கோடாயுதம் சூழ் கோவை

ரத்த பந்துக்களைத் தவிர்த்த ஏனைய அனைத்தும் எனக்கு வாசிப்பின் மூலம் கிடைத்தவையே. புத்தகங்களின் வற்றாத கருணைக்கு விசுவாசியாக இல்லையெனில் செய்நன்றி கொன்றவனாவேன். வேறெந்த தினங்களையும் விட எனக்கு முக்கியமானது உலகப் புத்தக தினம். விஜயாவில் புத்தகம் வாங்கிய கையோடு நாஞ்சில் நாடனிடம் ஆசியும் பெற்றேன்.

பழந்தமிழ் இலக்கியங்களை விடாமல் ஆய்வதாகட்டும், நவீன தமிழிலக்கியத்தின் புதிய வரவுகளை உடனுக்குடன் படிப்பதாகட்டும், சிறுகதை, கட்டுரை எனத் தொடர்ந்த எழுத்தியக்கமாகட்டும் நாஞ்சிலாருக்கு வயசுக்கு மீறின உழைப்பு.

தொ. பரமசிவம் சங்க காலத்தில் தென்னை மரம் இருந்ததில்லை. சிலப்பதிகாரத்திற்கு முன்பு வரை மார் கச்சை அணியும் பழக்கம் பெண்களுக்கு இருந்ததில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறார். புறநானூற்றில் மட்டும் ஆறு இடங்களில் தென்னை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ‘கச்சை’ பற்றிய குறிப்பு இருக்கிறது என்று கும்பமுனி பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த ஒருவர் ‘தொ.பரமசிவம் ரொம்ப நல்ல ஆளாச்சே...சார்...’ என்று இழுத்தார். ‘அதுக்காக திருக்குறளை எழுதினது தொல்காப்பியர்னு சொன்னா ஒத்துக்குவீராவே...’ இதுதான் நாஞ்சில். நெற்றிப் பொட்டில் பட்டெனச் சுடும் வார்த்தைகள் அவருடையது. தமிழாய்ந்த தமிழனிடம் கள ஆய்வு என்றெல்லாம் கல்லுருட்ட முடியாது போலிருக்கிறது.

நாங்கள் பத்து நிமிடம் பேசுவதற்குள் ஆயிரத்தெட்டு இடைஞ்சல்கள். ‘சார் நான் கவிஞர் மன்னாதிமன்னன்! என் தொகுப்புக்கு முன்னுரை எழுதுங்க’ என்று மிகச் சாதாரணமாகக் கட்டளையிடுகிறார்கள். அப்படி வந்த ஆறு கட்டளைகளுள் ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘லவ் நிலாக்கள்’ மற்றொன்று ‘வாழ நினைத்தால் வாழலாம் (தேன் சிந்தும் கவிதைகளாம்!). ஒரு எழுத்தாளனின் தரமும், இயங்குதளமும் தெரியாமல் எத்தனைத் துணிச்சலாக கவிதை நோட்டை நீட்டுகிறார்கள்? அதுவும் அதிகார தோரணையோடு. இவர்களுள் எவரும் நாஞ்சிலாரின் ஒற்றை வரிகளைக் கூட வாசித்திருக்க மாட்டார்கள் என்றேன். ஆமோதித்தார் வேலாயுதம்.

***

சூழல் சார்ந்த பிரக்ஞையை என்னுள் விதைத்தவர் தியோடர் பாஸ்கரன். புதுப்புதுத் தகவல்களோடு அற்புதமான மொழி நடையில் தியோடர் எழுதிய அத்தனைக் கட்டுரைகளையும் மீள் வாசிப்பு செய்யும் முனைப்பில் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்கு’, ‘தாமரை பூத்த தடாகம்’ மற்றும் கானுறை வேங்கை (மொழி பெயர்ப்பு) ஆகிய மூன்றையும் வாசித்து முடித்தேன்.

தியோடர், புழங்கித் தேய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. சரியான துறைச் சொற்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிலிருந்து மறைந்த பழந்தமிழ்ச் சொற்களை வைத்துக்கொண்டு புதுமையான வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். ஆவணக் களரி, கருதுகோள்கள், கூடுகை, இயைந்து, நல்கை, பாலியல் வீரியம், இரலை, ஒற்றைக்கொம்பன் போன்ற பதப்பிரயோகங்கள் கிளர்ச்சியூட்டுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் காணுயிர்கள் பற்றிய குறிப்புகளைச் சுட்டும்போதும், ஆவணங்களிலிருந்து திரட்டிய வரலாற்றுத் தகவல்களை சுவைபடச் சொல்கையிலும் தியோடரின் வியர்வை மணம் வாசகனைக் கமழ்கிறது.

