Wednesday, July 29, 2009

சொற்களெடுத்து எறிந்தாய் தோழி!

வணக்கம்,

நான் நலம், நீங்களும் நலமாக இருக்க இறைவனை வணங்குகிறேன். நீங்கள் என்னைத்தேடுவதாக சிலர் என்னைத்தொடர்பு கொண்டார்கள். நீங்கள் யார் என்று நான் அறிய முடியுமா? மட்டக்களப்பில் எந்த வீதியிலிருக்கும் அனோஜாவைத்தேடுகிறீர்கள்?

அனோ.

***

அன்பின் அனோ,

நீங்கள் யாரென்று கேட்டதிலிருந்தே நீங்கள் நான் தேடுகிற அனோஜா இல்லையென்று புலனாகிறது. தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

நான் செல்வேந்திரன், எழுத்தாளன். எனக்கு மட்டக்களப்பில் பிரதீபா திருக்குளத்தரசன் என்றொரு பேனா நண்பி இருந்தாள். அவள் மூலமாக அனோஜா ரத்னவேல் என்றொரு நண்பியும் அறிமுகம். நாங்கள் பால்யத்தில் தொடர்ந்து கடிதங்களின் மூலம் எங்களது நட்பைப் பலப்படுத்திக்கொண்டோம். கொடிய வறுமையில் என்னால் செலவினமிக்க கடிதப் போக்குவரத்தினை மேற்கொள்ள இயலாமல் போய்விட்டது.

இன்றைக்கு வசதியும், வாய்ப்பும் வந்து விட்ட சூழலில் என் சக ஹிருதயர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் எனும் ஆர்வத்தேடலில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்த நண்பர்கள் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் போலும். தொந்தரவிற்கு மன்னியுங்கள்.

நான் தேடுகிற அனோவிற்கு சுமார் 22 வயது இருக்கலாம்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

***

செல்வேந்திரன்,

நீங்கள் தேடும் அனோ நானேதான். ஆனால் இப்ப எனக்கு இந்தியாவில் இருக்கும் எவருடனும் நட்பு வைக்க எனக்கு விருப்பமில்லை. இந்தியாவில் வாழ்பவர்கள் சுயநலவாதிகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். பிரதீபாவின் அப்பா காலமாகிவிட்டார். அவளுக்கும் நட்பு தொடர்வதில் விருப்பமில்லை. நன்றி

இந்தியாவின் எதிரி
அனோஜா

***

"சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமே பேசாதிருங்கள்..." (யாக்கோபு 4:11)

அன்பின் அனோஜா,

தங்களது பதிலுக்கு நன்றி! யாரோடும் நட்பைத் தொடர்வது அல்லது முறித்துக்கொள்வது தங்களின் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட வானத்தின் கீழுள்ள எவருக்கும் அதிகாரம் இல்லை.

தமிழகத்தின் அண்டை நாடான இந்தியாவின் குரலே தமிழர்களின் குரலென்று தவறாகப் பொருள் கொள்ளப்படுவது ஈழப் பிரச்சனையில் உண்மையான கவலையும், வருத்தமும் கொண்டு கண்ணீர் சிந்துகிற தமிழர்களின் சாபக்கேடு. எங்கள் உணர்வும், கவலையும் உண்மையென்று உங்களிடத்தில் நிரூபணம் செய்ய வேண்டி இருப்பது எத்தனை துரதிர்ஷ்டமானது. ஈழ விடுதலைக்காக தங்களை எரித்துக்கொண்ட முத்துக்குமரன் போன்ற எண்ணற்ற இளைஞர்களின் பிணத்தின் மீது நின்றுகொண்டுதான் இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். உண்மையான அக்கறையோ, அல்லது சுய நோக்கங்களுக்கான நாடகமோ எது எப்படியாயினும் எங்கள் தலைவர்களும், கலைஞர்களும் அவரவர்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடி சிறை சென்ற தகவல்களையெல்லாம் உங்களது கணிணித் திரை காட்டி இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனால், எழவு வீட்டில் நியாயம் பேசுவது அசிங்கமானது. நீ என் சகோதரி. செத்துப்போனவர்கள் என் சகோதரர்கள். நானும் துக்கத்தில் இருக்கிறேன். உங்களோடு சமர் செய்வது என் விருப்பமோ, நோக்கமோ அல்ல. நாங்கள் கள்ள மவுனம் சாதித்தாக நீ சொல்கிற கூற்றில் எனக்கிருக்கிற அபிப்ராயங்களை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். ஆரம்பம் தொட்டே ஈழப் பிரச்சனையைத் தனிப்பட்ட தமிழர்களின் பிரச்சனையாகவே மொத்த இந்தியாவும் கருதிவருகிறது. அவர்கள் தமிழரென்ற போதும் இந்திய வம்சாவளியினர்தானே என்கிற எண்ணம் இந்தியாவில் விதைக்கப்படாமல் போனதற்கு சர்வ நிச்சயமாக திராவிடத் தலைவர்களே காரணம். இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும்போது மொத்த இந்தியாவும் கொதித்துக் கிளம்புகிறது. ஆனால், இலங்கையிலோ, கர்நாடாகாவிலோ, மலேஷியாவிலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் அது பெட்டிச் செய்தியாக மட்டுமே கருதப்படுகிறது. தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?! என்கிற சந்தேகம் எங்களுக்கு எப்போதும் இருந்தே வருகிறது.

