ப்ளடி... பிளாக்கர்...!
கொஞ்சம் கூப்பினி குடித்தால் பரவாயில்லையென தோன்றியது. கோகோ ஷாப்புக்குள் நுழைந்தேன். அறிவிப்பு பலகையின் இன்றைய ஸ்பெஷல் நீத்தண்ணி என்று எழுதி வைத்திருந்தார்கள். ஒரு கலயம் நீத்தண்ணி முப்பது ரூபாய். கூப்பினியைக் காட்டிலும் மூன்று ரூபாய் குறைவுதான். இந்த கொடிய ரிசஷனில் நீத்தண்ணிதான் பெஸ்ட். ஆர்டர் செய்து விட்டு ஜன்னலோரத்து இருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன்.
எதிர் இருக்கையில் ஆறு வயதுப் பையன் ஒருவன் ஹிம்சாகரின் புத்தகமொன்றைக் கிழித்து கப்பல்கள் செய்து நீச்சத்தண்ணி கலயத்துக்குள் நீந்த விட்டுக்கொண்டிருந்தான். அந்த ஹிம்சாகரின் புத்தகத்தை மூன்று பிறவிகளாகத் தேடிக்கொண்டிருக்கிறேன் நான். காந்தியை நான் சுட்டதையும், பிரவீன் ஆம்தே யாரோடெல்லாம் படுத்தான் என்பதைப் பற்றியும் சுவைபட எழுதப்பட்ட புத்தகம் அது. இந்த பிறவியிலும் அப்புத்தகம் கிடைக்காவிட்டால் பத்ரியிடம் கோரிக்கை வைக்கலாம் என்றிருந்தேன். அப்பேர்பட்ட புத்தகத்தில் கத்திக்கப்பல் செய்பவனை நோக்கி கத்தலாமா? கத்தியைத் தூக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் உற்றுப்பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்டான் பொடியன்... "நீ ஒரு எழுத்தாளனா...?!"
"அட...எப்படித் தெரியும்... என் எழுத்துக்களை வாசித்திருக்கிறாயா... டி.வியில் கூட ஒருமுறை வந்தி..."
"உன்னிடமிருந்து எழுத்துக்களின் அழுகிய வாடை அடிக்கிறது" - அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு தன் கடன் கப்பல் செய்வதே என்பது போல சர சரவென பக்கங்களைக் கிழித்து கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.
அடேயப்பா ராஜபாளையத்தில் பிறந்தவன் போலிருக்கிறது. இந்தச் சின்ன வயதில் எப்படியொரு மோப்ப சக்தி. நான் எழுத்தாளன் என்பதை எளிதில் கண்டு கொண்டானே... ஆனால், இப்படி பொறுப்பில்லாமல் புத்தகத்தைக் கிழித்து கப்பலா செய்வது...
"ஹிம்சாகரை என் ஹிம்சிக்கிறாய்...?!" சற்று உறைப்பாகக் கேட்டேன்.
"குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டலாம். கப்பல் ஓட்டக் கூடாதா?!"
"சைத்தானே... அந்தப் புத்தகத்தின் மதிப்பு தெரியுமா... அது என் சரிதை. நான் காந்தியைக் கொன்ற வரலாறு அதில் இருக்கிறது..."
"என்ன காந்தியைக் கொன்றீரா... ஹா... ஹா... அடிவயிறைப் பிடித்துக்கொண்டு வெடிச்சிரிப்பு சிரித்தான் பொடியன்... மற்றொரு டேபிளில் அமர்ந்து புலி சூப் குடித்துக்கொண்டிருந்த சமவெளி மான் ஒன்று எட்டிப்பார்த்து முறைத்தது. சர்வர் வந்து அமைதியாக பேசுங்கள் அல்லது **டையைக் கசக்கிவிடுவேன் என்று மிரட்டி விட்டுப் போனான். எனக்கு இது ஒன்றும் புதியதல்ல... இந்தக் கடையில் கூப்பினி குடிக்க வரும் ஒவ்வொரு முறையும் இந்த சர்வர் என்னை மகா கேவலமாகப் பேசுவது சகஜம்தான். என் பிரச்சனை சர்வர் அல்ல! இந்தப் பொடியனின் அலட்சியம்தான் எனக்கு பெருத்த அவமானத்தை தந்தது.
"ஏன் நான் காந்தியைக் கொன்றதை நீ நம்பவில்லையா... இதோ என் கழுத்தைப் பார்... என்னை தூக்கிலிட்டதன் கயிற்றுத் தழும்புகள். சாகும் வரைதான் தூக்கிலிடச் சொல்லி உத்தரவு. பரதேசிகள்! நான் செத்தபிறகும் சில நிமிடங்கள் தூக்கில் தொங்க வைத்துவிட்டார்கள். வயலேஷன் ஆஃப் ஜட்ஜ்மெண்ட். செத்த பிறகும் தூக்கில் தொங்குவது எத்தனை அவமானகரமானது தெரியுமா...?"
"நீ காந்தியைக் கொன்றாய் என்பதற்கு இந்த ஆதாரம் போதுமென்று நினைக்கிறாயா... எழுத்தாளா..."
"நிச்சயம் இல்லை. நீ என் அலுவலகத்திற்கு வந்தால் காந்தியைக் கொன்றபோது ரெட்ஜயண்ட் காமிராவினால் எடுக்கப்பட்ட வீடியோவைக் காட்டுகிறேன். வர விருப்பமில்லையெனில் நீயே யூ ட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்"
"என் காதலிக்காகக் காத்திருக்கிறேன்... இன்னொரு நாள் வருகிறேன்."
"ஓகே... பை தி பை... மை நேம் இஸ் செல்வேந்திரன், எமர்ஜிங் ரைட்டர்! உன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே..."
நீண்ட பிரசங்கத்திற்கு தயார் செய்பவனைப் போல தன் தொண்டையைச் செருமிக்கொண்டு துவங்கினான் பொடியன்...
"என் இயற்பெயர் அலெக்ஸாண்டர் டூமாஸ். அது மிகவும் கேவலமான வைதீக பெயர் என்பதால் "ஜெனோவா வீரன் பக்கிரிசாமி" என மாற்றிக்கொண்டேன். என் தாய் அம்புஜம் ராஜஸ்தானைச் சேர்ந்தவள். அவளது எண்பதாவது வயதில் நான் பிறந்தேன். என் பிறப்பு ஒரு சோக சரிதம். வாழ்வியல் கடமைகள் பூர்த்தியாகி விட்டதால் சாந்தாரா இருந்து உயிர் துறக்க ஆசைப்பட்டாள் அம்புஜம். ஆனால், அதற்கு முன் ஊரில் உள்ள பிரமுகர்களுக்கு விருந்தளிக்கத் திட்டமிட்டாள்.
விருந்திற்கு சமூக அக்கறையும், அறச்சீற்றமும் கொண்ட அகவலோசைக் கவிஞன் ஒருவன் வாளி நிறைய்ய கவிதைகளோடு வந்தான். கொஞ்சம் கவனப் பிசகாக இருந்தாலும் வாளியில் இருக்கும் கவிதைகள் எகிறி குதித்து ஜனங்கள் மத்தியில் பரவி விடும் அபாயம் இருந்ததால், அம்புஜம் மிகுந்த கவனத்தோடு அவனிடத்தில் இருந்து வாளியை வாங்கி ஜனசந்தடியற்ற இடத்தில் வைக்கச் சென்றாள். எவனோ ஒரு பிரக்ஞையற்ற பரதேசி தின்றுவிட்டு போட்ட வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்ததில் அவளது கையிலிருந்த வாளி கவிழ்ந்து கவிதைகள் எல்லா திசைகளிலும் பரவியது. விருந்துதானே என உள்ளூர் பிரமுகர்களும் முகமூடி, மூக்குமூடி, காதுமூடி என எந்தவொரு மூடியும் இல்லாமல் வந்து தொலைத்திருந்தனர். எவரையும் காப்பாற்ற முடியவில்லை. எங்கும் மரண ஓலம். அந்தக் கவிஞன் என் தாயின் வளையல்களைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்..." - இந்த இடத்தில் பக்கிரிசாமியின் கண்கள் கலங்கி விட்டன. என்னதான் இருந்தாலும் சிறுவன் தானே... தாயின் நினைப்பு வந்திருக்கலாம். அவனைத் தேற்றும் பொருட்டு சர்வரை அழைத்து 'பொட்டாசியம் குளோரைடு பொரியல்' ஒரு பிளேட் ஆர்டர் செய்தேன்.
