Thursday, December 29, 2011

அறிவினில் உறைதல்

எடுத்த எடுப்பில் வியாபாரம் பேசுவது என் வழக்கமல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு என அறிமுகம் செய்துகொண்டு, எதிராளி பற்றிய தகவல்களைக் கறந்து, இருவருக்குமான பொது நபர்களை / ரசனைகளைக் கண்டறிந்து உரையாடலை வளர்த்து... இவனுக்காக எதையும் செய்யலாம் எனும் மனநிலைக்கு வரும்போதுதான் மெல்ல படலையை அவிழ்ப்பேன். அப்படித்தான் அந்த மகளிர் பள்ளி தலைமையாசிரியரிடம் பேச்சைத் துவக்கினேன். சலுகை விலையில் ஆங்கில இதழ்களை வழங்குகிறோம். மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக்கொண்டு தங்களது மொழித்திறன் மற்றும் பொது அறிவினை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் என்பதை அவருக்கு விளங்கவைப்பது என் திட்டம்.

தலைமையாசிரியருக்கு நல்ல தமிழ்ப்பெயர். அவரது அப்பா திமுககாரனாக இருக்கக்கூடும் என உத்தேசித்தேன். அவர் ஆச்சர்யப்பட்டார். மேஜையில் பாலகுமாரனின் பொன்வட்டில் இருக்கக்கண்டேன். வரலாற்று நாவல் பிரியராக இருக்கக்கூடும் என மூளை சொன்னது. கல்கி, சாண்டில்யன், கடல்புறா, சிவகாமி சபதமென பேச்சை வளர்க்க வளர்க்க அவர் ஆர்வமானார். என்னிடம் சாண்டில்யன் விகடனில் எழுதியதெல்லாம் அந்தக் காலத்து பைண்டிங் வெர்ஷனாகவே இருக்கிறது. யார் தலையில் கட்டலாமென நெடுநாட்களாக ஆள் தேடிக்கொண்டிருந்தேன். அவருக்கு சாண்டில்யனின் கத்திச்சண்டைக் கதைகளை பரிசளிக்கிறேன் எனச் சொன்னேன். பூரித்துப் போனார்.

மெள்ள நான் வந்த நோக்கத்தினை சொன்னேன். கவனமாக கேட்டுக்கொண்டார். அவர் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கமாவதை கவனித்தேன். சொல்லி முடித்ததும் கண்ணாடியைக் கழற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார். ‘செல்வேந்திரன் நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்காதீங்க. சின்ன இன்ஸிடெண்ட். அப்புறம் நீங்களே சொல்லுங்க...’ பீடிகையுடன் ஆரம்பித்தார்.

வழக்கமா காலையில 11 மணிக்கு ஒரு ரவுண்ட்ஸ் போறது என் வழக்கம். க்ளாஸ் ரூம்ஸ், லேப், லைபரரி, கிரவுண்டெல்லாம் ஒரு விசிட் அடிச்சிடுவேன். இந்த அகாடமிக் இயர் ஆரம்பிச்ச புதுசு. பதினொன்னாம் கிளாஸ் வாசல்ல பொண்ணுங்க எல்லாம் முட்டிக்கால் போட்டுட்டு இருக்காங்க. மேத்ஸ் குரூப் பொண்ணுங்க. எனக்கு ஷாக். மொத்த க்ளாஸூம் வெளியேதான் இருக்காங்க. ஒரு பொண்ணைக் கூப்பிட்டு என்னம்மா பிரச்சனைன்னு கேட்டேன். ஹோம் ஓர்க் பண்ணல மேடம்... அதான் மிஸ் எல்லாரையும் முட்டி போடுங்கன்னு சொல்லிட்டாங்கன்னுச்சி.

உங்களுக்கே தெரியும் செல்வேந்திரன்... பத்தாங்கிளாஸ்ல நல்ல மார்க் எடுத்தவங்களுக்குத்தான் மேத்ஸ் குரூப் கிடைக்கும். நல்லா படிக்கிறவங்களே ஹோம் ஓர்க் பண்ணலன்னா எப்படி?! எல்லாரையும் என் ரூமுக்கு வாங்கன்னு சொல்லி விசாரிச்சேன். ஒரு ஸ்டூடண்ட்ஸூம் வாய் திறக்கல. ஏம்மா என்னம்மா பிரச்சனைன்னு நாடிய தாங்கி நல்லாத்த பண்ணியும் பதிலே வரல. சரி என்கிட்ட நேர்ல சொல்ல கூச்சமா இருந்திச்சுன்னா ஆளுக்கு ஒரு பேப்பர் தர்றேன். உங்க பேர அதுல எழுத வேணாம். ரீசன்ஸ் மட்டும் எழுதுங்கன்னு சொல்லிட்டேன்.

