Sunday, October 27, 2013

சதுப்பு நில குறிப்புகள்

மஞ்சள் மூக்கு ஆள்காட்டியையும், உள்ளானையும் ரொம்ப நாட்களுக்குப் பிறகு திருவண்ணாமலை வயல்வெளிகளில்தான் கண்டேன். அத்தோடு தையல் சிட்டு, ஊதாத் தேன் சிட்டு, உண்ணிக் கொக்கு, அரிவாள் மூக்கன், குக்குறுவான், கொண்டு கரிச்சான்களையும் கூட. இவையெல்லாம் எப்போதாவது தட்டுப்படக் கூடியவைதான். நான் பார்த்துப் பார்த்து வியந்த சில அபூர்வ பறவைகள் திருவண்ணாமலையில் உள்ளன. பெயர்கள் முறையே பவா, ஷைலஜா, உருத்திரகுமார், ஜெயஸ்ரீ, சுகானா, மானஸி மற்றும் வம்சி. வானத்துப் பறவைகளின் குணாம்சங்களை முற்று முழுசாக உள்வாங்கிய மனிதர்கள். இவர்களது விருந்தோம்பல்களைப் பற்றி தமிழில் பல நூறு வரிகள் எழுதப்பட்டு விட்டன. ஒரு கச்சிதமான வரி ‘பவாவுக்கு எந்த மனிதர்களும் அற்பமானவர்கள் அல்ல’ எனும் டாக்டர் ஜெயகரனின் வரிகள்.

வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சதா பெய்து கொண்டிருந்த மழை அன்பெனும் சதுப்பு நிலத்தில் புரண்டெழுந்த உணர்வைத் தந்து கொண்டிருந்தது. மொத்தக் கூட்டத்தில் தன்னை மட்டும் தனிப்பட்டு உபசரிக்கிறார்களோ எனும் சம்சயத்தை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்தி விடுவது பவா குடும்பத்தாரின் இயல்பு.

திருவண்ணாமலை என்றாலே வறண்ட மலையும் வெப்பமும் புழுக்கமும் என்பதே மனப்பதிவாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை வயல்வெளிகள், சமைந்த குமரிகளைப் போல தளும்பிச் சிரிக்கும் நீர் நிறைந்த கிணறுகள், சதா மீட்டிக்கொண்டே இருக்கும் மழைத்தூறல் என திருவண்ணாமலையின் இன்னொரு முகம் ரசிக்க வாய்த்தது. இந்த இரு நாட்களில் மிக நீண்ட தூரம் நடந்தேன். மொட்டைக் கிணறுகளில் குளித்தேன் (நீச்சல் தெரியாது; குரு கிணற்றுக்குள் இருக்கும்போது உயிரைப் பற்றி என்ன கவலை) வயிறு புடைக்க உண்டேன். நிறைய்ய சிரித்தேன். சமீபத்தில் என் நாட்கள் இவ்வளவு மகிழ்ச்சிகரமாக கழிந்ததே இல்லை.

நாய்கள், பசு மாடுகள், கோழிகள், வான்கோழிகள், கினி பறவைகள், வாத்துகள் முயல்கள் இவற்றோடு ஒரு குதிரையும் பவா வீட்டில் வளர்ந்து வருகிறது. வயல் நடுவே வீடு, வீட்டைச் சுற்றி தோட்டமும், கிணறுகளும், தங்கும் குடில்களும். பருவம் பார்ப்பவர்களும் அங்கேயே உண்டு உறங்கும் ஒரு நவீன கூட்டுப்பண்ணை விவசாயம். விளைபொருட்களை விற்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை. வீட்டிற்குப் போக மீதமுள்ளதெல்லாம் பாடு பார்த்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் போய்ச் சேரும். உரையாடலில் கினி கோழி முன்னூறு முட்டையிடும் என்றார் ஒரு நண்பர். 300 முட்டையை வைத்துக்கொண்டு பவா என்ன செய்வார் என்றேன் நான். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அவருக்கு உள்ளூரிலே 3000 நண்பர்கள் இருப்பார்கள் என்றார் மற்றொருவர். வேட்டி நுனி காற்றில் பறக்க வரப்பில் பவா பைக் ஓட்டி வரும் காட்சி காலையிலும், மாலையிலும் பார்க்கக் கிடைக்கும். அசல் சம்சாரி மாதில்லாவே இருக்காரு என்றேன் அரங்கனிடம். இல்லை “நாட்டாமை” என்றார் அரங்கன். இன்னொருவர் ‘அவர் ஒரு கம்யூனிஸ்டு பண்ணையார்’ எனக் கேலி செய்தார்.

ஜெயஸ்ரீயின் லாரிபேக்கர் பாணி கல்வீட்டைப் பற்றி ஜெ விரிவாக எழுதியிருக்கிறார். இல்லங்களை அந்நியமாக உணரச் செய்யும் சோபாக்கள், உணவு மேஜைகள், டீப்பாய்கள் அந்த வீட்டில் கிடையாது. மூங்கிலால் செய்த கட்டில்கள், நாற்காலிகள், வரவேற்பறையில் விரிக்கப்பட்டிருக்கும் கோரம்பாய்கள், வராண்டாவில் தொங்கும் பெரிய ஊஞ்சல் மனதுக்கு நெருக்கமளிக்கின்றன.

ஊட்டி கவியரங்கங்களில் கவனித்திருக்கிறேன். நிர்மால்யா எப்போதும் பதற்றமாகவே இருப்பார். வந்திருக்கும் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்களா, டீ கிடைத்ததா, எல்லோருக்கும் படுக்கை விரிப்புகள் ஏற்பாடு செய்வது என கடும் கைங்கர்யத்தில்  தீவிரமாக பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பார். பலருக்கும் அவர் எழுத்தாளரென்பதோ,  மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவரென்பதோ தெரியாது. அதே மாதிரி நிர்மால்யாக்கள் பவாவின் நண்பர்களாக இருக்கிறார்கள். மிஷ்கினின் உதவியாளர், பரிதி, ஃபீனிக்ஸ், ஜெய் போன்ற நிர்மால்யாக்கள்.

ஊர் திரும்பிய பின் தினமும் இவர்களைப் பற்றியே திருவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அதன் காரணிகளை இப்போது ஆராய்கையில் அந்த வீடு என் அப்பாவின் குணங்களைக் கொண்டிருக்கிறது. தூவெள்ளை அன்பு, எளிமை, நேர்மை, தயாளம், இயற்கை விருப்பு, விருந்தோம்பல், அறிவுத் தேடல் என. அந்தக் கூரையின் கீழ் இருப்பது அப்பாவின் மடியில் தூங்குவது போல. 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

// அந்த வீடு என் அப்பாவின் குணங்களைக் கொண்டிருக்கிறது... //

வாழ்த்துக்கள்...