Monday, November 1, 2010

பேச்சரவம்


அசர அசர பெய்து ஓய்ந்திருந்தது மழை. வீட்டைச் சுற்றி மழைச் சகதியின் மந்தகாச மணம். பூமியைக் கீறி முளைவிடத் துவங்கியிருந்த புற்களில் சாவுக்குருவியொன்று புழுக்கொத்திக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்து கூட்டு சேர்ந்தன இன்னுமிரண்டு குருவிகள். கீச்சு கீச்சென்ற தேன் கீதம் கிளம்பியது. எந்த முட்டாள் இவற்றிற்கு சாவுக்குருவியென பெயர் வைத்தானென எரிச்சலாக வந்தது.

செவன் சிஸ்டர்ஸ் எனப்படும் சாவுக்குருவியின் கீச்சொலி அலாதியானது. ஒரு தினத்தை மிகுந்த அழகாக்கக் கூடிய மந்திரம் அந்த கீச்சொலிக்குள் இருக்கிறது. ‘புள்ளும் சிலம்பினகான்’ மனதிற்குள் ஓடியது. படிப்பறை திரும்பி சித்திர திருப்பாவையை எடுத்துக்கொண்டு பறவைப் பாடல்களை மேய்ந்து கொண்டிருந்தேன். புள்ளரையன் (கருடன்), ஆனைச் சாத்தன் (குருவி), புனமயில், இளங்கிளி, கோழி, பல்கால் குயிலினங்கள் என திருப்பாவைப் பறவைகளனைத்தும் என் வீட்டு விருந்தாளிகள் என்பதில் கொஞ்சம் பெருமிதம் கிளம்பிற்று.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் குடியிருக்கிறோமே என்கிற அச்சலாத்தியை அவ்வப்போது போக்குவது பறவைகள்தாம். மைனா, புறா, கவுதாரி போன்ற நிலைய வித்வான்களோடு அவ்வப்போது மரங்கொத்தி, தேன் சிட்டு, கொக்கு, தவிட்டுக்குருவி, சொங்கி நாரை (நானே வைத்த பெயர்! ஒரிஜினல் பெயரைத் துளாவிக்கொண்டிருக்கிறேன்.) போன்ற வெளியூர் ஆட்டக்காரர்களும் அவ்வப்போது ஜூகல் பந்தி நடத்துவதுண்டு.

இன்று வந்தவர் கரிச்சான் குருவி. மினுமினு கருப்பும், மெலிந்த உடலும், நீண்ட இரட்டை வாலுமாய் கேபிள் ஓயரில் உட்கார்ந்திருந்தது அக்குருவி. கரிச்சான் குருவிகளனைத்தும் தொகையரா வகையரா. சங்கீத பரம்பரை . கொண்டு கரிச்சான் குருவி நான்கு சுரங்களில் பாடும் என்பது தியோடர் வாக்கு. தன் கருவாய் மலர்ந்து சங்கீத மழை பொழிய துவங்கியது கரிச்சான். மெய் சிலிர்த்துப் போனவன் கரிச்சானைக் கவரும் முயற்சியில் வீட்டிற்குள் ஓடி ஒரு குத்து பொன்னி அரிசியை அள்ளி கூரையில் வீசினேன். என்னைக் கேவலமாகப் பார்த்து விட்டு சரட்டென பறந்து விட்டது. காற்றில் உந்தி உந்தி கங்காருவைப்போல பறக்கும் கரிச்சானை ஏமாற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். ‘பாவம் பயல்’ என பரிதாபம் கொண்டதோ என்னவோ அந்தரத்தில் அரைவட்டமடித்து திரும்பவும் கேபிள் ஒயரில் லேண்டானது. நான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

