் முக்கியமானவர். ஆகப்பெரிய தொழிலபதிபர். சிங்கப்பூர் அரசு உதவியுடன் பெரிய தொழிற்சாலை அமைத்து சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். அவரது பிள்ளைகள் சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர்கள். மற்ற எல்லா பாடத்திலும் கலக்குகிறவர்களால் தமிழை மட்டும் சமாளிக்க இயலவில்லை. மொழிப் பயம் போக்கிக்கொடுங்கள் என்று மன்றாடினார். இதோ அதாவென ஆறெழு மாதங்கள் ஸ்வாஹா!. ‘ஹூ இஸ் செல்வேந்திரன்?’ என்கிறார்.

எதை விடவும் குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லா பெற்றோர்களும் வெரி சென்சிட்டிவ். கல்விக்குச் சிறு இடைஞ்சல் ஏற்பட்டாலும் பெரும் மனச்சோர்வு அடைகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இதை எழுதும் போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஊரில் பிரபலமான மருத்துவரின் மகன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். எல்லாப் பாடத்திலும் அடிபொளீ மதிப்பெண்கள். கணக்கில் மட்டும் பதினைந்தை தாண்ட முடியவில்லை. பல்வேறு டியூசன்களில் வைத்தியம் பார்த்தும் தேறவில்லை. வழக்கு என் கோர்ட்டுக்கு வந்தது. பயலுக்கும் வாய்ப்பாடுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கிறதென்பதைக் கண்டு பிடித்து, இரண்டு மாதங்கள் ஓசை நயத்தோடு வாய்ப்பாட்டைக் கத்த வைத்தேன். அரையாண்டில் 90 மதிப்பெண்கள் எடுத்தான். அந்த டாக்டர் இன்றளவும் என் குடும்பத்தாருக்கு வைத்தியம் பார்த்தால் காசு வாங்குவதில்லை.

எனவே, தோழர்களே....!

***

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தார் ‘கந்தர்வன் நினைவு சிறுகதை போட்டி’ அறிவித்திருக்கிறார்கள். கதைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 25. கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர். ரமா. ராமநாதன்,
மாவட்டச் செயலாளர் - தமுஎகச,
2/435, பாரதி நகர், ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் - 622 301

மேலதிக விபரங்களை 9865566151 என்ற எண்ணில் பெறலாம்.

***

திரைப்பட அபிப்ராயங்களைப் பலரும் திறம்பட எழுதுகிற காரணத்தால் நான் குறைத்துக் கொண்டேன்.

பெருநகரில் காதலர்கள் படும் இடர்பாடுகளைக் கவனித்திருக்கிறார் சுசீந்திரன். நா.ம.அல்ல - திரைப்படத்தின் முற்பாதி அசத்தலாகவும், பிற்பாதி அயற்சியாகவும் இருந்தது. பாஸ்கர் அண்ணா தன் வசனங்களால் படத்தைப் பாதி தாங்குகிறார். முற்பாதி முழுக்கத் தியேட்டர் அதிர அதிர சிரிக்கிறது.

துருத்திக்கொண்டு நிற்கிற சாதீயப் பெருமைகளையும், ஹீரோயிசத்தையும் சகித்துக்கொள்ளத் திராணி இருந்தால் வம்சம் அம்சமான படமே. ஓர் இனக்குழுவின் உச்சிக்குணங்களைச் சொல்லுகிற தருணத்தில் அதன் எச்சித்தனங்களையும் சித்தரித்த நேர்மைக்காகவும், சம்பவங்களினுடே காட்சிப்படிமமாய் மென்கவிதைகளைக் கோர்க்கிற கவித்துவ கதையாடலுக்காகவும் பாண்டிராஜ் எனக்கு முக்கியமாகப் படுகிறார்.இசையும் கைகொடுத்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

***

ஏராளமானப் பரிசுப்பொருட்கள், வாழ்த்துக்கள், கை குலுக்கல்களோடு இருபத்தெட்டாவது வயதை இனிதே கடந்தேன். வாழ்நாள் முழுக்க அன்பின் ஈரச்சாரலில் நனைந்து கொண்டே இருப்பது இறையருள்.

***
மனதிற்குகந்தவர்களைப் பற்றி முடிந்தவரைக்கும் எழுதாமல் இருப்பது உசிதம். நாம் உருவாக்கும் சொற்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் எவ்விதமானச் சங்கடங்களை உருவாக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இனிப்பேயானாலும் சர்க்கரை நோயாளிக்குப் புகட்டினால் சங்கடம்தானே?!

Saturday, August 14, 2010

இருக்கிறேன்

தமிழாய்ந்த முதுகூகை அவர். அவ்வப்போது பட்டாயாவில் பட்டையைக் கிளம்பும் வழக்கமுண்டு. அன்பு கலக்காத கலவி - வம்பு வளர்க்காத கிழவி என்பது என் அபிப்ராயம். மறுத்தார் அவர்.

ஒவ்வொரு முறை போகும்போதும் மறக்காமல் சின்னச்சின்ன கவரிங் நகைகள், ஸ்டிக்கர் பொட்டுக்கள் வாங்கி வைத்துக் கொள்வாராம். உடை தளர்த்தும் முன்னர் உனக்காகத்தான் வாங்கி வந்தேனென நீட்ட அகம் நெகிழ்ந்து அன்பு பெருக்கெடுக்கும் என்கிறார். அரை நாள் சகவாசத்திலும் அன்பை எதிர்பார்க்கிறது மனம்.

***

மகுடேஸ்வரன் சந்திப்பு வந்தவனை பஸ் ஸ்டாண்டில் மடக்கி பெரிய கொடிவேரிக்கு அழைத்துச் சென்றார்கள் திருப்பூர் நண்பர்கள். வழியில் ஒரு கிராமத்தில் கண்ணுக்குள் புல்லினை விட்டு கற்கள் எடுக்கும் வைபவம். மயிர்க் கூச்சம் எடுத்து திரும்பி நின்று கொண்டேன். கல்லெடுக்கும் கிழவிதான் சாமிநாதனின் ஆஸ்தான கண் வைத்தியராம். அடிக்கடி கண்களைச் சுத்தம் செய்துகொள்வேன் என்றார். எதையும் அறிவியல் அடுப்பிலெற்றி அவித்துப் பார்த்தால் மட்டுமே நம்புவது எங்கள் குல வழக்கம்.

யாரும் அறியா வண்ணம் தண்ணீருக்குள் அமிழ்ந்து தனியாகக் குளித்துக் கொண்டிருப்பவர்களின் கால்களைப் பிடித்து அமுக்கி கொலை செய்து பாறைக்குள் ஒளித்து வைப்பதை குலத்தொழிலாக செய்யும் விற்பன்னர்கள் கொடிவேரியில் இருக்கிறார்கள். பிணத்தை தேடி எடுத்துத் தர பல்லாயிரம் தொகை. தேனிலவுக்கு வந்து தாலியைத் தொலைத்தவர்களின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் நண்பர்கள். அழகின் இருப்பிடமெல்லாம் ஆபத்தின் பிறப்பிடமாய் இருக்கிறதே ஈசுவரா!

***

நட்புகளால் நிரவப்பட்டதென் வாழ்வு. பரிசளிப்பதும், பரிசு பெறுவதும் அன்றாட நிகழ்வுகள். பரிசளிப்பது சந்தேகமில்லாமல் ஒரு கலைதான். என்னுடைய வெளிநாட்டு நண்பர்களுள் சிலர் (வாசகரென்று எழுதினால் சண்டைக்கு வருவார்கள்) உயர் ரக மதுப் போத்தல்களையெல்லாம் உறவுகளிடம் கொடுத்தனுப்புகிறார்கள். எழுதுகிறவனுக்கு குடிப்பழக்கம் இருக்கும் என்ற நம்பிக்கை.

மதுவிற்கு எதிரானவனாக அதை எவருக்கும் மறுபரிசளிக்கவும் முடியாது. தொலையட்டும் சனியனெனெ வீசியெறியவும் முடியாது. நண்பர் கொடுத்ததாயிற்றே. அலங்காரப் பொருளாய் இருக்கட்டுமென அலமாரியில் அடுக்கி வைத்திருந்தேன். ஓ இந்தப் பழக்கமெல்லாம் வேற வந்தாயிற்றாவெனக் கேட்கிறார் திடீர் விருந்தாளி.

புத்தகப் பரிசுகள் வேறு ரகம். ஏற்கனவே படிக்க வேண்டிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் இருக்க பாவ மூட்டை போல் சுமையேறிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடிக்காத புத்தகம் உருவாக்கும் மன அழுத்தம் கடுமையானது.

கூலர்ஸ், ஐபாடு, இசைத்தட்டுக்கள், ஜீன்ஸ், காலணிகள் இவையெல்லாம் ஏன் பரிசுப் பொருட்களுக்குரிய அந்தஸ்தினை அடையவில்லை?!

***
ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.

‘ஏழ்வை, பயலுவல, என்னத்தையாவது, நோக்கம், சவம், செஞ்சிக்கிட்டு வச்சிக்கிட்டு’ போன்ற பிரத்யேக தூத்துக்குடி பதப்பிரயோகங்களைக் காது குளிர கேட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

***

உதவி ஆசிரியராய் வெளியேறின ரமேஷ் பொறுப்பாசிரியராய் உயர்ந்திருக்கிறார். ‘பிணவறைக்குள்ளிருந்தும் பின்னூட்டமிடுவேன்டா...ராஸ்கல்...!’ என்கிற நறநறத்த குரலில் ஒரு தன்முனைப்பு இருக்குமில்லையா. அதுதான் நெட்டித் தள்ளுகிறது.

***

உறக்கம் கிறக்கம் வணக்கம்.

Friday, July 23, 2010

மனக்காளான் 2


* சுயமே ஜெயம்!

* யாதும் பாரே...யாவரும் குடிப்பீர்.

* கம்பும் சொம்பும் பிறர் தர வாரா...!

* ’சிரப்’பொக்கும் எல்லா இருமலுக்கும்.

* மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயம் நிறைவேறும். முந்தைய நாள் சுட்டு வலுவடைந்த மாநாட்டுத் தோசையும் விற்று விடும்.

* தமிழின் முதல், இடை மற்றும் கடை காவலனைக் கண்டடைந்த மகிழ்ச்சியில் திளைக்கிறது கோவை!

* எம்.டி. முத்துகுமாரசாமிக்கு புனைவை விட ட்வீட்டுகள் நன்றாக வருகிறது. பேயோனைப் படித்துவிட்டு பாதசாரி அபிப்ராயம்...

* மானேஜராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...!

* உங்கள் ஏர் பஸ்ஸில் ‘கருப்புப் பெட்டி’ உண்டா என்றேன். முறைத்தார்கள் கே.பி.என் காரர்கள்.

* அன்பே, உன்னைப் பார்க்கையில் பெருமையாகவும், எருமையாகவும் இருக்கிறது...

* உயில் எழுத ஆட்கள் தேவை. என் சொத்துக்களை சரிபாதியாகப் பிரித்து தமனாவிற்கும், த்ரிஷாவிற்கும் வழங்க நினைக்கிறேன்.

* எந்த கோர்ஸூக்கு நல்ல எதிர்காலம் என்று மெஸெஜினாள். இண்டர்கோர்ஸூக்கு என ரிப்ளைனேன்.

* ட்வீட்டுகள் எவருடைய மனதையும் புண்படுத்த அல்ல. மீறி புண்பட்டால் சல்ஃபானின் தடவுங்கள்.

* ஒவ்வொரு ஓவர் டேக்கிலும் ஒரு துளியேனும் உயிரைப் பணயம் வைக்க வேண்டி இருக்கிறது.

* கேண்டி பாடுகிறாள்: ‘பாடும் போது நான் தென்றல் காற்று...பதிவுலகில் நீ டம்பி பீஸூ’

* செக் புக் ரிக்வெஸ்ட் கூட அடிசனல் பேப்பர் வாங்கி எழுதுகிறான் பிரதியங்காரக மாசானமுத்து.

* அறச்சார்பு இல்லாத எழுத்தாளன் அவுட் கோயிங் இல்லாத செல்போனுக்கு சமம்.

* ஜெயமோகனை ஜெயன் என்று சுருக்குவதைப் போல பேயோனை ஏன் பேயமோகன் என விரிக்கக் கூடாது?!

* சுயம் பிரம்மாஸ்மி! உன்னையே நீ புகழ்வாய்.

* உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்...பணம் தர வேண்டும்...!

* வாசித்தாலும், யோசித்தாலும் துக்கமே எஞ்சுகிறது. தூக்கமோ கெஞ்சுகிறது!

* கேண்டி திமிர் தீரும் மட்டும் பேசும் திருநாட்டில் ஆணடிமை தீர்தல் முயற் கொம்பே!

* வாடகை தராத எறும்புகள். என் உணவையும் எச்சில் படுத்துகின்றன. அவை பெரும்பான்மை! நான் தனியன்.

* மனசாட்சியுள்ள பார்வையாளனா debonairblog-ன் சேவையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் ரேபிட்ஷேரைக் கண்டிக்கிறேன்.

* படைக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்று போனேன். களப்பணி ஏதும் தெரியாததால் தளபதி ஆக்கிவிட்டார்கள்.

* ஹிட்ஸ் பற்றி கேட்டார்கள். தமிழினியை 2000 பேர் படிக்கிறான்கள். கருப்பு பூனையையும், மியாவையும் 200000 பேர் படிக்கிறான்கள். எது உசத்தி?!

* துடைத்தலென்பது தூசிகளே இல்லாமல் இருக்கச் செய்வதல்ல. தூசிகளின் அளவை குறைப்பது.

* சமணப்புலவர்களுக்கு முலைகளின் மீது எத்தனைக் காதல் என்பதறிய சீ.சிந்தாமணி ஒரு சாம்பிள்!

* இந்தியாவின் மிகப்பழமையான வன ம்யூசியம் ’காஸ்’ கோவையில் இருக்கிறது. ஒரு பயலும் வருவதில்லை.

* அலெக்ஸாண்டர் சொன்னாரென்று 1000 கணக்கில் எஸ்ஸெம்மெஸ் வருகிறது. அவர் போட்டது வாள்ச் சண்டையா? வாய்ச் சண்டையா?

* காந்திக்கு ஹாரிலால். கதிரேசன் செட்டியாருக்கு நீ! # அவதாணிப்பு பை கேண்டி

* வட்டியால் பாதிக்கப்படாதவன் வானத்தின் கீழ் இல்லை.

* வாழ்வும் சாவும் எழுத்தோடுதான் என்றான் எழுத்தாள நண்பன். வடக்கிருந்து சாகத் தயாராகுங்கள் வாசகர்களே...!

* எங்கு சுவைத்தாலும் இனிக்கின்ற பேய்க்கரும்பு நீ!

* மொழி கலைத்து ஆடும் என் சிறுபிள்ளை விளையாட்டை நீ கவிதை என்கிறாய்...!

* அன்பெனும் மதயானை... எதைக் கொண்டு அடக்க?! எதைக்கொண்டு மறைக்க?!

* எனக்கான குயில் எல்லா இடங்களிலும் பாடத்தான் செய்கிறது. நானோ உனக்கான பாடலோடு மன்றாடிக் கொண்டிருக்கிறேன். # காதல்

* என் நினைவின் ஊற்றுக்கண்களில் நீயே கசிகிறாய். சாந்து வச்சி அடைக்கனும்.

*சம்பல்,வருவல்,அவியல்,பொறியல்,பிரட்டல்,பச்சடி,கூட்டு,துவரம்,மசியல்,துவையல்,தொக்கு - எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?!

* சிவாஜியைப் பார்த்து உணர்ச்சி வசப்படக் கற்றுக்கொண்டேன்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, சேரன் டைம்ஸ், மயிலாப்பூர் டைம்ஸ், குறிச்சி டைம்ஸ் அடடா... டைம்ஸ்தான் பெரிய மீடியாஹோம்!

