அன்புச் சண்டாளர்கள்
என் எழுத்தூக்கம் சூம்பிப்போய் விட்டது. சும்மா இருப்பதன் செளந்தர்யங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்கள் அலாதி! அலாதி! என்ன ஓய் ஆச்சு எனக் கேட்டு வரும் விசாரிப்புகளுக்காகச் சத்தில்லாத இந்த எழுத்து. முன்யோசனையின்றி திறந்து விட்ட கதவுகளைச் சாத்தும் வழியறியேன். வேறு வேலைகள் ஏதும் இருப்பின் நீங்கள் கிளம்பலாம்.
***
தனியாக வாழ்வதற்கும், தனி வீட்டில் வாழ்வதற்கும் இடையேயான வித்தியாசங்களை உணர்வதற்குள் ஐம்பதாயிரம் ஆவியாகி விட்டது. தனியன் எனினும் வீடென்று வந்து விட்டால் அதன் பேச்சைத்தான் கேட்டாக வேண்டும். தண்ணீர், மின்சாரம், கேபிள், பத்திரிகை, அசோசியேசன், வீட்டைக் கூட்டினேன், தெருவைக் கூட்டினேன், காவல் காத்தேன், காத்துக் கிடந்தேன் என பதினைந்து தேதிக்குள் பஸ்மாகிறது பாக்கெட்.
வெப்பக்கோடையை நீந்திக் கடக்க ‘பள பளா... ஜிலீர் பளீர்...’ என்றெழுதிப் பிழைத்தேன். ஒற்றோ, சந்தியோ வந்து மறிக்காத எழுத்து. ‘மருந்து வாங்க மறக்காம வாங்க’ என்ற ஒற்றை வரிக்கு பத்துச் சிறுகதைகள் எழுதினால் கிடைக்கும் ரெமுனரேஷன். தமிழே உன்னை வணங்குகிறேன். என் வாழ்வும் சாவும் உன்னோடுதான்!
***
மனதின் உளறல்களைக் கவனிக்கத் துவங்கினேன். உளறல் காற்பங்கு உதறல் முக்காற்பங்கு (சுகுமாரன் இந்தப் பதத்தை நாக்கில் விதைத்து விட்டார். சனியன் விடாமல் துரத்துகிறது...). எல்லாம் வாழ்வியல் சார்ந்த பயம். சம்பாத்தியத்திற்குத் தேவையான சாமர்த்தியம் குறித்து சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. ஓடும் வரை ஓடட்டும். அப்புறம் நடந்தோ, தவழ்ந்தோ, புறத்தியார் முதுகிலோ பயணிக்கலாம். நமக்கொரு சாமியார் கிடைக்காமலா போவார்?!
***
கொடுத்த பணத்தை வாங்க வழியில்லை பராபரமே எனப் புலம்பி எழுதி இருந்த வாரம் முழுக்க நான்கைந்து வெளிநாட்டு அழைப்புகள். உறக்கத்தின் அரக்கப் பிடியில் எடுக்கவில்லை. அழைத்திருந்தது ஆர்.ஆர்! பணப்பிரச்சனை என்றீர்களே ஒருவாரமாக முயற்சிக்கிறேன் எடுத்தீரில்லை என்று விசனப்பட்டார். வரைபடத்தில் அமெரிக்கா இருக்கும் திசையினைத் துழாவி நெடுஞ்சாண் கிடையாக விழுந்தேன். இந்த அன்புச் சண்டாளன் என்னை அழைக்கும் போதெல்லாம் நன்னாரி சர்பத் குடித்த மாதிரி இருக்கிறது.
உம்ம கல்யாணத்திற்குப் பணம்தான் பிரச்சனை எனில் லட்ச ரூபாய் தருகிறேன். உடனே பண்ணிக்கொள்! என்கிற இன்னொரு அன்புச் சண்டாளன் சித்தர்!
தகுதிக்கு மீறி எனக்குக் கிடைக்கின்றவற்றுள் பிரதானமானது அன்பு. அன்பை ஸ்வீகரிக்கவும் அருகதை இருக்க வேண்டுமில்லையா?! காலம் காலமாக காரணங்கள் ஏதுமின்றி கொண்டாடப்படுகிறேன். ‘முன்னம் நீ புரி நல்வினை’ என்கிறாள் கேண்டி.
***
தமிழினி சந்தா கேட்டு எழுதியதற்கு பரிசலின் பதிவிலிருந்து ஆறு பேர்களும் (விக்கி, சிவக்குமார், ராஜா, தியாகராஜன், செளந்தர்ராஜன், வெங்கட்ரமணன்) என் பதிவிலிருந்து நான் மட்டுமாக மொத்தம் சேர்ந்தது ஏழு. அனுப்பி வைத்து விட்டேன். அனேகமாக மே மாத இதழ் முதல் அவர்களுக்குக் கிடைக்கலாம்.
***
மின்சார மணியை முறைக்கும் மேளக்காரனைப் போல ஐபிஎல் போட்டிகளை வெறித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்கொயர் கட், ஆன் டிரைவ், லேட் கட் ஆடுபவனுக்கு மரியாதை இல்லை. குட் லென்த் பாலை கண்ணை மூடிக்கொண்டு ‘ங்கோத்தா’ என்று அடிக்கிறார்கள். ஸ்டைலுக்கோ, இலக்கணத்துக்கோ இடமில்லை. கீப்பரின் தலைக்கு நேர் பின்னே பறக்கிறது சிக்ஸர்!
ரத்தத்தில் அடித்துச் சொல்கிறேன் 20-20 ஆட்டங்கள் கிரிக்கெட்டைத் தின்று செரிக்கும்.
