பனங்கிழங்கு மனிதர்கள்

ஆர்ட்டிக் டெர்ன் பறவை தன் வாழ்நாளில் மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இது பூமியிலிருந்து மூன்று முறை நிலவுக்குச் சென்று வரும் தூரம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படியொரு ஆய்வு அப்பா மீது நடத்தப்படவில்லை. டெமாகஸிடம் நாட்டைக் கொடுத்து விட்டு கடலில் எழும் காலைச்சூரியனின் மறுபக்கத்தைக் காண கிளம்பிய உலிஸஸ்தான் அவருக்கு கச்சிதமான உதாரணம். அப்படியொரு மாசாத்துவான். திடீரென பக்கவாதம் தாக்கி முகம் கோணி நாக்கு உள்ளிழுத்து கன்னம் வைக்கும் திருடர்களால் வளைக்கப்பட்ட ஜன்னலைப் போல கைகளும் கால்களும் எதிரெதிராய் திருகின கோலத்தில் அவசர சிகிழ்சைப் பிரிவிலிருந்தார். வலதுகை மட்டும் வேலை செய்கிறது என்றார்கள் மருத்துவர்கள்.

கண் விழித்ததும் முதலில் கேட்டது பேப்பரும் பேனாவும். படுக்கையை பாதியளவும் எழும்பும்படி தூக்கி நிறுத்தச் சொன்னார். ஒருபக்கமாக ஒருக்களித்துச் சரிந்து கதிரேசன், கதிரேசன், கதிரேசன் என பத்திருபது தடவை கையெழுத்திட்டுப் பார்த்தார். இருபது போஸ்ட்கார்டுகளை வாங்கி வரச் செய்து சரசரவென்று  சக வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கடிதங்களை எழுத ஆரம்பித்தார். உடலுக்குச் சுகமில்லை. வர்த்தக வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை. விரைவில் மீண்டு வருவேன். சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுங்களென. மணி மாலை நான்கரையைத் தாண்டியிருந்தது. ஜங்ஷன் சென்று ஆர்.எம்.எஸ்-ல் கடிதங்களைச் சேர்ப்பிக்கவும் என பேப்பரில் எழுதிக்காட்டினார். நான் உறைந்து போய் அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த எழுபத்து நாலு வயதில் இந்த மனிதனின் மனத்திண்மை எனக்கு இருபத்துநாலில் கூட வாய்த்ததில்லை.

அவர் நினைத்தபடி மீள முடியவில்லை. திருநெல்வேலி, சேலம், ஆந்திரா, கோயம்புத்தூர் என சிகிழ்சைக்காக அலைந்தோம். முதலில் பேச்சு வந்தது. பிறகு நடக்க முடிந்தது. முகக்கோணல் நேரானது. இடதுகை மட்டும் வரவேயில்லை. அவரது அன்றாடங்கள் அனைத்தும் தொலைந்து நாட்கணக்கில் அறைக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. மூன்று நாளிதழ்களை வாசித்து, டிவி பார்த்து, இளவெயினியுடன் விளையாடி, பூங்காவில் அமர்ந்து பறவைகளை வேடிக்கை பார்த்தபடி என எதைச் செய்தாலும் தனிமையைப் போக்க முடியவில்லை. உழைத்து வாழ்ந்த நாட்களின் உற்சாகம் வேறெதிலும் இல்லை. நாங்கள் என்ன செய்தும் அவரது நினைவு ஊரிலேயே இருந்தது. எது என்னவாயினும் என்னை ஊரில் கொண்டு போய் விடு என்பதே அவரது ஒற்றைக் கோரிக்கையாக இருந்தது.

நோயுற்ற ஒருவரை அவரது அந்திமத்தில் எப்படி தனித்து விட முடியும் எனும் மனக்குழப்பத்தில் இருந்தேன். தற்செயலாக போனில் அழைத்த விகே அண்ணாச்சி நாஞ்சிலின் சாலப்பரிந்து சிறுகதையைச் சொன்னார். செம்மண்காட்டில் சூரியன் அறியாமல் பூமிக்கு அடியில் முளைத்துக் கிடக்கும் பனங்கிழங்கு போன்றவர்கள் பெரியவர்கள். அவர்களை வேரடி மண்ணோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவது வென்னீர் அடுப்புக்குள் வைப்பதைப் போல என்பதை இட்லிக்கார காளியம்மையின் வாழ்க்கைச் சித்திரத்துடன் புரிய வைக்கிறது  இச்சிறுகதை . கதையை வாசித்து திகைத்து அச்செடுத்து திருவிடம் கொடுத்தேன். அவள் கதையைப் படித்து விட்டு நிலைகுத்திய பார்வையில் சொன்னாள் “நாம மாமாவை காளியம்மையா ஆக்கிருவோமோன்னு பயமா இருக்கு..” அவள் கண்களில் நீர்திரள் உருவாகியிருந்தது.

இன்றிரவு கிளம்பி ஊருக்குச் செல்கிறோம். அப்பாவை அழைத்துக்கொண்டு. என்னால் ஒருபோதும் உலிஸஸ் ஆகமுடியாது. டெமாகஸாகவாவது ஆக முடிகிறதா பார்க்கலாம்.

சாலப்பரிந்து இங்கே வாசிக்கலாம்.

Comments

manjoorraja said…
மிகவும் வருந்துகிறேன். ஊருக்கு போனால் அவருக்கு நிச்சயம் உடல் நலம் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
KParthasarathi said…
மனம் நெகிழ்ந்தது. மிக அழகாக எழுதி உள்ளீர்கள்

Popular Posts