செந்திலாண்டவனோடு சமருக்குச் செல்லும் சூரபத்மனைப் போல தலையை இடமும் வலமும் திருப்பிக்கொண்டே இருந்தது கரிச்சான். கேபிள் ஓயரின் இன்னொரு மூலையில் ஒரு காகம் வந்தமர்ந்தது. தொண்டையைச் செருமினாற் போல மெல்ல கரைந்தது காகம். கம்யூனிகேஷன் பிரச்சனையோ என்னவோ தெரியவில்லை. கடும்சினத்தோடு காகத்தின் மேல் பாய்ந்தது கரிச்சான். கழுத்து வாக்கில் ஒரு கொத்து. அலறிப் பறந்த காகத்தை விடாமல் துரத்தி வலது சிறகின் கீழ்ப்புறத்தில் ஒரு கொத்து. முடிந்த மட்டும் வேகம் கொண்டு பறந்தது காகம். கரிச்சானோ ரிவர்ஸ் பல்டி அடித்து காகத்தின் முன் நின்று காற்றில் ஒரு நொடி தாமதித்து அதன் மூக்கில் ஒரு கொத்து. கரிச்சானின் செயல்பாடுகள் அது சீன மடாலயமொன்றில் குஃங்பூ, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி பெற்றிருக்குமோ என நினைக்க வைத்தது. காகம் கொஞ்சமும் எதிர்ப்புணர்ச்சி இன்றி தப்பித்தோம் பிழைத்தோம் என பறந்து கொண்டிருந்தது. எனக்கோ பெருமகிழ்ச்சி. வலியோரை எளியோர் தாக்குகையில் பீறிடும் உற்சாகம். முடிந்த மட்டும் காகத்தை துரத்தி விட்டு திரும்பவும் கேபிளில் அவதார் ஹீரோவைப் போல வந்தமர்ந்தார் திருவாளர். கரிச்சான். முகத்தில் தோரணை குடிவந்திருந்தது. நான் திரும்பவும் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்

இன்று முழுவதும் பறவைகளைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருப்பது என முடிவெடுத்தேன் (ஏன்... எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான் அப்படி எதைப்பற்றியாவது யோசித்துக்கொண்டிருப்பாரா என்ன?!) என் மனவெளியெங்கும் கரிச்சான் பறந்துகொண்டே இருந்தது. என்னிடமிருந்த ‘தாமரை பூத்த தடாகம்’, ‘வனங்களில் விநோதம்’, ‘உயிர்ப் புதையல்’ ஆகிய புத்தகங்களில் கரிச்சான்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கரிச்சானுடைய அறிவியல் பெயரோ, ஆங்கிலப்பெயரோ தெரியாததால் இணையத்திலும் தேட இயலவில்லை. கரிச்சானின் அதிரடி சண்டைக்காட்சிகள் மனதிற்குள் ரிவைண்ட் ஆகிக்கொண்டே இருந்தது. பெரியவரோடு வேறு பகை. அழைத்தும் கேட்க முடியாது. சோர்ந்து போனேன்.

தியாகு புக் சென்டரில் குழுமி இருந்த நண்பர்களிடத்தில் கரிச்சானின் சாகசங்களைச் சொன்னேன். விநோதமாகப் பார்த்தார்கள். தியாகுதான் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்ட சலீம் அலியின் புத்தகம் ஓன்றை தேடி எடுத்துக்கொடுத்தார்(இத்தனை அரிதான புத்தகங்கள் இவரைத் தவிர வேறு யாரிடமும் இருக்கும் எனத் தோன்றவில்லை) பறவைகளின் வண்ணப்படங்களோடு அவற்றின் சுபாவங்களைப் பற்றிய குறிப்பும் அப்புத்தகத்தில் இருந்தது. புழுக்கள், சிறு பூச்சிகளை விரும்பி உண்ணும் கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே சிறிதும் இல்லை. தன்னை விட அளவில் பெரிய பறவைகளான பருந்து, கழுகு, காகம் போன்றவற்றைக் கூட தாக்கி ஓட ஓட விரட்டக் கூடியது என்று சலீம் குறிப்பிட்டிருந்தார்.

கரிச்சான் தன் உடலில் இருக்கும் உண்ணிப்பூச்சிகளை அழிக்க எறும்பு புற்றின் மீது அமருமாம். எறும்புகள் வெளிப்படுத்தும் ஃபார்மிக் அமிலத்தில் பூச்சிகள் அழிந்து விடும் என்றும் தன் பயமற்ற வாழ்க்கை முறைக்காக ‘கிங் க்ரோ’ என்றும் அழைக்கப்படுகிறது போன்ற உபரி தகவல்களை இணையம் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.

