Friday, February 21, 2014

அம்மா பதிப்பகம்!

ராயல்டியெல்லாம் தர முடியாது வேண்டுமானால் ராயல் பேக்கரியில் டீ வாங்கித் தருகிறேனென பதிப்பாளர்கள் பகுமானம் காட்டுவதால் எழுத்தாளர்கள் அண்ணாஹசாரே வழி அறப்போராட்டமாக வீட்டு வாசலில் தர்ணா செய்யுமளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. இது ஒரு பக்கமென்றால் பர்ஸ்ட் ஃபார்ம் அச்சில் ஓடிக்கொண்டிருக்கும்போதே நூலின் பிடிஎஃப்பை இணையத்தில் இலவசமாக வெளியீட்டு ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி...’ என கட்டையைக் கொடுக்கும் வன்கொடுமையும் நடக்கிறது. கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் ”பாஞ்சாயிரம் மட்டும் கொடுங்க பாஸ் கவிதை பொஸ்தவம் + வெளியீட்டு விழா + ரெண்டு ரெவியூன்னு ஜமாய்ச்சுடலாம்” என கேரண்டி பிளஸ் வாரண்டியுடன் புதிதாய் முளைத்திருக்கும் நமக்கு நாமே மாமே பதிப்பகங்கள் இன்னொரு புறம்.

என்னங்க இது பலான ஐட்டமா இருக்கு என வாசகர்கள் விழி பிதுங்க ’மடையர்களே.. இது டிஜிமார்டனிஸம்டா’ என பொடனியில் தட்டுகிறார் ஒரு சீனியர். ஆயிரம் பக்கத்துக்கு குறையா எழுதுற எல்லாமே குறுநாவல்தான் என அச்சுறுத்துகிறார் இன்னொருவர். கதை உங்களுதா இருக்கலாம் ஆனா தொகுத்தது நான்தான். ஆக்சுவலா என் பேருதான் அட்டையில வரணும் என சட்டையை மாற்றுகிறார் மற்றொருவர். ‘என்னய்யா நடக்குது இங்க...?’ என தமிழ் வாசகாஸ் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.

அம்மா திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா தியேட்டர் போல “அம்மா பதிப்பகம்” ஒன்றினை உருவாக்குவதுதான் இந்த அலப்பறைகளைத் தட்டிக் கேட்க ஒரே வழி எனும் எனது யோசனையை சொன்னதுமே சமகால சிந்தனையாளர் அதிஷா ‘அமோகமான ஐடியா. மலிவு விலையில் கவிதைப்புத்தகம் போடுவதன் மூலம் தமிழகத்திலுள்ள இரண்டரைக் கோடி கவிஞர்களின் வாக்குகளை அள்ளிவிடலாம்’ என்கிறார். ட்வீட்டுகளின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கப் போராடி வரும் சில்டுபியர் என்பார் ‘கவிதைகள் ப்ளேட் 2 ரூபாய்க்கும், சிறுகதைகளை 4 ரூபாய்க்கும் விற்கலாம்’ என தன் யோசனையை முன் வைக்கிறார். இதன் சாத்தியங்களைச் சற்றே சாய்ந்தமானிக்கு அமர்ந்து அவதானிக்கையில் ஏழு கோடி தமிழர்களில் குடிப்பவர்களைக் காட்டிலும் கவிதைகளை வடிப்பவர்கள் ஜாஸ்தி என்பதால், டாஸ்மாக் வருவாய் எனும் சரித்திர சாதனையையே கூட அம்மா பதிப்பகம் முறியடிக்கக் கூடும்.

என்னென்ன செய்யலாம்?

1. மலிவு விலையில் புத்தகங்களைப் பதிப்பிக்கலாம். ஒரே கண்டிசன் பின்னட்டையிலும் முன்னட்டையிலும் பச்சைப் பின்னணியில் குதிரை இறக்கை பறக்கும். தலைப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

2. நூறு ஜோடிகளுக்குத் திருமணம் செய்துவிப்பது மாதிரி ஒரே மேடையில் நூறு கவிஞர்களின் நூல்களை வெளியிடலாம். இதனால் பாஞ்சாயிரம் பதிப்பகத்தாரின் ஆசை வார்த்தைக்குப் பலியாகும் புதிய எழுத்தாளர்கள் பயனடைவார்கள்.

