Sunday, October 12, 2014

தமிழகத்தின் மண்ணியல் நிபுணர்கள்

வெள்ளிக்கிழமை காலை. அறிவொளி நகர்  பேருந்து நிறுத்தம். அருகமை அம்மன் கோவில் காற்றலைகளில் கானமழை பொழிந்து கொண்டிருந்தது. மாணவர்களும் மாதச்சம்பளக்காரர்களும் சில மாடுகளுமாக பேருந்திற்காக காத்திருந்தோம். எல்.ஆர் ஈஸ்வரியையும் மீறின வலுத்த பெண் குரல் ஒன்று பச்சை மஞ்சள் ஊதா நிற வார்த்தைகளில் திருப்பள்ளியெழுச்சி பாடத் துவங்கியது. குரல் வந்த திசையில் ஒரு பொறுப்புள்ளகுடிமகனுக்கு இடியுடன் கூடிய மழை போல வசையுடன் கூடிய அடிகள் அன்னாரது இல்லத்தரசியால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.

வசைகளின் தலைநகராம் நெல்லைச் சீமையைச் சேர்ந்த எனக்கே பல வார்த்தைகள் புதிதாக இருந்தன. தமிழில் இத்தனைப் புதிய கெட்ட வார்த்தைகள் உருவாகியிருப்பதை நினைத்து ஆச்சர்யம் கொண்டேன். மாணவர்களுக்காக அரசாங்கம் கொடுத்த  இலவச லேப்டாப்பை யாருக்கும் தெரியாமல் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு குவார்ட்டருக்காக விற்று விட்டார் என்பது வசைகளினுடாக தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் மகள் நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள கலைக்கல்லூரிக்குச் சென்று வர பயன்படுத்திய சைக்கிளை (அதுவும் தமிழக அரசு கொடுத்ததுதான்) விற்றுக்குடித்த சாதனையை செய்தவர் இவரென்பதும் தெரியவந்தது.

வெள்ளிக்கிழமை   மதியம். ஒப்பனக்கார வீதி அரசினர் மாநகராட்சி மகளீர் பள்ளி. பள்ளிக்கூட வாசலிலேயே  ஒருவர் வேட்டி விலகிக்கிடக்க விழுந்து கிடந்தார். அவ்வப்போது சிரமப்பட்டு தள்ளாடி தழும்பி எழுந்து நிற்க முயற்சித்து மீண்டும் விழுந்து, அடிவயிற்றிலிருந்து காறி காறி துப்பி யாரும் நெருங்க முடியாத மோன நிலை. இதுவே தனியார் பள்ளி வாசலெனில் செக்யூரிட்டி அடி வெதுப்பி விடுவார். சேரிடம் தேர்ந்து சேர் என்பது இதுதான் போலிருக்கிறது.

வெள்ளிக்கிழமை மாலை. வின்செண்ட் சாலை சிக்னல். பச்சை விளக்குக் காத்திருந்த போது கண்ட காட்சி இது. மூடிக்கிடந்த கடை வாசலில் ஒருவர் தன்னிலை மறந்து கிடக்கிறார். அவரை நெருங்கிய ஒருவர் விழுந்து கிடந்தவரின் சட்டைப்பைக்குள் கையை விட்டு உள்ளே இருந்தவற்றை வெளியே எடுக்கிறார். ஒரு செல்போன், ரசீதுகள், சில ரூபாய் தாள்கள். செல்போனையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு ரசீதை அவரது முகத்திலேயே எறிந்து விட்டு சாவகாசமாகக் கிளம்பிவிட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தப் பகல் கொள்ளையை மொத்த சிக்னலும் பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது. (மேற்படி, நபர் முழு நேர தொழிலாக இதைச் செய்யும் பட்சத்தில் நாளொன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். மாதக் கடைசியில் எனக்கே இப்படி கிளம்பி விடலாமா என்றிருக்கிறது. மூன்று பச்சை போர்டு கடைகளுக்குப் போனால் போதும். ஒரு கடை வாசலில் சராசரியாக நான்கு பேர் மண்ணாராய்ச்சியில் ஈடுபட்டிருப்பர். மிஞ்சிய வரைக்கும் லாபம். ரொம்ப தேவை என்றால் மத்திய பேருந்து நிலையம் போகலாம். அங்கே காவல்துறை நமது நண்பன் எனும் நம்பிக்கையில் நாற்பது பேராவது கிடக்கிறார்கள்.)

வெள்ளிக்கிழமை இரவு. உக்கடம் பேருந்துநிலைய பின்வாசல். ஈருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என் வீட்டிற்குச் செல்ல நான் தெரிவு செய்திருக்கும் பாதையில் 6 சோமபான கடைகள் மெயின் ரோட்டில் இருக்கின்றன. அவ்வளவுதானா என வாசகர்கள் கேட்பது புரிகிறது. வீடு திரும்புகையில் கண்ணில் விழும் மழைப்பூச்சிகளைத் தவிர்க்க ஹெல்மெட் அணிந்து தப்பித்துக்கொள்கிறேன். குறுக்கே விழும் குடிமகன்களிடம் தப்பிக்கவே முடிவதில்லை. உக்கடம் பேருந்து பின்புற வாசலைக் கடக்கையில் எவ்வளவு நிதானித்தும், வளைத்தும், திருப்பியும் கூட ஒருவர் குறுக்கே விழுந்து விட்டார். தடுமாறி எழுந்து நின்று சரிந்து தொங்கிய தலையை பல குத்துகள் வாங்கி சரிந்த குத்துச்சண்டை வீரர் தலையை உயர்த்துவது போல  உயர்த்தி பழரச மணம் கமழும் வாயால் 'குடிச்சிருக்கீயா..போதையில வண்டி ஓட்டற டிரங்கன் மங்கீ..' என வாழ்த்தினார்.