* கன்னிராசிக்கு அதிர்ஷ்டம் என்றிருந்தது. அப்துல்லாவிற்குப் போன் செய்தேன். ஸ்விட்ச்டு ஆஃப்! நேற்று முயற்சி என்றிருந்தது. தமனாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

* மொபைல் போன் அடிக்கடி கீழே விழாமல் இருக்க பரிகார நிவர்த்தி ஏதேனும் இருக்கிறதா?! # சந்தேகம்

* எதிர் வீட்டுப்பெண் ப்லாக் எழுதுகிறாள். கட்டாய கமெண்ட் வற்புறுத்தலில் தப்புவது எப்படி?!

* ‘மனம் கொத்திப் பறவை’ தலைப்பு அவ்வளவாக அப்பீல் ஆகவில்லை. சுயம் கத்திப் பறவை பொருத்தமாக இருக்கும் # அவதானிப்பு

* கண்ட பேக்ல லேப்டாப்பை எடுத்துட்டுப் போறவனும், லேப்டாப் பேக்ல கண்டதை எடுத்துட்டுப் போறவனும் நல்லா சர்ஃப் பண்ணதா சரித்திரம் இல்லை.

* உங்கள் தேசிய கீதத்தை எழுதியவர் யாரென்றேன் கிரா டேலியிடம். சம் ஆஸ்கோல்ஸ் என்றாள். அவரை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்கிறார் எழுத்தாள நண்பர்.

* முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.

* பெண்கள் தங்கள் தியாகத்தால் காதலுக்கு தெய்வீக வர்ணம் பூசுகிறார்கள்.

* அபிமான எழுத்தாளனைச் சந்திக்கச் செல்கிறேன். என்ன வாங்கி வரட்டுமென கேட்டால் ‘ஆண்களுக்கான ஃபேர்னஸ் க்ரீம்’ என்கிறார்.

அரைகுறை அயோக்கியத்தனத்தை விட ஆபத்தானது எதுவும் இல்லை # தத்துவத் தெறிப்பு

இறைவா, தயைகூர்ந்து என் விளையாட்டுக்களனைத்தையும் வினையாக்கி விடு. வினையின்றி விருத்தி இல்லை. # பிரார்த்தனை

Tuesday, July 20, 2010

துளிர்

என்னவாயிற்றெனக் கேட்காத நபரில்லை. பிழைப்பு - உழைப்பு - களைப்பு என ஏதேதோ சொல்லிச் சமாளித்தாலும் ‘சலிப்பு’ என்பதே உண்மை. கீழ்மைகளின் கூடாரத்தின் கீழ் நின்று கூச்சல் என்ன வேண்டிக் கிடக்கிறது என்று வாளாவிருந்துவிட்டேன். பொருள் முதல் வாத காரணங்களுக்காக அறச்சார்பை அடமானம் வைப்பவர்களைக் கண்டு பொருமிக்கொண்டும், மொத்தக் கோபத்தையும் புத்தகங்களின் மீது செலுத்திக்கொண்டும் காலம் கழித்தேன்.

யாராவது பிளாக்கரென அறிமுகம் செய்தால் வெட்கமாக இருக்கிறது. தனிமையில் சந்தித்து ‘செல்வேந்திரெனச் சொல்லுங்கள்... போதும்’ என இரைஞ்ச தோன்றுகிறது. இயங்கு தளத்தை மாற்றேன் என்கிறாள் கேண்டி. பத்துப் பதினைந்து பத்திரிகைகள் வாசலில் காத்துக் கிடப்பதாக நினைப்பு அவளுக்கு. பதறியபடி வரும் மின்னஞ்சல் விசாரணைகளில் விரவிக்கிடக்கும் அன்பிற்காகவேனும் எழுதியாக வேண்டும்.

***
இடைப்பட்ட காலத்தில் முதலாம் ஆண்டு தமிழினி இதழ்களின் தொகுப்பு, மெலிஞ்சி முத்தனின் வேருலகு, யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம், பேயோனின் சேஷ்டைகள், பாதசாரியின் அன்பின் வழியது உயிர்நிழல் (மறுவாசிப்பு), பேய்க்கரும்பு (மறுவாசிப்பு), மனோஜின் புனைவின் நிழல், ஜெயமோகனின் எழுதும் கலை, அனற்காற்று ஆகிய புத்தகங்களை வாசித்து முடித்தேன்.

***

கனடாவில் வாழத் தலைப்பட்ட ஈழ எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன். இவரது ‘வேருலகு’ நாவல் மிகக்குறைவான பக்கங்களில் (53) போர் கலைத்துப் போட்டதொரு கடலோரக் கிராமத்தின் (அரிப்புத் துறை) வாழ்வைக் குறுக்கு வெட்டில் வைக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நெய்தல் நிலப்பதிவுகளில் இதுவும் ஒன்று. முத்தன் இயல்பில் கவிஞர் என்பதால் காட்சிகள் கனலும் கவித்துவத்தோடு நகர்கின்றன. எளிய மனிதர்கள் உன்னதர்களாகவேச் சித்தரிக்கப்படும் வழமையிலிருந்து விலகி இவரது பாத்திரங்கள் பலகீனங்களோடும், கீழ்மைகளோடுமே உலா வருகின்றன.

இந்த அருமையான நாவலின் அட்டைப் படம் மிகச் சுமாராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது என் அபிப்ராயம். நூலை பத்துப் பேருக்குச் சிபாரிசு செய்தேன். என்னைத் தவிர எவருக்கும் பிடிக்கவில்லை.

***

வெயில் வட்டம் சிறுகதை தந்த அனுபவத்தில் ‘புனைவின் நிழலை’ வாசிக்கத் துவங்கினேன். பதினைந்து சிறுகதைகளும் அருமை. குறிப்பாக ‘அட்சர ஆழி’ எத்தனை விசித்திரமான வாசிப்பனுபவம்.

***

அடர்த்தியான நெரிசலோடு நகர்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். வழக்கம் போல பத்துப் பைசாவிற்குப் பிரயோசனமில்லாதவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டே என் ஈருளியைச் செலுத்திக்கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய வளைவில் திடீரென சைகை ஏதும் செய்யாமல் திரும்பி விட்டேன். பின்னிருக்கையில் புதுமனைவியை இருத்தி வந்த அடியேனின் வழித்தோன்றல் நிலை தடுமாறி விழப்போய், சமாளித்து ‘லூஸாடா நீ...!’ என்றான் ஆத்திரத்துடன்.

’எப்படித் தெரியும்’ என்றேன் ஆச்சர்யத்துடன். கொல்லென சிரித்து வைத்தாள் அவன் இல்லாள். இவள் வீட்டை விசாரிக்க வழியிலேன் பன்னிருகை கோலப்பா...!

***

ஜெயமோகனுடன் காடு புகுவதாகத் திட்டமிட்டிருந்த தினத்தில் கடும் காய்ச்சல் கண்டேன். நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை. இரண்டு நாட்களாய் திறக்காத அறைக்குள் அடைபட்டுக் கிடந்தேன். சுடு சோற்றிற்கும் சுள்ளென்ற ரசத்திற்கும் மனம் ஏங்கியது. அண்ணாச்சியிடம் சொன்னால் மிளகு ரசமும், கானத் துவையலும் கிடைக்கும். விஜி எனில் பருப்பு ரசம். அண்ணியிடம் கேட்டால் தக்காளி ரசத்தோடு தேடி வந்திருப்பார்கள். ஆனால், செல்போன் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. அறையின் ஏதோவொரு மூலையில் அவ்வப்போது ஒலித்து அடங்கியது. தேடி எடுக்கத் திராணி இல்லை.

இரண்டு நாட்களாய் ஆளைக் காணோம். அலுவலகத்திலும் இல்லை. போனையும் எடுக்கவில்லையென ஏதோ மனக்கணக்குப் போட்டு வீட்டுக்கே தேடி வந்த சந்தியாவின் கார் டிரைவர் கொண்டு வைத்த ஹாட் பாக்ஸில் முல்லைப் பூ சாதமும், திப்பிலி ரசமும் இருந்தது. அன்பெனும் தெய்வம்தான் இவளென்பதுணர்ந்தேன்.

***

மொளீ வளர கல்லைக் கட்டித் தொங்கவிடும் மாநாட்டுப் பந்தலுக்கு எதிரே பபாஸியின் புத்தகக் கண்காட்சி அரவம் இல்லாமல் நடந்து முடிந்தது. மாலை வேளையில் தமிழினி ஸ்டாலில் வசந்தகுமார், நாஞ்சில் நாடன், பாதசாரி, சு.வேணுகோபால், கோணங்கள் ஆனந்த், கால.சுப்ரமண்யம், செல்வ.புவியரசன் என கச்சேரி களை கட்டும். சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கலைவோம்.

முடிந்து மூட்டை கட்டுகிற நாளில் எனக்கு முப்பது, நாற்பது புத்தகங்களைப் பரிசளித்தார். நான் நல்லெழுத்துக்காரனாய் வரவேண்டுமென்பதில் என்னைக்காட்டிலும் முனைப்பு மிக்கவர்.

***

மனதில் மின்னலென உதிக்கும் ஒற்றை வாக்கியத்தை ஊதிப்பெரிதாக்கி பெரும் வாழ்வைப் படைக்கிறவர்கள். பெரும் வாழ்வையே ஒரு வாக்கியத்திற்குள் அடைக்க முடியுமா என முயற்சிப்பவர்கள். இருதரப்பின் இருப்பும் தேவையாகத்தான் இருக்கிறது. ஜெயன் ஒரு வகை. காசி ஒரு வகை. என் மனக்காளான் தனி வகை.

Sunday, June 6, 2010

செல்போன் மேலாண்மை

உலகிலேயே செல்போனை மகா கீழ்த்தரமாகப் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தாம் என்பது தொழிலதிப நண்பர் ஒருவரின் அசைக்க முடியாத வருத்தம். மறுத்துப் பேச வழியில்லை. பல மரம் கண்ட தச்சன். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில்
அவரது அலுவலக ஊழியர்களிடத்தில் ‘செல்போன் மேலாண்மை’ பற்றி பேசினேன். நமக்குத் தெரிந்ததையே மேடையேறி ஒருவன் பேசினால் விழி விரிய கேட்பார்கள் ஜனங்கள். நீங்களும் கேளுங்கள் 

1) நட்பின் மேன்மை, காதலின் புனிதம், அன்னையின் அன்பு மாதிரியான பார்வர்டு சமாச்சாரங்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பாதீர்கள். இவை கிட்டத்தட்ட ஸ்பாம் மெஸெஜுகள்தாம்.

2) வெல்கம் ட்யூன் நாகரீகமாக இருக்கட்டும். ஒரு எம்.என்.சியின் வைஸ் பிரஸிடெண்டை அழைத்தால் ‘ச்சீ..ச்சீய் சிச்சீய் என்ன பழக்கம் இது...” என்று வைத்திருக்கிறார். நம் கவுரவத்திற்கு அழகல்ல.

3) ரிங்டோன் உங்களை மட்டும் எழுப்பட்டும். சிலரது ரிங்டோன் சத்தத்திற்கு மொத்த உலகே திரும்பிப் பார்க்கும்.

4) போன் புக்கில் சக ஊழியர்களின் உண்மையான பெயரை சேவ் செய்யுங்கள். ஒருவர் தன் மேலாளர் பெயரை ‘ராஜபாளையம்’ என்றும் மனைவி பெயரை ‘விதி’ என்றும் வைத்திருந்து இருவரிடமும் சிக்கினார். பட்டப்பெயர்கள் உங்களைத்தான் பறக்க விடும்.

5) சிலர் தங்களது பாஸ் அழைத்தால் ‘நாய் குரைப்பது’ போன்ற ரிங்டோனை வைத்திருப்பர். இது நாகரீகமல்ல.

6) மெஸெஜ் ஆப்ஷனில் அட் சிக்னேச்சரில் உங்களது பெயரையும் நிறுவனத்தின் பெயரையும் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் உங்களது பெயரை டைப் செய்ய வேண்டி இராது. போன் புக்கில் உங்களது எண் இல்லாதவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அவர் புரிந்து கொள்வார்.

7) உங்கள் டீமில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என தனித்தனி குரூப் உருவாக்கிக்கொண்டால் குறுஞ்செய்திகள் அனுப்ப வசதியாக இருக்கும். ஒவ்வொரு எண்களையும் தேடும் நேரம் மிச்சம்.

8) பிறிதொரு நபர் உங்கள் அருகே இருக்கையில் ஒருபோதும் லவுட் ஸ்பீக்கரை உபயோகிக்காதீர்கள். உங்களது ஹானஸ்டி உடனே கேள்விக்குள்ளாக்கப்படும். தேவையற்ற பிரச்சனைகளும் உருவாகலாம்.

9) எஸ்ஸெம்மெஸ் மொழியின் ஷார்ட் பார்ம்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். சிலர் ரெஸ்பெக்டட் சார், சப்மிட்டட் ப்ளீஸ் என்றெல்லாம் பார்மலாக மெஸெஜூகிறார்கள்.

10) ஸ்க்ரீன் சேவர் படமாக என்ன இருக்கலாம் என்பதை விட என்ன இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். நடிகைகள், சாமியார்கள் எல்லாம் உங்களைப் பற்றிய முன் தீர்மானம் உருவாக்குவதாக இருக்க வேண்டாம்.

11) அலுவலக நேரம் தாண்டி அழைக்க வேண்டியிருப்பின் உயரதிகாரியோ அல்லது உங்களுக்கு கீழே இருப்பவர்களோ ‘நான் உங்களை அழைக்கலாமா?!’ என ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அழைப்பது உங்களது மரியாதையைக் கூட்டும்.

12) திடீர் விடுப்பு, விபத்து, மரணச் செய்தி போன்ற செய்திகளை ஒருபோதும் குறுஞ்செய்தியில் தெரியப்படுத்தாதீர்கள். அழைத்துச் சொல்லுங்கள்.

13) எந்த ஒரு எண்களை அழைப்பதற்கு முன்னும் யாரிடம் பேசப்போகிறோம், என்ன பேசப் போகிறோம், இந்த அழைப்பின் புரொடக்டிவிட்டி என்ன என்பதை ஒரு நிமிடம் யோசித்து விட்டுப் பேசுங்கள்.

14) அலுவலகத்தில் இருக்கும் போது ஹெட் போனோடு வளைய வராதீர்கள். நீங்கள் இருப்பது அலுவலகத்தில் சுற்றுலா தளத்தில் அல்ல.

15) இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேசுகிற விஷயத்தில் நிச்சயம் அரட்டை கலந்திருக்கிறது. ஆண்டவனே அழைத்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வேண்டாமே.

16) உங்களுக்கு வரும் அழைப்புகளை தவிர்க்க முடியாத தேவையின்றி ரிக்கார்டு செய்யாதீர்கள்.

17) அடுத்தவர் செல்போனை ஒருபோதும் நோண்டாதீர்கள். நவீன யுகத்தில் செல்போன் ஒருவரின் டைரியைப் போல. அடுத்தவர் அந்தரங்கம் நமக்கெதற்கு?

18) ஒருவரறியாமல் கான்பரன்ஸ் அழைப்பில் அழைத்துப் பேசுவது நாகரீகமல்ல. பிற்காலத்தில் பெருங்கொண்ட பஞ்சாயத்துக்களை ஏற்படுத்தும்.

19) சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் உயரதிகாரிகளை அழைத்துத் தொந்தரவு செய்யாதீர். குறுஞ்செய்தி வசதியை எஃபெக்டிவாகப் பயன்படுத்துங்கள்.

20) அவுட் கோயிங் போறதில்லை, லோ பேட்டரி ஸ்விட்ச்டு ஆஃப் போன்ற நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். செயல்திறனைக் குறைக்கும் வைரஸ்கள் இவை.

21) வீட்டிலிருக்கும்போது அழைப்பு வந்தால் தொலைக்காட்சி, ரேடியோ ஒலிகளைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்.