3. அம்மா பதிப்பக எழுத்தாளர்கள் எல்லாருமே ’அம்மா எழுத்தாளர் நலவாரியத்தின்’ பயனாளிகள். அடையாள அட்டை வழங்கப்படும். சீரான இடைவெளியில் ராயல்டி வழங்கப்படுவதோடு தீபாவளிக்கு ஒரு கதர் ஜிப்பாவும், பொங்கலுக்கு ஒரு வேட்டியும் ரேசன் கடைகளில் வழங்கப்படும்.

4. சீனியர் எழுத்தாளர்கள் அம்மா பதிப்பகத்தின் நூல்களைப் பாராட்டிப் பேச, எழுத எவ்வித தடையுமில்லை. அபகீர்த்தி உருவாக்கும் விமர்சனங்களைச் செய்தால் சிறையில் தள்ளப்படுவார்கள்.

5. அதிமுக மாநாடுகள் நடைபெறும் இடங்களில் கவிஞர்களுக்கென்று ஒரு ஓரமாகப் பந்தல் போட்டுத் தரப்படும். அங்கே கவியரங்கம்  நடத்தி எவ்வளவு வேண்டுமானாலும் அணத்திக்கொள்ளலாம்.

6. ஐநூறு பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் எந்த நூலும் அரசுடமை ஆக்கப்பட்டு அம்மா பதிப்பகத்தால் மறுபிரசுரம் செய்யப்படும்.

7. ஒவ்வொரு பத்திரிகைகளும் ஒவ்வொரு இதழிலும் தலா ஐந்து அம்மா பதிப்பக நூல்களுக்கெனும் மதிப்புரைகள் எழுதவேண்டும். மரியாதையாகத்தான் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

8. குடிப்பழக்கத்தை தூக்கிப் பிடிக்கும் எழுத்தாளர்களின் நூல்கள் டாஸ்மார்க்கிலும், தின்பதைப்பற்றியே அதிகமும் எழுதும் சாப்பாட்டுப் புராணிகர்களின் நூல்கள் அம்மா உணவகத்திலும், புனைகதைகள் சட்டமன்ற வளாகத்திலும் விற்பனைக்கு வைக்கப்படும். சினிமா தமிழர்களின் உயிர்நாடி என்பதால் அப்புத்தகங்கள் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கச் செய்யலாம்.

9. இஸங்கள் பொதுமக்களுக்குப் பேராபத்தை விளைவிப்பதால், பின்நவீனத்துவம் பற்றி பேசவும் எழுதவும் தமிழக அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வெழுதி லைசென்ஸ் பெற வேண்டும்.

10. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதும் நாவலாசிரியர்கள் நார்த் அமெரிக்கா, சவுத் கொரியாஸ்வீடன் போன்ற நாடுகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான நியுஸ்பிரிண்டைத் தாங்களே நேரில் வாங்கி வர உத்தரவிடலாம்.

Tuesday, February 18, 2014

எனது சனமே...

ஜோ டி குரூஸூக்கு விஜயா பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். வேலாயுதம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சாகித்ய அகாதமி பரிசு பெறும் எழுத்தாளர்களுக்கு விழா எடுத்து வருகிறார். தமிழகத்தில் எந்த இலக்கிய அமைப்பும் செய்யாத சாதனை இது. பொன்னீலனுக்கு விழா எடுத்த கலை இலக்கியப் பெருமன்றம் அதே ஊரைச் சேர்ந்த நாஞ்சில் நாடன் பரிசு வென்றபோது  மெளனம் சாதித்தது. சு.வெங்கடேசனுக்கு ஊர் ஊராக விழா எடுத்த தமுஎச ஜோ டி குரூஸ் யார் என்கிறார்கள். இந்தச் சூழலில் காய்த்தல் உவத்தல் இன்றி ஒரு பதிப்பகம் இத்தகு விழாக்களை முன்னெடுப்பது பாராட்டுக்குரியது.

