2013-ஆம் ஆண்டின் டாப் டென் முகநூல் மோஸ்தர்கள்!

1. அட்டைப்பட அல்லுசில்லுகள்:

 புத்தகக் கண்காட்சிக்கு வரவிருக்கும் என்னுடைய கவிதை தொகுப்பின் முகப்பு என்கிற அறிவிப்புடன் படங்களைப் போஸ்ட் செய்வது; இமேஜைப் பெரியதாக்கி உற்றுப் பார்த்தால் கைலாச பதிப்பகம் என்றிருக்கும். 200 லைக்குகளும், 100 வாழ்த்துக்கள் பாஸ்!-ம் வாங்கியிருக்கும் அந்தக் கவிதை தொகுதியை கைலாசம் வரை சென்று தேடினாலும் கிடைக்காது. ஆன்லைன் ஃபோட்டாஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட அட்டையை நம்பி நீங்கள் பு.க.கா-ல் கடை கடையாய் ஏறி இறங்கினால் அதற்கு நாங்களா பொறுப்பு?!

2. அத்தியாய அலப்பறைகள்:

எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு பகுதியென நான்கைந்து பாராக்களைப் பதிவிடுவது. மொத்த நாவலே நான்கைந்து பாராக்கள்தான் என்பதை யூகிப்பவனே கலியுகத்தில் வாழும் தகுதியுடைத்தவன்.

3. உங்களுள் யார் இந்துத்துவா?

நீங்கள் பிறப்பால் இஸ்லாமியராக இருக்கலாம். நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுபவராக இருக்கலாம். மூன்று முறை ஹஜ் யாத்திரை மேற்கொண்டவராகக் கூட இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் எதைப்பற்றியும் கருத்து சொல்லியவராகவோ எழுதியவராகவோக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கக்கூடிய இந்துத்துவ கூறுகளைக் கண்டெடுத்து களையெடுப்பதே இப்போதைய ஃபேஷன். உதாரணமாக, ’ரெவரெண்ட் ஃபாதர் அந்தோணி சிலுவைராஜ் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும், பாதிரியாராகப் பணியாற்றினாலும் அவர் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக காலை எழுந்ததும் தவறாமல் வாசிப்பது ஹிண்டு நாளிதழே. எனவே அவர் ஓர் இந்துத்துவா’ என ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தலாம். போலவே வலதுசாரி, இடதுசாரி துவங்கி பூனம் சாரி, பனாரஸ் சாரி வரை க்ளாஸிபிகேஷன் செய்வதே தற்போதைய டிரெண்ட்.

4. உலக சினிமா உலக்கையடிகள்.

திரைப்பட விழாவில் இன்று காணவாய்த்த படம் ‘தி யானிங்’. ’கொரிய இயக்குனர் ஜிங் மங் ஜங் இயக்கிய இப்படம் மானுட மனங்களில் அட்டைக்கரியென அப்பிக்கிடக்கும் இருண்மைகளினுடாக வாழ்வின் ஒளிமிக்க தரிசனத்தை அலசுகிறது; பிறகு நம் மீதே காயப்போடுகிறது. உக்கிரமான கவித்துவ தருணங்கள் ’ நீயெல்லாம் ஏம்ல படம் பார்க்க வந்த...’ என நம்மை விசாரிக்கிறது’ எனப் போட்டுத்தள்ளும் ஸ்கிரினிங் ஸ்டேட்டஸூகள்.

5. டிஸ்கார்டு டிக்கிபேர்டுகள்:

புத்தகக் கடைகளிலோ, இலக்கிய கூட்டத்திலோ தற்செயலாக ஒரு எழுத்தாளரைப் பார்த்தால் பாம்பாய் படமெடுத்து ஆடுவார்கள். அவசர அவசரமாய் கையிலிருக்கும் புத்தகத்தில் கையெழுத்து கேட்பார்கள் (சமீபத்தில் பிரபல எழுத்தாளரிடம் ஒருவர் ரேசன் கார்டைக் காட்டி கையெழுத்து போடும்படி சொல்லியிருக்கிறார்). 2எம்பி மொபைல் கேமராவில் செல்ஃபி எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இணையம் என்று வந்து விட்டால் ‘நானும் பெருமாள், அவரும் பெருமாள். போட்டுத் தள்றா அந்த எழுத்தாளர...’ என தகிக்கும் தன்னம்பிக்கையுடன்  ’ஒண்ணும் தேறல, குப்பை, மரண மொக்கை, டொக்காயிட்டாரு’ - போன்ற டிஸ்கார்டு ஸ்டேட்மெண்டுகளை அள்ளி விடுவது. ’ஸாரி ஜெமோ’வில் ரத்தம் குடித்து விட்டு அரவிந்த் கெஜ்ரிவாலை அமைதிப்படை சத்தியராஜாக்கும் வேள்வியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.