***

பாலைத் திணை காயத்ரி, அங்கிங்கெனாதபடி சித்தார்த் இருவருக்கும் அடியேன் நெடுநாள் வாசகன். தம்பதி சமேதராக கோவை ரெஸிடென்ஸியில் எழுந்தருளியவர்களை சஞ்ஜயோடும் பிரியாணியோடும் சென்று தரிசித்தோம். எந்த தமிழ்-ஆங்கில-பிரெஞ்சு-ஹூப்ரு-லிபி எழுத்தாளர் பெயரைச் சொன்னாலும், அத்தலைப்பின் கீழ் ஒருமணி நேரம் பேசுவார்கள் போலிருக்கிறது. ஆச்சிக்கும், ஐயருக்கும் வாசிப்பதொன்றே சுவாசம். சரியான இணை!

புதிதாக இணையத்தில் எழுதுகிறவர்கள் தேடிப்படிக்க வேண்டிய முக்கியமான எழுத்துக்கள் இவர்களுடையது என்பது என் அசைக்க முடியாத அபிப்ராயம்.

***

செம்மொழி மாநாட்டுப் பணிகளின் பெயரால் கோவையில் மரங்கள் கொலை செய்யப்படுவதைக் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருக்கிறேன். விமான நிலையத்தின் இருமங்கிலும் நின்று வரவேற்கவும், வழியனுப்பவும் செய்யும் மரங்களின் தலையாட்டலை நிறுத்தி விட்டார்கள்.
மரங்களடர்ந்த ராம்நகரில் தங்கள் கைவரிசையைக் காட்டியபோது அப்பகுதி இளைஞர்கள் மரங்களில் ஏறி எங்களை வெட்டிக்கொன்ற பின் மரங்களை வெட்டுங்கள் என்றார்கள். கோடாரிகள் தளர்ந்தன. மகிழ்ந்தேன்.

என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இடையர்பாளையம் - கணுவாய் சாலையில் இருந்த மிகப்பெரிய மரம் ஒன்றை விரிவாக்கம் என்று வெட்டி வீழ்த்தி விட்டார்கள். அம்மரத்தின் கீழ் மட்டும் சுமார் ஐம்பது கடைகளுக்கு மேல் இருந்தன. மூன்று கிராமங்களை இணைக்கும் சாலையின் சந்திப்பில் இருப்பதால் மரத்தின் கீழ் எப்போதும் ஜனத்திரள் இருக்கும். அதுதான் பேருந்து நிலையமும் கூட. எப்போதும் புள்ளினங்கள் இசை ஒலித்துக்கொண்டிருக்கும்.ஒவ்வொரு முறை அதைக் கடக்கையிலும் சுராவின் புளியமரம் நினைவில் அசையும். ஜனங்களின் முன் சூழல் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்ட உள்ளூர் கார்ப்பரேட் ஆடுகள் மாநாட்டுக் குழுக்களில் கிடைத்திருக்கும் பதவிகளால் உள்ளம் குளிர்ந்து இருக்கிறார்கள். மரமாவது மட்டையாவது!

ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்.

Comments

//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்.//

இயல்பு வாழ்க்கையில், இயற்கையின் தடங்களினை தகர்த்துத்தான் செம்மொழி மாநாடு சிறப்புற நடத்தவேண்டும் என்ற சிந்தனை வருத்தத்துக்குரிய விஷயமே :(
அழுவாச்சி காவியம் பாலைத்திணை படித்ததுண்டு (past tense). சித்தார்த்தை படிக்கற அளவுக்கெல்லாம் நாம worth இல்லிங்க!
:)))
Aranga said…
கும்பமுனி கோவக்கார இளைஞரா உருவெடுத்து நாளாச்சே (ஆனந்த விகடன்ல எழுத ஆரம்பிச்சதும்) .

லவ்நிலா , ஆகா , அருமையான தலைப்பு . :)

போக்குவரத்துக்கு இடைஞ்சலான மரம் வெட்டுதல் குறித்து தியோடரின் கட்டுரை படித்துள்ளேன் . நீங்களும் படித்திருக்கலாம் ,
//இதுதான் நாஞ்சில். நெற்றிப் பொட்டில் பட்டெனச் சுடும் வார்த்தைகள் அவருடையது//

உங்களுடையதும் தான் செல்வேந்திரன். நியாயமானதும் கூட...
பத்மா said…
புத்தகங்களின் வற்றாத கருணைக்கு விசுவாசியாக இல்லையெனில் செய்நன்றி கொன்றவனாவேன்

உண்மை உண்மை .நானும் அதையே வழிமொழிகிறேன் .
உங்கள் கோபம் பிடித்துள்ளது
Thamira said…
நான் கூட என் முதல் தொகுப்புக்கு சும்மாயிருந்தால் நாஞ்சிலிடம் முன்னுரை வாங்கலாமின்னு பார்த்தேன். :-))

(ஊஹூம்.. இதுக்கெல்லாம் அரிவாளை எடுத்துக்கிட்டு தொரத்தக்கூடாது..)
//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்//