பாலுமகேந்திரா மறைவினால் பவா வரவில்லை. பெருமாள்முருகனும் ஏதோ காரணத்தினால் விழாவில் கலந்து கொள்ளவில்லை. விஜயா வேலாயுதம் வந்திருந்தவர்களை வரவேற்றார். நாஞ்சில் நாடன் தலைமையுரையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் நெய்தல் நிலப்பதிவுகளை விரிவாகப் பேசினார். அசலான நெய்தல் படைப்புக்கு தமிழிலக்கியம் 2000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்ததைக் குறிப்பிட்டார். அடுத்துப் பேசிய க.வை.பழனிச்சாமி (ஆதிரை நாவலாசிரியர்) ‘கொற்கை’ நாவல் குறித்த விரிவான ஆய்வுரையினை வழங்கினார். கொற்கை சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு க்ளாசிக் என்பதை சான்றுகளுடன் நிறுவினார். க.வை.பழனிச்சாமி வலுவான தர்க்கங்களை முன்வைத்து உரையாடக் கூடியவர். ஊஞ்சல் சந்திப்பொன்றில் சமகால கவிதைகளைப் பற்றிய அவரது கறாரான விவாதங்களைக் கேட்டிருக்கிறேன். பார்வையாளராக வந்திருந்த புவியரசு சுருக்கமான உரையாற்றினார்.

லெந்து காலப் பாடலான ‘எனது சனமே...நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்...சொல் எதிலே உனக்குத் துயர் தந்தேன்...’ பாடலை உரத்த குரலில் பாடி தன் ஏற்புரையைத் துவக்கினார் ஜோ. அவரது பங்களிப்பைப் பற்றிய புரிதலற்ற பழமைவாதிகள் அவரைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். எழுத்தாளன் தங்களுக்குக் கட்டுப்பட்டவனென உறுதியாக நம்புகிறார்கள். ‘நேற்றிரவு கூட எனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது. ஊர்ப்பக்கம் வரும்போது வெட்டிப் போடுவேன் என போனில் மிரட்டுகிறார்கள்’ என்றார் ஜோ. அதிகார மையங்களை நோக்கி நீதியின் கேள்விகளை முன் வைக்கும் எவருக்கும் நிகழ்வதுதான். சில அறிவுஜீவிகளும் இந்துத்துவ எதிர்ப்பு எனும் போர்வையில் இந்தப் பழமைவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு ஜோ டி குரூஸை விமர்சித்து வருகிறார்கள். அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆளாக எழுத்தாளன் ஒருபோதும் இருப்பதில்லை. சுருக்கமான ஏற்புரைக்குப் பின் வாசகர்களை கேள்விகள் கேட்கச் சொல்லி பதிலளித்தார். பெரும்பாலான பதில்களுக்கு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன். ஜோ நகையுணர்வு மிக்கவர்.

விழா முடிந்ததும் அவரை சந்தித்தேன். சாத்தான்குளம் என்றதும் தமிழறிஞர் அ.ராகவன் எழுதிய நம் நாட்டுக் கப்பற்கலையில் வரும் சில அபூர்வ தகவல்களை நினைவு கூர்ந்தார். பல்வேறு நூல்களின் மூலமாக தமிழர் வாழ்வியலை ஆவணப்படுத்திய அறிஞர் அவர். கடல் வாழ்வு மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. கிளிஞ்சல்களை, சிப்பிகளை, பழங்கால வாணிபத்தில் புழங்கிய நாணயங்களை, விதம் விதமான சங்குகளை, கடல்வாழ்வு குறித்த ஓவியங்களை சேகரித்திருந்திருக்கிறார். கோநகர் கொற்கை, தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், நம் நாட்டுக் கப்பற்கலை,  தமிழ்நாட்டு படைகலன்கள் போன்ற அவரது நூல்கள் ஜோவிற்கு உதவியிருக்கக் கூடும்.