22) வேறு டிப்பார்ட்மெண்டைச் சார்ந்தவர்கள், வேறு கிளைகளைச் சார்ந்தவர்களைக் காரணங்களின்றி அழைக்காதீர்கள். அக்கப்போர் வைக்கப்போரில் தீ வைப்பது மாதிரி.

23) வந்திருக்கும் குறுஞ்செய்தி அலுவல் சார்ந்தது எனில் கட்டாயம் ரெஸ்பாண்ட் செய்யுங்கள். ஓகே என்றாவது ரிப்ளை முக்கியம்.

24) அலுவலகம் செல்போன் பில்லைத் தருவதாக இருந்தால் ஒரு போதும் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதில்லை எனும் சுயக்கட்டுப்பாட்டில் இருங்கள். ப்ளூ டூத் பரிமாற்றங்கள், ஸ்கேண்டல் வீடியோக்களைப் பரப்புதல் போன்றவை உலகெங்கிலுமிருக்கிற முதலாளிகள் வெறுக்கப்படுகிறது.

25) பெண் ஊழியர்களிடத்தில் பேசுகையில் பேச்சில் கூடுதல் மரியாதையும், வார்த்தைகளில் கூடுதல் கவனமும் இருக்கட்டும்.

Friday, May 28, 2010

மனக்காளான்

மீட்டிங்கில் போன வருஷத்து புரொடக்டிவிட்டி என்ன என்று கேட்டார்கள். பழம்பெருமை வேண்டாம் சார். எதிர்காலத்தைப் பற்றி யோசிப்போம் என்றேன்.

'விச் காஃபி யூ வாண்ட் டூ ஹேவ்?’ என்ற காஃபி டே நங்கையிடம் ‘சுக்கு காஃபி’ என்றேன். முறைத்துச் சிரித்தாள்.

யானையைக் கட்டியும் யூனிகார்னை ஓட்டியும் சோறு போட முடியாது!

சிந்தனையாளர்களை ஏன் இந்த உலகம் சோம்பேறிகள் என்கிறது?!

ரங்கநாதன் தெருவைப் பற்றிய ‘அங்காடித் தெரு’ பாடலில் சில வரிகள் மு.சுயம்புலிங்கத்தினுடையவை.

கட்டிய கணவனை, பெற்ற மகனை, ஆசைப் பேரனை களப்பலி கொடுத்த மறத்திக்கு இடமில்லையெனில் இத்தேசம் ஒழிதல் நன்றாம்!

கொடியது கேட்கின் வரிவடிவேலா...ஞாயிறில் வேலை :(

அப்படியே றெக்கை கட்டி பறக்குற மாதிரி இருக்கு... கேப்டன் டிவி ஆரம்பிச்சுட்டாங்க..

மனிதக் கூட்டங்களால் நிரம்பி வழியும் பூமியில் தனிமை ஒரு சாக்கு! உடைக்கத் துணிந்தால் பிரயத்தனங்கள் தேவையில்லை.

அப்பா அனுப்பிய கூரியரில் மஸ்கோத் அல்வாவும், சம்பா அவலும், அன்பும் இருந்தன.

பரிசல் உயிரோடுதான் இருக்கிறார் என்று ட்வீட்டச் சொல்கிறார். மதிய சாப்பாடு அவரோடுதான். சிறுகதைகள் பற்றி பேசவில்லை :)

மேலவை உறுப்பினராகப் போறேன்... எழுத்தாளர் கோட்டாவில்...

கமாண்டோக்களுக்கானப் பயிற்சிகளில் மேரி பிஸ்கட் சாப்பிடுவதையும் சேர்க்க வேண்டும்.

நான் பழுத்திருந்த காலங்களிலும் வராத, பட்டபின்னும் வராத மனம் கொத்தி நீ! (லாசராதான் இல்லையே...)

இக்கட்டு தருணங்களில் திக்கெட்டும் அடிப்பவனே சச்சின்! ஆட்டம் காக்க சச்சின் உண்டு. வாட்டம் வேண்டாம்.

ஸ்வீட்டி ஒண்ணு கொடுங்க என்றேன். கொல்லென சிரித்தது பேருந்து எனை கொன்றவள் நீயென தெரியாமல்...

காதல் காமத்தின் கண்றாவிப்பெயர்!

வரும்வரை துணி துவைத்துக்கொண்டிரு... வந்தவுடன் உன்னைத் துவைக்கிறேன்.

நாஞ்சில் நாடன் கவிதைகளுக்கு யாரெனும் பொழிப்புரை எழுத மாட்டார்களா?!

நான் புத்தகம் எழுதினால் அதை என் பால்யகால சினேகிதன் கருணாநிதிக்கு சமர்ப்பணம் செய்வேன். கருவாட்டு மண்டி வைத்திருக்கிறான்.

பாதசாரியின் ‘நல்லியல்புகள்’தானே பேயோனிடத்தில் காணக்கிடைக்கின்றன...

விமர்சனங்கள் படித்துவிட்டு சினிமாவிற்குச் செல்வது - ஏற்கனவே புணர்ந்த பெண்ணுடனான முதலிரவு போன்றது.

வழக்கமாக ஆன்மாவைக் கரைத்துத்தான் எழுதுவேன். கரைக்க தோசை மாவைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லாததால் எழுதவில்லை.

குடிக்காமல் எடுத்த வாந்தி கவிதை ஆகிறது!

இளையராஜா ஒரு சிறந்த மனிதனா?! எனும் விவாதம் துவங்கியுள்ளது. எதிர்வீட்டுக்கார ஆடிட்டரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதி உயிர்மைக்கு அனுப்பனும்.

ட்வீட்டுகளை முதன்முதலில் தொகுத்தவர் கோபிகிருஷ்ணன். நூலின் பெயர் ‘டேபிள் டென்னிஸ்!’

செய்யதும், சொக்கலாலும் ஜாய்ண்ட் வெஞ்சராக பஞ்சு வைத்த பீடிகளை ஏன் உருவாக்கக் கூடாது?!

சகல பாவங்களையும் கட்டணமின்றி மன்னிக்கவும் கடவுளே காதலி!

யோனிகள் பசித்திருக்கும் நாட்டில் மழை பொய்க்கும்.

விஜயகாந்த் ஆக முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். கோபக்கார இளைஞன் வேடம் சுலபமாக இருக்கிறது...

இஞ்சி மொரப்பாவை எறும்புகள் மொய்ப்பதில்லை...!

மேலாளர் வீட்டு விருந்தில் கரப்பானே கிடந்தாலும் "கண்ணம்மா கம்னு கிட...!"

மாமனாரின் இன்பவெறியை க்ளேஸில் அடித்தால் நவீனம். நியூஸ் பிரிண்டில் அடித்தால் செக்ஸ் புக்!

நீ மழை கழுவி வைத்த இலை... நான் இலையேறும் கட்டெறும்பு...

அறமெந்தும் கலைஞன் சமூகத்தின் பிள்ளை!

பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் நரகாசுரன் மீதான வெஞ்சினம் மறையவில்லை. விழாக்கோலம் பூண்டிருக்கிறது வீதிகள்...

அடித்த கதையை எழுதினால் ஹீரோயிசம் என்கிறார்கள்... அடிபட்ட கதையை எழுதினால் சுயகழிவிரக்கம் என்கிறார்கள்...

வாஸ்து பார்த்து வாழைக்குலை மாட்டு... உடனே ஏறும் எட்டணா ரேட்டு...

அண்ணாமலை, மருதமலை, மலை மலை, திருவண்ணாமலை, அழகர் மலை என மலைப் படங்கள் எல்லாம் ஏன் மொக்கையாக இருக்கிறது?!

விளம்பர இடைவேளை மாதிரி பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சண்டையிடும் காதலியை என்ன செய்யலாம்?

சேர்த்துக்கொள்வது உசிதம்.

வீடு நீங்கும் ஒவ்வொரு முறையும் ‘பாடி ஸ்பிரே’ அடித்துக்கொள்கிறேன். எனக்கு சமூகப் பிரக்ஞை இல்லை என்று எப்படி சொல்லப் போகும்?!

உன் அழகைப் பாட மொழிக்கு திராணி இல்லை. எனக்கும்.

மேலாளர்களே, வேலைக்காரர்களிடத்தில் அன்பாகவும், மூளைக்காரர்களிடத்தில் எச்சரிக்கையாகவும் இருப்பீராக! ஆமென்!

வக்கற்றவனுக்கு வாயே துணை!

நினைவில் கார் உள்ள பெண்ணை எளிதில் வீழ்த்த முடியாது!

ஈக்கி குத்தி செத்தவனும் இருக்கான். ஈட்டி குத்தி பொழைச்சவனும் இருக்கான். குத்துக்கும் சாவுக்கும் சம்பந்தம் இல்லை.

இனிய இரவாகட்டும் விடியல் நமதாகட்டும். நாளைக்காவது தினமணி நனையாமல் வரட்டும். ஜெய்ஹோ!

இணையத்தில் மேய்ந்தது போதும் இணையோடு மேயேன் என்கிறாய். உன் மோனையில் மோகம் கொள்கிறேன்.

ட்வீட்டர் மூலமாக அழகிகளின் சகவாசம் கிடைக்க வாய்ப்பே இல்லை!

நா.கதிர்வேலன் பேட்டிகளில் மட்டும் மொக்கை இயக்குனர்கள் கூட மொரட்டு எளக்கியவாதியா மாறி பேசறாய்ங்க

அசலான சர்க்குலேஷன் ஆசாமி பெட் காஃபி குடித்திருக்கவே மாட்டான். நான் குடித்ததில்லை.

எளிமையாக எழுதுகிற எழுத்தாளன் மீது இளக்காரம் எனும் மனக்காளான் முளைக்கிறது.

சிதிலத்தின் அதீதம் அழகியல்!

இலக்கியத்தின் உச்சம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். துவக்கம் என்னவோ ‘போலச் செய்தல்’தான்!

Friday, May 21, 2010

ஒரு விசாரணை

சொன்னதைச் செய்யாவிட்டால், காத்திருக்க வைத்தால் – ‘யோவ்…நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா?’ என்கிறாள் கேண்டி. ‘யோவ்’-ல் காதல் பாதி; கடுப்பு மீதி;

‘நீ ஏவே என்றழைக்கும் ஒவ்வொரு கணமும் உழுத நிலத்தில் அம்மணமாய்ப் புரண்டெழுந்த உணர்வெனக்கு’ என எப்போதோ படித்த கவிதை நினைவில் ஆடுகிறது. இவ்வளவு அசலான கவிதையை சுயம்புலிங்கமோ அல்லது மகுடேஸ்வரனோதான் எழுதியிருக்க முடியும்.

***

துடியலூர் துவங்கி மேட்டுப்பாளையம் வரையிலான சாலையின் இருமங்கிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை விரிவாக்கத்தின் பெயரால் வீழ்த்துவதுதான் அடுத்த அஜெண்டா. மரம் வெட்டும் ஏலம் எடுக்க வந்தவர்கள் ஒன்றல்ல..நூறல்ல...மூவாயிரம் பேர்கள்! இத்தனைக் கூட்டத்தில் ஏலம் நடத்த முடியாது என ஒத்தி வைத்து விட்டார்கள்.

தென் மாவட்டங்களில் சாராயநதி பிரவாகமெடுத்தபோது ஜாங்கிட் அவதரித்தார். சாராய ஊறல்களை அழித்ததோடு காய்ச்சிப் பிழைப்போர் மறுவாழ்வுக்கும் வகை செய்தார். அதைப்போலவே உடனடியாக மரம் வெட்டிப் பிழைப்போர் மறுவாழ்வு மையம் துவங்கியாக வேண்டும் போல இருக்கிறது.

பழைய ஜன்னல், கதவு, நிலைகளை விற்கும் கடைகள் ஊருக்கு நூறு இருக்கிறது. கொள்வாரில்லை. வீடு கட்டுகிறவர்கள் பத்து வட்டிக்கு வாங்கினாலும் புதுமரம் வெட்டித்தான் கட்டித் தொலைக்கிறார்கள். ஒரு பழைய கதவை வாங்கினீர் என்றால் ஒரு பெரு மரத்தின் மரணத்தை தள்ளிவைத்தீர் என்று பொருளய்யா...!

மர விஷயத்தில் என்னை விடவும் வீணாய்ப்போன ஆர்வலர் ஆர்.எஸ். நாராயணன் சொல்வனத்தில் அற்புதமாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

***

சென்னையில் எனக்கு பாஸ்கர் அண்ணாவைத் தவிர வேறு போக்கிடம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது. ஒருவாரம் சென்னையில்தான் இருப்பேன். உங்களுக்குச் சவுகர்யப்படும் நேரத்தில், சவுகர்யப்படும் இடத்தில் சந்திக்கலாம் என்று பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். தாமிரா மட்டும் ‘சந்திக்க முடியாது; பிஸியாக இருக்கிறேன்’ என்று பதில் அனுப்பினார். ’அண்ணே’, ‘சகா’, ‘தம்பீ’, ‘தல’, ‘பாஸ்’ போன்ற நுனிநாக்குச் சக்கரையை உண்மையென்று நம்பினது என் தப்புத்தானே.

‘நீ நட்பில் பெட்ரோல் ஊற்றி வளர்க்கிறாய்’ என்பது கேண்டியின் குற்றச்சாட்டு. ‘முறைவாசல்’ சரியில்லை என்கிறது மனதின் குரல்!

***

பாஸ் அண்ணா புண்ணியத்தில் பரிக்ஷாவின் ‘ஒரு விசாரணை’ நாடகத்தைப் பார்க்க முடிந்தது. நவீன நாடகங்களை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. கதாபாத்திரங்களின் காலடியில் சம்மனமிட்டு நாடகம் பார்ப்பது புதுமையான அனுபவம்.

1945ல் ஜே.பி. பிரீஸ்ட்லீ எழுதிய ‘அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ்’ நாடகத்திற்கு ஞாநி தமிழ்வடிவம் கொடுத்திருக்கிறார். எழுதப்பட்டு 65 ஆண்டுகளாகியும் நாடகத்தின் பொலிவு கெடாமல் இருப்பது சமூகத்தின் குற்றம். மேல்தட்டு வர்க்கத்தின் மனசாட்சியைக் கேள்விக்குட்படுத்தும் பிரீஸ்ட்லீயின் கேள்விகள் இன்றளவும் தீர்க்கப்படாமல்தான் இருக்கின்றன.

சிறுகதை ஒன்றினை லயித்து வாசிப்பது போலவும், நாடகத்தின் ஒரு பாத்திரமாகவே இருப்பது போலவும் தோன்றியது. அனைவரும் பிரமாதப்படுத்தி இருந்தனர். மொழிபெயர்ப்பு வாடை அடிப்பது பிரக்ஞையோடு செய்த காரியம் எனப்படுகிறது.

நாயகி ஜெயந்தியின் கூர்நாசியும், அதில் மின்னும் மூக்குத்தியும், ஐம்பது தடவைக்கும் மேல் அவர் சொன்ன ‘நெனைச்சிப் பாக்கவே ரொம்பக் கேவலமா இருக்குப்பா’ வசனமும் இன்னும் நினைவில் வாழ்கிறது.

Tuesday, May 18, 2010

பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாக...

சேர்ந்தாற் போல இரண்டு வரிகள் எழுதத் தெரிந்துவிட்டால் உடனே புத்தகம் போட்டு விடுகிற தீவிர நோய் தமிழ் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. புது சிம்கார்டுக்குப் படிவம் நிரப்ப ஆகும் நேரத்தை விட மிகக்குறைவான நேரத்தில் முழுப்புத்தகத்தையும் எழுதி சாயங்காலத்திற்குள் அச்சடித்து இருட்டுவதற்குள் ’இலக்கிய சாம்ராஜ்’ என அறிவித்து விடுகிறார்கள்.