கட் அவுட் க்கு வேறு மரங்கள் பலியாகாமல் யாரேனும் அறிவுறுத்தட்டும்
pradeep said…
வணக்கம்.
திரு.தியோடர் அவர்களை பற்றி பதிவு மகிழ்வு.மரம் வெட்டுவதை பற்றிய பதிவு மிக சரியான பதிவு.குறிப்பாக மரமாவது மட்டையாவது... மிக சிறப்பு.தொடரட்டும் பணி .வாழ்த்துக்கள்
/புதிதாக இணையத்தில் எழுதுகிறவர்கள் தேடிப்படிக்க வேண்டிய முக்கியமான எழுத்துக்கள் இவர்களுடையது என்பது என் அசைக்க முடியாத அபிப்ராயம் //

உமக்கும்,எமக்கும் அவங்க வலைப்பூ முகவரி தெரியும். புதியவர்கள் அறிய ஒரு சுட்டி குடுத்திருக்கலாம்லா?? திருந்த செய்ல :))
செம்மொழி மாநாடு என்ற பெயரில் முதல் பலி மரம்.
இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்க என்று பொறுத்திருந்து பாருங்கள்.

...........

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
(இந்த வலைப்பூவிற்கு புதியவள்)
//கோவையில் மரங்கள் கொலை செய்யப்படுவதை// சரியான பதப் பிரயோகம். ஆமோதிக்கிறேன்!
vaanmugil said…
//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்//

ஹே! சூப்பர்ப்பா நீ இப்படி பேசி பாத்ததே இல்ல.

எனக்கு மரம் வெட்டுற பயலுகள வெட்டனும்னு தோணுது.
Indian said…
//தொ. பரமசிவம் சங்க காலத்தில் தென்னை மரம் இருந்ததில்லை. சிலப்பதிகாரத்திற்கு முன்பு வரை மார் கச்சை அணியும் பழக்கம் பெண்களுக்கு இருந்ததில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறார். புறநானூற்றில் மட்டும் ஆறு இடங்களில் தென்னை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ‘கச்சை’ பற்றிய குறிப்பு இருக்கிறது என்று கும்பமுனி பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த ஒருவர் ‘தொ.பரமசிவம் ரொம்ப நல்ல ஆளாச்சே...சார்...’ என்று இழுத்தார். ‘அதுக்காக திருக்குறளை எழுதினது தொல்காப்பியர்னு சொன்னா ஒத்துக்குவீராவே...’ இதுதான் நாஞ்சில். நெற்றிப் பொட்டில் பட்டெனச் சுடும் வார்த்தைகள் அவருடையது. தமிழாய்ந்த தமிழனிடம் கள ஆய்வு என்றெல்லாம் கல்லுருட்ட முடியாது போலிருக்கிறது.
//

பார்க்க

Part II: Sexual freedom, caste regulations, and Hindu acculturation in Kerala
பத்மா said…
நானும் தேடினேன் கிடைக்க வில்ல .சுட்டி தாங்க செல்வேந்திரன்
Unknown said…
//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன். //

வழி மொழிகிறேன்.

சாலை விரிவாக்கத்திற்கு இடையூரின்றி ஓரமாக இருக்கும் மரங்களையும் வெட்டி வீழ்த்தி கமிஷன் பார்க்கும் அதிகாரிகளையும் அரசியல் வியாதிகளையும் என்னவென்று சொல்வது.
Unknown said…
//சஞ்ஜயோடும் பிரியாணியோடும் சென்று தரிசித்தோம்//

:))))))))))
Unknown said…
//ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்//

ம்ம்ம்ம்ம்.
Unknown said…
//காணுயிர்கள் // இதுக்கு என்ன பொருள்? தியோடர் பாஸ்கரனோட சூழல்சார் எழுத்துக்கள அதிகம் படிச்சதில்ல. திரைப்படம் பற்றிய கட்டுரைகள தான் படிச்சிருக்கேன். தேடிப்படிக்கறேன்.

தியோடர் தொகுத்த மா. கிருஷ்ணனின் கட்டுரைகள் ”மழைக்காலமும் குயிலோசையும்”(காலச்சுவடு) நல்ல குழந்தைகள் புத்தகம்.

கானுறை வேங்கை.... செம சொற்சேர்க்கை இல்ல இது?
Unknown said…
தமிழ்-ஆங்கில-பிரெஞ்சு-ஹூப்ரு-லிபி //

முந்தைய நான்கும் மொழி. லிபி என்பது மொழி அல்ல. எழுத்து உரு.
Sanjai Gandhi said…
புடலங்காய் செம்மொழி மாநாடு வேணும்னு எவன் கேட்டானோ? ஏற்கனவே கோவைக்கு செஞ்சி கிழிசதெல்லாம் போதவில்லை போலும்.. சாலைகளையும் மரங்களையும் கொத்திக் கொண்டிருக்கிறார்கள்..
வினோ said…
மரங்கள் இல்ல கோவை நகரமா..வருத்தமாக இருக்கிறது..

Popular Posts