செல்வேந்திரன் எனும் பெயரும், என்னுடைய கடிதங்களும், நான் உங்களிடத்தில் காட்டிய அன்பும் நிச்சயம் மறக்கக் கூடியதல்ல. காலம் நம்மைக் கலைத்துப் போட்ட பின்னர், எங்கே போர் உங்களையும் தின்று விட்டதோ எனும் பதட்டத்தில் தேடி, தேடி உங்களைக் கண்டடைந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி. இனி நீங்கள் நட்பைத் தொடராமல் இருந்தாலும் கவலையில்லை.

'திருக்குளத்தரசன்' எனும் பெயர் எத்தனை வசீகரமானது?! பிரதீபாவின் தந்தை மரணமடைந்து விட்ட செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. என் இரங்கல் அவளுக்கு நிச்சயம் தேவை இல்லைதான்.


இப்படிக்கு,

உங்கள் அன்பெனும் பிடிக்குள் சில காலம் அகப்பட்டுக் கிடந்த செல்வேந்திரன்.

24 comments:

டக்ளஸ்... said...

என்னத்த சொல்லண்ணே...!
:(

Raghavendran D said...

உருக்கமான பதிவு செல்வா.. :-(

வால்பையன் said...

தமிழனின் குரலாகவே எனக்குப் படுகிறது!

பித்தன் said...

வெந்த புண்ணில் விரல் இந்த முறிவு.....

உனது (இல்லை) நமது வருத்தத்தைப் பதிவு செய்தீர்கள்.....

VIKNESHWARAN said...

அசத்தல் :)

இரா.சிவக்குமரன் said...

செல்வேந்திரன்?!!!!

ஸ்ரீ said...

ஆரம்பம் தொட்டே ஈழப் பிரச்சனையைத் தனிப்பட்ட தமிழர்களின் பிரச்சனையாகவே மொத்த இந்தியாவும் கருதிவருகிறது. அவர்கள் தமிழரென்ற போதும் இந்திய வம்சாவளியினர்தானே என்கிற எண்ணம் இந்தியாவில் விதைக்கப்படாமல் போனதற்கு சர்வ நிச்சயமாக திராவிடத் தலைவர்களே காரணம்.//
உண்மை.அவர்களுக்கெல்லாம் ஆயிரம் கோடிகளைப் பற்றியும்,வாரிசுகளின் எதிர்காலம்,பதவி என்று ஏகக் கவலைகள்.இரண்டு மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம் இருக்க முடியாமல் கட்சிப் பணிகள்,என்னசெய்வார்கள்பாவம்.

கார்க்கி said...

ம்ம்..

tamilvanan said...

வணக்கம்
//ஆனால், இலங்கையிலோ, கர்நாடாகாவிலோ, மலேஷியாவிலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் அது பெட்டிச் செய்தியாக மட்டுமே கருதப்படுகிறது. தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?! என்கிற சந்தேகம் எங்களுக்கு எப்போதும் இருந்தே வருகிறது.//

இதனை நிவர்த்தி செய்யும் பொறுப்பும் உங்களிடையேதான் உள்ளதாக நாங்கள் இன்னும் நம்புகிறோம்.