100கிராம் கூட எடை இல்லாத குருவி பாடுகிறது; காற்றில் சாகசம் செய்கிறது; தன்னிலும் வலிமையான எதிரியை தாக்குகிறது. வேதியியல் முறைப்படி சுயசிகிட்சை செய்து கொள்கிறது. நான் என் தொப்பையைத் தடவியபடி சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்தேன்.

25 comments:

பரிசல்காரன் said...

சில விஷயங்களை, சிலர் எழுதினால் நன்றாக இருக்கும் சிலர் எதை எழுதினாலும் நன்றாக இருக்கும்.

நீங்க ஒண்ணாவதிலேர்ந்து, ரெண்டாவதுக்கு வந்துட்டீங்க செல்வா..

RaGhaV said...

அருமையான பதிவு செல்வா.. :-)

Margie said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, செல்வேந்திரன்.
எனக்கு பாரதியாரோட "விட்டு விடுதலை ஆக வேண்டும், இந்த சிட்டு குருவியை போலே"-ன்ற வரி ஞாபகத்துக்கு வரும், சிட்டுக்குருவியை பார்க்கும் போதெல்லாம்.

Margie said...

@பரிசல்காரன், சில கமெண்டுகளை, சிலர் எழுதினால், நன்றாக இருக்கும். சிலர் என்ன கமெண்ட் எழுதினாலும் நல்லா இருக்கும்.

Balaji saravana said...

அருமை செல்வேந்திரன்..

Anonymous said...

பறவைகள் பற்றிய ஆராய்ச்சி தொகுப்பை படிச்ச மாதிரி இருந்தது செல்வா...சில பல வார்த்தைகள் ஏ கிளாஸ்ன்னு சொல்லும் ரகம் என்னை மாதிரி சரி இது வேணாம் நான் இடைரகம் எனக்கு புரிவது சற்று கடினம் ஆனால் படிக்கும் போது முதல் வகுப்பில் பயணிக்கும் சுகம்...

வெறும்பய said...

தகவல்களை இவ்வளவு அருமையாக கூட சொல்ல முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

இரா.சிவக்குமரன் said...

அருமை செல்வா!!

பெரியவரோடு பகை? என்னாச்சி செல்வா?

Saravana kumar said...

அப்படியே வேடந்தாங்கலுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு...

//100கிராம் கூட எடை இல்லாத குருவி பாடுகிறது; காற்றில் சாகசம் செய்கிறது; தன்னிலும் வலிமையான எதிரியை தாக்குகிறது. வேதியியல் முறைப்படி சுயசிகிட்சை செய்து கொள்கிறது. நான் என் தொப்பையைத் தடவியபடி சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்தேன்.//

நான் உங்களுக்கு கமெண்ட் போட போறேன்.

vaanmugil said...

\\கரிச்சான் தன் உடலில் இருக்கும் உண்ணிப்பூச்சிகளை அழிக்க எறும்பு புற்றின் மீது அமருமாம். எறும்புகள் வெளிப்படுத்தும் ஃபார்மிக் அமிலத்தில் பூச்சிகள் அழிந்து விடும் //

சூப்பர் நண்பா! கரிச்சான் குருவி பத்தி கொஞ்சம் தெருஞ்சுகிடேன்!.

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்குங்க செல்வா இந்த பகிர்வும் :)

வசந்த் ஆதிமூலம் said...

அழகு.

D.R.Ashok said...

தேறியது கடைசி பேரா மட்டுமே சுவையில் :)

பேரு முருகேஷ் பாபு said...

செல்வா... அந்தக் குருவியின் பெயர் சாவுக்குருவி இல்லை... சாக்குருவி என்று நினைக்கிறேன்..!
மற்றபடி கடைசிவரி வரையிலும் விஜய் குருவி பற்றி எழுதிவிடுவீர்களோ என்று பயந்து கொண்டே இருந்தேன்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்... உங்களுக்கும் திருவுக்கும்!

ஜோதிஜி said...

இது போன்ற விசயங்களை பதிவுலகில் எழுதுபவர்கள்( ரசித் தேன் ). மிக மிக குறைவு. வாழ்த்துகள் செல்வா.

விஜய்கோபால்சாமி said...