இந்த முறை ஊருக்குச் சென்றிருந்தபோது அப்பாவின் சேமிப்புகளைப் பீராய்ந்து கொண்டிருந்தேன். சாத்தான்குளம் அ.ராகவனைப் பற்றிய ஏராளமான நாளிதழ் கத்தரிப்புகள் கிடைத்தன. ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரீகமும், இசையும் யாழும், தமிழ்நாட்டு அணிகலன்கள், தமிழர் பண்பாட்டில் தாமரை, தமிழ்நாட்டுத் திருவிளக்குகள், வேளாளர் வரலாறு, பெண்ணுரிமையும் மதமும், கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?, தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலைகள் எனத் தொடர்ந்து இருபதாண்டுகள் எழுத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர். இவரது சேகரங்கள் ஆய்வாளர்களுக்குப் பெரும்கொடையாக இன்றளவும் திகழ்கின்றன. இடையில் சில காலம் கொழும்பு சென்று அச்சகம் நடத்தியுள்ளார். பெரியாரின் நண்பராக குடியரசுப் பதிப்பகத்தின் பொறுப்பேற்று பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அப்பாவின் நாளிதழ் குறிப்புகளுள் ஒன்று அவர் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த செய்தியை தெரிவிக்கிறது. அ.ராகவன் எங்கள் பரம்பரை வீட்டின் மிக அருகேயுள்ள தெற்குத் தெருவில்தான் வசித்திருந்திருக்கிறார். அவர் வாழ்ந்த வீட்டை சில காலம் எங்கள் குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.

இன்று எங்கள் ஊரில் அப்படியொரு தமிழறிஞர் வாழ்ந்ததற்கான எந்த தடயங்களும் கிடையாது. எழுபதைத் தாண்டிய சிலரின் நினைவில் மட்டும்தான் அ.ராகவன் எஞ்சியிருக்கிறார். அதுவும் ஓர் ஆசிரியராகத்தான் அன்றி எழுத்தாளராக அல்ல. எங்கள் நூலகத்தின் ஒரு மூலையில் எவராலும் சீந்தப்படாமல் அவரது நூல்கள் பஞ்சடைத்துக் கிடக்கின்றன. அவரது நினைவைப் போற்றும் எந்தக் காரியமும் கடந்த முப்பதாண்டுகளில் எங்களூரில் நிகழ்ந்ததாய் குறிப்பில்லை.

வீடு திரும்புகையில் ஜோ டி குரூஸின் லெந்துப் பாடல்தான் மனமெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது ‘‘எனது சனமே...நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்...’

Saturday, February 1, 2014

பனங்கிழங்கு மனிதர்கள்

ஆர்ட்டிக் டெர்ன் பறவை தன் வாழ்நாளில் மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இது பூமியிலிருந்து மூன்று முறை நிலவுக்குச் சென்று வரும் தூரம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படியொரு ஆய்வு அப்பா மீது நடத்தப்படவில்லை. டெமாகஸிடம் நாட்டைக் கொடுத்து விட்டு கடலில் எழும் காலைச்சூரியனின் மறுபக்கத்தைக் காண கிளம்பிய உலிஸஸ்தான் அவருக்கு கச்சிதமான உதாரணம். அப்படியொரு மாசாத்துவான். திடீரென பக்கவாதம் தாக்கி முகம் கோணி நாக்கு உள்ளிழுத்து கன்னம் வைக்கும் திருடர்களால் வளைக்கப்பட்ட ஜன்னலைப் போல கைகளும் கால்களும் எதிரெதிராய் திருகின கோலத்தில் அவசர சிகிழ்சைப் பிரிவிலிருந்தார். வலதுகை மட்டும் வேலை செய்கிறது என்றார்கள் மருத்துவர்கள்.