Anonymous said...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

ரெட்மகி said...

தமிழனாய் பிறந்ததுக்கு இன்னும் எவ்ளோ பட வேண்டுமோ தெரியவில்லை

நாஞ்சில் நாதம் said...

/// எங்கள் உணர்வும், கவலையும் உண்மையென்று உங்களிடத்தில் நிரூபணம் செய்ய வேண்டி இருப்பது எத்தனை துரதிர்ஷ்டமானது. ஈழ விடுதலைக்காக தங்களை எரித்துக்கொண்ட முத்துக்குமரன் போன்ற எண்ணற்ற இளைஞர்களின் பிணத்தின் மீது நின்றுகொண்டுதான் இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். ///


உருக்கமான பதிவு செல்வேந்திரன்

பாலாஜி said...

//விதைக்கப்படாமல் போனதற்கு சர்வ நிச்சயமாக திராவிடத் தலைவர்களே காரணம்.//

ஒரு சின்ன திருத்தம் ’விதைக்கவிடாமல் செய்ததற்கு திராவிட தலைவர்களே காரணம்.’

ஜெஸிலா said...

அனோஜாக்கு மட்டுமா இந்த கடிதமும் விளக்கமும்? :-(

லவ்டேல் மேடி said...

சோ....... சேடு .....!!!!!!

சூரியன் said...

உண்மையண்ணே ..

pranu said...

ஓஓஒ...... இந்திய வம்சாவளியினர் என்றால்த்தானோ ஈழப்பிரச்சனையில் தலையிடுவீர்கள்????? அப்ப இந்தியா நடந்து கொண்டது சரிதான் போலும்.
ஈழத்தமிழர் இந்திய வம்சாவளியினர் அல்ல. நாங்கள் ஈழத்தின் பூர்வீக குடிகள் (பழைய லெமூரியா கண்டத்தின் ஒரு பகுதியே ஈழம்). இதே உங்களுக்கு தெரியவில்லையே!!!!
இலங்கையின் மலைநாட்டில் வாழ்பவர்கள்தான் இந்திய வம்சாவளியினர். அதனை முதலில் தெரிந்து வையுங்கள்.

அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் ஈழ போராட்டத்திற்கு குரல் கொடுத்து பலம் சேர்த்த, சேர்த்துக்கொண்டிருக்கும் பழநெடுமாறன் ஐயா, மற்றும் இன்று வரை தனது ஈழ கொள்கைகளிலிருந்து மாறாது செயற்பட்டுக்கொண்டிருக்கும் மதிப்பிற்குறிய வைகோ ஐயா, எம் தலைவனை சந்தித்து வன்னிக்காட்டில் இருந்து புலியாக புறப்பட்ட அண்ணா சீமான், இவர்கள் உட்பட பலர் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை.

முக்கியமான ஒரு கால கட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் என்ன செய்தீர்கள்???????
தேர்தலுக்காக ஈழப்பிரச்சனையை கையிலெடுத்த கட்சிகளை விடுங்கள். வைகோ வைக்கூட தூக்கி எறிந்தார்களே உங்கள் மக்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது???
தொப்புள் கொடி உறவு..... தொப்புள் கொடி உறவு..... என்கிறீர்களே, அந்த உறவுக்கான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு??????

75 நாட்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினார்கள் பிரித்தானியா வாழ் எம் புலம்பெயர் தமிழர்கள். 2 - 3 இலட்சம் பேர் பங்கு பற்றினர் அதில் (அங்கு வாழ்பவர்கள் 3.5 - 4 இலட்சம் பேர்). மனிதச்சங்கிலிப் போராட்டம் அது இது என்டு செய்தீர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளுடன் சரியே!!!!! இத்தனை கோடி மக்கள் இருக்கும் தமிழ் நாட்டில் வரலாறு காணாத மக்கள் திரண்டு ஏன் தொடர் போராட்டமொன்றை நடத்த முடியாமல் போனது?????