பாவி மனுஷா! மத்த நாளெல்லாம் வேலைப் பளு அது இதுன்னு காரணம் சொல்லி பதிவைத் தாமதப்படுத்துவீங்க. இப்போ கல்யாண பிசியிலயும் பேச்சரவம். நல்லா இருக்குது...

கனிமொழி said...

//சில விஷயங்களை, சிலர் எழுதினால் நன்றாக இருக்கும் சிலர் எதை எழுதினாலும் நன்றாக இருக்கும்.

நீங்க ஒண்ணாவதிலேர்ந்து, ரெண்டாவதுக்கு வந்துட்டீங்க செல்வா..//

:)

மறத்தமிழன் said...

செல்வா,

பறவைகள் பலவிதம்...

கரிச்சான் குருவியைப்பற்றி நல்லா எழுதியிருக்கிங்க..

நேரம் இருப்பின் சக்கரவாக பட்சியைப்பற்றி எழுதுங்கள்...

ரொம்ப நாளைக்கு அப்புறம் "அச்சலாத்தி" ஐ ஞாபகப்படுத்தியதற்கு நன்றி...

பரிசல்...நிங்க சொன்ன 1வதில் இருந்து 2வதிற்கு செல்வா வந்து ரொம்ப நாளாகுது...இருந்தாலும் உங்க கமென்ட் ரசனை..

வடகரை வேலன் said...

செல்வா,

ஊரைவிட்டு ஒதுக்குபுறமாகக் குடியமர்த்திவிட்டார் அண்ணாச்சி என்ற ஆதங்கம் அகன்றிருக்கும் என நினைக்கிறேன்.

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி கிராமம் அணைத்தும் தவபூமி என ஏதாவது ஒரு பக்கம் ஒதுங்கிவிடலாமா?

தினமும் காலையில் கேட்கும் பறவைகள் சப்தத்தை ஒருநாள் கேட்க முடியாமல் போனாலும் எதையோ இழந்த மாதிரி இருக்கும்.

இன்னும் சில வருடங்களாவது இதை அனுபவிக்கனும்.

வடகரை வேலன் said...

செல்வா,

ஊரைவிட்டு ஒதுக்குபுறமாகக் குடியமர்த்திவிட்டார் அண்ணாச்சி என்ற ஆதங்கம் அகன்றிருக்கும் என நினைக்கிறேன்.

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி கிராமம் அணைத்தும் தவபூமி என ஏதாவது ஒரு பக்கம் ஒதுங்கிவிடலாமா?

தினமும் காலையில் கேட்கும் பறவைகள் சப்தத்தை ஒருநாள் கேட்க முடியாமல் போனாலும் எதையோ இழந்த மாதிரி இருக்கும்.

இன்னும் சில வருடங்களாவது இதை அனுபவிக்கனும்.

கபிலன் said...

அன்பின் செல்வேந்திரன்,
ரசனைமிக்க பதிவு. பறவைகளை அருகிருந்து ரசிக்க முடிகிற அளவுக்கு கொடுத்துவைத்திருக்கிறீர்கள்.
மாநகர இரைச்சல்களின் நடுவே , மூழ்கடிக்கும் அலுவல்களின் நடுவே இதுபோன்ற உங்கள் பதிவுகள் உங்கள் உடன் சேர்ந்து ரசித்த அனுபவத்தை தருகிறது.
திருமண வாழ்த்துக்கள் செல்வா.

அன்புடன்
கபிலன்

butterfly Surya said...

பதிவுலக சச்சின் நீ,வாவ் அருமை. நவம்பர் 18க்கு வாழ்த்துகள்.

pazha.chandrasekaran said...

இது கரிக்குருவி.(black drongo) seven sisters என்பது புழுதிக்குருவி.மண் பழுப்பு நிறமுடைய இவை கூடி வாழும்.

விஜி said...

கல்யாண வேலை, மூச்சு விட முடியலை, கோவை என்னை கதறடிக்குது.. இதெல்லாம் தாங்கள் அடித்த டயலாக் என்பதை நினைவுபடுத்த வேண்டியது என் கடமை.. ம்ம்ம் எவ்ளோ வெட்டியா பராக்கு பார்த்து பதிவு எழுதி..... நடத்து.

விக்னேஷ்வரி said...

சுவாரஸ்ய எழுத்துடன், சுவாரஸ்யத் தகவலும்.