அப்படி வெளியாகிற புத்தகங்களை ஆசிரியரையும், பிழை திருத்துபவரையும் தவிர வேறு யாரும் படிப்பதில்லை என இன்ஸ்டண்ட் எழுத்தாளர்களில் பலரும் மனச்சோர்வில் இருப்பதாகத் தெரிய வருகிறது. ‘நமக்கு நாமே மாமே’ திட்டத்தின்படி செயல்பட்டால் சுமார் பத்தாயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்யலாம்.1) ’ஒரு லட்சம் பிரதிகள் விற்பனைச் சாதனையை நோக்கி...’ எனும் முழக்கத்துடன் மல்டி கலர் போஸ்டர் அடித்து தமிழகம் முழுவதும் உள்ள புத்தக விற்பனையகங்களில் ராவோடு ராவாக ரகசியமாக ஒட்டி வைக்கலாம். இவ்வளவு பிரதிகள் விற்ற ஒரு புத்தகத்தை எப்படி வாங்காமல் போனோம் என அவனவன் குழம்பி உடனே ஒரு பிரதி வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்பான்.

2) புத்தகம் பற்றிய விசாரணைகளின் வீரியம் தாங்காமல் வியாபாரிகள் நம்மைத் தொடர்பு கொண்டு ‘100 புத்தகங்கள் அனுப்பி வையுங்கள். நிறைய டிமாண்ட் இருக்குது’ என்பார்கள். ‘பப்பரக்கா’ என உடனே அனுப்பி வைத்து விடக்கூடாது. “சாரி ஸார். நோ ஸ்டாக்! சிக்ஸ்த் எடிஸன் பிரிண்ட்ல இருக்குது. ஒன் வீக் ஆகும்”னு லேசா நூல் விட்டு அனுப்பினாத்தான் உடனே பேமண்ட்!

3) “கொன்னுட்டாம்யா... இதே மாதிரி ஒரு கதையாவது சாருநிவேதிதா எழுதி இருக்கானான்னு’’ யாரையாவது விட்டு பதிவு போடச்சொல்லனும். மிஸ்டர். உன்மத்தம் மேடைகளில் புத்தகங்களையும், பிளாக்கில் ஆசிரியனையும் கிழிப்பார். சர சரன்னு சரவல் பத்திக்கும். நெகட்டிவ் மார்க்கட்டிங்!

4) “ஐம்பதாண்டு கால நவீன இலக்கிய வரலாற்றின் ஓரே ஈவு ‘லவ் நிலாக்கள்’தான். மத்ததெல்லாம் அடாசு!” என முறையே எஸ்ரா, ஜெமோ துவங்கி அயன்புரம் சத்தியநாராயணன் வரைக்கும் மிட்நைட் மெஸெஜ் அடிச்சா விடியறதுக்குள்ள ஜெ. நானுறு பக்கங்கள், எஸ்ரா நாற்பது பக்கங்கள்னு இணையத்துலேயே நாறடிச்சுருப்பாங்க... காம்பவுண்ட் நெகட்டிவ் மார்க்கெட்டிங்!


5) ஏதாவது இலக்கிய அமைப்பிலோ, வாசகர் வட்டத்திலோ அடித்துப் பிடித்து பதவிகள் வாங்கிவிட வேண்டும். உறுப்பினராக நீடிக்க வேண்டுமானால் ஆளுக்கு பத்து புத்தகங்கள் வாங்கி உறவினர்களுக்குப் பரிசளிக்கும்படி தீர்மானம் கொண்டு வரலாம். அப்புறம் குடும்பத்தில் அவர் உறுப்பினராக இருப்பாரா என்பது அவரது சொந்தப் பிரச்சனை!


6) விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு விமர்சனத்திற்குப் புத்தகம் அனுப்பும்போது, ஃப்ரம் அட்ரஸில் முகவரி எழுதாமல் ரத்தச் சிவப்பில் மண்டை ஓடு படம் மட்டும் வரைந்து அனுப்பினால் திகிலாகி ஏதேனும் க்ளூ கிடைக்கிறதா என முழுப்புத்தகத்தையும் படித்து விடுவார்கள். அப்புறம் படித்து விட்ட காரணத்தினாலேயே வரவேற்பறை பகுதியில் ‘கவனிக்கத் தகுந்த’ படைப்பு என்று பப்ளிஷ் ஆகலாம். உங்கள் நேரம் சனியன் சடை பின்னும் நேரமாக இருந்தால் கமிஷனர் ராஜேந்திரனே கவரைப் பிரித்து ’தக்க’ பின்னூட்டமிடுவார்.

7) “அகமனதின் அணத்தல்களை அனாயசமாகப் பின்னிப்பிணைந்து புனைவுலகின் உச்சத்தை நோக்கி முன்நகரும் இந்தப் பிரதி அந்தரங்கமான ஆனால் தீவிர நிராயுதத் தன்மையான கேள்விகளை முன் வைக்கிறது” என ஒரு மார்க்கமான மொழியில் ரிவிவ்யூ எழுதி ஏதேனும் சிற்றிதழ்களில் இடம்பெற வைத்தால் இலக்கிய அந்தஸ்து வந்துவிடும். அடுத்த இதழிலே ’எதிர்வினைகள்’ தூள் பறக்கும். உங்களுக்கான ஒளிவட்டமும், புதிய கோஷ்டியும் உருவாகி விடும்.


8) உங்கள் இலக்கிய எதிரிகளின் பட்டியலை முகவரியோடு தயார் செய்துகொள்ளுங்கள். அனைவருக்கும் வார நாட்களாகப் பார்த்து வி.பி.பியில் புத்தகங்களை அனுப்பி வையுங்கள். உங்கள் எதிரி வேலைக்குப் போயிருக்கும் சமயமாக தபால்காரர் வருவார். “நம்ம வீட்டுக்கோட்டிதான் ஆர்டர் கொடுத்திருக்கும்” என்ற நம்பிக்கையில் அவர்தம் மனைவியரும் தொகையை செலுத்தி பார்சல்களை வாங்கிக் கொள்வர்.

9) முதலில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தி இருபது புத்தகங்கள் வாங்க வேண்டும். பிறகு அவரே இருபது பேர்களைச் சேர்த்து விட்டால் சிங்கிள் ஸ்டார். அவருக்கு டேபிள் பேன். இருநூறு பேர்களைச் சேர்த்து விட்டாரெனில் சுப்ரீம் ஸ்டார். அவருக்கு ஒரு சீலிங் பேன். இரண்டாயிரம் பேர்களைச் சேர்த்து விட்டால் சூப்பர் ஸ்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் வைக்கும் ராட்சஸ புரொபல்லர் ஃபேன்! மல்டி லெவல் மார்க்கெட்டிங்!

10) புத்தகம் வெளியான அடுத்த நாளிலிருந்தே “வண்ணதாசன் ஒரு அழுகுணி!; சுஜாதா ஒரு புழுகுணி!; க.நா.சு ஒரு காப்பிரைட்டர்!; ஜெயகாந்தனை நிராகரிக்கிறேன்”னு சிற்றிதழ்கள், பிளாக், கை துடைக்கிற டிஸ்யூ பேப்பர் எது கிடைச்சாலும் ‘டிஸ்கார்ட் ஸ்டேட்மெண்ட்ஸா எழுதிக்கிட்டே இருக்கனும். இந்த மசுராண்டி அப்படி என்னதான் எழுதி கிழிச்சிருக்கான்னு வாசகன் உங்க புத்தகத்தை தேட ஆரம்பிப்பான்.

11) புத்தகத்திற்கான விளம்பரத்தை மாஜிக் பாட், பாடி பில்டர்ஸ், டிரினிட்டி மிரர், ந்ருசிம்ஹப்ரியா, மூலிகை மணின்னு சம்பந்தா சம்பந்தமில்லாத பத்திரிகைகளுக்கு கொடுங்கள். என்னமாதிரியான புத்தகம் இதுன்னு யாரும் ஒரு முடிவுக்கே வந்துடக்கூடாது.

12) “என் பால்ய கால சினேகிதன் கலைஞர் கருணாநிதிக்கு”ன்னு புத்தகத்தை சமர்ப்பணம் பண்ணிடுங்க. லைபரரி ஆர்டர் அலையாமலே வரும்.

13) தொலைதூர ரயில் பயணங்களில் யார்கிட்டயும் பேசாமல் நகரும் மரங்களை வெறிச்சு பார்த்துக்கிட்டே ஏக்கப் பார்வை ஏகாம்பரங்கள் டிராவல் பண்ணிக்கிட்டு இருப்பானுங்க. மெள்ள அப்ரோச் பண்ணி “என் வாழ்க்கையையே மாத்தின புக்கு சார் இதுன்னு… ” டைரக்ட் மார்க்கட்டிங்ல இறங்கிறனும்.

இன்னும் அட்டகாசமான ஏழு யோசனைகள் இருக்கின்றன. அவற்றைப் பெற ரூ.2,000/-க்கான வரைவோலையுடன் நேரில் வரவும்.

Tuesday, May 11, 2010

பெற்றியார்ப் பேணிக் கொளல்!


தீவிரமான வாசிப்பு, தொடர்ந்த உரையாடல்கள் இரண்டின் மூலமும் ‘இலக்கிய வாசகனெனும்’ அந்தஸ்தினை அடையத் துடிக்கும் அரங்கசாமி, அருண், சந்திரகுமார் இவர்களோடு நானும் சேக்காளி. நாங்கள் நால்வரும் நேர்கோட்டில் சந்திப்பது ஜெயமோகன் எனும் ஒற்றைப் புள்ளியில். முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது.

அட்டை இல்லாமல் புத்தகங்களும், சட்டை இல்லாமல் மனிதர்களும், பெயரில்லாமல் அமைப்புகளும் இருக்கக் கூடாது. ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ உருவானது. பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஓர் இலக்கியப் பிரதியை முன்னிறுத்தி இலக்கிய அமைப்பு உருவாவது அனேகமாக இதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார் சுகுமாரன்.

தகுதியுள்ள ஆளுமைகள் உரிய முறையில் மரியாதை செய்யப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் ஜெயமோகன். வேதசகாயகுமார், நாஞ்சில் நாடன், நீல. பத்மநாபன், அ. கா. பெருமாள் போன்ற ஆளுமைகளுக்குத் தன் சொந்தச் செலவில் விழா எடுத்ததை தமிழுலகம் அறியும். அவ்விழாக்களைத் தொடர்வதும், கொங்கு மண்டலத்தில் இலக்கியச் செயல்பாடுகளை அதிகரிப்பதும் மட்டுமே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பிரதான நோக்கங்கள். எங்களது செயல்பாடுகள் அனைத்திலும் இலக்கிய மூப்பர் மரபின் மைந்தன் முத்தையா துணை நிற்கிறார்.

***
கலாப்ரியாவிற்கு இது அறுபதாவது ஆண்டு. நாற்பதாண்டு காலமாகக் கனலும் கவித்துவத்தோடும் உயிர்ப்போடும் இயங்கி வரும் இந்தத் தாமிரபரணிக் கலைஞனைக் கொண்டாடுவது எங்களது கடமையெனப்பட்டது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் இரண்டாவது நிகழ்வாக ‘கலாப்ரியா படைப்புக் களம்’ உருப்பெற்றது.

தமிழின் மூத்த படைப்பாளுமைகளான நாஞ்சில் நாடன், வண்ணதாசன், சுகுமாரன், ஜெயமோகன் ஆகியோருடன் மரபின் வழி நிற்கின்ற முத்தையாவும் இளம்தலைமுறைப் படைப்பாளிகளான அ. வெண்ணிலாவும், வா. மணிகண்டனும், கருத்துரை வழங்க, கலாப்ரியாவின் ஏற்புரையோடு இனிதே நடைபெற்றது விழா.

***

திருப்பூரிலிருந்து தன் பரிவாரங்களோடு வந்திருந்த வெயிலான், அண்ணாச்சி, சஞ்ஜெய், தமிழ்பயணி சிவா, ஈரோடு நண்பர்கள், உடுமலைப்பேட்டை நண்பர்கள், தியாகு புக் செண்டர் நண்பர்கள், இவர்களோடு உள்ளூர் இலக்கியப் பிரமுகர்களான பாலை நிலவன், அவை நாயகம், மயூரா ரத்தினசாமி, வா. ஸ்ரீனிவாசன், விஜயா வேலாயுதம், தென்பாண்டியன், இசைக்கவி ரமணன் மற்றும் பலர் வருகை தந்திருந்தது உற்சாகமும், உத்வேகமும் தந்தது.

***

உரையாடலின் ருசி அறிய ஜெயமோகனுடன் இருக்க வேண்டும். சனிக்கிழமை காலையிலிருந்து ஞாயிறு இரவு வரை அவரது முகத்தில் நிலை கொண்ட என் பார்வையை விலக்க முடியவில்லை. தனக்குத் தெரிந்ததையெல்லாம் வாசகனுக்குக் கடத்துவதில் ஜெ. அளவிற்கு வீச்சோடு இயங்குபவர் தமிழ்ச் சூழலில் இல்லை. அவ்வப்போது அவரே தயாரித்துத் தந்த தேனீரோடு இரண்டு நாட்களும் இலக்கிய இன்பம்.

***

சுகுமாரன் எனக்கு மிக முக்கியமான நபர். காதலிக்க, மேடையில் முழங்க, உலக இலக்கியங்களில் பரிச்சயமுள்ளவனாகக் காட்டிக்கொள்ள எனப் பலவிதங்களிலும் அவரது ‘கவிதையின் திசைகள்’ உதவி இருக்கிறது.

அகவலோசைக் கவிஞர்களிடத்தே தேங்கி இருந்த சமயத்தில் கையில் கிடைத்த அப்புத்தகம் நெரூடா, ஹியூஸ், ஆக்டேவியா பாஸ், செஸார், நசீம் ஹிக்மத், விஸ்லவா சிம்போர்ஸ்கா, குந்தர் க்ராஸ், பெஞ்சமின் ஸஃபானியா போன்ற மகாகவிகளைத் தரிசிக்க உதவியது. அப்புத்தகத்தின் வழியேதான் நவீன கவிதைகளுக்குள் நுழைந்தேன்.

சுகுமாரனின் கவிதைகளைக் காட்டிலும் பத்தி எழுத்துக்களில் புத்தி மயங்கினவன் நான். தொடர்ந்த கேள்விகளால் அவரை இம்சித்துக்கொண்டே இருந்தேன். அன்பான ஆசிரியனைப் போலச் சொல்லிக்கொடுத்தார்.

***
கலாப்ரியாவிற்கும் எனக்கும் கண்ணுக்குத் தெரியாத அன்பின் இழைகளால் ஆன உயிர்ப்பாலம் எப்போதும் இருக்கிறது. விழா ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தபோதுதான் காற்றில் வந்து சேர்ந்தது ‘சுஜாதா விருது’ தகவல். அவரது முதல் உரைநடை முயற்சியே விருதைத் தட்டி வந்திருப்பதில் வாசகனாகவும் அவரது நண்பனாகவும் எனக்குப் பெருமை. மனைவியோடு வந்திருந்து விழாவினைச் சிறப்பித்தார்.

***
வண்ணதாசனைப் பார்த்ததும் மனதிற்குள் அன்பும், கண்களில் நீரும் சுரப்பது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. ஆதுரமாக, இறுக்கமாக கரங்களைப் பற்றி அவர் பேசுகையில் மனதில் மகிழ்வலைகள். விகடனில் ‘அகம் புறம்’ துவங்கிய அற்புத தினத்தில்தான் முடியலத்துவமும் துவங்கியது. அவரது ‘பெருநகரைப் பழிக்காமல் இருக்கச் சில வழிகள்’ வெளிவரும் முன்னே சென்னையை விட்டு ஓடி வந்து விட்டேன். வாசித்திருந்தால் அங்கேயே இருந்திருப்பேன்

பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீட்டைப்போல மண்டபத்தை அழகாக்கியது அவரது இருப்பு.

