Monday, December 22, 2008

மன்னியுங்கள்

இன்றோடு இந்த விடுதியறை ஏகி நான்காண்டுகள் ஆகிறது. நேற்றுத்தான் வந்தது போல் இருக்கிறது. ஓரே அறை. ஓரே நபரோடுதான் பகிர்வும் கூட. புதுமைப்பித்தன் துவங்கி பவுத்த அய்யனார்வரை வறண்ட மேன்சன் வாழ்க்கைக் குறித்து கழிவிரக்கம் பொங்க எத்தனையோ படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், இந்த விடுதியறை வாழ்க்கை குறித்து என்னிடம் யாதொரு புகாரும் இல்லை. இந்த அறை எனக்கு சொர்க்கம். இங்குதான் மிகுந்த பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் உணருகிறேன். இதைவிட்டு வெளியேற வேண்டிய நாள் ஒருபோதும் வரவேண்டாம் என பிரார்த்திக்கிறேன்.

இத்தனை நாட்களில் என் அறை நண்பரோடு எனக்கு கடுகளவு மனஸ்தாபம்கூட வந்ததில்லை. சின்ன உரத்தக்குரல் உரையாடல் கூட இருந்ததில்லை. பிரம்மாண்ட அமைதியும் நற்குணங்களையும் படைத்த அவர் எனது அழிச்சாட்டியங்களைத் தாயன்போடு பொறுத்துக்கொண்டு என்னோடு வசிக்கிறார்.

எங்களிருவரையும் பார்த்து இந்த ராம்நகரே வியக்கிறது. என்ன ரகசியம் என்று கேட்கிறது. ஓரே பதில் "எங்களுக்குள் அர்த்தமுள்ள மவுனங்கள் நிறைந்திருக்கிறது. அதை அசிங்கமான வார்த்தைகளைக் கொண்டு அநாவசியமாகக் கலைப்பதில்லை"

ஆனாலும் இந்த நான்காண்டுகளில் ஒருமுறைக் கூட நான் இந்த அறையை சுத்தம் செய்ததில்லை. தண்ணீர் பிடித்து வைத்ததில்லை. உறங்கும் முன் விளக்கை, டி.வியை அணைத்ததாக நினைவு இல்லை. நள்ளிரவில் எனது கைப்பேசி அலறாத நாளில்லை, அவரது கட்டிலில் எனது உள்ளாடைகள் கிடக்காத நாளில்லை. இப்படி எத்தனையோ இல்லைகள். இந்தக் கட்டுரையை எழுதும் இக்கணத்தில் என் நடவடிக்கைகள் எனக்கு பெருத்த வெட்கத்தை ஏற்படுத்துகிறது. "என் இனிய விடுதியறை நண்பனே என்னை மன்னித்துக்கொள்"
***
என்னதான் நான் ஒரண்டை இழுத்துத் திரிந்தாலும், இணையவெளியில் சிண்டைப் பிடித்து இழுத்தாலும் தனிப்பட்ட பழக்கத்திற்கு அற்புதமான மனிதர் லதானந்த்.மலையை விட்டு இறங்கும்போது எளியேன் என்னையும் அன்போடு மறக்காமல் அழைத்துவிடுவார். கடந்த சனிக்கிழமை கோவை வந்திருந்தார். ஞாயிறு மாலை ஆட்டத்திற்கு சினிமாவிற்குப் போகலாம் என்றழைத்திருந்தார். நானும் வருவதாக உறுதியளித்திருந்தேன். ஆனாலும் தூக்கமின்மை காரணமாக எனக்குள் உறைந்திருந்த நூற்றாண்டு உறக்கத்திற்கு பலியாகிவிட்டேன். பலமுறை தொலைபேசியில் அவர் அழைத்ததுகூடத் தெரியாத மரணத்தூக்கம். விழித்ததும் மிகவும் வெட்கமாகிவிட்டது. பகிரங்கமாய் அவரிடம் ஒரு மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
***
கேண்டிக்கும் எனக்கும் பொதுவான எகிப்திய நண்பன் 'சுகி'. கோவையில் ஒரு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவத்தில் உயர்கல்வி பயின்று வருகிறான். இருபத்தைந்து வயதிற்குள் பல நாடுகளில் கல்விக்காக வாழ்ந்த அனுபவமுடையவன். சுதந்திரமான சிந்தனையை உடையவன். அமெரிக்கா குறித்தும் பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த பிம்பங்களைக் குறித்தும் ஆணித்தரமாக அற்புதமான ஆங்கிலத்தில் விவாதிப்பான். எகிப்திய உணவுவகைகளைப் பிரமாதமாக சமைப்பான். தமிழ் சினிமாப் பாடல்களை விசித்திரமான குரல்களில் விதம்விதமான மெட்டுக்களில் பாடிக் காண்பிப்பான். ஞாயிறு மதியம் என்னையும் கேண்டியையும் தனது அறைக்கு விருந்திற்கு அழைத்திருந்தான். தூக்கத்தினால் அவர்கள் இருவரையும் ஏமாற்றமடைய வைத்துவிட்டேன். அவர்களும் என்னை மன்னிப்பாராக.
***

8 comments:

வால்பையன் said...

இந்த வாரம் மன்னிப்பு வாரமா?

Karthikeyan G said...

/////////////பிரம்மாண்ட அமைதியும் நற்குணங்களையும் படைத்த அவர் எனது அழிச்சாட்டியங்களைத் தாயன்போடு பொறுத்துக்கொண்டு என்னோடு வசிக்கிறார். ////////


இதற்காகவே இன்னும் 10 வருடங்கள் நீங்கள் செய்வதை பொறுத்துக்கொள்வார். :)

செல்வேந்திரன் said...

வாங்க வால்பையன். மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாலே இன்னும் ஒரு சில தப்புகள் பண்ணுவோம்... பொறுத்துக்கனும்யா அப்படிங்கறதுதானே அர்த்தம் :)

வாங்க கார்த்திக்கேயன்...

லதானந்த் said...

செல்வா!
மன்னிப்ப்பெல்லாம் எதுக்கு?
தினமும் கால்ம்பர மூண்்ர மணிக்கு எந்திரிக்கிற ஒனக்கு நாயித்துக் கெளம மட்டும்தான லீவு. அதனால தப்பில்ல. செரியா?

செல்வேந்திரன் said...

லதானந்த் சார், இது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

விஜய்கோபால்சாமி said...

///
லதானந்த் சார், இது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
///

இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் தடவிக் குடுத்துக்கிட்டா... அப்புறம் எங்களுக்கெல்லாம் பொழுது போக வேண்டாமா? அடுத்த ஓரண்டை எப்போ?

செல்வேந்திரன் said...

இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் தடவிக் குடுத்துக்கிட்டா... அப்புறம் எங்களுக்கெல்லாம் பொழுது போக வேண்டாமா? அடுத்த ஓரண்டை எப்போ? //

நாடி ஜோதிடம் பார்த்ததில் 'துப்பாக்கிக்காரர்களிடம்' ஜாக்கிரதையாக இருக்கும்படி சொன்னார்கள்.

Indian said...

//நாடி ஜோதிடம் பார்த்ததில் 'துப்பாக்கிக்காரர்களிடம்' ஜாக்கிரதையாக இருக்கும்படி சொன்னார்கள்.
//ஒன்றா... இரண்டா....?
:
:
:
:
:
நான் பேரலைச் சொன்னேன்.