6. ’ஐ சப்போர்ட்’ ஐஸோடோப்புகள்:

நாட்டாமைக்குத் துண்டு எப்படியோ அப்படித்தான் இவர்களுக்கு ஐ சப்போர்ட் டேக்குகள். காஞ்சிபுரம் தேவநாதனுக்கும், சயனைடு மோகன்குமாரையும் தவிர்த்து இவர்கள் ‘ஐ சப்போர்ட்’ போட்டு தூக்கி விடாத ஆட்களே தமிழ்நாட்டில் கிடையாது. இந்தியாவில் எட்டு கோடி பார்வையற்றவர்களுக்கு எட்டாயிரம் கண்கள்தான் தானமாகக் கிடைக்கின்றன. ‘ஐ சப்போர்ட்’ போடுகிற நேரத்தில் ஐ தானத்திற்கு சப்போர்ட் செய்தாலாவது விழியற்றவர்களுக்கு ஒளி கிடைக்குமென இந்நேரத்தில் கட்டுரையாளர் தன் கட்டு சாதத்தை அவிழ்க்கிறார்.

7. நூல் விடுதல்:

ஒரு ஸ்டேட்டஸ் கூட போட முடியாவிட்டால் ஒரு நூலை வாசிப்பதன் பயன்மதிப்பென்பது என்ன? நாம் வாசித்திருக்கிறோம் என்கிற ஒரு வரலாற்றுக்காரணம் போதாதா ஒரு புத்தகம் முக்கியமானதாகி விட? கைக்கு அகப்பட்டதையெல்லாம் பத்து பத்து பக்கமாகப் புரட்டி அங்கங்கே இரண்டிரண்டு வரிகளை உருவி இறுதியாக மிக முக்கியமான நூல். நல்ல வாசிப்பனுபவமென முடித்தால் நிறைய்ய வாசிக்கிறவர் என்கிற இமேஜையும் தக்க வைக்கலாம். கூடவை லைக்குகளையும். (ஏராளமான பாத்திரங்கள் இடம்பெற்றிருப்பதும், அவர்களுக்கிடையே நிலவும் நுண்ணிய வேறுபாடுகளுமே இந்நூலின் சிறப்பு என Yellow Pages-க்கு ஒருவர் முகநூலில் நூல் அறிமுகம் எழுதியிருப்பதாக கேள்வி!)

8. அறிவிப்பு அய்யாச்சாமிகள்:

நூல் வெளியீடு, ஆவணப்படம் திரையிடல், கவியரங்கம், ஓவியக் கண்காட்சி துவங்கி ஓய்வு பெற்ற நூலகருக்கு பாராட்டு விழா என எங்கே என்ன நடந்தாலும் அறிவிப்பு போட்டு அசத்துவார். அந்தக் கூட்டத்திற்கெல்லாம் இவர் போவாரா என ஃபாலோயர்ஸ் கேட்கக்கூடாதென்பது முகநுல் நியதி. இந்த அறிவிப்புகளின் மூலமே தானொரு இலக்கியச் செயற்பாட்டாளரென உறுதியாக நம்புவதை யாரென்ன செய்தும் தடுக்க முடியாது.

9. வெட்டிச் சண்டை வெங்கலக்கிண்ணிகள்:

அணில், நடராஜன், காடு ப்ளஸூ, ஃபார்மெட்டாலஜிஸ்ட் என சினிமாப் பிரபலங்களுக்கு கன்னாபின்னாவென கலாய்த்தல் பெயர் சூட்டி,  படம் ரிலீஸாவதற்கு முன்பே ஃப்ளாப்பாமே என ஸ்டேட்டஸ் போட்டு, புரொடியூஸருக்கே தெரியாத கலெக்‌ஷன் புள்ளி விபரங்களை அள்ளி விட்டு இது ரத்த பூமிடாவென உருமியபடி திரியும் வெட்டிச் சண்டை வெங்கலக்கிண்ணிகள். இவர்கள் அடித்துக்கொண்டு கிடக்கும் போது சம்பந்தப்பட்ட இரண்டு பிரபலங்களும் கன்னத்தோடு கன்னம் ஒட்டி செல்ஃபி எடுத்து ட்வீட்டரில் போட்டு கட்டையை கொடுத்து விடுவது அந்தோ பரிதாபம்.

10. எ.மா.ச.வா?!

என்னக் கொடுமை சரவணன் வசனத்தை தமிழகமே வதக்கிக்கொண்டிருந்த காலத்தில் பிரபுவின் மீட்பராக ஆட்டத்துக்கு வந்தவர் மனுஷ்யபுத்திரன். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என இவர் சேனல்களில் கேட்டுத் தொலைக்க ’என்ன மாதிரியான சம்மூவம் சார்?!’ என கருகின தோசைக்கெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டு சாவடிக்கிறார்கள். ’என்னது ஒரு முழம் பூ முப்பது ரூவாயா... என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?’ எனும் உரையாடலை நான் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் ஒரு பெரியம்மா சொல்லக் கேட்டேன்.

Comments

Popular Posts