பிள்ளைகளும் ரீசன்ஸ் எழுதி கொடுத்துட்டாங்க. ஒருத்தி எழுதியிருக்கா ‘கரண்டு இல்ல’; இன்னொருத்தி ‘எங்கூட்ல சண்ட’; இன்னொருத்தி ‘நாட்டு கிலிஞ்சி பேச்சி’; இன்னொருத்தி ‘எனக்கு காச்ச, மண்டவலி’; அதிர்ந்து போயிட்டேன் செல்வேந்திரன். இந்தப் பள்ளிக்கூடத்துல பத்து வருஷம் படிச்ச பொண்ணுங்களுக்கு தமிழ்ல ஒரு வாக்கியம் அட ஒரு வார்த்தை கூட எழுத தெரியலீங்க...கடுப்பாயிட்டேன். இதுல தமிழ்மன்றம், முத்தமிழ் கழகம்னு ஆயிரத்தெட்டு வெட்டிச்செலவுகள். தமிழ் டீச்சரை கூப்பிட்டேன். எட்டுலருந்து பத்துவரைக்கும் அவங்கதான் தமிழ் எடுக்கறாங்க.

நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலே சொல்லல. குனிஞ்சே நிக்கிறாங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?! வெளிப்படையா சொல்லுங்க... சரி பண்ணிடலாம்னு எவ்வளோ சொல்லிப்பார்த்தேன் பதிலே வரல. சரி கட்ட கடைசிக்கு உங்களுக்கு என்கிட்ட நேர்ல சொல்ல விருப்பம் இல்லண்ணா... ஒரு பேப்பர் தர்றேன். எழுதிக்கொடுங்கன்னேன். அவங்களும் எழுதிக்கொடுத்தாங்க.

‘நா ஒளுங்காத்தான் செல்லிக் கெடுத்தேன். எவலும் படிக்கள...’ன்னு இருந்திச்சு. சொல்லி முடித்துவிட்டு என் முகத்தை பார்த்தார். நான் ஒன்றும் பேசாமல் நடையைக் கட்டினேன்.

14 comments:

ஜெய பிரபு said...

புழிஞ்சு பேச்சி!

ஜெய பிரபு said...

புழிஞ்சி பேச்சிங்க....

பழமைபேசி said...

என்ன சொல்ல?! அரசாளுதல் அப்படி இருக்கு!!

vaanmugil said...

நிறைய ஸ்கூல் இப்படி தான் இருக்கு பணம் மட்டும் வாங்குறாங்க நல்ல ஒரு ஆசிரியரை நியமிப்பதில்லை:-(

Prabu Krishna said...

படிக்கும் போது சிரிப்பு வருகிறது, ஆனால் எந்த அளவுக்கு தமிழ் ஆகிவிட்டது என்று நினைத்து மனம் வருந்துகிறது.

amas said...

உண்மையை தான் எழுதியிருக்கீங்க :) என் மகனுடைய தமிழ் ஆசிரியை பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் தேர்வுக்கு முந்தின நாள், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ச்சிக்கான முக்கிய வாக்கியங்களை ஒரு தாளில் கொடுத்து மனனம் செய்து அடுத்த நாள் தேர்வுக்கு தயார் ஆக சொன்னார். நல்ல பதிவு!
amas32

Guna said...

senthamil vazhga

சுரேகா.. said...

super...!

கும்க்கி கும்க்கி said...

அடப்பாவிகளா...

Rathnavel said...

நிஜம் தான். இப்படித் தான் இருக்கிறது இப்போது மாணவர்களின் நிலைமையும், ஆசிரியர்களின் நிலைமையும். வேதனை தான்.

முரளிகண்ணன் said...

நிஜம் நிஜமே

D.R.Ashok said...

த.ஆ Interesting :)

உண்மைத்தமிழன் said...

செம காமெடி..

செல்வா சூப்பர்ப்..!

shri Prajna said...

சரி தமிழ் தான் பிரச்சனை வரலை ஆங்கிலம் வருதா? அதுவுமில்ல அறை குறையா நிக்கி..பக்கத்து state ல எல்லாம் மூணு language அசால்ட்டா படிக்க இங்கே இதுவே தாளம்..ஆனா படிக்கிறப்போ சிரிப்பா இருந்தது.உங்ககிட்ட ஒரு நேர்மை இருக்கு Mr.Selventhiran...