***

நாஞ்சிலும் ஜெயனும் சேர்ந்திருக்கிற தருணம் அழகானது. இருவரும் அடிக்கிற லூட்டிகள் சிரித்து மாளாது. கணேஷ், வஸந்த் என அவர்களுக்குச் செல்லப் பெயர் வைத்திருக்கிறேன். வசந்த் எப்போதும் கும்பமுனிதான்.

குட்டியூண்டு சாம்பிள்:

கும்பமுனியோடு காபி குடிக்கச் சென்றோம். காபி தம்ளரில் கால் இஞ்சுக்கு கரையாத சீனி. ‘கட்டி கொடுத்துருங்க... வீட்டுக்கு எடுத்துட்டுப் போறேன்’

***

கலாப்ரியாவிற்கு விழா என்றதும் கைக்காசைப் போட்டு ஓடி வந்தார் வா. மணிகண்டன். மொத்தக் கவிதைகளையும் படித்து அழகானக் கட்டுரையோடு வந்திருந்தார். மேடைப் பதட்டங்களில் அவரது பேச்சு அவ்வளவாக எடுபடவில்லையெனினும் ஆளுமைகள் நிறைந்திருக்கிற அவையில் அவரது துணிச்சலான விமர்சனங்கள் ஆச்சர்யம் தந்தது.

***

வெண்ணிலாவின் பேச்சு அவரது கவிதைகளைப் போல மயிலிறகு. நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களோடு கலாப்ரியாவின் கவிதைத் தருணங்களை இணைத்துப் பேசினார்.

***

விழா மிகுந்த பார்மலாக நடந்ததும், கலாப்ரியாவின் துள்ளலான காதல் கவிதைகளையும், எள்ளலான கிண்டல் கவிதைகளையும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதிலும் எனக்குக் கொஞ்சம் அதிருப்தி. நான் விசாரித்த வரையில் எண்பதுகளில் கலாப்ரியாவைத் துணைக்கழைக்காமல் காதலித்தவர்களே இல்லை என்கிறார்கள். 2005ல் நான் கூட ‘என் நினைவெனும் எருமைக்கன்று உன் நிழலைத்தான் யாசிக்கிறது’ என்றுதான் பிட்டைப் போட்டேன்.

‘கலாப்ரியாவும் காதலும்’ என்றொரு கட்டுரையை நமக்கு நாமே மாமே திட்டப்படி எழுதி வருகிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.

புகைப்படம்:சஞ்ஜெய்

Tuesday, May 4, 2010

கலாப்ரியா படைப்புக்களம்


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாவது நிகழ்ச்சியாக ‘கலாப்ரியா படைப்புக்களம்’ கூடுகை நிகழ இருக்கிறது. தமிழின் தன்னிகரற்ற படைப்பாளிகள் கலந்துகொள்ளும் இந்நிகழ்விற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்.

Saturday, April 24, 2010

கோடாயுதம் சூழ் கோவை

ரத்த பந்துக்களைத் தவிர்த்த ஏனைய அனைத்தும் எனக்கு வாசிப்பின் மூலம் கிடைத்தவையே. புத்தகங்களின் வற்றாத கருணைக்கு விசுவாசியாக இல்லையெனில் செய்நன்றி கொன்றவனாவேன். வேறெந்த தினங்களையும் விட எனக்கு முக்கியமானது உலகப் புத்தக தினம். விஜயாவில் புத்தகம் வாங்கிய கையோடு நாஞ்சில் நாடனிடம் ஆசியும் பெற்றேன்.

பழந்தமிழ் இலக்கியங்களை விடாமல் ஆய்வதாகட்டும், நவீன தமிழிலக்கியத்தின் புதிய வரவுகளை உடனுக்குடன் படிப்பதாகட்டும், சிறுகதை, கட்டுரை எனத் தொடர்ந்த எழுத்தியக்கமாகட்டும் நாஞ்சிலாருக்கு வயசுக்கு மீறின உழைப்பு.

தொ. பரமசிவம் சங்க காலத்தில் தென்னை மரம் இருந்ததில்லை. சிலப்பதிகாரத்திற்கு முன்பு வரை மார் கச்சை அணியும் பழக்கம் பெண்களுக்கு இருந்ததில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறார். புறநானூற்றில் மட்டும் ஆறு இடங்களில் தென்னை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ‘கச்சை’ பற்றிய குறிப்பு இருக்கிறது என்று கும்பமுனி பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த ஒருவர் ‘தொ.பரமசிவம் ரொம்ப நல்ல ஆளாச்சே...சார்...’ என்று இழுத்தார். ‘அதுக்காக திருக்குறளை எழுதினது தொல்காப்பியர்னு சொன்னா ஒத்துக்குவீராவே...’ இதுதான் நாஞ்சில். நெற்றிப் பொட்டில் பட்டெனச் சுடும் வார்த்தைகள் அவருடையது. தமிழாய்ந்த தமிழனிடம் கள ஆய்வு என்றெல்லாம் கல்லுருட்ட முடியாது போலிருக்கிறது.

நாங்கள் பத்து நிமிடம் பேசுவதற்குள் ஆயிரத்தெட்டு இடைஞ்சல்கள். ‘சார் நான் கவிஞர் மன்னாதிமன்னன்! என் தொகுப்புக்கு முன்னுரை எழுதுங்க’ என்று மிகச் சாதாரணமாகக் கட்டளையிடுகிறார்கள். அப்படி வந்த ஆறு கட்டளைகளுள் ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘லவ் நிலாக்கள்’ மற்றொன்று ‘வாழ நினைத்தால் வாழலாம் (தேன் சிந்தும் கவிதைகளாம்!). ஒரு எழுத்தாளனின் தரமும், இயங்குதளமும் தெரியாமல் எத்தனைத் துணிச்சலாக கவிதை நோட்டை நீட்டுகிறார்கள்? அதுவும் அதிகார தோரணையோடு. இவர்களுள் எவரும் நாஞ்சிலாரின் ஒற்றை வரிகளைக் கூட வாசித்திருக்க மாட்டார்கள் என்றேன். ஆமோதித்தார் வேலாயுதம்.

***

சூழல் சார்ந்த பிரக்ஞையை என்னுள் விதைத்தவர் தியோடர் பாஸ்கரன். புதுப்புதுத் தகவல்களோடு அற்புதமான மொழி நடையில் தியோடர் எழுதிய அத்தனைக் கட்டுரைகளையும் மீள் வாசிப்பு செய்யும் முனைப்பில் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்கு’, ‘தாமரை பூத்த தடாகம்’ மற்றும் கானுறை வேங்கை (மொழி பெயர்ப்பு) ஆகிய மூன்றையும் வாசித்து முடித்தேன்.

தியோடர், புழங்கித் தேய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. சரியான துறைச் சொற்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிலிருந்து மறைந்த பழந்தமிழ்ச் சொற்களை வைத்துக்கொண்டு புதுமையான வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். ஆவணக் களரி, கருதுகோள்கள், கூடுகை, இயைந்து, நல்கை, பாலியல் வீரியம், இரலை, ஒற்றைக்கொம்பன் போன்ற பதப்பிரயோகங்கள் கிளர்ச்சியூட்டுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் காணுயிர்கள் பற்றிய குறிப்புகளைச் சுட்டும்போதும், ஆவணங்களிலிருந்து திரட்டிய வரலாற்றுத் தகவல்களை சுவைபடச் சொல்கையிலும் தியோடரின் வியர்வை மணம் வாசகனைக் கமழ்கிறது.

***

பாலைத் திணை காயத்ரி, அங்கிங்கெனாதபடி சித்தார்த் இருவருக்கும் அடியேன் நெடுநாள் வாசகன். தம்பதி சமேதராக கோவை ரெஸிடென்ஸியில் எழுந்தருளியவர்களை சஞ்ஜயோடும் பிரியாணியோடும் சென்று தரிசித்தோம். எந்த தமிழ்-ஆங்கில-பிரெஞ்சு-ஹூப்ரு-லிபி எழுத்தாளர் பெயரைச் சொன்னாலும், அத்தலைப்பின் கீழ் ஒருமணி நேரம் பேசுவார்கள் போலிருக்கிறது. ஆச்சிக்கும், ஐயருக்கும் வாசிப்பதொன்றே சுவாசம். சரியான இணை!

புதிதாக இணையத்தில் எழுதுகிறவர்கள் தேடிப்படிக்க வேண்டிய முக்கியமான எழுத்துக்கள் இவர்களுடையது என்பது என் அசைக்க முடியாத அபிப்ராயம்.

***

செம்மொழி மாநாட்டுப் பணிகளின் பெயரால் கோவையில் மரங்கள் கொலை செய்யப்படுவதைக் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருக்கிறேன். விமான நிலையத்தின் இருமங்கிலும் நின்று வரவேற்கவும், வழியனுப்பவும் செய்யும் மரங்களின் தலையாட்டலை நிறுத்தி விட்டார்கள்.
மரங்களடர்ந்த ராம்நகரில் தங்கள் கைவரிசையைக் காட்டியபோது அப்பகுதி இளைஞர்கள் மரங்களில் ஏறி எங்களை வெட்டிக்கொன்ற பின் மரங்களை வெட்டுங்கள் என்றார்கள். கோடாரிகள் தளர்ந்தன. மகிழ்ந்தேன்.

என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இடையர்பாளையம் - கணுவாய் சாலையில் இருந்த மிகப்பெரிய மரம் ஒன்றை விரிவாக்கம் என்று வெட்டி வீழ்த்தி விட்டார்கள். அம்மரத்தின் கீழ் மட்டும் சுமார் ஐம்பது கடைகளுக்கு மேல் இருந்தன. மூன்று கிராமங்களை இணைக்கும் சாலையின் சந்திப்பில் இருப்பதால் மரத்தின் கீழ் எப்போதும் ஜனத்திரள் இருக்கும். அதுதான் பேருந்து நிலையமும் கூட. எப்போதும் புள்ளினங்கள் இசை ஒலித்துக்கொண்டிருக்கும்.ஒவ்வொரு முறை அதைக் கடக்கையிலும் சுராவின் புளியமரம் நினைவில் அசையும். ஜனங்களின் முன் சூழல் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்ட உள்ளூர் கார்ப்பரேட் ஆடுகள் மாநாட்டுக் குழுக்களில் கிடைத்திருக்கும் பதவிகளால் உள்ளம் குளிர்ந்து இருக்கிறார்கள். மரமாவது மட்டையாவது!

ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்.

Tuesday, April 20, 2010

சிங்கரர்கள்

இரண்டே வாரத்தில் சங்கீதம் கற்றுத் தரப்படும் எனச் சத்தியம் செய்யும் போஸ்டர்கள் காணக் கிடைக்கின்றன. சரணம், பல்லவி, டெம்போ, பிர்ஹாஸ், சங்கதி, பிட்ச்சிங், பாவம், க்ளாரிட்டி, ஸ்வரம் என்றெல்லாம் தமிழர்களுக்கு நிறைய்ய புதிய வார்த்தைகள் கிடைத்திருக்கின்றன. பாட்டுப் போட்டிகளின் உறுபலன்.

ஸ்டார் சிங்கர், சூப்பர் சிங்கர், ஹரியுடன் நான் - மூன்று நிகழ்ச்சிகளையும் முடிந்த மட்டும் பார்த்துவிடுவேன். இளமையான குரல்கள் உள்ளுக்குள் உற்சாகம் நிரப்புகிறது. அதே சமயத்தில் சினிமாப் பாடல்களை அட்சர சுத்தமாகப் பாடுவதுதான் திறமையா என்ற கேள்வியும், கேட்டுச் சலித்த பாடல்களைக் கேட்கையில் மெலிதான அயற்சியும் வருவதுண்டு.

சினிமாவைத் தவிர்த்து நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவரக்கூடிய எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. என் சுயவிருப்பப் பட்டியலின் சிறு சாம்பிள்:


அருகம்புல்லின் நுனியிலே அம்மா கட்டிய வீடு ஆறு வீடு...

பாரத தேசமே... மக்கள் வாழும் நல்ல தேசமே...

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ...

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயோ...

வில்லினையொத்த புருவம் வளைத்தனை...

செந்தூர் கடற்கரையில் கந்தா உனக்கு ஒரு...

மொச்சைக் கொட்டை பல்லழகி...

ஆற்றுவெள்ளம் நாளை வர தோற்றுதே குறி...

பாவம் செய்யாதிரு மனமே...

மாசில்லா கன்னியாம் மேரியாம் மாதாவாம்...

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...

காரணம் கேட்டு வாடி சகியே...

- ஆகிய பாடல்களை எவரேனும் பாடினால் எஸ்.எம்.எஸ் ஓட்டு துவங்கி கள்ள ஓட்டு வரை போடத் தயாராக இருக்கிறேன்.

***

பள்ளி நாட்களில் நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்திருக்கிறேன். சுருதி கருதியதில்லையென்பதால் வெங்கலக் கிண்ணி கூட ஜெயித்ததில்லை. பரம்பரைக்கே பாட்டு ஆகாதுடா என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லியும் கேட்டதில்லை. காரணம் இருந்தது.

நான் விரும்புகிற பாடல்களுக்கு சுய மெட்டமைப்பது என் தொட்டில் பழக்கம். ஏனோதானாவென்று வில்பர் சர்குண ராஜ் மாதிரி இருந்தாலும் அவைநாகரீகம் கருதாமல் துணிந்து விடுவேன். பிராயத்திலிருந்த பாரதிதாசன் பித்தில் ‘அறிவு கெட்டவன் பணம் படைத்தால் அணுகுண்டு செய்வான்’, பொய்க்கு காலில்லை சிறகுகள் உண்டு’, ‘கொலைவாளினை எடடா மிகுகொடியோர் செயல் அறவே’ ஆகிய பாடல்களைப் பாடி கனகசுப்புரெத்தினத்திற்குக் கணிசமான அவமரியாதை சேர்த்திருக்கிறேன். (அப்போதெல்லாம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்குப் பரிசாக குடும்ப விளக்கு, குயில் பாட்டு, அழகின் சிரிப்பு, அண்ணாவின் என் வாழ்வு போன்ற புத்தகங்களை வழங்குவார்கள். கடந்தவாரம் ஒரு பள்ளி விழாவில் வீடியோ கேம்ஸ் அடங்கிய பன்னிரெண்டு சிடிக்களைப் பரிசாக கொடுத்ததைக் கண்டு துணுக்குற்றேன்.)

‘கைத்தலம் நிறைகனியை’ - வாரியார், டி.எம்.எஸ், புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் துவங்கி பிளேஸி, யோகி.பி வரை அவரவர் பாணியில் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்து சுமார் 20 வகைமைகளில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். மஸாகீஸ்டுக்களுக்கு மட்டும் வேண்டுகோளின் பேரில் அனுப்பி வைக்கலாமென்றிருக்கிறேன்.

***

உடுமலை நாராயண கவி, ஊத்துக்காடு வெங்கடசுப்பு ஐயர், உளுந்தூர்பேட்டை சண்முகம் ஆகிய மூன்று பேர்களது பெயர்களும், பாடல்களும் குழப்பியடிப்பது எனக்கு மட்டும்தானா?! திக்கை நோக்கியா / உற்று நோக்கியா - ரேணுகானமா / வேணுகானமா என்றெல்லாம் வரும் வார்த்தைக் குழப்பங்கள் வேறு. எதில்தான் மனித மனம் குழம்புவதில்லை?!

***

தலைமை அலுவலகம் அளிக்கும் சிறப்புப் பயிற்சி ஒன்றிற்குத் தேர்வாகி இருக்கிறேன். அதன் பொருட்டு வருகிற 26-04-10 முதல் 02-05-10 வரை ஏழு தினங்கள் சென்னையில் இருப்பேன். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் நண்பர்கள் வீட்டில் தங்கும் உத்தேசம்.

காத்து ரட்சிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Friday, April 16, 2010

காமப்பேய்

சிறு மண் கலயம் ஒன்றில் குல்பியை அடைத்து விற்கிறார்கள். வாங்கித் தின்ற பின் வீசியெறிய மனமின்றி கழுவிக் கவிழ்த்தினேன். கவிழ்த்திய மண்பாண்டங்களுக்குள் யட்சி குடியேறி விடுகிறாள். நள்ளிரவில் யட்சியின் ஓலம் கேட்டு சமையலறைக்கு ஓடினால், கொசுக்கள் சுற்றி வளைத்து யட்சியின் ரத்தத்தைக் குடித்துக்கொண்டிருந்தன. கொசுவர்த்தி ஒன்றினைக் கொழுத்தி வைத்த பின் யட்சி நிம்மதியானாள். தான் வரம் கொடுக்கும் வக்கற்றவளென்பதால் வேறு ஏதேனும் கேள் என்றாள்.

ஒருதலையாகவோ தறுதலையாகவோ காதலித்துப் பிரிந்த பெண்ணை பிற்காலத்தில் பாலியல் தொழிலாளியாகச் சந்திக்க நேரிடும் கதைகளை எவரேனும் எழுத முற்பட்டால் தோளில் அமர்ந்துகொண்டு தலையைப் பிடித்து ஆட்டுவாயாக...! என்றேன்.

***
அறுவடை முடிந்த நிலத்தில் வீட்டுப்பெண்களுக்குக் காமப்பேய் ஓட்டும் திருவிழா கொங்கு மண்டலத்தில் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். அந்தச் சமயங்களில் பாடப்படுவதுதான் ‘சுங்கிடிச்சாம் சுங்கிடிச்சாம் சுங்கிடிச் சேலை’ எனும் பாடல் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் அப்படி ஒன்று இருந்ததா அல்லது கவுண்டர் இனப் பெண்களை இழிவு படுத்த எதிர்சாதியினரின் பரப்புரையா என்று தெரியவில்லை.

காமம் பேய்தான் என்பதில் ஐயமில்லை! ஓட்டுவதென்று வந்து விட்டால் ஆணென்ன பெண்ணென்ன?!

***

ரத்த அழுத்தம் உடையவர்கள் அன்னபூர்ணாவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. உங்கள் சுயமரியாதைக்கும், பொறுமைக்கும் சோதனைகள் வைத்தே சோற்றைப் போடுவார்கள். ஆனாலும் என்னைப் போன்ற தனிக்கட்டைகளுக்கு வேறு போக்கிடம் இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் அவர்கள்தான் கடை விரித்திருக்கிறார்கள்.

கையில் சாருவின் ‘வாழ்வது எப்படி?’ - ஐ பிரித்து வைத்துக்கொண்டு டேபிளில் அமர்ந்தேன். சர்வர் வந்து என்ன வேண்டுமென்று வினவ 18 பக்கங்கள். ஆர்டர் செய்த தோசை வந்து சேர 22 பக்கங்கள். இரண்டாவதாகக் கேட்ட காபி வருவதற்கு 20 பக்கங்கள். பில் வந்து சேர - மிச்ச சில்லறை வந்து சேர என 86 பக்கங்களுடைய புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய இனியொரு முறை இங்கு வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

சரி புத்தகத்திற்கு வருவோம். பதினெழு கட்டுரைகளில் ‘வாழ்வது எப்படி?’ என்ற மென்பொருள் இளைஞர்களைப் பற்றிய கட்டுரையும், ‘மீள முடியாத இசைக் கனவு’ என்ற மைக்கேல் ஜாக்ஸன் கட்டுரையும்தான் தேறியது. மற்றதெல்லாம் சுயபீத்தல்கள்!

***

ரஹ்மானின் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா லண்டனின் ராயல் பெஸ்டிவல் ஹாலில் நடந்தது. மொஸார்ட் போன்ற மாபெரும் மேதைகள் தங்களது இசை நிகழ்ச்சிகளை நடத்திய அரங்கம் அது. உலகெங்கிலும் இருந்து வந்த இசை ஆர்வலர்களின் முன்னிலையில் ரஹ்மானின் இசைக்கோர்வைகளை இங்கிலாந்து இசைக்கலைஞர்கள் இசைத்தனர். ரஹ்மான் ஒரு பார்வையாளராக கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தார்.

லண்டன் சவுத் பேங்க் சென்டர் ஆரம்பிக்கப்பட்ட 78 வருட வரலாற்றில் இங்கே இசைக்கும் முதல் இந்திய இசை ரஹ்மானுடையது. ரோஜா, பம்பாய் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் தீம் இசைக்கோர்வைகளை மட்டும் ரஹ்மானின் ஆஸ்தான கலைஞர்கள் நவீன் (புல்லாங்குழல்) மற்றும் கணேஷ் (வீணை) இசைத்தனர். இசையின் உன்னதங்களைத் தொட்டுத் திரும்பும் இவ்விசைக் கோர்வைகளுக்கு ‘ஸ்டண்டிங் ஒவேஷன்’

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் பிபிசி மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரஹ்மான் பதிலளித்துக்கொண்டிருந்தார். ஒரு கேள்வி: ‘ஏதேனும் ஓர் இசைக்கருவியை நீங்கள் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’

‘இதை என் மனைவி கேட்டால் கோபித்துக் கொள்வார்’ என்று வெள்ளந்தியாகப் பதில் சொல்ல அரங்கம் அதிர்ந்தது.

***

மேற்படி சம்பவத்தை வீடியோவாக்கி எனக்கு அனுப்பி வைத்திருந்தது நிஜாம். நார்தம்ப்ரியா யுனிவர்சிட்டியில் (நியூகேஸ்டில்) மேலாண்மை படிக்கிற மாணவன். ஹாரிலால் கதையின் மூலம் சாகாவரம் பெற்ற விடுதியறைத் தோழன். நானும் அவனும் நேர்கோட்டில் சந்திக்கிற ஓரே விஷயம் ரஹ்மான்தான். ஜோதா அக்பர், டெல்லி 6 போன்ற மாஸ்டர் பீஸ்கள் வெளியான சமயங்களில் பல ராத்திரிகள் ரஹ்மானில் லயித்துக் கிடந்திருக்கிறோம். இருவருக்கும் பொதுவான லட்சியமாக இருந்தது ரஹ்மானைச் சந்திப்பதுதான். அவன் ஜெயித்து விட்டான்.

***

நிறைய வெளிநாடுவாழ் நண்பர்கள் அழைக்கிறார்கள். உற்சாகமாக இருக்கிறது. அடுத்தடுத்த வரிகளை நோக்கி நகரும் உந்துதலைப் பெற்றுக்கொள்கிறேன். ஆனால், பேசுகிறவர்களில் பலரும் ‘ரொம்ப நாளாப் பேசனும்னு நினைப்பேன். ஏதாவது சொல்லிடுவீங்களோன்னு தயக்கம்’ என்பதுதான் கவலையளிக்கிறது. நான் எப்போதும் உரையாடலை நேசிப்பவனாக இருக்கிறேன். எழுதுவதைக் காட்டிலும் பேசுவதுதான் பெரும் ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது. நள்ளிரவு நயாகராக்களுடன் மட்டும்தான் ஒவ்வாமை. அது கூட விடிகாலைக் கவலைகளை எண்ணித்தான்!

உன் எழுத்தில் மெலிதான திமிர்த்தனம் தென்படுவதுதான் அவர்களது அபிப்ராயத்திற்குக் காரணம் என்கிறாள் கேண்டி.

***

ட்வீட்டும் நடிகைகளில் எனக்கு செலீனா ஜெட்லீ மீதுதான் காதல் பெருக்கெடுக்கிறது. ஜிம்கானா கிளப் எச்சித்தனமாக நடந்து கொண்ட விவகாரத்தில் செலீனா கொதித்தெழுந்ததும், லெஷ்மி திரிபாதிக்கு ஆதரவு திரட்டியதும் எனக்குப் பிடித்திருந்தது.

மற்ற சமூக வலைதளங்கோடு ஒப்பிடுகையில் ட்வீட்டர் அத்தனை மோசமில்லை. பல சமாச்சாரங்களை ட்வீட்டர் மூலமே தெரிந்து கொள்கிறேன்.

***

Wednesday, April 14, 2010

உலகப் பொதுநோய்


ரொம்பச் சின்ன வயதில் குமுதத்திலோ விகடனிலோ படித்த ஒரு பக்கச் சிறுகதை. கல்யாண வீட்டிற்குள் நுழைய முற்படும் பெரியவரிடத்தில் ஒரு சின்னப் பையன் இலையில் அதிகம் சாப்பாடு மீதம் வைக்கும்படி கோரிக்கை வைப்பான். எச்சில் இலை வழித்து வீட்டு உறுப்பினர்களுக்கும் சோறு கொண்டு போயாக வேண்டும் அவன். அந்தக் கதை என்னை கடுமையாகப் பாதித்தது. நாம் சாப்பிட்டு வீசியெறியும் இலையின் பயணம் அத்தோடு முடிவதில்லை. அதை மனிதனோ, காகமோ, பூனையோ, நாயோ பசியோடு அணுகுகிறது. அவை ஏமாற்றம் கொள்ளலாகாது என எப்போது சாப்பிட்டாலும் மிச்சம் வைப்பது வழக்கமானது.

கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் எத்தியோப்பியக் குழந்தை இறக்கக் காத்திருக்கும் கழுகின் படம் கண்டு அதிர்ந்தேன். அதை எடுத்தவன் தீவிர மனநோயில் செத்தான். ‘இக்கொடுமையினைக் கண்டு நீங்கள் கண்ணீர் சிந்த வேண்டியதில்லை. பணம் அனுப்ப வேண்டியதில்லை. உங்கள் தட்டுகளில் இருக்கும் உணவினை வீணாக்காமல் இருங்கள். இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு தானே கிடைக்கும்’ என்று சொல்லி விட்டுத்தான் செத்தான். ரொம்பக் குழம்பி ஒரு முடிவெடுத்தேன். இலையெனில் கொஞ்சம் மீதம் வைப்பது. தட்டில் சாப்பிட்டால் ஒரு பருக்கை மிச்சம் வைக்காத அளவிற்கு சாப்பாட்டை வாங்கிக்கொள்வது. இப்போதும் தொடர்கிறது.

மீசை முளைத்த வயதுகளில் ‘கை, கால், கண், காது ஏன் மூக்கு கூட இல்லாமல் ஜீவராசிகள் பிறக்கிறார்கள். வயிறு இல்லாமல் யாரும் பிறந்ததில்லை’ என்கிற மு. சுயம்புலிங்கத்தின் வரிகளும், ‘வயிற்றிலொரு தீயெறிய’ எனும் ரமேஷின் பதப்பிரயோகமும் பசியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கும்.

ரொட்டி வாங்கவும் வக்கற்ற ஜிம்பாப்வே மக்கள் களிமண்ணைச் சலித்து, அரைத்து, சிறு உருண்டைகளாக்கி பசிக்கும்போது வாயில் போட்டு விழுங்கி விடுகிற ‘பிரண்ட் லைன்’ கட்டுரை பல நாட்கள் என்னைத் தன் பிடியில் வைத்திருந்தது.

இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள பால்ய வறுமையின் கவுச்சியடிக்கும் மனோஜின் ‘வெயில் வட்டம்’ சிறுகதை சத்துணவு வரிசைகளையும், சோற்றில் நெளியும் புழுக்களையும், பின்புறம் கிழிந்த கால்சட்டைகளையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. தன் வாழ்வோடு ஒட்டிச் செல்லும் படைப்புகளுக்கு வாசகன் உயர்ந்த அந்தஸ்தை வழங்கி விடுகிறானில்லையா?!

Monday, April 12, 2010

விஜி 25

1. இதுவரை சுமார் 2000 பேர்களுக்கு மேல் விஜியிடம் எஸ்.ஏ.பி ( சேப்) பயிற்சி எடுத்து வாழ்வில் வளம் பெற்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் வீட்டு பூஜையறையில் விஜியின் போட்டோவை மாட்டி வணங்கி வருகிறார்கள்.

2. பதிவர் சங்கம் / பேரவை / சிற்றவை / குழுமம் ஆகியவற்றிற்கு முன்னோடி விஜிதான். தலைவர்: விஜி - செயலாளர்: வர்ஷா - பொருளாளர்: பப்பு என உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல் சங்கத்தை ஆரம்பித்த சிங்கம் அவர்.

3. விஜியின் ஆதர்ச எழுத்தாளர் நர்சிம்தான். அவரது இன்ஸ்பிரேசனில் கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு எங்கேயோ வெறிக்கும் படங்களை வீடெங்கும் மாட்டி வைத்திருக்கிறார்.

4. விஜி பயங்கரமான பெருமாள் பக்தை. திருப்பதி செல்வதென்று தீர்மானித்து விட்டால் பச்சைத் தண்ணீர் பல்லில் படாது. நடந்தே மலையேறி தரிசனம் முடியும்வரை கொலை பட்டினி கிடப்பார்.

5. சின்ன வயதில் பஸ் டிரைவராக வரவேண்டும் என்று ஆசை. ஆனால், கடைசி வரை சைக்கிள் கூட ஓட்டத் தெரியாமல் போய்விட்டது என்பது சொந்த சோகம். அதனால்தான் ராப்பகல் பாராமல் கூகிள் பஸ்ஸில் டூர்ர்ர்ர்ர்ர்...

6. விஜிக்கு பிடிக்கவே பிடிக்காதது காஸிப். யாராவது புறம் பேசினால் பொறுக்கவே மாட்டார். கூட சேர்ந்து பேச ஆரம்பித்து விடுவார்.

7. இரண்டாயிரம் கடன் கேட்டால் இருநூறும், இருநூறு கேட்டால் இருபதும், இருபது ரூபாய் கேட்டால் இரண்டு ரூபாயும் கொடுக்கிற நவீனப் பொருளாதார கொள்கை அவருடையது.

8. சிம்-கார்டு படிவம் நிரப்புவது எப்படி என்றொரு 400 பக்க நூலும், ‘வெளங்குமா?’ என்றொரு கவிதைத் தொகுப்பும் கொணர இருக்கிறார். ராம்மு பதிப்பகம் இரண்டு தொகுதிகளையும் வெளியிட இருக்கிறது. ‘நான் என்னவாவேன்?!’ என்றொரு புத்தகத்தை பதிப்பாளர் ராம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் தகவல்.

9. ஓரே வீட்டில் மூன்று பதிவர்கள் என்கிற சாதனையோடு நின்று விடாமல் ஒரு பொமரெனியன் வாங்கி அதற்கும் ஒரு பிலாக் துவங்கிக் கொடுக்க இருக்கிறார். காட்டு நாய்கள் பதிவெழுதும்போது வீட்டு நாய் பதிவெழுதினால் என்ன என்பது அவரது வாதம்.

10. ஏழை பாழைகளுக்கு அவ்வப்போது டீ-சர்ட்டுகள், நைட் பேண்டுகள் வழங்குவது வழக்கம். அவர்களும் வரிசையில் நின்று வாங்கி விட்டு வாயார வாழ்த்துவார்கள்.

11. தன் உயிர் நண்பன் பெரிய எழுத்தாளனாக இருப்பதில் வண்டி வண்டியாய் பெருமிதம். தன் தோழியரிடம் சொல்லி பெருமை அடித்துக்கொள்வார்.

12. பால்வாடி, பள்ளிக்கூடம், கல்லூரி என எங்கும் எப்போதும் முதல் மாணவி விஜிதான். அசெம்பிளிக்கு வரிசையில் நிற்கும்போது.

13. தங்க நகைகள் என்றால் விஜிக்கு அறவே ஆகாது. எப்படியோ சேர்ந்துவிட்ட 346 பவுன் நகைகளை வறிய நிலையிலுள்ள கேண்டிக்கு கொடுத்து விடலாமா என்று கனத்த யோசனையில் இருக்கிறார்.

14. திருப்பூர் பதிவர்களுக்குத் தலைவர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். தலைவி நான்தான் என்று மிட்-நைட்டில் மெஸெஜ் அடிப்பதைக் கண்டு வெயிலான் கலக்கத்தில் இருக்கிறார்.

