எனது சனமே...

ஜோ டி குரூஸூக்கு விஜயா பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். வேலாயுதம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சாகித்ய அகாதமி பரிசு பெறும் எழுத்தாளர்களுக்கு விழா எடுத்து வருகிறார். தமிழகத்தில் எந்த இலக்கிய அமைப்பும் செய்யாத சாதனை இது. பொன்னீலனுக்கு விழா எடுத்த கலை இலக்கியப் பெருமன்றம் அதே ஊரைச் சேர்ந்த நாஞ்சில் நாடன் பரிசு வென்றபோது  மெளனம் சாதித்தது. சு.வெங்கடேசனுக்கு ஊர் ஊராக விழா எடுத்த தமுஎச ஜோ டி குரூஸ் யார் என்கிறார்கள். இந்தச் சூழலில் காய்த்தல் உவத்தல் இன்றி ஒரு பதிப்பகம் இத்தகு விழாக்களை முன்னெடுப்பது பாராட்டுக்குரியது.

பாலுமகேந்திரா மறைவினால் பவா வரவில்லை. பெருமாள்முருகனும் ஏதோ காரணத்தினால் விழாவில் கலந்து கொள்ளவில்லை. விஜயா வேலாயுதம் வந்திருந்தவர்களை வரவேற்றார். நாஞ்சில் நாடன் தலைமையுரையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் நெய்தல் நிலப்பதிவுகளை விரிவாகப் பேசினார். அசலான நெய்தல் படைப்புக்கு தமிழிலக்கியம் 2000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்ததைக் குறிப்பிட்டார். அடுத்துப் பேசிய க.வை.பழனிச்சாமி (ஆதிரை நாவலாசிரியர்) ‘கொற்கை’ நாவல் குறித்த விரிவான ஆய்வுரையினை வழங்கினார். கொற்கை சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு க்ளாசிக் என்பதை சான்றுகளுடன் நிறுவினார். க.வை.பழனிச்சாமி வலுவான தர்க்கங்களை முன்வைத்து உரையாடக் கூடியவர். ஊஞ்சல் சந்திப்பொன்றில் சமகால கவிதைகளைப் பற்றிய அவரது கறாரான விவாதங்களைக் கேட்டிருக்கிறேன். பார்வையாளராக வந்திருந்த புவியரசு சுருக்கமான உரையாற்றினார்.

லெந்து காலப் பாடலான ‘எனது சனமே...நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்...சொல் எதிலே உனக்குத் துயர் தந்தேன்...’ பாடலை உரத்த குரலில் பாடி தன் ஏற்புரையைத் துவக்கினார் ஜோ. அவரது பங்களிப்பைப் பற்றிய புரிதலற்ற பழமைவாதிகள் அவரைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். எழுத்தாளன் தங்களுக்குக் கட்டுப்பட்டவனென உறுதியாக நம்புகிறார்கள். ‘நேற்றிரவு கூட எனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது. ஊர்ப்பக்கம் வரும்போது வெட்டிப் போடுவேன் என போனில் மிரட்டுகிறார்கள்’ என்றார் ஜோ. அதிகார மையங்களை நோக்கி நீதியின் கேள்விகளை முன் வைக்கும் எவருக்கும் நிகழ்வதுதான். சில அறிவுஜீவிகளும் இந்துத்துவ எதிர்ப்பு எனும் போர்வையில் இந்தப் பழமைவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு ஜோ டி குரூஸை விமர்சித்து வருகிறார்கள். அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆளாக எழுத்தாளன் ஒருபோதும் இருப்பதில்லை. சுருக்கமான ஏற்புரைக்குப் பின் வாசகர்களை கேள்விகள் கேட்கச் சொல்லி பதிலளித்தார். பெரும்பாலான பதில்களுக்கு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன். ஜோ நகையுணர்வு மிக்கவர்.

விழா முடிந்ததும் அவரை சந்தித்தேன். சாத்தான்குளம் என்றதும் தமிழறிஞர் அ.ராகவன் எழுதிய நம் நாட்டுக் கப்பற்கலையில் வரும் சில அபூர்வ தகவல்களை நினைவு கூர்ந்தார். பல்வேறு நூல்களின் மூலமாக தமிழர் வாழ்வியலை ஆவணப்படுத்திய அறிஞர் அவர். கடல் வாழ்வு மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. கிளிஞ்சல்களை, சிப்பிகளை, பழங்கால வாணிபத்தில் புழங்கிய நாணயங்களை, விதம் விதமான சங்குகளை, கடல்வாழ்வு குறித்த ஓவியங்களை சேகரித்திருந்திருக்கிறார். கோநகர் கொற்கை, தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், நம் நாட்டுக் கப்பற்கலை,  தமிழ்நாட்டு படைகலன்கள் போன்ற அவரது நூல்கள் ஜோவிற்கு உதவியிருக்கக் கூடும்.

இந்த முறை ஊருக்குச் சென்றிருந்தபோது அப்பாவின் சேமிப்புகளைப் பீராய்ந்து கொண்டிருந்தேன். சாத்தான்குளம் அ.ராகவனைப் பற்றிய ஏராளமான நாளிதழ் கத்தரிப்புகள் கிடைத்தன. ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரீகமும், இசையும் யாழும், தமிழ்நாட்டு அணிகலன்கள், தமிழர் பண்பாட்டில் தாமரை, தமிழ்நாட்டுத் திருவிளக்குகள், வேளாளர் வரலாறு, பெண்ணுரிமையும் மதமும், கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?, தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலைகள் எனத் தொடர்ந்து இருபதாண்டுகள் எழுத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர். இவரது சேகரங்கள் ஆய்வாளர்களுக்குப் பெரும்கொடையாக இன்றளவும் திகழ்கின்றன. இடையில் சில காலம் கொழும்பு சென்று அச்சகம் நடத்தியுள்ளார். பெரியாரின் நண்பராக குடியரசுப் பதிப்பகத்தின் பொறுப்பேற்று பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அப்பாவின் நாளிதழ் குறிப்புகளுள் ஒன்று அவர் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த செய்தியை தெரிவிக்கிறது. அ.ராகவன் எங்கள் பரம்பரை வீட்டின் மிக அருகேயுள்ள தெற்குத் தெருவில்தான் வசித்திருந்திருக்கிறார். அவர் வாழ்ந்த வீட்டை சில காலம் எங்கள் குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.

இன்று எங்கள் ஊரில் அப்படியொரு தமிழறிஞர் வாழ்ந்ததற்கான எந்த தடயங்களும் கிடையாது. எழுபதைத் தாண்டிய சிலரின் நினைவில் மட்டும்தான் அ.ராகவன் எஞ்சியிருக்கிறார். அதுவும் ஓர் ஆசிரியராகத்தான் அன்றி எழுத்தாளராக அல்ல. எங்கள் நூலகத்தின் ஒரு மூலையில் எவராலும் சீந்தப்படாமல் அவரது நூல்கள் பஞ்சடைத்துக் கிடக்கின்றன. அவரது நினைவைப் போற்றும் எந்தக் காரியமும் கடந்த முப்பதாண்டுகளில் எங்களூரில் நிகழ்ந்ததாய் குறிப்பில்லை.

வீடு திரும்புகையில் ஜோ டி குரூஸின் லெந்துப் பாடல்தான் மனமெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது ‘‘எனது சனமே...நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்...’

Comments

Popular Posts