அற்புதமானவை

பபாஸி கோவையில் இரண்டாம் முறையாக நடத்திய பதினொறு நாள் புத்தகத் திருவிழாவில் அனைத்து நாட்களிலும் முழு நேரமும் கண்காட்சியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டைவிடவும் இம்முறை விற்பனையும், வாசகர் வரத்தும் மிகவும் குறைவுதான். ஆடிக்கழிவுகளில் ஆழ்ந்திருக்கும் மக்களை புத்தகங்கள் பக்கம் ஈர்ப்பது சிரமமான காரியம்தான். ஜாதுகர் ஆனந்த், ரஸ்ஸியன் சர்க்கஸ், பனிமலை அனுபவம், எதையெடுத்தாலும் பத்து ரூபாய் கடைகளுக்கு மொய்க்கும் கூட்டத்தில் பத்து சதவீதம் புத்தகக்கடைகள் பக்கம் வந்தால் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்புகள் வாழ்ந்துவிடும் சாத்தியம் இருக்கிறது.

கடந்த ஆண்டில் வாங்கிய புத்தகங்களில் இன்னும் ஒரிரண்டு புத்தகங்களைப் படிக்கவில்லையென்றாலும் அபிமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்த்துவிட்டால் ஒரு 'ஷிவரிங்' ஏற்படத்தான் செய்கிறது. நகுலனின் நினைவுப்பாதை, பிரமிள் படைப்புகள், ஜெயமோகனின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், ஜி. நாகராஜன் ஆக்கங்கள் முழுத்தொகுதி, செழியனின் உலக சினிமா, ஓஷோவின் ஒரு மறைஞானியின் சுயசரிதை, கந்தர்வன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், விடுதலைப்புலி திப்பு சுல்தான், தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள், இந்தியப் பத்திரிக்கைகள் 1955 முதல் ஆகிய புத்தகங்களை வாங்கினேன்.

மற்ற எதையும் விட மனுஷ்யபுத்திரனின் தலையங்கம் (இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் பற்றி எழுதும்போது மட்டும் பூனை வெளிவரும் என்ற போதும்) என்னைத் தொடர்ந்து உயிர்மை வாங்க வைக்கிறது. சில இதழ்கள் வாங்க தாமதமாகி விடுகிறது அல்லது தவறிவிடுகிறது என்பதால் ஓராண்டுக்கான சந்தாவை செலுத்தினேன்.

திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்த விக்னேஸ்வரி சுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலையும், நாஞ்சில் நாடனின் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மையும் (நாஞ்சிலாரின் கையொப்பத்துடன்) வாங்கி பரிசளித்தாள். நாங்களிருவரும் அறிந்த ஓரு உள்ளூர் பத்திரிகையாளர் 'ஆபாச எதிர்ப்பு கருத்தரங்கு' ஒன்றில் வீறு கொண்டு சூலுரைத்த தகவல் வெளியாகி இருந்த நாளிதழைப் படித்துவிட்டு 'கிழி...கிழின்னு கிழிச்சுட்டார்பா.." என நக்கலோடு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். கியான் ரிக்தா மேடம் ஓஷோவின் வெற்றுப்படகு இரண்டு பாகங்களையும் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்ததுடன் எனது பிறந்தநாளை ஸ்வீட், கேக் என அனைத்து ஸ்டால்காரர்களுக்கும் விநியோகித்து என்னை நெகிழ வைத்தார்.

வழக்கமாக கிழக்கு பதிப்பகத்தை நெல்லிக்காய் வியாபாரிகள் என கிண்டல் செய்யும் கேண்டி இந்தமுறை முழுக்க முழுக்க கிழக்கில்தான் புத்தகம் வாங்கினாள். கேம்பஸ் நெருங்குவதைத் தொடர்ந்து ஸிக்ஸ்மா, அம்பானி, நாராயணமூர்த்தி மற்றும் சில பாரதி புத்தகாலய வெளியீடுகளையும் நண்பர்களுக்குப் பரிசளிக்க ஆங்கில கிராமர் புத்தகங்களையும் வாங்கிக்கொண்டாள். எங்களது மேனேஜ்மேண்ட் புத்தகம் ஒன்றை எப்படியாவது அவளது தலையில் கட்டிவிடலாம் என முயற்சித்தேன். நான் சிபாரிசு செய்த காரணத்தினாலோ என்னவோ முற்றிலுமாக நிராகரித்தாள். கணபதி அண்ணன் தன்னால் மூன்றாயிரம் ரூபாய்க்குத்தான் புத்தகம் வாங்க முடிந்தது என வருத்தப்பட்டார். இதற்கும் பணவீக்கம்தான் மறைமுகக்காரணி எனக் கோபப்பட்டார்.

புத்தகங்களை வாங்குவதிலும், விற்பதிலும் பரிசளிப்பதிலும் மிகுந்த தீவிரமாக இருந்ததால் எனது அபிமான பேச்சாளர்களான கு. ஞானசம்பந்தன், எஸ். ராமகிருஷ்ணன், பர்வீன் சுல்தானா மற்றும் கோபிநாத் ஆகியவர்களின் பேச்சைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. இம்முறை நான் வாங்கிய அனைத்து புத்தகங்களுமே அற்புதமானவை. இவைகளை வைத்துக்கொண்டு இந்த மழைக்காலத்தை அனுபவிக்க போகிறேன்.

Comments

Popular Posts