***
நடிகைகளை வேறெங்கு பார்ப்பதை விடவும் மைதானக் கும்பலில் பார்ப்பது பரவசம். வேறெந்த உடைகளை விடவும் ஜெர்ஸியில் தேவதைகளாக இருக்கிறார்கள். அழகு ராணி என்னவோ ஷில்பாதான். ஒரு நொடி காண்பித்தாலும் ‘கார்ஜியஸ்’ என முனங்கிக்கொள்கிறேன். நவீன யுகத்தில் பிறன்மனை நோக்குதல் பெரிய பாவமில்லைதானே?!
***
ஆகச்சிறந்த - சுந்தரராமசாமி
கறாரான - ஜெயமோகன்
கொடுங்கனவு - மனுஷ்யபுத்திரன்
அடாசு - சுஜாதா
யாவரும் - எஸ்.ரா
அசூயை - சாரு (பொறாமை என்பதுதான் உண்மையான அர்த்தம். இவரோ ஒவ்வாமை எனப் பொருள்பட பிரயோகிக்கிறார்)
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சில பிரத்யேக பதப்பிரயோகங்கள் இருக்கின்றன. இதுமாதிரியே பதிவர்களுக்கும் ஒரு க்ளிஷே பட்டியல் வைத்திருக்கிறேன்.
உண்மையான உண்மை - வடகரை வேலன்
எஸ்ஸெம்மெஸ் - பரிசல்
ஸ்நானப்ராப்தி - லக்கி
கந்தாயம் - நர்சிம்
நபும்சகன் - முதுகூகை
நல்லா இருங்கடே - ஆசிப்மீரான்
வேட்கை - உமா ஷக்தி
என்னவர் / பீட்ஸா / ஹாட் டாக் - விக்கினேஸ்வரி
நாவன்மை - *****
இப்பட்டியலை நீங்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்.
Comments
வர்ணிப்பு அருமை :)
ஷில்பா பார்த்த கையோடு படம் தேடி பிடித்து போஸ்டியமைக்கு வந்தனங்கள்! நல்லா இருக்கு :)
//இதுமாதிரியே பதிவர்களுக்கும் ஒரு க்ளிஷே பட்டியல் வைத்திருக்கிறேன்//
நல்லா ஃபாலோ பண்ணியிருக்கீங்க!
உன்னின் எழுத்துகளில் என்னின் ரசிப்பு தன்மை, புன்முறுவல் , முகம் மலர்தல் ஏன் ஏற்படுகிறது என புரியாமலேயே மீண்டும் மீண்டும் உன் எழுத்துக்களை வாசிக்கிறேன்.
ரொம்பவே என் இதயத்தில் உன் எழுத்துக்களால் மையம் கொண்டுள்ளாய்.
mac
mac
macareena
shilapaவ தாண்டி என்னால படிக்க முடியல...
ம்ம்ம்... முடியல
bulb:
செல்வேந்திரன்: முடியலத்துவம்?
நர்சிம் - கமல்
லக்கி - கலைஞர்
அதிஷா - எஸ்ஜே சூர்யா
கார்க்கி - சிம்பு
உண்மைத்தமிழன் - விஜயகாந்த்
செல்வேந்திரன் - சல்மான்கான்
வால்பையன் - சத்யராஜ்
புரூனோ - டாக்டர் ராஜசேகர்
டோண்டு - சோ.ராமசாமி
பைத்தியக்காரன் - கே பாலசந்தர்
கேபிள் - சுப்புடு
அனுஜன்யா - பாலா
ஆதி - சேரன்
வடகரை வேலன் - விஜயகுமார்
நகைச்ச்வையாக எடுத்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையிலே இந்த பின்னூட்டம்...
மொக்கை எழுத்தாளர்களை பத்தி போட்டுயிருக்க... அதனாலதான் என் பெயரை சேர்க்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன் ;))
//கேபிள் - சுப்புடு//
கேபிள் - சிக்கன் & கொத்துபரோட்டா
இதுதான் சரி.
நகைச்சுவையாக எடுத்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையிலே இந்த பின்னூட்ட(மு)ம்...
வசந்து உனக்கு ரொம்ப மட்டமான டேஸ்ட் :)) சரி இது சல்மானுக்கு தெரியவா போகுது :)) நல்லவேளை ஜான் ஆப்ரஹாம் கூட கம்பேர் பண்ணலையே. அது வரை சந்தோசம் :))
இதை பொய் எனச் சொன்னது பகிர்வு... நிகழ்வுகளையும் சுவாரஸ்மாய் வழங்குவதால் சுவைக்கத்தான் செய்கிறது....
:-)
//
ஆமாமாம்.பிறன்பங்களா நோக்குதலே பாவம்.
:)
உங்க ரெண்டு பேர் பதிவில எதை முதலில் பார்த்திருந்தாலும் நான் சந்தா செலுத்தியிருப்பேன்.
மற்றபடி பதிவும், சொற்பிரயோகங்களும் கனகச்சிதம்!
சுஜாதாக்கு (ஜல்லி உட்பட) நிறைய இருக்கு! பா.ராகவன் 'ஆத்மசுத்தி' என்ற சொல்லை அதிகம் பிரயோகிப்பார்னு நினைக்கிறேன். பாலகுமாரனுக்கு 'நெல்முனையளவு', கலைஞருக்கு 'சற்றொப்ப' (எழுத்தில்) இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகத்திற்கு வந்துச்சு!
அன்புடன்
வெங்கட்ரம்ணன்
கிரிக்கெட்டுக்கு பால் ஊத்தும் நாள் மிக அருகில்..