வெள்ளிழமை நள்ளிரவு. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என் குடும்பத்தை எழுப்பியது ஒரு அலைபேசி செய்தி! தனது அலுவலகத்திற்கே எதிரேயுள்ள கடையில் பழம் வாங்கச் சென்ற என் குடும்ப நண்பரை மரண வேகத்தில் வந்த பைக் மோதியது. மோதியது கல்லூரி மாணவன். முழுப்போதையில் முன்னால் காரை ஒட்டிச் சென்ற நண்பர்களை சேஸ் செய்து வந்திருக்கிறான். இவனும் முழுப்போதை. நண்பர் சம்பவ இடத்திலேயே மரணித்து விட்டார். பிரேத பரிசோதனைக் கூடத்தில் நண்பரது மனைவியும், பிள்ளைகளும் மார்பில் அடித்துக்கொண்டு கதறியது இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. முப்பதாண்டு கால இல்லறத்தை முப்பது நொடிகளுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது போதை.

தமிழ் நாட்டிற்குப் புதிதாக வரக்கூடியவர்களுக்கு இயல்பாக ஏழக்கூடிய சந்தேகங்கள் என சில உருவாகியுள்ளன. பகலில் எதிரி நாட்டு விமானம் ஏதும் வந்து குண்டு வீசிச் சென்றதா.. பலர் வீதிகளில் விழுந்து கிடக்கிறார்களே என்பது அதில் பிரதானமான ஒன்று. என் ஆந்திர நண்பர் தமிழர்கள் புதிய வகை நடனமொன்றை வீதியில் ஆடியபடியே செல்கின்றனர் என்கிறார். நிறைய்ய மண்ணியல் நிபுணர்கள் உண்டே உங்களூரில் நிலத்தில் குப்புறக் கிடந்து மண்ணை முகர்ந்து கொண்டே இருப்பார்களே என்கிறார் இன்னொரு வெளிமாநில நண்பர் கிண்டலாக.

தமிழகம் உலகில் குடிவெறியர்கள் மலிந்த நகரங்களான ரியோ டி ஜெனிரோவைப் போல, பிரேசிலியா போல, மெக்ஸிகோ நகரங்களைப் போல மாறி எவ்வளவோ நாட்களாகி விட்டன. தனிநபர் ஆல்கஹால் பயன்பாட்டு புள்ளி விபரங்களை  ஐநா சர்வதேச  சுகாதார நிறுவனம் வெளியீட்டு வருகிறது. தற்சமயம் நாடுகள் அளவில் நடைபெறும் இந்த ஆய்வு மாநில அளவில் நிகழ்ந்தால் தமிழகம் நிச்சயம் ரியோ டி ஜெனிரோவை பின்னுக்குத்தள்ளி விடும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

விளிம்பு நிலை மக்களில் பெரும்பான்மையான ஆடவர்கள் இன்று எந்த வேலையையும் செய்ய லாயக்கற்ற குடிநோயாளிகளாக மாறி விட்டனர். குடும்பத்திற்கும், கணவன் குடிப்பதற்கும் சேர்த்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டு பல நாட்களாயிற்று. குடிவெறியினால் நிகழும் பாலியல் குற்றங்கள் தனி அத்தியாயம் எனில், குடிநோய்க்கு ஆளாகி தாம்பத்திய தகுதியை இழந்த ஆண்களால் குடும்பங்களில் பெருகி வரும் சமூகப் பிரச்சனைகளையும் கேள்விப்படுகிறோம். எளிய சமூக மனிதனாக என் கேள்வியெல்லாம் நம்மை ஆள்வோர்களின் கண்களுக்கு தமிழ் நிலத்தின் இந்த அகக் காட்சிகள்  தட்டுப்படுகின்றனவா என்பதுதான். மன்னராட்சியின் எல்லா பந்தாக்களையும் ஆள்வோர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். படைபரிவாரங்கள், தோரணங்கள், கட்டியங்கள், ஒற்றறிந்து சொல்ல உளவுத்துறை, கண்ணசைவுக்கு காத்திருக்கும் அமைச்சர் குழாம், மாநாடுகளில் மணிமகுடம் சூட்டி வீரவாளும் செங்கோலும் கூட வழங்கப்படுகிறது. ஏன் நம் பழந்தமிழ் மன்னர்களைப் போல இவர்கள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வரக்கூடாது? ஓரெயொருநாள் ஒரெயொரு இரவு இதைச் செய்தாலே, தமிழகம் குடிநோயாளிகளின் கூடாரமாக  மாறியிருக்கிறதை தெரிந்து கொள்ளலாமே.

உண்மையின் இன்று தமிழர்க்கு தேவை அம்மா உணவகங்களோ, அம்மா மருந்தகங்களோ, அம்மா பல்பொருள் அங்காடிகளோ அல்ல. உடனடி தேவைஅம்மா குடிநோயாளிகள் மறுவாழ்வு மையங்களே. தனியார் மையங்கள் நிரம்பி வழிகின்றன. குடல் வெந்து போனவர்களுக்கு சிகிழ்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை. வெள்ளையானை நாவலில் ஜெயமோகன் சித்தரிக்கும் தாதுவருஷத்துப் பஞ்ச காட்சிகளைப் போல மருத்துவமனைகள் காட்சியளிக்கின்றன

இந்தப் பாழ்நிலத்தின் புறக்காட்சிகளைக் காண்கிற சமகாலத்தவன் பழந்தமிழ் இலக்கியங்களின் நகரச்சித்தரிப்புகளை சுகமான பகற்கனவு என நினைத்துக்கொள்வான் இல்லையா?!

(12-10-2014 தேதியிட்ட தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை)


No comments: