Monday, January 27, 2014

பொன்னின் நிறம்..பிள்ளை மனம்..

ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறை முடிந்து ஆறாம் வகுப்பு துவங்கும் முதல் நாள். ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து ஒரே பெஞ்சில்  அமர்ந்து படித்த என் தோழர்களில் மூவரைக் காணவில்லை. ஏ,பி இரண்டு செக்சனிலுமாக மொத்தம் 20 பேர்களுக்கு மேல் வரவில்லை.  முருகேச வாத்தியார் கடும் கோபக்காரர் என்பதைக் கேள்விப்பட்டு வேறு பள்ளிக்கு மாறி இருப்பார்களென நினைத்துக்கொண்டேன். அப்படியில்லை என்பது மறுநாள் தெரியவந்தது. வாசகசாலைக்குச் செல்லும் வழியில் முத்துவைப் பார்த்தேன். அவனுக்கு சற்றும் பொருந்தாத சாரம் (கைலி) அணிந்திருந்தான். மண்ணால் செய்த இரண்டு மூன்று டம்ளர்களைக் கையில் வைத்திருத்தான். அதன் பெயர் குகை என்று பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். மாமாவின் பட்டறையில் சேர்த்துட்டாங்க. இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டேன் என்றான். மற்ற இருவருமே வெவ்வேறு பட்டறைகளில் சேர்ந்து விட்டார்களென்பதைப் புரிந்துகொண்டேன்.

அப்பா வறுமை காரணமாக எட்டாம் வகுப்பைத் தாண்டாமலே காசுக்கடைக்கு வேலைக்குப் போனவர். படிக்க முடியவில்லையே எனத் தான்பட்ட துயரத்தை பலமுறை எனக்கு விளக்கியிருக்கிறார். நண்பர்கள் பட்டறையில் சேர்ந்ததை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. முதல் இடைத் தேர்வு வரை அவர்கள் மீண்டும் வந்து சேர்ந்து விட மாட்டார்களா என மனம் ஏங்கியபடியே இருந்தது.

பிற்பாடு என் படிப்பே பத்தாம் வகுப்போடு அரோகரா ஆகி நாடு ஒரு நல்ல மருத்துவரை இழந்தது. தினசரி சோற்றுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்த நாட்களில், பட்டறைத் தோழர்கள் நக இடுக்கில் ஆட்டையைப் போட்டு வரும் சில்வாணத் தங்கத்தின் உபயத்தால் செழிப்பாகத் திரிவதைப் பார்த்து மலைத்தேன். தினமும் நாற்பது, ஐம்பது கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து வியாபாரம் முடித்து வீடு வந்து கணக்குப் பார்த்தால் முப்பது ரூபாய் கூட லாபம் மிஞ்சியிருக்காது. ‘யானை சாணி போடும்; எலி புழுக்கைத்தானலே போடும்’ என்பார் அப்பா. தங்கத் தொழிலும் அதன் லாபமும் யானையின் சாணியோடு ஒப்பிடப்பட்டது. மீன் கடையில் சீலாவும், இறைச்சிக்கடையில் தொடைக்கறியும், மாணிக்க நாடார் கடை சூடு பக்கோடாவும் ஆசாரிமார்கள் வாங்கியது போக மீதமிருந்தால் மற்றவர்களுக்கு எனும் நிலை உள்ளூரில் உருவானது. சரி நாமதான் உருப்படவில்லை. இவர்களாவது சின்ன வயதிலேயே தொழிலைக் கற்றுக்கொண்டு முன்னேறி இருக்கிறார்களே என சந்தோசப்பட்டேன்.

இன்று மீண்டும் நிலைமை தலைகீழ். தாய்த்தமிழகத்தின் பிற கைவினைஞர்களைப் போலவே இவர்களும் கைவிடப்பட்டார்கள். லட்சக்கணக்கான பொற்கொல்லர்கள் நிறைந்த தென்கோடி மாவட்டங்களில் பலருக்கும் தொழில் இல்லை. நகை உற்பத்தியில் எந்திரமயம்; குடிநாணயம் எனும் வார்த்தையே மெள்ள மறைந்து விளம்பரங்களில் வரும் பிரம்மாண்டமான நகைக்கடைகளை நாடும் மக்களின் மனநிலை; உச்சாணிக்கொம்பைத் தொட்டிருக்கும் தங்கத்தின் விலை; ஊர்ப்புறங்களில் விவசாயம் பொய்த்துப் போனது என கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான காரணங்கள். எல்லா கைத்தொழில்களும் கார்ப்பரேட்டுகளால் கைப்பற்றப்படும் காலம் வரும் எனத் தெரிந்திருந்தால் கவிமணி ’கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’ எனப் பாடியிருக்கவே மாட்டார். பரம்பரை பணக்காரர்களும், வெகு அரிதான வேலைப்பாடுகளைச் செய்பவர்களும் மட்டுமே பிழைத்துக் கிடக்கிறார்கள். வலசை போகும் பறவைகளைப் போல பிழைப்புத் தேடி தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்தபடி உள்ளனர். அதிகார மையங்களில் இவர்களுக்கென்று பேச இன்று ஒரு குரலே இல்லை.

நடப்பிதழ் விகடனில் எஸ்.செந்தில்குமார் எழுதிய ‘உமிக்கருக்கு’ சிறுகதை பள்ளியிலிருந்து பிடுங்கி பட்டறையில் நடப்பட்ட சிறுவர்களின் உலகைச் சித்தரிக்கிறது. தீ நாக்குகள் சுழலும் உமிச்சட்டியில் பழுத்துக்கிடக்கும் சிறிய குகைக்குள் உருகி ஒடத்துடிக்கும் ஒரு சொட்டுப் பொன் வெளிவந்ததும் தட்டி நிமிர்த்து வளைத்து சுழித்து நெளித்து கம்மலாய், வளையலாய், மூக்குத்தியாய், மோதிரமாய், தாலியாய், ஒட்டியாணமாய் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பிவிடும். அம்மாவிடமிருந்து மகளுக்கும், பாட்டியிடமிருந்து பேத்திக்கும், மாமனிடமிருந்து மச்சானுக்கும் வர்க்கத்தாய் கைமாறும். அவற்றிற்கொரு வாழ்வுண்டு. குகைச்சட்டிக்குள்ளிருந்து மீளவே முடியாதென்பதறியாமல் உமிக்கருக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள ஆலாய் பறக்கும் வணங்காமுடிகளின் சின்னஞ்சிறிய சோகங்கள் வாசக மனதில் பெரும்பாரத்தை ஏற்றி விடுகிறது.

கதையை இங்கே வாசிக்கலாம். 

1 comment:

Deepa said...

முகநூல், பஸ், ட்விட்டர் ஆகியவற்றின் செல்வாக்கின் முன் களையிழந்திருக்கும் வலைப்பூக்களுக்குப் புத்துயிர் கொடுக்கும் விதமாக மீண்டும் எழுதத் தொடங்கி இருகும் முயற்சிக்கு முதற்கண் என் வாழ்த்துகள்.

“எனக்கும் எழுதத் தூண்டுகிறது என்பதை எவ்வளவு நாசுக்கா சொன்னேன் பாருங்க!” ;-)

”எல்லா கைத்தொழில்களும் கார்ப்பரேட்டுகளால் கைப்பற்றப்படும் காலம் வரும் எனத் தெரிந்திருந்தால் கவிமணி ’கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’ எனப் பாடியிருக்கவே மாட்டார்” :-(((