15. தமிழில் அவருக்குப் பிடிக்காத ஓரே வார்த்தை ‘நற்குடி’

ஸாரி... விஜிம்மா... எவ்ளோ யோசிச்சாலும் பதினைஞ்சு பாயிண்டுக்கு மேல தேறலைம்மா... உனக்கு இவ்ளோ போதும்.

Tuesday, April 6, 2010

அன்புச் சண்டாளர்கள்என் எழுத்தூக்கம் சூம்பிப்போய் விட்டது. சும்மா இருப்பதன் செளந்தர்யங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்கள் அலாதி! அலாதி! என்ன ஓய் ஆச்சு எனக் கேட்டு வரும் விசாரிப்புகளுக்காகச் சத்தில்லாத இந்த எழுத்து. முன்யோசனையின்றி திறந்து விட்ட கதவுகளைச் சாத்தும் வழியறியேன். வேறு வேலைகள் ஏதும் இருப்பின் நீங்கள் கிளம்பலாம்.

***

தனியாக வாழ்வதற்கும், தனி வீட்டில் வாழ்வதற்கும் இடையேயான வித்தியாசங்களை உணர்வதற்குள் ஐம்பதாயிரம் ஆவியாகி விட்டது. தனியன் எனினும் வீடென்று வந்து விட்டால் அதன் பேச்சைத்தான் கேட்டாக வேண்டும். தண்ணீர், மின்சாரம், கேபிள், பத்திரிகை, அசோசியேசன், வீட்டைக் கூட்டினேன், தெருவைக் கூட்டினேன், காவல் காத்தேன், காத்துக் கிடந்தேன் என பதினைந்து தேதிக்குள் பஸ்மாகிறது பாக்கெட்.

வெப்பக்கோடையை நீந்திக் கடக்க ‘பள பளா... ஜிலீர் பளீர்...’ என்றெழுதிப் பிழைத்தேன். ஒற்றோ, சந்தியோ வந்து மறிக்காத எழுத்து. ‘மருந்து வாங்க மறக்காம வாங்க’ என்ற ஒற்றை வரிக்கு பத்துச் சிறுகதைகள் எழுதினால் கிடைக்கும் ரெமுனரேஷன். தமிழே உன்னை வணங்குகிறேன். என் வாழ்வும் சாவும் உன்னோடுதான்!

***

மனதின் உளறல்களைக் கவனிக்கத் துவங்கினேன். உளறல் காற்பங்கு உதறல் முக்காற்பங்கு (சுகுமாரன் இந்தப் பதத்தை நாக்கில் விதைத்து விட்டார். சனியன் விடாமல் துரத்துகிறது...). எல்லாம் வாழ்வியல் சார்ந்த பயம். சம்பாத்தியத்திற்குத் தேவையான சாமர்த்தியம் குறித்து சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. ஓடும் வரை ஓடட்டும். அப்புறம் நடந்தோ, தவழ்ந்தோ, புறத்தியார் முதுகிலோ பயணிக்கலாம். நமக்கொரு சாமியார் கிடைக்காமலா போவார்?!

***

கொடுத்த பணத்தை வாங்க வழியில்லை பராபரமே எனப் புலம்பி எழுதி இருந்த வாரம் முழுக்க நான்கைந்து வெளிநாட்டு அழைப்புகள். உறக்கத்தின் அரக்கப் பிடியில் எடுக்கவில்லை. அழைத்திருந்தது ஆர்.ஆர்! பணப்பிரச்சனை என்றீர்களே ஒருவாரமாக முயற்சிக்கிறேன் எடுத்தீரில்லை என்று விசனப்பட்டார். வரைபடத்தில் அமெரிக்கா இருக்கும் திசையினைத் துழாவி நெடுஞ்சாண் கிடையாக விழுந்தேன். இந்த அன்புச் சண்டாளன் என்னை அழைக்கும் போதெல்லாம் நன்னாரி சர்பத் குடித்த மாதிரி இருக்கிறது.

உம்ம கல்யாணத்திற்குப் பணம்தான் பிரச்சனை எனில் லட்ச ரூபாய் தருகிறேன். உடனே பண்ணிக்கொள்! என்கிற இன்னொரு அன்புச் சண்டாளன் சித்தர்!

தகுதிக்கு மீறி எனக்குக் கிடைக்கின்றவற்றுள் பிரதானமானது அன்பு. அன்பை ஸ்வீகரிக்கவும் அருகதை இருக்க வேண்டுமில்லையா?! காலம் காலமாக காரணங்கள் ஏதுமின்றி கொண்டாடப்படுகிறேன். ‘முன்னம் நீ புரி நல்வினை’ என்கிறாள் கேண்டி.

***
தமிழினி சந்தா கேட்டு எழுதியதற்கு பரிசலின் பதிவிலிருந்து ஆறு பேர்களும் (விக்கி, சிவக்குமார், ராஜா, தியாகராஜன், செளந்தர்ராஜன், வெங்கட்ரமணன்) என் பதிவிலிருந்து நான் மட்டுமாக மொத்தம் சேர்ந்தது ஏழு. அனுப்பி வைத்து விட்டேன். அனேகமாக மே மாத இதழ் முதல் அவர்களுக்குக் கிடைக்கலாம்.

***

மின்சார மணியை முறைக்கும் மேளக்காரனைப் போல ஐபிஎல் போட்டிகளை வெறித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்கொயர் கட், ஆன் டிரைவ், லேட் கட் ஆடுபவனுக்கு மரியாதை இல்லை. குட் லென்த் பாலை கண்ணை மூடிக்கொண்டு ‘ங்கோத்தா’ என்று அடிக்கிறார்கள். ஸ்டைலுக்கோ, இலக்கணத்துக்கோ இடமில்லை. கீப்பரின் தலைக்கு நேர் பின்னே பறக்கிறது சிக்ஸர்!

ரத்தத்தில் அடித்துச் சொல்கிறேன் 20-20 ஆட்டங்கள் கிரிக்கெட்டைத் தின்று செரிக்கும்.

***

நடிகைகளை வேறெங்கு பார்ப்பதை விடவும் மைதானக் கும்பலில் பார்ப்பது பரவசம். வேறெந்த உடைகளை விடவும் ஜெர்ஸியில் தேவதைகளாக இருக்கிறார்கள். அழகு ராணி என்னவோ ஷில்பாதான். ஒரு நொடி காண்பித்தாலும் ‘கார்ஜியஸ்’ என முனங்கிக்கொள்கிறேன். நவீன யுகத்தில் பிறன்மனை நோக்குதல் பெரிய பாவமில்லைதானே?!

***

ஆகச்சிறந்த - சுந்தரராமசாமி
கறாரான - ஜெயமோகன்
கொடுங்கனவு - மனுஷ்யபுத்திரன்
அடாசு - சுஜாதா
யாவரும் - எஸ்.ரா
அசூயை - சாரு (பொறாமை என்பதுதான் உண்மையான அர்த்தம். இவரோ ஒவ்வாமை எனப் பொருள்பட பிரயோகிக்கிறார்)

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சில பிரத்யேக பதப்பிரயோகங்கள் இருக்கின்றன. இதுமாதிரியே பதிவர்களுக்கும் ஒரு க்ளிஷே பட்டியல் வைத்திருக்கிறேன்.

உண்மையான உண்மை - வடகரை வேலன்

எஸ்ஸெம்மெஸ் - பரிசல்

ஸ்நானப்ராப்தி - லக்கி

கந்தாயம் - நர்சிம்

நபும்சகன் - முதுகூகை

நல்லா இருங்கடே - ஆசிப்மீரான்

வேட்கை - உமா ஷக்தி

என்னவர் / பீட்ஸா / ஹாட் டாக் - விக்கினேஸ்வரி

நாவன்மை - *****

இப்பட்டியலை நீங்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்.

Wednesday, March 31, 2010

ஊர் சுற்றி வந்த ஓசை

ரம்யாக்கா, கலைச்செல்வி அக்கா, விஜிராம், சஞ்ஜெய் அண்ணா மற்றும் சித்தர் கைங்கர்யத்தில் திருவேங்கட மலை சென்று வந்தேன். திருப்பதியில் பக்தர்கள் வசதிக்கென எவ்வளவோ செய்கிறார்கள். ஆனால் சுற்றுச்சூழல் சமாச்சாரத்தில் மெத்தனம் காட்டுகிறார்கள்.

திருவேங்கட மலையில் அரியவகை மான்கள், குரங்குகள், பாம்புகள், புனுகுப்பூனைகள், காட்டுக்கோழிகள் என ஏராளமான காட்டுயிர்கள் வசிக்கின்றன. நாராயணகிரி மலைப்பகுதியில் இருக்கும் மர அணில்கள் முக்கியமானவை. கருப்பும் சிவப்பும் கலந்த வண்ணமும், பஞ்சுப்பொதி போன்ற வாலும் உடைய மர அணில்கள் கீரி அளவிற்கு பெரியவை. இந்த முறை மனித பயமற்ற மர அணில் ஒன்றை மிக நெருக்கத்தில் காண நேர்ந்தது. பக்தர்கள் வீசி ஏறியும் ரோபஸ்டாக்களைத் தின்று கொண்டிருந்தது அந்த அணில். ரசாயனங்களால் விளைவிக்கப்பட்ட பழங்களைத் தின்ன பழகிக்கொண்ட அணில் என்னவாகும் என்கிற அச்சம் மலை இறங்கிய பின்னும் மனதிலே இருந்தது.

எத்தனையோ காட்டுயிர்கள் ரசாயனம் கலந்த விளை பொருட்களால் அருகி விட்டன. சமீபத்திய உதாரணம் பிணந்தின்னிக் கழுகுகள். கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகளின் தாக்கத்தால் இவற்றின் இனப்பெருக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திருமலையின் ஏழு சிகரங்களிலும் எங்கு திரும்பினாலும் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஆந்திர வனத்துறை கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும் என மலை குனிய நின்றானை வேண்டிக்கொண்டேன்.

***

திருமலையில் உடனே கொண்டு வர வேண்டியது உடை கட்டுப்பாடு. "Mine is 8 1/2 inch" வாசகங்கள் உடைய பனியனும், அரை டிராயருமாக வலைய வரும் ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும் பக்தியை ஏகத்துக்கும் குலைக்கிறார்கள்.

***

நிருபர் நடந்ததை எழுதுவார். பத்திரிகையாளரோ நடந்தது, நடப்பது, நடக்கப்போவதை எழுதுவார். ஞாநி இரண்டாவது வகை ஆசாமி. நான் புடலைங்காய்த் தனமாக ஒரு காரியம் செய்யத் துணிந்தேன். வருத்தப்பட்டு பாரம் சுமப்பாய் என்று எச்சரித்தார். கேட்டேனில்லை. சுமக்கிறேன்.

எப்போதும் ஞாநி வீட்டில் இருபது இளைஞர்களாவது இருக்கிறார்கள். எந்நேரமும் விவாதம், உரையாடல், நாடக ஒத்திகை என ரசனையான வாழ்க்கை. தமிழ்நாட்டில் இவரளவிற்கு இளைஞர்கள் புடை சூழ வேறு எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்ன?!

***

பாஸ்கர் சக்தி, ஈஸ்வரிக்கா, பத்மா, உமா ஷக்தி, அண்ணாமலை, மோட்டார் விகடன் பாலா, தேனி ஈஸ்வர், தீபா, நேகா, சந்தன முல்லை, பைலட் சஞ்ஜெய் என நல்லோர் பலரைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியாக முடிந்தது சென்னைப் பயணம்.

***

மேனி வருடும் குளிர் நாணி ஓடும் அனல். உலைக்குத் தப்பி மலைக்குள் புகுந்தேன். சீசன் துவங்கியதன் அடையாளமாக ஊட்டி முழுவதும் ஜனத்திரள்.

எந்தத் தருணத்திலும் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அரசு இயந்திரங்களை வளைக்கக் கூடாது. குடிக்க கூடாது. பிளாஸ்டிக் கூடாது. கூச்சல் கூடாது என பல கூடாதுகளுக்கு ஒப்புக்கொண்டு உடன் வந்த நண்பர்கள் ஈரக்காற்றில் வாக்குறுதிகளைக் கரைத்தனர்.

கோடை வாசஸ்தலங்கள் ‘பார்’ இல்லை. குடித்து, வாந்தியெடுத்து, உளறி, அடுத்தடுத்த நாட்களில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார மலையேறி வர வேண்டுமா?! உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பார்களை வாழ வையுங்கள்.

Monday, March 15, 2010

பரிசல் புத்தகம் - தொடரும் விவாதம்

பதிலூட்டமாகத்தான் எழுதினேன். என் வலையில் ஏதோ கோளாறு. பதிலூட்டம் இட முடியவில்லை என்பதனால் தனிப்பதிவாக்க வேண்டியதாகி விட்டது:
பொதுவாக வலையுலகில் விமர்சன நோக்கிலோ அல்லது விவாதங்களை முன்னெடுத்துச் சொல்லும் வகையிலோ பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை. அரிதாக வரும் மாற்று அபிப்ராயங்களும் நாகரீக மொழியில் பேசுவதுமில்லை. நண்பர் சரவணகார்த்திக்கேயனின் நீண்ட பின்னூட்டத்தினை வரவேற்கிறேன்.

எழுத்தின் தரத்தை அவனவன் தரத்தின்படி வாசகனே தீர்மானிக்கிறான். எழுத்தாளனைக் கொண்டாட அல்லது முற்றிலும் நிராகரிக்கிற உரிமை வாசகனுக்கு எப்போதும் உண்டு. ஆனால் இச்சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அதன் தரத்திற்காக எந்தமாதிரியான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பது கதைகளை வாசித்தாலன்றி உணர முடியாது.

ஜனரஞ்சகக் கதைகளை எழுதுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் அக்கதைகள் அதன் தர்மங்களுக்குள்ளாவது கட்டுப்பட்டு இருக்க வேண்டும். வெற்று உரையாடல்கள் அதன் இறுதியில் ஒரு திடுக் திருப்பம் என போகிற போக்கில் எழுதிச் செல்வது சிறுகதை ஆகா. சிறுகதையில் வாசக பங்கேற்பு ஒரு நியதி. ‘உங்கள் கதைகளை வாசகனுக்குச் சொல்லாதீர்கள். காணப்பண்ணுங்கள்’ என்பார் நீங்கள் குறிப்பிடுகிற ஜெயமோகன். கதைகள் வேறு. அனுபவப் பத்திகள் வேறு. கோணல் பக்கங்களும், கற்றதும் பெற்றதும் ஒருபோதும் கதைகள் என்கிற வகைமைக்குள் வராது.

ஒரு பத்திரிகையில் இடம் பெறுவதனாலேயே ஒரு படைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபோதும் ஆகிவிடாது. ஆனால் அப்படி இடம்பெறுகிற படைப்பில் வாசகச் சுவை இல்லையென்றால் அதற்கு அப்பத்திரிகையின் படைப்புகளைத் தேர்வு செய்யும் பொறுப்பாளரும் முக்கிய காரணம். ஆனால், அக்கதைகளைப் பற்றிய சுயமதிப்பீடு அதை எழுதியவனுக்கு எப்போதும் இருந்தாக வேண்டும். பிற்காலத்தில் தொகுதி கொண்டுவரும் முயற்சியின் போது அந்தக் குப்பைகளைக் கவனத்தோடும் கறாரோடும் ஒதுக்கியே தீரவேண்டும். ஆனந்தவிகடனில் வருவதை ஒரு அளவுகோலாகக் கொள்ள முடியாது. கூடாது.