80 களின் கடைசியில் இந்திய-இலங்கை கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பை உடைத்தெறிந்து ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தின் உடல்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியது எம் வீரத்தலைவனின் வீரப்படைகள். அன்று தலை குனிந்த காந்தி குடும்பத்தினர் 20 வருடங்களின் பின்னர் வீரத்தலைவனையும் அவனது படையையும் அழிக்கும் நோக்கில் 20 நாடுகள் துணையுடன் சிங்களனுடன் தமிழீழத்தில் கால் பதித்து வெற்றியும் கண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

தலைவன் வருவான் பதில் சொல்வான்.

எம் தலைவன் பொறுமையின் சிகரம். அவன் பொறுமை இழந்திருந்தால் சிங்கள தேசத்தில் இன்று ஒரு புல் கூட இருந்திருக்காது. அவன் சிங்கள மக்களும் மனிதர்களே என்று உணர்ந்தவன். அதனால் தப்பினான் சிங்களன்.

இப்போது ஈழத்தமிழனுக்கு முதல் எதிரி இந்தியாதான்.

என்றும்,
வீரத்தலைவனின் வழியில்
அனோஜா

RR said...

//எங்கள் உணர்வும், கவலையும் உண்மையென்று உங்களிடத்தில் நிரூபணம் செய்ய வேண்டி இருப்பது எத்தனை துரதிர்ஷ்டமானது.//
செல்வா,
எனக்கு இலங்கை தமிழர்களை, நமது சகோதர்களை அடிகடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுவதுண்டு.
ஒவ்வொரு முறையும் அவர்கள் எதிர்படும் பொழுது எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கும்......உறவுகள் உரிமையுடன் நம்மை எதாவது கேட்டால் என்ன பதில் கூறுவேன் என்று கூனி குறுகி கிடந்திருக்கிறேன். எனது மனதில் இருந்ததை, என்னால் வெளியில் வார்த்தையாக கொண்டு வர முடியதவையை, எழுத்து வடிவமாக இங்கு கொட்டியிருகிறீர்கள் செல்வா. நன்றி செல்வா , உங்கள் பதிவும், பதிலும் எனக்கு பெரும் ஆறுதல் தருவதாக உள்ளது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

உணர்வுப்பூர்வமான பதிவு செல்வா.!

K. Thangamani Prabu / க. தங்கமணி பிரபு said...

அன்புள்ள செல்வேந்திரன்,
கடந்த சில நாட்களாய் தொடர்ந்த வலியின் பிரதிபலிப்பு எழுத்தாய் உங்கள் பதிவு. பதிலுக்கு விடிய விடிய அடித்த நீண்ட பிண்ணூட்டத்தை, ஒரு முன்னுரையோடு பதிவாய் போட்டாச்சு! நேரமிருக்கும் போது பாருங்க http://chinthani.blogspot.com/2009/07/blog-post_31.html

பழனிசாமி தர்மலிங்க‌ம் said...

இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலையை தடுக்கக்கூடிய சக்தி இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இருந்த தமிழனுக்காக வாழ்வதாக சொல்லி நீலிக்கண்ணீர் விடுகின்ற திரு.கருணாநிதி அவர்களிடம் துருப்புச்சீட்டு இருந்தும் தன் குடும்பத்தினரின் சுயந‌லத்துக்காக பயன் படுத்த தவறிவிட்டார்.அது அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் தெரியும்.எனவே ஒட்டுமொத்த இந்தியாவையும் தவறாக நினைக்க வேண்டாம்.திணை விதைத்தவன் திணை அறுப்பான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.காலம் மாறும்.அதை நாம் கண்ணெதிரில் காண்போம்.

360 கோணம் said...

தொலைந்த உறவு கிடைத்ததால் மகிழ்வதா அல்லது அவர்களுக்கு உதவ முடியாமல் போனதற்காக வருந்துவதா..? :(

அன்புடன் அருணா said...

மனதைக் கஷ்டப் படுத்தியது பதிவு....

ஊர்சுற்றி said...

செல்வேந்திரன்,
எனக்கு என்ன பின்னூட்டமிடுவது என தெரியவில்லை. :(