மயக்கமென்ன?!
எதிர்கடை கோனார்தான் வந்து விபரம் சொன்னார். லேத்திலேயே போன் இருக்கிறது. வேலைக்காரர்களுக்கு போன் வருவதை முதலாளி விரும்பமாட்டார். ஓட்டிக்கொண்டிருந்த மிஷினை அப்படியே நிறுத்திவிட்டு வேஸ்ட் காட்டனில் க்ரீஸ் கரங்களைத் துடைத்துக்கொண்டான் கணேசன். முதலாளியிடம் விபரம் சொல்லிவிட்டு உடனே கிளம்பியாகவேண்டும். போனவாரம்தான் கொஞ்சம் முன்பணம் வாங்கி இருந்தான். திரும்பவும் கேட்டால் கண்டபடி திட்டுவார். வேறு வழியில்லை.
ஒருவழியாக தயங்கி, தயங்கி விபரத்தை சொன்னதும் அவரே உள்பாக்கெட்டுக்குள் கைவிட்டு இரண்டு 500 ரூபாய் தாள்களைத் தந்தார். யூனிபார்மை மாத்திட்டுப் போடா என்றார். அதற்கெல்லாம் நேரமில்லை. 9:45க்கு டிரெயினைப் பிடித்தாக வேண்டும். அதை தவறவிட்டால் அடுத்தது அதிகாலை 3 மணி பாஸஞ்சதான். இப்பவே லேட். கணேசன் அப்படியே கிளம்பினான்.
சந்தையடியில் எழாம் நம்பரைப் பிடித்து ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்புறம் ஸ்டாப்பில் இறங்குவதற்குள் மணி 9:40 தாண்டிவிட்டது. சப்வேக்குள் இறங்கி கூட்டத்தை விலக்கி அவசரமாக ஓடினான் கணேசன். டிக்கெட் கவுண்டரில் கொள்ளனா கூட்டம். க்யூவில் நின்று டிக்கெட்டை வாங்குவதற்குள் டிரெயின் வாஞ்சி மணியாச்சியையே தாண்டிவிடும். தெரிந்த முகம் எதும் தட்டுப்படவில்லை. கொஞ்சம் பாந்தமான முகமாய் தெரிந்த ஒரு பெண்ணிடம் விபரத்தைச் சொன்னான். கவனமாகக் கேட்டுவிட்டு ‘போயி வரிசையில நின்னு தம்பி... ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத... காலு செத்தவ நானே நிக்கிறேன்ல...’அசிங்கப்படுத்திவிட்டாள். அதற்குள் பின்னாடி நிற்பவர்கள் கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவரவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். சட்டென்று முடிவெடுத்தான் கணேசன். நான் ஒருத்தன் வித்-அவுட்ல போறதுனால ரயில்வே ஒண்ணும் திவாலாகிடாது!
இரண்டிரண்டு படியாக தாவி தாவி 4வது பிளாட்ஃபார்முக்குள் கணேசன் நுழையும்போது நாகர்கோவில் எக்ஸ்பிரஸின் கடைசிப்பெட்டியின் பெருக்கல்குறி தூரத்தில் மறைந்துகொண்டிருந்தது. ‘ச்சை...என்ன எழவுடா இது...?! தரித்திரம் வுடாம தொரத்துது...?!’ கணேசனுக்கு மூச்சு வாங்கியது. ‘வேல சொன்னா பேல வருதுங்கான்’என எப்பவோ முதலாளி திட்டியது சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலை. தூரத்தில் இருந்த ஓரே கடையும் கடைசி பலகையை வைத்து அடைத்துக்கொண்டிருந்தான். அவ்வளவு தூரம் நடக்கவும் சடவாக இருந்தது. இனி பாசஞ்சர் வரும்வரை பிளாட்பார்மில் காத்திருக்கவேண்டியதுதான். ஏழாம் நம்பருக்கு காத்திருந்ததை விட ஒரு ஆட்டோவைப் பிடித்திருந்திருக்கலாம். ஆனால், முதலாளி கொடுத்த ஆயிரத்தில் 100 அதுக்கே சரியாகப் போயிருக்கும். ஊரில் நிறையச் செலவுகள் காத்திருக்கிறது. பெருமூச்சு விட்டுக்கொண்டு குடிநீர் குழாயினைத் தேடி நடக்கத்துவங்கினான். அவனை இருகண்கள் இருளில் கண்காணித்துக்கொண்டிருந்தன.
குளிரும் கொசுவும் சேர்ந்து கடிக்க ஆரம்பித்தன. கணேசனைப் போலவே வண்டியை தவறவிட்ட வியாபாரிகள் சிலர் பெஞ்சுகளில் சாக்கை விரித்து கால்களை அதனுள் நுழைத்துக்கொண்டு படுத்துக்கொண்டனர். கந்தலாய் இருந்த பிச்சைக்காரன் மேல் நாய்க்குட்டி ஒன்று ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தது. அவன் குட்டியின் காதுகளை இழுத்து, இழுத்து சீண்டிக்கொண்டிருந்தான். வேடிக்கையாக இருந்தது. எடை போடும் மெஷின் ஒன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தார். எந்த ஊருக்கோ ஏற்றி அனுப்பப்பட வேண்டிய சரக்குப்பெட்டிகளின் மேல் இரண்டு போர்ட்டர்கள் குவார்ட்டர் பாட்டிலை திருகிக்கொண்டிருந்தார்கள். பகலெல்லாம் பரபரப்பாய் இயங்குகிற ரயில்நிலையம் இரவானதும் இவர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது என கணேசன் நினைத்துக்கொண்டான்.
பத்து வருடங்களுக்கு முன் இதே மாதிரி விடிய விடிய ரயில்நிலையத்தில் கணேசன் காத்துக்கிடந்திருக்கிறான். கூடவே மருண்ட விழிகளோடு ஜெபமணியும். வாழ்மான கட்டத்துல அற்புதராஜ் அண்ணன்தான் கைச்செலவுக்குப் பணம் கொடுத்து சிலுவையும் போட்டு அனுப்பிவைத்தவர். நீ யோக்கியங்கிறதுனால கிறிஸ்தவனா இல்லாட்டியும் இவளை உன் கையில புடிச்சி கொடுக்கேன். மானத்தோட வச்சி காப்பாத்து. ஊர்க்காரவனுங்களை நான் சமாளிச்சுக்கறேன் என தைரியம் கொடுத்த மனுஷன். இரு வீட்டார் கோபம் தணிந்து ஊருக்குள் நுழையவே ஐந்து வருடங்கள் ஆனது. ஜெபமணி இந்து சமயத்தை தழுவி ஜெயலட்சுமியாகி மாதாந்திர வெள்ளிகளில் விளக்கு பூஜைக்கு போய்க்கொண்டிருக்கிறாள். பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்பதைத் தவிர ஒரு குறையும் இல்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வேட்டு கம்பெனிக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருந்த கணேசனுக்கு கோயம்புத்தூரில் கிரைண்டர் கம்பெனியில் வேலை கிடைத்து 8 மாதங்கள் ஆகிறது.
மணி பன்னிரெண்டை தொட்டபோது கணேசனுக்கு வயிறு கலக்கியது. கட்டண கழிப்பிடம் நோக்கி நடந்தான். அது பூட்டிக்கிடந்தது. இந்த நேரத்தில் எங்கு போவது?! ‘வேல சொன்னா பேல வருதுங்கான்’ என முதலாளி சொல்வது சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது. வயிற்றில் பொருபொருவென இரைச்சல். மதியம் சாப்பிட்டது ஒத்துக்கொள்ளவில்லை. வயித்தால போகும்போல பட்டது. நல்லவேளைக்கு காலி தண்ணீர் பாட்டில் ஒன்று மூடியில்லாமல் தரையில் கிடந்தது. அதில் தண்ணீர் பிடித்துக்கொண்டு தண்டவாளத்தில் இறங்கி இருளில் மறைந்தான் கணேசன். அவனை கண்காணித்துக்கொண்டிருந்த கண்கள் பரபரத்து செல்போனை எடுத்து பட்டன்களை அழுத்த துவங்கியது.
வயிறு காலியானது பெரிய நிம்மதியைக் கொடுத்தது. ரயிலுக்கு இன்னும் முழுசாக ஒரு மணிநேரம் இருக்கிறது. லேத்து அலமாரியில் போன வாரமே வாங்கி வைத்திருந்த பாலகுமாரனின் ’கரும்பு கட்டில்’ கிடந்தது. கொண்டு வந்திருந்தால், படித்திருந்திருக்கலாம். அதையெல்லாம் எடுத்து வைக்கிற மனநிலையிலோ, சாவகாசத்திலோவா இருந்தோம். மெள்ள நடந்து கடைப்பக்கம் வந்தான். மூடப்பட்டிருந்த கடையின் பக்கவாட்டு தூணில் கயிறு கட்டப்பட்டு அதில் பத்திரிகைகளின் போஸ்டர்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தொடைகளைப் பரத்தி அவஸ்தையாக குத்த வைத்திருந்த ஒரு நடிகையின் படம் போஸ்டரின் முக்கால்வாசியை ஆக்ரமித்திருந்தது. போஸ்டரின் ஓரத்தில் ‘தண்டவாள காமுகன் தப்ப விடுகிறதா காவல்துறை?!’, ‘யாரோடும் கூட்டணி இல்லை- நின்றசீர் நெடுமாறன்’’ரேச்சலுடன் நட்புதான் - மனம் திறக்கிறார் கிஷோர்காந்த்’சுவாரஸியமாக படித்து விட்டு போஸ்டரை பாதியாகக் கிழித்தான் கணேசன். ஒன்சைடு எழுத.
மசமசவென்று ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்த கம்பத்தின் அடியில் அமர்ந்து பைக்குள் துழாவினான். சட்டைபாக்கெட்டில் ரிபீல் கிடந்தது. பேப்பரை நான்காக மடக்கி பிள்ளையார் சுழி போட்டு எழுத துவங்கினான். மாலதி, மாலினி, மாலைமதி, மாலா... நான்கு பெயர்கள் எழுதுவதற்குள் தலையில் சொடெரென விழுந்தது அடி. திடுக்கிட்டு நிமிர்ந்தவனைச் சுற்றி நான்கைந்து போலீஸ்காரர்கள். எந்திரிக்க முற்பட்டவனை பூட்ஸ்கால்கள் உதைத்தன. சுளீர் சுளீரென முதுகில் விழுந்தது லத்தியடி. அய்யோ...அம்மா...ஏன் சார் அடிக்கறீங்க வலியில் கதறினான் கணேசன். ‘தாயோளீ... எங்க உள்ளவண்டா நீயி...’ கொத்தாக தலைமயிரைப் பற்றி நிமிர்த்தி கேட்டவன் கொஞ்சம் உயரதிகாரியாக இருக்கவேண்டும். ’சார் பாசஞ்சருக்காக காத்துக்கிடக்கிறேன் சார்... நாகர்கோவில் எக்ஸ்பிரஸை மிஸ் பண்ணிட்டேன்...’ தட்டுத்தடுமாறி பதில் சொன்னான். முதுகில் கம்பு பட்ட இடங்கள் எரிந்தது. வாய்க்குள் எங்கோ ரத்தம் கசிந்திருக்கவேண்டும். பச்சை வாடையை உணர்ந்தான். ’டிக்கெட்ட காட்டுறா’ என்றார் ஒரு கான்ஸ்டபிள். அவசர அவசரமாக பேண்ட் பாக்கெட், சட்டைப் பாக்கெட்டில் துளாவிய கணேசனுக்கு உயிரே போய் விட்டது. ஆஹா...டிக்கெட் எடுக்கவில்லை. டிரெயினை கோட்டை விட்டதும், கீழே போய் பாசஞ்சருக்காவது டிக்கெட்டை எடுத்திருந்திருக்கலாம். இனி எவ்வளவு சொன்னாலும் நம்பமாட்டார்கள். பரிதாபமாக நடுங்கும் கரங்களைக் குப்பியபடி ‘அவசரத்துல டிக்கெட் எடுக்கல சார்...’ சொல்லி முடிக்கவில்லை முகத்தில் இரும்பாக இறங்கியது ஒரு குத்து.
”ஏரப்பாளீ நாயி... பேப்பர்ல பொட்டச்சிங்க பேரு எழுதி வச்சிருக்கான் சார்... இந்தத் தாயோளீதான் சார் அக்யூஸ்டு. அவசரமாம் அவசரம். இவனை 5 மணி நேரமா வாட்ச பண்ணிக்கிட்டு இருக்கேன் சார்... தூக்கிட்டுப்போய் சாமான்ல சூடு வச்சா ஒத்துக்குவான் சார்...”
அடித்த அடியில் மயங்கி விழுந்த கணேசனை அள்ளி டிராலியில் போட்டு தள்ளிக்கொண்டு போயினர் போலீசார். ரயில்வே ஸ்டேசன் சரவுண்டிங்கில் ஓரே மாதத்தில் அடுத்தடுத்து ஐந்து கற்பழிப்பு கொலைகள். கொய்யாப்பழம் விற்பவள், குருட்டு பாடகி, கழிப்பறை சுத்தம் செய்பவள், பிச்சைக்காரி இவர்களோடு ஒரு லேடி கான்ஸ்டபிளையும் கற்பழித்து தண்டவாளத்தில் வீசியிருக்கிறான். பத்து நாட்களாக பழியோ பழியென்று காத்துக்கிடந்து பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டார்கள்.
ஜெயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதையும், குழந்தைக்கு தன் தாய் மாலையம்மாவின் பெயரை வைக்கத்தான் துண்டுச்சீட்டில் பெயர்களை யோசித்து எழுதியதையும் கணேசன் அவர்களுக்குச் சொல்லி விளங்கவைக்க முடியாத ஆழமான மயக்கத்திற்குள் போய்விட்டிருந்தான் கணேசன்.
- செல்வேந்திரன்.
Comments
பழ,சந்திரசேகரன்
பழ,சந்திரசேகரன்
amas32
வாழ்த்துகள்..
உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் DailyLib
To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் DailyLib
தவிரவும், இதுபோன்ற முடிவுகளுக்கு மக்கள் பழகி விட்டார்கள். யாருக்கும் அதிர்ச்சி தருவதில்லை செல்வா.