கணிணிமொழி கவிதை மட்டுமல்ல இதுவரை பத்திரிகைகளில் வெளியான என்னுடைய நூத்திச்சொச்ச கவிதைகளிலும், சிற்சில சிறுகதைகளிலும் இலக்கியத்தரம் சிறிதும் இல்லை என்பதை நான் உறுதியாக உணர்கிறேன். வணிகப்பத்திரிகைகளின் டிமாண்டிற்கும், அதன் வாசகத்திரளுக்கும் ஏற்ப எழுதப்பட்டவை அவை. ஒரு பத்திரிகையில் ஊனமுள்ள படைப்பு இருக்குமாயின் அதை இட்டு நிரப்ப வாசகனுக்கு பத்திரிகையின் வேறு பக்கங்கள் உதவலாம். ஆனால், புத்தகம் அப்படி அல்ல. அதன் பயணம் நீடித்தது. அதன் ஆயுள் கெட்டியானது. ஆரோக்கியமான புத்தகம் பலரால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் சிபாரிசு செய்யப்படும். குறைந்த பட்சம் பரணிலாவது வாழ வேண்டும். பழைய புத்தகக் கடைகளில் அல்ல. (சிலர் பெரும் ஆளுமைகளின் படைப்புகள் கூட பழைய புத்தகக்கடைகளில் கிடைக்கின்றன என்கின்றனர். வெளியாகி ஒரிரு மாதங்களே ஆன புத்தகம் பழைய கடையில் கிடைப்பதும் 70களில் வெளிவந்த புத்தகம் கிடைப்பதும் ஒன்றா?!)

பரிசல் ஒரு ஆரம்பநிலை எழுத்தாளர் இல்லை. பதினெட்டு வருடங்களாக பத்திரிகைகளிலும், இணைய பக்கங்களிலும் எழுதி வருகிறார். நர்சிம்மின் ‘அய்யனார் கம்மா’விற்கு அளிக்கின்ற சலுகையை பரிசலுக்கு அளிக்க வேண்டியதில்லை. அவரது முதல் புத்தகம் என்றளவில் நண்பனாக அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியது மட்டும் நம் கடமை அல்ல. தொடர்ந்து உழைப்பின்மை மிளிரும் சாரமற்ற படைப்புகளோடு மட்டுமே அவர் மகிழ்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையுள்ளவனாகவும் இருக்க வேண்டும். என் விமர்சனங்களெல்லாம் படைப்பின் மீதுதானே அன்றி. படைப்பாளன் மீது அல்ல.

புத்தகம் வெளியிடும்போது அங்கீகாரமும் கவன ஈர்ப்பும் கிடைக்க முதலில் அப்புத்தகம் ஓர் எழுத்தாளனால் வெளியிடப்பட்டு - இன்னொரு எழுத்தாளனால் பெற்றுக்கொள்ளப்பட்டு - மற்றொரு எழுத்தாளனால் அறிமுகப்படுத்தப்பட்டு - பிறிதொரு எழுத்தாளனால் விமர்சிக்கப்பட்டு – சக எழுத்தாளர்களால் வாசிக்கப்படுவதனால் கிடைக்குமேயன்றி சினிமாக்காரர்களின் திருக்கரங்களால் வெளியிடப்படுவதால் அல்ல.

அப்புறம் புத்தகம் போட விரும்பும் எழுத்தாளன் என்கிற பதம் வியப்பளிக்கிறது. எழுத்தாளன் ஏன் பதிப்பகத்தைத் தேடிப் போக வேண்டும்? மாணவன் தயாராகிவிட்டால் ஆசிரியர் தானே கிடைப்பார் என்பதைத்தான் உதாரணமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. உங்கள் எழுத்தில் சரக்கு இருந்தால் நீங்கள் பதிப்பகங்களைத் தேட வேண்டிய அவசியமே இருக்காது. வம்சி, தமிழினி, உயிர்மை, காலச்சுவடு போன்ற இலக்கியத்தரமான புத்தகங்களைப் பதிப்பிக்கிற எத்தனையோ பதிப்பகங்கள் இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு புத்தகங்கள் கொண்டு வரத்தான் செய்கிறார்கள். இந்த புத்தகக்கண்காட்சியில் ஒவ்வொரு பதிப்பகங்களும் எத்தனை புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறது என்று பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தொகுதியை வாசித்த பின் உங்கள் அபிப்ராயம் கொஞ்சம் மாறலாம் என்பது என் எண்ணம்.

Sunday, March 14, 2010

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - வாசக அபிப்ராயம்

எந்தவொரு புத்தகத்தையும் முன் தீர்மானங்கள் இன்றி வாசக பரிவோடு அணுகுவது என் வழக்கம். அப்படித்தான் ஆசை ஆசையாகக் காத்திருந்து ‘டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுதியையும் வாசித்தேன்.

தொகுப்பிலுள்ள 17 கதைகளுள் பெரும்பாலானவை கதாசிரியனே கதையினை விவரிக்கும் பாணியிலானவை. அதிலும் அனுபவக் குறிப்புகளே அதிகம். உரையாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உரைநடையே நூலாசிரியரின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது.

பரிசல்காரன் பெரும்பாலும் வெகுஜன தன்மையோடு இயங்குகிற எழுத்துக்காரர் என்பதால் உத்தி, நடை, கலையம்சம் போன்ற கறாரான அளவுகோல்களை விடுத்து வெகுஜனக் கதைகளுக்குறிய வரையறைகளுக்குள்ளாவது மட்டுப்படுகிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ‘தனிமை - கொலை தற்கொலை’, நான் அவன் இல்லை, ஜெனிஃபர், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், நட்சத்திரம் ஆகிய ஐந்து கதைகளைத் தவிர்த்து ஏனைய பன்னிரெண்டு கதைகளும் ‘நாட் ஸோ பிரிண்ட் ஓர்த்தி’ வகையரா. ‘காதல் அழிவதில்லை’ கதையை அதன் தேர்ந்த நகைச்சுவைக்காக மன்னிக்கலாம். ஜெனிஃபர் கதையில் வரும் ‘திருமணவாதி’ என்கிற பதப்பிரயோகம் ருசிகரமானது.

பின்னட்டையில் நூலாசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அதனை எழுதிய கரங்களுக்குத் தங்க காப்பு. மூன்றே வாக்கியங்களில் எழுத்தாளரின் பெயர் உட்பட ஆறு பிழைகள்.

நூலாசிரியர் பதினெட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்பது என்னுரையில் தெரிகிறது. கதைகளில் தெரியவில்லை.

***

பல காலமாக இசை கேட்கிறோம். நல்ல இசை வடிவங்களை நம்மால் பகுத்தறிய முடிகிறது. அதற்காக யாராவது ஒரு இயக்குனர் தன் படத்திற்கு இசை அமைக்கச் சொன்னால் ஒத்துக்கொள்வோமா?!

இணையத்தில் அதிகம் இயங்குகிறோம். பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். மைக்ரோசாஃப்டிலிருந்து அழைத்து அடுத்த புரொஜெக்டுக்கு நீங்கதான் ஹெட் என்றால் ஒப்புக்கொள்வோமா?!

சமூக மாற்றம் பற்றி பேசுகிறோம், விவாதிக்கிறோம். பிரதமரே அழைத்து திட்டக்குழுத் தலைவராக நீங்களே இருந்து விடுங்கள் என்றால் உடனே டில்லி கிளம்பி விடுவோமா?!

நிச்சயம் மாட்டோம். மேற்கண்ட பணிகளுக்கு நாம் தகுதியானவர் இல்லை என்கிற உறுதியான சுயமதிப்பீடு. ஆனால், ஒரு பதிப்பகம் புத்தகம் போட அணுகினால் சுயமதிப்பீட்டைக் காற்றில் கரைத்து விட்டு உழைப்பின்மை மிளிரும் வரிகளை எழுதிக் குவித்து விடுகிறோம். பல வருடங்களாக எழுத்தியக்கத்தில் இயங்குகிறவர்களுக்கு தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் எழுத்துப்பயிற்சியின் மூலமும் எது நல்ல எழுத்து என்கிற அளவுகோல் உருவாகவில்லை என்றால் அதன் துர்பலன் பதிப்பாளருக்கும் வாசகனுக்குமே போய்ச் சேரும்.

மஞ்சள் துண்டு கிடைத்ததும் மளிகைக்கடை வைக்க நினைத்த சுண்டெலி போல பின்னூட்டங்களின் அளவையும், வியந்தோதலையும் மனதிற்கொண்டு புத்தகம் போட துணிவது அபாயகரமானது. பிரதியின் பயணம் நீண்ட தூரம் கொண்டது. பலரால் பலகாலத்திற்கும் வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படுவதுதான் புத்தகத்தின் கவுரவம். பிரபல பதிவர் ஒருவரின் சமீபத்திய நூல் ஒன்றினை பழைய புத்தகக் கடையில் பார்க்க நேர்ந்தது. உள்ளீடற்ற எழுத்துக்களின் கதி இதுதான். தவிர குழுவினருக்காக எழுதப்பட்டு குழுவினர்களால் மட்டுமே வாங்கப்படுகிற சமாச்சாரத்திற்குப் பெயர் புத்தகமல்ல. சுற்றறிக்கை!

Tuesday, March 9, 2010

குசலம்!

தொலைபேசி அழைத்தது. எதிர்முனையில் அப்பா.

‘சொல்லுங்கப்பா...’

‘சங்கரா... எங்கப்பா இருக்கே... ஆபிஸ்லயா... வீட்லயா... ஏதும் வேலையா இருக்கியாப்பா...?!’

‘இல்லப்பா வீட்டுலதான் இருக்கேன். சொல்லுங்க... என்ன விஷயம்?’

‘ஒண்ணுமில்லடே... லெச்சுமி வீட்டுக்கு வந்தேன்...ஒங்கிட்ட பேசி மாசமாச்சேன்னு சும்மாதான் கூப்பிட்டேம்பா.’

‘ஏம்பா... சும்மா ஊரு சுத்தாதீங்கன்னு உங்களுக்கு எத்தனவாட்டி சொல்றது. இப்ப லெச்சுமி வீட்டுக்குப் போகலன்னு யாரு அழுதா...இந்த வயசுல இப்படி ஊர் சுத்தாட்டி என்ன?’ என் எரிச்சலைக் கொட்டினேன்.

‘பேரப்புள்ளைகள பாக்கனும்போல இருந்திச்சு... என்னால மெட்ராசுக்கு வந்து உன்னத்தான் பாக்க தோது படல... அதான் திருநெல்வேலிக்கு வந்துட்டேன். ஒங் மருமவன் கண்ணன் கட்டுரைப் போட்டியில பர்ஸ்ட் வந்துருக்கான்டே! அவனுக்கு என்னதாச்சும் வாங்கிக்கொடுக்கனுமேன்னு கிளம்பி வந்தேன்.’

‘என்ன வாங்கிக் கொடுத்தீங்க...?!’

‘காதிகிராப்ட்ல ஒரு நல்ல கடசல் பேனா வாங்கிக் கொடுத்தம்டே’

‘வௌங்கிரும். பத்து ரூவா பேனா வாங்கிக்கொடுக்க பதினைஞ்சு ரூவாக்கி டிக்கெட் வாங்கிட்டு திருநெல்வேலி போகனுமா... அதுவும் கடசல் பேனா... எந்தக் காலத்துல இருக்கீங்க...?’

‘கோவப்படாதா சங்கரா... பேனாவா முக்கியம்... ஒரு நா பேச்சுப்போட்டில இதே கடசல் பேனாவ ஆறுதல் பரிசா வாங்கிட்டு வந்து எங்கிட்ட உனக்குத்தான் மொத பரிசுன்னு பொய் சொன்னே... ஞாபகமிருக்கா...?!‘

‘அப்பா... இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறைச்ச இல்ல... இந்த எழவுக்குத்தான் உங்களுக்கு போன் பண்றதே இல்லை’

‘கோவப்படாத சங்கரா... பங்குனி உத்திரத்துக்கு எப்ப வர்ற... டிக்கெட் போட்டுட்டியா... லீவு எத்தன நாள்...?’

‘டிக்கெட்டெல்லாம் போடலை. போன வருஷம் வந்துட்டு பட்ட பாடு போதாதா... வீடெல்லாம் ஒழுகல், பச்சை விறக வச்சிகிட்டு அடுப்படில மல்லுக்கட்டி மல்லுக்கட்டி உஷாவுக்குக் காய்ச்சலே வந்திருச்சி...நாங்க வரலைப்பா...’

‘ஏய் அப்படிச் சொல்லாதடே... நல்ல நாளும் பொழுதுமா ஒத்தப்பயலா நான் வீட்டுக்குள்ள கெடக்கனுமாடே...உனக்கு என்ன வசதி வேணுமோ சொல்லு அதை பண்ணி வச்சிடுதம்டே... பொண்டாட்டி பிள்ளைகளோட ஊருக்கு வாடே...’

‘இப்படித்தான் போனவாட்டியும் சொன்னீங்க...மொதல்ல ஒடைஞ்சி கிடக்கிற ஓடெல்லாம் மாத்துங்க... புள்ளைக வெளையாடுற தார்சாவுல வெயில் விழுது... நல்ல தென்னங்கிடுகாப் பாத்து வேயுங்க... ’

‘செஞ்சுடுறேன் சங்கரா...’

‘யார் கால்ல விழுந்தாவது ஒரு சிலிண்டருக்கு ஏற்பாடு பண்ணுங்க... அடுப்பு நம்ம கணேசன் கடையில வாடகைக்கு எடுத்துக்கலாம்... ரெண்டு நாளைக்கு முன்னாடியே தண்ணி வண்டிக்கு சொல்லி தொட்டிய நெறைச்சி வையுங்க... சுடலிய வரச்சொல்லிடுங்க... பாத்திரம் கழுவ, வீடு பெருக்க ஒத்தாசையா இருக்கும்.’

‘சரிடே’

‘உஷா கன்னியாகுமரி போவனும்னு சொல்லிக்கிட்டே இருக்கா... ஒரு வண்டிக்கு சொல்லிடுங்க... நம்ம மகராசன் வண்டி பஜார்ல நிக்கும். அவன்கிட்டயே சொல்லிடுங்க...அப்புறம் நடுவீட்டு டியூப் லைட்டெல்லாம் ஒழுங்கா எரியுதா... முடுக்குல ஒரு லோ வாட்ஸ் பல்பு போட்டு வையுங்க....’

பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில் ஆட்டோ வந்து நின்றது. தினேஷ் ஸ்கூல் பேக், தண்ணீர் பாட்டில், லஞ்ச் கூடை சகிதம் இறங்கினான். இரண்டாம் வகுப்பு படிக்கிற பயலுக்கு எத்தா பெரிய புத்தக மூட்டை என்று நினைத்துக்கொண்டே அப்பாவுடனான உரையாடலைத் தொடர்ந்தேன்.

‘அப்பா... தினேஷூக்கு பல்லு பெலமில்லாம இருக்கு... பதனி கொடுக்கலாம்னு உஷாவோட அப்பா சொன்னார். பண்டாரபுரத்துக்கு போனீங்கன்னா ஜேபி பதனி தருவான். வாங்கி பாரதி மைனி வீட்டு பிரிட்ஜூக்குள்ள வெச்சிருங்க... கெட்டுப்போகாம இருக்கும்’

போனில் இருப்பது தாத்தாதான் என்பதைத் தெரிந்து கொண்ட தினேஷ் என்னிடமிருந்து போனைப் பிடுங்கினான்.

‘தாத்தா! தினேஷ் பேசறன். எப்படி இருக்கீங்க?’

‘ம்... நா நல்லா இருக்கேன். லெச்சுமி அத்தை எப்படி இருக்காங்க? கண்ண மச்சான் இருக்கானா?’

‘ம் இப்பத்தான் வந்தேன் தாத்தா! நீங்க சாப்பிட்டீங்களா?’

‘என்ன சாப்பிட்டீங்க தாத்தா?’

‘கால் வலின்னு சொன்னீங்களே எப்படி இருக்குது தாத்தா?’

‘அன்னிக்கு கண்ணாடிய தொலைச்சுட்டேன்னீங்களே... கிடைச்சுதா தாத்தா?’

சமயங்களில் இரண்டாம் வகுப்பிடம் எம்.பி.ஏ தோற்கும். எனக்கு கொஞ்சம் அழவேண்டும் போல் இருக்கிறது.