கண் விழித்ததும் முதலில் கேட்டது பேப்பரும் பேனாவும். படுக்கையை பாதியளவும் எழும்பும்படி தூக்கி நிறுத்தச் சொன்னார். ஒருபக்கமாக ஒருக்களித்துச் சரிந்து கதிரேசன், கதிரேசன், கதிரேசன் என பத்திருபது தடவை கையெழுத்திட்டுப் பார்த்தார். இருபது போஸ்ட்கார்டுகளை வாங்கி வரச் செய்து சரசரவென்று  சக வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கடிதங்களை எழுத ஆரம்பித்தார். உடலுக்குச் சுகமில்லை. வர்த்தக வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை. விரைவில் மீண்டு வருவேன். சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுங்களென. மணி மாலை நான்கரையைத் தாண்டியிருந்தது. ஜங்ஷன் சென்று ஆர்.எம்.எஸ்-ல் கடிதங்களைச் சேர்ப்பிக்கவும் என பேப்பரில் எழுதிக்காட்டினார். நான் உறைந்து போய் அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த எழுபத்து நாலு வயதில் இந்த மனிதனின் மனத்திண்மை எனக்கு இருபத்துநாலில் கூட வாய்த்ததில்லை.

அவர் நினைத்தபடி மீள முடியவில்லை. திருநெல்வேலி, சேலம், ஆந்திரா, கோயம்புத்தூர் என சிகிழ்சைக்காக அலைந்தோம். முதலில் பேச்சு வந்தது. பிறகு நடக்க முடிந்தது. முகக்கோணல் நேரானது. இடதுகை மட்டும் வரவேயில்லை. அவரது அன்றாடங்கள் அனைத்தும் தொலைந்து நாட்கணக்கில் அறைக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. மூன்று நாளிதழ்களை வாசித்து, டிவி பார்த்து, இளவெயினியுடன் விளையாடி, பூங்காவில் அமர்ந்து பறவைகளை வேடிக்கை பார்த்தபடி என எதைச் செய்தாலும் தனிமையைப் போக்க முடியவில்லை. உழைத்து வாழ்ந்த நாட்களின் உற்சாகம் வேறெதிலும் இல்லை. நாங்கள் என்ன செய்தும் அவரது நினைவு ஊரிலேயே இருந்தது. எது என்னவாயினும் என்னை ஊரில் கொண்டு போய் விடு என்பதே அவரது ஒற்றைக் கோரிக்கையாக இருந்தது.

நோயுற்ற ஒருவரை அவரது அந்திமத்தில் எப்படி தனித்து விட முடியும் எனும் மனக்குழப்பத்தில் இருந்தேன். தற்செயலாக போனில் அழைத்த விகே அண்ணாச்சி நாஞ்சிலின் சாலப்பரிந்து சிறுகதையைச் சொன்னார். செம்மண்காட்டில் சூரியன் அறியாமல் பூமிக்கு அடியில் முளைத்துக் கிடக்கும் பனங்கிழங்கு போன்றவர்கள் பெரியவர்கள். அவர்களை வேரடி மண்ணோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவது வென்னீர் அடுப்புக்குள் வைப்பதைப் போல என்பதை இட்லிக்கார காளியம்மையின் வாழ்க்கைச் சித்திரத்துடன் புரிய வைக்கிறது  இச்சிறுகதை . கதையை வாசித்து திகைத்து அச்செடுத்து திருவிடம் கொடுத்தேன். அவள் கதையைப் படித்து விட்டு நிலைகுத்திய பார்வையில் சொன்னாள் “நாம மாமாவை காளியம்மையா ஆக்கிருவோமோன்னு பயமா இருக்கு..” அவள் கண்களில் நீர்திரள் உருவாகியிருந்தது.

இன்றிரவு கிளம்பி ஊருக்குச் செல்கிறோம். அப்பாவை அழைத்துக்கொண்டு. என்னால் ஒருபோதும் உலிஸஸ் ஆகமுடியாது. டெமாகஸாகவாவது ஆக முடிகிறதா பார்க்கலாம்.

சாலப்பரிந்து இங்கே வாசிக்கலாம்.