அவன் விசும்பலோடு தொடர்ந்தான்..."என் தாய் புகழ் மிக்கவள். அவள் கேட்டாள் என்பதற்காக ராஜஸ்தான் மன்னர் கானாவிலிருந்து ஒரு கழுதைப்புலியையும் அதை மேய்ப்பதற்கு ஒரு கறுப்பனையும் வரவழைத்தார். மன்னரது இந்த அன்பிற்கு தப்பர்த்தம் எதும் கொள்ள வேண்டியதில்லை. அம்புஜம் ஒரு அறிவுலக மேதை. விஞ்ஞானியும் கூட. கவிதைகள் எழுதும் சிந்தனை ஒருவனுக்கு வராமல் இருக்க அவள் ஒரு சூரணம் தயாரித்தாள். பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசே அச்சூரணத்தை இலவசமாக வழங்கியது. கவிதைகள் மனுவிரோதம் என்றபோதும் அவள் கவிஞர்களை வெறுத்ததில்லை. நாட்டில் கவிஞர்கள் இனம் அருகி வந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு 'கவிஞர் வதை தடுப்புச் சட்டம்' கொண்டு வர பாடுபட்டாள். கவிஞர்கள் வாழ்கிற தெருக்களில் வேட்டை தடை செய்யப்பட்டது. உலோகப் பொருட்களுடன் அத்தெருக்களில் எவரும் நுழைய முடியாது...ச்சே... அப்பேர்ப்பட்டவளைக் கொலை செய்யும் நோக்கோடு அவன் வந்திருக்கலாமா... இதுதான் அறச்சீற்றமா...?!" - திரும்பவும் விசும்பினான் பக்கிரிசாமி. அவனது கண்ணீரில் எனது வேட்டி தெப்பலாக நனைந்துவிட்டது. வேட்டியைக் கழற்றி பிழிந்து பக்கத்து நாற்காலியில் காய வைத்தேன்.
"சரி... அழாதே பக்கி... உன் பிறப்பில் ஏதோ துயரம் என்றாயே... அதைச் சொல்..." என்றேன் நான்.
"அன்றைய விருந்தில் என் தாயுடன் சேர்த்து 78 பேர் மரித்துப் போனார்கள். அம்புஜம் கர்ப்பிணி என்பது யாருக்கும் தெரியாது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடரின் முக்கியக் காட்சி அன்று. சீரியல் பார்க்கும் அவசரத்தில் ஊரார் 78 பிணங்களையும் அவசர அவசரமாகக் கடலில் வீசி விட்டார்கள். அம்புஜத்தின் பிணத்தை கடற் பெருச்சாளியொன்று கடித்தது. பிண வாடைக்கு சுறாக்களும் கூடி விட்டன. பெருச்சாளிக்கும் சுறாக்களுக்கும் ஆகாது என்பது உனக்கு தெரிந்திருக்கலாம். இருதரப்பும் பிணத்திற்கு அடித்துக்கொண்டதில் அம்புஜத்தின் வயிறு கிழிந்து நான் வெளிப்பட்டேன். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்ததால் வெறும் கால்களால் பல நாட்டிக்கல் மைல்கள் நீந்தி யாழ்ப்பாணத்தில் கரையேறினேன். அங்கே அவசர அவசரமாக பலரை மின்படகுகளில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தேன்.
மண்டபம் முகாமில் என்னைப் பிடித்து விட்டார்கள். என் பெயர் என்ன என்று கேட்டார் விசாரணை அதிகாரி. என் துயர கதையை அவரிடம் சொன்னேன். அவர் அந்தச் சமயத்தில் 'த்ரீ மஸ்கீட்டர்ஸ்' படித்துக்கொண்டிருந்தார். தான் படித்துக்கொண்டிருக்கிற காரணத்தினாலேயே உலகில் அதை மிஞ்சிய இலக்கியப் பிரதி வேறெதுவும் இல்லையென்றும், இதைப் படிக்காதவன் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே அருகதையற்றவன் என்றும் உறுதியான முடிவுகள் வைத்திருந்தார். நான் எவ்வளவு மறுத்தும் 'அலெக்ஸாண்டர் டூமாஸ்' எனும் பெயரைத் திணித்து விட்டார். முகாமில் வளர்ந்தேன். அங்கிருந்தவர்கள் அன்பானவர்கள். அவர்களிடமிருந்து நான் கண்ணீர் விடவும், ரத்தம் சிந்தவும், மனம் குமையவும், குருட்டு நம்பிக்கையையும் கற்றுக்கொண்டேன்.
என்னுடைய நான்காவது வயதில் எழுத்தாளர் பிரதியங்கார மாசானமுத்து எங்களது முகாமிற்கு வந்தார். உங்கள் துயரங்களை எழுத்தில் வடிப்பேன், அதை வாசிப்பவர்கள் இதயம் வெடித்து உங்களைத் தேடி ஓடி வருவார்கள் என்றார். உங்கள் துன்பங்கள் தீர நீங்கள் அனுபவித்த துயரங்களை என்னிடத்தில் சொல்லுங்கள். ரியலிஸம் ரொம்ப முக்கியம் என்றார். குறிப்பாக பெண்களிடத்தில் ராணுவம் நடந்து கொண்ட விதத்தை நடித்துக் காண்பிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார். மாசானமுத்துவைப் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி என் தாயின் கருவில் இருக்கிற காலத்திலேயே படித்திருக்கிறேன் என்பதால் அவரது பாச்சா என்னிடத்தில் பலிக்கவில்லை. என் தாய் அம்புஜத்தைப் பற்றியும், ராஜஸ்தான் அரண்மனையில் அவளுக்கிருந்த செல்வாக்கைப் பற்றியும் அவன் துருவி, துருவி கேட்டுக்கொண்டே இருப்பான். அதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போது நான் கர்ப்பத்தில் இருந்தேன் என்று சொல்லியும் விடமாட்டான். கானாவில் இருந்து வந்த கழுதைப்புலி மேய்ப்பன்தானே உன் தகப்பன் என்று ஒரு நாள் என்னிடத்தில் கேட்டான். மாசானமுத்து என் குஞ்சைப் பிடித்து அழுத்துகிறான் என கத்தினேன். மொத்த முகாமும் கூடி அவனை நையப் புடைத்துவிட்டது. அவன் பிரான்ஸிற்கு ஓடிப் போய் விட்டான் என சிற்றிதழ் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டேன்... அப்புறம் ஒரு திரைப்பட இயக்குனர் வந்... சொல்லிக்கொண்டிருந்த பக்கிரிசாமி பேச்சை நிறுத்தினான்... திபு திபுவென போலீஸார் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். பக்கிரிசாமியின் முகம் வெளிறியது...அவனது முகத்தில் கலவரமும், பயமும் கொப்பளித்தது...சட்டென வியர்த்துப்போனான்... அவனை அடையாளம் கண்டுகொண்ட போலீஸ்காரனொருவன் அவனது கழுத்தில் துப்பாக்கியை வைத்து இறுக்கினான்... இன்னொருவருவன் பக்கிரிசாமியின் கரங்களைப் பின்பக்கமாகச் சேர்த்துக் கட்டினான்.
நான் வேட்டியை எடுத்து உடுத்திக்கொண்டு ஓட தயாரானேன். "டேய் எழுத்தாளா... என்னைச் சந்தித்ததை எழுதப் போகிறாயா...?!" பக்கிரிசாமி கத்தினான்.
"எழுதுவேன்... பிரச்சனை வந்தால் எடுத்துவிடுவேன்..." சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தலை தெறிக்க ஓடத் துவங்கினேன்.
"த்தூ... ப்ளடி பிளாக்கர்..!" அவன் காரி உமிழும் ஓசை தூரத்தில் கேட்டது.
Comments
இதிலிருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.
உங்களுக்கு பின் நவீனத்துவம் நல்லாவே வருது.
வர வர எல்லாரும் குறுக்கெழுத்து புதிர் மாதிரி எழுதி கண்டுபிடிக்க சொல்றாங்க.
வெட்டி ஈரம் காய்ந்து விட்டதா
உண்மையிலேயே அறிவியல் மாமேதை தான், எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொடுங்கள், தமிழகத்திற்கு நிறைய சூரணம் தேவைப்படுகிறது!
அந்த வரிக்கு முன் வரை சீரியஸாக படித்து கொண்டிருந்தவன், அந்த வரியில் குபுக்கென்று சிரித்தது உண்மை!
அவ்வளவு ”சக்தி”யா அவனிடம்!
இங்கனம்
சக ப்ளடி!
நீதானா அந்த எழுத்தாளன்?
@சிவக்குமரன்: சமவெளி மான் குடித்துக்கொண்டிருந்தது சமவெளி புலியின் சூப் என்கிற தகவலை சிறுகதையில் விட்டு விட்டேன் :)
@இரும்புதிரை அரவிந்த்: தனியா பேசி தீர்த்துக்குவோம் :)
@ ஆமூகி: அப்ப நா எழுத்தாளன் இல்லீயா... பஸ்ஸக் கொழுத்திருவோம்வேய்...
@ விக்னேஸ்வரி: ஆஹா!
@ வெங்கி ராஜா: வழிகாட்டுதல்களுக்கு நன்றி :)
@ அதிலை: ரசித்துச் சிரித்தேன். அதிர்கிற வீணையில் தூசு குந்தாதுன்னுதான்...
@வி.கோ.ஸ்வாமி: நண்பா உமக்கும் எனக்குமான அலைபேசி தொடர்பில் யாரோ சூன்யம் வைத்துவிட்டார்கள். நானே கேட்கலாம் என்றிருந்தேன். கவிதைகளைத் தேடி எடுத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் அனுப்பி வைத்துவிடுகிறேன். அன்பிற்கு நன்றி!
ஒரு எழுத்தாளனின் பரிணாம வளர்ச்சியை வாசகன்(வாசகி) தாங்கித் தான் ஆக வேண்டும். நடத்துங்க//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. :)))
அதென்ன பொடியன் பொடியன் என்று என் அனுமதி இல்லாமல் எழுதி இருக்கிங்க. ஆனாலும் நான் மாற்ற சொல்ல மாட்டேன்.. கருத்து சுதந்திர காவலன் நான். ;)))